Saturday, February 21, 2009

அனைத்துலகத் தாய்மொழி நாள் (21-2-2009)

இன்று 21-2-2009 அனைத்துலகத் தாய்மொழி நாள். கடந்த 1999ஆம் ஆண்டில் ஐக்கிய நாட்டு அவையின் யுனெசுகோ மன்றம் உலகத் தாய்மொழி நாளை அதிகாரப்படியாக அறிவித்தது. இன்று பத்தாவது ஆண்டாக உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது.

"எந்த நாட்டில் வாழ்கின்ற மக்களாக இருந்தாலும், அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தம் கருத்தை உறுதியாக உரைக்கவும் - பாரம்பரியம் பண்பாட்டைப் பேணவும் - இன ஒற்றுமைக்குக் கருவியாகவும் அவரவர்க்கு இயற்கையாகவே அமைவது தாய்மொழி ஒன்றுதான்" என்று யுனெசுகோ அறிவித்துள்ளதை உலகத் தமிழர்கள் அனைவரும் தம் உள்ளங்களில் ஆழப் பதிந்துகொள்ள வேண்டும்.


இந்த அனைத்துலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மலேசியப் பாவலரும் - 'உங்கள் குரல்' இதழாசிரியரும் – தொல்காப்பிய அறிஞருமாகிய கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்களின் இனியப் பாவொன்றை இங்கே வெளியிடுவதில் 'திருத்தமிழ்' பேருவகைக் கொள்கிறது.

*********************************************
தமிழ்ப்பேறு! தவப்பேறு!

*********************************************


தாய்மொழி என்பது தாயின்மொழி- அது
தாயும் நீயும் பேசும்மொழி
ஆயிரம் மொழிகள் நீயறிந் தாலும்
ஆன்மா உணர்மொழி அந்தமொழி – அது
அன்னையின் கருவில் வந்தமொழி!

அன்னையின் மடியில் கிடக்கையிலே – அவள்
அன்பினைப் பாலாய்க் குடிக்கையிலே
சின்னவுன் செவியில் சில்லெனப் பாய்ந்து
தேனாய் இனித்திடக் கேட்டமொழி – உன்
சிந்தையில் விதைகள் போட்டமொழி!

தோளிலும் மார்பிலும் சாய்கையிலே – நீ
தொட்டிலில் ஆடி ஓய்கையிலே
ஏழிசை மிஞ்சிடும் தாயிசை கேட்டே
இதமாய்த் தூங்கிய பாட்டுமொழி – அது
இதயங்கள் பேசிடும் வீட்டுமொழி!

அன்னையை அழைத்தே அழுகையிலே – அவள்
அணைத்ததும் உடன்நீ சிரிக்கையிலே
தன்னிலை மறந்தே தாய்மனம் பொங்கி
தவிப்புடன் உன்னைக் கொஞ்சுமொழி – அது
தரணியில் எதையும் மிஞ்சுமொழி!

தொல்லைகள் அறியாப் பருவத்திலே – நீ
துருதுருத் தாடிய உருவத்திலே
பல்லுமில் லாமல் சொல்லுமில் லாமல்
பலகதை சொல்லிய மயக்குமொழி – அது
பயிலுமுன் பேசிய இயற்கைமொழி!

உன்னுடன் இணைந்தே பிறந்தமொழி – உன்
உள்ளமும் உணர்வும் புரிந்தமொழி
எண்ணியல் என்ன மின்னியல் என்ன
எதையும் பயின்றிடச் சிறந்தமொழி – அது
இறைவன் உனக்கென வரைந்தமொழி!

தமிழினம் எய்திய பெரும்பேறு – அது
தாய்மொழி தமிழெனும் அரும்பேறு
அமிழ்தினை உரிமை அடைந்தவர் யாரும்
அருந்தா திருந்தால் அவப்பேறு – தமிழ்
அமிழ்தம் அருந்துதல் தவப்பேறு!

Saturday, February 14, 2009

ஈழத்தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !

எங்கோ ஒரு மூலையிலோ
ஏழை வயிற்றினிலோ
அங்கு நீயும் பிறக்காமல்
இங்கு வந்து பிறந்தாயே
என் ஈழ மகனே ..

ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !

நீ தூங்க நான் பாடும்
தாலாட்டல்ல இது
என் செல்ல மகனே
தாலாட்டுக்குக் கேட்டுத் தூங்கும்
தலையெழுத்தும் நமக்கில்லை
என் செல்ல மகனே ..

பாட்டின் வழி
நான் ஊட்டும் பாசமடா
தாய்மண் பாசமடா
என் செல்ல மகனே
நாளை இங்கு தமிழ் வாழ
தூக்கம் கொள்ளாது போராடும்
துணிச்சல் வேணுமடா
என் செல்ல மகனே ..

ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !

நேற்றுனக்கு தொட்டில் கட்டிய
வேப்பமரம் இப்போதில்லையே
என் செல்ல மகனே
சமாதிக்குப் பறித்துப்போட்ட
பூக்கள் வாடும்முன்னே
நாம் கூட சமாதியாகலாம்
என் செல்ல மகனே ..

சிந்திய நம் குருதியால்
இந்தியப் பெருங்கடல்
சிவந்தது என் செல்ல மகனே
மார்பினில் குண்டு தாங்கி
மண்ணில் உரமான
மாவீரனின் வாரிசு நீ
என் செல்ல மகனே ..

ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !

மண்ணைக் கரைத்துதான்
சேனை வைத்தான் உன்
மாமன்காரன்
என் செல்ல மகனே
ஈழக்குருதி சிந்திய
யாழ்மண்ணில் செய்த
பொம்மைதான் உன் கையிலிருக்கு
என் செல்ல மகனே ..

ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !

நாளைய சூரியன்
நமக்காகத்தான் என் செல்ல மகனே
நம்பிக்கையோடு போராடுவோம்
என் செல்ல மகனே ..

ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !

-உழவன்

Saturday, February 07, 2009

தமிழ்த்தொண்டர் படைச் செலவு:- தேவநேயப் பாவாணர்

இன்று 7-2-2009 மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் பிறந்த நாள். தமிழும் தமிழரும் தரணியில் தன்மானத்தோடும் தலைநிமிர்ந்தும் வாழ, மொழியியல் ஆய்வுப்பணிகளின் வழியாக தனியொருவராக நின்று 50 ஆண்டுகள் போராடிய தமிழ் வேங்கை. அன்னாரின் நினைவாக இப்பதிவை இடுகின்றேன்.


***********************************
தமிழ் வேங்கை பாவாணர் இயற்றிய இப்பாடலை, உலகம் முழுவதுமுள்ள தமிழீழத்து ஆதரவு வேங்கைகளுக்காக தலைவணங்கி வழங்குகின்றேன்.

************************************

படையெடுக்கவே கடு நடை தொடுக்கவே
பாண்டியன் வளர்த்த கழகப் பாட்டுடைத் தமிழ் மறவரே..
பாரெல்லாம் ஊரெல்லாம்
பண்டை முத்தமிழ் பரப்புவோம்
இடம் வலம் இடம் வலம்
இடம் வலம் இடம் வலம்

பரவை தன்னடி தொழப் பணித்த பாண்டியன்
பாங்கிலே வளர்ந்து பண்பில் ஓங்கு பாண்டி மறவரே..
பரண்மனை அரண்மனை
பைந்தமிழையே பரப்புவோம்
இடம் வலம் இடம் வலம்
இடம் வலம் இடம் வலம்

தூங்கெயில் கொண்ட தொடித்தோள் நற்செம்பியன்
தோன்றி வந்த குடியின் மானம் ஈண்டு சோழ மறவரே..
தொழிலகம் பொழிலகம்
தூய தமிழைப் பரப்புவோம்
இடம் வலம் இடம் வலம்
இடம் வலம் இடம் வலம்

தென் குமரிமேல் வடபனி மலைவரை
சேரவே யோர்மொழி வைத்தாண்ட சேரலாதன் மறவரே..
தெருவிலும் மருவிலும்
தீந்தமிழ் தனைப் பரப்புவோம்
இடம் வலம் இடம் வலம்
இடம் வலம் இடம் வலம்

வெள்ளங்கள் எனமிக விரியும் பஞிலமாய்
வீறுகொண்ட ஏறுகள்போல் வேறுவேறு படைகளும்
வெல்லுவோம் செல்லுவோம்
வெண்ணிலவையும் கொள்ளுவோம்
இடம் வலம் இடம் வலம்
இடம் வலம் இடம் வலம்
*பஞிலம்=படையணி

(பாவாணரின் இசைத்தமிழ் கலம்பகம் தொகுப்பிலிருந்து)

பாவாணர் பற்றிய எனது முந்தையப் இடுகையைப் படிக்கவும்

மலேசியத் தமிழர்கள் அமைதி மறியல்! சிறிலங்கா - இந்தியாவுக்குக் கண்டனம்!!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், அந்த படுகொலைக்குத் துணைபோகும் இந்திய அரசைக் கண்டித்தும் மலேசியத் தலைநகர் கோலாலும்பூரில் 6.2.2009 நாளன்று மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.
நண்பகல் மணி 12.30 தொடங்கி மாலை 3.00 மணிவரை நீடித்த இந்த அமைதி மறியலில் ஈராயிரத்திற்கும் மேற்பட்ட மலேசியத் தமிழர்கள் ஒன்றுதிரண்டு கலந்துகொண்டனர். பினாங்கு மாநிலத் துணை முதல்வர் மாண்புமிகு மரு.பி.இராமசாமி அவர்களின் தலைமையில் நடந்த இந்த மாபெரும் கண்டனப் பேரணியில் நடந்தது. நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியல், பொது இயக்கத் தலைவர்கள், பொறுப்பாளர்கள், இளைஞர் இயக்கத்தினர் உள்ளிட்ட சிறியோர் முதல் பெரியவர்கள் வரையிலான தமிழர்கள் அணிதிரண்டனர்.

இந்த அமைதிப் பேரணி, கோலாலும்பூரில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தின் முன்னால் நடந்தது. மேலும், ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாகக் கொன்று குவிக்கும் சிறிலங்கா இராணுவத்திற்கு ஆதரவாகச் செயல்படும் இந்திய அரசைக் கண்டித்தும் – இந்தியா தன்னுடைய ஆதரவை நிறுத்தக் கோரியும் – ஈழப்போரை நிறுத்த இந்தியா தகுந்த செயற்பாடுகளை முன்னெடுக்கக் கேட்டும் இந்தியத் தூதர் அசோக் கே.கந்தாவிடம் மனுவும் வழங்கப்பட்டது.



விரிவான செய்தியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

  • படங்கள் உதவி:- ம.தமிழ்ச்செல்வன், இரா.பாலமுரளி

Thursday, February 05, 2009

"ஈழப்போரை உடனே நிறுத்துக" போப்பாண்டவர் வேண்டுகை


இலங்கையின் வடபகுதியில் சிறிலங்கா அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துமாறு கத்தோலிக்க பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ற் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வத்திக்கானில் நேற்று புதன்கிழமை (4.2.2009) நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பு நிகழ்வின் பின்னர் பாப்பரசர் கூறியதாவது:

சிறிலங்கா அரச படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஆயுதப் போரை நிறுத்தி சமாதானத்தை உருவாக்க முன்வர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

மோசமடைந்து செல்லும் மனித அவலங்களும், கொல்லப்படும் பொதுமக்களின் தொகையும், எம்மை இவ்வாறு கோருவதற்கு அழுத்தம் கொடுத்துள்ளது.

இரு தரப்பும், மனிதத்தையும் மனிதாபிமான சட்ட விதிகளையும் கருத்தில் கொள்வதுடன் பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்தையும் உறுதி செய்வது அவசியம்.

பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் அவசிய உணவு மற்றும் மருத்துவ வசதிகளை அனுமதிப்பதும், இரு தரப்பினதும் கடமை.

மிக அருமையான அந்த நாட்டில், அமைதியும் புரிந்துணர்வும் உருவாகுவதற்கு, கத்தோலிக்கர் உட்பட அனைத்து மதத்தினராலும் வணங்கப்படும் தூய மடு மாதா வழியமைக்க வேண்டும் என ஆசிர்வதிக்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, February 04, 2009

உயிர் பிரியும் வேளையில் உரிமையுடன் சில வரிகள்

(இம்மடலினை சகல தமிழ் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக தமிழக மாணவ நண்பர்களிடம் சமர்ப்பியுங்கள். செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் குண்டு சத்தங்களை காதில் வாங்கிக்கொண்டு பதுங்கு குழிக்குள் நுழையும் தமிழ் நண்பன்.)

எமது அன்புக்கும் பெரு மதிப்புக்குமுரிய தமிழக மாணவர்களே..

"தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்"

முத்துக்குமரனுக்கு முதல் வணக்கத்தினை கூறிக்கொண்டு, உயிர் பிரியும் வேளையில் உரிமையுடன் சில வரிகள்! உங்கள் கரம் வந்து சேர்கையில் எம் உடல் சிதறி உயிர் விட்டு போய்விடலாம்!

மெல்லத் தமிழ் இனிச் சாகுமா இல்லை தமிழ் இனி வாழுமா எல்லாம் உங்கள் கைகளில்!

அடைக்கலம் தருவதாகக் கூறி அமைதி வலயம் வரச் சொல்லி ஆகாயத்தாலும் ஆட்லறியாலும் அடித்து நூற்றுயிர்கள் உடல் சிதறிப் போனதும் ஆயிரக்கணக்கில் குற்றுயிராய் கிடப்பதுவும் அறிந்திருப்பீர்கள். இன்னும் தொண்டு நிறுவனங்களுக்கு தடை, சுதந்திர ஊடகம் இல்லை, கொலைக்களத்தில் குரல் கொடுக்க யாருமற்ற ஏதிலிகளாய் நாம் உங்கள் முன்னே மண்டியிட்டு நிற்கிறோம்.

யார் வந்தார் எமை அணைக்க? யார் வந்தார் எமை பார்க்க? யார் வந்தார் எமை தூக்க? நாம் சபிக்கப்பட்டவர்களா இல்லை சாவதற்கே பிறந்தவரா? நாமும் சக மனிதர்களாக தானே பூமியில் பிறந்தோம்? சாவு மணி அடித்து அடித்து காதே செவிடாய் போய்விட்டது.

மரண படுக்கையில் என் இறுதி ஆசையை கேட்கிறேன் சகோதரா! சாகும் முன் ஒரு முறை விடிவு மணியை கேட்க வேண்டும் நான்.

தொப்புள் கொடி உறவுகளே கூப்பிடு தூரத்தில் தானே உள்ளீர்கள். எங்கள் குரல் இன்னுமா கேட்கவில்லை. இல்லை இல்லை கேட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் முத்துக்குமரன் ஒருவன் முளைவிட்டிருக்க மாட்டான்.

இந்திய படை வீரர்கள் முன்னணி களத்திலே, இந்திய போர் கப்பல் பருத்தித்துறைக் கடலிலே, இந்திய உளவு விமானங்கள் முல்லைத்தீவு வான் பரப்பிலே. சிறீலங்காவுடன் என்றால் விடுதலை புலிகள் என்றோ வெற்றி சூடி ஈழம் முடித்தே விடுவார்கள்.

ஆனால் நாம் போராட வேண்டியதோ இந்திய வல்லரசின் துணையுடன் வரும் சிறீலங்கா இராணுவத்தோடல்லவா. இது தாங்க முடியாத தம்பி தியாக சிகரம் முத்துக்குமரன் தன்மீது தீமூட்டி இதனை கொணர்ந்து இன்று இது காட்டுத்தீயாக பரவி தமிழகம் எங்கும் எழுச்சிக்கோலம் பூண வைத்துள்ளது.

மாணவ நண்பர்களே!
உங்கள் கைகள் தான் கறை படியாதவை..
உங்கள் உணர்வுகள் தான் நேர்மையானவை..
நீங்கள் தான் நாளைய தமிழகத்தின், தமிழீழத்தின் சிற்பிகள். உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் உங்கள் முடிவுகள் போரை நிறுத்தட்டும் உங்கள் வியர்வைகள் ஈழத்தை நிறுவட்டும் ஓயாது ஒலியுங்கள் நீங்கள் ஓய்ந்தால் நாங்கள் வீழ்வது மட்டுமல்ல நாளை இருக்கவும் மாட்டோம். இதனை எழுதும் போதும் குண்டுகள் கூவுகின்றன.

இப்போது உங்கள் கைகளில் மட்டும் தான் எங்கள் வாழ்வின் நொடித்துளிகள். கந்தக காற்றதனே சொந்தமென ஆகி கண்ணீரில் எம் சொந்தம் கானகங்கள் ஏகி வந்த பகை சாய்க்க வெஞ்சிரம் கொண்டுள்ளோம் வாழ்வோ சாவோ இனிஎல்லாம் உம் கையில்.

உங்களை நம்பி இன்னும் வன்னியில் சாவுக்குள் வாழ்கின்றோம் எமக்கு ஓர் இனிய விடியல் பிறக்குமென்று.

ஒலிக்குமா உங்கள் குரல்..? கிடைக்குமா உங்கள் கரம்..?
உங்களிடம் உரிமையுடன் உயிர் பிச்சை கேட்டு நிற்கும்,
சாவின் மடியில் உள்ள ஈழ தமிழர் சார்பில்
நான்...!!

Monday, February 02, 2009

ஈழத்தமிழர்:-எல்லாரும் உணரவேண்டிய உண்மை


1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து சிங்கள அரசு தமிழின ஒடுக்குமுறையில் ஈடுபட்டு வருகிறது. இன்று அது தீவிலிருந்து தமிழினத்தை முழுமையாக அழித்து ஒழித்தல் என்ற நிலையை அடைந்துவிட்டது.

இனிமேல் இலங்கையில் தமிழினம் பாதுகாக்கப் படுவதற்கான ஒரே வழி தமிழரின் பாரம்பரிய நிலப்பகுதிகளை தனிநாடாகப் பிரித்து வழங்க வேண்டும் என்பது தான். இதற்கு உலக நாடுகள் ஐ.நா சபை மூலம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
சிங்கள அரசின் கீழ் தமிழருக்கு அதிகாரப் பகிர்வு, தன்னாட்சி போன்ற வேறெந்தத் தீர்வும் தமிழர் மனதில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தாது. தமிழரை தன் நாட்டின் சிறுபான்மையர் எனக் கருதாமல் சிங்கள அரசு தமிழர் மேல் தொடுத்த இன ஒழிப்புப் போர், இந்த உணர்வைத் தமிழர் மனங்களில் ஆழப் பதிந்து விட்டது.

இதனால் உலக மக்களும், அரசுகளும், ஐ.நா சபையும் இந்த உண்மையைப் புரிந்து கொண்டு தமிழரின் பாரம்பரியப் பகுதிகளை தனிநாடாக அறிவிக்க உதவ வேண்டும்.

பிரபாகரன், விடுதலைப்புலிகள், இந்தியப் பிரதமர் ராசீவ் காந்தி கொலை போன்ற நிகழ்வுகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இசுலாமிய பயங்கரவாதம் உலகை அச்சுறுத்தும் வேளையில் இலங்கைத் தமிழரையும் பயங்கரவாதிகளாகப் பரப்புரை செய்து பயங்கரவாத ஒழிப்பு என்ற பேரில் தமிழின ஒழிப்பை இலங்கை அரசு முன்னெடுத்துள்ளது. இந்தத் தமிழின ஒழிப்புப் போரை இந்தியா, சீனா போன்ற சில நாடுகள் நேரடியாகவும் மற்றைய உலகநாடுகள் மறைமுகமாவும் ஆதரிப்பது மிகுந்த பரிதாபத்திற்குரிய நிலையாகும்.

இந்த நிலை இனியும் நீடிக்கக் கூடாது. உண்மையை எல்லோரும் உணர்ந்து நடக்க வேண்டும்.

இலங்கையில் தமிழர் சுதந்திரமாக வாழ ஒரு தனி நாட்டை ஏற்படுத்திவிட்டால், புலிகள் பயங்கரவாதம் என்பது அர்த்தமற்றதாகிவிடும். ஏனெனில் புலிகள் எந்தப் பயங்கரவாதத் செயலையும் உலகின் எந்தப் பகுதியிலும் செய்ததில்லை எதிர்காலத்தில் செய்யப்போவதற்கான அறிகுறிகளும் இல்லை. ஏனெனில் புலிகளுக்கு இலங்கையில் வாழும் தமிழரின் விடுதலை தவிர்ந்த வேறெந்தக் குறிக்கோளும் கிடையாது.

இலங்கையில் தமிழருக்கு என ஒரு தாயகம் உண்டாகாவிட்டால் சிங்கள அரசின் தமிழின ஒடுக்கு முறை நீடித்துக் கொண்டே இருக்கும், அதை எதிர்த்து தமிழினம் போராடிக் கொண்டே இருக்கும். இதனால் இலங்கை நிரந்தரமாக அமைதி இல்லாத ஒரு நாடாகவே இருந்து கொண்டிருக்கும்.

இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் அமைதி என்பது இரண்டு வழிகளில் மட்டுமே சாத்தியம்.

1. இலங்கையில் தமிழர் என்ற ஓர் இனமே இல்லாமல் அழிக்கப்பட வேண்டும். அல்லது

2. தமிழர் பகுதி தனிநாடாகத் தமிழருக்கு வழங்கப்பட வேண்டும்.

இவற்றில் முதலாவது தீர்வை அடைவதற்கு சிங்கள அரசு போராடுகிறது; இரண்டாவது தீர்வை அடைவதற்கு விடுதலைப் புலிகள் போராடுகின்றனர்.

எது நீதி என உலக மக்களும் அரசுகளும் கூறவேண்டிய நேரம் வந்துவிட்டது.
உங்கள் தீர்ப்பு என்ன? நீதிமான்களே ஒரு இனம் பலநூறு ஆண்டுகளாக வாழ்ந்த பாரம்பரிய தாயகத்திலே கொன்றொழிக்கப்படுவது நியாயம் என்கிறீர்களா? எப்போது இலங்கை அரசின் இனப்படுகொலைப் போரை நிறுத்தச் சொல்லப் போகிறீர்கள்?.

மேலே கூறிய இரண்டு தீர்வுகளன்றி இன்னொரு நியாயமான தீர்வை ஏற்படுத்தலாம் என்று யாரும் மனப்பால் குடிக்காதீர்கள். ஏனென்றால் இலங்கை அரசின் அரசியலமைப்புச் சட்டம் என்றுமே சிறுபான்மை இனத்தவரின் சம உரிமையை ஏற்றுக் கொண்டு இயற்றப்படவில்லை. தமிழருக்கு என வழங்கப்பட்ட ஒரு சில சட்ட பூர்வமான உரிமைகளையும் கூடச் சிங்கள அரசு இதுவரை நியாயமாக வழங்கவும் இல்லை; நீதியாக நடக்கவும் இல்லை. ஏனென்றால், இது சிங்கள மக்கள் மனங்களில் ஏற்படுத்தப்பட்ட நீண்டகால அரசியல் உணர்வினால் (political consciousnes of sinhaleese) ஏற்பட்ட முரண்பாடாகும்.

இதைப் புரிந்து கொள்ளாமல் இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ராசீவ் - செயவர்த்தனே ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறிய போது இந்திய அரசினால் அதைத் தடுக்க முடியவில்லை. இதுபோல் தன்னிச்சையாக எந்த ஒப்பந்தத்தையும் மீறும் போக்கு சிங்கள அரசியல் உணர்வின் அடிப்படையில் இருந்து பிறக்கும் ஒரு செயலாகும்.

இந்த மனப் போக்கை மாற்ற முடியாது என்பதால் சிங்கள அரசிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற ஒரே வழி தனிநாடாகத் தமிழர் பகுதியை விடுவிப்பது தான்.

அவ்வாறு இலங்கை தமிழர் தனிநாடு ஒன்றைப் பெறுவதால் தென்னிந்தியாவில் வாழும் இந்தியத் தமிழரும் பிரிவினை கோருவர் என்பது இந்தியர் சிலரின் தவறான கருத்தாகும். ஏனென்றால் இந்தியத் தமிழரின் நிலை பிரிவினை கோருவதற்கான எந்தவொரு காரணத்தையும் கொண்டிருக்கவில்லை. மாறாக இலங்கைத் தமிழரின் அழிவும் அதற்கு இந்திய அரசு துணை போகிறது என்ற நிலையும் தொடருமானால் கண்டிப்பாகத் தென்னிந்தியத் தமிழர் மனங்களில் தம் இனத்தை அழிக்க இந்திய அரசு துணை போயிற்றே என்ற காரணத்தால் வெறுப்பை ஏற்படுத்தும். தமது இரத்தமான சொந்தச் சகோதரரைக் கொல்ல நமது அரசே துணை போகிறதே என்று நினைக்குங்கால் ஒரு வேளை இந்தப் பிரிவினை உணர்வு தென்னிந்தியத் தமிழர் மனங்களில் உண்டாகலாம்.

ஆதலால் இந்தியாவும், உலக நாடுகளும் தங்கள் நிலைப்பாட்டின் மெய்த் தன்மையை உணர்ந்து ஈழத் தமிழரைக் காக்கும் வண்ணம் நீதியான தீர்வாக அவர்களுக்கு ஒரு தனி நாட்டை இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ஏற்படுத்தித்தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

மின்னஞ்சல் வழியாக:- சி.கபிலன்

Sunday, February 01, 2009

தீயினில் எரியாத தீபம் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்




Blog Widget by LinkWithin