Sunday, April 21, 2013

தமிழ் வாழ்வியல்; வரலாறு அறிய இலக்கியம் படிக்க வேண்டும்

தமிழர்தம் வாழ்வியலையும் வரலாற்றையும் அறிந்துகொள்ள நாம் தமிழ் இலக்கியம் பயில வேண்டும். மொழி, இன, பண்பாட்டு அறிவும் உணர்வும் கொண்டவர்களாக நாம் வாழ்வதற்கு நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற இலக்கியங்கள் உதவும் எனப் பாரிட் புந்தார் இரா.பாலு தெரிவித்தார். பாரிட் புந்தார் தமிழியல் நடுவத்தில் நடைபெற்ற எசுபிஎம் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கிய வழிகாட்டி நூல் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

"நான் ஒரு சில வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறேன். அங்குத் தமிழர்கள் தங்கள் கலை, பண்பாட்டோடு வாழ்வதைப் பார்த்தேன். நம்மைப் போலவே உடை உடுத்துகிறார்கள். நமது உணவுகளைச் சமைக்கிறார்கள். நம்மைப் போலவே வழிபாடு செய்கிறார்கள். அவர்களின் பெயர்கள் தமிழில் இருக்கின்றன. ஆனால், அவர்களுக்குத் தமிழ்ப் பேச தெரியவில்லை.  அவர்கள் வீட்டில் தமிழ் இல்லை; குழந்தைகளுக்குத் தமிழ் தெரியவில்லை. இதனைப் பார்க்கும்பொழுது மனம் வேதனையாக இருந்தது. அவர்களும்கூட தமிழ் தெரியவில்லையே; படிக்கவில்லையே; தமிழ்ப்படிக்க வழியில்லையே என்று வருத்தப்படுகிறார்கள். ஆனால், நம் மலேசிய நாட்டில் அப்படியில்லை. தமிழ்ப் படிக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. தமிழ் இலக்கியம் படிக்க அரசாங்கம் வாய்ப்பு கொடுத்துள்ளது. தமிழில் நன்றாகப் பேச முடிகின்றது. அப்படி இருக்கையில் நம் மாணவர்கள் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். நமது தாய்மொழியை நாம் படிக்காவிட்டால் காலப்போக்கில் நாமும் மியான்மார், இந்தோனேசியா, மொரிசியசு நாட்டுத் தமிழர்கள் போல ஆகிவிடுவோம். பிறகு, நமது அடுத்த தலைமுறை சொந்த அடையாளத்தைத் தொலைத்துவிட்ட இனமாக ஆகிவிடும்" என்று அவர் மேலும் தமதுரையில் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய, தமிழியல் ஆய்வுக் களத் தலைவர் இர.திருச்செல்வம் "எசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடத்தில் வைக்கப்பட்டுள்ள மூன்று நூல்களும் மிக அருமையானவை. மலேசியக் கவிதைக் களஞ்சியத்திலிருந்து மிக அருமையான கவிதைகளைத் தொகுத்து தந்துள்ளார்கள். மேலும், ஒவ்வொரு கவிஞரின் வாழ்க்கைக் குறிப்பைப் அவர்களின் படத்துடன் பதிவுசெய்து ஆவணப்படுத்தியுள்ளார்கள். அந்தக் கவிதைகளைப் படித்தால் மாணவர்கள் மிக சிறந்த பண்புடனும் நெறியுடனும் திகழ முடியும். அதேபோல், தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த காப்பியமான சிலப்பதிகாரத்தைப் பாடமாகப் படிப்பதன்வழி தமிழின் சுவையையும் தமிழ் நாடகத்தின் அமைப்பு, சிறப்பு ஆகியவற்றையும் அறிந்துகொள்ள முடியும். கலைஞர் மு.கருணாநிதியின் சிலப்பதிகார நாடகக் காப்பியத்தைப் படிப்பதோடு நின்றுவிடாமல் சிலப்பதிகார மூலக்கதையைப் படித்து உணரவேண்டும். தமிழ் இலக்கியம் படிப்பதால் மாணவர் மனங்கள் பண்படுவதோடு, இளம் வயதிலேயே நல்ல உணர்வுகளும் எண்ணங்களும் பதிவாகும். தமிழ்மொழ்யின் மீது பற்றுதல் ஏற்படும். பாரிட் புந்தார் வட்டாரத்தில் உள்ள மாணவர்களின் நலனுக்காக இந்த இலக்கிய வகுப்பை நடத்திவரும் ஆசிரியர் சுப.நற்குணன் அவர்களிடம் நீங்கள் அனைவரும் நிறைய படித்துக்கொள்ள முடியும். அவர் மிகச் சிறப்பாகப் பாடம் நடத்தக்கூடியவர். ஆகவே, மாணவர்கள் அனைவரும் நல்லமுறையில் பயின்று சிறந்த தேர்ச்சியைப் பெற வேண்டும்" என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் இலக்கிய வகுப்பில் பயிலும் 25 மாணவர்களுக்கு 'இலக்கியக்களம்' வழிகாட்டி நூல் வழங்கப்பட்டது. விக்னேசுவரன் தண்ணீர்மலை இந்த நூல்களை அன்பளிப்புச் செய்ததோடு மாணவர்களுக்கு எடுத்து வழங்கினார்.

தூய உள்ளத்தோடும் நல்ல எண்ணத்தோடும் மாணவர்களுக்கு நூல்களை அன்பளிப்புச் செய்த விக்னேசுவரன் தண்ணீர்மலை அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய சுப.நற்குணன், "இவரைப் போன்ற நல்லோர்களை அடையாளங்கண்டு மதிக்க வேண்டும். தமிழ்மொழி நலனுக்காக மனமுவந்து நன்கொடைகள் வழங்கி உதவும் நல்ல உள்ளங்கள் நம்மிடையே பலர் உள்ளனர். அவர்களின்  உதவியச் சரியாகப் பயன்படுத்தி நல்ல தமிழ்ப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, மாணவர்களிடையே தமிழ்மொழி அறிவையும் தமிழ் இலக்கிய ஆர்வத்தையும் உருவாக்குவதற்கு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். தமிழ் இலக்கியப் பாடத்தை நம் தமிழ் மாணவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். இல்லையேல், எசுபிஎம் தேர்விலிருந்து தமிழ் இலக்கியம் நீக்கப்படலாம். இப்படி ஒரு கவலைக்கிடமான நிலைமை நம் தமிழுக்கு ஏற்படக்கூடாது; அதுவும் நாமே அன்த நிலையை ஏற்படுத்தக்கூடாது" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழியல் நடுவ இலக்கிய வகுப்பு மாணவர்கள், நடுவப் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 
@சுப.நற்குணன், திருத்தமிழ்

Wednesday, April 10, 2013

செர்சோனீசு தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் சாதனை

தமிழ்ப்பள்ளிகளின் புறவளர்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்கம் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும் என்பதற்குச் செர்சோனீசு தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் நல்லதொரு முன்மாதிரியாக விளங்குகிறது என்று அச்சங்கத்தின் தலைவர் சுப.நற்குணன் தெரிவித்தார்.

கடந்த 30-03-2013ஆம் நாள் காரிக்கிழமை, பேரா, கோலக் குராவ், செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடந்த முன்னாள் மாணவர் சங்கத்தின் முதலாம் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.

கடந்த 2011ஆம் ஆண்டில் 7 மாணவர்களுடன் தள்ளாடிக்கொண்டிருந்த செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளி முடப்படக்கூடிய நெருக்கடிக்கு ஆளாகி இருந்தது. மூடப்படும் அபாயத்திலிருந்து பள்ளியைக் காப்பாற்ற வேண்டி, பள்ளி நிருவாகம், பெ.ஆ.சங்கம், பள்ளி மேலாளர் வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னாள் மாணவர் சங்கம் மும்முரமாகவும் முழுமூச்சாகவும் செயல்பட்டது. இதன் பயனாக, பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

5-5-2012ஆம் நாள் முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒன்றுகூடல் நிகழ்ச்சியும் கல்விநிதி விருந்தோம்பலும் மிகப் பெரிய அளவில் ஏற்பாடு நடைபெற்றது. இப்பள்ளியில் பயின்ற ஏறக்குறைய 300 முன்னாள் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட நிதிவளத்தைக் கொண்டு பள்ளியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, மாணவர்களின் போக்குவரத்துக்கு உதவியாகப் பள்ளிப் பேருந்து வாங்குவதற்குத் திட்டம் வகுக்கப்பட்டது. அதற்காக, மு.மா.சங்கத் துணைத்தலைவர் இராம.பாலமுரளி தலைமையில் பள்ளிப் பேருந்து குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் பயனாக, தற்பொழுது பள்ளிக்கென ஒரு பேருந்து வாங்கப்பட்டுள்ளது எனப் பலத்த கரவொலிக்கு இடையில் சுப.நற்குணன் அறிவித்தார். செர்சோனீசு பள்ளி வரலாற்றில் இதுவொரு மாபெரும் வெற்றி மட்டுமன்று புது வரலாறும்கூட என்றாரவர்.

மேலும் பேசுகையில், செர்சோனீசு தமிழ்ப்பள்ளியை கிரியான் மாவட்டத்திலும் பேரா மாநில அளவிலும் மிகச் சிறந்த தமிழ்ப்பள்ளியாக உருவாக்கிட மு.மா.சங்கம் பாடாற்றும் என்று தெரிவித்தார். அதற்கு, முன்னாள் மாணவர்கள் அனைவரும் உறுதியான ஆதரவினை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய பள்ளி மேலாளர் வாரியக்குழுத் துணைத்தலைவர் திரு.இரா.பாலு, செர்சோனீசு தமிழ்ப்பள்ளி மு.மா.சங்கம் மிகச் சிறப்பான முறையில் செயல்படுகிறது என்றார். அதனுடைய பணிகளும் சேவைகளும் மற்றவர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாக விளங்குகின்றது என்று புகழாரம் சூட்டினார்.

பள்ளியின் தலைமையாசிரியரும் மு.மா.சங்கத்தின் ஏடலுருமாகிய இர.முனுசாமி பேசுகையில், இந்த முன்னாள் மாணவர் சங்கம் அரிய செயல்களைச் சரியாகத் திட்டமிடுவதோடு அவற்றைச் சாதிப்பதிலும் முனைப்பாக இருக்கின்றது. மு.மா.சங்கக் குழுவினர் ஒவ்வொருவரும் பள்ளியின்மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டு செயல்படுகின்றனர். இவர்களின் ஆதரவினால் பள்ளியில் பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் சீராக நடந்து வருகின்றன. குறிப்பாக, கடந்த ஆண்டில் வாக்குறுதி அளித்தது போல இவ்வாண்டில் பள்ளிக்குப் பேருந்து ஒன்றினை வாங்கி பெரும் சாதனை படைத்துள்ள மு.மா.சங்கத்திற்குத் தமது பாராட்டைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தில், மு.மா.சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சங்கத்தின் நிதி வளத்தை அதிகரிப்பதற்காக சோமன் பாபு ஆயிரம் ரிங்கிட்டையும் செல்வம் ஶ்ரீ ஐந்நூறு ரிங்கிட்டையும் அன்பளிப்பு செய்தனர். மற்றொரு முன்னாள் மாணவராகிய யுவராஜ் நூறு ரிங்கிட் நன்கொடையளித்தார். சங்கத்தின் செயலாளர் இராஜேஸ்  ஒவ்வொரு மாதமும் 136.00 ரிங்கிட்டை மாத நன்கொடையாகப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். பள்ளியின் ஆசிரியர்களும் ஊழியர்களும் ஆளுக்குப் பத்து ரிங்கிடை ஒவ்வொரு மாதமும் நன்கொடையாக வழங்குவதாகத் தலைமையாசிரியர் தெரிவித்தார்.



இந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தின் இறுதியில் பள்ளிக்காக வாங்கப்பட்டுள்ள பேருந்தின் வெள்ளோட்ட நிகழ்ச்சியும் சிறப்புடன் நடந்தது. பள்ளி மேலாளர் வாரியக்குழுவின் துணைத் தலைவர் திரு.இரா.பாலு பேருந்தை ஓட்டி வெள்ளோட்டம் விட்டார். வருகையளித்த உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். செர்சோனீசு தோட்டத் தமிழ்ப்பள்ளி வரலாற்றில் இதுவொரு பெரும் சாதனை என அனைவரும் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டனர்.

                                                                                                                  @சுப.நற்குணன், திருத்தமிழ்

Blog Widget by LinkWithin