Thursday, October 31, 2013

தமிழ் இலக்கியப் பாடத்தை எடுக்க மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்

12.10.2013ஆம் நாள் நடந்த 'எசுபிஎம் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம்' தொடர்பாக வெளிவந்த நாளிதழ் செய்தி இது. நன்றி: மக்கள் ஓசை (28.10.2013)

***************
 

தமிழ் இலக்கியப் பாடம் கடுமையான பாடமல்ல. மலேசியக் கல்வி சான்றிதழ் (எசுபிஎம்) தேர்வுப் பாடமாகத் தெரிவு செய்யும் ஒவ்வொரு மாணவரும் தமிழ் இலக்கியப் பாடத்தையும் கண்டிப்பாகத் தேர்வு செய்ய வேண்டுமென்று தமிழ் வாழ்வியல் இயக்கச் செயலாளர் சுப.நற்குணன் வேண்டுகோள் விடுத்தார். 

தமிழ் வாழ்வியல் இயக்க ஏற்பாட்டில் தமிழியல் நடுவத்தில் நடைப்பெற்ற எசுபிஎம் மாணவர்களுக்கான தமிழ் இலக்கியப் பாடக் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பேசிய அவர் மேற்கண்ட கருத்தை வலியுறுத்தினார்.

தமிழ் இலக்கியப் பாடத்தில் நமது மாணவர்கள் பெறும் புள்ளிகள் அவர்கள் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சேர உதவியாக இருப்பதுடன் தங்களின் வாழ்க்கையில் நல்ல வழிகாட்டுதலையும் தரவல்லதாக உள்ளது.

எனவே, நம் மாணவர்கள் தமிழ் மொழியுடன், தமிழ் இலக்கியப் பாடத்தையும் தேர்வு செய்ய பெற்றோர்களும், இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்களும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தமிழ் இலக்கியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லத் தமிழ் இலக்கியப் பாடங்களை நமது மாணவர்கள் கற்பது அவசியமாகும்.

மாணவர்களுக்குப் போதிப்பதற்குத் தேவையான வழிகாட்டி நூல்கள் தற்போது கடைகளில் கிடைப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இங்கு நடைப்பெற்ற கருத்தரங்கில் அனுபவமிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களையும் தேர்வு அணுகுமுறைகளையும் மாதிரி வினாக்களும் விடை அமைப்பு முறைகளையும் எளிய முறையில் விளக்கப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் செலாமா, பேரா, நிபோங் டிபால், சிம்பாங் அம்பாட், பாரிட் புந்தார் நடுவங்களைச் சேர்ந்த 80 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

@நன்றி: மக்கள் ஓசை
 

Tuesday, October 29, 2013

செல்லினம்: ஆண்டிரோய்டு தமிழ்ச் செயலி சாதனை

திறன்பேசிகளில் (smart phones) தமிழ் உள்ளீட்டு முறைமையை அறிமுகப் படுத்திய செல்லினம் எனும் செயலி, ஆண்டிராய்டு (android) வகைக் கருவிகளில் 50,000க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.
2003ஆம் ஆண்டு மலேசியாவில் கணினி மென்பொருள் வடிவமைப்பாளர் முத்து நெடுமாறனால் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி 2005ஆம் ஆண்டு பொங்கல் அன்று சிங்கப்பூர் ஒலி 96.8 தமிழ் வானொலி நிலையத்தின் ஆதரவோடு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் பொதுப் பயனீட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனை அறிமுகப்படுத்திய வைரமுத்து, “நேற்றுவரை மூன்று தமிழ், இன்றுமுதல் நான்கு தமிழ், இதோ கைத்தொலைபேசியில் கணினிதமிழ்” எனும் கவிதை வரிகளைக் கொண்டு பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்கத்தில் நோக்கியா, சோனி எரிக்சன், சாம்சங் கருவிகளில் மட்டும் இயங்கிய செல்லினம் 2009 ஆண்டு முதல் ஐபோனிலும் வெளியிடப்பட்டது. ஐபோனிலும் ஐபேடிலும் இதுவரை 25,000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

ஆண்டிராய்டு கருவிகளைப் பயன்படுத்துவோரின் நீண்ட நாள் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம், கடந்த 2012 திசம்பரில் செல்லினத்தின் ஆண்டிராய்டு பதிப்பு வெளியீடு கண்டது. வெளியிடப்பட்ட 10 மாதங்களுக்குள் விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் பயனர்களின் தன்னார்வ அடிப்படையிலும், கருத்துப் பரிமாற்றங்களின் வழியும் தற்போது 50,000க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களைக் கண்டு சாதனை படைத்துள்ளது.


முத்து நெடுமாறனின் கருத்து

இது குறித்து முத்து நெடுமாறன் கருத்துரைக்கையில், “செல்லினத்தைப் பயன்படுத்த ஆண்டிராய்டு பயனர்கள் காட்டும் ஆர்வம் உண்மையிலேயே உற்சாகத்தை அளிக்கிறது. திறன்பேசி வகைகளில் ஆண்டிராய்டு அதிகப் பயனர்களைக் கொண்டிருந்தாலும் அதில் நேரடி தமிழ் உள்ளீடு இயல்பாகவே இடம் பெறாமல் இருப்பது ஒரு பெரிய குறையே. இந்தக் குறையை செல்லினம் நீக்குவது மட்டுமின்றி முன்கூறும் (prediction) வசதிகளைச் சேர்த்து தமிழ் உள்ளீட்டை எளிமைப் படுத்தியும் இனிமைப் படுத்தியும் உள்ளது. இந்த வசதிகளை அனைவரும் வரவேற்கிறார்கள் என்பதை கூகல் பிளே (Google Play) தளத்தில் பயனர்கள் பதிவு செய்த கருத்துகளைக் கொண்டு அறிந்துகொண்டோம்” என்று கூறினார்.

செல்லினத்தின் கூறுகள் எச். டி. சி. வகை திறன்பேசிக் கருவிகளிலும் அண்மையில் வெளியீடு கண்ட ஆப்பிளின் ஐ. ஓ.எஸ். 7 மென்பொருள் பதிப்பிலும் இயல்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு விரைவில்

செல்லினத்தின், மேலும் சில  வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அடுத்த பதிகை (version) தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது.

அது குறித்துக் கருத்துரைத்த முத்து நெடுமாறன் “செல்லினத்தின் அடுத்த பதிகையை சில பயனர்கள் பயன்படுத்தி அவர்களின் விரிவான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். பொருத்தமான கருத்துகளை ஏற்று அவற்றுக்கேற்ற மாற்றங்களை இப்போது செய்து வருகிறோம். குறிப்பாக சொற்பிழை தவிர்த்தல், அதிகமான சொல்லை முன்கூறுதல் போன்ற வசதிகள் பலரின் பாராட்டைப் பெற்று வருகின்றன. இவை அனைத்தும் பிழையின்றி இயங்கும் நிலையை அடைந்தபின் புதிய பதிப்பை வெளியிடுவோம்” என்று கூறினார்.

@நன்றி: செல்லியல்
  

Thursday, October 03, 2013

தமிழ்க் கோட்டம் கட்டட நிதி விருந்தோம்பல்

மலேசியாவில் தமிழுக்காகவும் தமிழருக்காவும் அமையவுள்ள முதல் கட்டடம் ‘தமிழ்க் கோட்டம்’ ஆகும். பேரா, கிரியான் மாவட்டம் பாரிட் புந்தாரில் தமிழுக்குச் சூட்டப்படும் ஒரு மணிமகுடம் இந்தத் ‘தமிழ்க் கோட்டம்’ என மாஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் புகழாரம் சூட்டினார்.

தமிழியக் கருத்துக்கள், பணிகள், சிந்தனைகள், கொள்கைகள், ஆக்கங்கள், அனைத்திற்கும் சுமார் 8 இலக்கம் (RM800,000.00) வெள்ளியில் வாங்கப்படும் இத்தாய் கட்டடத்திற்கு முதல்கட்ட நிதியாக 30 ஆயிரம் ரிங்கிட்டை அவர் வழங்கினார்.

கடந்த 1990 தொடங்கி 23 ஆண்டுகளாக வட மலேசியாவில் குறிப்பாக, கிரியான் மாவட்டத்தில் தமிழுக்காக ஒரே இலக்கோடும் ஒரே கொள்கையோடும் செயல்பட்டு வரும் தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் செயலவையினரைப் பாராட்டுவதாக விருந்தினர்களின் பலத்த கரவொலிக்கிடையே அவர் கூறினார்.  

தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் ‘தமிழ்க் கோட்டம்’ கட்டட நிதி விருந்தோம்பல் நிகழ்வில் கலந்துக் கொண்டு சுற்று சூழல், இயற்கை வள அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் திறப்புரையாற்றினார்.

க.முருகையன்
இந்நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் தலைவர் க.முருகையன் மூன்று மாடிகள் கொண்ட கட்டடம் வாங்கத் திட்டமிட்டு முன்பணமாக 2 இலக்கம்  (RM200,000.00) வெள்ளியை செலுத்திவிட்டதாகவும் மேலும் 6 இலக்கம் (RM600,000.00) வெள்ளி தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

‘தமிழ்க் கோட்டம்’ கட்டடம் தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டாலும், மலேசியத் தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்றார். மலேசிய மண்ணில் தமிழ் தமிழாக நிலைக்கவும் தமிழர் தமிழராக வாழவும், தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே இலக்கில் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து செயல்படுவோம் என்று தெரிவித்த அவர், உங்கள் வாழ்நாளில் தமிழுக்குச் செய்யும் நிலையான பணியாக எண்ணி நன்கொடை வழங்கி உதவிடுமாறும் தமதுரையில் கேட்டுக் கொண்டார்.  
மாண்புமிகு டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் நன்கொடை
தமிழ் வாழ்வியல் இயக்க செயற்குழுவினர்
தமிழ் கோட்டம் நிதிக்காக தமிழ் வாழ்வியல் இயக்க செயற்குழுவினர் மட்டும் இலக்கம் வெள்ளியை (RM200,000.00) நிதியாக வழங்கினர். பொதுமக்கள் முன்வந்து நன்கொடை வழங்குவதற்கு இதுவொரு முன்மாதிரியாகவும் உந்துதலாகவும் அமைந்தது. மலேசியத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் நிதியாக அதன் தலைவர் மூ.வி.மதியழகன் 10 ஆயிரம் வெள்ளியை வழங்கினார். பெயர் குறிப்பிட விரும்பாத பினாங்கைச் சேர்ந்த டத்தோ ஒருவர் 10 ஆயிரம் வெள்ளி நன்கொடை வழங்கினார்.

                     திருவருள், தமிழ்ச்செல்வன், க.முருகையன், இரா.திருமாவளவன்,                       இர.திருச்செல்வம், கோவி.சந்திரன், சுப.நற்குணன்
மேலும் அரசுசாரா இயக்கங்கள், கொடை நெஞ்சர்கள், தமிழ் ஆசிரியர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் ஆகியோர் திரளாகக் கலந்துகொண்டு நிதியை வழங்கினர். மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்களும் விருந்தோம்பலில் கலந்து சிறப்பித்தார். தமிழ் வாழ்வியல் இயக்கச் செயலாளர் சுப.நற்குணனின் அறிவிப்பில் நிகழ்ச்சி வெகுச்சிறப்பாக நடந்தது.

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Blog Widget by LinkWithin