Saturday, October 22, 2011

இணையம் வழி தமிழ்க் கற்றல் கற்பித்தல் (பாகம் 2)



2.0   இணையம் வழிக் கற்றல்


இணையம் வழிக் கற்றல் (e-learning) இரண்டு வகையில் செயல்படுகின்றது. ஒன்று இணையம் வழி கற்பித்தல் (web based instruction, WBI). மற்றொன்று, கல்வி வலைத்தளங்கள் வழி கற்றல் (educational web sites, EWS). இவ்விரண்டும் ஆங்கிலத்தில் மட்டுமே செயற்பட முடியும் என்ற நிலைமை மாறி, இன்று தமிழிலும் மிக இலகுவாகச் செயல்படுத்த முடிகின்றது.

இணையம் வழி கற்பித்தலில் (WBI), இணையம் ஒரு பயிற்றுத்துணைப் பொருளாக அல்லது கற்றல் ஊடகமாகப் பயன்படுகின்றது. அதாவது, ஆசிரியர் மாணவருக்குக் கற்பிக்க இணையத்தை ஓர் ஊடகமாகப் பயன்படுத்திக்கொள்வதாகும். இதன்வழி ஆசிரியர் மாணவருக்கு அல்லது ஒரு மாணவர் இன்னொரு மாணவருக்கு இணையம் வழியாக ஒன்றைப் பயிற்றுவிக்கவும், வழிகாட்டவும், தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் முடிகின்றது. இதற்கு, மின்னஞ்சல் (email), இணைய உரையாடல் (chat), நிகழ்ப்பட கருத்தரங்கு (video conference), மடற்குழு (news group), கோப்பு பரிமாற்று நெறிமுறை (File Transfer Protocol, FTP), சமூக வலைத்தளம் (social network) முதலான இணைய ஏந்துகள் மிகவும் உறுதுணையாக உள்ளன. மேலும் ஆயிரக்கணக்கிலான தமிழ் வலைத்தளங்களும் வலைப்பதிவுகளும் கற்பித்தலுக்கு உதவக்கூடிய தரவுகள், செய்திகள், தகவல்கள், கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எனப் பல்வேறு வகையான கற்றல் கற்பித்தல் மூலங்களை (Teaching and Learning Source) வழங்குகின்றன.
 
அடுத்து, கல்வி வலைத்தளங்கள் வழி கற்றல் (EWS) அணுகுமுறையைப் பற்றி கண்ணோட்டமிடுவோம். கல்வி (education) தொடர்பான இணையத்தளங்களைப் பயன்படுத்தி கற்றுக்கொள்வதே இந்த அணுகுமுறையாகும். இவ்வகையிலான இணையத்தளங்கள் தற்போது தமிழில் அதிகமாகச் செயல்படுகின்றன.  அரசுகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் முதலியவை தமிழ்க்கல்வி தொடர்பான இணையத்தளங்களை நடத்திவருகின்றன. தமிழில் செயல்படும் மின்நூலகம், மின்நூல்கள், கலைக்களஞ்சியங்கள், மின்னகராதிகள் ஆகியனவும் இவ்வகையான கற்றலுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளன.

ஆகவே, ஆசிரியர்களும் மாணவர்களும் இணையத்தைப் பயன்படுத்தி கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் வழிவகைகளை அறிந்து, அமுல்படுத்திச் சிறந்த பலன்களை அடைய வேண்டும்.

@சுப.நற்குணன்


Tuesday, October 18, 2011

இணையம் வழி தமிழ்க் கற்றல் கற்பித்தல் (பாகம் 1)


  கட்டுரைச் சுருக்கம்:-

இந்தக் கட்டுரையானது, தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலுக்கு இணையத்தை எவ்வாறு பயன்கொள்ள முடியும் என்பதையும்; இணையம் தொடர்பான ஏந்துகளைத் (வசதிகள்) தமிழ்மொழி கற்றல் கற்பித்தலுக்கு எவ்வாறெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதையும் ஆராய்கின்றது. மற்ற எல்லாத் துறைகளையும் போலவே, இணையம் கற்றல் கற்பித்தலிலும் மிகப்பெரிய உருமாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மரபு வழிசார்ந்த கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள் குடியிருந்த வகுப்பறைகளில், தற்போது நவினமான அணுகுமுறைகள் இடம்பிடித்துள்ளன. இணையம் வழியான கல்வி முறை ஆசிரியர்களின் கற்பித்தலிலும் மாணவர்களின் கற்றலிலும் புதிய வகைப் பரிணாமங்களை உண்டாக்கிக் கொடுத்திருக்கின்றன. எளிமை, விரைவு, விரிவு, விளைபயன், ஈர்ப்பு, மனமகிழ்வு, பல்லூடகம் முதலான தன்மைகளைக் கொண்டிருப்பதால், இணையம் வழியான கல்வி முறை இன்றையக் காலத்திற்கு மிகவும் ஏற்றதாகவும் தவிர்க்க இயலாத ஒன்றாகவும் ஆகிவிட்டது. தவிர, கற்றல் கற்பித்தலுக்கு உதவும் வகையில் பலவகையான இணைய ஏந்துகள் (வசதிகள்), செயலிகள், மென்பொருள்கள், வலைத்தளங்கள் முதலியவை நிறைய வந்துவிட்டன. இணையத்தைப் பயன்படுத்தி தமிழ்மொழியைக் கற்கவும் கற்பிக்கவும்கூடிய வழிவகைகள் அறிந்து செயல்படுத்த வேண்டும். மொத்தத்தில், தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தையும் இணைய ஏந்துகளையும் முறைப்படுத்தித் திட்டமிட்டுச் சரியாகப் பயன்படுத்தினால் நன்மை விளையும் என்பதில் ஐயமில்லை.


1.0   முன்னுரை

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் மிக விரைவான வளர்ச்சி கல்வித் துறையிலும் மிகப் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கணினியையும் இணையத்தையும் பயன்படுத்தாத கல்வி நிறுவனங்களே இல்லை என்கின்ற அளவுக்குத் தொடக்கப் பள்ளி தொடங்கி உயர்க்கல்விக் கழகங்கள் வரையில் எல்லா இடங்களிலும் இதன் ஆதிக்கம் பெருகி வருகின்றது. இத்தகையச் சூழலில், கற்றல் கற்பித்தலில் இணையமும், இணைய ஏந்துகளும் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டன எனலாம். கோலின்சு (1996) என்பார் கூற்றின்படி, 1996 / 1997ஆம் ஆண்டுகளிலேயே கற்றல் கற்பித்தலில் இணையம் ஊடுருவி வளர்ந்துவிட்டது என்கிறார்.

இதன் அடிப்படையில், இணையம் வழியான கற்றல் கற்பித்தல் முறைமை இன்று மிகவும் புகழ்பெற்றதாகவும் எல்லாராலும் விரும்பப்படுவதாகவும் இருக்கின்றது. ஆகவேதான், இணையத்தைப் பயன்படுத்தி கற்றல் கற்பித்தலை வழிநடத்துவதற்கு உலகம் முழுவதிலும் உள்ள எல்லாக் கல்வி நிறுவனங்களும், தனியார், தன்னார்வ நிறுவனங்களும் முண்டியடித்துக்கொண்டு முயற்சிகளை முன்னெடுக்கின்றன. 
 
இணையத்தின் வழியாக அல்லது செயலிகள், மென்பொருள்கள், வலைத்தளங்கள், மின்னிதழ்கள், ஒலி ஒளி மின்னூடகங்கள், மடற்குழுக்கள், சமூக வலைத்தளங்கள் முதலான இணைய ஏந்துகள்  வழியாகத் தமிழ்மொழியைக் கற்கவும் கற்பிக்கவும் வேண்டிய தேவைகள் அதிகரித்து வருகின்றன. ஆகவே, காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய அணுகுமுறையில் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலை மேம்படுத்த வேண்டும். அதற்குரிய விரிவான வாய்ப்புகள் இன்று உருவாகி இருப்பதை ஊக்கத்துடன் வரவேற்று விரிவாகப் பயன்கொள்ள வேண்டும்.

Blog Widget by LinkWithin