Sunday, July 06, 2008

சந்தனக்காடு:- "வீரத்தமிழன் வரலாற்று ஆவணம்"




தமிழ்த் தொலைக்காட்சி உலகின் தலையெழுத்தையே புரட்டிப்போட்டு, இதுவரையில் இல்லாத மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி, தனக்கென தனியொரு பாணியை உருவாக்கி தமிழின் விழுமியங்களையும் தமிழரின் தொல்மரபுகளையும் உயர்த்திப்பிடித்து, உலகத் தமிழரின் உள்ளமெல்லாம் நீங்கா இடத்தைப் பிடித்துள்ள ஒரே தமிழ்த் தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சிதான்.

தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ் கலை பண்பாட்டுக்கும் முன்னுரிமை கொடுப்பதோடு, மருந்துக்குக்கூட 'சினிமா' எனப்படும் திரைப்படக் குப்பைகளுக்கு அறவே இடம் கொடுக்காமல் மிக வெற்றிகரமாகச் செயல்பட்டு உலகத்தமிழ் நேயர்கள் அனைவரது ஒட்டுமொத்த பாராட்டுதலையும் வாரிக்குவித்துக் கொண்டிருக்கிறது மக்கள் தொலைக்காட்சி.


இப்படிப்பட்ட அருமைமிகு தமிழ்த் தொலைக்காட்சிக்கு மகுடம் வைத்ததுபோல அமைந்த நிகழ்ச்சிகளில் மிக முதன்மையானது 'சந்தனக்காடு' தொடர்தான் என்றால் மிகையன்று. தமிழகம், மலேசியா, எத்தியோப்பியா, துபாய், ஆத்திரேலியா, கனடா உள்ளிட்ட அயல்நாடுகளில் வாழும் தமிழரின் பெருத்த ஆதரவோடு இத்தொடர் மிக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி இப்போது நிறைவடைந்துள்ளது. 'சந்தனக்காடு' தொடர் வீரப்பனின் வாழ்க்கையைக் காட்டும் மிகச்சிறந்த காவியமாக உலகத் தமிழ்மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளாகக் காணாமல் போயிருந்த தமிழனின் வீரத்தையும் மறத்தனத்தையும் தூசுதட்டி பளிச்செனக் காட்டி தமிழின வரலாற்றில் தடம் பதித்துள்ளது.

சந்தனக் கடத்தல்காரன் என்று உலகத்திற்குச் சொல்லப்பட்ட வீரப்பனின் வாழ்க்கையை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்திய இந்தத் தொடரை, மிகச் சிறந்த ஒரு திரைப்படத்துக்குரிய நேர்த்தியோடு இயக்கியவர் இயக்குநர் வ.கெளதமன். மகிழன் கலைக்கூடம் நிறுவனம், ஒரு வனமும் இனமும் சிதைந்த இந்தக் கதையைக் காவியமாக வழங்கியது.

தமிழனின் வீரமரபை வெளிப்படுத்தியத் தொடர்

உலக நாகரிக வெள்ளத்தில் கரைந்துபோய்விட்ட ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் மிகமிக அடித்தளத்தில் கண்டுபிடிக்க முடியாத ஒரு இருண்ட மூளையில் எள்மூக்கு அளவுக்கு ஒட்டிக்கொண்டிருக்கும் 'தமிழன்' என்ற உணர்வையும் 'தமிழ்' என்ற உணர்ச்சியையும் 'சந்தனக்காடு' தட்டியெழுப்பியிருக்கிறது என்று துணிந்து சொல்லலாம். அந்த அளவுக்குச் சிறுவர்கள் முதல் பெண்களும் பெரியவர்களுமாக, தொடக்கநாள் முதல் இறுதிநாள் வரை ஒவ்வொரு நாளும் தவறாமல் இந்தத் தொடரைப் பார்த்தவர்கள் ஏராளம் ஏராளம்!

'சந்தனக்காடு' தொலைக்காட்சியில் தொடராக வருகின்ற நாள்வரையில் வீரப்பன் என்ற ஒரு வீரத்தமிழனின் வரலாற்றைத் தமிழர்கள் எல்லாருமே தப்பும் தவறுமாகத்தான் அறிந்து வைத்திருந்தனர். வீரப்பனின் உண்மை வரலாற்றை; ஒரு மறத்தமிழனின் வீரவரலாற்றை இந்தத் தொடர் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இது வெறும் சின்னத்திரைத் தொடரல்ல. ஒரு வனத்தின் நடுவில் இருந்துகொண்டு தமிழையும் தமிழரையும் காப்பதற்குப் போராடிய வீரத்தமிழர் பற்றிய வரலாற்று ஆவணம்! 'சந்தனக்காடு' மட்டும் வராமல் இருந்திருந்தால் ஒரு வீரத்தமிழனின் போராட்டம் உலகத்திற்குத் தெரியாமலே போயிருக்கும்.

சந்தனக்காடு ஏற்படுத்திய தாக்கங்கள்

இந்தத் தொடரைக் கண்டுகளித்தோம் என்று சொல்லுவதை விட, வீரப்பனோடு வாழ்ந்திருந்தோம் என்று சொல்லும் அளவுக்குக் கதைக்குள்ளே நம்மையும் இழுத்து வைத்துக்கொண்டது 'சந்தனக்காடு'. வீரப்பன் சிரிக்கும்போது சிரித்து.. அழும்போது அழுது.. கோபப்பட்டபோது கோபித்து.. வெகுண்டு எழுந்தபோது எழுந்து.. நெஞ்சுயர்த்தி நின்றபோது நின்று என வீரப்பனோடு நம்மையும் பிணைத்துவைத்த காட்சிகள்தாம் எத்தனை எத்தனை!

வீரப்பன் அடிபட்ட போதெல்லாம் நமக்கும் வலித்தது..! வீரப்பன் அடி கொடுத்த போதெல்லாம் நமக்கும் நரம்பெல்லாம் முறுக்கேரியது..! வீரப்பன் காதலில் வெட்கப்பட்ட போதெல்லாம் நமக்கும் கூச்சமாயிருந்தது..! வீரப்பன் பிடிபட்டபோது அவனைக் காப்பாற்ற நமது தோளும் துடித்தெழுந்தது..! வீரப்பனுக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்ட போது நமது இரத்தமும் சூடேரியது..! வீரப்பன் கொல்லப்பட்ட போது நம்முடைய உடன்பிறப்பொன்று பிரிவது போல நமது உயிரும் கலங்கியது..! இப்படி எண்ணற்ற பாதிப்புகளை நமக்குள்ளே இந்தச் 'சந்தனக்காடு' ஏற்படுத்தியது உண்மையிலும் உண்மை!

அதுமட்டுமா? தமிழர்கள் கொடுரமாகக் கொல்லப்படும் ஒவ்வொரு காட்சியிலும், தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் காட்சியிலும், தமிழ்க் குடும்பங்களும் குழந்தைகளும் கன்னட வெறியர்களால் தாக்கப்படும் காட்சியிலும், இனவெறிபிடித்த கன்னடர்கள் கோரத்தாண்டவம் ஆடும் காட்சியிலும் நமக்குள்ளே நான் தமிழன்.. என் மொழி தமிழ்.. என்ற உணர்ச்சி மீண்டும் மீண்டும் பொங்கிக்கொண்டே இருந்தது! நமது உரிமையை அஞசாமல் கேட்க வேண்டும்; மொழி இனத்தை முன்னின்று காக்க வேண்டும்; சொந்த மண்ணைப் போராடியாகிலும் மீட்க வேண்டும் என்ற உணர்வுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன!

அவிழ்ந்து போன மர்ம முடிச்சுகள்

மொழிப்பற்றும் இனப்பற்றும் தாய்மண் பற்றும் மாந்தநேயமும் நேர்மையும் உண்மை உணர்வும் கொண்ட வீரப்பன் ஏன்? எப்படி? யாரால்? எதனால்? எதற்காக? கொலைக் குற்றவாளியானான் என்பதை இந்தக் காவியம் மிகத் தெளிவாக நமக்குக் காட்டிவிட்டது. வீரப்பன் நிலையில் இருக்கின்ற எவரும் கண்டிப்பாகக் குற்றவாளியாக மாறியே ஆவார்கள். சட்டத்தின் பார்வைக்குத்தான் வீரப்பன் குற்றவாளியே தவிர ஓர் இனப்போராட்டத்தின் பார்வையில் அவன் ஈடு இணையற்ற ஒரு போராளி என்பதை இந்தத் தொடர் நிறுவியுள்ளது.

மேலும், ஒவ்வொரு தொடரின் இறுதியிலும் வீரப்பனோடு வாழ்ந்திருந்த பொதுமக்களைப் பேசவைத்து அவர்களின் பட்டறிவைப் படமாக்கியிருப்பதானது, 'சந்தனக்காடு' தொடரில் வரும் கதைகளும் நிகழ்வுகளும் உண்மையானவை என்பதை உறுதிபடுத்துவதாக அமைந்தது. அவ்வாறு பேசியவர்கள் சொன்ன கண்ணீர்; செந்நீர்; வீரதீரக் கதைகளிலிருந்து வீரப்பனை நாம் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அதோடு, அதிகாரக் கூட்டத்தினரும், இன வெறியர்களும், காவல் அதிகாரிகளும் பண்ணிய கொடுமைகள், பொய்ப் பித்தலாட்டங்கள், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள், கொலைவெறித்தனங்கள் என அனைத்தையும் அப்பட்டமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது.

மொத்தத்தில், இந்தத் தொடரானது நமது தமிழ் மொழிக்கும் இனத்துக்கும் நாட்டுக்கும் ஏற்பட்ட; ஏற்படுகின்ற; ஏற்படப்போகும் இன்னல்களையும் இடர்களையும் நன்றாகவே எடுத்துக் காட்டியுள்ளது. இந்தத் தொடரானது மிகப்பெரிய அளவில் மொழி, இன, நாட்டு உணர்வை ஊட்டியுள்ளது. தூங்கிக் கிடக்கும் தமிழ் மக்களைத் தட்டி எழுப்பியுள்ளது. தமிழரிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு அடுத்த தலைமுறைக்காக நாம் செய்யவேண்டிய முன்னேற்பாடுகளைப் பற்றிய சிந்தனைகளைத் தூண்டியுள்ளது.

திரைப்பட – சின்னத்திரைப் போக்கையே புரட்டிப்போட்ட புதுமைப் படைப்பு

காலங்காலமாக, நாயகர்களின் அதிரடியையும், நடிகைகளின் குலுக்கலையும், நகைச்சுவை என்ற பெயரில் கோணங்கித்தனத்தையும், இரட்டைப் பொருள்தரும் உரையாடலையும், ஆங்கிலம் கலந்த ஆர்ப்பாட்டமான பாடலையும் திரும்பத் திரும்பப் பரிமாறி, தமிழனின் மனத்தையும் மானத்தையும் தமிழ்த் திரப்படங்கள் (சினிமா) கெடுத்துவந்தன. இப்படி, திரைப்படங்கள் தின்றுத்துப்பிய எச்சில்களையே பின்னர்வந்த சின்னத்திரைத் தொடர்களும் மக்களுக்குப் பரிமாறின. இரண்டு மனைவி கதை, மூன்று பெண்டாட்டிக்காரன் கதை, அண்ணியை அடைய நினக்கும் தம்பி, கணவனையே கொல்ல சதிசெய்யும் மனைவி என ஒழுக்கங்கெட்ட வட்டத்திலேயே செக்குமாடுபோல சுற்றிவந்த சின்னத்திரையில் 'சந்தனக்காடு' இயக்குநர் வ.கௌதமன் புதிய பரிணாமத்தைக் ஏற்படுத்தி சாதனை செய்துள்ளார்.

திரைப்படம் – சின்னத்திரை இரண்டின் ஆதிக்கத்தை வீரப்பனின் தோட்டா வேட்டையாடி தூள்தூளாக்கிவிட்டது. திரைப்படம் – சின்னத்திரை இரண்டும் எழுப்பி வைத்திருந்த கனவுக் கோட்டையைச் 'சந்தனக்காடு' தகர்த்து தரைமட்டமாக்கிவிட்டது.

இரவுப் பகல் பாராமல், காடுமேடு பாராமல், பசிப்பட்டினி பாராமல், ஊண் உரக்கம் பாராமல் தான் பிறந்த தமிழினத்தின் நலன் ஒன்றையே குறியாகக் கொண்டு 36 ஆண்டுகள் சந்தனக்காட்டில் மறைந்து வாழ்ந்து, ஆனால் உலகம் முழுக்க பெரும் பரபரப்பு ஏற்படுத்திய வீரப்பன் என்ற ஒரு வீரத்தமிழன் வாழ்க்கையை அதனதன் நிகழ்விடத்திலேயே பதிவுசெய்து நமக்கெல்லாம் வழங்கிய இயக்குநர் வ.கௌதமனுக்கும், மகிழன் கலைக்கூடத்திற்கும், மக்கள் தொலைக்காட்சிக்கும் உலகத் தமிழர் அனைவரும் நன்றிசொல்ல வேண்டியது முதன்மைக் கடமையாகும். வீரப்பனின் வீர வரலாற்றை ஒளிக்காப்பியமாக உருவாக்கி இன்றைய இளைஞர்களுக்குப் பாடமாகவும் நாளைய தலைமுறைக்கு ஆவணமாகவும் ஆக்கியிருக்கும் இந்தக் கூட்டணியை உண்மைத் தமிழர் என்றென்றும் போற்றுவர்.

15 comments:

அகரம் அமுதா said...

அட! மலேசியாவில் தமிழன் தொலைக்காட்சியைப் பார்க்க முடிகிறதா? இங்கு சிங்கையில் இல்லை. இக்கட்டுரையைப் படித்தவுடன் அந்த கவலை என்னைத் தொற்றிக்கொண்டது. கட்டுரை அருமை வாழ்த்துக்கள்.

அகரம் அமுதா said...

வீரப்பனைப் பற்றி முன்பே பல செய்திகள் தெரியும் எனினும் தாங்கள் விவரித்த விதம் என்னை மிகவும் கவருகிறது, அதேவேளையில் அத்தொடரைப் பார்க்கமுடியாமல் போனது பற்றி வருத்தமாகவும் உள்ளது.

Anonymous said...

//தமிழ்த் தொலைக்காட்சி உலகின் தலையெழுத்தையே புரட்டிப்போட்டு, இதுவரையில் இல்லாத மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி, தனக்கென தனியொரு பாணியை உருவாக்கி தமிழின் விழுமியங்களையும் தமிழரின் தொல்மரபுகளையும் உயர்த்திப்பிடித்து, உலகத் தமிழரின் உள்ளமெல்லாம் நீங்கா இடத்தைப் பிடித்துள்ள ஒரே தமிழ்த் தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சிதான்.

தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ் கலை பண்பாட்டுக்கும் முன்னுரிமை கொடுப்பதோடு, மருந்துக்குக்கூட 'சினிமா' எனப்படும் திரைப்படக் குப்பைகளுக்கு அறவே இடம் கொடுக்காமல் மிக வெற்றிகரமாகச் செயல்பட்டு உலகத்தமிழ் நேயர்கள் அனைவரது ஒட்டுமொத்த பாராட்டுதலையும் வாரிக்குவித்துக் கொண்டிருக்கிறது மக்கள் தொலைக்காட்சி.//

மாற்றுக் கருத்தே கிடையாது :)

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர்கள் அகரம்.அமுதா, இனியவள் புனிதா இருவரின் மறுமொழிக்கு என் நன்றி உரித்தாகட்டும்.

நாம் இலக்கியத்தில் மட்டுமே படித்த தமிழனின் வீரத்தை 'சந்தனக்காடு' நம் கண்முன்னே கொண்டுவந்து காட்டிவிட்டது.

தமிழன் வீரம் வீழ்ந்துவிடவில்லை! பூமிப்பந்தில் இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது, தமிழீழம் போல..

அரியாங்குப்பத்தார் said...

தமிழ்நாட்டில் எந்த நிலையிலும் தமிழர்களின் ஆளுமையை விரும்பாத ஏற்றுக்கொள்ளாத தமிழின துரோக்கூட்டத்திற்கு வாழும் தமிழர்களாகிய நாம் எந்த வகையில் எதிர்வினையாற்றப் போகிறோம்...

என்பதை ஒவ்வொரு தமிழனும் முடிவெடுக்க வேண்டிய காலமிது...

அகரம் அமுதா said...

என் வெண்பா எழுதலாம் வாங்க தளத்தைத் தங்களுடைய வலையில் தொடுப்புக்கொடுக்கக் கேட்டிருந்தீர்கள் அல்லவா. மகிழ்ச்சியோடு வழிமொழிகிறேன்.நன்றி.

Anonymous said...

உலக தமிழின வரலாற்றில் தனக்கென தனிமுத்திரையைப் பதித்து தமிழின மேன்மைக்காக தன் வாழ்நாளையே ஈகம் செய்த வீர மறவனின் வரலாற்றினை மிகச்சிறப்பாகப் பதிவு செய்திருக்கின்ற மக்கள் தொலைக்காட்சிக்கும் மகிழன் கலைக்கூடத்திற்கு உலகத் தமிழினத்தின் வாழ்த்துகள் உரித்தாகுக.

தமிழ்மறவன் வீரப்பனின் உண்மை நிலையை அறிகின்ற போது உள்ளம் குமுறுகிறது. தமிழ்மொழிக்காகவும் தமிழினத்திற்காகவும் தன் இன்னுயிரை ஈகம் செய்திருக்கின்ற வீரனின் வாழ்க்கை தொடர் உலகத்தமிழினம் பார்க்கவேண்டிய அருமையான தொடராகும்.

வாழ்க தங்கள் பணி
தமிழா ஒன்றுபடு
தமிழால் ஒன்றுபடு
தமிழுக்காகவே ஒன்றுபடு.

அன்புடன்
ஒளியரசன்
கடாரம்

Anonymous said...

உண்மை தமிழ் வீரனின் வரலாற்றுக் கதையினை மிக அருமையாகப் படம் பிடித்துக் காட்டிய மக்கள் தொலைக்காட்சிக்கும் மகிழன் கலைக்கூடத்திற்கும் ஆயிரமாயிரம் நன்றி.

உலக தமிழினத்திற்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகள் அதிகம். அதற்கு சந்தனக்காடு நல்லதோர் எடுத்துக்காட்டு. உண்மைத் தமிழர்கள் தெளிவு பெறுதல் வேண்டும்.

வீரத்தமிழன்,

தமிழ்மறவன்
வரலாற்று மாநிலம்

Anonymous said...

அருமையான தொடர். ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய வரலாற்று ஆவணம்.

வீரப்பனைப் பற்றி நாம் கேட்டதையும், படித்ததையும் அடித்துப் போடுகிற அளவுக்கு மக்கள் மத்தியில் உண்மை நிலையினை எடுத்துச் சொல்லியிருக்கின்ற மக்கள் தொலைக்காட்சியினை வாழ்த்துகிறோம்.

உலகத்தமிழர்கள் போற்றிக் கொள்ளவேண்டிய வரலாற்றுப் பதிவு.

அன்புடன்
பொன்னறிவு
சிரம்பான்

Anonymous said...

வீரத்தமிழன் வீரப்பனின் உண்மை வரலாற்றினைப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்ற மக்கள் தொலைக்காட்சிக்கும் மகிழன் கலைக்கூடத்திற்கும் நமது நன்றி

தொடரட்டும் உங்கள் பணி

தமிழுடன்

தேன்தமிழன்
பகாங்கு

Anonymous said...

இனிய நண்பர் சுப.நற்குணன் அவர்களுக்கு, வணக்கம். தங்களின் எண்ணத்தில் உருவான "தசாவதாரம்" படவிமர்சனம் முற்றிலும் மாறுபட்டிருந்தது. அதோடு எனது சிந்தனையையும் கிளறியது. மிக அற்புதமான சிந்தனை ஐயா....!

மேலும், சந்தனக்காட்டுக்குள் இத்தனை வரலாற்று ஆவணமா..? அந்தத் தொடரை காண வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.வருந்துகிறேன். இருப்பினும் அது குறித்த தங்களின் செய்தி என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. தொடர்க உங்களின் சேவை!!! தங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
அன்புடன்,
சந்திரன் இரத்தினம்,
ரவாங்கு, சிலாங்கூர்.

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர் சந்திரன் இரத்தினம் அவர்களே,

"ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை; இருநிலம் பிழக்க வேர் வீழ்க்குமே" என்பதற்குப் பொருத்தமாகத் தங்களின் நட்பைப் பார்க்கிறேன். தங்களின், தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள், வலைப்பதிவு மறுமொழிகள் ஆகிய அனைத்தும் கண்டு மனம் நெகிழ்ந்திருக்கிறேன்.

தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ஐயா!

திருத்தமிழ் அன்பர்கள் ஒளியரசன், தமிழ்மறவன், பொன்னறிவு, தேன்தமிழன் ஆகியோரை அன்புடன் வரவேற்கிறேன். தொடர்ந்து எழுதவும்.

Anonymous said...

Nanbar Supa. NarkuNan AvarkaLeh,
Vanakkam.

MakkaL tholaikkaadchikku Veerappan thodar VeerukoNda thodaraaga irunthathu pohL, thiru thamil agap pakkaththirku tangalin kaddurai inimai sehrkkinRathu. VaalththukkaL

anbudan,
GC. Saru
Sitiawan

Anonymous said...

சந்தனக்காடு தொலைக்காட்சி தொடர் பற்றி இப்படி ஒரு அருமையான விமர்சனத்தை வேறு எவரும் இணையத்தில் எழுதிடவில்லை. ஏன்? தமிழ்நாட்டிலிருந்து கூட எவரும் எழுதவில்லை. ஆனால், மலேசியாவிலிருந்து வரும் திருத்தமிழ் வலைப்பதிவில் திரு.சுப.நற்குணன் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் எழுதியுள்ளார். மலேசியாவில் மொழிப்பற்றும் இனப்பற்றும் மிக்க தமிழர்கள் ழாழ்கிறார்கள் என்பதற்கு இந்தக் கட்டுரை நல்ல எடுத்துக்காட்டு.

சந்தனக்காடு மிகவும் அருமையான தொடர் என்பதில் சந்தேகமே இல்லை. இதுபோன்ற இன உணர்வையும் மொழி உணர்வையும் ஊட்டுகின்ற நாடகங்கள் அதிகமாக வரவேண்டும். சன், ஜெயா தொலைக்காட்சிகளில் வருகின்ற நாற்றமடிக்கும் குப்பை நாடகங்களை தமிழர்கள் ஓரங்கட்ட வேண்டும்.

அன்புடன்,
இளையவேல் - சிரம்பான்

VIKNESHWARAN ADAKKALAM said...

//நமக்குள்ளே நான் தமிழன்.. என் மொழி தமிழ்.. என்ற உணர்ச்சி மீண்டும் மீண்டும் பொங்கிக்கொண்டே இருந்தது//

இத்தொடரை காணும் வாய்ப்பு எனக்கு கொடுத்து வைக்கவில்லை.. மேல் காணூம் வரிகளை படிக்கையில் எனக்கே ஒரு வெறி வருகிறது... தமிழனை இகழ்பவன் அவ்விடமே மடிந்து போக இறைவன் ஒருவன் இருந்தால் வரம் தரட்டும்.

சிறப்பான பதிவு... வாழ்த்துக்கள்...

Blog Widget by LinkWithin