Thursday, December 31, 2009

புத்தாண்டுச் சிந்தனை:- பேசியே கெட்டவன் தமிழன்டா..!



“தமிழன் பேசிப் பேசியே கெட்டான்”

“பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான்”

“தமிழ்.. தமிழ்.. என்று பேசியே தமிழன் கெட்டான்”

"தமிழன்.. தமிழன்.. என்று பேசியே தமிழன் கெட்டான்”

இப்படியெல்லாம் பலரும் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஏன் நீங்களும்தான் கேட்டிருப்பீர்கள்.

இதில் உண்மை இருக்கிறதா? இந்தக் குற்றச்சாட்டு சரிதானா?

இப்படிக் கேட்பவர்களை நோக்கி சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.

எதைப் பேசி தமிழன் கெட்டான்?

தமிழ்மொழியின் சிறப்பு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்மொழியின் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் இலக்கியம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் மரபு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ப் பண்பாடு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ச் சமயம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் வாழ்வியல் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் மன்னர்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ப் புலவர்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் நூல்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்க் கலைகள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் வீரம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் அறிவு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் நாடு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் விடுதலை பற்றி பேசிக் கெட்டானா?

நான் சொல்கிறேன், இதில் எதையுமே கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பேசாமல் ஊமையராய் – செவிடர்களாய் இருந்ததால்தான் இன்றையத் தமிழன் கெட்டுச் சீரழிந்து இருக்கின்றான். இதுதான் உண்மை.

உலகத்தின் எல்லா இனத்தவனும் அவனவன் மொழி – இனம் – கலை – பண்பாடு – இலக்கியம் – அறிவுநூல் – வரலாறு - நாகரிகம் என ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் தூக்கிப்பிடித்து மேலே ஏற்றிக் கொண்டாடுகிறான்.

ஆனால், தமிழன் மட்டும்தான் தன் உரிமைப் பொருள்கள் எல்லாவற்றையும் காலடியில் போட்டு மிதிக்கிறான். தன் மொழியைவிட; தன் இனத்தைவிட; தன் பண்பாட்டைவிட மற்றவருடையது சிறந்தது என்று புலம்பித் திரிகிறான். சொந்த இனத்தின் வேரையே வெட்டிவிட்டு இனவழி – மொழிவழி உறவைத் துண்டிக்கிறான். சொந்த அடையாளத்தை மறைத்து – மறந்து மாற்றான் போல வேடம்போட்டு வாழ்கிறான்.

அதனால்தான் சொல்கிறேன். “பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான்” என்பது வடிகட்டிய பொய். “பழம்பெருமை பேசாமல் – புரியாமல் – அறியாமல் – தெரியாமல்தான் தமிழன் கெட்டான் – கெடுகின்றான் – எங்கு பார்த்தாலும் அடியும் உதையும் படுகின்றான். இவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டு தப்பித்த தமிழனோ அன்னியவனின் அடிமையாய் – அடிவருடியாய் வாழ்கின்றான்.

இதனை உணர்ந்து இனிக் கண்டிப்பாகத் தமிழைப் பேசுவோம் - தமிழின் பெருமை பேசுவோம் – தமிழன் மேன்மையை உரக்கப் பேசுவோம்.

இதனையே புத்தாண்டுச் சிந்தனையாகத் திருத்தமிழ் வாசகர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

அப்படிப் பேச முடியாதவர்கள், பேசுபவர்கள் பேசுவதையாவது கேட்டு வைப்போம். இங்கே ஒரு தமிழ்க் குழந்தை ‘தமிழ்’ பேசுகிறது.. கேட்டு வைப்போம் வாருங்கள்..!!



"அனைவருக்கும் 2010 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்து"

Wednesday, December 30, 2009

தமிழ்க் குழந்தை தமிழ்ப்பள்ளிதான் செல்ல வேண்டுமா?


மலேசியாவில், 2010க்கான கல்வியாண்டு எதிர்வரும் சனவரி 3ஆம் 4ஆம் தேதிகளில் தொடங்க உள்ளது; பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆயிரக்கணக்கில் தமிழ்க் குழந்தைகள் தமிழ்ப் பள்ளிகளை நோக்கி படையெடுக்கக் காத்திருக்கிறார்கள். கடந்த காலங்களைப் போலவே, அடுத்த ஆண்டிலும்(2010) தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக் கணிசமாக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில், முதலாம் ஆண்டுக்கான பதிவுக் கணக்கைப் பார்க்கும்போது, நமக்கு சில புள்ளி விவரங்கள் கிடைக்கின்றன. 90% மலாய்க் குழந்தைகள் தேசியப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். 95% சீனக் குழந்தைகள் சீனப் பள்ளிகளில் பதிவு செய்கின்றனர். ஆனால், தமிழர்(இந்தியர்)களில் வெறும் 55% குழந்தைகள் மட்டுமே தமிழ்ப்பள்ளிகளில் பயில்வதற்காகச் செல்லுகின்றனர்.

மீதமுள்ள 45% தமிழ்க் குழந்தைகள் ஒவ்வோர் ஆண்டும் மற்ற பள்ளிகளுக்குச் செல்லுகின்றனர். வேற்றுமொழிப் பள்ளிகளில் சேருகின்ற தமிழ்க் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகமாகவே இருக்கின்றது.

*இதற்கான காரணங்கள் என்ன?
*நம்மவர்கள் மற்ற பள்ளிகளைத் தேடி ஓடுவது ஏன்?
*பெற்றோர்கள் பலர் தமிழ்ப்பள்ளிகளைப் புறக்கணிப்பதற்கு காரணம் யாது?
*படித்த பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளிகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லையே ஏன்?
*பணக்காரத் தமிழர்கள் தமிழ்ப்பள்ளிகளை வெறுக்கிறார்களே எதனால்?


இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன; தமிழ்ப்பள்ளிகள் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன; தமிழ்ப்பள்ளிகளின் நிருவாகம் – ஆசிரியர்கள் – கட்டட வசதி – கற்றல் கற்பித்தல் தரம் – பாடத் துணைப் பொருள்கள் திறம் எனப் பல கோணங்களில் குற்றங்களும் குறைபாடுகளும் அடுக்கிச் சொல்லப்படுகின்றன.

இத்தனையையும் கடந்து மேலேபோய், இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தேவையா? என கேள்வி கேட்கும் பேரறிவு கொண்ட தமிழர்(இந்தியர்)களும் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.

இதையெல்லாம் ஆராய்வதை விடுத்து, இதனைவிட முக்கியமான விடயங்களைச் சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.

அதாவது, இப்போது தமிழ்ப்பள்ளியில் ஏறக்குறைய ஒரு இலக்கத்து நாற்பத்து இரண்டாயிரம் (142,000) மாணவர்கள் படிக்கிறார்கள். ஏற்கனவே சொன்னது போல இது வெறும் 55% மட்டுமே. மீதமுள்ள 45% மாணவர்கள் அதாவது ஏறத்தாழ 108,000 மாணவர்கள் தேசியப் பள்ளி அல்லது சீனப்பள்ளிகளில் பயில்கின்றனர்.

இப்போதைய நிலையில் 142,000 மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் பயிலும் சூழலில்,

1) நாட்டில் 523 தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்றன.

2)523 துறைத் தலைவர்கள் (தலைமையாசிரியர்) பொறுப்பு நம்மவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

3) ஏறக்குறைய 8,600 ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இப்படியாக பல நன்மைகளை நாம் அடைந்திருக்கிறோம். நாம் நினைத்தால்.. மனது வைத்தால்.. ஒரே நாளில் இப்படிப்பட்ட நன்மைகளைப் பல மடங்காக ஆக்கிக்காட்ட முடியும்.

எப்படி என்கிறீர்களா?

மற்ற பள்ளிகளில் படிக்கும் 108,000 தமிழ் அல்லது இந்திய மாணவர்களும் உடனடியாக தமிழ்ப்பள்ளிகளுக்கு மாறினால் நிலைமை என்னவாகும். சற்றே கற்பனை செய்து பார்க்கையில் மூக்கின்மீது விரலை வைக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு மிகப்பெரிய மாற்றங்களையும் ஏற்றங்களையும் நம்மால் ஏற்படுத்த முடியும்.

மொழிப் பாதுகாப்பு, கலை, பண்பாட்டு, இலக்கிய, சமய நீடுநிலவல் (Survival), இனமீட்சி முதலான அடிப்படைகளைக் கடந்து பொருளியல் நிலையில் ஏற்படப் போகும் மாற்றங்கள் சில இதோ:-

1)தமிழ்ப்பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை 250,000 க்கு உயரும்.

2)8,600 ஆசிரியர்கள் என்ற நிலைமை 16,000 க்கு உயரும். அத்தனை வேலை வாய்ப்பும் நம்மவர்களுக்கே கிடைக்கும்.

3)புதிய தமிழ்ப்பள்ளிகள் நாடெங்கிலும் உருவாகும். இதனால், துறைத் தலைவர்கள் பொறுப்பும் அதிகரிக்கும். நம்மவர்கள் இன்னும் அதிகமானோர் தலைமையாசிரியர் பதவிகளுக்கு வரலாம்.

4) தமிழ்ப்பள்ளிகளுக்கு உரிய தமிழ் அதிகாரிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும்.

5) தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களை உருவாக்கும் ஆசிரியர் பயிற்சிக் கழக தமிழ் விரிவுரையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும்.

6) பல்கலைக்கழகங்களில் தமிழ்க் கற்பிக்கும் பேராசிரியர்களுக்கான வேலை வாய்ப்புகள் நிறைய உருவாகும்.

7)தமிழ்ப்பள்ளிகளுக்குப் பாடநூல்கள் உருவாக்கித் தரும் நிறுவனங்கள் பெருகும். அந்நிறுவங்கள் வழியாகப் பலருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.

8)பயிற்சி நூல்கள் அணியப்படுத்தும் நிறுவனங்கள் / வேலை வாய்ப்புகள் அதிகமாகும்.

9)தமிழ்ப்பள்ளிகளுக்குப் பாடத் துணைப்பொருள்கள் உருவாக்கும் நிறுவனங்கள் உருவாகும்; நிபுணர்கள் உருவாகுவார்கள்.

10)தமிழ்ப்பள்ளிகளில் போட்டிச் சூழல் இயல்பாகவே உருவாகி, கல்வித்தரம் பன்மடங்கு அதிகரிக்கும்.

11)தமிழ்ப்பள்ளி மாணவர்களை முன்படுத்தி சிறப்புக் கல்வி நிலையங்கள் / கல்விச் சேவை நடுவங்கள் உருவாக்கம் பெறும்.

12)தமிழ்ப்பள்ளிகளை முன்படுத்திய பல தொழில் வாய்ப்புகளும் வணிக வாய்ப்புகளும் பொருளியல் வளர்ச்சிகளும் உண்டாகும்.

இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். இங்கு சொல்லப்படாத பல முன்னேற்றங்கள் உங்களுக்கும் தோன்றியிருக்கலாம்.


அந்த அளவுக்கு, நமது சமுதாயம் மாற்றம் காண்பதற்கும் ஏற்றம் பெருவதற்கும் நாமே முனைந்து சிலவற்றைச் செய்துகாட்ட முடியும்; சாதித்துக் காட்ட முடியும்.

மலேசிய நாட்டில் நாம் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இன்னும் விரிந்தே இருக்கிறது. நம்மவர்கள் மிகவும் கூர்மையாகச் சிந்தித்துச் செயல்படத் தொடங்கினால், நமது சமுதாயத்தின் வேகத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

இதற்கெல்லாம் அடிப்படையில் தேவையானது நம்முடைய சிந்தனை மாற்றம்தான்.
தமிழையும் – தமிழ்ப்பள்ளியையும் – தமிழ்க்கல்வியையும் மூலதனமாக்கி முழுமூச்சுடன் முயன்று போராடினால் நம்மால் கண்டிப்பாக வானை முட்டும் அளவுக்கு முன்னேற முடியும்.

அதற்காக, நம்மவர்கள் உடனடியாக ஒரு முடிவுக்கு வரவேண்டும். அது வேறொன்றுமல்ல...

தமிழ்க் குழந்தைகள் கண்டிப்பாகத்
தமிழ்ப்பள்ளிக்குத்தான் செல்ல வேண்டும்.

Monday, December 28, 2009

திருவள்ளுவராண்டு 2041 (ஆங்கிலம் 2010) தமிழ் நாள்காட்டி


இன்னும் சில நாட்களில் 2010 புத்தாண்டு பிறக்கவுள்ளது. இது ஆங்கிலப் புத்தாண்டு; உலகமே பின்பற்றும் பொதுவான ஆண்டு என்பது எல்லாரும் அறிந்தது. 2010 சனவரித் திங்கள் 14ஆம் நாளில் தமிழர்களின் புத்தாண்டு பிறக்கவுள்ளது. இது திருவள்ளுவராண்டு 2041 ஆகும்.

ஆங்கிலத்தையும் ஆங்கிலப் புத்தாண்டையும் முன்படுத்தி நாள்காட்டிகள் வெளியிடப்படுகின்ற மரபைப் போல, தமிழையும் தமிழ்ப் புத்தாண்டையும் முன்னிறுத்தி தமிழ் நாள்காட்டி வெளிவந்துள்ளது. அதுவும், மலேசியா திருநாட்டில் நான்காவது ஆண்டாக இந்தத் தமிழ் நாள்காட்டி வெற்றிக்கொடிகட்டி வெளிவருகின்றது.

ஏற்கனவே, 2007, 2008, 2009 ஆகிய மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து வெளிவந்து தமிழர்களின் பாராட்டுகளை மட்டுமின்றி, மக்கள் தொலைக்காட்சியின் வாழ்த்தையும் பெற்ற இந்த நாள்காட்டியைத் தமிழியல் ஆய்வுக் களம் பெருமையோடு வெளியிட்டுள்ளது. மலேசியத் தமிழறிஞர் இர.திருச்செல்வம் இந்த நாள்காட்டியை வடிவமைப்புச் செய்துள்ளார்.

தமிழ் நாள்காட்டி வரலாற்றில் தனிப்பெரும் சிறப்பாக இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, இந்த நாள்காட்டி முழுமையாகத் தமிழிலேயே வெளிவந்துள்ளது. தமிழ்க்கூறு நல்லுலகம் முதன்முறையாகக் கண்டிருக்கும் தனித்தமிழ் நாள்காட்டி என இதனைத் துணிந்து குறிப்பிடலாம்.


நாள்காட்டிகளில் வழக்கமாக இடம்பெறுகின்ற அனைத்து விவரங்களும் இந்தத் தமிழ் நாள்காட்டியிலும் இடம்பெற்றுள்ளன. மலேசியச் சூழலுக்கு ஏற்ற வகையில், பொது விடுமுறைகள், பள்ளி விடுமுறைகள், சிறப்பு நாள்கள் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

தமிழ்ப் புத்தாண்டாம் தை முதல் நாளில் தொடங்குகிற இந்த நாள்காட்டியில் ஆங்கில நாள்காட்டியும் உள்ளடங்கி இருக்கிறது. ஆங்கில மாதம், நாள் ஆகியன குறிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தமிழுக்கும் முன்னுரிமை கொடுத்து நாள், மாதம், திதி, இராசி, நட்சத்திரம் என எல்லாமும் (தனித்)தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.

தமிழர்கள் கண்ட தமிழ் எண்கள் அழகாக வடிவமைக்கப்பட்டு இந்த நாள்காட்டியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் எண்களை அறியாதவர்களுக்கு உதவியாக தமிழ் எண்களுக்கு நடுப்பகுதியில் ஆங்கில எண்ணும் குறிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாள்காட்டியின் உள்ளடக்கங்கள்:-

1)தேதியைக் குறிக்கும் எண்கள் தமிழ் எண்களாக உள்ளன.

2)திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடு அமைந்துள்ளன.

3)கிழமைகள் 7, ஓரைகள் 12 (இராசி), நாள்மீன்கள் 27 (நட்சத்திரம்), பிறைநாள்கள் 15 (திதி) முதலானவை தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.

4)50க்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் பிறந்த நாள், நினைவு நாள்களோடு தமிழ் அருளாளர்களின் குருபூசை நாட்களும் குறிக்கப்பட்டுள்ளன.

5)மலேசியா, தமிழகம், தமிழீழம் உள்ளிட்ட 30 தமிழ்ப் பெரியோர்கள் - சான்றோர்கள் - தலைவர்களின் உருவப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

6)தமிழர்களின் வரலாற்றில் மறைக்கப்பட்டு; மறக்கப்பட்டுவிட்ட வானியல்(சோதிடக்) கலையை இந்த நாள்காட்டி சுருக்கமாக வெளிப்படுத்தி காட்டியுள்ளது.

7)குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணை நாள்காட்டியில் பின்னிணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. *(கிரந்த எழுத்துகள் அறவே கலவாமல் முழுமையாகத் தமிழ் எழுத்துகளையே கொண்டிருக்கும் பெயர் எழுத்து அட்டவணை இதுவாகும்.)

8)ஐந்திரக் குறிப்பு, நாள்காட்டிப் பயன்படுத்தும் முறை, பிறைநாள்(திதி), ஓரை(இராசி), நாள்மீன்(நட்சத்திரம்) பற்றிய விளக்கங்கள் ஆகியவை இரண்டு பக்கங்களில் நாள்காட்டியின் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளன.

9)ஒவ்வொரு ஓரை(இராசி) பற்றிய படத்தோடு அதற்குரிய வேர்ச்சொல் விளக்கமும் மிகச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

10)தமிழின வாழ்வியல் மூலவர்களான வள்ளுவர் வள்ளலார் ஆகிய இருவரின் உருவப்படத்தை முகப்பாகத் தாங்கி, முழு வண்ணத்தில் தரமாகவும் தமிழ் உள்ளங்களைக் கவரும் வகையிலும் இந்நாள்காட்டி அமைந்திருக்கிறது.


உள்ளத்தில் தமிழ் உணர்வும் ஊக்கமும் கொண்டு தமிழ்நலத்திற்காக மு‎ன்னின்று செயலாற்றும் தமிழ் அன்பர்களும் ஆர்வலர்களும் இந்த நாள்காட்டியை வாங்கி ஆதரவு நல்குவதோடு பரப்பும் முயற்சியிலும் துணைநிற்கலாம். எந்த ஒரு வணிக நோக்கமும் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ் வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டு வெளிடப்பட்டுள்ள இந்த நாள்காட்டி ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் இருக்க வேண்டும்.


இது நாள்காட்டி மட்டுமல்ல; தமிழ் எண்ணியல், வானியலை மீளக்கட்டிடும் ஆவணம். தமிழர் அனைவரும் தமிழில் பெயர்ச்சூட்டிக் கொள்ள உதவும் குட்டி ஐந்திறம்(பஞ்சாங்கம்). தமிழில் இருந்து காணாமற்போன கிழமை, திங்கள், திதி, இராசி, நட்சத்திரப் பெயர்களை மீட்டுக்கொடுக்கும் சுவடி. மொத்தத்தில், தமிழர் தமிழராக தமிழோடு தமிழ்வாழ்வு வாழ வழியமைத்துக் கொடுக்கும் வாழ்க்கைத் துணைநலம்.


தொடர்புக்கும் மேல் விளக்கத்திற்கும்:-
தமிழியல் ஆய்வுக் களம் – Persatuan Pengajian Kesusasteraan Tamil
No.17, Lorong Merbah 2, Taman Merbah,
14300 Nibong Tebal, SPS, Pulau Pinang. Malaysia

கைப்பேசி:- ம.தமிழ்ச்செல்வன் (6013-4392016)

Monday, December 21, 2009

2010க்கான பட்டப் படிப்புப் பதிவு நடக்கிறது


2010 ஆம் ஆண்டில் மலேசியப் பொதுப் பல்கலைக்கழகங்களில் (IPTA) பயில்வதற்கு இப்போது விண்ணப்பம் செய்யலாம். இணையம் வழியாக நேர்வலை விண்ணப்பம் (Pendaftaran Online) செய்யும் சேவை தற்போது தொடங்கப்பட்டு இருக்கிறது. எனவே, 2009இல் எசுபிஎம்(SPM) தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் காலம் தாழ்த்தாமல் இப்போதே விண்ணப்பம் செய்யலாம்.

இதனைப் பற்றிய மேல் விவரங்களைத் தொடர்ந்து தருகின்றேன். நமது மாணவர்களுக்கு இது பயனாக இருக்குமென நம்புகிறேன்.

எசுபிஎம் அல்லது அதற்கு ஈடான கல்வித் தகுதியைக் கொண்டிருக்கும் மாணவர்கள் 2010ஆம் ஆண்டு தொடங்கி உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பதிவு நடவடிக்கை இரண்டு கட்டங்களாக (Fasa) நடைபெறும். மாணவர்கள் இவ்விரு கட்டங்களையும் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

முதலாவது கட்டம் (Fasa I):- விண்ணப்பப் பதிவு

1.2009, 2008, 2007 ஆகிய ஆண்டுகளில் எசுபிஎம் எழுதிய மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதனைச் செய்வதற்கு தேசியச் சேமிப்புப் பொருளகத்திலிருந்து (Bank Simpanan Nasional) கடவுச்சொல் (No.Pin) வாங்க வேண்டியதில்லை.

2.பதிவு செய்ய, மாணவர்கள்
http://upu.mohe.gov.my என்னும் உயர்க்கல்வி அமைச்சின் அகப்பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

3.மாணவர்கள் தங்களுடைய அடையாள அட்டை எண், கடவுச்சொல் (Kata Laluan) ஆகியவற்றைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பத்தின் வகையைச் (Kategori Permohonan) சரியாகக் குறிப்பிடவும்.

4.அதில் கேட்கப்படும் விவரங்களைத் தவறு இல்லாமல் நிறைவு செய்ய வேண்டும்.

5.மாணவர்களின் குடும்ப விவரங்கள், கல்வி விவரங்கள், புறப்பாட நடவடிக்கை விவரங்கள் ஆகியவற்றைச் சரியாகக் குறிப்பிட வேண்டும்.

6.இந்த முதற்கட்டப் பதிவைச் செய்வதற்கான இறுதி நாள் 30-12-2009

இரண்டாம் கட்டம் (Fasa II):- விண்ணப்ப உறுதி

1.இந்தப் பதிவு 2-2-2010இல் திறக்கப்படும். இதற்கும் நேர்வலை (Online) வழியாக பதிவு செய்ய வேண்டும். இந்தப் பதிவு செய்வதற்குத் தேசியச் சேமிப்புப் பொருளகத்திலிருந்து (Bank Simpanan Nasional) கடவுச்சொல் (No.Pin) வாங்க வேண்டும். விலை RM10.60.

2.ஏற்கனவே, முதற்கட்டப் பதிவில் பயன்படுத்திய அதே அ.அட்டை எண், கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி முறையாகப் பதிவு செய்ய வேண்டும்.

3.கேட்கப்படும் விவரங்களைச் சரியாக நிறைவு செய்து சரிபார்க்கவும். நிறைவு செய்த படிவத்தை அனுப்பிய பிறகு, தவறுகள் இருப்பின் 3 முறை மட்டுமே பிழைத்திருத்தம் செய்ய முடியும்.

4.இதற்குரிய இறுதி நாள்:- B, C, D ஆகிய பிரிவுகளுக்கு 30-3-2010. பிரிவு A மட்டும் எசு.பி.எம் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 10 நாட்கள்.

மாணவர்கள் கவனிக்க வேண்டிய விவரங்கள்:-

1.கொடுக்கப்பட்டுள்ள விதிகளைக் கவனமுடன் படித்துப் பார்க்கவும்.

2.உங்கள் தகுதிக்கு ஏற்ற படிப்புக்கும் பல்கலைக்கழகத்திற்கும் விண்ணப்பிக்கவும்.

3.தவறான படிப்புக்கும் பல்கலைக்கழகத்தித்கும் விண்ணப்பித்து விடாமல் பார்த்துக்கொள்ளவும்.

4.முதற்கட்டப் பதிவு, பொருளகக் கடவுச்சொல் வாங்குதல், இரண்டாம் கட்டப் பதிவு ஆகியவற்றைச் செய்வதற்குக் கடைசி நேரம் வரை காத்திராமல் உடனுக்குடன் செயல்படவும்.

5.இதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் உடனே உயர்க்கல்வி அமைச்சுக்குத் தொடர்பு கொள்ளவும். தொலைப்பேசி:-03-88835802 அகப்பக்கம்:- http://upu.mohe.gov.my/

Thursday, December 17, 2009

தமிழ் இயக்கங்கள் எதிர்க்கட்சிகளின் கைக்கூலிகளா?



எசுபிஎம் எனப்படும் மலேசியக் கல்விச் சான்றிதழ் தேர்வு தொடர்பாக நிலவிவரும் நெருக்கடி இன்னமும் முற்றிலுமாக ஓய்ந்தபாடில்லை. இந்த நெருக்கடியிலிருந்து தமிழை மீட்கவும் இலக்கியத்தைக் காக்கவும் தமிழ் சார்ந்த பொது இயக்கங்கள் போராடி வருகின்றன.

குறிப்பாக, எசுபிஎம் 12 பாட மீட்புக் குழுவினர் என தங்களை அடையாளப்படுத்தி இருக்கும் ஆ.திருவேங்கடம் தலைமையிலான குழுதான் இந்தப் போராட்டத்தை முழுவீச்சுடன் முன்னெடுத்துள்ளது.

இக்குழுவில், மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்திய இளைஞர் மன்றம், உலகத் தமிழர் மாமன்றம், தமிழ் அறவாரியம், சிவநெறி வாழ்க்கை மன்றம், வள்ளலார் நற்பணி மன்றம், மலேசிய இந்தியர் மேம்பாட்டுக் கழகம், மலேசியத் திராவிடர் கழகம், மலேசியத் தமிழ்நெறிக் கழகம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல இயக்கங்கள் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டு தமிழுக்காகக் குரல்கொடுத்து வருகின்றன. தவிர, சு.வை.லிங்கம் தலைமையிலான தமிழ்க் காப்பகமும் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் மீட்டெடுக்கும் பணியில் தொடக்கத்திலிருந்தே குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றி வருகின்றது.

இதற்கிடையில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு தரப்பையும் சேர்ந்த தலைவர்களும் இந்தச் சிக்கல் தொடர்பாகக் கருத்துரைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், மீட்புக் குழுவினருக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்; அவர்கள் ஏற்பாட்டில் நடந்த கவன ஈர்ப்புப் பேரணியிலும் கலந்துகொண்டுள்ளனர்.


இப்படி, பல தரப்பினரும் ஒன்றுகூடி ஒரே குரலில் ஓங்கி ஒலிக்கும் சமயத்தில், “தமிழுக்காகப் போராடும் இவர்கள் எதிர்க்கட்சிகளின் கைக்கூலிகளாகச் செயல்படுகின்றனர்” என்ற ஒரு குற்றச்சாட்டைச் சிலர் முன்வைத்துள்ளனர். அதனை உறுதிபடுத்துவதற்குச் சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. அவை:-

1.இந்திய சமுதாயம் தொடர்பாக அரசாங்கம் அக்கறை கொண்டிருக்கிறது. அதற்காக சில நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த முடிவுகளை எதிர்க்கும்படி சில அரசு சார்பற்ற இயக்கங்களை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன.

2.இந்திய சமுதாயத்தில் சிறு சிறு குழுக்கள் பல அரசு சார்பற்ற இயக்கங்கள் என்று காளான்களைப் போல முளைத்துக் கொண்டிருக்கின்றன. அவை எதிர்க்கட்சிகளுக்குத் துணைபோகின்றன.

3.இந்த இயக்கங்களுக்கு எதிர்க்கட்சிகள் நிதியுதவி செய்கின்றன.

4.இவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக இந்திய மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

5.இந்த இயக்கங்கள் கருத்தரங்குகளை நடத்தவும், விடுதிகளில் (ஓட்டல்) கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தவும் எதிர்க்கட்சிகள் உதவுகின்றன.

6.இந்த இயக்கங்களின் தலைவர்கள் சிலர் எதிர்க்கட்சிகளின் முக்கியப் பதவிகளில் கூட இருக்கின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் முழுப் பொறுப்பு மக்களைச் சார்ந்தது. ஏனெனில். நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் போராட்டத்திற்கு இடையில் அரங்கேறும் அரசியல் போட்டா போட்டிகளும் நுண்ணரசியல் விளையாட்டுகளும் மக்களுக்குத் தெரியாமல் இல்லை. அந்த அளவுக்கு மக்கள் இப்போது விழிப்புணர்வு அற்றவர்களாகவும் இல்லை.

மாற்றுக் கருத்துகளை வெளியிடுவதும்; மொழி இன நலனுக்காகப் போராடுவதும்; கட்சி, கொள்கைகளை மறந்து பொதுநலத்துக்காக ஒன்றுபடுவதும் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு நிகரானது என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல.

அரசாங்கத்தின் ஒரு கொள்கையானது குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கு எதிர்மறையான விளைவுகளை நீண்ட காலத்தில் ஏற்படுத்திவிடும் என்பதால், அதனை எதிர்த்து நிற்பதும்; மாற்றுக் கருத்து கூறுவதும்; மாற்றத்தைக் கோருவதும் மக்களாட்சிக்கு மாண்பினை அளிக்குமே தவிர ஒருபோதும் மருட்டலாகாது.

ஆகவே, தமிழைக் காக்கவும் இலக்கியத்தை மீட்கவும் போராடும் தமிழ் இயக்கங்களின் செயற்பாடுகளும் மக்களாட்சி நடைமுறையில் இயல்பானவைதாம். அதேவேளையில், மொழியினநல அடிப்படையில் பார்க்கும்போது இவர்களின் போராட்டம் பெரிதும் போற்றுதலுக்கு உரியது.

அந்த வகையில், தமிழ் இயக்கங்களின் நகர்வுகளும் நடவடிக்கைகளும் எந்த அளவுக்கு உண்மையானவை; நம்பகத்தன்மை கொண்டவை; நியாயமானவை; நன்மையானவை என்பதைப் பொதுமக்களும் காலமும்தான் தீர்மானிக்க முடியும்.

Wednesday, December 16, 2009

இந்திய இந்தியனும் மலேசிய இந்தியனும்


‘இந்திய இனத்தவர் கூச்சல் போட விரும்புபவர்கள்’ என்று எழுதி பரபரப்பை ஏற்படுத்திய நாளிகை ஆசிரியர் ஒருவர், ஒரு வாரத்திற்கு தாம் எழுதுவதை நிறுத்திக்கொள்ளப் போவதாக முறுக்கிக் கொண்டிருக்கிறார்.

மலேசியாவில் வெளிவரும் ‘ஊத்துசான் மலேசியா’ எனும் மலாய் நாளேட்டின் முகமை ஆசிரியர் சைனி அசான். அவர் எழுதிவரும் ‘சுவிட்’ (Cuit – தமிழில் சீண்டல்) பகுதியில் இன்று (16.12.2009) ஒரு கேலிச்சித்திரம் போட்டு செய்தியும் எழுதியுள்ளார்.

இந்தக் கேலிச்சித்திரத்தில் சைனி அசானுடைய வாய் ஒட்டப்பட்டது போலவும்; அவருடைய கணினி திரையில் ‘தூதுப்’ (TUTUP தமிழில் ‘மூடு’) என்று எழுதப்பட்டது போலவும் காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அவருடைய கையும் காலும் கட்டப்பட்டு இருப்பதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதன்வழி, இந்த வாரத்தில் வாயை மூடிக்கொண்டும், எழுதுவதை நிறுத்திக்கொண்டும் இருக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.


வாயை மூடிக்கொள்ள வேண்டிய அளவுக்கு அவருக்கு என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகிறீர்களா? தொடருங்கள்...

அதாவது கடந்த 9.12.2009இல் தன்னுடைய சிறப்புப் பகுதியில் சைனி அசான் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ‘இந்திய இந்தியர்கள், மலேசிய இந்தியர்களின் கதை’ என்பது அதன் தலைப்பு.

அக்கட்டுரையில், ‘இந்திய இனத்தவர் கூச்சல் போட விரும்புபவர்கள்’ என்று கூறியிருந்தார். இதற்கு அவர் கூறிய சான்று என்ன தெரியுமா? அண்மையில் அவர் ஐதிராபாத் சென்றிருந்தாராம். அவர் தமிழ், இந்திப் படங்கள் பார்ப்பாராம். இந்தப் பட்டறிவின் அடிப்படையில் அவர் கண்டுபிடித்து எழுதியது இதுதான்.

“இந்திய நாட்டில் வாழும் இந்தியர்கள் கோளாறு குளறுபடிகளோடு வாழ்பவர்களாம். அந்த பண்பாடு இங்கே மலேசியாவில் உள்ள இந்தியர்களிடமும் எதிரொலிக்கிறதாம். இந்தியர்கள் மற்றவரைவிட மாறுபட்டவர்களாம். அதாவது, இந்திப் படங்களிலும் தமிழ்ப் படங்களிலும் அவர்களின் பண்பாட்டைப் பார்க்க முடியுமாம். அவர்கள் எப்போது பார்த்தாலும் கூச்சல்.. கூச்சல்.. கூச்சல் போட்டுக்கொண்டே இருப்பார்களாம்.

அதேபோல, மலேசியாவில் உள்ள இந்தியர்களும் கூச்சல் போடுகிறார்களாம். இங்கே கூச்சல் போடுபவர்கள் அனைவரும் நிபுணர்களாக, வழக்கறிஞர்களாக, அரசியலாளர்களாக இருக்கிறார்களாம். நன்குப் படித்தவர்கள் எல்லாரும் அதிகம் கூச்சல் போடுகிறார்களாம்.”


இது எப்படி இருக்கிறது..?

இந்த எழுத்தாளர் இப்படி ஒரு கருத்தை ஏன் எழுதினார் என்பதையும் இங்குச் சொல்ல வேண்டும்.

மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பிராக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு என்.குலசேகரன் (இவர் ஒரு வழக்கறிஞர்) அண்மையில் “மலாய்க்காரர் மேலாண்மைக் கொள்கையை அடியோடு வேரறுக்க வேண்டும். அதற்குப் பதிலாக மலேசிய மக்கள் மேலாண்மைக் கொள்கையை முன்னெடுக்க வேண்டும்” என்று நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.

இந்தப் பேச்சினால் சினமடைந்துபோன சைனி அசான் எனும் மலாய்க்கார ஊடகவியலாளர், மேலே சொன்ன செய்திகளை எல்லாம் குறிப்பிட்டு என்.குலசேகரனை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களையே வசைபாடி எழுதியிருந்தார்.

மலேசிய இந்தியர்களை மிகவும் இழிவுபடுத்தி எழுதிய அவருக்கு எதிராக மாண்புமிகு என்.குலசேகரன் உள்பட, ஆளும் / எதிர்க்கட்சித் தலைவர்களும், பொது இயக்கங்களும், தனியாட்களும் படையெடுத்துக் காவல்துறையில் பல புகார்களைச் செய்தனர்.

இதனால்தான் அந்த ஊடகவியலாளர் ஒரு வாரத்திற்கு எழுதப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் போலும்.

இது உண்மையிலேயே அவருடைய முடிவா அல்லது அண்டப் புளுகா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

அடுத்த வாரம் அவருடைய தூவலும் (பேனா) அந்த நாளேடும் மீண்டும் ஒரு நஞ்சை கக்காமல் இருக்குமா?

Sunday, December 13, 2009

வேட்டைக்காரனை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம்


வேட்டைக்காரன் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை உள்ளூரில் அல்ல... வசூலுக்கு பெரிதும் நம்பியிருக்கும் வெளிநாடுகளிலிருந்து.

காங்கிரசுடன் கமுக்க உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக நாடகமாடிய விஜய்யின் வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம் என ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும் இலங்கை ராணுவத்துக்கு வன்னிப் போர் காலத்தில் பாடல்கள் உருவாக்கிய ராஜ் வீரரத்னே என்பவருடன் இணைந்து பணியாற்றும் விஜய் ஆண்டனி, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தமிழ் உணர்வுக்கு எதிரான ஒரு சிங்களப் பாடலின் மெட்டையும் அப்படியே வேட்டைக்காரனில் பயன்படுத்தியுள்ளார். எனவே இந்தப் படத்தை அனைத்து தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு விஜய் தரப்பை அதிர வைத்துள்ளது.

இந்த எதிர்ப்பு கோஷத்தை தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்களாகவும் புலம்பெயர்த் தமிழர்கள் அனுப்பி வருகின்றனர்.

அதில் ஒன்றுதான் இது. படத்தின் மேல் சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும்.

  • நன்றி:-தமிழர் வலைப்பதிவு

Saturday, December 12, 2009

எசுபிஎம்12 பாடக் கவன ஈர்ப்புப் பேரணி

எசுபிஎம் தமிழ்மொழி - இலக்கியம் ஆகிய பாடங்கள் தொடர்பாக நாட்டில் எழுந்துள்ள நெருக்கடியான சூழல் இன்று ஓர் உச்சத்தை அடைந்துள்ளது. இன்று (12.12.2009) காலை 10.00 மணி தொடங்கி பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் "எசுபிஎம்12 பாட கவன ஈர்ப்புப் பேரணி" நடைபெற்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்துகொண்ட இந்தத் தமிழ் மீட்புப் பேரணி மிக கட்டுக்கோப்புடனும் எழுச்சியுடனும் நடைபெற்றது. எசுபிஎம்12 பாட மீட்புக் குழுவின் தலைவர் ஆ.திருவேங்கடம் தலைமையில் இந்த முடற்கட்ட தமிழ் எழுச்சிப் பேரணி வெற்றியுடன் நடைபெற்றுள்ளது.

இந்த எழுச்சியும் - தமிழ் மீட்பு உணர்வும் - தமிழ்க் காப்பு உணர்வும் தொடர்ந்து பேணப்படவேண்டும் என்பது பலருடைய விருப்பமும் எண்ணமுமாக இருக்கிறது. எனவே, தமிழைக் காக்கவும் தமிழ் இலக்கியத்தை மீட்கவும் ஒட்டுமொத்தத் தமிழர்களும் துணை நிற்க வேண்டும்.

இன்று "எசுபிஎம்12 பாட கவன ஈர்ப்புப் பேரணி" இல் நிறைவேற்றப்பட்ட தீ்ர்மானங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை, 12 டிசம்பர் 2009 தோட்ட மாளிகை
"தமிழைக் காப்போம், இலக்கியத்தை மீட்போம்" பேரணியின் தீர்மானங்கள்


1)மலேசிய அரசியலமைப்பு சட்டப்படி, கல்விச் சட்டத்தின் 152-வது அம்சத்தை நிலை நிறுத்த வேண்டும்.

வரைவு எண்:152
அதிகாரப்பூர்வ மொழியாக மலாய் மொழி இருப்பினும் பிற மொழிகளுக்கான நிலைப்பாடு மற்றும் உரிமையைக் கொண்டு, அம்மொழியைப் பயன்படுத்துவதற்கும், கற்றுக்கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும், பொது மானியங்களைப் பயன்படுத்தி அவற்றைச் செயல்முறைப்படுத்துவதற்கும் தடை ஒருபோதும் இருக்கக்கூடாது.

வரைவு எண்:152(1)(a)
பிற மொழிகளைப் பயன்படுத்துவதற்கும் (அதிகாரப்பூர்வ காரணங்களைத் தவிர்த்து), அல்லது கற்பிப்பதற்கும் கற்பதற்கும் யாரையும் மறுக்கவோ தடுக்கவோ முடியாது; மற்றும்

வரைவு எண்:152(1)(b)
கூட்டரசில் அங்கம் வகிக்கும் பல்லின மக்களின் மொழிகளைப் பாதுகாப்பதற்கும், தொடர்வதற்கும், கற்பதற்கும் உரிய மத்திய, மாநில அரசாங்கங்களின் உரிமைகளை இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு வரைவின் உட்பிரிவும் பாதிக்கலாகாது.


2)தாய் மொழியான தமிழ்க் கல்வி சம்பந்தப்பட்ட கொள்கைகளை அமலாக்குவதற்கு முன் சமூக இயக்கங்களையும் கல்வியாளர்களையும் அரசாங்கம் கலந்தாலோசிக்க வேண்டும்.


3)எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் எடுக்க அனுமதிக்கப்படும் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் உட்பட அனைத்துப் பாடங்களுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாமல் முழு அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும்.

4)தமிழ் மொழியின் ஆய்விற்கும் வளர்ச்சிக்கும் நிலைத் தன்மைக்கும் அரசுசார் அமைப்பு ஒன்று அதிவிரைவில் முழு அரசாங்க நிதி உதவியோடு அமைக்கப்பட வேண்டும்.

5)நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழ் மொழிக்கு ஊறு விளைவிக்கும் எந்தவொரு தரப்பின் நடவடிக்கைகளையும் இப்பேரணி வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழைக் காக்கவும் இலக்கியத்தை மீட்கவும் வேண்டிய பொறுப்பு நமது மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. கருத்து வேறுபாடுகளால் நாம் வேறுபட்டிருக்கலாம். அது எல்லாவிடத்திலும் நிகழும் இயல்பான ஒன்றுதான். ஆனாலும் மொழி, இனம், சமயம், பண்பாடு என்று வருகின்றபோது, நாம் நமக்குள் இருக்கும் கருத்து வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரே குரலாக ஒலிக்க வேண்டும். அப்படி ஒலித்தால்தான் வெற்றியை நாம் ஈட்ட முடியும் என்பதற்கு இன்று நடந்த "எசுபிஎம்12 பாட கவன ஈர்ப்புப் பேரணி" மற்றுமொரு நற்சான்று என்றால் மிகையில்லை.


Monday, December 07, 2009

எசுபிஎம்12: மறுபடியும் இன்னொரு போராட்டமா?


2010ஆம் ஆண்டு தொடங்கி, மலேசியக் கல்விச் சான்றிதழ் (எசுபிஎம்) தேர்வில் 10 பாடங்களை மட்டுமே எடுக்க முடியும் என இதற்கு முன் அறிவிக்கப்பட்டது. இதனால், தமிழ்மொழியும் தமிழ் இலக்கியமும் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனை வன்மையாகக் கண்டித்து தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் உக்கிரமாகக் குரல் கொடுத்தன. தமிழ் மக்களிடையே எழுந்த கொந்தளிப்பைத் தொடர்ந்து 10 பாடங்களுக்குப் பதிலாக 12 பாடங்களை எடுக்க இசைவு வழங்கப்பட்டது.

ஆனால், இந்த அறிவிப்போடு சேர்த்து இரண்டு அணுகுண்டுகள் தமிழர் தலைக்குமேல் போடப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் மலேசியத் தமிழர்களிடையே கொந்தளிப்பு வெடித்துள்ளது. அதற்குக் காரணமான அந்த 2 அணுகுண்டுகள் இவைதாம்:-

1.தேர்வில் 12 அல்லது 11 பாடங்கள் எடுக்கலாம். ஆனால், அடிப்படையான 10 பாடங்களின் (Core Subject) மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

2.கூடுதலாக எடுக்கப்படும் பாடங்களின் மதிப்பெண்கள் கல்விக் கடனுதவி பெறுவது போன்ற விண்ணப்பங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படாது.

யாருமே எதிர்பார்க்காத இந்தப் புதிய அறிவிப்பினால் – தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் மீண்டும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும் இந்த அறிவிப்பினால் இப்போது, 2ஆம் கட்ட மொழிப் போராட்டம் தொடங்கிவிட்டது. பொது இயக்கத் தலைவர்களும் அரசியலாளர்களும் உடனடி கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

மாண்புமிகு பேராசிரியர் இராமசாமி (பினாங்கு மாநிலத் துணை முதல்வர்)
இந்தப் புதிய அறிவிப்பு சமுதாயத்திற்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 12 பாடங்கள் எடுத்தாலும் 10 முகன்மை பாடங்கள் (Core Subject) மட்டுமே கணக்கிடப்படும் என்று கூறுவதை சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்மொழி அழிக்கப்படுவதை வரவேற்கிறார்களா? மலேசிய இந்தியர்களுக்கு இந்த நாட்டில் தமிழ்மொழி ஒன்றுதான் இருக்கிறது. அதையும் இழந்துவிட்டால் தாய்மொழியற்றச் சமுதாயமாக உருவாக்கப்பட்டு விடுவோம். இந்த அவல நிலை தேவையா? நமது தாய்மொழி, தமிழ் இலக்கியம் ஆகியவற்றை இழக்கப் போவதை நாம் வரவேற்கப் போகிறோமா? என்பதை சிந்திக்க வேண்டும். தமிழ்மொழியைக் காப்பாற்ற நாடு முழுவதும் பல எழுச்சிக் கூட்டங்கள் நடத்தப்படும். அதன் முதல் கூட்டம் இன்று 6.12.2009, பிரிக்பீல்டில் நடக்கவிருப்பதாகக் கூறினார்.

ஆ.திருவேங்கடம் (தமிழ் இலக்கிய 12 பாட மீட்புக்குழுத் தலைவர்)

12 பாடங்கள் எடுக்கலாம் என்று அமைச்சரவை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. என்றாலும் இதுவொரு பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளது. நமது போராட்டம் இன்னும் முழு வெற்றி பெறவில்லை. 10 பாடங்கள் எடுக்கும் மாணவர்கள் தமிழ் அல்லது இலக்கியப் பாடங்களையும் எடுத்தால், அந்த இரண்டு பாடங்களுக்கும் அங்கீகாரம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முடிவின் பின்புலத்தில் உள்ள சூட்சுமங்களை முழுமையாக அறியாமல் சிலர், போராடி வெற்றி பெற்றதாகப் புலம்பி வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வரும் திசம்பர் 12ஆம் நாள் தோட்ட மாளிகையில் திட்டமிட்டபடி “தமிழைக் காப்போம் – இலக்கியத்தை மீட்போம்” எனும் கவன ஈர்ப்புக் கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

க.உதயசூரியன் (மலேசியத் தமிழ்க்கல்வி அறவாரியத் தலைவர்)
எசுபிஎம் தேர்வில் 12 பாடங்கள் என்று அரசாங்கம் கூறிய போதிலும், தமிழ் – தமிழ் இலக்கியம் பாடங்களுக்கு முழுமையான அங்கீகாரத்தை வழங்க வேண்டும். மாணவர்களுக்குப் பொதுக் கல்விக் கடனுதவி பற்றி ஆழமாக விவாதிக்கவும் கல்வி அமைச்சு தனது முடிவினை அறிவிக்க வேண்டும். சமுதாயத்தின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்.

இதற்கிடையில், இந்தச் சிக்கல் தொடர்பாக ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு கருத்துரைத்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

“நாம் ஒன்றுக்குப் பின் ஒன்றாக விடயங்களைக் கவனிப்போம். 10 பாடங்களுக்குப் பதில் 12 பாடங்களுக்கு அனுமதிப்பதின் மூலம் நாம் முதலாவது தடையைத் தாண்டியுள்ளோம். அதற்கு நாம் அரசாங்கத்திற்கு மிகவும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.

அந்த இரண்டு கூடுதல் பாடங்களை (தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும்) அரசாங்க உபகாரச் சம்பளங்களுக்கும் மற்ற விடயங்களுக்கும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பது தான் இப்போதைய சிக்கல் ஆகும்.

12 பாடங்கள் விடயம் மீது அரசாங்கத்துடன் நாம் பேச்சு நடத்தியது போல இந்தச் சிக்கல் மீது நாங்கள் (மஇகா) பேச்சு நடத்த அனுமதியுங்கள்.
டத்தோ ஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக் இது நாள் வரையில் நமக்கு (இந்திய சமூகத்திற்கு) நேர்மையாக நடந்து கொண்டிருப்பதால் அவரிடம் பிரச்னையை விட்டு விட வேண்டும்” என்று அவர் கூறியுள்ள செய்தியை மலேசியாஇன்று வெளியிட்டுள்ளது.
இச்செய்தி ஆறுதலைக் கொடுத்தாலும்கூட, இறுதியான முடிவு அறிவிக்கப்படும் வரை மக்களின் மனங்கள் பொங்கிக்கொண்டுதான் இருக்கும்.

எது எப்படியாயினும், 2010 கல்வியாண்டு தொடங்குவதற்கு இன்னும் குறுகிய காலமே இடைவெளி இருப்பதால், இந்தச் சிக்கலுக்கு விரைந்து தீர்வுகாண வேண்டியிருக்கிறது. ஒரு சிறுபான்மை இனத்தின் கல்வி உரிமையைக் கையிலெடுத்துக்கொண்டு அரசியல் விளையாட்டுக் காட்டி, மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குவது அறிவுடைமைக்கு எதிரானது.

மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து மக்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவதில் எந்த ஓர் அரசாங்கத்திற்கும் நன்மையே அன்றி, தீது யாதொன்றுமில்லை.
  • பி.கு:- மலேசிய நண்பன், மக்கள் ஓசை நாளேடுகள், மலேசியாஇன்று இணையத்தளம் ஆகியவை வெளிட்ட செய்திகளின் அடிப்படையில் இப்பதிவு எழுதப்பட்டுள்ளது.

Saturday, December 05, 2009

எசுபிஎம்12: மழை ஓய்ந்தது; தூவானம் விடவில்லை


எசுபிஎம் தேர்வுக்கு அமரும் மாணவர்கள் 10 பாடங்களை மட்டுமே எடுக்க முடியும் என்னும் முடிவில் கொஞ்சம் தளர்வு செய்யப்பட்டு, இப்போது 12 பாடங்கள் எடுக்கலாம் என புதிய அறிவிப்பு கொடுக்கபட்டுள்ளது.

10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற விதியினால், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய இரு பாடங்களை மாணவர்கள் எடுக்க முடியாமல் இருந்த தடை இப்போது நீங்கியுள்ளது. இது மகிழ்ச்சிக்குரிய செய்திதான்.
ஆனாலும், இந்த வெற்றியானது முழுமையானது அல்ல. இன்னும் அவிழ்க்கபடாத முடிச்சுகள் இருக்கின்றன; தீர்க்கப்படாத நெருடல்கள் தொடருகின்றன.

புதிய அறிவிப்பினால் தமிழுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் சில நன்மைகள் கிடைத்துள்ளன. முதலில், அவற்றைப் பார்ப்போம்.

1.வழக்கம் போலவே தமிழ் மாணவர்கள் தமிழையும் இலக்கியத்தையும் எடுப்பதற்கான வாய்ப்பு நிலைத்திருக்கிறது.

2.இவ்விரு பாடங்களின் முடிவுகளும் சான்றிதழில் குறிக்கப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

3.தமிழாசிரியர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க தமிழ், இலக்கியம் ஆகிய பாடங்களின் மதிப்பெண்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

4.தமிழ்மொழிக்குரிய அரசுரிமை நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.
5.தமிழ் இலக்கியம் தொடர்ந்து படிக்கப்படுவதற்கும் காக்கப்படுவதற்கும் உரிய சூழல் தொடர்ந்து நிலவுகிறது.

எனினும், இந்தப் புதிய அறிவிப்பில் நெருடலை உண்டாக்கும் சில விடயங்களும் இருக்கின்றன. அதனால், மழை ஓய்ந்தாலும் தூவானம் விடாத கதையாக இச்சிக்கல் இன்னும் தொடரக்கூடும். அவை:-

1.தேர்வில் 12 அல்லது 11 பாடங்கள் எடுக்கலாம். ஆனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அடிப்படையான 10 பாடங்களின் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

2.கூடுதலாக எடுக்கப்படும் பாடங்களின் மதிப்பெண்கள் கல்விக் கடனுதவி பெறுவது போன்ற விண்ணப்பங்களுக்கு கணக்கிடப்படாது.

இவை இரண்டும் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளப்பட வேண்டியவை அல்ல எனத் தோன்றலாம். காரணம், நடப்புச் சூழலிலும் இவ்விரு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. என்றாலும், இதனால் தமிழ்ச் சமுதாயமும் மாணவர்களும் மீண்டும் ஒரு பெரும் குழப்பத்திற்கு ஆளாகக்கூடும்; மன உளைச்சலுக்கு உள்ளாகக் கூடும்.
ஏனெனில், தமிழுக்கு நிச்சயமற்ற – பாதுகாப்பற்ற சூழல் இன்னமும் இருப்பதையே மேலே சொன்ன இரண்டு விடயங்களும் புலப்படுத்துகின்றன.

எனவே, நாம் தெளிவுபெற வேண்டிய அல்லது கல்வியமைச்சு தெளிவாக உறுதிபடுத்த வேண்டிய அல்லது கல்வியமைச்சுக்குத் தெளிவுபடுத்தி நாம் உறுதிபடுத்த வேண்டிய சில விவரங்கள் உள்ளன. அவை:-

1.மாணவர்கள் எடுக்கும் 12 பாடங்களின் தேர்ச்சி விவரமும் அரசு சான்றிதழில் கண்டிப்பாகக் குறிப்பிடப்படுமா?

2.தேர்வுப் பாடங்களின் எண்ணிக்கை 12ஆக உயர்த்தப்பட்ட பின்னர், தமிழ்மொழி பழையபடியே விருப்பப்பாடக் [Matapelajaran Elektif (Tambahan)]குழுவில் வைக்கப்படுமா?
*(கட்டாயப் பாடக் (Matapelajaran Teras) குழுவில் உள்ள 6 பாடங்களில் ஒன்றாக தமிழ் இடம்பெறாத நிலையில், விருப்பப்பாடக் குழுலிருந்து நீக்கப்பட்டால் தமிழுக்குப் பாதிப்பே ஆகும்).

3.தமிழ்மொழி , வெளிப்பாடம் [Matapelajaran Elektik (Luar Kurikulum)] குழுவுக்குத் தள்ளப்படும் நிலைமை கண்டிப்பாக நிகழக்கூடாது.

4.தமிழ்மொழி விருப்பப்பாடக் குழுவில் நிலைநிறுத்தப்படும் சூழலில், மேற்படிப்பு, கல்விக் கடனுதவி முதலிய தேவைகளுக்குத் தமிழ்மொழியின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதே நியாயமாகும். இது கடைபிடிக்கப்படுமா?

5.தமிழ் இலக்கியம் வெளிப்பாடம் [Matapelajaran Elektif (Luar Kurikulum)] குழுவில் வைக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய நிலைப்பாடு என்ன?

6.அனைத்திற்கும் மேலாக, பள்ளி நிலையில் மாணவர்கள் தமிழையும் இலக்கியத்தையும் பயில்வதில் நடப்பில் இருக்கும் பல்வேறு நெருக்கடிகள், இடையூறுகள், தடைகள் நீக்கப்பட வேண்டும். இவ்விரு பாடங்களும் பள்ளிகளில் கற்பிக்கப்படுவது உறுதிபடுத்தப்பட வேண்டும்.

மொத்தத்தில், 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற முந்தைய முடிவு சில தளர்வுகளோடு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. அதே வேளையில், தமிழையும் இலக்கியத்தையும் அரசுத் தேர்வுப் படமாக எழுதுவதற்கான உரிமையும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் தெளிவுபடுத்தப்பட வேண்டிய விடயங்களும் நிறைய இருக்கின்றன.

எது எப்படியாயினும், இது தொடர்பாக மலேசியக் கல்வித்துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கை வழி முழு விவரங்களை வெளியிடுவார் என கல்வியமைச்சர் அறிவித்துள்ளார். அந்தச் சுற்றறிக்கைதான் இந்தச் சிக்கலில் இருக்கும் கமுக்க(மர்ம) முடிச்சுகளை அவிழ்ப்பதாக இருக்கும்.

அதுவரையில், காத்திருந்து, நாம் எதிர்ப்பார்த்து அல்லது நமக்குச் சாதகமானது அறிவிக்கப்படாமல் போனால் மீண்டும் இன்னொரு முறை போராட வேண்டிய நெருக்கடி ஏற்படுமா?

அல்லது,

தமிழ்ச் சார்ந்த பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் ஆகியோர் உடனடியாக ஒன்றுகூடி கலந்துபேசி நமது மொழிக்கும் இலக்கியத்திற்கும் உறுதியான பாதுகாப்பை அளிக்கும் நல்லதொரு தீர்வை முன்வைக்கப் போகிறோமா?

Friday, December 04, 2009

தமிழும் இலக்கியமும் காக்கப்பட்டன; வாழ்க தமிழ்!



2010 தொடங்கி மலேசியக் கல்விச் சான்றிதல் எனப்படும் எசுபிஎம் (SPM) தேர்வில் 10 படங்களை மட்டுமே எடுக்க முடியும் என்ற கல்வி அமைச்சின் முடிவு அகற்றப்படுகிறது. 10 பாடங்களுக்குப் பதிலாகப் 12 பாடங்களை எடுக்க அமைச்சரவை இன்று இசைவு(அனுமதி) வழங்கியுள்ளது. மலேசியாஇன்று இணையத்தளம் இந்தச் செய்தியை உறுதிபடுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தமிழ், தமிழர் சார்ந்த பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமய இயக்கங்கள், தமிழ் நாளேடுகள், தனியாட்கள் என அனைத்து தரப்பினரும் ஒரே நோக்கத்தில் ஒரே குரலில் தமிழ்மொழிக்காகப் பெரிய எழுச்சியோடு போராடினர் என்பதை நாடே அறிந்துள்ளது.

ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக இதனைக் கருதலாம். தமிழ்மொழிக்கு வாழ்வா? சாவா? என்ற கடுமையான நெருக்கடியிலிருந்து தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் மீட்டெடுத்திருக்கும் மலேசியத் தமிழர்கள் இப்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருகின்றனர்.

இன்று மலேசியத் தமிழர்தம் போராட்டத்தின் வழி அடைந்திருக்கும் இந்த வெற்றிக்குப் பொருத்தமாக மலேசியப் பாவலர் ஒருவர் அன்றே பாடி வைத்திருக்கிறார் இப்படி:-

அவனவன் வாயா லன்றிப்
பிறனெவன் உண்ண வல்லான்
அவனவன் கண்ணா லன்றிப்
பிறனெவன் காண வல்லான்
அவனவன் செவியா லன்றிப்
பிறனெவன் கேட்க வல்லான்
அவனவன் மொழியினத்தைப்
பிறனெவன் காப்பான் வந்தே!
-(தமிழ்நெறி ஞாயிறு பாவலர் அ.பு.திருமாலனார்)
ஊர்கூடி தேர் இழுத்ததால் இழுத்ததால்தான் இந்த வெற்றி. ஒருமனதாக அனைவரும் போராடியாதால்தான் இந்த மாற்றம். ஒற்றுபட்டு நின்று குரல்கொடுத்ததால்தான் தமிழும் தமிழ் இலக்கியமும் மீட்கப்பட்டன – காக்கப்பட்டன - மலேசியத் தமிழரின் வாழ்வுரிமை நிலைநிறுத்தப்பட்டது.

இனிவரும் காலங்களிலும் நமது மொழியின உரிமைகளைக் காப்பதற்குத்..
தமிழா ஒன்றுபடு..
தமிழால் ஒன்றுபடு..
தமிழுக்காக ஒன்றுபடு..
தமிழருக்காக ஒன்றுபடு..

இதுதொடர்பான மலேசியாஇன்று செய்தியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

Wednesday, December 02, 2009

தமிழ் காப்பான் நண்பன்; துணை நிற்கட்டும் தமிழன்

மலேசியக் கல்விச் சான்றிதழ் எனும் எசுபிஎம் தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற கல்வியமைச்சின் அறிவிப்பினால் தமிழ்மொழிக்கும் தமிழ் இலக்கியப் பாடத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருகிறது.

நீண்ட காலத்தில் தமிழ்மொழிக்கும் தமிழ்க்கல்விக்கும் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதால் தமிழ்சார்ந்த அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் ஓங்கி குரலெழுப்பி வருகின்றன; கடும் கண்டனத்தைப் புலப்படுத்தி வருகின்றன.

இந்தச் சூழலில், மலேசியவின் நாளிதழ்கள் மூன்றும் இதற்கு முன்னுரிமை கொடுத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவர்களுக்குத் நன்றிகூற மலேசிய இந்தியர்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.

தமிழை மீட்டெடுப்பதில் தமிழ் செய்தித்தாள்களுக்கு முக்கியப் பொறுப்பு இருப்பதைப் பற்றி நேற்று ஒரு பதிவிட்டிருந்தேன். இதுவும் அது தொடர்பான பதிவுதான். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ‘மலேசிய நண்பன்’ நாளேடு பற்றிய செய்தி இது.

‘மலேசிய நண்பன்’ நாளேடு தொடர்ந்தாற்போல ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த மொழிப்போராட்டச் செய்திகளை விரிவாக வெளியிட்டு வருகின்றது. அதுவும் ஒவ்வொரு நாளும் முதற்பக்க செய்தியாகப் போடுகிறது.

தொடர்ந்து ஒரே செய்தியைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டால், வாசகர்கள் வெறுப்படைவார்கள் என்ற வணிக நியதியை புறந்தள்ளிவிட்டு, தமிழ்ச் சமுதாயத்தின் நலன் கருதி, இந்தச் சிக்கல் பற்றி செய்திகள் போட்டு வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதற்கு நண்பன் நாளேடு முழுமூச்சுடன் எடுத்துக்கொண்டிருக்கும் முனைப்பு பாராட்டுக்கு உரியது.

தமிழ்மொழியையும் தமிழ் இலக்கியப் பாடத்தையும் மீட்கும் தன்னுடைய முயற்சியின் மேலும் ஒரு நடவடிக்கையாக இன்று 2.12.2009 ‘பிரதமருக்கு இந்தியர்கள் கோரிகை’ என்ற படிவத்தை வெளியிட்டிருக்கிறது நண்பன் நாளேடு.

மலேசியப் பிரதமர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்களின் பார்வைக்கு இந்தச் சிக்கலைக் கொண்டு சென்று நல்லதொரு தீர்வைக் காணும் நோக்கத்தில் இந்தப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது.

எசுபிஎம் தேர்வில் தமிழ், தமிழ் இலக்கியம் ஆகிய இரண்டு பாடங்களையும் எடுப்பதற்குரிய வகையில் அந்தப் பாட எண்ணிக்கையை 10லிருந்து 12ஆக அதிகரித்து உதவுமாறு பிரதமரையும், கல்வியமைச்சராகிய துணைப்பிரதமரையும் கேட்டுக்கொள்கிறது இந்தக் கோரிக்கைப் படிவம்.

மேலும், பிரதமர் வகுத்துள்ள ‘ஒரே மலேசியா’ கோட்பாட்டின் கீழ் அனைவரின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற கருத்தையும் இது மேற்கோள் காட்டியுள்ளது.

இதில், பெயர், முகவரி. அடையாள அட்டை எண் முதலான விவரங்களை எழுதி மலேசிய நண்பன் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இன்றுதொடங்கி இன்னும் 10 நாட்களுக்கு இந்தப் படிவம் மலேசிய நண்பனில் வெளிவரும்.

ஆகவே, மலேசிய நண்பன் வாசகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மலேசியத் இந்தியர்கள் அனைவரும் உடனடியாக இந்தக் கோரிகைப் படிவத்தை நிறைவு செய்து அனுப்ப வேண்டும். இதன் மூலம் நமது தாய்மொழியாம் தமிழை இந்த நெருக்கடியிலிருந்து மீட்க வேண்டும்; தமிழ் இலக்கியத்தை காக்க வேண்டும்.

முக்கிய அறிவிப்பு:- இது மலேசிய நண்பனுக்காகச் செய்யப்படும் விளம்பரம் அல்ல. மலேசியாவில் தமிழ்மொழியின் வாழ்வுரிமைக்காக முன்வைக்கப்படும் வேண்டுகை.

Tuesday, December 01, 2009

தமிழைத் தற்காக்குமா தமிழ் நாளேடுகள்?



மலேசியக் கல்விச் சான்றிதழ் எனப்படும் எசுபிஎம் தேர்வில் 10 பாடங்கள் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் இப்போது பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. தமிழ் அமைப்புகளின் உறுதியான போராட்டத்தின் விளைவாக இப்போது இச்சிக்கல் சமுதாயத்தில் வேகமாக எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.

ஆளும் கட்சித் (தமிழ்த்)தலைவர்களும் சரி, எதிர்கட்சித் தலைவர்களும் சரி இப்போது மாறி மாறி குரல் கொடுக்கிறார்கள்; இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசுவேன் என்கிறார்கள்; தமிழைக் காப்போம் என்கிறார்கள்; ஒன்றுபட்டுப் போராடுவோம் என்கிறார்கள்.

இப்படியாக, எசுபிஎம் தேர்வில் தமிழ்மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் தற்காப்பதற்கான முனைப்பும் உணர்வும் தமிழர்களிடையே உரத்துக் காணப்படுகிறது. இதில், இவருடைய போராட்டம் சரி; அவருடைய பேச்சு சரியல்ல; இவர் பெயர் வாங்கப் பார்க்கிறார்; அவர் அரசியல் ஈட்டம்(இலாபம்) தேடுகிறார் என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது.

இதுவொரு சமுதாயத்தின் உரிமை தொடர்பான விடயம். மலேசியத் தமிழர்களின் மொழிவழியான இன அடையாளத்தைத் தற்காப்பதற்கான போராட்டம். தமிழ்மொழியின் இருப்பை இந்த நாட்டில் உறுதிபடுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை.

ஆகவே, எல்லாரும், எல்லாத் தரப்பினரும் ஒரே இலக்கில், ஒரே நோக்கத்தில், ஒரே குரலில், ஒரே குடையின்கீழ் அணிதிரண்டு நிற்கவேண்டியது இன்றியன்மையாத ஒன்று. அப்போதுதான் நமது கோரிகையில் இருக்கின்ற நியாயப்பாடு, உண்மைத்தன்மை சம்பத்தப்பட்ட தரப்பினருக்குப் புரியும்; நாம் எதிர்பார்க்கும் விடிவும் விளைவுகளும் நடக்கும்.


இவ்வாறான போராட்டங்களின் வெற்றிக்குப் பலருடைய பங்கும் ஆதரவு தேவை என்றாலும், ஊடகத்தினரின் பணி மிக முக்கியமானது. மலேசியச் சூழலில், தமிழ் நாளிதள்களைத்தான் நாம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம், இங்கு தமிழ் நாளிதழ்களைத் தவிர ஒலி - ஒளி ஊடகங்கள் அனைத்தும் இந்தப் போராட்டத்திற்குத் துணைநிற்க இயலாது - முடியாது என்பது வெள்ளிடை மலை.

மலேசியத் தமிழ் நாளிகை வரலாற்றில் தமிழவேள் கோ.சாரங்கபாணி, முருகு.சுப்பிரமணியம், ஆதி.குமணன் முதலான இதழாசிரியர்கள் தமிழ்ச் சமுதாயம் சார்ந்த பல்வேறு சிக்கல்களைத் திறம்பட முன்னெடுத்து, திட்டமிட்டுக் கையாண்டு மக்களின் ஒருமித்த ஆதரவோடு மாபெரும் வெற்றிகளைச் சாதித்துக் காட்டியுள்ளார்கள் என்ற வரலாறுகள் இன்னும் பசுமையாகவே இருக்கின்றன.

இப்படிப்பட்ட ஊடக முன்னோடிகளின் வழிவந்த இன்றைய இதழாசிரியர்களும் இப்போது ஏற்படுள்ள நமது மொழிச்சிக்கலை முறையாக அணுகவேண்டும் என்பதே தமிழ்ப்பற்றாளர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ்க் குமுகாயத்தின் எண்ணமுமாகும்.

ஆகவே, இங்கே வெளிவரும் மூன்று நாளேடுகளும் எசுபிஎம் தேர்வில் 10 பாடங்கள் தொடர்பான நெருக்கடியை மொழி, இன, குமுகாய நலப் பார்வையுடன் அணுகிட வேண்டும்; நல்லதொரு தீவிர்வினை நோக்கி சமுதாயத்திற்கு வழிகாட்ட வேண்டும்.

மலேசிய நாளிகைகள் தங்களுக்குள் இருக்கின்ற தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இதற்காக ஒருமித்த குரலில் பேசவேண்டும். நாளேடுகளின் அரசியல் முரண்பாடுகளைக் கொஞ்சம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு தமிழ்மொழிக்காக முண்டுகொடுத்து நிற்க வேண்டும். குறிப்பிட்ட தலைவர்கள் சிலரை மட்டும் மேற்கோள்காட்டி செய்திகள் போட்டுவிட்டு, இதே நோக்கத்திற்காகப் போராடும் எதிரணித் தலைவர்களின் செய்திகளை இருட்டடிப்பு செய்துவிடக்கூடாது. அல்லது, ஒரு தரப்பினரின் நடவடிக்கைகளைப் பெரிதுபடுத்திக் காட்டியும், மற்றொரு தரபினரின் நகர்வுகளைக் கொச்சைப்படுத்தியும் குற்றப்படுத்தியும் காட்டிவிடக்கூடாது.


இதில், எது நடந்தாலும் இழப்பு என்னவோ நமது தமிழ்மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும்தான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இன்று நாம் செய்கின்ற தவறினால் நீண்ட காலத்திற்கு மிகப் பெரியதொரு பேரழிவு தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் ஏற்பட்டுவிடும் என்பதில் எல்லாரும் விழிப்பாக இருக்க வேண்டும்.

தன்னினத்தான் வேறினத்தான்
தன்பகைவன் தன்நண்பன்
எவனானாலும்

அன்னவனின் அருஞ்செயலைப்
பாராட்டுவோன் செய்தி
அறிவிப்போனாம்!

சின்னபிழை ஏடெழுதும்
கணக்காயன் செய்திடினும்
திருநாட்டார்பால்

மன்னிவிடும் ஆதலினால்
ஏடெழுதும் வாழ்க்கையிலே
விழிப்பு வேண்டும்!

ஏற்றமுறச் செய்வதுவும்
மாற்றமுற வைப்பதுவும்
ஏடேயாகும்!

என்று பாவேந்தர் பாரதிதாசன் தமது தமிழியக்கம் நூலில் ஏடெழுதும் ஊடகவியலாருக்குச் சொல்லியுள்ள கருத்துகளை உள்வாங்கிக்கொள்ள வேண்டும்; தமிழைக் காக்கவும் தமிழ் இலக்கியத்தை மீட்கவும் நடைபெறும் இந்தப் போராடத்தில் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் தமிழ் இதழியல் துறையில் ஆலமரமாக வேர்விட்டு விழுதூன்றி நிற்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாதது எதையும் இங்கு சொல்லிவிட்டதாக நான் எண்ணவில்லை.

ஆனால், அந்த ஆலமரங்கள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட அரசியல் குடையின்கீழ் இருப்பதால், தமிழ்ச் சமுதாயத்தின் – மாணவர்களின் – மொழியின் – இலக்கியத்தின் – ஒட்டுமொத்த மலேசியத் தமிழினத்தின் எதிர்காலத்தை நமது நாளிதழ்கள் சொதப்பிவிடக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இதனை எழுத துணிந்தேன்.

தொடர்பான செய்திகள்:-

1.இலக்கியம் இழுத்து பறிக்கிறது; இதயம் வலிக்கிறது.

2.எசுபிஎம் தேர்வில் தமிழை அகற்றும் முயற்சிக்குக் கடுமையான கண்டனம்:- மலேசியா இன்று

Blog Widget by LinkWithin