Monday, April 14, 2008

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 3


தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு

ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடராண்டு முறை இல்லாதது முக்கிய காரணமாகும்.

பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என்கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துவந்துள்ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த அறுபதாண்டு கணக்குமுறையை பின்னாளில் ஆரியர்கள் தங்கள் கையகப்படுத்திக் கொண்டு ஆரியமயமாக்கி 60 ஆண்டுகளுக்கும் சமற்கிருதப் பெயர்களைச் சூட்டி, காலப்போக்கில் தமிழரின் ஆண்டு முறையையும் வானியல் கலையையும் ஐந்திற அறிவையும் அழித்து ஒழித்தனர். தமிழரிடையே தொடராண்டு முறை இல்லாமல் போனதால் இன்று நாம் காணுகின்ற பல்வேறு தாக்குறவுகளும் பின்னடைவுகளும் தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்டது.

இந்தக் குழப்பத்தை நீக்க ஐந்நூறு தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு 31 எனக் கொண்டு, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத்துவதென முடிவு செய்தனர். இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர்.

சைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்துவம், இசுலாம் என பல்வேறு சமயத்தைத் தழுயிய அந்த ஐந்நூறு சான்றோர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்குச் சரியான காரணங்களும் சான்றுகளும் இருக்க்கின்றன.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் அண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியன்களில் காணப்பெறும் சான்றுகள் சில:-

1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" – நற்றிணை

2. "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" – குறுந்தொகை

3. "தைஇத் திங்கள் தண்கயம் போல்" – புறநாநூறு

4. "தைஇத் திங்கள் தண்கயம் போல" – ஐங்குறுநூறு

5. "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – கலித்தொகை

தைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன.

இனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்குரிய வானவியல் அடிப்படையிலான காரணத்தை காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும். அந்தவககயில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்குகிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத்திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே.

இப்படியும் இன்னும் பல அடிப்படை காரணங்களாலும் தை முதல் நாளை ஐந்நூறு தமிழ்ச் சான்றோர்கள் புத்தாண்டாக அறிவித்தனர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

'பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்''

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது.

தமிழ் மொழி, இன, சமய, கலை, பண்பாடு, வரலாற்று மீட்பு வரிசையில் பிற இனத்தாரின் தாகுதலால், படையெடுப்பால், மறைப்புகளால், சூழ்ச்சிகளால் இடைக்காலத்தில் சிதைக்கப்பட்ட தமிழரின் வானியல் கலையை – ஐந்திரக்(சோதிடம்) கலையை நாம் மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழரின் செவ்வியல் நெறியை நிலைப்படுத்த முடியும்.

4 comments:

Anonymous said...

தமிழ் புத்தாண்டு தொடர்பிலான இந்தக் கட்டுரை அருமை. பற்பல வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கி மிக நன்றாக எழுதப்பட்டுள்ளது. தமிழர்களிடையே காணப்படும் புத்தாண்டு மீதான அனைத்துக் குழப்பங்களும் தீர்ந்துபோக இந்தக் கட்டுரை மிகவும் உதவும்.

திருத்தமிழ் வலைப்பதிவை தொடர்ந்து படித்து வருகின்றேன். பயனான செய்திகள் இடம்பெற்று வருகின்றன. நமது மலேசியாவில் இந்த வகையில் வெளிவரும் ஒரே வலைப்பதிவு திருத்தமிழாகத்தான் இருக்கிறது.

வாழ்க திருத்தமிழ் திருப்பணி!

அருள் - கிள்ளான்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

தமிழின் வழி வரும் சோதிடக்கலைக்கான தரவுகள் எங்காவது கிடைக்குமா?

அது கிடைத்தால் பல ஐயங்களுக்கு விடை கிடைக்கும்.

Aayirathil oruvan said...

ஆனால் கதிரவன் வடதிசையில் நுழையும் நாள் மார்ச் 21 (Equinox ) அது தை திங்களாக இருக்க வாய்ப்பு இல்லை
(தமிழகத்தில் நுழையும் நாள் ஏப்ரல் 21 /22 )
(நமது புவியியல் புத்தகத்திலிருந்து )

Anonymous said...

தமிழ் புத்தாண்டு தொடர்பிலான இந்தக் கட்டுரை அருமை

Blog Widget by LinkWithin