Monday, September 30, 2013

தமிழ்க் கோட்டம்: தமிழுக்கும் தமிழருக்கும் ஒரு மணிமண்டபம்

மலேசியாவில் தமிழுக்கும் தமிழருக்கும் சொந்தமான தனிக் கட்டடம் இல்லாத குறையைத் தீர்க்கும் வகையில் ‘தமிழ்க் கோட்டம்’ எனும் பெயரில் ஒரு கட்டடம் அமையவுள்ளது. தமிழுக்கும் தமிழருக்கும் மலேசியாவில் முதன் முதலாக  இந்த மணிமண்டபம் உருவாகிறது.


கடந்த 1990ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரையிலும் இடைவிடாமல் துடிப்புடன் செயல்படும் தமிழ் வாழ்வியல் இயக்கம் இந்தக் கட்டடத்தை வாங்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழுக்கும் தமிழருக்கும் மலேசியாவில் ஒரு மணிமண்டபமாக இந்தக் கட்டடம் அமையவுள்ளது. ஆகவேதான் இந்தக் கட்டடம் ‘தமிழ்க் கோட்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

எட்டு இலட்சம் வெள்ளி மதிப்புள்ள 3 மாடிகளைக் கொண்ட இக்கட்டடம் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்கும் சொந்தமான ஒரு கட்டடமாக உருவாகி தமிழ்ப்பணியாற்றும் என இயக்கத் தலைவர் க.முருகையன் தெரிவித்தார்.

மலேசியாவில் தமிழையும் தமிழ் இனத்தையும் முன்படுத்தி பல்வேறு இயக்கங்கள் செயல்படுகின்றன. பல இயக்கங்கள் சொந்தக் கட்டடம் இல்லாமல் பிற இனத்தவரின் கட்டடத்தையும் மண்டபத்தையும் பயன்படுத்த வேண்டிய நிலையிலே இருக்கின்றன. இந்த நிலைமையை மாற்றி தமிழுக்கும் தமிழருக்கும் தனிக் கட்டடம் ஒன்றினை அமைத்து ‘தமிழரால் முடியும்’ என்னும் உண்மையை எடுத்துக்காட்ட இந்தத் ‘தமிழ்க் கோட்டம்’ வானுயர எழுந்து நிற்கப் போகின்றது.


‘தமிழ்க் கோட்டம்’ கட்டத்தில் இயக்க அலுவலகம், தமிழிய நூலகம், மேடை அரங்கம், தமிழ்த் திருமண மண்டபம், வழிபாட்டுத் தலம் போன்றவை அமைக்கப்பட உள்ளன. 

தமிழியச் சிந்தனைகளைப் பரப்புதல், தமிழ்நெறிக் கருத்துகளை விதைத்தல், திருக்குறள் நெறியை வளர்த்தெடுத்தல், தமிழ்ச் சமய ஆன்மநெறியை பேணுதல், தமிழ்க்கல்வியை ஊக்குவித்தல், தமிழ் இளையோர்களுக்கு வழிகாட்டுதல் முதலான அரிய தமிழ்ப்பணிகளை முன்னெடுத்து நடத்துவதற்கு இந்தத் ‘தமிழ்க் கோட்டம்’ பேருதவியாக இருக்கும் என்றால் மிகையன்று. 

எனவே, மலேசியத் தமிழர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், ஆர்வலர்கள், செல்வந்தர்கள் அனைவரும் இந்தத் தூய்மையான முயற்சிக்கு நன்கொடையளித்து உதவ வேண்டும் என இவ்வியக்கத்தின் ஏடலர் தமிழ் ஆய்வியல் அறிஞர்  இர.திருச்செல்வம் கேட்டுக்கொண்டார்.

மலேசியாவில் தமிழ்மொழி நிலைத்திருக்கவும் தமிழ் மக்களின் வாழ்வியலை நெறிபடுத்தவும் ஒரு நடுவம் அமைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதனை நன்கு உணர்ந்துகொண்டு ‘தமிழ்க் கோட்டம்’ கட்டடம் அமைய எல்லாரும் துணைநின்று உதவ வேண்டும் என தமிழ் வாழ்வியல் இயக்கப் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். 

மேல்விளக்கங்களுக்கும் தொடர்புக்கும்:-
தலைவர்:- க.முருகையன் 012-4287965
செயலாளர்:- சுப.நற்குணன் 012-4643401
பொருளாளர்:- ம.தமிழ்ச்செல்வன் 013-4392016

மின்னஞ்சல் : tamilkottam@gmail.com

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Thursday, September 12, 2013

ஐ-போன் 5 திறன்பேசியில் தமிழ்.! புதிய இலக்கை நோக்கி நம் தமிழ்.!

2013 செப்தெம்பர் 11ஆம் நாள் தமிழ்மொழி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நாள்.  ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய வகை ஐ-போன் 5இல் முதன் முறையாகத் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது. தமிழ்மொழிக்கு உலக அரங்கில் இது ஒரு மறக்க முடியாத திருப்புமுனையாகும். இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியவர் நம் மலேசியத் தமிழர், கணிஞர் முத்து நெடுமாறன் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.
 
ஐ-போன் 5 திறன்பேசி
இதுவரை வெளிவந்துள்ள திறன்பேசிகளில் (smart phone) தற்பொழுது அறிமுகமாகியுள்ள iOS 7 எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் செல்பேசிகளில்தான் விசைத்தட்டுடன் (keyboard)  கூடிய தமிழ் இயங்குதளம் அதன் மென்பொருளிலேயே சேர்த்து இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தமிழ் விசைகளை நேரடியாக நாம் பயன்படுத்த முடியும் என்பதும் நவீன தொழில் நுட்பத்தில் தமிழுக்கு ஏற்பட்டுள்ள புரட்சிகரமான முன்னேற்றமாகும். தகவல் தொழில்நுட்ப உலகத்தில் நம் தமிழ்மொழி அடைந்துள்ள இந்தப் புதிய வெற்றியானது தமிழ் ஆர்வலர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

image
தமிழ் 99 விசைத்தட்டு

“முரசு அஞ்சல்” விசைத்தட்டு
 
புதிய ஐ-போன் திறன்பேசியில் “தமிழ் 99” மற்றும் “முரசு அஞ்சல்” ஆகிய இருவகை விசைத் தட்டுகளும் இணைக்கப்பட்டுள்ளன. பயனர்கள் இந்த இரு விசைத்தட்டுகளில் ஒன்றைத் தேர்வு செய்து, அதில் தமிழ் மொழி எழுத்துக்களைப் பதிவு செய்யலாம். ஐ-போன்கள், ஐ-பேட் (iPad) எனப்படும் தட்டை, ஐபோட் (iPod) கருவி என இனி எல்லாக் கருவிகளிலும் இந்த முறையில் நேரடியாகத் தமிழைப் பயன்படுத்தலாம்.

இதற்கு முன்பாக தமிழுக்கென உருவாக்கப்பட்ட சில குறிப்பிட்ட செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதன் மூலமும், அல்லது மற்ற திரைப்பக்கங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களை வெட்டி எடுத்து ஒட்டுவதன் மூலமும் அல்லது ஆங்கில எழுத்துக்களின் மூலமாகவும்தான் செல்பேசிகளிலும், தட்டைக் கருவிகளிலும்,  தமிழைப் பயன்படுத்த முடியும் என்ற நிலைமை இருந்து வந்தது.

இத்தகைய செயலிகளின் பயன்பாட்டில் செல்லினம் என்னும் செயலிதான் இதுவரையிலும் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஐ-போன்களில் தமிழ் விசைத்தட்டு அதன் உள்ளேயே மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இனி மற்ற செயலிகளைப் பதவிறக்கம் செய்துதான் தமிழைப் பயன்படுத்தவேண்டும் என்பதில்லை. வெட்டி ஒட்டும் வேலையும் இல்லை.

தொடர்பாளர் பெயர் & பிழைதவிர்த்தி கவனிக்கவும்
எனவே, இனி நேரடியாகவே ஐ-போன்களில், ஐ-பேட் போன்ற தட்டைக் கருவிகளிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்தி குறுஞ்செய்தி அனுப்பலாம். மேலும், முகநூல், ட்விட்டர், வாட்சாப் (Whatsapp), வைபர் (Viber) போன்ற இணையத் தளச் செயலிகளில் செய்திகள், தகவல்களை மிக எளிதாகத் தமிழில் அனுப்பலாம்.

அதே வேளையில், இணையத் தளங்களில் தேடலுக்கு (search) நேரடியாகவே தமிழ் மொழியில் உள்ளடக்கங்களைத் தேடலாம். முகவரிகள், பெயர் பட்டியல்களில் தமிழிலேயே பெயரைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். தங்களுக்கு விருப்பமான தமிழ்ப் பாடல்களை தமிழிலேயே தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்படி எல்லாவற்றிலும், ஐபோன்களில் இருக்கும் எல்லா திரைப்பக்கங்களின் (screen) மூலமாகவும் தமிழைப் பயன்படுத்தலாம்.

தொழில் நுட்பர் முத்து நெடுமாறனின் கருத்து

முத்து நெடுமாறன்
செல்லினம் செயலியை ஐஓஎசு (IOS) மற்றும் ஆன்டிரோய்டு (Android) மென்பொருள் தளங்களில் வடிவமைத்தவர் நமது மலேசியத் தமிழரான முத்து நெடுமாறன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய வகை iOS 7 ஐ-போன்களிலும் தமிழ் மொழியையையும் மற்ற இந்திய மொழிகளையும் வடிவமைத்தவர் நமது முத்து நெடுமாறன்தான் என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய தகவலாகும்.

ஐபோன்களின் தமிழ் மொழியும் இடம் பெற்றுள்ளது குறித்து முத்து நெடுமாறன் பின்வருமாறு கூறினார்:

“திறன்பேசிக் கருவிகளில் தமிழின் பயன்பாடு என்ற முறையில் இது நமக்கெல்லாம் உற்சாகமூட்டக்கூடிய ஒரு முன்னேற்றமாகும். தமிழ் 99 மற்றும் முரசு அஞ்சல் விசைத் தட்டுக்களுடன், மிக அழகான வடிவமைப்பில் தமிழ் எழுத்துக்கள் புதிய ஐபோன்களில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தக் கருவிகளில் தமிழைப் படிப்பதற்கும், எழுதுவதற்கும் எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது.”


“உலகமெங்கும் உள்ள நமது தமிழ் பேசும் மக்கள் இந்த அருமையான கிடைத்தற்கரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தமிழைச் செல்பேசிகளிலும் தட்டைக் கருவிகளிலும் அதிகமாகப் பயன்படுத்துவதோடு, தமிழிலேயே தகவல்களையும், செய்திகளையும், உள்ளடக்கங்களையும் உருவாக்க வேண்டும்; பரிமாற்றங்களும் செய்ய வேண்டும்  எனக் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன். அப்போதுதான், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற திறன்பேசிக் கருவிகளில் தமிழின் பயன்பாடும், தமிழை உள்ளீடு செய்வதும் மேலும் அதிக அளவில் வளர்ச்சி காணும்.

செல்லினம் மென்பொருளைப் பதிவிறக்கம் செய்து பயனீட்டாளர்கள் இதுவரை செய்து வந்த அனைத்து செயல்பாடுகளையும் இனி புதிய ஐ-போன்களில் எந்தவித செயலிகளையும் பதிவிறக்கம் செய்யாமலேயே நேரடியாகவே இனி பயன்படுத்த முடியும் என்பதுதான் தற்பொழுது நிகழ்ந்துள்ள புரட்சிகரமான மாற்றமாகும்; புதுமையான முன்னேற்றமாகும்.

அதுமட்டுமல்லாது, இந்தப் புதிய வகை ஐ-போன்களில் தமிழ் அகரமுதலியும் இணைக்கப்பட்டுள்ளது. இதன்வழி, தமிழில் பிழையின்றித் தட்டச்சு செய்வதற்கு உதவியாகச் சொற்பட்டியும் (predictive text) தானியங்கிப் பிழைதவிர்ப்பியும் (autocorrect) இதில் அடங்கியிருப்பது மற்றொரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி எனலாம்.
விசைத்தட்டு மொழிகளில் 'தமிழ்'

அகரமுதலிகள் பட்டியலில் 'தமிழ்'

இனிவரும் காலம் தமிழுக்குப் பொற்காலமாக மாறக்கூடிய வாய்ப்பினை ஆப்பிள் நிறுவனம் முதன்முதலாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு தமிழ் மக்கள் கணினி, திறன்பேசி, தட்டை, ஆன்டிரோய்டு முதலான திறன்கருவிகளில் தமிழைப் பெருமளவில் பயன்படுத்த முன்வரவேண்டும். தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கும் நிறுவனங்களின் பொருள்களுக்கும் வெளியீடுகளுக்கும் வற்றாத ஆதரவினை வழங்க வேண்டும், இதன்வழியாகப் பல நிறுவனங்கள் தங்கள் வெளியீடுகளில் தமிழை இணைத்துக்கொள்ள வேண்டிய நெருக்குதலை ஏற்படுத்த முடியும்; தமிழ்மொழியின் புழக்கத்தையும் பயன்பாட்டையும் வேகப்படுத்த முடியும்; உலக உருண்டையில் தமிழின் இருப்பையும் நிலைப்படுத்த முடியும்.

உலகப் புகழ்பெற்ற 'ஆப்பிள்' போன்ற நிறுவனங்கள் எல்லாம் தமிழை மதித்து, தங்கள் வெளியீடுகளில் தமிழுக்கு இடம் கொடுக்கும் வேளையில் உலகமெங்கிலும் உள்ள தமிழர்கள் விழிப்புற்று எழுந்து; மனமகிழ்ச்சிப் பொங்க தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து; தங்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தினால் "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகைசெய்தல் வேண்டும்" என்னும் மாபாவலன் பாரதியின் கனவு மெய்ப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. 
@சுப.நற்குணன், திருத்தமிழ்

Blog Widget by LinkWithin