Tuesday, August 04, 2009

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் வலையகம்

மலேசியத் தமிழ்க்கல்வி உலகில் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் தாம் இந்த வரலாற்றை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றன. ஒட்டுமொத்த மாநிலத் தமிழ்ப்பள்ளிகளையும் ஒருசேர இணையத் தேரில் ஏற்றிவைத்து உலகவலம் வரச்செய்த முதல் மாநிலமாகப் பேரா மாநிலம் சிறப்புப் பெற்றுள்ளது.

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் வரலாற்றுத் தொகுப்பாக – வரலாற்று ஆவணமாக மிக நேர்த்தியுடன் உருவாகி இருக்கிறது 'பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் வலையகம்' என்னும் இணையத்தளம்.

பேரா மாநிலத்தில் செயல்படும் 134 தமிழ்பள்ளிகளின் விவரம் - வரலாறு - வளர்ச்சிகள் - அடைவுநிலைகள் ஆகியவற்றைத் தாங்கி இந்த வலையகம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் - மலாய் - ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இப்படியொரு பெரும் திட்டத்தினை முன்னெடுத்ததோடு மட்டுமல்லாமல், இதன் உருவாக்கப் பணிக்குத் தலைமையேற்றுச் செயலாற்றியவர் பேரா மாநிலக் கல்வித் திணைக்கள உதவி இயக்குநர் முனைவர் சா.சாமிக்கண்ணு அவர்கள். இந்த வலையகத்தின் உருவாக்கத்தில் அன்னாரின் பங்கும் பணியும் மிகவும் அளப்பரியது. இந்த வலையகத்தைப் பற்றி தமது முன்னுரையில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

"பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தோற்றம் – வரலாறு - வரலாறு – அடைவுகள் ஆகியவற்றைத் தொகுத்திட வேண்டும் என்ற உணர்வின் வெளிப்படுதான் இந்த வலையகம். பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் இருப்பும் வாழ்வும் கால வெள்ளத்தில் கரைந்துபோய்விடக் கூடாது என்ற காப்புணர்வின் கட்டமைப்புதான் இந்த வலையகம். பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் வரலாற்றை முறையாக ஆவணப்படும் முயற்சிதான் இந்த வலையகம்.

ஒரு காலக்கட்டத்தில் இம்மாநிலம் முழுவதும் முந்நூறு தமிழ்ப்பள்ளிகள் இருந்ததாக வரலாறு பகர்கின்றது. ஆனால், இன்றைய நிலையில் நூற்று முப்பத்து நான்கு தமிழ்ப்பள்ளிகள் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கின்றன. காலவெள்ளத்தால் கரைந்துபோன – காணாமற்போன - மூடப்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் வரலாறு இன்று கண்டெடுப்பதற்கு அறியதாகிப் போய்விட்டது.

இன்றைய நிலையில் இருக்கின்ற பள்ளிகளின் வரலாற்றைக் காத்துவைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்திலும், பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் நிலையை மலேசியா மட்டுமின்றி உலகத்தோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் இந்த வலையகம் வடிவமைக்கப்பட்டுள்ளது."

பேரா மாநிலக் கல்வித் திணைக்கள ஆதரவுடனும் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழாசிரியர்களின் கூட்டு முயற்சியாலும் இந்த வலைப்பதிவு மிகவும் அருமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏழு ஆண்டுகள் செலவிடப்பட்டதாகவும் அறியப்படுகிறது.

மலேசியாவில், முதலாவதாகச் சொந்த வலையகத்தை நிறுவியுள்ள பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி குழுமத்தைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளிகளின் மாநிலக் கண்காணிப்பாளர், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் குறிப்பாக, இந்தச் வரலாற்றுச் சிறப்புமிகு சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ள உதவி இயக்குநர் முனைவர் சா.சாமிக்கண்ணு அவர்களுக்கும் 'திருத்தமிழ்' நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

(பி.கு:-மேலே உள்ள படத்தைச் சொடுக்கி 'பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் வலையகத்தைப்' பார்வையிடலாம்)

2 comments:

Tamilvanan said...

நல்ல பகிர்வு.
இதனையே அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்திட வேண்டும். இதனை முன்னுடுத்து செய்தவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,

மிக்க நன்றி! தொடர்ந்து வருக!

Blog Widget by LinkWithin