Saturday, May 08, 2010

மலேசியத் தமிழர் வரலாறு பாட(டு)ங்கள் (3/3)


வெள்ளைக்கார துரைகளும், கங்காணி கறுப்புத் துரைகளும் எமது தோட்டத்துத் தாய்க்குலத்திற்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளை வகைதொகையின்றி செய்திருக்கிறார்கள். பெண் தொழிலாளர்கள் பல்வேறு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதைத் தோட்டப்புறத்தில் பாடப்பட்ட நாட்டுப்புற இலக்கியத்தில் காண முடிகிறது. வாழ்வுக்கே போராட்டமாக இருந்த நேரத்தில் மானத்தைக் காத்துக்கொள்ள போராடிய வேண்டிய இக்கட்டான நிலைமை தனக்கு ஏற்பட்டதை ஒரு பாடலில் இப்படி சொல்கிறாள் ஒருத்தி.

உள்ளத நான்சொல்ல வந்தேன் கேள்!
காலையிலே நாலு மணிக்குக் கேள்
கிழக்குமணி அடிக்கும்போது டிங்கு டிங்குதான்
நான் போகாவிட்டால் சோறுமில்லே!
ஐயய்யோ என்ன செய்வேன்?
பெரிய மம்முட்டி எடுத்துப் புறப்பட்டு நாபோனேன்
சுருக்கா வரலேன்னு ஐயா அடிசாரே!
அந்தக்கம்பு எடுத்தில்ல அடிசாரு கங்காணி
ஐயய்யோ அம்மா! அப்பா! அடுக்குமா?
யாருக்குத்தான் பதிசொல்வேன் துரைமாரே!
சாமக்கோழி கூவுது எழுப்பறான்;
சாமக்காரன் கூப்பிடறான்!
விறுவிறுன்னு தண்ணிபோடு எல்லம்மா!
இடுப்புத்துணி எங்கேடி வச்ச எல்லம்மா!
துறுதுறுன்னு பேசிக்கிட்டு துரை வர்றாரு!
குசுகுசுன்னு பேசிக்கிட்டு கிராணி வர்றாரு!
ஏட்டைப் புறட்டுறாரு எல்லம்மாவ கூப்பிடுறாரு
கடுகடுன்னு கூப்பிடுறாரு காத்தாயிய கூப்பிடுறாரு
விறுவிறுன்னு போறாரு வீரம்மாவ கூப்பிடுறாரு
ஏழாம் நம்பர் பள்ளத்தில் எள்ளுச்செடி தோட்டத்திலே
ஏஞ்சொல்லி வெட்டும்போது எல்லம்மாள
அந்த வெட்டு பார்க்கும் கங்காணி
விறுவிறுன்னு போயி தாவணியப் புடிச்சாரு
தங்கக் காப்பு என்று கையைப் புடிசாரு...

இப்படி இருந்த பால்மரக் காடுகளில் தாம் பட்ட இன்னல்களைத் தாங்க முடியாமல் உயிரையே மாய்த்துக்கொண்டவர்கள் பலர் உள்ளனர் என்ற உண்மையை கீழே வரும் பாடல் போட்டு உடைக்கிறது.

சாலையிலே ரெண்டு மரம்
சர்க்காரு வெச்ச மரம்
ஓங்கி வளர்ந்த மரம்
என் தங்க ரத்தினமே
அது எனக்குத் தூக்குமரம்

தோட்டத்து வாழ்க்கை தொல்லைகளைத் தாங்க முடியாமல் பலர் தாயகம் திரும்பியுள்ளனர். குறிப்பாக, இரப்பர் விலை சரிவு கண்ட காலத்தில் பல்லாயிரம்பேர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று மீண்டும் எப்படியோ தென்னிந்தியாவுக்கே திரும்பி போய்விட்டனர். அப்படி போகும் போதும்கூட மண்ணை நேசிக்கும் மாண்புடைய எமது தமிழர் கனத்த இதயத்தோடுதான் போயிருக்கின்றனர். இதைபற்றி ஒரு பாடல் இப்படி கூறுகிறது.

போய் வாரேன் பால்மரமே
போய் வாரேன் பால்மரமே
பவுனுக்குப் பவுனு ரப்பர்
பாலு வித்த காலம் போச்சு
சீட்டுப்பால் ஒரு விலையும்
கோட்டுப்பால் ஒரு விலையும்
மங்குப்பால் ஒரு விலையும்
மண்ணுப்பால் ஒரு விலையும்
சிங்கம்போல விலையை விற்றார்
பங்கம்போல நிலைகுலைந்தார்
போய் வாரேன் பால்மரமே
போய் வாரேன் பால்மரமே

இத்தனை சிரமங்களுக்கு நடுவிலும் வேறு நாதியில்லாத காரணத்தால் தமிழ் மக்கள் தோட்டத்தையே நம்பி வாழ வேண்டிய சூழ்நிலையில் சிக்கிக்கொண்டனர். மேலும், தோட்டத்தில் மக்களுக்கு வேண்டிய சில அடிப்படைகளை வெள்ளைக்கார நிருவாகம் செய்து கொடுத்திருந்தது. குறிப்பாக, குடியிருக்க வீடு, குடிநீர், குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம், கூத்துமேடை, கள்ளுக்கடை, கோயில் என்று சில வசதிகளைச் செய்துகொடுத்து மக்களை ஆட்டு மந்தைகளாகத் இரப்பர் காடுகளிலேயே அடைத்து வைத்திருந்தனர்.


இரப்பர் மரங்கள் சூழ்ந்திருந்த திறந்தவெளிச் சிறைகளில் எமது மக்கள் வாழ்வதற்காக நாளும் போராட வேண்டியிருந்தது. தோட்ட நிருவாகத்தின் கொடுமைகள், கங்காணிகளின் அடவாடிகள், சாதிச் சண்டை, கள்ளச் சாராயம், தோட்டத் துண்டாடல், குறைவான ஊதியம், விலைவாசி ஏற்றம், தொழிற்சங்கப் போராட்டம், நாட்டு விடுதலைப் போராட்டம் எனப் பல்வேறு நெருக்கடிகளை அவர்கள் கடந்து வந்திருக்கின்றனர்

1950கள் வரையில் தோட்டப் புறங்களில் அல்லல்பட்ட எமது மக்களுக்கு விடுதலை ஒளி தென்பட தொடங்கியது. பிரிட்டிசாரிடமிருந்து மலாயாவுக்கு விடுதலை பெறுவதற்கான போராட்டங்கள் நாடுமுழுவது தீவிரமடைகின்றன. இந்தப் போராட்டத்தில் தோட்டத்து தொழிற்சங்கங்களும் எமது மக்களும் மிகுந்த எதிர்பார்ப்போடு பங்கெடுத்துக் கொள்கின்றனர். அதுபற்றி ஒரு பாடல் இவ்வாறு கூறுகிறது.

எங்கள் மலாயா தங்கிடும் இன்பம்
பொங்கிட வேண்டாவா?
இந்திய சீனம லேசியர் யுரேசியர்
என்றுமிந் நாட்டினிலே – ஒன்றாய்
நன்றுடன் வாழ்ந்திடுவோம்!
யாவரும் ஈண்டு மலாயர்கள் என்று
இணையற்ற தோரின மாகவே மாறிச்
சத்தியச் செந்நெறிப் பன்னூல் கொண்டு
சாந்தியும் பெற்றிடுவோம்
1957இல் மலாயா விடுதலை அடைந்தது. ஆனால் எமது மக்களின் நிலைமை மாறியதா? தோட்டப்புறத்தையே நம்பியிருந்த மனப்போக்கு மாறியதா? நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தோட்டக்காட்டு கும்மிருட்டில் வாழ்ந்தவர்களின் மனம் இன்னும் விடியாமலே இருந்தது என்பதுதான் உண்மை.

மரமிருக்கு உளியிருக்கு
மனமிருக்கு உழைப்பதற்கு
மற்றத் தொழில் நமக்கெதுக்கு வேலப்பா – இதுவே
உற்ற தொழில் இதுநமக்குப் போதுமப்பா


என்று எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையோ முன்னேற்ற எண்ணமோ இல்லாமல் தோட்டத்தையே நம்பியிருந்த மக்கள்தாம் அதிகம் பேர். இதனாலேயே மற்ற இனங்களோடு ஒப்பிடுகையில் மலேசியத் தமிழர்களின் முன்னேற்றம் என்பது மிகவும் மந்தமாகவும் பின்தங்கியும் இருக்கிறது. இன்றும்கூட கல்வி, பொருளியல், சமூகம், அரசியல், தொழில் வாய்ப்பு என பல துறைகளிலும் தமிழர்கள் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர்.

மலேசிய நாட்டின் அரசாங்க கொள்கைகளும் தமிழர்களுடைய பின்னடைவுக்கு ஒருவகையில் காரணமாக அமைந்துவிட்டன என்பதும் மறுப்பதற்கு இல்லை. தோட்டப்புறத்து வாழ்க்கைச் சூழ்நிலைகள் இன்று அடியோடு மாறி இருந்தாலும், வளமும் வசதியும் இன்று பெருவாரியான தமிழர் வீடுகளில் ஏறி இருந்தாலும் மலேசியத் தமிழர்கள் செல்ல வேண்டிய பயணம் இன்னும் தொலைவாக இருக்கிறது; அவர்கள் ஏற வேண்டிய உயரங்கள் இன்னும் உச்சமாக இருக்கின்றன.

சுதந்திரம் என்பதின் முதலெழுத் தெங்கோ
தொலைந்து போனது; தந்திரம் பிழைத்து!
இதம்தரும் என்றே ஏற்ற சுதந்திரம்
எப்படி எங்களை விட்டுப் பிரிந்தது?

என்பதே இன்றும் எமது மக்களின் இதயங்களில் எழும்பிக்கொண்டிருக்கும் வினாவாக இருக்கின்றது.

மேற்கோள்கள்:-

1.முரசு நெடுமாறன், மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், அருள்மதியம் பதிப்பகம் (1997), கிள்ளான்
2.முரசு நெடுமாறன், தமிழும் தமிழரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், (2007)சென்னை
3.தண்டாயுதம்.இரா., மலேசிய நாட்டுப்புறப் பாடல்கள், தமிழ்ப் புத்தகாலயம், (1998)
4.இராமசாமி.பி., மலேசியத் தோட்டத் தொழிலாளர் வாழ்வும் போராட்டங்களும், செம்பருத்தி வெளியீடு (1999), கோலாலம்பூர்
5.ஜானகிராமன் மாணிக்கம், மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை, அசுவின் டிரேடிங் (2006), பிரிக்பீல்டு

நனிநன்றியுடன்:-2 comments:

Anonymous said...

ஏனய்யா நீங்களெல்லாம் ஏசுவை கும்புடலை, கும்புட்டு இருந்தா நீங்க கங்காணியாவோ, மேலதிகாரியாவோ ஆயிருக்கலாமுல்ல???/

இதாய்யா தமிழன் தன் உயிர் போனாலும் பட்டினி கெடந்தாலும் மானம் மட்டும் போயிர கூடாது மாடனையும் சிவனையும் கும்புட்டு பட்டினி கெடந்தான். இதே சீமத்தொரைகள் தான் இப்போது தமிழர்களின் வாழ்வில் புல்லுரிவி, தமிழ்க்கலாச்சாரத்தை அளிக்கவந்த புற்று நோய், கிறிஸ்த்தவ ஏவாங்கலிகளாய் வலம் வருகின்றனர். அவர்களுக்கு ஒத்து பாட்டு பாட பல எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள் என பலர். தமிழனின் கலாச்சாரத்தோடு எப்போது மதம் பிரிக்கப்படுகிறதோ அப்போதே கலாச்சார அழிவின் அறிகுறி ஆரம்பம் ஆகிவிட்டது இதை சுப.நற்குணன் மறுக்க முடியுமா?????

பாலாஜி

சுப.நற்குணன்,மலேசியா. said...

@திருத்தமிழ் அன்பர் பாலாஜி,

மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

//ஏனய்யா நீங்களெல்லாம் ஏசுவை கும்புடலை, கும்புட்டு இருந்தா நீங்க கங்காணியாவோ, மேலதிகாரியாவோ ஆயிருக்கலாமுல்ல???//

இங்கே நடந்த கதை தெரியுமா? தமிழரைக் கொடுமைப்படுத்திய கங்காணிகளும் மாரியம்மன், முனியாண்டி, முனிசுவரன் என்று சாமி கும்பிட்டவர்கள்தாம்!

சாமிதான் ஒன்றே தவிர; சாதியில் வேறாக இருந்த தமிழன் தான் மற்ற மதக்காரனை விட பரங்கி அளவுக்கு வன்கொடுமை செய்கிறான். மற்றவன் செய்வது எள்மூக்கு அளவுதான்.

//தமிழனின் கலாச்சாரத்தோடு எப்போது மதம் பிரிக்கப்படுகிறதோ அப்போதே கலாச்சார அழிவின் அறிகுறி ஆரம்பம் ஆகிவிட்டது இதை சுப.நற்குணன் மறுக்க முடியுமா? //

எந்த மதமும் தமிழனுக்குத் தேவையில்லை. மதங்கள் தமிழனைக் கூறுபோட்டது போதும்! தமிழைச் சின்னப்பின்னப் படுத்தியது போதும்.

மதத்தமிழனால் தமிழ் மொழி, இனம், பாண்பாடு, வரலாறு எதையும் மீட்க முடியாது.

தமிழ் மதம் கடந்த மொழியாக ஆகவேண்டும். தமிழன் மதங்கடந்த ஆன்மிகவாதியாக ஆக வேண்டும்.

அப்படியே மதம் வேண்டும் என்றால் சிவம் - மாலியம் இரண்டு மட்டும் வைத்துக்கொள்ளுவோம்.

// இதே சீமத்தொரைகள் தான் இப்போது தமிழர்களின் வாழ்வில் புல்லுரிவி, தமிழ்க்கலாச்சாரத்தை அளிக்கவந்த புற்று நோய், கிறிஸ்த்தவ ஏவாங்கலிகளாய் வலம் வருகின்றனர். //

தமிழன் சரியாக இருந்தால் எவனும் எதுவும் கிழிக்க முடியாது.

Blog Widget by LinkWithin