Wednesday, July 29, 2009

தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 5)

இந்தத் தொடரில், நமது சங்க இலக்கியங்கள் ‘பாலியல்’ விடயங்களை எங்ஙனம் அணுகின என்பதைப் பற்றி நுணுகிப் பார்க்கவிருக்கிறோம். கடல் நீரைக் குவளையில் அள்ளியக் கதையாக, மிக விரிந்து பரந்திருக்கும் இவ்விடயத்தைச் சுருக்கமாகச் சொல்வது சிக்கல்தான். முடிந்தவரை முயன்றுள்ளேன்; தேவையென்றால் தொடருவேன்.


“இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்
அவையில் காலம் இன்மை யான”
என்று பாடுகிறது தொல்காப்பியம். அதாவது, காதலை உயிராகக் கொண்ட அகமும், அகத்தின் தொடர்பில் புறமும் இல்லாத காலமோ அல்லது இடமோ எங்கேயும் கிடையாது என்பதே அதன் பொருள். இதனால்தான் நம் முன்னோர்கள் வாழ்வியலை அகம் – புறம் என இரண்டாகக் கண்டனர்.

இதனை நன்கு ஆராய்ந்தால், உலக வாழ்க்கைக்குக் காதலே அடிப்படையாக இருக்கிறது என அறியலாம். மாந்த வாழ்வில் காதலுணர்வு மிகவும் நுட்பமும் ஆழமும் நிறைந்தது. வாழ்க்கையிலும் சரி, இலக்கியத்திலும் சரி காதலுணர்வை (நவின மொழியில் பாலுணர்வை) மிகவும் பொறுப்போடு கையாளவேண்டும். கொஞ்சமே வழுவினாலும் சமூகத்தில் பேரிழப்பு ஏற்படலாம்.

பாலுணர்வின் இயக்கத்திற்கு உடலே கருவியாக இருக்கிறது. உணர்வுகளை உடலுக்கும் உறுப்புகளுக்கும் அடிமையாக்கிவிட்டால் நுட்பம் நிறைந்த உணர்வுகள் மதிப்பிழந்து போகும். கூடவே, உடலும் உறுப்புகளும் கெட்டுப்போகும்.


இந்த உண்மையை ஆழ்ந்து உணர்ந்ததன் விளைவாகத்தான், சங்க இலக்கியங்கள் பாலியலை மிக நேர்த்தியோடும் – நயத்தோடும் கையாண்டுள்ளன. இந்த அடிப்படை உண்மையை அறியாமல்போனதன் காரணத்தால் பிற்கால இலக்கியங்கள் எல்லாமே செல்வாக்கில்லாமல் போயின என்பது வரலாறு. (இதனை விளக்கினால் நீண்டுபோகும்)

உடல் - உறுப்பு இவற்றைவிட, உணர்வுகளுக்கு முதன்மை கொடுப்பதால் உடலும் உறுப்பும் மறைந்து உணர்வுகளே உடலமாக உருவெடுத்து நிற்கும் என்பது நமது முன்னோர்கள் மரபிவழி கண்டது. இதனையே, சங்க இலக்கியம் முழுவதிலும் காணமுடிகிறது.

இதனை உணர்ந்திருந்த பாரதியார், “செவ்விது,செவ்விது, செவ்விது காதல்” என்றார். இந்தக் காதலால் என்னவாகும் தெரியுமா?

“காதலினால் உயிர் தோன்றும்; - இங்கு
காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவெய்தும் – இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்” என்றும்,

காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலைதீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்
கானம் உண்டாம்; சிற்பம்முதல் கலைகளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே” என்றும் மனிதர்களுக்கு வேண்டுகை விடுக்கிறார் மாபாவலன் பாரதி.

இப்படி பாரதி பாடியதை, அன்றே முன்னுணர்ந்து நமது சங்கப் புலவர்கள் பாடியிருப்பது நம்மை வியக்கச் செய்கிறது. உள்ளங்களால் ஏற்படும் ஆழமான உறவை சங்கப்புலவர்கள் உள்ளப் புணர்ச்சி என்றனர். உள்ளப்புணர்ச்சி நன்றாக அமைந்தால்தான் உடல் புணர்ச்சியும் (உடலுறவு) முழு இன்பத்தைக் கொடுக்கும் என்ற தெளிவான எண்ணக்கருவைச் சங்கப்பாடல்கள் வலியுறுத்துகின்றன.

இப்படியாக, சங்கப் புலவர்கள் உள்ளத்து உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்தார்களே அன்றி, வெறுமனே பெண்களின் உடல் வருணனையோ அல்லது பாலுறுப்பு வருணனையோ மட்டும் அல்ல. மேலும், இவ்வுணர்வுகளைச் சொல்லுவதற்கு இயற்கையியல் – இன்பியல் (Naturalism & Romanticism) ஆகிய இரண்டுப் பண்புகளைப் பாங்காகப் பயன்படுத்தியுள்ளனர். சங்கப் புலவர்கள் உயர்ந்ததையே எண்ணி, உயர்ந்த நெறிகளையே பின்பற்றி வாழ்ந்தவர்கள் என்பதால் அவர்களுடைய பாடல்களும் மிக உயர்தரத்திலேயே காணப்படுகின்றன.

இதனையே மு.வ தமது குறுந்தொகைச் செல்வம் நூலில் இப்படிக் கூறுகிறார். “இந்த ஓவியங்கள்(சங்கப் பாடல்கள்) காதலரின் மனநிலையை விளக்குவன என்பது சிறப்பாகக் கருதத்தக்கதாகும். இவற்றைத் தீட்டிய கலைஞர்கள், காதலரின் உடல் வனப்பை எடுத்துக் காட்டுவதற்காகத் தம் வண்ணத்தைப் பெரிதும் செலவிடவில்லை; முயற்சியையும் செலவிடவில்லை. ஓவிய அமைப்பிற்கு எந்த அளவுக்கு அவர்களின் தோற்றம் இன்றியமையாததோ, அந்த அளவிற்கே உடலைக் குறித்துள்ளனர். ஓவியத்தைக் காண்பவரின் உள்ளம், காதலர்களின் உடல்வனப்பால் கவரப்படாதவாறு அவர்களின் கலைமுயற்சி அமைந்துள்ளது”

இந்தக் கண்ணோட்டத்தில்தான், சங்கப் பாடல்களைப் பார்க்க வேண்டுமே தவிர, குருடர்கள் ஒன்றுகூடி யானையின் ஒவ்வொரு பாகத்தைத் தொட்டுப் பார்த்தது போன்று அவரவரும் தப்பும் தவறுமாக உணர்ந்ததை தண்டோரா போட்டுச் சொல்லக்கூடாது.

பெண்ணுடல் இயற்கையாகவே முலை, அல்குல், தாய்வயிறு (கருப்பை) எனத் தனித்த அடையாளங்களைக் கொண்டது. பெண்ணுறுப்புப் பெயர்களைச் சங்கப்பாடல்களில் மட்டுமல்ல திருக்குறள் போன்ற அறநூல்களிலும் காணமுடிகிறது. சங்க காலத்தில் ஔவையார், வெள்ளி வீதியார் உள்ளிட்ட நாற்பத்தொரு பெண்பாற் புலவர்கள் பெண்ணிய நிலை, மனவுணர்வு, காதலுணர்வு பற்றி பாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அன்றைய புலவர்கள் பெண்ணுறுப்புகளைச் சுட்டும்போது அதில் அருவருப்புத் தன்மையுமில்லை; அது பாலுணர்ச்சியைத் தூண்டியதுமில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய சிறப்பான உடலெழில் கூறுகள் அன்றே இலக்கணமாகச் சொல்லப்பட்டுள்ளன.

ஒரு பெண்ணைப் பார்த்து “உமக்கு திண்ணிய தோளும் பரந்த மார்பும் வீரமும் கொடைப்பண்பும் உடைய குலமகன் கணவனாக வாய்ப்பானாக” என வாழ்த்துவது பழந்தமிழர் மரபாகும்.

அதுபோலவே, இல்லறத்தில் வாழும் ஆணைப் பார்த்து, “நீ அறம் அல்லாதவற்றை ஒதுக்கும் கற்புடையவளாகவும், அறம் புகழ்ந்த வலைசூடிய சிறிய நெற்றியும், அகன்ற அல்குலும், குறைந்த பேச்சும், அடர்ந்த கூந்தலும் உடைய குலமகளைத் துணைவியாகக் கொண்டவன்” என்று பாராட்டுவதும் மரபு வழக்கேயாகும்.

*(அல்குல் என்பது பெண்ணின் பாலுறுப்பை மட்டும் குறிப்பதன்று. இடைக்குக் கீழும், கீழ்த்தொடைக்கு மேலுமுள்ள அகன்ற பகுதி முழுவதையும் சுட்டும். அரை என்பதும் இதுவே. இன்றைய வழக்கில் இடுப்பு என்கிறோம். பெண்ணின் தாய்மைக்காக இயற்கை தந்த கருணை கொடை இப்பகுதி)

இன்றைய புத்திலக்கியவாணர்களில் எத்தனை பேர் சங்கப் புலவர்கள் கையாண்ட உத்திகளை – நுட்பங்களை அறிந்து எழுதுகிறார்கள் என்பது ஐயத்திற்குரியதே. நிலைமை இப்படியிருக்க, தங்களின் நவின படைப்புகளில் இடம்பெறும் பாலியல் வழுக்களுக்கு நியாயவாதம் கற்பிக்கும் பொருட்டு சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்பதை உண்மையாளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இதுவரை சொல்லியவையிலிருந்து, தொன்ம இலக்கியம் அனைத்தும் தமிழ் மரபியலின் ஒட்டுமொத்தக் கட்டுமானங்கள் என பொருள்படாது. நன்றும் தீதும் எல்லாவிடத்திலும் இருப்பது போலவே தமிழ் இலக்கியத்திலும் பண்பாட்டுக் கேடுகள் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றை அறிஞர் உலகம் எடுத்துக்காட்டி கண்டித்தும் இருக்கின்றது என்ற உண்மையை இன்றைய படைப்பாளிகள் அறிந்துகொள்ள வேண்டும்.

நல்லதை உவகையுடன் ஏற்கவும் அல்லதைத் துணிவுடன் மறுக்கவும் கூடிய நடுநிலைச் சிந்தனை தமிழறிஞர்களுக்கு நிரம்பவே உண்டு. அதற்கு சான்றுதான், அறிஞர் அண்ணாவின் ‘கம்பரசம்’ போன்ற நூல்கள்.

ஆகவே, இன்றைய நவின படைப்பாளிகள் பாலியல் தொடர்பான தங்களின் கொச்சைத் தனத்திற்கும் – பச்சைத் தனத்திற்கும் நியாயம் கற்பிக்க வேண்டி, சங்க இலக்கியங்களைத் தூற்றித் திரிவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். எந்தவிதத்திலும் தனித்தன்மை(சுயம்) இல்லாமல் தள்ளாடிகொண்டிருக்கும் நவின படைப்புகளுக்கு முட்டுக்கொடுக்கவும் அவற்றிலுள்ள பாலியல் பண்பழிப்புகளை நியாயப்படுத்தவும் வேண்டி சங்க இலக்கியங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் ‘பக்கா’ பத்தாம்பசளித்தனத்தைக் கைவிட வேண்டும்.

அகத்திணைப் பாடல்களோடு தங்களின் கீழ்த்தரமான படைப்புகளை ஒப்பிடுவது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, சொந்த முகத்திலே கரிபூசிக் கொள்ளுவதுமாகும்.

இவைவெல்லாம் நவின படைப்பாளிகளுக்கு நாம் கூறுகின்ற அறிவுரைகள் அன்று. மாறாக, நவின படைப்பாளிகள் மரபியலைப் புரிந்துகொள்வதற்கு நாம் எழுதும் முன்னுரைகள் மட்டுமே.

முன்னுரைகளைப் படிப்பதும் படிக்காததும் அவரவரின் தனியுரிமை. ஆனால், தமிழ் மரபியலை மதிப்பதும் மனதாரப் போற்றுவதும் ஒரு தமிழனுக்கும் ஒரு தமிழச்சிக்கும் பிறந்த தமிழர்க்குப் பிறப்புரிமை!

(முற்றும்)

சான்றாதாரம்:-

1.சங்க இலக்கிய ஒப்பீடு (முனைவர் தமிழண்ணல்)

2.சங்க இலக்கியம் (முனைவர் இரா.தண்டாயுதம்)

3.குறுந்தொகைச் செல்வம் (முனைவர் மு.வரதராசன்)

4.உங்கள் குரல் - சூன் 2004 (கவிஞர் சீனி நைனா முகம்மது)

தொடர்பான இடுகைகள்:-

1. தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 1)

2.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 2)

3.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 3)

4.தமிழ் மரபியலும் அன்னியப் பின்நவினமும் (பாகம் 4)

5. புத்திலக்கியவாணர்களுக்குத் தமிழும் தெரியாது தமிழுணர்வும் கிடையாது

14 comments:

Anonymous said...

வணக்கம் ஐயா.

//எந்தவிதத்திலும் தனித்தன்மை(சுயம்) இல்லாமல் தள்ளாடிகொண்டிருக்கும் நவின படைப்புகளுக்கு முட்டுக்கொடுக்க சங்க இலக்கியங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் ‘பக்கா’ பத்தாம்பசளித்தனத்தை கைவிட வேண்டும்//

கே. பாலமுருகனுக்கு இது புரிந்தால் சரி.

இற்றைய நவின எழுத்தாளர்கள் பாலியலுக்கும் காதல்புணர்வுக்கும் வேறுபாடு தெரியாமல் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வேறுபாட்டை அறிந்து எழுதினால் நல்ல படைப்புகளை அளிக்க முடியும்.

கண்ணன்.
பினாங்கு

சுப.நற்குணன்,மலேசியா. said...

>கண்ணன், பினாங்கு

//இற்றைய நவின எழுத்தாளர்கள் பாலியலுக்கும் காதல்புணர்வுக்கும் வேறுபாடு தெரியாமல் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.//

புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டக் கதையாக, வெள்ளையனைப் பார்த்து நம் கறுப்புத்துரைகளும் பாலியலை மையமிட்டு படைப்புகளை எழுதுகிறார்கள்.

மேல்நாட்டில் பல காலமாக கதைகள், படங்கள், இதழ்கள், ஒலி ஒளி, இணையம் இன்னும் எத்தனை எத்தனையோ வழிகளில் பாலியலை வணிகப் பொருளாக்கி விற்று வயிறு வளர்க்கிறார்கள். அவர்கள் நாடுகளில் பாலியல் தெளிவுகள் எப்படி உள்ளன? பாலியல் வன்கொடுமைகள் குறைந்துவிட்டனவா?

அவன் வாழ்வு இன்று எங்கும் பாலியல் - எதிலும் பாலியல் என்று போய்க்கொண்டிருக்கிறதே இதுதான் நாளைய உலகின் நல்வாழ்வுக்குரிய 'சித்தாந்தமா'?

சிந்திப்போம்! சீர்பெறுவோம்!

Anonymous said...

வணக்கம்

தாங்கள் வழங்கி வரும் பதில்கள் அரும. இன்றைய புத்திலக்கியவாணர்கள் படித்டுப் பயன் பெற வேண்டிய தகவல்

அன்புடன்
மனோகரன்
சிறம்பான்

Anonymous said...

கட்டுரை நன்று.
தொடர்ந்து எழுதவும்
அப்பொழுதாவது நவீன படைப்பாளிகளுக்கு புரியட்டும்.

மணி
கூலிம்

Anonymous said...

வணக்கம் ஐயா,

எழுதத் தொடங்குவதையும், படைக்க முனைவதையும் நாம் வரவேற்கிற்றோம். இருப்பினும், மரபுவழி இலக்கியப் பயிற்சி ஒரு தேர்ந்த படைப்பாளனுக்கு அவசியம் என்பதை நவின எழுத்தாளர்கள் உணர்தல் அவசியம்.

முனைவர் இரா.குணசீலன் said...

நண்பரே தங்கள் மரபியல் தொடர்பான கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன்..
மிகவும் நன்றாகவுள்ளது..
தங்கள் கருத்துக்கள் யாவும் உண்மையானவை..
ஏற்கத்தக்கவை..
தமிழர் மரபுகளைப் புறந்தள்ளும் யாருக்கும் தன்னைத் தமிழன் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் தகுதி இல்லை.
தங்கள் இடுகைக்கு மிக நீண்டதொரு கருத்துரையை எனது வலைப்பக்கத்தில் இடுகையாக இட்டுள்ளேன்..
அதன் முகவரி..
http://gunathamizh.blogspot.com/2009/07/blog-post_30.html

Anonymous said...

//சங்கப் புலவர்கள் உயர்ந்ததையே எண்ணி, உயர்ந்த நெறிகளையே பின்பற்றி வாழ்ந்தவர்கள் என்பதால் அவர்களுடைய பாடல்களும் மிக உயர்தரத்திலேயே காணப்படுகின்றன//

ஐயா, உயர்ந்த நெறிகளுடையவர்களே உயர்தர இலக்கியங்களைப் படைக்க இயலும். அவ்வாறு நற்சிந்தனை, தூரநோக்கு சிந்தனை, பரந்த பார்வை, முன்னோர் காட்டிய அறநெறி, குமுகாய வாழ்வியல் ஒழுக்கம் பற்றிய அறிவு, ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இக்காலப் படைப்பாளன் இலக்கியம் படைக்க வேண்டும் என்பது என் கருத்து.

இதன் தொடர்பான இடுக்கை ஒன்றை கருத்துமேடை வலைபதிவில் காணநேர்ந்தது.

இணைப்பு - பாட்டனுக்குத் தப்பிப் பிறந்த கே.பாலமுருகன் http://karutthumedai.blogspot.com/2009/07/blog-post_28.html

வாழ்த்துக்கள். நன்றி.

மு. மதிவாணன்
கூலிம்.

VIKNESHWARAN ADAKKALAM said...

//மரபுவழி இலக்கியப் பயிற்சி ஒரு தேர்ந்த படைப்பாளனுக்கு அவசியம் என்பதை நவின எழுத்தாளர்கள் உணர்தல் அவசியம்.//

உணர வேண்டாம், யாரும் யாரையும் எழுத்தாளன் என ஏற்றுக்கொள்ள வேண்டாம் யார் அழுதார்கள்?

Anonymous said...

இந்தத் தொடரை தொடர்ந்து படித்தேன். நல்ல செய்திகளை தொகுப்பாக வழ்ங்கி இருக்கும் உங்களை பாராட்ட வேண்டும்.

என் கருத்து என்னவென்றால், ஒரு ஊரில் ஒரு கோடியில் கோயில் இருக்கும். மறு கோடியில் விபச்சார விடுதியும் இருக்கும். கோயிலில் ஒரு கூட்டம் இருப்பது மாதிரி விபச்சார பகுதியிலும் ஒரு கூட்டம் இருக்கும். கோயிலுக்கு பேவோருகு ஒரு நோக்கம் இருக்கும். சிவப்பு விளக்குப் பகுதிக்குப் போறவனுக்கும் ஒரு நோக்கம் இருக்கும்.

ஆனால் ஒரே வித்தியாசம் தான். கோயிலுகுப் போகிறவர் மனத் தூய்மையோடு போய், தைரியமாக கைவீசி நடந்து எல்லாரையும் பார்த்து சிரித்து பேசி மகிழ்ந்து வருவார்.

ஆனால், சிவப்பு விளக்கு விடுதிக்குப் போகிறவன் ஒளிந்து மறைந்து பயந்து பயந்து போய் யார் கண்ணிலிம் படாமல் திரும்புவான்.

அப்படித்தான் இந்த நவின கதை எழுத்தாளர்களும். திருட்டுத் தனமாக கதை எழுதி ரகசியமாக புத்தகம் போட்டு கமுக்கமாக விற்று காசு பண்ணும் கூலிப் பட்டாளங்கள். கேவலமான விசயங்களை எழுதி காசு பண்ணும் இவர்களுக்கும் விபச்சாரிக்கும் வித்தியாசம் என்ன இருக்கிறது.

அவளும் இப்படித்தான். உடம்பை விற்றுவிட்டு குடும்பத்தைக் காப்பாத்துகிறேன் என்று சால்ஜாப்பு சொல்லி திரிவாள்கள்.

இப்படிப்பட்ட இவர்களை கண்டுகொள்ளாமல் விடுங்கள். நாயை குளிப்பாட்ட நினைக்க வேண்டாம். அது மறுபடி வாலை சுருட்டிக்கிட்டு 'அதை' தின்ன தானே அலையும்.

மகேஸ்வரன், பேரா.
31.7.2009

Unknown said...

//உணர வேண்டாம், யாரும் யாரையும் எழுத்தாளன் என ஏற்றுக்கொள்ள வேண்டாம் யார் அழுதார்கள்?//

என்ன சொல்ல வருகிறீர்கள்,விக்கி?
கண்டு கொள்ள வேண்டாம் என்பதா உங்கள் வாதம்? உலகச் சிக்கல்கள் எத்தனையோ கிடக்க இதில் மட்டும் ஏன் இத்தனை சிரத்தை என்கிறீரா? இலக்கியம் என்பது வரலாற்றுப் பதிவுகள். அதில் தவறுகள் இருப்பின் தவிர்க்க வேண்டும்;தடுக்கப்படவும் வேண்டும்.
தீயடஹி விடுத்து நல்லதை மட்டும் நாடும் குணம், பக்குவம் உலகில் எத்தனை பேருக்கு உண்டு? அறியாமை கலைவது நம் கடமை இல்லையா?

சுப.நற்குணன்,மலேசியா. said...

>முனைவர் இரா.குணசீலன் ஐயா,

தங்களின் மறுமொழி கண்டதில் மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றி மொழிகின்றேன்.

//தங்கள் இடுகைக்கு மிக நீண்டதொரு கருத்துரையை எனது வலைப்பக்கத்தில் இடுகையாக இட்டுள்ளேன்..//

படித்தேன் ஐயா. நல்ல தெளிவை வழங்கி இருக்கிறீர்கள். இப்படியான விளக்கங்கள் எங்கள் நாட்டு நவின எழுத்தாளர்களுக்கு நிறைய தேவைபடுகிறது.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>மு.மதிவாணன், கூலிம்

தொடர்ந்து வருவதற்கு நன்றி. கருத்து மேடை வலைப்பதிவை அறியச் செய்தமைக்கு நன்றி.

உங்கள் செறிவான கருத்துகளுடன் தொடர்ந்து வருக!

*****
>விக்கினேசுவரன்,

வருகைக்கு நன்றி.

*****
>மகேசுவரன், பேரா

உங்களை இங்குப் புதிதாகக் காண்கிறேன். கோவில் - சிவப்பு விளக்கு ஒப்பீடு அழகு.

தவறு செய்யும் எல்லாரும் ஒரு நியாயம் சொல்லிக்கொள்வது உலக இயல்புதான். கொலைகாரன்கூட கொலைக்குப் பின்னால் ஒரு காரணம் - நியாயம் கற்பித்துக்கொள்கிறான்.

உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே...!

VIKNESHWARAN ADAKKALAM said...

அன்பின் சுரேஷ் குமார்,

தமிழை தூக்கி நிறுத்தி குடை பிடிக்க போராடி கொண்டிருக்கும் இடத்தில் அடியேன் என்ன சொல்ல.

உலகத்தில் இருக்கும் கல் எல்லாம் உடைந்து மண்ணாகிவிடுமோ என்றும், மண்ணில் மரம் வளர்ந்து மண் எல்லாம் இல்லாமல் போய்விடுமோ என்றும் நீங்கள் பயப்பட்டதுண்டா?

Unknown said...

//தமிழை தூக்கி நிறுத்தி குடை பிடிக்க போராடி கொண்டிருக்கும் இடத்தில் அடியேன் என்ன சொல்ல//

என்ன செய்ய விக்கி?
என் அப்பனும் ஆத்தாளும் தமிழர்கள். அவர் கொடியைத்தான் நான் தூக்கணும். நீங்கள் யார் கொடியைத் தூக்க உத்தேசம்?

Blog Widget by LinkWithin