Tuesday, August 27, 2013

என்ன சாதித்தது.. தமிழ் இணைய மாநாடு?

12ஆம் தமிழ் இணைய மாநாடு இம்முறை மலேசியத் தலைநகர் கோலாலும்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடந்தேறியது. ஆகத்து 15 - 18 வரையில் நடந்த இம்மாநாட்டிற்காகக் 'கையடக்கக் கருவிகளில் தமிழ்க் கணிமை' என்னும் கருப்பொருள் தெரிவு செய்யப்பட்டிருந்தது. மலேசியாவிலிருந்தும் பன்னாடுகளிலிருந்தும் ஏறக்குறைய 1000 பேராளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

கட்டுரைப் படைப்பு, கண்காட்சி, மக்கள் கூடம் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இம்மாநாடு, தமிழின் பெயரால் மலேசியாவில் நடைபெற்ற மற்றைய பற்பல மாநாடுகளைப் போல கூடினோம் களைந்தோம் என முடிந்து போனதா? அல்லது காலத்திற்குத் தேவையான மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளதா? இதனைச் சிறிது ஆராய்ந்து பார்ப்பதே இந்தப் பதிவின் நோக்கமாகும்.

அதற்கு முன்னர் இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளையும் முன்னெடுப்பு நடவடிக்கைகளையும் கண்ணோட்டமிடுவோம்.

#1 சி.ம.இளந்தமிழ் இந்தப் 12ஆம் உலகத் தமிழ் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராக உத்தமம் அமைப்பினால் நியமிக்கப்பட்டார்.

#2 சி.ம.இளந்தமிழ் தலைமையில் மலேசியாவில் மாநாட்டு வினைக்குழு அமைக்கப்பட்டது. மாநிலங்கள் தோறும் மாநிலத் தொடர்புக் குழு அமைக்கப்பட்டன.

#3 மலேசியாவில் உள்ள 6 ஆசிரியர் பயிற்சிக் கழகங்களில் 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டு தகவல் அறிதிறன் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

#4 பொது இயங்களின் உதவியோடு நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் மாநாடு தொடர்பான  பரப்புரையும் விளக்கக் கூட்டங்களும் நடத்தப்பெற்றன.

#5 மலேசியாவில் உள்ள 523 தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாநாடு தொடர்பான விளக்கக் கையேடுகள், அறிக்கைகள் அனுப்பப்பட்டன. சில தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர்களுக்குத் தமிழ்க் கணினி, இணையம், கட்டற்ற மென்பொருள் தொடர்பான பயில்மனைகள் நடைபெற்றன.

#6 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டை முன்னிட்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென அகப்பக்கம் உருவாக்கும் போட்டி, குறுஞ்செயலி போட்டி  இளையோர்களுக்கும் முகநூல் பயனர்களுக்கும் சிறப்புப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.

#7 வானொலி, தொலைக்காட்சி, இணையம், முகநூல், குறுஞ்செய்தி முதலான ஊடகங்கள் வழியாக 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாடு தொடர்பான அறிவிப்புகள், செய்திகள், தகவல்கள் பரப்பப்பட்டன.

#8 மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்த மாநாட்டை நடத்துவதற்குரிய அரங்கங்கள், கண்காட்சிக் கூடம், தங்குமிடம், விடுதி, உணவு, மாநாட்டுப் பை, நினைவுப் பரிசு, நிகழ்ச்சி நிரல் ஆகிய அனைத்து ஏற்பாடுகளும் மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டன.

இப்படியாக மேற்கொண்டு செய்யப்பட்ட பல்வேறு திட்டமிடல்கள் அனைத்தும் குறித்த நேரத்தில் சரியாக நடைபெற்றதால், 15.08.2013ஆம் நாள் இரவு மணி 7:30க்கு மலாயாப் பல்கலைக்கழகத்தின் பெர்டானா சிசுவா அரங்கத்தில் ஆயிரம் பேராளர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாடு வெகு கோலாகலமாகத் தொடங்கியது.


4 நாட்களாக நடைபெற்ற இம்மாநாடு என்ன செய்தது? என்ன சாதித்தது? இம்மாநாட்டின் விளைபயன்கள் என்ன? என்பவை மிக முக்கியமான கேள்விகளாகும். பெருமாண்டமாக மாநாடுகளை நடத்திவிட்டுப் போவதென்பது எல்லாராலும் செய்யக்கூடியதே. ஆனால், விளைபயன்மிக்க மாநாட்டை நடத்துவதே இன்றைய காலத்திற்குத் தேவையானதும் செய்யத் தகுந்ததும் ஆகும்.

அப்படிப் பார்க்கையில் 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டின் பயனாக அல்லது விளைவாகக் கீழ்க்காணும் சிலவற்றைப் பட்டியலிடலாம்:-

#1 மலேசியாவிலிருந்து 680 பேரும் அயலகத்திலிருந்து 150 பேரும் உட்பட ஏறக்குறைய 1000 பேராளர்களும் சிறப்பு அழைப்பாளர்களும், கட்டுரையாளர்களும் கலந்துகொண்ட மிகப்பெரும் மாநாடாக இது அமைந்திருந்தது.

#2 மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகள், உயர்க்கல்விக் கழகங்கள் ஆகியவற்றிலிருந்து ஏறக்குறைய பத்தாயிரம் மாணவர்கள் பார்வையாளர்களாக வந்து கலந்துகொண்டு, தமிழ்க் கணிமை குறித்தும் தமிழில் தகவல் தொழில்நுட்பம் பற்றியும் விழிப்புணர்வு பெற்றனர்.

#3 ஏறக்குறைய ஐந்து இலக்கம் (500,000) மலேசியத் தமிழர்களுக்குத் தமிழ்க் கணிமை - தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் பற்றிய சிந்தனைத் தூண்டலுக்கு இம்மாநாடு வித்திட்டுள்ளது.

#4 கணினி, இணைய, தகவல் தொழில்நுட்ப உலகில் தமிழ்மொழி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டிப்பிடித்துள்ளது என்னும் உண்மையைப் பொதுமக்களுக்குக் குறிப்பாக, இளையோர்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளது. இதன்வழியாகத் தகவல் தொழில்நுட்பத்தில் புதிய பார்வையையும் தேடலையும் உண்டாக்கியிருக்கிறது.

#5 கணினி, திறன்பேசி, தட்டை, திறன்கருவிகளின் இடைமுகத்தைத் தமிழுக்கு மாற்றிக்கொள்ளவும் தமிழில் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் விடுக்கவும், முகநூல், டுவீட்டரில் தமிழில் எழுதவும் கூடிய ஆர்வம் மேலோங்கி இருக்கின்றது.

#6 பொதுவாகவே தமிழ் சார்ந்த மாநாடுகளில் பெரியவர்களும் மூத்தவர்களுமே வருகைதரும் சூழலில், இந்தத் தமிழ் இணைய மாநாட்டில் 60%-க்கும் மேல் இளையோர்களை ஈர்த்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.


#7 அதிக அளவில் தமிழாசிரியர்களும் பயிற்சி ஆசிரியர்களும் கலந்துகொண்டிருப்பதால் அவர்களிடம் பயிலும் ஆயிரக்கணக்கிலான தமிழ் மாணவர்களுக்கு தமிழ்க் கணிமை தொடர்பான தகவலும் அறிவும் சென்று பரவுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

#8 அயலகத்தில் மட்டுமின்றி, மலேசியாவிலும் தகவல், தொழில்நுட்பம், கணினி, இணையம், கணிமை சார்ந்த துறைகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிப் படைக்கும் ஆற்றல் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த மாநாடு அடையாளம் காட்டி ஆர்வமூட்டியுள்ளது. இதன்வழி இத்துறைகள் தொடர்பான ஆய்வுப்பணிகளும் ஆக்கப்பணிகளும் நடைபெறுவதற்கு வலிகோலியுள்ளது.


#9 தமிழ்த் தகவல் தொழில் நுட்பவியல், தமிழ்க் கணிமை, கையடக்கக் கருவி, இயற்கை மொழி ஆய்வு, தமிழ் மென்பொருள்கள், குறுஞ்செயலி, கணினி மொழியியல், கல்வி தொடர்பிலான ஏறக்குறைய 100 அரிய கட்டுரைகள் அடங்கிய மாநாட்டு ஆய்வடங்கள் ஒன்று ஆவணமாக்கப்பட்டுள்ளது.

#10  இயற்கை மொழி ஆய்வியல் (Natural Language Processing [NLP] ) துறையில் தமிழ்க் கணிமைக்கு ஓர் இருக்கையை ஏற்படுத்தித் தர மலாயாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கொள்கையளவில் ஒப்புதல் வழங்கியுள்ளதோடு, இதன் தொடர்பில் மலேசியப் பிரதமரிடம் பேசி இசைவுபெறுவதற்கு ஆவனசெய்யப்படுமென தெரிவித்துள்ளார். இதுவே இம்மாநாட்டின் மிக உச்சமான வெற்றியாகக் கருதலாம்.


#11 இந்த உலகத் தமிழ் இணைய மாநாடு முக முக்கியமான மூன்று தீர்மானங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. அவையாவன:-
  • தமிழ் தகவல் தொழில்நுட்பத்துக்கும் மொழியியலுக்குமான பன்னாட்டு ஆராய்ச்சி இதழ் ஒன்றை உத்தமம் தொடங்கும்.
  • ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான மின் கல்வி இணையத் தளத்தை உத்தமம் தொடங்கும்.
  • தமிழ்க் கணிமை ஆராய்ச்சியாளர்களுக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் உதவும் வகையில் ஊடாடல் அறிவுத்தளம் ஒன்றை உத்தமம் ஆரம்பிக்கும்.

முதலாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டைத் தொடக்கிவைத்த மலேசியா, ஒரு மாமாங்கம் முடிந்து 12-ஆவது மாநாட்டை நடத்தும் வேளையில் தமிழ்க் கணிமையும் தமிழ்த் தகவல் தொழில் நுட்பமும்  மிகப்பெரிய வளர்ச்சியையும் உச்சத்தையும் எட்டியுள்ளது என்பது மறுக்கவியலா உண்மையாகும். ஒவ்வொரு நொடியும் முன்னேறிக்கொண்டிருக்கும் மின்னுட்பவியல் உலகத்தில் நிலைபெறவும் வெற்றிபெறவும் கூடிய ஆற்றலும் நுட்பமும் தமிழுக்கு உண்டு என்பது மறைக்க முடியாத மெய்யாகும். தனித்தியங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்பது தகவல் தொழில்நுட்ப உலகத்திலும் நிறுவப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.

எனினும், அடுத்துவரும் ஊழியில் தமிழ் நிலைத்து நிற்கவும் மற்றைய உலக மொழிகளுக்கு நிகராக தலையெடுத்து நிற்கவும் வேண்டுமானால், தமிழில் உருவாக்கம்பெறும் தகவல் தொழில்நுட்பங்களை உள்வாங்கிக்கொண்டு உடனே அதனை பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் அறிவாண்மை பெற்ற இனமாகத் தமிழினம் உருமாற்றம் பெறவேண்டும்.


தகவல்தொழில்நுட்பம் வழி தமிழை முன்னெடுப்போம்!
 நுண்மான் நுட்பப்புலத் தமிழராய் எழுவோம்! வெல்வோம்!

பி.கு: 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டுப் படங்கள், ஆய்வுக் கட்டுரைகள்

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Saturday, August 24, 2013

தமிழ் இணைய மாநாட்டில் சுப.நற்குணன் படைத்த கட்டுரை

கடந்த ஆகத்து 15 - 18 வரை, கோலாலும்பூர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் நான் படைத்தளித்த கட்டுரை இது.

தலைப்பு: தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலின் இணையத்தின் பயன்பாடும் பங்களிப்பும்.

பாகம் 1:-பாகம் 2:-பாகம் 3:- பி.கு:- இந்த நிகழ்ப்படத்தைப் பதிவுசெய்து யூடியுப்பில் பதிவேற்றி என்னை அசத்திய என் மகன் சுப.ந.சரணமுதனுக்கு நன்றி.

@சுப.நற்குணன், திருத்தமிழ்

முத்து நெடுமாறன்: திறன் கருவிகளில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்

உலகத் தமிழ் தகவல், தொழில் நுட்ப மன்றம் (‘உத்தமம்’) என்ற பெயரில் இயங்கும் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய 12ஆம் மாநாடு ஆகத்து 15 - 18 வரையில் நடந்தது. கோலாலும்பூர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்மைப் பொழிவாற்றும் முத்து நெடுமாறன்

மாநாட்டின் தொடக்க விழாவில், சிறப்பு அங்கமாக உத்தமம் அமைப்பின் நிறுவநர்களில் ஒருவரும், அந்த அமைப்பின் முன்னாள் தலைவரும், முரசு மென்பொருள், மற்றும் செல்லினம், செல்லியல் ஆகிய செயலிகளின் வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் முதன்மைப் பொழிவு வழங்கினார்.
.
இந்த ஆண்டு மாநாட்டின்  கருப்பொருளான ‘கையடக்கக் கணினிகளில் தமிழ்க் கணிமை’ குறித்து முத்து நெடுமாறன் அவர்கள் ஆற்றிய உரை பேராளர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்ததோடு தமிழ்க் கணிமையின் வளர்ச்சியைக் கண்டு அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கு இருந்தது. 

முத்து நெடுமாறன் உரை பின்வருமாறு:-

“இந்த மாநாட்டின் முக்கிய கருப்பொருளே கையடக்கக் கருவிகளில் தமிழ்க் கணிமை. அதாவது தமிழ் கணிமை கையடக்கக் கருவிகளில் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதைப் பற்றியும், அதன் அடுத்தகட்ட நிலை என்ன என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வது தான் இதன் முக்கிய நோக்கம்.”

“தொழில்நுட்ப கருவிகளில் தமிழை எப்படி உள்ளிடுவது என்பது தான் எங்களின் முதல் முயற்சியாக இருந்தது. அதில் தற்போது வெற்றியும் அடைந்துள்ளோம் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது மிகவும் புகழ்பெற்று  இருக்கும் பெரும்பாலான கருவிகளில் இயல்பாகவே தமிழை உள்ளிட முடியும் அது இன்னொரு வெற்றி.” என்று சொல்லி முடித்த பொழுது அரங்கம் அதிரும் வகையில் பேராளர்கள் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 “எனினும், இது போன்ற பெரிய நிறுவனங்கள் தமிழை கட்டாயம் பயன்பாட்டில் வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தமிழைப் பயன்பாட்டில் வைக்கவில்லை என்றாலும் அவர்களது விற்பனை எண்ணிக்கை அதிகமாகத் தான் இருக்கும். தமிழ் பயன்பாடு அதிகம் இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரிய வந்தால் மட்டுமே அந்த நிறுவனங்கள் தமிழின் பயன்பாட்டை அதிகரிப்பார்கள். எனவே கையடக்கக் கருவிகளில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் பயன்பாட்டில் வைக்கும் தமிழ் எழுத்துக்களின் தரமும் அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.

செல்லினம் புதிய பதிப்பைப் பற்றி விளக்குகிறார் முத்து நெடுமாறன்.
அவருடன் செம்மல் மணவை முஸ்தப்பா, சுப.நற்குணன், இராணி, செண்பகவள்ளி

 தமிழ் அறிந்தவர்களும் தமிழைக் கற்றவர்களும் கையடக்கக் கருவிகள், திறன்பேசிகள், திறன்கருவிகள், ஆண்டிரோய்டு கருவிகள் ஆகியவற்றில் தமிழை அதிகமாகப் பயன்படுத்தும் காலம் விரைவில் வரவேண்டும். இன்றையச் சூழலில் திறன்பேசிகளில் தமிழில் குறுஞ்செய்தி அனுப்புவது மிக இயல்பாகிவிட்டது. மேலும் தமிழ் இணையத்தளங்களை வாசிக்க முடியும். அதுமட்டுமல்லாது புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களைத் தரவிறக்கம் செய்து வாசிக்க இயலும். இதில் இன்னொரு சிறப்பு என்னவெனில் ஒரு செய்தியில் அல்லது நூலில் குறிப்பிட்ட ஒரு சொல்லையோ அல்லது ஒரு தகவலையோ நொடிப்பொழுதில் தேடிவிடலாம்; அதனை நண்பர்களுடன் உடனடியாகப் பகிர்ந்துகொள்ளலாம். தொடர்பாளர் பெயர்களைத் தமிழிலேயே பதிவு செய்யலாம். அழைப்புகள் வரும் பொழுது அழைப்பாளர் பெயர் தமிழிலேயே வெளித்தோன்றும். பாடல் பட்டியல்களைத் தமிழிலேயே பதிவு செய்துகொள்ள முடியும் என்றெல்லாம் முத்துநெடுமாறன் ஒவ்வொன்றையும் செய்முறையோடு விளக்கிக் காட்டியபொழுது, தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்மொழியின் வளர்ச்சி குறித்து பெருமிதம் அடையாமல் இருக்க முடியவில்லை. பேராளர்களின் கரவொலியும் ஆரவாரமும் இதனை உறுதிபடுத்துவதாய் அமைந்தன.

மேலும், தற்போது உலக அளவில் பயன்பாட்டில் இருக்கும் தமிழ் உள்ளீட்டு செயலியான செல்லினம் மென்பொருளின் அடுத்த கட்ட நிலை குறித்தும் முத்து நெடுமாறன் அவர்கள் விளக்கமளித்தார். இனி வரவிருக்கும் முரசு மற்றும் செல்லினம் புதிய பதிப்புகள் மேலும் பல புதுமைகளோடு வரவிருப்பதாகத் தெரிவித்தார்.

முத்து நெடுமாறன்

அடுத்து, மாநாட்டின் இறுதி நாளில் முத்து நெடுமாறனின் சிறப்புரை ஒன்றும் இடம்பெற்றது. இதில், தென்கிழக்காசிய மற்றும் இந்திய எழுத்துருக்களிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகள் பற்றி விரிவாகப் பேசினார். கணினிக்கு ஒரு மொழியைக் கற்றுக்கொடுப்பதில் உள்ள நெளிவுசுழிவுகளைப் பற்றி எடுத்துரைத்தார். கணினியில் தமிழ் மொழி எந்த அளவுக்குச் சிறப்பாக இயங்க முடியும் அதனை வளர்ச்சிகள் எவ்வாறு இருக்கின்றன முதலான செய்திகளைக் கூறுனார். அவையோர் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் கூர்ந்து கவனிக்கும் அளவுக்கு அவருடைய விளக்கங்கள் அமைந்திருந்தன.
முத்து நெடுமாறானுடன் இல.வாசுதேவன்

சுப.நற்குணன், முத்து நெடுமாறன், செல்வன் சுப.ந.சரணமுதன்

கணினி, இணையம், தகவல் தொழில்நுட்பம், திறன்கருவி (Smart Device) , தட்டை (Tablet) ஆகியவற்றில் தமிழ்மொழி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டிருக்கிறது; வியக்கத்தகு உயர்ச்சியை அடைந்திருக்கிறது என்பதை இந்த இணைய மாநாடு வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. தமிழின் இந்த வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் பங்காற்றிய பற்பலரில் நம் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறனின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது - முகாமையானது என்றால் மிகையன்று. 

முத்து மலேசியத் தமிழர்களின் சொத்து! முத்து தமிழன்னையின் தவமுத்து!


@சுப.நற்குணன், திருத்தமிழ்Wednesday, August 21, 2013

12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாடு * கோலாலம்பூர், மலேசியா

உத்தமம் எனப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப அமைப்பு, 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டைக் கோலாலும்பூரில் கோலாகலமாக நடத்தியுள்ளது. இம்மாநாடு கடந்த ஆகத்து 15 - 18 வரையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடந்தது. 'கையடக்கக் கருவிகளில் தமிழ்க் கணிமை' எனும் கருப்பொருளுடன் நடந்த இம்மாநாட்டில் மலேசியாவிலிருந்து 680 பேராளர்களும் அயலக நாடுகளைச் சேர்ந்த 150 பேராளர்களும் கலந்து சிறப்பித்தனர். இதுவரையில் நடந்த தமிழ் இணைய மாநாடுகளில் மிகவும் வெற்றிகரமாக நடந்த மாநாடாக இது கருதப்படுகிறது. 

மாநாட்டின் தொடக்கவிழா 15.08.2013 வியாழன் இரவு 8:00 மணிக்குத் தொடங்கியது. மலேசியத் தகவல், பல்லூடக அமைச்சர் மாண்புமிகு சபரி சிக் மாநாட்டினை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார். 

மாநாட்டில் பேசிய மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சி.ம.இளந்தமிழ்,"இனிவரும் எதிர்காலம் எந்திரமயமாக இருக்கும். முழுக்க முழுக்க தகவல் தொழில்நுட்பமே எங்கும் எதிலும் அட்சி செய்யப் போகின்றது. வீட்டுக் வீடு எந்திர மனிதன் இருக்கப் போகின்றான். அந்த இயந்திய மனிதன் தமிழ் பேசவேண்டும் என்றால், இப்பொழுதே அதற்கான பணிகளை முடுக்கிவிட வேண்டும். மேலும், தமிழ்க் கணினி பயன்பாட்டைத் தமிழ் மக்கள் அதிகப்படுத்த வேண்டும்.  தமிழ் தகவல் தொழில் நுட்பத்தைத் உலகத்தரப்படுத்த வேன்டும். பன்னாட்டு நிறுவனங்களோடு இணைந்து தமிழுக்கான முன்னெடுப்புகளை முனைந்து செய்தல் வேண்டும். இந்த மாநாட்டின்வழி உத்தமம் அமைப்பு எதிர்காலத் தமிழுக்கு ஆக்கமான பணிகளையும் திட்டங்களையும் பற்றி சிந்திக்கும் மாநாடாக நடைபெறுகிறது" எனத் தெரிவித்தார்.

மலாயாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டான்ஶ்ரீ கவுத் பின் சேசுமான், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் மு.ஆனந்தகிருஷ்ணன் ஆகிய இருவரும் சிறப்புரை ஆற்றினர்.

இவர்களை அடுத்து, முரசு அஞ்சல் நிறுவநர் முத்து நெடுமாறன் முதன்மைப் பொழிவு நிகழ்த்தினார். இந்த முதன்மைப் பொழிவு அவையோர் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்ததோடு, கணினி இணைய உலகில் தமிழ்மொழியின் வளர்ச்சி அனைவருக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.

"கணினி, மடிக்கணினி, இணையம் ஆகியவற்றில் தமிழ்மொழி இன்று மிக எளிதாகவும் இயல்பாகவும் இயங்கும் நிலைமை உருவாகிவிட்டது. இன்று மிகப்பரவலாகிவரும் தட்டைகள் (Tablets), திறன்பேசிகள் (Smart Phones), கைக் கருவிகள் (Mobile Devices), குறுஞ்செயலிகள் (Apps) ஆகியவற்றிலும் தமிழ் வளர்ச்சிகண்டுள்ளது. ஆங்கிலம் போலவே தமிழையும் மிக எளிதாகப் பயன்படுத்தும் நிலைமை உருவாகிவிட்டது. ஆண்டிரோய்டு, விண்டோசு தளங்களிலும் தமிழைப் படித்தலும் எழுதுதலும் பெருகிவருகின்றன. தமிழின் வளர்ச்சி மேலும் விரவாக நடைபெற தமிழ் மக்கள் தமிழ்க் கணிமையைப் பயன்படுத்துபவர்களாக மாற வேண்டும். தமிழ்க் கற்றவர்கள் தமிழ்க் கணிமை பயனர்களாக மாற வேண்டும். அதோடு, தரமான பயனர்களாகவும் தரமிக்க கைக்கருவிகளைப் பயன்படுத்த முன்வரவேண்டும்." என்றார் முத்து நெடுமாறன்.

கைக்கருவிகளில் தமிழ்க் கணிமை, தமிழ்க் குறுஞ்செயலிகள், திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல், தமிழ்க் கணினிச் சொல்லாக்கம், கணினிக்குத் தமிழ் இலக்கண அறிவூட்டல், தமிழ் இணைய வளர்ச்சி, தமிழ்ச் சொல்திருத்தி, இயந்திர மொழி மாற்றம், இயன்மொழிப் பகுப்பாய்வுப் பிழைதிருத்தி, கணினி இணையம் வழி தமிழ்க் கற்றல் கற்பித்தல் முதலான துறைகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன. மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகள்  பத்ரி சேசாத்திரி பொறுப்பில் ஆய்வடங்கலாக வெளியிடப்பட்டது.

மாநாட்டையொட்டி கண்காட்சியும் மக்கள் கூடம் எனும் தமிழ்க் கணிமை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஏறக்குறைய 10,000க்கும் அதிகமான தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மாணவர்களும் இளையோர்களும் பொதுமக்களும் வந்திருந்து கலந்து பயன்பெற்றனர்.

மொத்தத்தில், இந்த உலகத் தமிழ் இணைய மாநாடு மலேசியத் தமிழ் மக்களிடையே குறிப்பாக மாணவர்களிடையேயும் இளையோர்கள் மத்தியிலும் தமிழ்க் கணிமை மீது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவதில் பெரும் வெற்றி பெற்றுள்ளது என்றால் மிகையாகாது.
மேலும் செய்திகள் விரைவில்...

Blog Widget by LinkWithin