Friday, October 21, 2016

மலேசிய மண்ணில் தமிழ்க்கல்வியை 200 ஆண்டு வாழ வைத்துள்ளோம்
2016ஆம் ஆண்டு நம் மலேசியத் திருநாட்டில் தமிழ்க்கல்வி தொடக்கப்பட்டு 200 அகவை நிறைவடைகிறது.

கடந்த 200 ஆண்டாக இந்நாட்டில் தமிழ் மொழி, இனம், சமயம், பண்பாடு, கலை, இலக்கியம் ஆகிய அனைத்தும் இடையறாது வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் வளர்ந்து கொண்டிருப்பதற்கும் தமிழ்க்கல்வியின் பங்களிப்பு மிக மிக உன்னதமானது; உயர்வானது; அளப்பரியது என்றால் அது மிகையாகாது.

மலேசியாவில் 200 ஆண்டு நிறைவை அடையும் தமிழ்க்கல்விக்கு மனமகிழ்ச்சியோடு மகுடம் சூட்டி மாண்புறச் செய்ய வேண்டியது மலேசியத் தமிழரின் கடமை; அதனால் மலேசியத் தமிழருக்குப் பெருமை.

மலேசியாவில் தமிழ்க்கல்விக்கென்று தனி வரலாறு உண்டு. மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளுக்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டு. மலேசியாவில் தமிழ்க்கல்வி கற்று வாழ்வில் முன்னேறியவர்கள் பற்றி ஆயிரமாயிரம் வெற்றிக் கதைகள் உண்டு.

1816 மலேசியக் கல்வி வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. அன்றைய காலத்தில் மலாயாவில் ஆட்சி நடத்திய பிரிட்டிசார் அரசாங்கம் பினாங்கில் ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கியது.

பினாங்கு பொதுப்பள்ளி அல்லது ஆங்கிலத்தில் Penang Free School என்பதுதான் அந்தப் பள்ளி. ஆங்கிலம் வழி கல்வி கற்க இந்தப் பள்ளி உருவாக்கப்பட்டது. இந்தப் பள்ளியில் தான் முதன்முதலாக, நமது அன்னைமொழியாம் தமிழ்மொழிக்காக ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. 21.10.1816 நாளன்று அன்றைய  Penang Free School  பள்ளியின் தலைவராக இருந்த சர் ரெவரண்டு அட்சிங்ஸ் என்பவர் இந்தத் தமிழ் வகுப்பைத் தொடங்கியதாக வரலாறு கூறுகின்றது.

அன்று தொடங்கி இந்த 21.10.2016ஆம் ஆண்டு வரையில் நமது மலேசியத் திருநாட்டில் தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வருகின்றன; தமிழ்க்கல்வி இடையறாது நடைபெற்று வருகின்றது என்பது மகிழ்ச்சியும் பெருமையும் தருகின்ற செய்தியாகும்.

அன்று பினாங்கில் ஒற்றை வகுப்பறையில் தொடங்கிய தமிழ்க்கல்வி சரியாக 200 ஆண்டுகளைக் கடந்து இன்று அரச வேராக ஆழ ஊன்றி ஆல விழுதுகளாகப் பெருகி 524 பள்ளிகளில் தமிழ்க்கல்வி பயிலப்படுகிறது என்பது நாம் அடைந்திருக்கும் மிகப்பெரிய சாதனை என்று சொன்னால் மிகையாகாது.

தமிழ்க்கல்வியின் சாதனை தமிழ்ப்பள்ளிகளோடு நின்றுவிட்டதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, ஆசிரியர் கல்விக்கழகம், பல்கலைக்கழகம் வரையில் தமிழ்க்கல்வியைப் பயிலும் நிலை இன்று கைகூடி உள்ளது.

பாலர் பள்ளித் தொடங்கி முனைவர் பட்டம் வரையில் தமிழ்க்கல்வியைப் படிக்கும் வாய்ப்பையும் உரிமையையும் மலேசியத் தமிழர்களாகிய நாம் பெற்று இருக்கிறோம் என்பதைச் சொல்லும் பொழுதே நாவெல்லாம் இனிக்கிறது; மனமெல்லாம் மணக்கிறது.

இந்தியா, தமிழ்நாட்டு, இலங்கை முதலான தமிழின் தாய்நிலத்திற்கு வெளியே கடல் கடந்த ஒரு நாட்டில் கடந்த 200 ஆண்டுகளாகத் தமிழ்மொழியும் தமிழ்க்கல்வியும் நீடித்து வருவதும் நிலைபெற்று வாழ்வதும் கல்வி மொழியாக விளங்குவதும் போற்றுதலுக்கு உரிய மரபு; கொண்டாடப்பட வேண்டிய மாண்பு என்றால் அது மிகையாகாது.


மலேசியத் தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப்பள்ளிகளுக்குத் தனிச்சிறப்பிடம் உண்டு என்றால் மிகையாகாது. பல்லாயிரக்கணக்கில் பட்டதாரிகள், கல்வியாளர்கள், நிபுணர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள், விளையாட்டாளர்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள், அனைத்துலக நிலையிலான சாதனையாளர்கள் என வெற்றியாளர்கள் பலர் தமிழ்ப்பள்ளிகளிலிருந்து உருவாகி வந்திருக்கின்றனர். அன்று தமிழ்நாட்டிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக மலாயாவுக்கு வந்த பலர் இன்று முதலாளிகளாகவும் திறன்மிக்க தொழிலாளர்களாவும் உருவாகுவதற்குத் தமிழ்ப்பள்ளிகள் பங்காற்றியுள்ளன.  அதுமட்டுமல்லாமல் தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாட்டு, சமய வளர்ச்சிக்கும் தமிழ்ப்பள்ளிகளின் பங்களிப்பு நிறைவாகவே இருக்கின்றது.

1816 முதல் 2016 வரையில் 200 ஆண்டுகளில் பல்வேறு இடர்கள், நெருக்கடிகள், அரசியல் பூசல்கள், பொருளியல் வெல்விளிகள், சமுதாயச் சிக்கல்கள், சிந்தனைப் போராட்டங்கள், ஏற்றத் தாழ்வுகள் எனப் பற்பல பரிணாமங்களைக் கடந்து மலேசியாவில் தமிழ்க்கல்வி வெற்றிக் கண்டிருக்கும் இந்தத் தருணத்தில், மலேசியத் தமிழர்கள் அனைவரும் பெருமைகொள்ள வேண்டும். அதே வேளையில், மலேசியாவில் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அரசியல், சமூக, பொது இயக்க, தோட்டத் தொழிற்சங்க, தன்னார்வ முன்னோடிகளையும் மூத்த தலைவர்களையும் இந்தத் தருணத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டும்.

மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்ந்து நிலைக்கவும் அதனுடன் தமிழ்மொழி நிலைபெற்று வாழ வேண்டும். இதன்வழி மலேசியத் தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, வாழ்வியல், விழுமியங்கள் ஆகிய அனைத்தும் காக்கப்பட வேண்டும். அனைத்திற்கும் மேலாக மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் அடுத்துவரும் நூற்றாண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். 

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்க்கல்வி!

@சுப.நற்குணன்

Wednesday, October 19, 2016

பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு : மலேசியாவில் நடக்கிறது
மலேசியாவில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் கொண்டாட்டத்தின் தொடர்பில் பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது. எதிர்வரும் 20.10.2016 தொடங்கி 23.10.2016 வரையில் நான்கு நாள்களுக்கு ‘21ஆம் நூற்றாண்டில் தமிழ்க்கல்வி எனும் கருப்பொருளில் இம்மாநாடு நடைபெறும். கெடா மாநிலத்தில் அமைந்துள்ள எயிம்ஸ்ட் பல்கலைக்கழகம் இந்த மாநாட்டுக்குரிய இடமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வித் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ ப.கமலநாதன் அவர்களின் தலைமையில் மாநாடு நடைபெறும். மலேசியச் சுகாதார அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர்.சுப்பிரமணியம் அவர்கள் இம்மாநாட்டினை அதிகாரப்படியாகத் தொடக்கி வைப்பார். மேலும் கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ மாட்சீர் காலிட் அவர்களும் கல்வி அமைச்சின் இயக்குநர்கள், உயர் அதிகாரிகள், விரிவுரையாளர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பொது இயக்க பொறுப்பாளர்கள் ஆகியோர் மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொள்வர். 

மாநாட்டுத்  தொடக்கவிழா 22.10.2016ஆம் நாள் மாலை மணி 2:00 தொடங்கி 5:00 வரையில் நடைபெறும். தொடக்க விழாவில் கலந்து சிறப்பிக்க பொதுமக்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். 

மலேசியாவிலிருந்து 250 தமிழாசிரியர்களும் கல்வி அதிகாரிகளும் உள்பட சிங்கப்பூர், இந்தியா, இலங்கை, அமெரிக்கா, பிரான்சு, சுவிசர்லாந்து, மியான்மார், தாய்லாந்து, மொரிசியஸ், ஆஸ்திரேலியா முதலான வெளிநாடுகளைச் சேர்த்த மொத்தம் 300 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் தமிழ்க்கல்வியின் வரலாறு, கலைத்திட்டம், கற்றல் கற்பித்தல், மதிப்பீடு, 21ஆம் நூற்றாண்டுக் கல்வி முதலான கோணங்களில் மாநாட்டில் அமர்வுகள் நடைபெறவுள்ளன. மலேசியத் தமிழாசிரியர்கள் 24 பேர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் மாநாட்டில் படைக்கப்படவுள்ளன. மேலும் தமிழ்க்கல்வியின் மேம்பாட்டுக்கு உரிய வழிவகைகளை ஆராய்வதற்கு 2 பட்டறைகளும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டைப் பொறுப்பேற்று நடத்துவதற்கு வே.இளஞ்செழியன் தலைமையில் ஓர் ஏற்பாட்டுக்குழு அனைத்துப் பணிகளையும் செய்துவருகின்றது. இந்தக் குழுவில் கல்வி அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெறுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மலேசியாவில் 200 ஆண்டுகளைக் கடந்துவந்துள்ள தமிழ்க்கல்வி 21ஆம் நூற்றாண்டிலும் மாணவர்களுக்குப் பொருத்தப்பாட்டைக் கொண்டிருப்பதோடு திறன்மிக்க மாந்த மூலதனத்தை உருவாக்குவதற்கு ஏற்புடையதாக அமைவதற்கு இந்த மாநாடு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு தொடர்பான மேல் விவரங்களை www.tamilkalvi.my என்ற இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

நன்றி:  www.tamilkalvi.my

Tuesday, October 11, 2016

மலேசியாவில் வேண்டும் தமிழ் மரபுத் திங்கள்


மலேசியாவில் தமிழ்மொழி உணர்வையும் ஈடுபாட்டையும் அதிகப்படுத்தும் நோக்கத்தில் 'தமிழ் மரபுத் திங்கள்' கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்த  வேண்டும் எனச் சமூக நட்பு ஊடகங்களில் செய்திகள் மிகப் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. தலைவர்களும் தமிழ் சார்ந்த பொது இயக்கங்களும் இதனை அரசாங்கத்திடம் முன்மொழிய வேண்டும் என நட்பூடகங்களில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றது.

கனடா நாட்டில் அடுத்த ஆண்டு தொடங்கி சனவரி மாதம் 'தமிழ் மரபுத் திங்கள்' கொண்டாடப்பட அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கனடாவின் நாடாளுமன்றத்தில் அதன் உறுப்பினர் திரு.கேரி ஆனந்தசங்கரி இந்தத் தீர்மானம் குறித்து அறிவித்தார். உலகம் முழுக்க வாழும் தமிழர்களை இந்த அறிவிப்பு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

கனடாவிற்கு முன்பாகவே  கடந்த 10 ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்பிரல் மாதம் தமிழ்மொழி மாதமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், கலந்துரையாடல், இசை நிகழ்ச்சி, மாநாடு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதன்வழி தமிழ்மொழி உணர்வையும் எழுச்சியையும் சிங்கப்பூரில் ஏற்படுத்த முடிகிறது.

சிங்கப்பூரில் மோகன் ராசு
இதேபோல் மலேசியாவிலும் தமிழ் மரபுத் திங்கள் ஒரு மாத காலத்திற்குக் கொண்டாடப்பட வேண்டும் என்பது மலேசியத் தமிழர்களின் ஆவலாக உருவெடுத்துள்ளது.

இதனை அரசாங்கமே முன்னின்று நடத்துவதற்குரிய வாய்ப்புகள் உண்டா என ஆராய்ந்து செயல்படுத்த முயற்சிகள் எடுக்கலாம். இல்லையேல், தமிழ் சார்ந்த பொது இயக்கங்களும் அமைப்புகளும் பொதுக்குழு ஒன்றனை அமைத்து தன்னார்வ அடிப்படையில் செயல்படக்கூடிய சாத்தியக் கூறுகளை ஆராயலாம்.

இதுபற்றி முகநூலில் பகிரப்பட்ட சில பகிர்வுகளை இங்கே தருகின்றேன்..

மன்னர் மன்னன் - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்:-
முரசு மென்பொருள் நிறுவனர்; கணிமை வல்லுநர் முத்து நெடுமாறன்
மலேசியத் தமிழ் அறவாரிய உறுப்பினர், ஆசிரியர் சரவணன்
சிங்கப்பூரைச் சேர்ந்த நித்திஷ்
புதுக்கவிஞர், ஆசிரியர் ந.பச்சைபாலன், ஆசிரியர் இரமணி உள்பட முகநூல் அன்பர்கள்
மலேசியாவில் 200 ஆண்டுத் தமிழ்க்கல்விக் கொண்டாட்டம் நடைபெறும் இந்தத் தருணத்தில் அதன் நினைவாக இனி வரும் ஆண்டுகளில் தமிழ் மரபுத் திங்களைக் கொண்டாடலாம். அதற்குரிய முன்னெடுப்புகளை நம் தலைவர்களும் தமிழ் சார்ந்த பொது இயக்கங்களும் ஆவன செய்யலாம். மலேசியத் திருநாட்டில் தமிழைத் தொடர்ந்து நிலைபெபெறச் செய்யவும் இளையோர் மனங்களில் தமிழை வேறூன்றச் செய்யவும் இது ஏதுவாக அமையும். சிந்திப்போமே.!

@சுப.நற்குணன்

Friday, October 07, 2016

ஐ-போனில் தமிழ் எண்கள்! தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சி!


தமிழில் எண்கள் எழுதப்படும்போது 1,2,3 எனத் தோன்றும் தற்போதைய உரோமன் வடிவங்களிலேயே இன்று எழுதப்படுகின்றன.
 
இருப்பினும், தொன்மை மொழியான தமிழில் எண்களுக்கும் தனிவடிவங்கள் உள்ளன என்பதையும், அவை சில பத்தாண்டுகளுக்கு முன்னும் வழக்கில் இருந்தன என்பதையும் பலர் அறிந்திருப்பர். டாக்டர் மு. வரதராசனாரின் திருக்குறள் தெளிவுரை நூலின் தொடக்கப் பதிப்புகளில், குறட்பாக்களின் எண்களையும், பக்கங்களின் எண்களையும் தமிழ் எண்களிலேயே காணலாம். 
தமிழ் எண்களைப் பயன்படுத்தி தமிழ்நாட்டிலும் மலேசியாவிலும் நாள்காட்டிகள் இன்றும் வெளிவருகின்றன. குறிப்பாக, மலேசியாவில் கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழியல் ஆய்வுக் களம் தமிழ் எண்களைக் கொண்டு அச்சிடப்பட்ட நாள்காட்டியை வெளியிட்டு வருகின்றது.
தமிழ் எண்களைப் ‘பாதுகாக்க’ இதுபோன்ற சிறு முயற்சிகள் ஆங்காங்கே நடந்தாலும், வழக்கில் இல்லாததால் இந்த எண்களை அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ள இயலவில்லை.
 
இன்றைய சூழலில் நமது தமிழ் எண்களை நாம் மறந்திருந்தாலும், தொழில்நுட்ப உலகம் மறக்கவில்லை! 
 
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆப்பிள் நிருவனத்தின் ஐஓஎஸ் 10-இல், பயனர்கள் தங்கள் பயன்பாட்டு மொழியாகத் தமிழைத் தேர்வு செய்வது மட்டுமல்லாமல், தொலைபேசி எண்கள் தமிழ் எண்களாகவே தோன்றுவதற்கான விருப்பத் தேர்வினையும் செய்து கொள்ளலாம். 
 
இந்த வசதி உலகம் எங்கும் அறிமுகமாகி வரும் ஐபோன்-7 திறன்பேசிகளில் இயல்பாகவே இடம் பெற்றிருக்கும்.  ஏற்கனவே ஐபோன்களை வைத்திருப்பவர்கள், ஐஓஎஸ்-10க்கு அவர்களின் இயங்குதளத்தை மேம்படுத்துவதன் வழி இந்தப் புதிய வசதியைப் பெற்றுக் கொள்ளலாம். செல்பேசிகளில் தமிழ் எண்கள் விருப்பத் தேர்வாக இடம் பெறுவது உலக அளவில் இதுவே முதல் முறை எனக் கருதப்படுகின்றது. 
 
நட்பூடகங்களில் பயனர்கள் பெருமிதம்.
இந்த வசதியைப் பார்த்த ஐபோன் பயனர்கள் பலர், அவரவர் அடைந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் நட்பூடகங்களின் வழி பகிர்ந்து கொண்டு வருகின்றனர். முகநூலிலும், டுவிட்டரிலும், வாட்சாப், தெலிகிராம் குழுமங்களிலும், தமிழ் எண்கள் தோன்றும் ஐபோனின் திரைப்பிடிப்பு (screen shot) பகிர்ந்து கொள்ளப்பட்டது. கருத்துகளைக் கூறிய பலர், இதனை மகிழ்வோடு வரவேற்றனர். 

மலேசியாவின் பங்களிப்பு
ஐபோனிலும் மெக்கிண்டாசுக் கணினிகளிலும் தமிழ் எழுத்துகளை வடிவமைத்தவர் மலேசியாவைச் சேர்ந்த கணிஞர் முத்து நெடுமாறன் (படம்) என்பதை பலரும் அறிவர். இது குறித்து அவரிடம் செல்லியல் வினவிய போது, 

“தமிழ் எண்களுக்கும் தமிழில் பயன்படுத்தப்பட்ட சுருக்கெழுத்துகளுக்கும் கணினிக்கான குறியீடுகளை வழங்க 2000ஆம் ஆண்டிலேயே யூனிகோடு நிருவனத்திடம் பரிந்துரை செய்யப்பட்டது. பரிந்துரை செய்த குழுவிற்கு அப்போது நான் தலைமை ஏற்றிருந்தேன். ஏதோ வரலாற்று நோக்கத்திற்காக இந்தக் குறியீடுகளைச் சேர்க்கின்றோம் என்று அன்று பலர் நினைத்திருக்கக் கூடும். இன்று இவை மற்ற மொழி எண்களுக்கு நிகராகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பினைப் பெற்றுள்ளன என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.” என்று கூறினார்.
மேலும், “ஆப்பிள் கணினிகளிலும், கையடக்கக் கருவிகளிலும் சேர்க்கப்பட்டுள்ள எமது ‘இணைமதி’ எழுத்துருவில் தமிழ் எண்களை இயல்பாகவே சேர்த்துவிட்டேன். செல்லினத்தில் உள்ள தமிழ்-99 விசைமுகத்திலும் இந்த எண்களைத் தட்டெழுவதற்கான வசதியையும் சேர்த்துவிட்டேன். இன்று அழைப்பு எண்களும் தமிழில் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்றே நினைக்கிறேன்” என்று தனது எதிர்ப்பார்ப்பினைத் தெரிவித்தார்.  
தமிழ் எண்களை இனி அவ்வப்போதாவது கண்டு மகிழலாம் என்று நாமும் எதிர்ப்பார்ப்போம்!
 நன்றி: செல்லியல்

Wednesday, October 05, 2016

#தமிழ்க்கல்வி200ஆண்டு : நடுமண்டலத் தமிழாசிரியர் கருத்தரங்கம்


மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்விக் கொண்டாட்டம் தொடர்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் வரிசையாக நடைபெறுகின்றன. இதன்வழி தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் கொண்டாட்டம் கலைகட்டத் தொடங்கிவிட்டது.

இதன் தொடர்பில் அக்தோபர் 4 முதல் 7 வரையில் நடுமண்டலத் தமிழாசிரியர் கருத்தரங்கம் நடைபெறுகிறது. கோலாலம்பூரில் உள்ள கிரெண்ட் கொன்தினெந்தல் விடுதியில் நடைபெறும் இக்கருத்தரங்கத்தில் சிலாங்கூர். கூட்டரசு வளாகம், புத்ரா ஜெயா, கிளந்தான், பகாங்கு ஆகிய ஊர்களைச் சேர்ந்த 150 தமிழாசிரியர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழ்ப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கற்பிக்கும்  ஆசிரியர்களாவர். அதேவேளையில் தேசியப் பள்ளியில் பணியாற்றும் தமிழ்மொழி ஆசிரியர்கள் சிலரும் இதில் அடங்குவர்.

கடந்த அக்தோபர் 4ஆம் நாள் செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்தக் கருத்தரங்கத்தில் முதன்மை அங்கமாக மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முகமை அமைப்பாளர் திரு.சு.பாஸ்கரன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது.
திரு.சு.பாஸ்கரன் அவர்கள்
அவர்தம் உரையில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் கொண்டாட்டம் பற்றியும் அதன் தேவைகள் பற்றியும் விரிவாகப் பேசினார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களையும் விளக்கிக் காட்டினார். இந்த நாட்டில் தமிழ்மொழியும் தமிழ்க்கல்வியும் இன்றுவரையில் நின்று நிலைத்து வருவதற்கு நமது முன்னோர்கள் ஆற்றிய பங்களிப்புகளை உள்ளத்து உணர்வோடு முன்வைத்தார். மேலும், இன்றைய சூழலுக்கு ஏற்ப தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் அடைத்திருக்கும் வளர்ச்சியையும் முன்னேற்றங்களையும் தொட்டு அவர் பேசியது எல்லாருடைய கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்தது.

இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மலேசியாவில் தமிழ்க்கல்வி மிக உயரமான இடத்தை அடைந்துள்ளது. தமிழ்ப்பள்ளிகள் சிறந்த கல்வி நிலையங்களாக மட்டுமின்றி நமது இனத்தின் பண்பாட்டு நடுவங்களாகவும் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன என்றார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தேசிய நிலையிலும் உலக நிலையிலும் பல்வேறு சாதனைகள் படைத்து வருவதை செய்திச் சான்றுகளோடும் பட ஆதாரங்களோடும் படைத்தார். எனவே, தமிழ் மக்களின் முதல் தேர்வாகத் தமிழ்ப்பள்ளிகள் திகழ வேண்டும். அதற்கு தமிழாசிரியர் குமுகாயம் மிகவும் பங்காற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தமிழாசிரியர்கள் இந்த நாட்டில் தமிழ் மொழியையும், இலக்கியத்தையும், கலை, பண்பாட்டையும் வளர்த்தெடுக்கக் கூடிய மாபெரும் ஆற்றல் படைத்தவர்கள். பெரும்பாலான ஆசிரியர்கள் மொழி, இன, பண்பாட்டு உணர்வோடும் பற்றோடும் பணியாற்றுகிறார்கள். இருப்பினும் ஒரு சிலரின் மெத்தனமான போக்கினால் ஒட்டுமொத்த தமிழாசிரியர்களுக்கு இழுக்கு வந்து சேர்கிறது. அதனைத் துடைத்தொழிக்க உணர்வுள்ள ஆசிரியர்கள் மேலும் துடிப்போடும் குமுகாய உணர்வோடும் செயல்பட வேண்டும். குறிப்பாக இளம் ஆசிரியர்கள் தமிழ்கல்வியை உலகத் தரத்திற்கு உயர்த்த பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
திரு.ந.பச்சைபாலன்

திரு.முகிலன் முருகன்அடுத்துவரும் 2 நாட்களில் கற்றல் கற்பித்தல், 21ஆம் நூற்றாண்டுக் கல்வி, தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், இணையக் கல்வி, உயர்நிலைச் சிந்தனைத் திறன் முதலான தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெறும்.


இதற்கிடையில், துணைக் கல்வி அமைச்சர் டத்தோ கமலநாதன் அவர்கள் இந்தக் கருத்தரங்கத்திற்கு வருகை மேற்கொண்டு அதிகாரப்படியாகத் தொடக்கி வைப்பார்.

மலேசியாவில் 200 ஆண்டுத் தமிழ்க்கல்விப் பெருவிழாவின் ஓர் அங்கமாக இந்தத் தமிழாசிரியர் கருத்தரங்கம் நடைபெறுகிறது. ஏற்கனவே கடந்த செப்தெம்பரில் சொகூர் மாநிலத்தில் தென்மண்டலத் தமிழாசிரியர் கருத்தரங்கம் நடைபெற்று முடிந்தது. இதற்கு அடுத்து எதிர்வரும் அக்தோபர் 20 தொடங்கி 23 வரையில் கெடா, எயிம்சு பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டை நமது மாண்புமிகு பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் பின் இரசாக் அவர்கள் தொடக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் தமிழ்க்கல்வியை மேலும் செழிக்கச் செய்வதற்கு இப்பொழுது முன்னெடுத்து நடத்தப்படும் தமிழ்க்கல்வி 200 ஆண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பெரிதும் உதவும் என்பதே மலேசியத் தமிழர்களின் நம்பிகையாக இருக்கின்றது.

#தமிழ்க்கல்வி200ஆண்டு:- மேலும் செய்திகள்..

@சுப.நற்குணன்

Friday, September 30, 2016

தமிழ்க்கல்விப் பளிங்குவெட்டில் மலேசியப் பிரதமர் தமிழில் கையொப்பம்


மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. அதனைக் கொண்டாடும் வகையில் நாட்டில் உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும் பளிங்குவெட்டு (Plaque) பொறுத்தப்படவுள்ளது. அந்தச் சிறப்புப் பளிங்குவெட்டில் மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்கள் தமிழில் கையொப்பம் இட்டுச் சிறப்பித்துள்ளார். பிரதமர் தமிழ்மொழியில் தம் பெயரைக் கையொப்பம் இட்டுள்ள செயலானது 200 ஆண்டு மலேசியத் தமிழ்க்கல்விக்கும் தமிழ்மொழிக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
மாண்புமிகு பிரதமருடன் கல்வித் துணையமைச்சர்மேலும், பிரதமரைப் போலவே மலேசியக் கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ மாட்சீர் பின் காலிட்டும் இந்தப் பளிங்குவெட்டில் தமிழ்மொழியில் கையொப்பம் இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரும், கல்வி அமைச்சரும் தமிழில் கையொப்பம் இட்டுள்ளது மலேசியத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மலேசியக் கல்வி அமைச்சரும் கல்வித் துணையமைச்சரும்


மலேசியாவில் 1816ஆம் ஆண்டில் பினாங்கில் ஆங்கிலேயர்கள் தொடங்கிய பினாங்குப் பொதுப் பள்ளியில் (Penang Free School) ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. அன்று அந்தப் பள்ளியின் தலைவராக இருந்த ரெவரண்ட் அட்சிங்சு என்பவர் இந்தத் தமிழ் வகுப்பைத் தொடங்கினார்.

அப்பொழுது தொடங்கிய தமிழ்க்கல்வி 200 ஆண்டுகளாக மலேசியாவில் நிலைத்து வாழ்கின்றது என்பது வரலாற்றுச் சிறப்புகுரியது. தமிழ்நாட்டுக்கு வெளியே கடல்கடந்த ஒரு நாட்டில் தமிழ்மொழி மிக நீண்ட காலமாக வாழ்ந்து வருவதும் கல்விமொழியாக வளர்ந்து வருவதும் பெருமைக்குரிய செய்தி.

மலேசியாவில் ஒரு தனி வகுப்பறையில் தமது வாழ்வைத் தொடங்கிய தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் கடந்த பிறகு இன்று 524 தொடக்கப்பள்ளிகளில் பயிலப்படுகிறது. அதுவும் தமிழ்வழிக் கல்வியை வழங்கி வருகின்றது. மலாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து ஏனைய பாடங்களாகிய கணிதம், அறிவியல், நன்னெறி, வரலாறு, உடற்கல்வி, நலக்கல்வி, இசை, கலைக்கல்வி, தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் ஆகிய பாடங்கள் அனைத்தும் தமிழிலேயே கற்பிக்கப்படுகின்றன. இதன்வழி தொடக்கத் தமிழ்ப்பள்ளிகளில் தமிழுக்குக் கல்வி மொழிக்குரிய உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இடைநிலைப்பள்ளியில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய இரு பாடங்கள் படிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் கல்விக் கழகம், பல்கலை வரையில் தமிழில் படிப்பதற்கான வாய்ப்பை மலேசிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

மழலையர் கல்வி தொடங்கி முனைவர் பட்டம் வரையில் தமிழ்மொழியைக் கற்கும் உரிமையும் வாய்ப்பும் மலேசியாவில் இருக்கின்றது என்பது தமிழ்மொழி அடைந்திருக்கும் வெற்றியாகும்.

இவ்வாறு மலேசியாவில் வாழ்ந்துவரும் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் நிறைவை இந்த 2016ஆம் ஆண்டில் அடைகின்றது. இந்த வரலாற்றைப் பெருமைபடுத்தும் வகையில் மலேசியாவில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் கொண்டாட்டத்தை ஒராண்டுக் காலத்திற்குப் பெருவிழாவாகக் கொண்டாட மலேசியக் கல்வி அமைச்சு முன்வந்துள்ளது.
மலேசியாவில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் கொண்டாட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினர்


இந்தக் கொண்டாட்டப் பெருவிழாவுக்கு மலேசியக் கல்வித் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ ப.கமலநாதன் அவர்கள் தலைமையில் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் ஓராண்டுக் காலத்திற்குத் தமிழ்க்கல்விக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பல திட்டங்களையும் நிகழ்சிகளையும் நடத்தவுள்ளனர்.

மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்ந்து நிலைக்கவும் அதோடு தமிழ்மொழி நிலைபெற்று வாழவும் இந்த 200 ஆண்டுகள் கொண்டாட்டம் வழிவகுக்கும். இதன்வழி மலேசியத் தமிழர்களின் இலக்கியம், கலை, பண்பாடு, வரலாறு, வாழ்வியல், விழுமியங்கள் ஆகிய அனைத்தும் காக்கப்படும். அனைத்திற்கும் மேலாக மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் அடுத்துவரும் நூற்றாண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்லப்படும் என்பது எல்லாருடைய நம்பிக்கையாக இருக்கின்றது.

#தமிழ்க்கல்வி200ஆண்டு
@சுப.நற்குணன்

Blog Widget by LinkWithin