Saturday, November 28, 2009

இலக்கியம் இழுத்துப் பறிக்கிறது; இதயம் வலிக்கிறது


மலேசியக் கல்வித்திட்ட அமைப்பில் மிக முக்கியமான தேர்வாக இருப்பது எசுபிஎம் தேர்வு. 6 ஆண்டுகளுக்குத் தொடக்கப் பள்ளியிலும் பின்னர் 5 ஆண்டுகளுக்கு இடைநிலைப்பள்ளியிலும் கற்கும் மாணவர்களின் அடுத்தக்கட்ட பயணத்தை முடிவுசெய்யும் மிக முக்கியமான தேர்வாக இது இருக்கிறது.

உயர்க்கல்விக் கூடம், கல்லூரி, பல்கலைக்கழகம், தனியார் துறை வேலை வாய்ப்பு, அரசுத்துறை வேலை என எதுவாக இருந்தாலும் அதில் நுழைவுத் தகுதியாக - அடிப்படைத் தகுதியாக எசுபிஎம் தேர்வு அடைவுநிலைதான் இருந்து வருகிறது. அந்த அளவுக்கு முகன்மைத்தரம் வாய்ந்த இந்த தேர்வில் தமிழ்மொழிப் பாடமும் தமிழ் இலக்கியப் பாடமும் தேர்வுப் பாடங்களாக இருந்து வருகின்றன.

ஆனால், மலேசியத் தமிழ் மாணவர்கள் காலங்காலமாக எழுதிவந்த இந்த இரண்டு தேர்வுகளுக்கும் இப்போது பேராபத்து வந்து கழுத்தில் கத்தி வைத்துக்கொண்டு நிற்கிறது. மலேசியாவில் தமிழ்மொழிக்கு வாழ்வா? சாவா? என்ற மிகவும் நெருக்கடியான சூழ்நிலை இப்போது உருவாகி இருக்கிறது.

மேற்சொன்ன எசுபிஎம் தேர்வில், அடுத்த 2010 தொடங்கி 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என கல்வியமைச்சு கொடுத்த அறிவிப்புதான் தமிழ்மொழிக்கு ஏற்பட்டுள்ள பயங்கரமான நெருக்கடிக்கு காரணம். இந்தப் 10 பாடங்களில் 6 பாடங்களைக் கண்டிப்பாக எல்லா மாணவர்களும் எடுத்தாக வேண்டும். மீதமுள்ள 4 பாடங்களை மாணவர்களே தெரிவு செய்யலாம்.

அவ்வாறு மாணவர்கள் தேர்வு செய்யும் பாடங்கள், அவர்களுடைய எதிர்காலத்திற்குக் குறிப்பாக அவர்களுடைய மேற்படிப்பிற்கும் அல்லது வேலை வாய்ப்புக்கும் உறுதிப்பாடு(உத்தரவாதம்) அளிப்பதாக இருக்க வேண்டும். இந்தச் சூழலில், தமிழ் மாணவர்கள் மூன்று வேறு பாடங்களோடு நான்காவதாகத் தமிழ்மொழியை ஒரு பாடமாக எடுக்கலாம். அதுவும், தமிழ்க் கற்ற மாணவர்களும் உண்மையிலேயே தமிழைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள்தாம் இதனைச் செய்வார்கள். தமிழ் படித்திருந்தாலும் அதில் ஆர்வமும் ஈடுபாடும் இல்லாதவர்கள் கண்டிப்பாகத் தமிழைக் கைவிட்டுவிடுவார்கள் என்பது திண்ணம்.

இப்படியாக, கட்டாயப் பாடம் 6, மாணவர்கள் தேர்வு செய்தவை 4 என 10 பாடங்கள் முழுமையடைந்துவிட்டால், தமிழ் இலக்கியத்தை எப்படி தேர்வுக்கு எடுக்க முடியும்? இதுதான் இப்போது மலேசியத் தமிழர்களிடையே வெடித்துள்ள மாபெரும் சிக்கல்.

இதுவரை சொன்னது எல்லாமே கலைத்துறை சார்ந்த மாணவர்களின் சூழ்நிலைதான். அறிவியல் துறையில் பயிலும் மாணவர்களின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக இருக்கிறது. அறிவியல் துறையில், 6 கட்டாயப் பாடங்கள் போக, மீதமுள்ள 4 நான்கு பாடங்களில், அறிவியல் துறை சார்ந்த இரசாயணம், வேதியல், பௌதிகம் முதலிய பாடங்களையும் கண்டிப்பாக எடுத்தாக வேண்டிய சூழல் இருப்பதால் தமிழை எடுக்கும் வாய்ப்பு கடுகளவும் கிடையாது. அதையும் தாண்டி, தமிழ் இலக்கியப் பாடம் எடுக்கும் சூழல் அறவே அற்றுபோய்ட்டது.

இப்படியான ஒரு நெருக்கடி சூழலில் இப்போது தமிழ்க்கல்வி மாட்டிக்கொண்டு பரிதவித்துக்கொண்டிருக்கிறது. அதனை நினைக்கையில் மலேசியத் தமிழர் உள்ளங்கள் எல்லாம் தாங்கொணாத் துயரில் துடித்துக்கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில், கல்வியமைச்சின் முடிவினைக் கண்டித்தும் 10 பாடங்கள் என்பதை 12 பாடங்களாக மாற்றி அமைக்கும்படியும் தமிழ் – தமிழர் சார்ந்த பொது இயக்கங்களும் தமிழ்ப் பற்றாளர்களும் தொடர்ந்து கண்டனக் குரல்கொடுத்து வருகின்றனர்; விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்; கல்வியமைச்சுடன் கலந்துரையாடல் செய்து வருகின்றனர்; தமிழைக் காப்பாற்றவும் தமிழ்மொழியின் நீடுநிலவலை உறுதிப்படுத்தவும் போராடி வருகின்றனர்.


அந்தவகையில், தமிழ்க் காப்பகத்தின் தலைவர் சு.வை.லிங்கம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு கல்வியமைச்சிடம் கலந்துரையாடல் நடத்தப்பட்டு, விளக்க அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கையெழுத்து வேட்டை நடத்தி அதனை கல்வியமைச்சின் பார்வைக்குக் கொண்டுசெல்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்களுடைய அறிக்கையில் பின்வரும் செய்திகளை மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

1.சிறுபான்மை சமூகத்தின் மொழி உணர்வுகளுக்கும் அரசாங்கம் மரியாதை தர வேண்டும்.
2.தமிழ் இலக்கியப் பாடத்திற்கு நேர்ந்துள்ள இடர் குறித்து நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்திலும் குரல் எழுப்பாமல் மௌனம் சாதிக்கும் இந்திய சமூகத்தின் பிரதிநிதிகளுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
3.தமிழுக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தடையினால் ஏறக்குறைய நான்காயிரம் மாணவர்கள் தமிழ்ப்பள்ளியிலிருந்து பிற பள்ளிகளுக்குச் செல்லும் நிலை ஏற்படும்.
4.தனிழ் இலக்கியம் படிக்கும் வாய்ப்பு இல்லையெனில், தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்புகள் தடைபடும்.
5.இதனால், மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையும் இழுத்து மூடப்படும் பேராபத்து ஏற்படும்.


அடுத்து, மலேசிய இந்து சங்கம் உள்ளிட்ட 13 அமைப்புகளும் ஒன்றுகூடி ஆ.திருவேங்கடம் தலைமையில் மலேசியக் கல்வியமைச்சின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்கள் முன்வைத்துள்ள விடயங்கள் பின்வருமாறு:-

1.எசுபிஎம் தேர்வில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கலால் ஆறாம் படிவத்தில் எசுதிபிஎம் (STPM) தேர்வுக்குத் தமிழை எடுக்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து போகும்.
2.எனவே, 5ஆம் படிவ எசுபிஎம் தேர்வில் 10 பாடங்கள் என்ற முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
3.பள்ளிகளில் தமிழ், தமிழ் இலக்கியப் பாடங்களை எடுப்பதற்கு வாய்ப்புகள் விரிவான முறையில் உருவாக வேண்டும்.
4.கல்வியமைச்சின் முடிவைக் கண்டித்து நாடுமுழுவதும் மாநில, நகர அளவில் கனவ ஈர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
5.பிரதமருக்கு இதன் தொடர்பில் கோரிக்கைகள் விடுக்கப்படும்.


தமிழுக்கு நேர்ந்துள்ள இந்த இக்கட்டான நிலைமையைக் கண்டித்து “தமிழ் எங்கள் உயிர்” குழுவின் சார்பில் வழக்கறிஞர் பொன்முகம் தலைமையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வெளியிட்ட அறிக்கையின் விவரங்கள் கீழே:-

1.மலாயாப் பல்கலைக்கழகம் இந்திய ஆய்வியல் துறையின் பெயரை மாற்ற முடிவு செய்ததற்கும், இப்போது இலக்கியப் பாடம் எழுத கல்வி அமைச்சு மறுப்பதற்கும் தொடர்பு இருக்குமோ என ஐயுற வேண்டியுள்ளது.
2.எவ்வித ஆய்வும் நடத்தாமல், தமிழ் இலக்கியம் எடுக்கும் மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மறுப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.
3.நாட்டிலுள்ள தமிழ் அமைப்புகள் அனைத்தும் உடனடியாக கூட்டங்களை நடத்தி, “ஐந்தாம் படிவத் தேர்வான எசுபிஎம்மில் தமிழ் இலக்கியம் இடம்பெறுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்” என்னும் தீர்மானத்தை நிறைவேற்றி திருவேங்கடம் தலைமியிலான சிறப்புக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
4.அந்த சிறப்புக் குழுவினர், கிடைக்கப்பெறும் அனைத்துத் தீர்மானங்களையும் சேகரித்து கல்வி அமைச்சரைச் சந்தித்து க் கொடுப்பதோடு சமுதாயத்தின் ஒன்றுபட்ட கருத்தைத் தெரிக்க வேண்டும்.

மலேசியாவில் தமிழ்மொழியைக் காக்கவும் தமிழ் இலக்கியத்தை நிலைபெறச் செய்யவும் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே குரலில் உரக்கக் கருத்தறிவிக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழ் இளைஞர் இயக்கங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், எழுத்தாளர் சங்கங்கள், இலக்கிய அமைப்புகள், வாசகர் வட்டங்கள், எழுத்தாளர்கள், பாவலர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் என அனைவரும் அமைதி வழியில்நின்று அறந்தவறாமல் போராடி தமிழை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயக் காலத்தில் இருக்கிறோம்.

இதனை உடனடியாக உணர்ந்துகொள்ள வேண்டும்; அந்த உண்மை உணர்வுடன் செய்யத்தக்க அனைத்தையும் செவ்வனே செய்ய வேண்டும்.

தொடர்பான செய்தி:

எசுபிஎம் தேர்வில் தமிழை அகற்றும் முயற்சிக்குக் கடுமையான கண்டனம்:- மலேசியா இன்று - (இங்கு சொடுக்கவும்)

Wednesday, November 25, 2009

2012:- மறுமொழிகள் மாயமாக மறைந்த கதை

2005 முதல் திருத்தமிழ் வலைப்பதிவை எழுதி வருகிறேன். கணினி – இணையம் – வலைப்பதிவு உலகம் பற்றியும் இவை தொடர்பிலான தொழில்நுட்பம் பற்றியும் பெரிதாக எதுவும் அறியாதவன்; தெரியாதவன். ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பமும் படித்தறியாதவன்.

ஏதோ, கைமண் அளவுக்கு நானறிந்த சில திறன்களின் துணைகொண்டு வலைப்பதிவு எழுதி வருகிறேன். அதுவும்கூட, இறைமைத் திருவருள் வலத்தால் எனக்கு வாய்க்கப்பெற்ற எனது தாய்மொழியாம் தமிழுக்குப் பணிசெய்து கிடப்போம் என்ற மெல்லிய உணர்வின் அடிப்படையில்தான் இதனைச் செய்துவருகின்றேன்.

என்னைப் பற்றி சொன்னது இத்தோடு நிற்கட்டும். இனி, நான் சொல்லவந்த ‘2012: மறுமொழிகள் மாயமாய் மறைந்த கதையைச்’ சொல்கிறேன். கதையைப் படித்துவிட்டு, வலைப்பதிவர்கள் யாரேனும் எனக்கு உதவினால் நன்றியுடையவனாக இருப்பேன்.



'2012 திரைப்படமும் தமிழரின் தாயகம் குமரிக்கண்டமும் பாகம்1'


'2012 திரைப்படமும் தமிழரின் தாயகம் குமரிக்கண்டமும் பாகம்2'


என்று மூன்று பதிவுகளை எழுதியிருந்தேன். அவற்றில், பழந்தமிழரின் தாய்மண்ணாகச் சொல்லப்படும் குமரிக்கண்டம் பற்றி எழுதியிருந்தேன்.

புதியவர்கள் பலருடைய கவனத்தை அப்பதிவுகள் ஈர்த்திருந்தன. அதற்குப் பலர் மறுமொழிகள் எழுதியிருந்தனர். குறிப்பாக, வலைப்பதிவு எழுதா நீலகண்டன், வலைப்பதிவர் பாலாஜி ஆகிய இருவரும் தொடர்ச்சியாக எதிராடல் செய்தனர்.

நானும், சற்றும் சலிக்காமல் அவர்களுக்குத் தக்க பதில்களை எழுதியிருந்தேன். இருப்பினும், என்னுடைய பதில்கள் அவர்களுக்கு நிறைவளிப்பதாக இல்லை போலும். மீண்டும் மீண்டும் பல கோணங்களில் கருத்தாடல் புரிந்தனர்.

அன்பர்கள் நீலகண்டன், பாலாஜி இருவரையும் தவிர்த்து மற்றொரு வலைப்பதிவர் மனோகரன் கிருஷ்ணன், எனது எழுத்துக்கு ஆதரவாக மறுமொழிகள் எழுதியிருந்தார். மேலும், எனது பதிவுக்குத் தொடர்பான மேலதிக செய்திகளையும் அரிய தகவல்களையும் கொடுத்திருந்தார்.

இது நடந்து ஒரு வாரம் கழித்து இன்று 25-11-2009 காலையில் மீண்டும் எனது வலைப்பதிவைப் பார்வையிட்டபோது பேரதிர்ச்சி அடைந்தேன்.

மேற்கண்ட மூவரும் எழுதிய ஓரிரு மறுமொழிகள் மாயமாக மறைந்து போயிருந்தன. அவர்களுக்கு நான் எழுதிய பதிகளும் நீக்கப்பட்டிருக்கின்றன.

அன்பர் நீலகண்டன் குமரிக்கண்டத்தை மறுத்து எழுதிய மறுமொழிகளில் எழுப்பிய அனைத்து ஐயப்பாடுகளுக்கும் ஒன்றுவிடாமல் தக்க பதில் எழுதியிருந்தேன்.

குமரிக்கண்டம் பற்றி நான் எழுதிய செய்திகளை மடைமாற்றும் தோரணையில் அவர் எழுதிய அனைத்தையும் நடுநிலையோடு அணுகி நியாயமான பதிலுரைகளை வழங்கி இருந்தேன்.


அதேபோல், ஆதாம், ஏவால், ஏதென்சு நகரம் என பதில்களில் நான் குறிப்பிட்டிருந்த சில செய்திகளை அன்பர் பாலாஜி மறுத்து எழுதியிருந்தார். அவருக்கும் தக்கபடி பதிலுரைகள் எழுதியிருந்தேன்.

இவர்களுடைய அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும் நான் எழுதிய கருத்துகளுக்கு வலுசேர்க்கும் வகையிலும் நண்பர் மனோகரன் கிருஷ்ணன் மிக சிறப்பான தரவுகளோடு மறுமொழிகள் இட்டிருந்தார்.

இவையும் சேர்ந்து மாயமாக மறைந்து போய்விட்டன; பின்கதவு வழியாக எவரோ ஒருவரால் நீக்கப்படுள்ளன. இது எப்படி சாத்தியம்? எப்படி முடியும்? யார் இதனைச் செய்திருப்பார்? இதில் எதற்குமே எனக்குப் பதில் தெரியவில்லை. ஆனால், ஏன் செய்திருப்பார் என்பதை மட்டும் ஓரளவு ஊக்கிக்க முடிகிறது.

அன்பர் நீலகண்டன் மறுத்து எழுதிய மறுமொழி இருக்கிறது. ஆனால், அதற்கு நான் எழுதிய பதிலைக் காணோம். இன்னும் சிலருடைய மறுமொழிக்கு நான் கொடுத்திருந்த பதில்களைக் காணோம். சில மறுமொழிகளுக்கு நான் சான்றுகளோடு எழுதிய பதில்கள் நீக்கப்பட்டுள்ளன.

‘2012 படம்.. தமிழருக்குச் சொல்லுகிறது ஒரு பாடம்’ - இப்பதிவில் 6 மறுமொழிகளைக் காணோம்.

'2012 திரைப்படமும் தமிழரின் தாயகம் குமரிக்கண்டமும் பாகம் 1' - இப்பதிவில் 1 மறுமொழி மாயமாகிவிட்டது.

'2012 திரைப்படமும் தமிழரின் தாயகம் குமரிக்கண்டமும் பாகம் 2' - இதில் 2 மற்மொழிகள் நீக்கப்பட்டுள்ளன.

இப்போது, புதிதாக என்னுடைய அந்தப் பதிவையும் அதற்கு வந்த மறுமொழிகளையும் படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள் தெரியுமா? நான் ஏதோ பொய்யான செய்திகளை எழுதியிருப்பதாக நினைக்கும் அளவுக்கு மறுமொழி பெட்டகத்தில் தீய நோக்கத்தோடு ஒரு மாபெரும் கீழறுப்பு வேலையை எவரோ செய்திருக்கிறார்?

இவையெல்லாம் எப்படி நடந்தது என எனக்குத் தெரியவில்லை. அப்படியே, எந்த மறுமொழியையாவது நீக்க வேண்டுமானால், வலைப்பதிவு உரிமையாளர் மட்டும்தானே அதைச் செய்ய முடியும். மற்றவர்கள் செய்கிறார்கள் என்றால் எப்படி?

என்னுடைய வலைப்பதிவில் எப்படி உட்புகுந்து இதனைச் செய்திருப்பார்கள்? யார் செய்திருப்பார்கள்? என குழம்பிப் போயிருக்கிறேன்.

இதற்கு, வலைப்பதிவர்களோ அல்லது வாசகர்களோ யாரேனும் இதுபற்றி எனக்குச் சொல்ல முடியுமா?

என்னுடைய விளக்கங்களும் எனது கருத்துக்குச் சார்பான மறுமொழிகளும் காணாமல் போனதே அன்றி, எனது கருத்துகளை மறுத்து எழுதப்பட்ட மறுமொழிகள் சில அப்படியே உள்ளன; சில நீக்கப்படுள்ளன. அவற்றை நான்தான் வெளியிடவில்லை என நினைத்து அன்பர் பாலாஜி ஒரு மறுமொழியும் இட்டுள்ளார்.

இதிலிருந்து ஒன்று எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. தமிழனையும் தமிழன் வரலாற்றையும் சான்றுபட விவரிக்கும் என்னுடைய பதிவையும் மறுமொழிகளுக்கான பதில்களையும் பொறுக்கமாட்டாமல்.. எரிச்சல் அடைந்து இதனைச் செய்திருக்கிறார்கள் என ஐயப்படுகிறேன்.

தமிழுக்காக, தமிழ் இனம் – சமயம் – வரலாறு – வாழ்வியல் ஆகியவற்றுக்காக நான் அறிந்த – படித்த – கண்ட – கேட்ட செய்திகளையும் தகவல்களையும் எழுதுவது தவறா?

தமிழின் மேன்மையை – தமிழன் சிறப்பை – தமிழன் வரலாற்றின் முதன்மையை ஏன் சிலரால் பொறுத்துகொள்ள முடியவில்லை? யார் இவர்கள்? எங்கே இருக்கிறார்கள் இந்தத் தமிழ்ப் பகைவர்கள்?

கருத்துக்கு கருத்து என மோத முடியாத சிலர் இப்படியான கோளாறுகளைச் செய்து என்னையும் எம்போன்ற உணர்வாளர்களையும் வீழ்த்துவதற்கு வெறிகொண்டு அலைவது ஏன்?

வரலாற்றுக் காலத்திருந்து தமிழன் மேன்மையை – அறிவை – ஆற்றலை தாங்கிக்கொள்ள முடியாமல், சூழ்ச்சியும் – கீழறுப்பும் – இருட்டடிப்பும் – மறைமுகத் தாக்குதலும் செய்வது ஏன்? ஏன்? ஏன்?


இந்தச் சோதனைக்குள்ளும் எனக்கு ஆறுதலாக ஒரு விடயமும் இருக்கிறது. தமிழ்மணத்தின் “ம” திரட்டி தான் அந்த ஆறுதலுக்குரிய விடயம். ஆம்! அதுதான், என்னுடைய அனைத்து மறுமொழிகளையும் சேமித்து எனக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறது. அதற்காக, தமிழ்மணத்திற்கு நனிநன்றிகள் சொல்ல கடமைப்பட்டவனாகிறேன்.

Monday, November 23, 2009

தமிழ்த்தாய் பெற்றெடுத்த உலகத்தின் அம்மாக்கள்



ருமுதுகுரவர் என்பது தாய் தந்தை இருவரையும் குறிக்கும் தமிழ்ச் சொல்லாட்சி. உலக மொழிகளை மூன்று முகமையான குடும்பங்களில் வகைப்படுத்துகிறார்கள். இந்த மூன்று மொழிக்குடும்பங்களிலும் இருமுதுகுரவரின் பெயர்கள் தமிழாகவே இருக்கின்றன அல்லது தமிழின் திரிபாக இருகின்றன. இதிலிருந்து, பழமையான உலகமொழிகளுக்குத் தமிழ் சொற்கொடை வழங்கியிருக்கிறது என்பது தெரியவருகிறது. அதுமட்டுமல்லாம், தமிழ் பல பழமையான மொழிகளுக்குத் தாயாக இருந்திருப்பதும் தெரியவருகிறது.

‘உலக அப்பாக்களுக்குத் தமிழே தாய்’ என்ற கடந்த பதிவில் ‘அப்பா’ எனும் தமிழ்ச்சொல் உலகமொழிகளில் எவ்வாறு வழங்கிவருகிறது என்று கண்டோம். அதுபோலவே, இந்த முறை அதோபோல ‘அம்மா’ எனும் தமிழ்சொலின் பரவலைக் காண்போம் வாருங்கள்.

தமிழில் அம்மாவை குறிக்கும் சொற்கள் அம்மை, அம்மன் ஆகியன. தமிழர் வழிபடும் பெண்தெய்வத்திற்கும் இப்பெயரை இட்டுள்ளனர். இச்சொற்கள் பிறமொழிகளில் ஆளப்படுகின்றன.

தமிழ்:- அம்மை(தாய்), அம்மன் (காளி, பெண்தெய்வம்)

மலையாளம்:- அம்ம, உம்ம // கன்னடம்:- அம்ம, தெஅம்ம, கோஅம்மன்(தெய்வம்), குஅம்மெ, துஅம்ம // கோலாமி:- அம்ம, நாஅம்ம // பிராகுவீ:- அம்மா // துளு:- அம்மெ(தந்தை).

குசராத்தி:- மா // இந்தி:- மாம் // வங்காளம்:- மா.

திபேத்தியம்:- ம, மொ // மலாய்:- அமா, எமா // சீனம்:- மா.

சமாயிதம்(Samoiede):- அம்ம // செனசெய்(Jenesei):- அம்ம // அம் // எசுத்திரியன்(Estrian):- எம்ம // பின்னியம்(Finnish):- எமா // அங்கேரியம்:- எமெ // சிந்தி:- அமா.

எபிரேயம்:- ஏம் // அரபி:- உம் // சீரியம்(Syriac):- ஆமோ.

ஐசிலாந்தியம்:- அம்ம(பாட்டி) // பழஞ்செருமானியம்:- அம்ம // செருமானியம்:- அம்மெ(செவிலி) // ஆசுக்கன்(Oscan):- அம்ம // ஆங்கிலம்:- மம்ம, மம் // பிரெஞ்சு:- மமன் // இசுபானியம்(Spanish):- மம // கிரேக்கம்:- மம்ம, மம்மெ // சமற்கிருதம்:- அம்மா, அம்பா.

அம்மை என்பது அவ்வை என தமிழில் மருவியொலிக்கும். தாய், பாட்டி என்பன இவற்றின் பொருள்கள்.

தமிழ்:- அம்மை = அவ்வை

கன்னடம்:- அவ்வ, அவ்வெ(தாய், பாட்டி, கிளவி) // தெலுங்கு:- அவ்வ // துளு:- அப்பெ(ஆயா) // குடகு:- அவ்வெ // கோலாமி:- அவ் // துடவம்:- அவ் // பர்சி:- அவ்வ(பாட்டி) // கோண்டி:- அவ்வல்.

இலத்தின்:- அவுஸ்(பாட்டன்), ஆவிய(பாட்டி), அவ்-உங்குளுஸ்(அம்மான்)

அம்மாவைக் குறிக்கும் மற்றொரு தமிழ்ச்சொல் அன்னை என்பது அறிந்ததே. இதன் பரவலை இனி பார்ப்போம்.

தமிழ்:- அம்மை, அன்னை

இந்தி:- அன்னி(செவிலி)

துருக்கி:- அன்ன, அன // ஒசித்தியம்(Ostiak):- அனெ, மா, அனை // அங்கேரியம்:- அன்ய, பின்அன்ய.

அபிசினியம்:- இன்னத் // ஓசித்தியம்(Ostiak:- இன(பெண், மனைவி).

அத்தி, ஆத்தி, ஆத்தை என்பனவும் அம்மாவைக் குறிக்கும் தமிழ்சொற்களே. பழந்தமிழில் இவற்றைக் காணலாம். இன்றும் மக்கள் வழக்கில் இவை உள்ளன. எதையாவது வியந்து சொல்லும்போது பெண்கள் ‘அடியாத்தி’ என்று சொல்லுவதைக் கவனிக்கவும்.

தமிழ்:- அத்தி, ஆத்தி, ஆத்தை

மலையாளம்:- ஆத்தோள் // சிங்களம்:- அத்தா(அம்மாய்) // பின்னியம்(Finnish):- ஐத்தி

கோதியம்(Gothic):- ஐத்தின் // சமற்கிருதம்:- அத்தா(தாய், அக்கை, பெரியதாய்), அத்தி(அக்கை).


அம்மாவை அத்தி, அச்சி, ஆச்சி என அழைக்கும் வழக்கமும் தமிழரிடம் உண்டு. பாட்டியை ஆச்சி என இன்றும் அழைக்கின்றனர்.

தமிழ்:- அத்தி, அச்சி, ஆச்சி.

மலையாளம்:- அச்சி, ஆச்சி(தாய், செவிலி) // கன்னடம்:- அச்சி(தாய்), அஜ்ஜி(பாட்டி) // துளு:- அஜ்ஜி(பாட்டி) // குருக்கு:- அஜ்ஜீ(பாட்டி) // மலாய்:- மாச்சி

தமிழ்:- அக்கை, (தாய், தமக்கை), அக்காள்(தமக்கை), அக்கை = அக்கன்.

கன்னடம்:- அக்க // தெலுங்கு:- அக்க // துளு:- அக்க, அக்கெ // கோத்தம்:- அக்ன // துடவம்:- ஓக்ன் // குடகு:- அக்கெ.

மராத்தி:- அக்கா // இலத்தின்:- அக்கா(தாய்) // சம்ற்கிருதம்:- அக்கா(தாய்), மங்கோலியம்:- அக்கு(அண்ணன்) // துங்குசியம்:- அக்கி(அண்ணன்)

தமிழ்:- ஆய் // மராத்தி:- ஐய // பிராகுவீ:- ஐய // போர்த்துக்கீசியம்:- ஐய(செவிலி) // ஆங்கிலம்:- ஆயா(செவ்லி) // மலாய்:- ஆயா(அப்பா)

இத்தனையும் பார்த்தோம். இனி, தாய் என்பதைக் காண்போம்.

தமிழ்:- தாய் // மலையாளம்:- தாய் // கன்னடம்:- தாய் // தெலுங்கு:- தாயி.

தமிழ்:- தள்ளை // மலையாளம்:- தள்ள // தெலுங்கு:- தல்லி // பர்சி:- தல்.



இப்படியாக, உலக மொழிகள் பலவற்றிலும் தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன என்பதை இன்றை சொல்லாராய்ச்சித் துறை (Etimology) ஏற்றுக்கொண்டிருக்கிறது. மேலை நாடுகளில் வெளியிடப்பெறும் வெப்சுதர்(Webster) முதலான சொல்லாராய்ச்சி அகரமுதலிகள் உலகமொழிகளில் காணப்படும் தமிழின் தடங்களையும் மூலங்களையும் மறைக்காமல் – மறுக்காமல் பறைசாற்றிக் கொண்டுதா இருக்கின்றன. ஆனால் பாவம், தமிழன்தான் தன் மொழியின் பெருமையை அறியாமல் இருக்கின்றான்.
அதனால், எங்கும் - எதிலும் - எப்போதும் தன்னைத் தாழ்வாகவே எண்ணுகின்றான். தன்மொழி உணர்வே தமிழனுக்கு தன்னம்பிக்கையும் தன் இனமான உணர்வையும் கொடுக்கும். அதுவொன்றே, தமிழனைத் தலைநிமிர்ந்து வாழவைக்கும்.
  • மூலம்:- மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ் வரலாறு

Sunday, November 22, 2009

உலக அப்பாக்களுக்குத் தமிழே தாய்

தற்குமுன் எழுதிய ‘இந்தியாவின் பழமையான மொழி சமற்கிருதம்’ என்ற தலைப்பிலான இடுகையில் ஒரு செய்தி இடம்பெற்று இருந்தது. அதாவது, தமிழே உலகத்தின் மூத்த மொழி - முதல் மொழி. அதற்கு சில அடிப்படை சான்றுகள் பட்டியலிடப்பட்டிருந்தன. அதில்,

//8.தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.// என ஒரு சான்று இருந்தது. இதனை விரிவாக இந்த இடுகையில் காண்போமா?


‘அப்பா’ என்ற தமிழ்ச்சொல் இன்று உலகித்தின் பல மொழிகளில் நேரடியாகவும் – மருவியும் – திரிந்தும் – சிதைந்தும் வழங்கிவருகின்றது என்ற செய்தி வியப்பிற்குரிய ஒன்று. தமிழ்மொழியின் தொன்மைக்கும் – முதன்மைக்கும் – தாய்மைக்கும் – தலைமைக்கும் இதுவொரு மிகச் சிறந்த சான்றாதாரம் அல்லவா?

உலகத்தின் மூத்த மொழியாகவும் முதல் மொழியாகவும் இருப்பதற்கு தமிழுக்கு இருக்கும் தகுதியை நிறுவுதற்கு இதுவொன்றே போதுமல்லவா?

சரி வாருங்கள், ‘அப்பா’ என்கிற தமிழ்ச் சொல் உலக மொழிகளில் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது – மருவியிருகிறது என்று பார்ப்போம்.

தமிழ்:- அப்பன் // மலையாளம்:- அப்பன் // கன்னடம்:- அப்ப // துளு:- அப்ப // குடகு:- அப்பெ // கோண்டி:- ஆப்போ // துளு:- அப்பெ(தாய்) //

மராத்தி:- பாப் // குசராத்தி:- பாப் // இந்தி:- பாப் // வங்கம்:- பாப், பாபா //

மெச்சு:- அப்ப // போர்த்துக்கீசியம்:- அப // சிங்களம்:- அப்பா

எகிப்து:- ஆப் // அரபி:- ஆப் // கலதேயம்(Chaldean):- அப்பா // சீரியம்(Syriac):- ஆபோ // அரமிக்கு(Aramic):- அப்பா // அபிசினியம்:- ஆப்பாத்

இலத்தின்:- பப்பா // பிராகுவீ:- பப்பா // ஆங்கிலம்:- பப்பா

ஓசித்தியம்(Ostiak):- ஊப், ஓப் // பின்னியம்(Finnish):- அப்பி // அங்கேரியம்:- இப், இப்ப, அப்பொஸ்

அப்பாவுக்கு தமப்பன், தகப்பன், அத்தன் என்றும் தமிழில் சொற்கள் உள்ளன. இவை எவ்வாறு பிற மொழிகளில் திரிந்துள்ளன என இனி காண்போம்.

தமிழ்:- தம்+அப்பன்= தமப்பன்= தகப்பன்.

தமிழ்:- அத்தன். // பிராகிருதம்:- அத்தா

துருக்கி:- அத்த // அங்கேரியம்:- அத்ய // பின்னியம்(Finnish):- ஆத்த // செர்மியம்(Chermiss):- ஆத்யா // மார்தூவின்:- அத்தை // ஓசித்தியம்(Ostiak):- அத்த // இலாப்பியம்(Lappish):- அத்ஜெ(பாட்டன்)

கோதியம்(Gothic):- அத்தன் // இலத்தின்:- அத்த // கிரேக்கம்:- அத்த

அத்தன் என்பதைப் போலவே அச்சன் என்பதும் தமிழ் சொல்தான். இந்த ‘அச்சன்’ இன்று மலையாளத்தில் அப்படியே இருக்கிறது. அச்சன் என்ற சொல் மற்ற தென்னிந்திய மொழிகளில் எப்படி மாறியிருக்கிறது பாருங்கள்.

தமிழ்:- அத்தன்= அச்சன் // மலையாளம்:- அச்சன்

கன்னடம்:- அஜ்ஜ(பாட்டன்) // துளு:- அஜ்ஜெ(பாட்டன்) // குடகு- அஜ்ஜெ(பாட்டன்) // குருக்கு:- அஜ்ஜொஸ்(பாட்டன்) // பிராகிருதம்:- அஜ்ஜ // மராத்தி:- ஆஜா(பாட்டன்) // இந்தி:- ஆஜா(பாட்டன்)

இலாப்பியம்(Lappish):- ஐஜ. அத்ஜ(பாட்டன்)

அப்பாவை ஐயன் என அழைக்கும் பழக்கமும் தமிழருடையதே. ஐயன் என்பது அப்பாவை மட்டுமல்லாது தமையன், பெரியோன், ஆசிரியன், குரு, முனிவன் என பல பொருளையும் குறிக்கிறது.

தமிழ்:- ஐயன் // மலையாளம்:- அய்யன் // கன்னடம்:- அய்ய // தெலுங்கு:- அய்ய, அய // துளு:- அய்யெ(ஆசிரியன்) // குடகு:- அய்யெ(தந்தையுடன் பிறந்தான்) // துடவம்:- இன், எயி // கோலாமி:- அய்யா(பாட்டன்), பஅய்ய

போர்த்துக்கீசியம்:- ஐயோ(ஆசிரியன்)

தமிழ்:- தந்தை // கன்னடம்:- தந்தெ // தெலுங்கு:- தண்ட்ரி

இப்படியாக, அப்பாவைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள் உலக மொழிகள் பலவற்றிலும் அப்படியே இருக்கிறது அல்லது ஓரளவு மாற்றமடைந்து காணப்படுகிறது. இதிலிருந்து தமிழ்மொழி உலக மொழிகளுக்கெல்லாம் சொற்களை வழங்கி தாய்மைத் தன்மையைப் பெற்று - உலக மொழிகளுக்குத் தாயாக - தாய்மொழியாக இருப்பது தெள்ளென தெரிகிறது.

தமிழே ஞாலத்தின் முதற்றாய்மொழி என்பதை நமது இன்னுயிர் தமிழ்மொழி இன்றும் இனிவரும் காலத்திற்கும் தானே நிறுவிக்கொள்ளும் என்பதை இனி சொல்லவும் வேண்டுமா?

  • மூலம்:- மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ் வரலாறு

Friday, November 20, 2009

இந்தியாவின் பழமையான மொழி சமஸ்கிருதம்?


ண்மையில் எங்கள் நாட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பில் தமிழ்நாட்டு ஜெயா டிவி நிகழ்ச்சியான ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு ஒரு தோழி என்னிடம் விவரம் கேட்டார். அது என்னவென்றால், அந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்வி இடம்பெற்றுள்ளது. “இந்தியாவின் பழமையான மொழிகள் என்னென்ன?” என்பதுதான் கேள்வி. கேள்வியில் ஒரு சிக்கலும் இல்லை. அதற்கு, பலபேர் கொடுத்த பதிலாகத் திரையில் காட்டப்பட்ட பதிலில்தான் சிக்கல்.

இந்தியாவின் பழமையான மொழிகள் வரிசையில் முதல் இடத்தில் சமஸ்கிருதம் இருந்ததாம். அதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழ் என்று வந்ததாம். இது உண்மையா என்பதுதான் அந்தத் தோழியார் கேட்ட விவரம். அவருக்கு விளக்கம் சொல்லிவிட்டேன். அதனை இங்கு எழுதலாமே? இந்தப் புளித்துப்போன செய்தியை எழுதவும் வேண்டுமா? என்ற இரு மனதோடு போராடி, சரி எழுதித்தான் வைப்போமே என்று எழுதுகிறேன்.

இந்தியாவைப் பொறுத்த வரையில், பன்னெடுங்காலமாகவே இருக்கும் ஒரு போராட்டம், எது மூத்த மொழி சமஸ்கிருதமா? அல்லது தமிழா? என்பது. இந்திய இறையாண்மை சமஸ்கிருதத்தைக் கொண்டாடும் அளவுக்கு.. சமஸ்கிருதத்தை அங்கீகரிக்கும் அளவுக்கு.. சமஸ்கிருதத்தை மூத்த மொழியென பறைசாற்றும் அளவுக்கு.. சமஸ்கிருதம் உயர்ந்த மொழி என தம்பட்டம் அடிக்கும் அளவுக்கு என்றுமே தமிழ்மொழியைச் செய்தது கிடையாது.

ஏதோ, இந்திய மொழிகளில் பத்தோடு பதினொன்றாக வைக்க முடியாதா இக்கட்டான சூழ்நிலைகளும் சான்றுகளும் ஆவணங்களும் உறுதியாக இருப்பதால் செம்மொழி தகுதியை ஒரு பெயருக்குக் கொடுத்துவிட்டு வாளாவிருக்கிறது இந்திய இறையாண்மை என்பதுதான் உண்மை என்ற விவரம் எல்லாருக்கும் வெள்ளிடை மலை.

சமஸ்கிருதம் பழையதா? அல்லது அதற்கும் பழையது தமிழா? என்ற ஆராய்ச்சிக்கே அவசியம் இல்லாத அளவுக்கு, தமிழே இந்தியாவின் மூத்த மொழி என்பதோடு மட்டுமல்லாமல், உலக மொழிகளுக்கே தாய்மொழி என்ற அளவுக்கு தகுதிபடைத்திருக்கிறது என்பது பல அறிஞர் பெருமக்களின் நடுநிலையான முடிவாகும்.

“உலக மொழிகளில் மூத்த முதல்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும்” என்று ஆகக் கடைசியாக மொழியியல் அறிஞர் நோவாம் சோம்சுகி (Noam Chomsky) அறிவித்துள்ளார். யார் இவர்?

பல துறைகளில் அடிப்படையான அறிவாக்கங்கள் தந்திருக்கின்றார். அமெரிக்காவில் உள்ளமாசாச்சுசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃவ் டெக்னாலஜியில் (MIT) பல்லாண்டுகள் பணியாற்றி, பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.மொழியியல் துறையில்தோற்றுவாய் இலக்கணம்(generative grammar) என்னும் அறிவுக்கொள்கையை முன்வைத்தவர். மொழியியல் துறையில் தலைசிறந்த பேரறிஞர்களில் ஒருவராய் அறியப்படுகின்றார். உள்ளம், அறிவுத்திறன், உள்ளறிவு, உள்ளுணர்தல் முதலியவற்றைத் தொடர்பு கொள்ளும்அறிதிறன் அறிவியல் (cognitive science) என்னும் துறையில் பெரும் புரட்சியைத் தூண்டியவர் இவர்.மொழியியல், அறிதிறன் அறிவியல், கணினியியல் ஆகிய துறைகளில் ஏற்படுத்திய தாக்கம் மட்டுமின்றி, இவர் ஐக்கிய அமெரிக்க நாடுகள் உட்பட பன்னாட்டு வெளியுறவுக் கொள்கைகளையும் செயல்பாடுகளை மிக முனைப்புடன் திறனாய்வு செய்து பரவலாக பகிர்ந்து கொண்டு வந்திருக்கின்றார். கலை, இலக்கியம் பற்றிய தலைப்புகளில் எழுதுகின்ற உயிர் வாழும் அறிஞர்கள் யாவரைக் காட்டிலும் அதிக அளவு எண்ணிக்கையில் மேற்கோள்கள் காட்டப்பட்ட புகழ் மிக்க எழுத்தாளராக இருப்பவர் இவர். அண்மையில் நடத்திய ஆய்வின் படி 1980-1992 ஆம் காலப்பகுதியில், மேற்குல வரலாற்றிலேயே அதிக அளவு மேற்கோள் சுட்டப்பட்ட ஆசிரியராக அல்லது படைப்புகளில் முதல் 10 ஆக அறியப்படுபவர். - விக்கிபீடியா.



நோவாம் சோம்சுகியின் கருத்தை அவருக்கு முன்னாலேயே மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் உறுதிபட நிறுவியுள்ளார். அவருடைய அயராத மொழியியல் ஆய்வின் பயனாக அவர் கண்டுசொன்ன அரிய உண்மைகள் பற்பல. அவற்றில் ஒன்றுதான் தமிழே உலகின் மூத்தமொழி என்பது.

இதனை நிறுவும் வகையில் அவர் கொடுத்திருக்கும் ஆய்வின் அடிப்படையிலான சில ஆதாரங்களின் பட்டியலை இங்கே தருகின்றேன்.

1.மாந்தன் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்றி இருத்தல்.

2.இப்போது இருக்கும் மொழிகளுள் தமிழ் மிகப் பழைமையானதாக இருத்தல்.

3.தமிழ் எளிய ஒலிகளைக் கொண்டிருத்தல்.

4.தமிழில் சிறப்புப் பொருள்தரும் சொற்கள் பிறமொழிகளில் பொதுப்பொருள் தருதல் [எ.கா: செப்பு(தெலுங்கு), தா(இலத்தின்)]

5.தமிழ் இயற்கையான சொல்வளர்ச்சி கொண்டதாக இருத்தல். (செயற்கையான சொல்வளர்ச்சி இல்லை)

6.ஆரிய சேமியமொழிச் சொற்கள் பலவற்றின் வேரைத் தமிழ் தன்னகத்தே கொண்டிருத்தல்.

7.பல மொழிகளின் மூவிடப் பதிற்பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் பெரிதும் சிறுதும் ஒத்திருத்தல்.

8.தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.

9.தமிழ்ச்சொற்கள் வழங்காப் பெருமொழி உலகத்தில் இல்லாமை.

10.ஒரு தனிமொழிக்குரிய தோற்ற வளர்ச்சி முறைகளைத் தமிழே தெரிவித்தல்.

11.சில பல இலக்கண நெறிமுறைகள் தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் பொதுவாக இருத்தல்.

12.பல மொழிகள் தமிழிலுள்ள ஒருபொருட் பலசொற்களுள் ஒவ்வொன்றைத் தெரிந்துகொண்டிருத்தல். [எ.கா: இல்(தெலுங்கு)), மனை(கன்னடம்), அகம்(கிரேக்கம்), குடி(பின்னியம்)]

13.பிறமொழிகளுக்குச் சிறப்பாகக் கூறப்படும் இயல்களில் மூல நிலைகள் தமிழில் இருத்தல். [எ.கா: ஆரிய மொழிகளின் அசை அழுத்தமும் சிந்திய மொழிகளின் உயிரிசைவு மாற்றமும் அமெரிக்க மொழிகளின் பல்தொகை நிலையும் போன்றன]

இப்படியான, பல்வேறு உறுதியான காரனங்களின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்ல.. உலகத்திற்கே மூத்தமொழி.. முதல்மொழி தமிழாகத்தான் இருக்க முடியும் என்பது மொழியியல் அறிஞர்களின் தெளிவும் முடிபும் ஆகும்.
இந்தியாவின் பழமையான மொழி சம்ஸ்கிருதம் என்று 'ஜாக்பாட்' நிகழ்ச்சியில் குசுபு சொல்லலாம்.. காட்டலாம். அது அவருடைய நாட்டின் சட்டமாகக்கூட இருக்கலாம். ஆனால், அதே நாடு உலகறிய வேண்டிய ஓர் உண்மையை மறைத்திருக்கும் சூழ்ச்சி ஒருநாள் கண்டிப்பாக வெளிப்படும்.

Thursday, November 19, 2009

2012 திரைப்படமும் தமிழரின் தாயகம் குமரிக்கண்டமும் (பாகம்2)

2012 படத்தில் காட்டபடுவது போன்ற பூதாகரமான பேரழிவு முந்தய தமிழர் தாயகமான குமரிக்கண்டத்தைத் தாக்கி அழித்தது என்ற கட்டுரையின் இரண்டாம் பகுதி இது. குமரிக்கண்டம் என ஒரு நாடு இருந்ததா என்பதற்கான சான்றுகளை இந்தப் பகுதியில் மேலும் அலசிப்பார்க்க உங்களை அழைக்கிறேன்.
இத்தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்.


(அதற்குமுன், இந்த விடயம் தொடர்பாக எனதருமை மலேசிய நண்பர் மனோகரன் கிருஷ்ணன் அரிய பல தகவல்களை அடுக்கி மறுமொழியாக எழுதியிருக்கிறார். அதனையும் படிக்கவும். அவருடைய அருமையான பகிர்வுக்கு நன்றிசொல்லி தொடருகின்றேன். )

ஒரு நாட்டு வரலாறு எழுதப்பட்ட வரலாறு (Written History), எழுதப்படா வரலாறு (Unwritten History) என இருவகைப்படும். கிறித்துவிற்குப் பிற்பட்ட நாடாக இருப்பின் பெரும்பாலும் அதன் வரலாறு எழுதப்பட்டிருக்கும். அதற்கு முற்பட்டதாயின் எழுதப்பட்டிருக்கலாம் அல்லது எழுதப்பட்டாமலும் இருக்கலாம்.

எழுதபடா வரலாறு என்பது, அறியப்பட்ட வராலாறு (Known History) – அறியப்படா வரலாறு (Unknown History) என இரண்டாகக் கூறப்படும். வரலாற்றுக் குறிப்புகளும் கருவிகளும் சான்றுகளும் போதிய அளவு இருப்பின் அது அறியப்பட்டதாகும். இலையேல் அறியப்படாதது எனவாகும்.

எழுதப்பட்ட வரலாறு என்பதுகூட மெய் வரலாறு (True History) – பொய் வரலாறு (False History) என இரு தன்மைகள் கொண்டது.

ஒரு நாட்டின் வரலாறு அந்நாட்டின் மீது பற்றும் நடுநிலையும் உள்ளவரால் எழுதப்படுமானால் பெரும்பாலும் மெய்யாகவே இருக்கும். மாறாக, வேற்றினப் பகைவராலும் சொந்த இனத்தின் கொண்டான்மாராலும் (Quislings) எழுதப்படுமானால் பொய்யானதாகவே இருக்கும்.

எழுதப்படா வரலாற்றை எழுதுவதற்குச் சில சான்றுகள் இருக்க வேண்டும். அவை, இலக்கியம் (Literature), வெட்டெழுத்து(Inscriptions), பழம்பொருள் நூல்கள்(Archaeology) என மூன்று வகைப்படும்.

இந்த அறிமுகத்தோடு குமரிக்கண்ட வரலாற்றுக்குள் நுழைந்து பார்ப்போம்.


குமரிக்கண்ட வரலாறு தெளிவாகவும், முறைப்படுத்தப்பட்டும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியது எந்த அளவுக்கான நேர்மையோ அதே அளவுக்கான நேர்மை, குமரிநாடு என்ற ஒன்று வரலாற்றுக்கு முத்திய காலத்தில் இருந்தது; அது பின்னர் கடற்கோள்களால் தாக்குண்டு மூழ்கியது; அல்லது இன்றைய அறிவியல் சொல்லுகின்ற கண்டங்களின் நகர்வுக் கொள்கையின்படி (Continental Drift) நகர்ந்து பின்னர் கடலுக்குள் சென்றிருக்கலாம் என நம்புவதிலும் இருக்க வேண்டும்.

இப்போது தமிழில் கிடைத்துள்ள வெட்டெழுத்துகள் பெரும்பாலும் கி.பி.4ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை என்பதால் குமரிக்கண்ட ஆய்வுக்கு அவை பயன்படவில்லை. பழம்பொருள் என தேடிப்பார்த்தால், கற்காலத்து, இரும்புக்காலத்துப் பொருட்செய்திகளைத் தவிர ஒழுங்கான வரலாற்றுக்குரிய நுண்குறிப்புகளைத் தெரிவிக்காததாலும், அதனை ஆராய்வதற்கு ஏதுவாக முற்காலப் பழந்தமிழகமாகிய குமரிக்கண்டம் முழுதும் மூழ்கிப் போனதாலும் பழம்பொருள் எதுவும் கிடைப்பதாக இல்லை.

ஆகவே, இந்தியமாக்கடலில் பழங்காலத்தில் ஒரு கண்டம் இருந்தது. அது கடலில் மூழ்கிவிட்டது என 19ஆம் நூற்றாண்டு இறுதியில் ஏக்கலும் (Hackle) வேறு சில ஆய்வாளர்களும் கருதி “லெமூரியா” எனப் பெயரிட்ட கண்டமும், அதனையே குமரிநாடு என தமிழ் இலக்கியங்கள் அடையாளப்படுத்துவதும் உண்மையே என்பதை நிறுவுவதற்கு ஒரே சான்றுதான் இருக்கின்றது. அதுதான் தமிழ் இலக்கியம்! அல்லது தமிழ்மொழி!

அவ்வாறான இலக்கியச் சான்றுகளை ஏற்கனவே இரண்டு தொடர்களின் சொல்லிவிட்டதால் மீண்டும் எழுதாமல் விடுகின்றேன். பழந்தமிழ் நூல்களில் பெரும்பாலானவை அழியுண்டு போனதால், வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய குமரிநாட்டு வரலாற்றைத் தெளிவாகக் காணமுடியாத நிலைமையே இன்றும் இருக்கிறது.

இருப்பினும், தமிழன் பிறந்தகம் குமரிக்கண்டம் பற்றி முச்சங்க வரலாற்றாலும் – கலித்தொகை போன்ற சங்க இலக்கியங்களாலும் – தொல்காப்பிய இளம்பூரனார் உரையாலும் - சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையினாலும் – பி.தி.சீனிவாச ஐயங்கார், சேசை ஐயங்கார், இராமசந்திர தீட்சிதர் முதலியோர் எழுதிய வரலாற்று நூல்களாலும் – மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை, பேரா.கா.சுப்பிரமணியப்பிள்ளை ஆகியோர் எழுதிய ஆய்வுநூல்களாலும் குமரிநாட்டு வரலாறு விளக்கப்பட்டிருக்கிறது.

தவிர, பண்டைத் தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள குமரிநாட்டு கடற்கோள்கள் பற்றிய செய்திகளை விளக்கி எழுதப்பட்ட ஆய்வுரைகள் பின்வருமாறு:-

அ)ச.சோமசுந்தரபாரதி (1913), தமிழ்ப் பண்டை இலக்கியங்களும் தமிழகமும், சித்தாந்த தீபிகா XIV

ஆ)வி.ஜே.தம்பி பிள்ளை (1913), மாணிக்கவாசகர் தொன்ம வரலாறு, தமிழியன் ஆண்டிகுவாரி II – 1

இ)மறைமலையடிகள் (1930), மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

ஈ)ஏ.எஸ்.வைத்யநாத ஐயர் (1929), கீழைநாடுகளின் பிரளய தொன்மங்கள், பம்பாய் வரலாற்றுக் கழக ஜர்னல் II – 1

உ)ஜே.பெரியநாயகம் (1941), மனுவின் பிரளயம், தி நியூ ரிவியூ XI

ஊ)ஹீராஸ் பாதிரியார் (1954), தொல் இந்தோ நண்ணிலக்கரை நாகரிக ஆய்வுகள் இயல் IV பக்.411-439

எ)வால்டர் பேர்சர்வீஸ் (1971), The Roots Of Ancient India

Stone Age in India, Pre-Aryan Tamil Culture, History of the Tamils, Dravidian India, Pre-Historic South India, Origin and Spread of Tamils, Tamil India முதலிய நூல்மூலங்களில் பல அரிய செய்திகளை அறியலாம்.

1950களுக்குப் பின்னர் “லெமூரியாக் கண்டம்” அல்லது “குமரிக்கண்டம்” கொள்கையை அறிவியல் உலகம் கைவிட்டுவிட்டது என்பது உண்மைதான். ஆனால், தமிழ் இலக்கியங்களும் சீரளமைக் குன்றாத தமிழ்மொழியும் அதன் நூல்களும் பறைசாற்றிக்கொண்டிருக்கும் சான்றாதாராங்களை எவரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அல்லது, இன்று தமிழ்மொழிக்குத் தாயகமாக இருக்கும் இந்தியாவோ, தமிழ்நாடோ, இலங்கையோ அந்தச் சான்றாதாரங்களை உலகத்திற்கு எடுத்துக் காட்டுவதாகவும் இல்லை; முழுமையான ஆராய்ச்சியைத் தொடங்கியதாகவும் இல்லை.

ஏற்கனவே நான் குறிப்பிட்டது போல, குமரிக்கண்ட சான்றுகளும் ஆதாரங்களும் தமிழுக்கும் தமிழருக்கும் சொந்தமானதாக இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம்.

நிலைமைகள் இப்படி இருக்கையில், 2012 படத்தில் காட்டுவது போன்ற உலகப் பேரழிவு குமரிக்கண்டத்திலும் நிகழ்ந்தது – அதனால் தமிழன் பிறந்தகமாம் குமரிநாடு கடலுக்குள் காணாமல் போனது என்ற உண்மையை உலகம் அறிவது எப்படி?

இன்று இல்லாவிட்டாலும், 2212 – 2912 – 3012 என்று என்றேனும் ஒரு காலத்தில் குமரிக்கண்ட உண்மை உலகத்தித்கு தெரியவரலாம். அன்று, குமரிநிலத்தில் பிறந்த இனத்தித்குச் சொந்தமானவன் நான்தான் என உரக்கச் சொல்லுவதற்கு, உலகின் எந்த மூலையிலும் ஒற்றைத் தமிழன்கூட இல்லாது போகலாம்.

Wednesday, November 18, 2009

2012 திரைப்படமும் தமிழரின் தாயகம் குமரிக்கண்டமும் (பாகம்1)


2012 திரைப்படத்தின் காட்சிகள் மறைந்த தமிழர் தாயகமாம் குமரிக்கண்டத்தின் பேரழிவை எனக்குக் கண்முன் கொண்டுவந்து காட்டியதாகக் கடந்த பதிவில் எழுதியிருந்தேன். (அதனைப் படிக்க இங்கு சொடுக்கவும்) அதற்கு, அன்பர் நீலகண்டன் இவ்வாறு மறுமொழி எழுதியிருந்தார்.

//அறிவியல் ரீதியில் குமரி கண்டம் என்பது நிரூபிக்கப்படாத ஒரு விடயம். அஃது ஆழிப் பேரலையால் அழிந்துபோனது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை.//

//தமிழுணர்வு இருத்தல் அவசியம், அதற்காக சரித்திரத்தை உண்மைக்குப் புறம்பாக திரித்து கூறுவதால் அது மனித வரலாற்றிற்கே ஏற்பட்ட கலங்கமென அறிக.//

எனவே, குமரிக்கண்டம் பற்றி அறிஞர் பெருமக்கள் கண்ட சான்றுகளை முன்வைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் இந்தக் கட்டுரை. இதன் மூல வடிவத்தை மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய ‘தமிழர் வரலாறு’ எனும் நூலில் காணலாம்.

மறைந்த குமரிக்கண்டம் (Lost Lemuria) என்னும் ஆங்கில நூலின்படி, ஒரு பெருமலையானது மேலைக் கடலில் தொடங்கி வடக்கும் தெற்குமாகக் குமரிக்குத் தென்பகுதிலுள்ள நிலப்பகுதியில் நெடுந்தொலைக்கு இருந்துள்ளது. இது தென்மேற்காகத் திரும்பி ‘மடாகாசுக்கர்’ (Madagascar) என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரிகிறது. அம்மலைக்குக் கீழ்ப்பக்கம் உள்ள நாட்டில் (இன்றைய இமயமலைப் போன்ற) பெருமலைத் தொடர் ஒன்று இருந்ததாகத் தெரிகிறது. இந்தச் செய்தியை சிலப்பதிகாரத்தின் துணைகொண்டு பேரா.கா.சுப்பிரமணியப்பிள்ளை அறிவிகின்றார்.

இன்றைய இலங்கைக்குத் தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டம் என்னும் நிலப்பகுதி ஏறத்தாழ 2500 கல் தொலைவுக்கு நீண்டிருந்தது என்றும், அதன் மேற்குப் பகுதி நெடுகிலும் மேற்சொன்ன பெருமலைத்தொடர் அமைந்திருந்ததாக அறியப்படுகிறது.

“முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி”
என்று நெட்டிமயாரும் (புறம்.9)

“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும்”
என்று இளங்கோவடிகளும் (சிலப்.11:19-20) பாடியிருப்பதால், குமரிக்கண்டமும் அதன் தென்கோடியின் மலைப்பகுதியிலிருந்த குமரி மலைத்தொடரும், அதிலிருந்து உருவாகி பாய்ந்தோடிய பஃறுளி ஆறும் கட்டுக் கதையோ அல்லது பொய்ப் புரட்டோ அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.

“தொடியோள் பௌவமும்” என்னும் சிலப்பதிகாரத் தொடரின் உரையில், அடியார்க்குநல்லார் குமரிக்கண்டப் பகுதியைப் பற்றி இவ்வாறு கூறியிருக்கிறார். “தென்பாலி முகத்திற்கு வட எல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றுக்கும் குமரி எனும் ஆற்றுக்கும் இடையே ஏழ்தெங்கு நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ்குணக்காரை நாடு, ஏழ்குறுப்பனை நாடு என்னும் 49 நாடுகளும், குமரி, கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடு, நதி அனைத்தும் விளங்கின”. இவ்வாறு குமரிநாட்டைப்பற்றி பகுத்துக் கூறப்பட்டிருப்பது கட்டுச்செய்தியாக இருக்க முடியாது.


“காலமுறைபட்ட உண்மைகளைக் கொண்டு, இன்றைய தென்கிழக்காசியத் (மலையத்) தீவுக்கூட்டம் முற்றிலும் வேறுபட்ட இருபகுதிகளைக் கொண்டது. போர்னியோ (Borneo), சாவா (Jawa), சுமத்திரா (Sumatra) என்னும் பெருந்தீவுகளைக் கொண்ட மேலைப் பிரிவாகிய இந்தோ – மலையத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் மலாக்காவினால் ஆசியாக் கண்டத்தோடு இணைக்கப்படிருந்தது. ஒருகால், சற்று முந்திக் கூறிய குமரிக்கண்டத்தோடும் அது இனைக்கப்பட்டு இருந்திருக்கலாம். இதற்கு மாறாக, செலிபிசு(Selibis), மொலுக்காசு, நியுகினியா, சாலோமான் தீவுகள் முதலியவற்றைக் கொண்ட கீழைப் பிரிவாகிய ஆத்திரேலிய – மலையத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் ஆத்திரேலியாவுடன் நேரே இணைக்கப்பட்டிருந்தது” (Castes and Tribess of Southern India Vol.1.p20,21) என்ற நூல் இதனைக் குறிக்கின்றது.

செடிகொடிகளாலும் விலங்குகளினாலும் ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் மிகப் பழங்காலத்திலேயே இருந்த மிக நெருங்கிய ஒற்றுமைகளைக் கண்டிபிடித்த ஓல்டுகாம் என்பவர், முன்காலத்தில் தென் ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைக்கும் ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என முடிவு செய்கின்றார்.

“இந்தியர்க்குப் பெயரே தெரியாத சில பழங்காலத்து மாபெரிய பப்பரப்புளி அல்லது யானைப்புளி அல்லது மேனாட்டுச் சீமைப்புளி (Baobab) என்னும் ஆப்பிரிக்க மரங்கள், இந்தியத் தீபகற்பத்தின் (Peninsula) தென்கோடியில் இருந்திருக்கின்றன. அவை, அயல்நாட்டு வணிகம் நடந்துவந்த சில துறைமுகங்களில் அதாவது குமரிமுனை அருகிலுள்ள கோட்டா ஆற்றிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடி அருகில் இன்னும் இருக்கின்றன” என்ற செய்தியை கால்டுவெல் பதிவு செய்திருக்கிறார்.

இப்படியாக, தமிழ் இலக்கிய நூல்களிலும் மேலை நாட்டவர் ஆய்வு நூல்களிலும் குமரிக்கண்டத்தைப் பற்றிய குறிப்புகள் சான்றுகளாக நிலைபெற்று இருக்கின்றன. இவற்றின் அடிப்படையில், குமரிக்கண்டத்தின் நிலைமை நான்கு படிநிலைகளைக் கடந்து வந்துள்ளதாக அறிய முடிகிறது. அவை:-

1.ஆப்பிரிக்காவோடும் ஆத்திரேலியாவோடும் கூடிய பழம் பாண்டிநாடு
2.ஆப்பிரிக்கா நீங்கிய பழம் பாண்டிநாடு
3.ஆத்திரேலியாவும் நீங்கிய பழம் பாண்டிநாடு
4.சிறிது சிறிதாய்க் குறைந்துவந்த பழம் பாண்டிநாடு


மேலே சொல்லப்பட்ட அனைத்தையும் ஒட்டுமொத்தமாகக் கட்டுக் கதைகளென ஒதுக்கிவிட முடியாது. குமரிக்கண்டம் பற்றிய அரிய செய்திகள் பல தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் மக்களுக்கும் சொந்தமானதாக இருப்பதால் அவை இன்னமும் தீவிர ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பதாக ஒரு கருத்தும் நிலவுகிறது.

வரலாற்றை உண்மைக்குப் புறம்பாகத் திரித்துக் கூறுவது மாபெரும் கலங்கம் என்ற கூற்றில் நம்பிக்கை உள்ளவர்கள் குமரிக்கண்ட ஆராய்ச்சியைத் தீவிரப்படுத்த வேண்டும். முறைசெய்யப்பட்ட நேர்மையான ஆய்வுக்குக் உட்படுத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

அப்போதுதான் 2012 படத்தில் நிகழும் பேரழிவை ஒத்ததான பாரியதோர் அழிவு குமரிக்கண்டத்திலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்த உண்மை தமிழ் இலக்கிய ஏடுகளிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு, உலக வரலாற்று ஏட்டில் பொறிக்கப்படும்.

Tuesday, November 17, 2009

2012 படம்.. தமிழருக்குச் சொல்கிறது ஒரு பாடம்

ஒட்டுமொத்த உலகமே எதிர்ப்பார்த்திருந்த படம்தான் 2012. இப்போது வெளிவந்து உலகத்தையே கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது.

இப்படியொரு பேரழிவு பூமிப் பந்தைப் புரட்டிப்போட்டுவிடுமா? என்ற ஒரு மெல்லிய அச்சத்தைப் படம் பார்ப்பவர் உள்ளத்தில் விதைத்துவிட்டுப் போகிறது 2012.


உலகம் இதுநாள்வரையில் கண்டிராத மிகப் பூதாகாரமான படமாக இதனைத் துணிந்து சொல்லலாம். கணினி வரைகலைகள் (கிராபிக்சு), ஒளி – ஒலி புதுமைகள், விறுவிறுப்பான படத்தொகுப்பு, வாய்ப்பிளக்க வைக்கும் காட்சியமைப்பு, ‘உச்சு’க்கொட்ட வைக்கும் நச்சென்ற உரையாடல், நெஞ்சத்தை உருக்கும் பாத்திரங்கள், சிரிப்புக்கும் சில இடங்கள் என அனைத்து கோணத்தையும் கவனமாகச் செதுக்கி சிறந்த ஒரு திரைப்படத்தை வழங்கியிருக்கிறார் ரோலண் எமரிச்சு (Rolland Emmerich).

படம் தொடங்கியது முதற்கொண்டு இறுதி வரையில் பார்வையாளரைக் கட்டிப்போட்டு விடுகிறது படம். ஒவ்வொரு காட்சியிலும் அடுத்த கட்டத்தை நோக்கி பார்ப்பவர் மனம் எம்பி ஓடிக்கொண்டே இருக்கும் அளவுக்கு கொஞ்சமும் விறுவிறுப்பு குறையாமல் சூறாவளி வேகத்தில் படம் பறக்கிறது.

அப்பாடா என்று பெருமூச்சு விடும்போது ஐயோ என்று அலறவைக்கின்றன சில காட்சிகள்... ஐயோ என திடுக்கிடும் இடங்களில் அப்பாடா என்று ஆறுதல் தருகின்றன சில காட்சிகள்..!

இப்படியாக, 2012 படத்தில் வரும் காட்சிகள் தமிழர்களுக்கு ஒரு பாடத்தைச் சொல்கிறது.. அதுவும் வரலாற்றுப் பாடம்!

என்ன உங்கள் நெற்றியை மடித்துக்கொண்டு புருவங்கள் மேலே ஏறுகின்றன..! தொடருங்கள்..!

2012 திரைப்படக் காட்சிகள், தமிழ் வரலாற்றில் படித்த குமரிக்கண்ட அழிவை என் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தியது.

“குமரிக்கண்டமா! அது என்ன?” என்று சிலர் வினவக்கூடும்..!


உலகின் முதன் மாந்தன் தோன்றிய மண் குமரிநாடு. அதுவே தமிழரின் முதலாவது தாய்மண். அங்கு பழந்தமிழர்கள் 49 நாடுகளைக் கட்டியெழுப்பி ஆட்சி செய்தனர். குமரிக்கண்ட மாந்தன் பேசிய மொழிதான் தமிழ்.

இறையனார் களவியலுரையிலும் இளம்பூரனார் தொல்காப்பிய உரையிலும் இன்னும் பிற இலக்கியங்களிலும் குமரிக்கண்டம் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. குமரிநாடு பற்றிய வரலாற்றுக் குறிப்புகளுள் ஒன்று இது:-

“முதன்முதலில் குளிர்ந்தது உலகின் மேற்பரப்பே. அந்நிலம் தமிழ் நிலமே. அப்பகுதி அப்படி முதல் நிலமாக அமையக்காரணம் உலகின் நடுக்கோட்டிற்கு அணித்தாய் இருந்தமையே. அம்முதல் நிலமே குமரிக்கண்டம். குமரிமைல ஆறுகொண்டு குமரிநாடு என்று பெயரிட்டனர். இதன் வடக்கே குமரியாறு தெற்கே பஃறுளியாறு என்பவற்றின் இடையே கீழ்மேலாக எழுநூறு காவதம் பரப்பாக நீண்டு கிடந்தது. இது நாற்பத்தொன்பது நாடுகளாகப் பிரிக்கப்பெற்றிருந்தது. ஏழ்மதுரை நாட்டுக்குத் தென்பால் இருந்த காரணத்தால் மதுரை ‘தென்மதுரை’ எனப்பட்டது. இதனை அரசிருக்கையாகக் கொண்டு ஆண்டவன் ஆழிவடிவம் பலம் நின்ற பாண்டியன் என்ற முதலாம்நிலம் தரு திருவிற்பாண்டியன்....” (தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம், தொகுதி2, ஐந்தினைப் பதிப்பகம், சென்னை. 1987.ப.1670.)

“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள”
என்று குமரிநாட்டைப் பற்றி கூறப்பட்டுள்ள வரிகளுக்கு 2012 படமே சரியான விளக்கவுரையாக எனக்குப் பட்டது. இந்தப் படம் குமரிக்கண்ட வரலாற்றுப் பேரழிவுக்கு நல்ல பாடமாக இருக்கிறது என்பது என் கருத்து.

இன்றைய இந்திய பெருநிலப்பரப்புக்குக் கீழே இருந்ததாகச் சொல்லப்படும் குமரிநாடு அல்லது குமரிக்கண்டம் அல்லது கோண்டுவானா அல்லது லெமூரியா கண்டமும் இப்படிதான் மாபெரும் பேரழிவுக்கு உள்ளானதாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகின்றனர். அங்கு மூன்று முறை பாரிய கடற்கோள்கள் (சுனாமி) ஏற்பட்டதாகத் தமிழ் இலக்கியம் சான்று சொல்லுகிறது.

மூன்று கடல்கோள்களுள் முதலாவது கடல்கோள் கி.மு. 2387 இல் நிகழ்ந்தது. இரண்டாவது கடல்கோள் கி.மு. 504 இல் நிகழ்ந்தது. மூன்றாவது கடல்கோள் கி.மு. 306 இல் ஏற்பட்டதாக குறிப்புகள் சொல்லுகின்றன. (The Date of Tolkappiyam, Annals of Oriental Research, University of Madras, Vol.XIX part II, 1964, Reprint p. 16-17)

நீங்கள் 2012 படத்தைப் பார்த்தவரா? கொஞ்சம் மெனக்கெட்டு குமரிகண்ட வரலாற்றை தேடிப் படியுங்கள். தமிழரின் வரலாறு தெளிவாகத் தெரியும்.

நீங்கள் குமரிக்கண்ட வரலாற்றைப் படித்தவரா? அருகிலுள்ள பட அரங்கிற்குச் சென்று 2012 படத்தைப் பாருங்கள். தமிழரின் வரலாறு தெளிவாகப் புரியும்.

பழந்தமிழரின் தாயகமாகச் சொல்லப்படும் குமரிக்கண்டம்,
பழந்தமிழின் பிறப்பிடமாகக் கருதப்படும் குமரிநாடு,
தொன்மை மாந்தனின் தோற்றுவாயாக நம்பப்படும் கோண்டுவானா,
குரங்கினத்திலிருந்து மாந்தரினம் பரிணாமம் அடைந்த நிலமாக இருந்து கடலுக்குள் மூழ்கிப்போன லெமூரியா கண்டத்தின் வரலாற்றைத் தமிழர்கள் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும்.

அதற்குக் கீழ்க்காணும் சில வலைமணைகள் துணையாக இருக்கும்.

http://www.tamilcc.org/thamizham/ebooks/5/468/468.pdf

http://www.noolaham.net/project/02/151/151.htm

http://thonmai.blogspot.com/2007/12/blog-post.html

http://www.geotamil.com/pathivukal/mayilangkuudal_p_nadarasan_on_tamilinthonmai.htm

http://www.tamilpayani.com/tamilsatiram/viewtopic.php?f=5&t=293&start=0&st=0&sk=t&sd=a#p1033

Sunday, November 01, 2009

தமிழக அரசுக்கு மலேசிய எழுத்தாளரின் கேள்வி


அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றோ
செல்வத்தைத் தேய்க்கும் படை.

இதைச் சொல்பவன் யார்? பொய்யா மொழிப் புலவன். அவனின் வாக்கு ஒரு போதும் பொய்க்காது.

பெருங்கடலாய்ப் பெருகிக் கொண்டிருக்கும் இக்கண்ணீர்ப்படை ஆழிப்பேரலையாய் எழுந்து சிங்களக் கொடுங்கோல் அரசை மட்டுமல்ல அதற்குத் துணை போன அத்தனை நாடுகளையும் விழுங்கி அழித்தொழிக்கும்.

ஈழத்தில் மட்டுமல்ல இலங்கை எங்குமே எங்களின் தமிழ்க்கொடி பறக்கும்! அங்கே ஐ.நா அரங்கத்திலும் நம் கொடி அசைந்தாடும்! அந்நாளே நமக்கு நன்னாள்!

"கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்குப் புத்தி எங்கே போச்சு! " என்பது ஒரு பழமொழி. நடவாத நடக்க இயலாத ஒரு செயலை நடந்ததாக எடுத்துக்கட்டி , பொய் சொல்வது என்பதுதான் இதன்பொருள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இதனை இன்று நடைமுறைப் படுத்திக்கொண்டு இருப்பவர் மாண்புமிகு தமிழக முதல்வர் கருணாநிதி என்பதை, உலகமே பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது.

"இன்னும் இரண்டு வாரத்தில் இலங்கை அகதி முகாமுக்குள் அடைபட்டுக்கிடக்கும் அனைத்துத் தமிழர்களும் விடுவிக்கப்பட்டு, தங்களின் சொந்தக் கிரமங்களுக்குத்திரும்பி விடுவர். அதற்கான பணிகள் அத்தனையும் செய்து முடித்து விட்டேன்" என்று அறிக்கை விடுகின்றார் தமிழக முதல்வர்.

தமிழக முதல்வரையும் பின்னுக்குத் தள்ளி ஒருபடி மேலே நின்று, "தமிழக முதல்வரின் தூதுவர்களில் ஒருவனாக, இலங்கைக்குச்சென்றபோதே, ஆயிரத்து ஐநூறு பேரை விடுவித்து, அவர்களை, அவர்களின் சொந்த வீட்டுக்கு அனுப்பி விட்டுத்தான் வந்துள்ளேன்." என்று முழு பூசனிக்காயைச் சோற்றுக்குள் மறைத்திருக்கிறார் - அதிபர் ராசபக்சேயின் புதிய தம்பி விபீடணன் தொல் திருமாவளவன் அவர்கள்.

இத்தலைவர்களின் இக்கூற்றுக்கு ஈழத்தமிழர்களோ தமிழகத்தமிழர்களோ மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் கன்னத்தில் அறைந்தார் போன்று சிங்கள முக்கிய அமைச்சர் ஒருவரும் அதிபர் ராசப்பக்சேயும் பதில் அளித்திருக்கின்றனர். எப்படி?

"முகாமுக்குள் அடைப்பட்டுக் கிடக்கும் தமிழ் அகதிகளுக்கு விடுதலையா? அது கனவில் கூட நினைத்துப்பர்க்க முடியாத ஒரு செய்தி! " என்று சிரித்து ஏளனம் செய்திருக்கின்றார் இலங்கை அதிபர் ராசபக்சே!

"முகாமில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் விரைவில் விடுதலையாகப் போகின்றனர் என்ற செய்தியைப் பத்திரிகைகளில் பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன், மற்றபடி இதுப்பற்றி எங்கள் அமைச்சர் அவைக்கு எதுவுமே தெரியாது " என்று சொல்கின்றார் சிங்கள அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர்.

ஆனால் தமிழக முதல்வரும், அவர் தூது அனுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் , "இதோ கேப்பையில் நெய் வடிகின்றது ! நெய் வடிகின்றது ! பாருங்கள் ! பாருங்கள்! " என்று தமிழக மக்களுக்கு 'பியாசு கோப்' படம் காட்டி மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர் !

தமிழக முதல்வரின் தூதுக்குழு இலங்கைக்குச் சென்றதனால், முகாம், ஏதிலிகள் (அகதிகள்) அடைந்த ஒரே நன்மை தூதுக்குழுவுக்கு நேர்காணல் அளித்த பலர் காணாமல் போனதுதான். (ஏன் எப்படி )

இதனால்தான் என்னவோ ஈழநாட்டுத் தமிழ் இதழ் ஒன்று இலங்கைக்குச் சென்ற தூதுக்குழுவுக்குச் தலைமை ஏற்றுச்சென்ற, தி.ஆர்.பாலுவை " சனீசுவரன் வந்திருக்கிறார்" என்று பாராட்டி இருக்கின்றது !

புறநானூறு கண்ட தமிழக முதல்வர் நடுவண் அரசில் உறுப்பியம் வகிக்கும் நாற்பது தி.மு.க உறுப்பினர்களயும் பதவி துறக்கச் செய்து காங்கிரசு ஆட்சியைக் கவிழ்த்து என் அருமை ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுவேன் என்று அனைத்துக் கட்சிகளின் அவையில் முழங்கி கைத்தட்டல் பெற்றார்.

இந்த வாக்குறுதி என்ன ஆயிற்று? ஒரு காலத்தில் தெற்கு தேய்கிறது வடக்கு வாழ்கிறது என்று வடவரை வசைபாடிய வாய் இன்று சோனியா காந்தியை நாவினிக்க வாழ்த்துவது ஏன்?

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த தமிழ்நெஞ்சன் தமிழ் வெறியன் தமிழ்த்தொண்டன் அல்ல இன்றைய கருணாநிதி அவர்கள். இன்று தமிழகத்தின் பேரரசர். உலகக் கோடீசுவரர்களின் வரிசையில் இடம் பிடுத்துக் கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்ற அருமை மகன் அழகிரிக்கு எழுபது பொன் தங்கமாலை அணிவித்துப் பெருமை பெற்றவர்.

இந்தக் குபேர வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ளவே இந்தத் தமிழ் இமயம் இன்று வடவரின் காலடியில் வீழ்ந்து கிடக்கின்றது.

சுண்டைக்காய் நாடு இலங்கை அதன் கடற்படை இந்தியக் குடிமக்களான தமிழக மீனவர்களை அன்றாடம் அழித்துக் கொண்டிருக்கின்றது. அந்த ஏழை மீனவர்களின் அழுகுரல் தமிழக முதல்வரின் காதுகளில் விழ வில்லையே! அந்த ஏழைகளுக்காக கருணா நிதியின் கண்கள் கலங்கவில்லையே!

இரத்தத்தின் இரத்தமாம் ஈழத்துத் தமிழ்மக்களைக் காப்பாற்றக் கோரி தன்னையே எரித்துக் கொண்ட மறவர் குல மாணிக்கம் தங்கமகன் முத்துக்குமாரின் தியாகம் கூட கலைஞரின் நெஞ்சைத் தொடவில்லையே ஏன்?

ஏனெனில்,தமிழக முதல்வர் இன்று ஒரு மேட்டுக்குட்டி! ஏழைகளுக்காக இரங்குவதும் கண்ணீர் வடிப்பதும் கேவலம் என்பது மேட்டுக் குடியினரின் மரபு!

ஒரு வல்லரசு நாட்டின் குடிமகன் ஒருவனுக்கு வெளிநாட்டில் துன்பம் விளைந்தால் - அந்த வல்லரசு பொங்கி எழுகின்றது சம்பந்தப்பட்ட நாட்டிடம் காரணம் கோருகின்றது - கண்டனம் செய்கின்றது . எச்சரிக்கை விடுக்கின்றது .


1983 - கொழும்பு இனக்கலவரத்தில் தமிழினம் அழிக்கப்பட்டபோது, அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையர் அவர்கள், இலங்கை அதிபர் சயவர்த்தானாவை இந்த முறையில் தான் மிரட்டி பணியவைதார். வல்லாண்மை மிக்க ஒரு வல்லரசின் செயல்பாடு இப்படிதான் இருக்க வேண்டும்.

ஆனால், தமிழக மீனவர்கள் நிலையில் இன்றைய இந்திய செயல் பாடு எப்படி இருக்கின்றது என்பதை மானமுள்ளஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும் .

சோனியா காந்தியையும் சிங்கள அரசையும் மகிழ்ச்சி படுத்துவதற்காகவே தமிழர்களுக்கு எதிரான் அனைத்தையும் செய்துக்கொண்டிருக்கின்றது இன்றைய இந்திய அரசு. தமிழக தி. மு .க. கூட்டணி அரசும். தங்களின் நல்வாழ்விற்காக நடுவண் அரசுக்குத் துணை போவதோடு சிங்கள அரசையும் வாழ்த்திகொண்டிருக்கின்றது.

அந்த முறையில்தான் இலங்கை சென்ற தமிழக முதல்வரின் தூதுக்குழுவினர் தமிழினத்தின் முதன்மை பகைவன், கொலைஞனான நவீன இட்லர் ராசபக்சேக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி, அதிபர் அளித்த விருந்தினை உண்டதோடு அவனுடன் கொஞ்சிக் குலாவி நகைச்சுவை ததும்ப உரையாடி மகிழ்ந்து ஆனந்தராகம் பாடி வந்திருக்கின்றனர் என்றால் இவர்கள் தமிழர்களா?

1948இல் விடுதலை அடந்து ஆட்சி அதிகாரம் சிங்களர்களின் கையில் கிடைத்ததிலிருந்து சிங்கள அரசு அனைத்து வகையிலும் தமிழினத்தை அழித்துக் கொண்டேதான் இருக்கின்றது.

இந்த அழிவிலிருந்து தப்பிப் பிழைப்பதற்காகத்தான் ஈழமக்கள் உடுத்திய துணியுடன் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். புலம்பெயர்ந்த மக்களின் சொத்துகள் அனைத்தையும் சிங்கள மக்களுக்கு வாரி வழங்கியது சிங்கள் அரசு.

தமிழ் சிற்றூர்கள் சிங்களச் சேரிகளாக மாற்றப்பட்டன. பள்ளி கோயில் வளாகங்கள் சிங்களப் படையின் பாசறைகளாயின. காரணமின்றி தமிழ் இளைஞர்கள் தளை செய்யப்பட்டு (கைது) உசாவல் என்ற போர்வையில் சிறைக்குள் ஆயிரம் ஆயிரமாய் கொன்று குவிக்கப் படுகின்றனர். உலகமே கண்டிராத அளவு சிங்கள வெறிப்படை தமிழ்ப் பெண்களைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்று குவித்து அவர்களின் உடலை அம்மணப் படுத்தி வீதியில் கிடத்திக் கண்காட்சி நடத்தியிருக்கின்றது.

முகாமுக்குள் ஏதிலிகளாய் வாடிக் கிடக்கின்ற இளைஞர்களையும் இளம் பெண்களையும் கூட சிங்களக் காடையர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களை அனைத்துக் கொடுமைகளுக்கும் ஆளாக்கி, அம்மணப் படுத்தி கைகளைக் கட்டி குருவிகளைச் சுடுவது போன்று இன்றும் சுட்டுக் குவித்துக் கொண்டிருக்கின்றது சிங்களப் பேய்ப் படை.

சிங்கள அரசு செய்கின்ற இக்கொடுமைகள் அனைத்தையும் ஆய்ந்து அறிந்து. உண்மையைத் தெரிந்து கொண்ட ஓர் அமெரிக்கப் பெண்மணி கண்ணீர் விடுகின்றார். "இராசபக்சேயின் அரசை உலக நீதிமன்றத்தில் நீறுத்தி தண்டிக்க வேண்டும்" என்று அறைகூவல் விடுகின்றார் அக்கண்மணி. யார் இவர்? தமிழினத்துக்குத் தொடர்பே இல்லாத ஒரு வேற்று நாட்டுப் பெண்.

செய்யாத குற்றத்துக்காக தமது தாலியைப் பறித்துவிட்டான் பாண்டிய மன்னன் என்பதற்காக அவனையும் அவனின் நகரையும் அழித்தாள் அன்றைய தமிழச்சி கண்ணகி. அந்தக் கண்ணகி பிறந்த மண்ணில் பிறந்த இன்றைய தமிழச்சி கனிமொழி இலக்கக் கணக்கானத் தமிழச்சிகளின் தாலிகளைப் பறித்திட்ட கயவன் இராசப்பக்சேயின் விருந்தினராகச் சென்று திரும்பி இருக்கின்றார். தமிழ்க் குலப் பெண்களே சொல்லுங்கள் இவர் தமிழச்சியா?

ஈராயிரத்து ஒன்பது மே திங்கள் பதினெட்டாம் நாள் தமிழ்க் குலத்துக்கு ஒரு கரு நாள். இந்தியப் படையும் சிங்களப் படையும் இணைந்து நின்று ஒரே நாளில் ஈழமண்ணில் ஐம்பதாயிரம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து இட்லரையும் வென்ற நாள் அது.

வெள்ளைக் கொடி ஏந்தி சென்ற வீரமறவன் நடேசனையும் அவரது குழுவினரையும் பொதுமக்களையும் கொஞ்சமும் இரக்கமின்றி சுட்டுத் தள்ளி பேயாட்டம் ஆடி நின்றதும் அந்த நாளில்தான்.

இத்தகையத் தமிழினப் படுகொலை நடந்தேறிய பிறகும் நவீன இட்லர் இராசபக்சேயிடம் ஒரு தமிழன் கை குலுக்கி உறவாட நினைக்கிறான் என்றால் அவன் தமிழனே அல்ல!

புலிகளை விட்டுப் பிரிந்து வாருங்கள் உங்களை வாழவைக்கிறோம் என்று வெற்று வாக்குறுதி அளித்த உலக மகாப் பொய்யன் இராசபக்சேயின் பேச்சை நம்பி ஏமாந்து இன்று முகாம்களில் நிரந்தர நரகத்தில் உழன்று கொண்டிருக்கின்ற மக்களை சிங்கள அரசு ஒரு போதும் உயிரோடு விடுதலை செய்யப் போவதே இல்லை. அவர்கள் அனைவரையுமே புலிகள் என்று முத்திரைக் குத்தி வைத்திருக்கின்றது சிங்கள அரசு. எனவே அம்மக்கள் அனைவரையும் சாகடிப்பது என்பதுதான் சிங்கள் அரசின் முடிந்த முடிபு. இந்த உண்மையைத்தான் முகாமில் உள்ள மக்களை விடுவிப்பது என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு செயல் என்று சொல்லாமல் சொல்லி இருக்கின்றார் அதிபர் இராசபக்சே!

ஆக, முகாம்களில் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கும் நம் இரத்தத்தின் இரத்தங்களை விடுவிக்கின்ற பொறுப்பு உலகத் தமிழர்களின் கைகளில் தான் இருக்கின்றது என்பதை உண்மைத் தமிழன் ஒவ்வொருவரும் உள்ளத்தில் பதித்துக் கொள்ளல் வேண்டும்.

கிழக்கே உதிக்கின்ற கதிரவன் ஒருகால் மேற்கே உதிப்பினும் உதிக்கலாம். ஆனால் சிங்களப் பேரினவாத அரசு தமிழினத்துக்குச் சம உரிமை வழங்கி அவர்களை வாழவைக்கும் என்ற பேச்சுக்கே இனி இடம் இல்லை. இதுதான் உண்மை! உண்மை! உண்மை!

மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு வாழ்ந்த இனம் தமிழினம். அந்த மானம் காக்கப்படல் வேண்டும். வீடணப் புத்தி கொண்ட தமிழ் இரண்டகர்களைக் கண்டு அஞ்சித் தளர்ந்து விடக் கூடாது தமிழினம்.

'வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா?
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா!
கொலை வாளினை எடடா! மிகு
கொடியோர் செயல் அறவே!'

தமிழ்மறவன் தன்மானப் புலவன் பாரதிதாசன் நம்மைத் தட்டி எழுப்புகின்றான்! உலகத் தமிழின மறவர்களே! திண் தோள் தட்டி எழுவீர் ! எழுவீ ர்!

"இனி இது பொறுப்பது இல்லை - தம்பி !
எரி தழல் கொண்டு வா!
கதிரை வைத்திழந்தான் - அண்ணன்
கையை எரித்திடுவோம்!

என்று தருமனின் இளையோன் வீமன் பொங்கி எழுந்தமை போன்று பொங்கி எழுந்து விட்டனர் மறத்தமிழர்.

பேரினவாத சிங்கள அரசை அழிப்பதற்கு இனிக் கொத்துக் குண்டுகள் கூடத் தேவையில்லை. அல்லல்பட்டு ஆற்றாது அழுகின்ற இலக்கக் கணக்கான ஈழத்தமிழர்களின் கண்ணீர்ப் படையே அதை அழித்து விடும்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றோ
செல்வத்தைத் தேய்க்கும் படை.

இதைச் சொல்பவன் யார்? பொய்யா மொழிப் புலவன். அவனின் வாக்கு ஒரு போதும் பொய்க்காது.

பெருங்கடலாய்ப் பெருகிக் கொண்டிருக்கும் இக்கண்ணீர்ப்படை ஆழிப்பேரலையாய் எழுந்து சிங்களக் கொடுங்கோல் அரசை மட்டுமல்ல அதற்குத் துணை போன அத்தனை நாடுகளையும் விழுங்கி அழித்தொழிக்கும்.



ஈழத்தில் மட்டுமல்ல இலங்கை எங்குமே எங்களின் தமிழ்க்கொடி பறக்கும்! அங்கே ஐ.நா அரங்கத்திலும் நம் கொடி அசைந்தாடும்! அந்நாளே நமக்கு நன்னாள்!

எழுந்தது மறவர் படை!
மலர்ந்தது தமிழ் ஈழம்!

வாழ்க! வளர்க! தமிழன் வீரம்!

இக்கண்,

அ.ரெங்கசாமி

நன்றி:திருநெறி

Blog Widget by LinkWithin