Thursday, November 27, 2008

மாவீரர் நாளில் வீர வணக்கம்


உலக உருண்டையில் தமிழருக்குத் தனிநாடு காணும் உயிர்ப்போராட்டத்தில் வீரச்சாவடைந்த தமிழீழப் போராளிகளை நினைவுகூரும் வீரத்திருநாள் மாவீரர் நாள். தமிழ் – தமிழினம் – தமிழ்மண் – தமிழியல் ஆகிவற்றுக்காகப் போராடிப் போராடி தங்கள் இன்னுயிரை ஈகப்படுத்திய மாத்தமிழர் - மறத்தமிழர் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்த இப்பதிவை இடுகிறேன்.

1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு.

ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.

ஆனால், விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கு இடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழீழ மக்கள் மண்ணின் விடிவிற்காகத் தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை எழிற்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்கள் குடும்பத்தினரை போற்றிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.


வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலும் இல்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டும், நடுகற்கள் நாட்டப்பட்டும் வழிபாடு இயற்றப்படுகின்றது. மாவீரர் நாளில் மாவீரரின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றி மதிப்பளிக்கப்படுகின்றனர். உலகிலே எங்குமே மாவீரர் நாள் நிகழ்வுகள் போல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள், அவர்களின் பெற்றோரும், குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ, நடைபெறுவதாகவோ வரலாறுகள் இல்லை.


மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும்

1989ஆம் ஆண்டில் நவம்பர் 27ஆம் நாளை மாவீரர் நாளாகவும் 1990ஆம் ஆண்டில் இருந்து 1994ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள் வரை மாவீரர் எழுச்சியாகவும்(வாரமாகவும்) தமிழீழ மக்கள் எழுச்சி நிகழ்வாக நடைபெற்று வந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 1995ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25ஆம் நாள் முதல் 27ஆம் நாள்வரை மூன்று நாட்களில் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

"தமிழின மாவீரர்களுக்கு வீர வணக்கம் செய்குவோம்"

Wednesday, November 26, 2008

தமிழின மீட்பர் மேதகு வே.பிரபாகரன்

இன்று 26-11-2008 தமிழீழத் தலைவர் – தமிழினத் தளபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 54ஆம் பிறந்தநாள். தமிழ் ஈழத்தில் தமிழ்மண்ணை மீட்டெடுத்து தமிழ்க்கொடியை வானுயரப் பறக்கவிட்டு தமிழரின் தனிநாடு இதுவென அறிவிக்க மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடாத்தும் அந்தத் தமிழின மீட்பர் – தமிழ் வீரகர் பிறந்தநாளை முன்னிட்டு இப்பதிவு இடப்பெறுகிறது.

பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே
மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே
மங்களம் தங்கிடும் நேரத்திலே
எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (பொங்கிடும்)

பாசத்தில் எங்களின் தாயானான்
கவி பாடிடும் மாபெரும் பேரானான்
தேசத்தில் எங்கணும் நிலையானான்
விலை தேடியே வந்திடும் தலையானான் (பொங்கிடும்)


இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான்
பல இளைஞரை சேர்த்துமே களம் குதித்தான்
தன்னின மானத்தை தான் மதித்தான்
பகை தாவியே வந்திட கால் மிதித்தான் (பொங்கிடும்)


இங்கொரு தாயகம் மூச்சென்றான்
தமிழ் ஈழமே எங்களின் பேச்சென்றான்
வந்திடும் படைகளை வீச்சென்றான்
புலி வாழ்ந்திடும் வரையினில் தூசென்றான் (பொங்கிடும்)


விடுதலைப் புலிகளின் பலமானான்
தமிழ் வீடுகள் யாவிலும் மலரானான்
படுகளம் மீதிலோர் புலியானான்
பிரபாகரன் எங்களின் உயிரானான் (பொங்கிடும்)

என்றுமே எங்களின் தளபதியே
நீ எங்களின் வானத்து வளர்மதியே
இன்று உனக்கு ஆயிரம் சோதனைகள்
தமிழ் ஈழத்தை வாங்குமுன் போதனைகள் (பொங்கிடும்)




தமிழீழத் தேசியத் தலைவரைப் பற்றி அறிந்துகொள்ள கீழே உள்ள சுட்டிகளைத் தட்டிப் படிக்கவும்.


* தலைவரின் வாழ்க்கைக் குறிப்பு

*தலைவரின் சிந்தனைகள்

*தலைவரின் நிழற்படங்கள்

*தலைவரின் உரைகள்


  • நன்றி: யாழ்.காம்(கவிதை)
  • நன்றி: பிரபாகரன்.காம்(செய்திகள்)

Tuesday, November 25, 2008

மலேசியத் தமிழர் எழுச்சி நாள் 11/25

ன்று 25 நவம்பர் 2008. கடந்த 2007இல் இதே நாள் உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையும் மலேசியத் தமிழர் மீது விழுந்த நாள்.

மலேசியா விடுதலை அடைந்த 50ஆவது ஆண்டின் நிறைவின்போது, மலேசியத் தமிழர்கள் தங்களின் உரிமைகளைக் கோரி கோலாலம்பூர் மாநகரே அதிரும்படியாக மாபெரும் அளவில் கவனஈர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த வரலாற்று நாள்.

நாடு முழுவதிலுமிருந்து சிறியோர், இளையோர், மங்கையர், அன்னையர், பெரியோர் என தமிழ்க் குமுகாயத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் படிநிகர்த்து தமிழர்கள் பேரணியாகத் திரண்ட வெற்றிப் பெருநாள்.

புறநானூற்றுத் தமிழரின் வீரத்தை மலேசிய மண்ணில் விதைத்துப் போன வீரத் திருநாள்.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வரலாறாகவும் இனிவரும் 50 ஆண்டுகளுக்கும் மறையாத வரலாறாகவும் இருக்கவல்ல அந்த நவம்பர் இருபது இப்போதும் எல்லாத் தமிழர் உள்ளங்களிலும் மிகவும் பசுமையாகவே இருக்கிறது – மிகவும் பாரமாகவே கணக்கிறது.

மலேசியத் தமிழர்களிடையே இதற்கு முன்னர் என்றுமே இல்லாத அளவுக்கு அரசியல் விழிப்புணர்வையும் – குமுக ஒற்றுமையுணர்வையும் – உரிமைக் காப்புணர்வையும் – இனவியல் வரலாற்றுணர்வையும் ஏற்படுத்திய அந்த நவம்பர் இருபத்து ஐந்து இன்றும்கூட எல்லாத் தமிழர் எண்ணங்களிலும் மிகவும் செழிப்பாகவே இருக்கிறது – மிகவும் சிக்கலாகவே தொடர்கிறது.

அந்த நவம்பர் இருபத்து ஐந்தை வரலாற்று நாளாக உருமாற்றிய உடன்பிறப்புகள் இன்றும் இனி என்றும் எல்லாத் தமிழர் இதயங்களிலும் நிறைந்திருப்பர் – இரத்த அணுக்களில் உறைந்திருப்பர்.

அந்த நவம்பர் இருபத்து ஐந்தும் அந்த இனிய உடன்பிறப்புகளும் தமிழரிடையே ஏற்படுத்திய மாபெரும் சிந்தனைப் புரட்சியை ஓராண்டுக்குப் பின்பு இன்று நன்றியோடு நினைத்துப் பார்ப்போம்!

அந்த நவம்பர் இருபத்து ஐந்தும் அந்த இனிய உடன்பிறப்புகளும் ஏற்றிவைத்த புரட்சிச் சுடரை அணையவிடாமல் பாதுகாப்போம்!

அந்த நவம்பர் இருபத்து ஐந்தும் அந்த இனிய உடன்பிறப்புகளும் தொடக்கிவைத்த உரிமைச் சமரை, இந்நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட நிலையில், அண்ணல் காந்தியடிகள் காட்டிய அறவழியில் தொடர்ந்து வழிநடத்துவோம்!

அதற்காகவே நமக்கு வீரத்திலகமிடுகிறார் புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசனார். இப்படி:-


சிறுத்தையே வெளியில் வா!..


பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!

இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!

நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்!
வாழ்க *திராவிட நாடு!
வாழ்கநின் வையத்து மாப்புகழ் நன்றே!

*மலையக என மாற்றிப் படிக்கவும்


Tuesday, November 18, 2008

கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார்



இன்று 18-11-2008, இலக்கியச் செம்மல் கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள். தமிழ்கூறு நல்லுலகை விட்டு அவர் பிரிந்துச் சென்று 72 ஆண்டுகள் ஆகின்றன. அவருடைய நினைவாக இக்கட்டுரை பதிவாகிறது.


**************
செக்கிழுத்தச் செம்மல் என்று புகழப்படும் வ.உ.சி எனும் சுருக்கப் பெயருக்குச் சொந்தக்காரர் வ.உ.சிதம்பரனார் உண்மையில் தமிழ் இலக்கியத்திலும் பெருஞ்செம்மல்.

தடைகளைக் கண்டு முடங்கி விடாமல் வீறுகொண்ட மனத்தினராய் கடைசி வரை வாழ்ந்த வ.உ.சியின் வாழ்க்கை இன்றையத் தமிழர்களுக்கு நல்ல பாடமாகும்.

திருநெல்வேலி ஒட்டப் பிடாரத்தில் உலகநாதர் பரமாயி அம்மையார் வாழ்விணையருக்கு 5-9-1872இல் மூத்த மகனாகப் பிறந்தார் சிதம்பரானார். 1894-இலேயே வழக்கறிஞராகத் தம்முடைய வாழ்க்கையைத் தொடங்கினார்.

இந்தியாவுக்குத் தொழில்புரிய வந்த ஆங்கிலேயன் நாட்டையே ஆள்வதற்கு முனைந்துவிட்ட காலம் அது. அப்போது ஆங்கிலேயனை எதிர்த்து நெஞ்சுரத்தோடு போராடிய முன்னோடிகளில் சிதம்பரனார் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலேயனின் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி மக்களிடையே முழங்கினார். அதற்காகவே சொந்தமாகச் சரக்குக் கப்பலை ஓடவிட்டார்.

தமிழர் வரலாற்றில், இராசேந்திரச் சோழனுக்குப் பின் கடலில் கப்பலை விட்டவர் வ.உ.சிதான். அதனாலேயே அவர் கப்பலோடியத் தமிழன் என்ற அழியாப் புகழுக்குச் சொந்தக்காரர் ஆனார். தமிழனால் முடியாதது எதுவும் இல்லை; தமிழன் நினைத்தால் சாதித்துக் காட்டுவான் என்பதற்குக் கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சி மிகச் சிறந்த முன்மாதிரி என்றால் மிகையன்று.

ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் வ.உ.சியின் கப்பல் நிறுவனம் முடக்கப்பட்டது. அவர்மீது வழக்குகள் போடப்பட்டு சிறைதண்டனையும் வழங்கப்பட்டது. சிறையில் இருந்தபோது, மாடுகள் இழுக்கின்ற செக்கை இழுக்கச் சொல்லி ஆங்கிலேயர்கள் கொடுமைபடுத்தினர். தோளிலும் உடலிலும் குருதிச் சொட்டச் சொட்ட அவரை அடித்து துன்புறுத்தித் செக்கிழுக்க வைத்தனர்.

சிறையிலிருந்து விடுதலையான பின்பு ஆங்கிலேயர்கள் அவரை விட்டபாடில்லை. அவருடைய சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்துகொண்டனர். அவர் தொடர்ந்து வழக்கறிஞர் பணிசெய்வதற்கும் தடை போட்டனர்.

ஆங்கிலேயனில் வல்லாண்மையில் தனக்கு ஏற்பட்ட அத்தனை இடர்களையும் துயர்களையும் வ.உ.சி வரலாற்று நூலாக எழுதினார். இலக்கியத்தரம் மிகுந்த வரலாற்று நூலாக இது அமைந்தது.

தமிழ்மொழியின் மீது மிகுந்த பற்றும் புலமையும் கொண்டிருந்தார் வ.உ.சி. அவர் திருக்குறளுக்கு அகல விரிவுரை எழுதியுள்ளார். தொல்காப்பியத்திற்கும் விளக்கநூல் எழுதியுள்ளார். அவருடைய எழுத்துகள் அனைத்தும் புரட்சி சிந்தனைகளை ஏற்படுத்துவதாக இருந்தன. தமிழில் பல நூல்களையும் புதினங்களையும் எழுதியுள்ளார். சேம்சு ஆலன் என்னும் ஆங்கில நாவலாசிரியர் எழுதிய நூல்களை இவர் மொழிப்பெயர்த்து எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மெய்யாரம், மெய்யறிவு போன்ற இவருடைய படைப்புகள் காலத்தால் அழியாதன.

எழுத்தில் மட்டுமல்லாது, மேடைகள் தோறும் தம்முடைய உணர்ச்சிமிகு உரைகளால் தமிழர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியவர்.

பெரும் செல்வந்தராக இருந்தபோதும் மக்களின் துயரங்களைத் துடைத்தெறிய மக்களோடு நின்று போராடிய மாபெரும் போராட்ட உணர்வாளராக அவர் திகழ்ந்தார். அதனாலேயே, வாழ்நாள் முழுவதும் தாங்கமுடியாத துயரவாழ்க்கை வாழ்ந்தார்.

அடிமைப்பட்டிருந்த இந்தியாவையும் தாழ்ந்திருந்த தமிழர் குமுகாயத்தையும் மீட்டெடுக்க தன்னுடைய உடல், பொருள், ஆவி அத்தனையும் ஈகப்படுத்தி இறுதிவரையில் திண்ணிய மனத்தோடு போராடிய வ.உ.சிதமபரனார் 18-11-1936ஆம் நாள் தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.

தமிழுக்காகவும் தமிழருக்காகவும் போராடி உயிர்விட்ட வ.உ.சியின் புகழ் தமிழ் உள்ள அளவும் போற்றப்படும் என்பது திண்ணம். இன்றைய இளம் தலைமுறையினர் வ.உ.சி போன்ற தமிழ்ப் பெரியோர்களின் வரலாற்றைப் படித்து விழிப்புணர்வு பெற்று எழுச்சிகொள்ள வேண்டும். தமிழ் இனம் வாழ; தமிழ்மொழி வாழ நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டு போராடி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

வாழ்க ஐயா வ.உ.சி அவர்தம் புகழ்!

Sunday, November 09, 2008

வீரமாமுனிவர் என்ற பெசுகி பாதிரியார்

இன்று 9-11-2008 தமிழ்ச் சான்றோர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாள். அன்னார் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது
***********
*********

தமிழ் மொழியின் வரலாற்றுப் பாதையில் கிறித்தவர்களின் பணியைக் குறைத்து மதிப்பிட முடியாது. சமயப் பணி புரிவதற்காகவே ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த மறைத்தொண்டர்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள பணி வியப்புக்குரியது.

தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத இவர்கள் தமிழைப் பயின்று, அம் மொழிக்கே வளம் சேர்த்தனர். சமயப் பணியாற்ற வந்த அவர்கள் தமிழின் இனிமையில் மனத்தைப் பறிகொடுத்து தமிழ்ப்பணியையே முழுநேரப் பணியாகக் கொண்டனர். அவர்களுள் தமிழ் இலக்கிய உலகம் மறக்க முடியாத ஒருவர் வீரமாமுனிவர்.

இத்தாலியில் இவர் பிறந்தது 1680 நவம்பர் 9ஆம் நாள். கான்சுடாண் டைன்யுசேபியுசு சோசப்பு பெசுகி என்பது இவரது இயற்பெயர். இந்தியாவில் கிறித்துவ சமயப்பணி புரிவதற்காக வந்த முனிவர், 1711 மதுரை மறைப்பணிக் களத்துக்கு வந்தார்.

மதுரைப் பகுதியில் 1606 முதல் 1645 வரை பணியாற்றிய இராபர்ட் தெ நொபிலி அடிகளார் ஐரோப்பிய வாழ்க்கை முறைகைளைக் கைவிட்டு, தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படையில் வாழ்ந்தார். காவியுடை அணிந்து, சைவ உணவு உண்டு வாழ்ந்தார். வீர மாமுனிவரும் இவரது வாழ்க்கை முறையையே பின்பற்றினார்.


பெசுகி என்ற தம் பெயரை 'தைரியநாதர்' என்று மாற்றிக் கொண்டார். தைரியநாதர் என்பது வடமொழி என அறிந்தார். அவரின் தமிழ்ப்பற்று காரணமாக, அதுவே 'வீர மாமுனிவர்' என பின்னாளில் மாற்றம் பெற்றது. பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழத் தொடங்கினார்.

வீரமாமுனிவரின் தமிழ்ப்பணிகள்

1.தமிழ் அச்சுக்கலைக்கு அடிகோலியவர் கிறித்தவ குருமார்களே. 1586 ஆம் ஆண்டில் தென்பாண்டி நாட்டு புன்னைக்காயில் என்னும் ஊரில் 'அடியார் வரலாறு' என்னும் நூல் அச்சிடப்பட்டது. ஆண்டிறீக்குப் பாதிரியார் தமிழில் தொகுத்து, மொழி பெயர்த்து வெளியிட்ட இந் நூல்தான் தமிழ் மண்ணில் அச்சிட்ட முதல் தமிழ் நூல்.

2.இந்தக் காலகட்டத்தில் வீர மாமுனிவர் தமிழ் எழுத்துச் சீரமைப்பை மேற்கொண்டார். இப்போது நாம் பயன்படுத்தும் 'ஏ' 'ஓ' போன்ற எழுத்துகள் வீரமாமுனிவர் உருவாக்கியவை. அதற்கு முன் 'எ' 'ஒ' ஆகிய எழுத்துகளின் மேல் புள்ளியிட்டு மெய்யெழுத்து போல எழுதப்பட்டது.

3.எழுத்துச் சீரமைப்பு, இலக்கணம், அகர முதலி, உரைநடை என இவர் தொடாத துறைகளே இல்லை. 'தேம்பாவணி' என்னும் பெருங்காப்பியமும், 'திருக்காவலூர் கலம்பகம்' முதலிய சிற்றிலக்கியங்களும் இவரால் பாடப்பட்டவை. கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், திறவுகோல் (CLAVIS) முதலிய இலக்கண நூல்கள் அவர் பெயரை எப்போதும் கூறிக் கொண்டேயிருக்கும்.

4.திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்து மாபெரும் சாதனை நிகழ்த்தினார்.

5.தமிழில் கடினச் சொற்களுக்குப் பொருள் காண 'நிகண்டு'களையே நம்பிக் கொண்டிருந்த நிலையை மாற்றினார். 1732 ஆம் ஆண்டு இவர் தொகுத்த 'சதுரகராதி' முதல் தமிழ் அகர முதலி என்னும் பெருமை பெற்றது. இது பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி என நான்கு பகுப்புகளைக் கொண்டது.

6.இது தவிர, 'தமிழ் - இலத்தீன் அகராதி', போர்த்துகீசியம் - தமிழ் - இலத்தீன் அகராதி என்னும் வேறு இரண்டு அகராதிகளையும் தொகுத்தளித்தார். அவற்றுள் தமிழ் - இலத்தீன் அகராதியில் ஒன்பதாயிரம் தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கம் செய்துள்ளார். போர்த்துகீசியம் - தமிழ்- இலத்தீன் அகராதியில் 4400 போர்த்துகீசியச் சொற்களுக்குத் தமிழிலும், இலத்தீனிலும் உரை எழுதியுள்ளார். இந்த அகராதிகளின் துணையால் அயல்நாட்டினர் தமிழைக் கற்பதற்கும், தமிழர் பிற மொழிகளைக் கற்பதற்கும் கதவு திறக்கப்பட்டது.

7.வீர மாமுனிவர் மேல்நாட்டு மொழிகளைக் கற்றறிந்த பேரறிஞர். அம் மொழிகளைப் போலவே தமிழிலும் உரைநடை நூல்கள் வர வேண்டுமென்று விரும்பி பல உரைநடை நூல்களை எழுதினார்.

வீரமாமுனிவரைப் பற்றி தமிழ் அறிஞர்கள் கூற்று


''தமிழ் உரைநடைக்குத் தந்தை தத்துவ போதகரே என்பர். அது உண்மை எனினும், இவரால் அது வளம் பெற்று மிக்குயர்ந்தது'' என்று தவத்திரு. தனிநாயகம் அடிகளார் கூறுவதை யாரும் மறுக்க இயலாது.

''18 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தமிழ்ப்புலவருள் வீரமாமுனிவரும் ஒருவர்'' என்று 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எழுதிய அறிஞர் கால்டுவெல் எழுதியுள்ளார். திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் சி.யு.போப்(G.U.Pope), இவரைத் 'தமிழறிஞருள் மிகச் சிறந்தவர்' என்று போற்றியுள்ளார்.

''திராவிட மொழியியல் வல்லுநர்களுக்கெல்லாம் மிகச் சிறந்த முன்னோடி வீர மாமுனிவரே'' என்று செக் நாட்டுத் தமிழறிஞர் 'கமல் சுவலமில்' பாராட்டியுள்ளார். எமிலியோ தேவி என்ற இத்தாலி அறிஞர், ''கீழ்த்திசை அறிஞருள் மிகவும் புகழ் பெற்றவர் வீர மாமுனிவர்'' என்று கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரைப் பலரும் புகழ்ந்து போற்றியுள்ளனர்.

  • நன்றி:- உதயை.மு.வீரையன்

Saturday, November 08, 2008

தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 3)

எத்தனை பேருக்குத் தமிழ் சோறு போடுகிறது தெரியுமா?


தமிழின் உலகளாவிய நிலை இருக்கட்டும். தமிழ் நாட்டளவில் அதன் நிலையும் இருக்கட்டும். நமது மலேசிய நாட்டிலேயே எத்தனை பேருக்குச் சோறு போட்டுக் கொண்டிருக்கிறது தமிழ்!

தேசிய மொழியாகவோ பெரும்பான்மை இனத்தவர் மொழியாகவோ இல்லாத இந்நாட்டில்கூட தமிழ் எண்ணற்றவருக்கு என்னென்னவோ தந்து கொண்டிருக்கிதே! அந்த உண்மை இவர்களுக்குத் தெரியவில்லையா? தெரிந்திருந்தும் தெரியாதது போல நடிக்கிறார்களா?

1.இங்கே ஆயிரக்கணக்கான தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குச் சோறுபோட்டுக் கொண்டிருப்பது எது?

2.வானொலியிலும், தொலைக்காட்சியிலும் தமிழ்ப்பிரிவுகளில் பணிபுரிவோருக்குச் சோறு போட்டுக் கொண்டிருப்பது எந்த மொழி?

3.காவல்துறை, உளவுத்துறை, சட்டத்துறை, உள்துறை அமைச்சு, தகவல் அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றிற்கெல்லாம் தமிழை முதலாக வைத்துப் பணிபுரிபவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

4.பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழாலேயே பெரும் பணிகளில் அமர்ந்திருப்போர் இல்லையா?
5.தமிழில் நூல்கள் வெளியிடும் பதிப்பகங்கள் தமிழால் வாழவில்லையா?

6.ஏன் அந்தக் காலத்து துன் சம்பந்தன் முதல் இன்றைய டத்தோஸ்ரீ சாமிவேலு வரை பலர் அமைச்சர்களாக வழிவகுத்தது அவர்கள் அறிந்த தமிழன்றோ!

7.அன்றும் இன்றும் இந்நாட்டு அரசியலில் பெயர்போட்டுக் கொண்டிருக்கும் தமிழர்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் அல்லரோ!

இவர்களுக்கெல்லாம் தமிழ் சோறுமட்டுமா போட்டுக் கொண்டிருக்கிறது? வாழ்வாங்கு வாழும் வையப் பெருவாழ்வையே அன்றோ தந்திருக்கிறது!

சோற்றுத் தமிழர்கள் சோற்று மொழியைத் தேடிக்கொள்ளட்டும். சோறு போடும் மொழியை மட்டும் கற்றவன் நன்றாகச் சோறு உண்ணலாம். ஆனால் அவன் யார்? அவன் அடையாளம் என்ன? அவன் பண்பாடு எது? பாரம்பரியம் யாது?

அவன் மொழியால் அடிமை, பண்பாட்டால் அடிமை. ஏனெனில், மொழி இனத்தின் உயிர், மொழி வாழ்ந்தாலே பண்பாடு வாழும், மொழியும் பண்பாடும் சமுதாயத்தின் இரண்டு கண்கள். ஒன்று போனால் அரைக்குருடு. இரண்டும் இழந்தால் முழுக்குருடு. முழுக்குருடனை யாரும் எதுவும் செய்யலாம். இத்தகையவன் உரிமை பெற்ற நாட்டில் வாழ்ந்தால்கூட அடிமைக்குச் சமமானவனே என்பதில் ஐயமேது?

குறுகிய காலத்தில் பல துறைகளில் பெரு முன்னேற்றம் அடைந்திருக்கும் சப்பானியர் தம் மொழி சோறு போடுமா என்று வினவவில்லை. நம் நாட்டில் எல்லா வகையிலும் உயர்ந்து நிற்கும் சீன மக்கள் தம்மொழி சோறு போடுமா என்று கேட்கவில்லை. இவர்கள் தங்கள் மொழிக்குத் தாங்களே சோறு போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு வலிமையூட்டி வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், தமிழரில் பலரோ தம் தனிக்குணச் சிறப்பால், தாயை காக்கக் கூலி கேட்பார்போல, இன்று தமிழிடத்தில் சோறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழால் சோறு உண்பவர்களிலேயே பலருக்குத் தமிழின்பால் அன்பில்லை, மதிப்பில்லை, நன்றி கூட இல்லை; சோற்றுக்காகத் தமிழையே விற்கவும் துணிந்து விடுகிறார்கள். இந்த நிலையில் எல்லோருக்கும் சோறு போட்டால் இருக்கும் தமிழாவது இருக்குமா?

தமிழுக்காகவே தமிழ் வேண்டுவோர் தமிழுக்குப் போதும். சோற்றுக்காகவே மொழி வேண்டுவோர் சோறு போடும் மொழியே சொந்தமென்று போகட்டுமே!

1.தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 1)
2.தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 2)
3.தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 3)

  • நன்றி: உங்கள் குரல் திங்களிதழ்

Monday, November 03, 2008

தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 2)

தமிழ் சோறு போடுமா? என நாக்கில் நரம்பில்லாமல் பேசுபவர்கள், தமிழுக்கு உள்ள தனித்தன்மைகளை அறிவார்களா?


1.மொழியின் மற்றொரு பயன் அம்மொழியில் உள்ள நூல்களிலிருந்து கிடைப்பது. தமிழ் நூல்களில் இல்லாத படிப்பறிவுச் செல்வமும் பண்பாட்டு வளமும் வேறெம் மொழியில் உள்ளன? உயர்ந்த வாழ்க்கைக்கு உரிய நெறியும் அதன்படி ஒழுகும் முறைகளும் தமிழ் இலக்கியங்களிலும் அறிவு நூல்களிலும் கிடைக்குமளவுக்கு வேறெங்குக் கிடைக்கும்?

2.திருக்குறள் போன்ற அறிவு நூல் மனித வாழ்க்கையில் எத்துணைப் பெரும்பயனை உருவாக்கவல்லது! 99 மலர்களைப் பெயர்கூறி அடையாளம் காட்டும் கபிலரின் குறிஞ்சிப் பாட்டுப் போலொரு பழம் பாடல் தமிழிலன்றி வேறெம் மொழியில் உள்ளது? விவேக சிந்தாமணியின் விவேகம் கண்டால் வியக்காதவர் யார்?

3.தமிழின் சொல்வளம் என்பது வெறும் சொற்களின் எண்ணிக்கையா? அ•து ஓர் பழம் பெரும் இனத்தின் பல்லாயிரம் ஆண்டுப் பட்டறிவுப் பெட்டகம் அன்றோ!


4.பூ என்னும் ஒரு பொருளுக்கு அரும்பு, வீ, போது, முறுக்கு, மொட்டு, அலர், மலர் என அதன் ஒவ்வொரு பெயர் கொண்ட மொழி உலகில் எத்தனை உண்டு? கல்வியை முறையாகத் தமிழில் தொடங்கும் குழந்தை, பூ என்னும் ஒரு பொருளைத் தெரிந்து கொள்ளும்போதே அதன் பல நிலைகளையும் அவற்றுக்கான சொற்களையும் சேர்த்தே தெரிந்து கொள்கிறது! இப்படி ஒன்றை அறியும்போதே அதைப் பலவாகப் பகுத்தும் ஆய்ந்தும் பார்க்கப் பழகும் குழந்தையின் பகுத்தறியும் ஆய்வாற்றலும் எத்தகையதாக இருக்கும் எனச் சொல்லவும் வேண்டுமோ!

5.இதனால் அன்றோ தமிழர்கள் குறிப்பாகத் தமிழ் பயின்றவர்கள், அறிவியலிலும் கணிதத்திலும் அரும்திறம் பெற்றிலங்குகின்றனர்! உலகெங்கும் தலைசிறந்த மருத்துவர்களாகவும் கணினித் துறை வல்லுநர்களாகவும் திகழ்கின்றனர்.

6.ஒரு பழம் 75 காசு. 46 பழங்கள் எவ்வளவு என்றால், மற்றவர்கள் தாளில் எழுதிப் பெருக்கிக் கொண்டிருக்கிற அல்லது கணக்கியைத் (கல்குலேட்டரைத்) தேடிக் கொண்டிருக்கிற நேரத்தில், பெரிய அளவில் கல்வி இஆல்லாத, ஆனால் தமிழ் பயின்ற முதியவர்கள் "நாமுக்கா மூணு, அற முக்கா நாலரை ஆக முப்பத்து நாலு வெள்ளி ஐம்பது காசு (34.50)" என்று பட்டென்று கூறி விடுகின்றனரே! இந்தத் திறம் எங்கிருந்து கிடைத்தது. தமிழ் பயின்றதால் வந்த தனித்திறம் அன்றோ இது.

7.மொழியின் இன்னொரு பயன் அதன் இலக்கணத்தாலும் மொழி மரபாலும் உருவாகும் மனப்போக்கு, உறவினரை, மை வைபு (my wife), மை சன் (my son) என்னுடைய மனைவி, என்னுடைய மகன் என்று குறிப்பது ஆங்கிலத்திலும் மற்ற பல மொழிகளிலும் மரபாக இருக்கிறது. தமிழ் இலக்கணமோ, உறவினர்கள் உடைமைப் பொருள்கள் அல்லர்; அவர்களை எனக்கு மனைவி, எனக்கு மகன் என்று முறைப்பொருளில்தான் குறிப்பிட வேண்டும். "உடைய" என்னும் சொல்லைக் கொண்டு உடைமைப் பொருளாகக் குறிக்கக் கூடாது என்கிறது.


8.தமிழ் இலக்கணம் தருக்க முறையிலானது. அறிவியல் அடிப்படையிலானது; எனவே அதைக் கற்பவன் பகுத்தறிவுத் திறம் பெறுகிறான். எதையும் முறையாகச் சிந்திக்கின்ற, செய்கின்ற ஆற்றல் பெறுகிறான். தமிழின் பொருளிலக்கணம் இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கையைக் கற்பிக்கிறது. யாப்பிலக்கணம் கற்பவன் இசையறிவும் கற்பனை வளமும் பெறுகிறான். தமிழ் இலக்கியங்கள் பல்துறை சார்ந்த அறிவைக் கற்பவனுக்கு வழங்குகின்றன.

9.பொதுவாகத் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறையாகப் பயில்பவன், பகுத்தறிவுக் கூர்மை அடைகிறான். பண்பாடு கொண்டவனாகிறான். இசை, கணிதம், அறிவியல், மருத்துவம், ஆன்மிகம் என மனித வாழ்க்கைக்குத் தேவையான எண்ணற்ற துறைகளில் அடிப்படை அறிவு பெறுகிறான்.

10.தமிழ் இனியது; மெல்லியது. அதுபோலவே தமிழை முறையாகப் பயின்றோர் இனிமையான, மென்மையான, மேன்மையான இயல்புகள் கொண்ட பண்பாளர்களாக விளங்குபவர் என்பது கண்ணெதிரே எண்ணற்ற சான்றுகள் கொண்ட உண்மையன்றோ! இப்படி மொழியால் ஏற்படக்கூடிய பயன்கள் அனைத்தையும் செம்மையாகவும் சிறப்பாகவும் வழங்கி வருவதன்றோ; தமிழ், மொழி, மொழியால் விளையக்கூடிய பயன்களைத்தான் விளைக்கும்.

அதை விடுத்து, அது சோறுபோடுமா என்று குருட்டு வினாத் தொடுப்பவர்களை என்னவென்று சொல்வது? கண் பார்த்தற்குரியது. செவி கேட்டற்குரியது. கண்ணால் கேட்க முடியுமா என்று வினவுவதும் தமிழ் சோறு போடுமா என்று கேட்பதும் ஒரே தன்மையிலான பேதைமையன்றோ!

>>3-ஆம் பகுதி விரைவில் வரும்...

Blog Widget by LinkWithin