Monday, April 14, 2008

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 2



தமிழர் கண்ட கால அளவீடு

பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.
ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.

திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள்.

பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும்.

வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும்.

சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது.

சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். "நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவி" எனும் பாடல் நாள்மீன்(நட்சத்திரம்) பற்றி பேசுகிறது. "திங்கள் முன்வரின் இக்கே சாரியை" என்ற பாடல்வரி மாதத்தைப் பற்றியது. எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.

மேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேவைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும்.

இதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவைச் சொல்லும்போது இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி என்கிறார் தொல்காப்பியர்.

"கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே" (தொல்)
காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

4 comments:

இளங்குமரன் said...

அருமையான வலைப்பூ. சிறந்த தகவல் களஞ்சியமாக உள்ளது. வாழ்த்துகள். தங்கள் தமிழ்த் தொண்டு வளர்க.

நாளிகை அல்ல நாழிகை என்றே இருக்கவேண்டும்.

அன்புடன் இளங்குமரன்.

HK Arun said...

//பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது.//

என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இதற்கான சரியான சான்றுகள் கிடைக்குமாயின் தமிழர் புத்தாண்டு எது என்பது குறித்த ஒரு முழுமையான தெளிவுக்கு வாய்ப்பாக இருக்கும் என நினைக்கின்றேன்.

முயற்சி எடுப்பீர்கள் என எதிர்ப்பார்க்கின்றேன்.

நன்றி

ஆதிரையன் said...

மிகவும் பயனான செய்தி ஐயா.தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்.

அன்புடன்,

ஆதிரையன்.

ஆதிரையன் said...

பயனான செய்தி ஐயா.தங்களின் முயற்சிக்கு எனது வாழ்துகள்.

அன்புடன்,

ஆதிரையன்.

Blog Widget by LinkWithin