
- ஆசிரியர் இல்லாமை
- பள்ளியில் படிக்கும் வாய்ப்பு இல்லாமை
- கால அட்டவணைக்குள் தமிழ் இலக்கியம் படிக்க முடியாமை
- தேர்வு அணுகுமுறைகள் - வழிகாட்டல்கள் இல்லாமை
- துணை நூல்கள் - மேற்கோள் நூல்கள் இல்லாமை
முதலான பல்வேறு சிக்கல்களுக்கு இடையிலும் ஆண்டுதோறும் மூவாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் எசுபிஎம் தமிழ் இலக்கியத் தேர்வை எழுதிவருகின்றனர்.
உண்மையிலேயே, இந்த மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளைச் சொல்லியே ஆகவேண்டும். காரணம், எந்தச் சிக்கல் இருந்தாலும்.. எந்தச் சூழல் வந்தாலும்.. தமிழ் இலக்கியத்தைப் படித்தே ஆகவேண்டும் என்ற தீராத வேட்கையும் உறுதியும் தமிழ்ப் பற்றுணர்வும் கொண்டவர்கள் இம்மாணவர்கள் என்றால் மிகையன்று.
அதே வேளையில், இத்தகைய உணர்வுள்ள மாணவர்களை உருவாக்கிய இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த தமிழ் உணர்வுமிக்க நல்லாசிரியர்களும் கைக்கூப்பி வணங்கத் தக்கவர்களே.
இந்த ஆசிரியர் குழாம்தான் இந்த நாட்டில் தமிழ் இலக்கியத்திற்குப் புத்துயிர் ஊட்டி எழுச்சி பெறச் செய்தவர்கள். இவர்களின் தன்னார்வ முயற்சியாலும் தொடர்ச்சியான உழைப்பாலும்தான் இன்றைய நிலையில் ஏராளமான மாணவர்கள் தமிழ் இலக்கியப் பாடத்தை ஆர்வமுடன் படித்து வருகின்றனர்.
இதற்காக, மேற்சொன்ன நல்லாசிரியர் பெருமக்களும் தமிழ்க்கல்வி அதிகாரிகள் சிலரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த முயற்சிகள் என்றென்றும் போற்றத்தக்கன; நன்றியோடு நினைவுக்கூரத்தக்கன.
இவர்களின் உழைப்புகள் ஒருபுறம் இருக்க, இன்றைய புதிய வரவான வலைப்பதிவு ஊடகத்தின் வழியாக நமது மாணவர்களுக்கு உதவும் நோக்கத்தோடும், தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடும் உருவாகி இருக்கிறது 'எசு.பி.எம்.தமிழ் இலக்கியம்' என்னும் புதிய வலைப்பதிவு.

- தமிழ் இலக்கியப் பாடத்தின் நோக்கங்கள்
- தமிழ் இலக்கியத் தேர்வுத் தாள் அமைப்பு
- தமிழ் இலக்கிய வினா அமைப்புமுறை
- தேர்வு அணுகுமுறைகள் - பதில் எழுதும் முறைகள்
- மாதிரி வினாக்கள் - விடைகள்
முதலான பல்வேறு விவரங்கள் - விளக்கங்கள் - வழிகாட்டல்கள் இந்த வலைப்பதிவில் இடம்பெற்றுள்ளன.
இதன்வழியாக, நமது எசுபிஎம் மாணவர்கள் பெரும் பயனை அடைவார்கள் என்பது திண்ணம். எனவே, நமது மாணவச் செல்வங்கள் இந்த வலைப்பதிவை நன்முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதோடு, இந்த வலைப்பதிவு பற்றி நாடுமுழுவதும் உள்ள மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். ஆகவே, இந்த இடுகையை வாசிக்கும் அன்பர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வட்டாரத்தில் - ஊர்களில் உள்ள இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் இந்த நற்செய்தியைச் சேர்ப்பிக்க வேண்டும்.
அன்பார்ந்த வலைப்பதிவு அன்பர்கள் இந்த நற்பணிக்குத் துணைநின்று 'எசு.பி.எம் தமிழ் இலக்கியம்' வலைப்பதிவுக்குத் தங்கள் வலைப்பதிவில் இணைப்பு தர வேண்டுகிறேன்.
4 comments:
உத்தரவு வேந்தே...
நண்பர் சுப.நற்குணன் அவர்களே,
தங்களின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. உங்கள் பணி தொடரட்டும்.
மனத்தில் ஒரு சின்ன நெருடல்:
மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் கடந்த 28.02.2009 ஆம் அதிகாரப்பூர்வமாக தலைநகரில் அமைக்கப்பட்டது.
அது குறித்த தகவல்களும் செய்திகளும் நமது "திருத்தமிழில்" காணோமே...!!? ஏன்..?? என்ன காரணம்...??
அன்புடன்,
சந்திரன் இரத்தினம்,
ரவாங், சிலாங்கூர்.
அருமை நண்பர் சந்திரன் இரத்தினம் அவர்களே,
தங்களின் மறுமொழிக்கு முதலில் என் நன்றி.
//மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் கடந்த 28.02.2009 ஆம் அதிகாரப்பூர்வமாக தலைநகரில் அமைக்கப்பட்டது.
அது குறித்த தகவல்களும் செய்திகளும் நமது "திருத்தமிழில்" காணோமே...!!? ஏன்..?? என்ன காரணம்...??//
இதனை நாமும் அறிவோம். மிகவும் போற்றத்தக்க பணி என அதனைச் சொல்லுவேன்.
தன்னலம் கருதாத தமிழாசிரியர் நல்லோர்கள் ஒன்றுகூடி 'மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம்' அமைப்பை உருவாக்கி உள்ளார்கள்; முறையாகப் பதிவும் செய்துள்ளார்கள்.
அவர்களுக்கு மலேசியத் தமிழர்கள் கடமைப்பட்டுள்ளார்கள் என்று சொன்னாலும் முற்றிலும் தகும்.
அந்த அமைப்புப் பற்றிய விவரங்களை அன்பர்கள் யாரேனும் நமக்கு விடுத்து வைத்தால் கண்டிப்பாக வெளியிடுவேன்; அதனைத் திருத்தமிழின் கடமையாகவே கருதுகிறேன்.
தக்க நேரத்தில் இந்த நினைவுறுத்தலைச் செய்த தங்களுக்கு நன்றி ஐயா.
மீண்டும் வருக.
this page really helpful to students........thanks lot all sir n teacherzzzzzzzz....
unggal pani todaratum..........
malathi.m
Post a Comment