Thursday, October 09, 2008

நாட்டுபுறப் பாடல்(1): தாலாட்டுப் பாட்டு

மிழர்களின் வாய்மொழி இலக்கியமாக சிறப்புப் பெற்றவை நாட்டுப்புறப் பாடல்கள். ஏட்டிலும் எழுத்திலும் எழுதிவைக்காத கரணியத்தால், இன்று நாட்டுப்புறப் பாடல்கள் மெல்ல மறைந்து வருகின்றன.

தமிழரின் வாழ்வோடு இணைந்து இயங்கிய நாட்டுப்புறப் பாடல்கள் அழிந்துவிட்டால் கூடவே, தமிழர்களின் வரலாற்று, பண்பாட்டு, பாரம்பரிய, கலை, வாழ்வியல் தடங்களும் சுவடுகள் தெரியாமல் அழிந்து போய்விடும்.

ஆகவே, தமிழர் மண்ணிசையாகிய நாட்டுப்புறப் பாடலை மீட்டெடுக்க வேண்டிய முகமையான கடமை தமிழர்க்கு உண்டு. அத்தகு மீட்டெடுப்பு பணிக்குத் துணையாக இந்த நாட்டுப்புறப் பாடல் கட்டுரைத் தொடர் அமையுமானால் அடியேன் மிகவும் பெருமையடைவேன்.

இந்தக் கட்டுரைத் தொடர், திருத்தமிழ் வலைப்பதிவில் அவ்வப்போது இடம்பெறும். ஆகவே, திருத்தமிழ் அன்பர்கள் தவறாமல் படிக்குமாறும் பரப்புமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

*******************

நாட்டுப்புறப் பாடல் வரிசையில் முதலாக 'தாலாட்டுப் பாட்டு' பற்றி தெரிந்து கொள்வோம்.

தாலாட்டுப் பாட்டு என்பது குழந்தையைத் தொட்டிலில் போட்டு தூங்க வைக்கும் போது பாடப்படுவது. மிகப் பழங்காலம் தொடங்கி இந்தத் தாலாட்டுப் பாட்டு தமிழரிடையே இருந்து வந்துள்ளது. படிப்பறிவு இல்லாத சிற்றூர்(கிராம) தாய்மார்கள் தாங்களாகவே சொற்களை அடுக்கியும் இட்டுக்கட்டியும் பாடுவது 'தாலாட்டுப் பாட்டு'. தாலாட்டுப் பாட்டிலே குழந்தைக்கு அன்பைக் காட்டும் வேளையில் தேவையான கருத்துகளும் சொல்லப்படும்.

தாலாட்டுப் பாட்டு பற்றிய குறிப்பு முத்தொள்ளாயிரம் என்னும் இலக்கியத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-

இரியல் மகளி ரிலைஞெமலு ளீன்ற
வரியிளஞ் செங்காற் குருவி – அரையிரவின்
ஊமன்பா ராட்ட வுறங்கிற்றே செம்பியன்றன்
நாமம்பா ராட்டாதார் நாடு (முத்தொள்ளாயிரம்-77)

அதாவது, "போர் தொடங்கிவிட்டது. பெண்கள் அனைவரும் ஊருக்கு வெளியே உள்ள சோலைகளில் போய் மறைந்து கொண்டார்கள். அவர்களுடன் கருவுற்ற மகளிரும் உடன் தங்கி இருந்தார்கள். அங்கே, அவர்கள் ஈன்றெடுத்த குழந்தைகள் இலைகள், சருகுகளின் மேல் கிடந்து அழுகின்றன. அச்சமயத்தில், (ஊமன் பாராட்ட உறங்கிற்றுக் குழவி) தாலாட்டுப் பாடல் கேட்டு குழந்தைகள் தூங்கிவிட்டன" என்கிறது அந்தப் பாடல்.

தால் + ஆட்டு என்பதே தாலாட்டு என்றாகும். தால் என்றால் நாக்கு. தால் + ஆட்டு என்றால் நாவை அசைத்துப் பாடுவது எனப் பொருளாகும். "ஆராரோ... ஆரிரரோ..." என்றுதான் தாலாட்டுப் பாட்டு தொடங்கும். "ஆராரோ... ஆரிரரோ..." ஓசை பாடலில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்த இனிய ஓசையைக் கேட்டுக்கொண்டே குழந்தை தூங்கிவிடும்.

வாருங்கள் நாமும் ஒருமுறை தாலாட்டுப் பாடுவோம்!

ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மானே மரகதமே - என் கண்ணே
மாசிலாக் கண்மணியே!

ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அப்பா வருவாரே – என் கண்ணே
ஆசமுத்தம் தருவாரே!

ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மாமன் வருவாரே – என் கண்ணே
மாங்கனிகள் தருவாரே!

ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அத்த வந்தாக்கா – என் கண்ணே
அல்லிப்பூ தருவாளே!

2 comments:

Sathis Kumar said...

தாலாட்டு பாடல் என்றதும் ஒரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த தமிழறிஞர் திரு.குமரி அனந்தன் ஈப்போ தமிழர் திருநாள் நிகழ்விற்கு வந்திருந்தார்.

அவர் தன் உரையில், தாலாட்டு தொடர்பாக சில தகவல்களைக் கூறினார்.

'ஆராரோ.. ஆரிவரோ..'

யார் யாரோ வந்துவிட்டுப் போன இந்த உலகத்தில் , நீ யாரோ? வருங்காலத்தில் நீ யாரோ?

என்று பொருள்படும்படி சில விளக்கங்கள் கொடுத்த பொழுது வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஒரு கிராமியப் பாடலை சாதாரணமாக எண்ணி புறக்கணிக்கலாகாது என்று அன்று பாடம் கற்றுக் கொண்டேன்..

Anonymous said...

தாலாட்டுப் பாட்டு என்பதே ஒரு தனி இன்பம். அது திருத்தமிழ் தருவது பேரின்பம். நிறைய பாட்டுக்கள் வேண்டுகிறேன். போற்றுகிறேன் உங்கள் தமிழ்ப்பணி.

இனியன்,
பினாங்கு.

Blog Widget by LinkWithin