Monday, September 30, 2013

தமிழ்க் கோட்டம்: தமிழுக்கும் தமிழருக்கும் ஒரு மணிமண்டபம்

மலேசியாவில் தமிழுக்கும் தமிழருக்கும் சொந்தமான தனிக் கட்டடம் இல்லாத குறையைத் தீர்க்கும் வகையில் ‘தமிழ்க் கோட்டம்’ எனும் பெயரில் ஒரு கட்டடம் அமையவுள்ளது. தமிழுக்கும் தமிழருக்கும் மலேசியாவில் முதன் முதலாக  இந்த மணிமண்டபம் உருவாகிறது.


கடந்த 1990ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரையிலும் இடைவிடாமல் துடிப்புடன் செயல்படும் தமிழ் வாழ்வியல் இயக்கம் இந்தக் கட்டடத்தை வாங்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழுக்கும் தமிழருக்கும் மலேசியாவில் ஒரு மணிமண்டபமாக இந்தக் கட்டடம் அமையவுள்ளது. ஆகவேதான் இந்தக் கட்டடம் ‘தமிழ்க் கோட்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

எட்டு இலட்சம் வெள்ளி மதிப்புள்ள 3 மாடிகளைக் கொண்ட இக்கட்டடம் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்கும் சொந்தமான ஒரு கட்டடமாக உருவாகி தமிழ்ப்பணியாற்றும் என இயக்கத் தலைவர் க.முருகையன் தெரிவித்தார்.

மலேசியாவில் தமிழையும் தமிழ் இனத்தையும் முன்படுத்தி பல்வேறு இயக்கங்கள் செயல்படுகின்றன. பல இயக்கங்கள் சொந்தக் கட்டடம் இல்லாமல் பிற இனத்தவரின் கட்டடத்தையும் மண்டபத்தையும் பயன்படுத்த வேண்டிய நிலையிலே இருக்கின்றன. இந்த நிலைமையை மாற்றி தமிழுக்கும் தமிழருக்கும் தனிக் கட்டடம் ஒன்றினை அமைத்து ‘தமிழரால் முடியும்’ என்னும் உண்மையை எடுத்துக்காட்ட இந்தத் ‘தமிழ்க் கோட்டம்’ வானுயர எழுந்து நிற்கப் போகின்றது.


‘தமிழ்க் கோட்டம்’ கட்டத்தில் இயக்க அலுவலகம், தமிழிய நூலகம், மேடை அரங்கம், தமிழ்த் திருமண மண்டபம், வழிபாட்டுத் தலம் போன்றவை அமைக்கப்பட உள்ளன. 

தமிழியச் சிந்தனைகளைப் பரப்புதல், தமிழ்நெறிக் கருத்துகளை விதைத்தல், திருக்குறள் நெறியை வளர்த்தெடுத்தல், தமிழ்ச் சமய ஆன்மநெறியை பேணுதல், தமிழ்க்கல்வியை ஊக்குவித்தல், தமிழ் இளையோர்களுக்கு வழிகாட்டுதல் முதலான அரிய தமிழ்ப்பணிகளை முன்னெடுத்து நடத்துவதற்கு இந்தத் ‘தமிழ்க் கோட்டம்’ பேருதவியாக இருக்கும் என்றால் மிகையன்று. 

எனவே, மலேசியத் தமிழர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், ஆர்வலர்கள், செல்வந்தர்கள் அனைவரும் இந்தத் தூய்மையான முயற்சிக்கு நன்கொடையளித்து உதவ வேண்டும் என இவ்வியக்கத்தின் ஏடலர் தமிழ் ஆய்வியல் அறிஞர்  இர.திருச்செல்வம் கேட்டுக்கொண்டார்.

மலேசியாவில் தமிழ்மொழி நிலைத்திருக்கவும் தமிழ் மக்களின் வாழ்வியலை நெறிபடுத்தவும் ஒரு நடுவம் அமைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதனை நன்கு உணர்ந்துகொண்டு ‘தமிழ்க் கோட்டம்’ கட்டடம் அமைய எல்லாரும் துணைநின்று உதவ வேண்டும் என தமிழ் வாழ்வியல் இயக்கப் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். 

மேல்விளக்கங்களுக்கும் தொடர்புக்கும்:-
தலைவர்:- க.முருகையன் 012-4287965
செயலாளர்:- சுப.நற்குணன் 012-4643401
பொருளாளர்:- ம.தமிழ்ச்செல்வன் 013-4392016

மின்னஞ்சல் : tamilkottam@gmail.com

@சுப.நற்குணன், திருத்தமிழ்

No comments:

Blog Widget by LinkWithin