Saturday, May 03, 2008

கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம்-3


பிறமொழி ஒலியைத் தமிழில் எழுத முடியுமா?

உலகின் எந்த மொழியிலும், பிறமொழிச் சொற்களைச் சரியாக எழுதமுடியாது. ஒரு மொழியிலுள்ள எழுத்துகளைக் கொண்டு எந்த அளவுக்குப் பிறமொழிச் சொற்களை அவற்றுக்கு நெருக்கமான ஒலிகளூடன் எழுத முடியுமோ அந்த அளவே எழுத முடியும். பிறமொழிச் சொற்களின் சரியான ஒலிப்பைப் பாதுகாப்பதற்காக, எந்த மொழியினரும் தம் மொழி இலக்கணத்தையும் மரபையும் மாற்றிக் கொள்வதோ அல்லது இல்லாத புதிய எழுத்துகளை உருவாக்கிக் கொள்வதோ ஒருபோதும் இல்லை.

காரணம், தங்கள் மொழியின் இலக்கண வரம்புகளையும் மரபுகளையும் சிதைத்துவிட்டு, பிறமொழி ஒலிப்பைச் சரியாகப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிற மனப்போக்கே எதிர்மறையானதாகும். பிறமொழி ஒலிக்காக நமது மொழியைச் சிதைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்தப் பிறமொழிக்குரியவர்களே விரும்பவோ எதிர்பார்க்கவோ மாட்டார்கள். அவர்களே எதிர்பார்க்காத மதிப்பை, நமது சொந்த மதிப்பைக் கெடுத்தாகிலும் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்று எண்ணுவது உண்மையில் மிகக் கடுமையான தாழ்வு மனப்பான்மையாகும். தன்மதிப்புள்ள எவரும் இதனை ஏற்கமாட்டார்.

பிறமொழி ஒலிகள் எப்படி எழுதப்படுகின்றன?


தமிழ் என்ற சொல்லை உலகப் பெருமொழியான ஆங்கிலத்தில் 'டமில்' (Tamil) என்றுதான் எழுதமுடியும். அவர்கள் அப்படித்தான் எழுதுகிறார்கள். அதுபற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை; நாமும் அதனைக் குறையாகக் கருதுவதில்லை. அரபு மொழியில் எகர ஒகரங்கள் இல்லை. எனவே, அந்த மொழியில் அமெரிக்கா, மலேசியா என்ற நாட்டுப் பெயர்களை ஒலிப்பு மாறாமல் எழுத முடியாது. அரபியர்கள் இவற்றை 'அமிரிக்கா' என்றும் மலீசியா என்றுந்தான் எழுதுகிறார்கள். இதற்காக, அரபியர்கள் கலவைப்படுவதில்லை.

எனவே, எந்த மொழியும் எந்த மொழிக்காகவும் செய்யாத இந்த வேலையை, நாம் நம் தமிழ்மொழியைச் சிதைத்தாவது மற்ற மொழிகளுக்காகச் செய்யவேண்டும் என்பது வெட்கப்பட வேண்டிய கருத்தாகும்.

கி.பி 6ஆம் நூற்றாண்டில் கிரந்த எழுத்துகள் உருவாக்கப்பட்டதும் கூட சமற்கிருத வேதமொழிகளைத் தமிழில் ஒலிபெயர்ப்பதற்கே அன்றி, பொதுப்பயனீட்டுக்காக அன்று. அதன்பிறகு 17ஆம் நூற்றாண்டில் (திருப்புகழ் பாடிய) அருணகிரிநாதர் பாடும் வரை எந்தத் தமிழ்ப் புலவரும் வடசொல்லை ஆண்டாலும் கிரந்த எழுத்தை ஆளவேயில்லை. அதற்குப் பிறகும், உமறுப் புலவர், சேகனாப் புலவர், வீரமாமுனிவர் போன்ற பலரும் கிரந்த எழுத்தை ஆளவில்லை. கடந்த 3 நூற்றாண்டுகளாகவே கிரந்த எழுத்து நூல்வழக்குப் பெற்றது. கடந்த 300 அல்லது 350 ஆண்டுகள் தவிர மற்ற எல்லாக் காலத்திலும் தமிழ், கிரந்த எழுத்து இன்றியே இயங்கியது. எனவே, இன்றும் இனி என்றும் அவ்வாறே இயங்க முடியும்.

எனவே, கட்டாயத் தேவையின்றியும், பிறமொழியினரே எதிர்பார்க்காத ஒன்றைப் பிறமொழிக்குச் செய்யும் வேண்டாத முயற்சிக்காகவும், அப்படியே முயன்றாலும் அதனை முழுமையாகச் செய்யவியலாத நிலையிலும்; நம் தமிழ்மொழியின் அமைப்பையும் செம்மையையும் கெடுக்கலாம் – கெடுக்க வேண்டும் என்று எண்ணுவதும்; அதற்காக வாதமும் பிடிவாதமும் செய்வது சரியன்று.

வழக்கிலிருக்கும் கிரந்த எழுத்துப் பயனீட்டைக் குறைக்கும் முயற்சியில் தமிழுணர்வாளர்கள் ஈடுபட்டுள்ள காலத்தில், அவற்றை வலிந்து மேலும் திணிக்க முயல்வது, அதிலும் குறிப்பாகத் தமிழ்க் கல்வியாளர்கள் அவ்வாறு செய்வது ஆக்கமான நடவடிக்கையன்று. அது, வீண் குழப்பத்துக்கும் வேற்றுமைக்கும் போராட்டத்துக்குமே வழிவகுக்கும்.

ஆனாலும், தொல்காபியக் காலத்திலேயே வடசொல்லும் கிரந்தமும் தமிழில் கந்துவிட்டதே.. எப்படி? (பாகம் 4-ஐத் தொடர்க..)

No comments:

Blog Widget by LinkWithin