Wednesday, July 08, 2009

கணிதமும் அறிவியலும் மீண்டும் தாய்மொழிக்கே திரும்புகிறது

அறிவியல் கணித பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் கொள்கை அதன் நோக்கங்களை அடையத் தவறி விட்டது என்பதை அரசாங்கம் வெளிப்படையாக இன்று(7-7-2009) ஒப்புக் கொண்டுள்ளது. ஆகவே அந்தக் கொள்கை கைவிடப்படவிருக்கிறது.

2012ஆம் ஆண்டு தொடக்கம் தேசியப் பள்ளிகளில் அவ்விரு பாடங்களும் மலாய்மொழியிலும் தமிழ் சீனப்பள்ளிகளில் தாய்மொழிகளிலும் கற்பிக்கப்படும் என்று துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகிதின் யாசின் இன்று அறிவித்தார்.

2003ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், பல்வேறு தரப்பினரின் பலத்த எதிர்ப்புக்கு இடையில் அந்தக் கொள்கையை அறிமுகம் செய்தார்.

மலாய் மொழியை மீண்டும் பயன்படுத்துவதற்கும் பள்ளிக்கூடத்தில் எல்லா நிலைகளிலும் ஆங்கில மொழி கற்பிக்கப்படுவதையும் வலுப்படுத்தவும் கல்வி அமைச்சு தெரிவித்த கருத்துகளை அமைச்சரவை இன்று ஏற்றுக் கொண்டதாக அவர் சொன்னார்.

அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் கொள்கை 2003 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் அது குறித்து கல்வி அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இப்புதிய எடுக்கப்பட்டிருப்பதாக முகிதின் குறிப்பிட்டார்.

இந்த முடிவினால் என்ன நன்மை?

2003 தொடங்கி இந்தத் திட்டம் பல்வேறு குறைகூறல்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது. இப்போது எடுக்கப்பட்ட இந்த முடிவு பெரும்பான்மை மக்களின் மனதில் பாலை வார்த்துள்ளது எனலாம்.
கணிதமும் அறிவியலும் மீண்டும் தாய்மொழிக்குத் திரும்புவதால் தமிழ்க்கல்விக்கு சில நன்மைகள் விளையக்கூடும்.

1.தமிழ்மொழிக் கல்விக்கு உரிய உரிமை மீண்டுள்ளது.
2.தமிழ்மொழியும் கணிதம் அறிவியலுக்கு உரிய அறிவுமொழியாக விளங்கும்.
3.இவ்விரு பாடங்களுக்கான பாடநூல்கள் தமிழ்மொழியில் வெளிவரும்.
4.கணிதம், அறிவியலுக்குரிய கலைச்சொற்கள் மீட்டெடுக்கப்படும்.
5.தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அறிவும் அடைவுநிலையும் மேம்படும்.
6.தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தாய்மொழி ஆளுமை பலப்படும்.
7.இவ்விரு பாடங்களுக்கான தமிழ் ஆசிரியர்களின் தேவை பெருகும்.

ஆங்கிலத்தில் கணிதமும் அறிவியலும் கற்பிக்கும் திட்டம் படுதோல்வி அடைந்துள்ளதை ஒப்புக்கொண்ட அரசாங்கம், அதனை மாற்றியமைக்க இனியும் 2012வரையில் காத்திருக்கத்தான் வேண்டுமா?

முந்தையக் கட்டுரைகள்:-

1.கணிதமும் அறிவியலும் தமிழிலா? ஆங்கில தமிழிலா?

2.அறிவியல் கணிதம்:- ஏழு தெரிவுகளில் எது முடிவு?

5 comments:

Anonymous said...

அருமையான செய்தி..
தாய்மொழி வழி கற்பதே சிறந்தது.
இதன் மூலம் மாணவர்கள் பயனடைவர் என்பதை விட ,சிறப்புறுவர் என்றால் பொருந்தும்.
மேலும் மொழி உணர்வாளர்களை வெறியர் என்றுரைத்த வாய்களுக்கும் ........ ( முடிக்க விருப்பமில்லை )
தமிழன் முன்னோக்கி சிந்திப்பவன் என்றாவது உணரட்டும்...!

இனியன்,
பினாங்கு.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

இனிமையான செய்தி என்பதைவிட அதை ஒப்புக்கொண்டு மீளவும் கொணர்ந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது.

Nathanjagk said...

//கணிதம், அறிவியலுக்குரிய கலைச்சொற்கள் மீட்டெடுக்கப்படும்//
இதுதான் மிக சூக்குமமான இடம். ஒ​ரே (துறைரீதியான) வார்த்தைக்கு பல பதங்கள் தாய்மொழியில் வர வாய்ப்புண்டு. உலகத்தரத்திலான ​பொதுமையான தமிழ் (கலைச்​சொற்கள்) அகராதி நிறுவப்பட​வேண்டும்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>இனியன்,

//தமிழன் முன்னோக்கி சிந்திப்பவன் என்றாவது உணரட்டும்...!//

தமிழனின் தன்னம்பிக்கையை ஊக்கும் வரிகள். நன்றி!

*****
>மதுவதனன்,

தங்கள் வருகையில் மகிழ்கிறேன். தொடர்ந்து வருக!

*****
>ஜெகநாதன்,

//ஒரே (துறைரீதியான) வார்த்தைக்கு பல பதங்கள் தாய்மொழியில் வர வாய்ப்புண்டு.//

இதனை மொழியின் வளமாகத்தான் பார்க்க வேண்டுமே அன்றி, சிதைவாக அல்ல. பல சொற்கள் வந்தாலும் பொருத்தமான ஒன்று கண்டிப்பாக நிலைபெறும்.

//உலகத்தரத்திலான ​பொதுமையான தமிழ் (கலைச்​சொற்கள்) அகராதி நிறுவப்பட​வேண்டும்.//

வந்துள்ளதே! தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 'அருங்கலைச்சொல்அகரமுதலி' ஆய்வறிஞர் அருளியாரை முதன்மைப் பதிப்பாசிரியராகக் கொண்டு உலகத் தரத்திலான அகராதி ஓரிலக்கச் சொற்களுடன் - ஆங்கிலத்திலும் தமிழிலும் வந்துள்ளது.

சொல் இருக்கிறதா? அகராதி இருக்கிறதா? அது இருக்கிறதா? இது இருக்கிறதா? என்பவை முக்கியமல்ல!

"தமிழைத் தமிழாகப் பயன்படுத்த வேண்டும் என்ற மனம் தமிழருக்கு இருக்கிறதா?" இதுவே நம் முன்னால் நிற்கும் நூற்றாண்டுக் கேள்வி!!!

வருகைக்கும் மறுமொழி தருகைக்கும் நன்றி.

Nathanjagk said...

//பல சொற்கள் வந்தாலும் பொருத்தமான ஒன்று கண்டிப்பாக நிலைபெறும்.//
தொழில் சார்ந்த சொல்லாடல்களில் பல​சொற்கள் திகழ்வது அபாயமே. ஒற்றையெழுத்து மாறுவதால் உயிரே ​போகும் ஆபத்துள்ள துறைகளில் பொதுமையான ​சொல்அகராதி நிறுவப்பட வேண்டியது முதன்மையானது. தமிழ் யூனிக்கோட் ​கொண்டுவர எவ்வளவு காலமாயிற்று? இன்னும் இறுதி வடிவம் கிடைக்கப் பெறாமல் தானே இருக்கிறது??
நான் ​கேட்பது உலகத்தரத்திலான ​பொதுமையான அகராதி. அருளியாரின் அகராதி அப்படிப்பட்டதென்றால், நான் இரு ​கேள்விகள் ​கேட்க விரும்புகிறேன்:
1. அந்த அகராதி எப்படி புத்தாக்கம் ​செய்யப்படுகிறது?
2. அந்த அகராதி எப்படி மற்ற ​மொழிகளுடன் ​தொடர்பு ​கொள்கிறது?
- உதாரணத்துக்கு, நீங்கள் ​சொன்ன அகராதி தமிழ் மட்டும் ஆங்கிலத்தில் மட்டும் இருப்பதாக அறிகிறேன். ஏன் இந்த உலகத்தரத்திலான அகராதி ஜப்பான், ஜெர்மன், சிங்களம், மலாய் இன்னும் பிற உலக​மொழிகளில் மொழி​பெயர்க்கப்படவில்லை? அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறதா? அப்படியென்றால் அது எவ்வளவு நாளில் முற்றுப்பெறும்?

//சொல் இருக்கிறதா? அகராதி இருக்கிறதா? அது இருக்கிறதா? இது இருக்கிறதா? என்பவை முக்கியமல்ல!
//

தமிழன் காட்டுவாசி அல்ல என்பதே என் கருத்து. ஒரு மொழி எப்படி அதன் வளத்தை சீர்படுத்திக் கொள்கிறது? மொழி எப்படி பரவுகிறது? மொழி எப்படி திரிகிறது? ​மொழி ​எப்படி தன்னை உறுதிப்படுத்திக் ​கொள்கிறது? கட்டுறுதியான இலக்கணம் எப்படி ​மொழிக்கு முக்கியமோ அது ​போலத்தான் அகராதியும் அதன் ​பொதுமையும்.
//"தமிழைத் தமிழாகப் பயன்படுத்த வேண்டும் என்ற மனம் தமிழருக்கு இருக்கிறதா?"//
என்ன ​சொல்ல வருகிறீர்கள் அய்யா?
தமிழாகப் பயன்படுத்தாமல் ​வேறு என்னவிதமாக பயன்படுத்துகிறார்கள்? அப்படி பயன்படுத்துகிறவர்கள் யார்?
இதற்கான அளவுகோல்களையும் ​சொல்லிவிடுங்கள்.. உங்களின் நூற்றாண்டுக் கேள்விக்கு நானும் விடை தேட முயல்வேன்.

Blog Widget by LinkWithin