Saturday, February 23, 2008

சென்ற நூற்றாண்டை வென்ற தமிழ்


தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக் குடி" எனக் கூறப்படுகிறது. இது கற்பாறைகளைக் கொண்ட குறிஞ்சி நிலம் தோன்றிய பின்னும், காலப்போக்கில் மணலும் மண்ணும் நிறைந்த மருதநிலம் தோன்றிய காலத்திற்கு முன்னும் இருந்த காலத்தைக் குறிப்பிடுவதாகும். அந்தப் பழங்காலத்திலேயே தமிழ்க்குடியினர் புவியில் வீரமரபோடு வாழ்ந்திருந்தனர் என அப்பாடல் குறிப்பிடுகின்றது.

உலக மொழி ஆய்வாளர்கள் உலகின் முதல் தாய்மொழி தமிழாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு இப்போது வந்துள்ளனர். மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் போன்ற பேரறிஞர்கள் தமிழே உலகின் முதல் தாய்மொழி என நிறுவியும் உள்ளனர்.

இந்த உண்மையை உலகம் ஏற்கும் காலம் நெருங்கிவந்துக் கொண்டிருக்கும் தருணத்தில் உலகின் உயர்தனிச் செம்மொழிகளில் ஒன்றாகத் தமிழை உலகமே ஏற்றுக்கொண்டுவிட்டது. மேலும், இலத்தின், கிரேக்கம், எகுபதியம், சமற்கிருதம் முதலான தொன்மொழிகளை விடவும் தமிழ் முந்தியது எனவும் கூறுவர். சென்ற நூற்றாண்டுகளில் தமிழின் தலைமையும் தொன்மையும் மற்றைய மொழிகளை விடவும் மேம்பட்டு இருந்ததற்கான சான்றுகளும் நிறைய உள்ளன.

1. முற்காலத்தில் சீன யாத்திரிகர் யுவாங் சுவாங் முதல் பிற்காலத்தில் ஜி.யு.போப், ரோபர்ட் கால்டுவெல் முதலான வேற்றுநாட்டினர்; வேற்று மதத்தினர்; வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றிப் பாராட்டப்பட்டிருக்கிறது.

2. 1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் மலாயாவை, கடாரத்தை (கெடா), சயாமை (தாய்லாந்து) கைப்பற்றி ஆட்சிசெய்துள்ளனர். முதலாம் குலோத்துங்க மன்னன் பர்மாவை (மியான்மார்) ஆண்ட செய்தியும், கரிகாலன் இலங்கையை கைப்பற்றி ஆண்ட செய்தியும் இலக்கியங்கள், கல்வெட்டுகள் வழியாக அறியப்படுகின்ற வரலாற்று உண்மைகளாகும்.

3. 1500 ஆண்டுகளுக்கு முன்னர் மலாக்காவை பரமேசுவரன் என்னும் மன்னனும் சிங்கப்பூரை நீல உத்தமன் என்னும் மன்னன் தம் துணைவியார் தாழைப் பூச்சூடி அரசியாருடன் ஆட்சிசெய்த வரலாற்றுப் பதிவுகள் உள்ளன.

4. 2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் வரலாற்றுக் குறிப்புகளில் பற்பல தமிழ்ப்பெயர்கள் காணப்படுகின்றன.

5. 2300 ஆண்டுகளுக்கு முந்தைய பிராமியக் கல்வெட்டுகள் தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளன. சிந்துநதிக்கரையில் (மொகஞ்சதாரோ அராப்பா) கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் பழந்தமிழில் எழுதப்பட்டுள்ளன. அவை இன்று அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன.

6. 2400 ஆண்டுகளுக்கு முன்புள்ள வடமொழி இலக்கணப் பாணினி காலத்திலேயே தமிழில் "நற்றிணை" என்னும் நூல் தோன்றியிருக்கிறது.

7. 2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமன் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து தமிழ் வணிகர்கள் கப்பல்கள் வழியாக பண்டங்களைக் கொண்டுசென்று கிரேக்க நாட்டில் தமிழில் விலைபேசி விற்றுள்ளனர். அப்பொருள்கள் இன்றளவும் மேலை நாடுகளில் தமிழிலேயே குறிக்கப்படுகின்றன. அரிசி – "ரைஸ்", மயில் தோகை – "டோ கை", சந்தனம் – "சாண்டல்", தேக்கு – "டீக்கு", கட்டுமரம் – "கட்டமரன்", இஞ்சி – "ஜிஞ்சர்", ஓலை – "ஒல்லா", கயிறு – "காயர்" என வழங்கி வருகின்றன. இந்தச் சொற்கள் பிரெஞ்சு, ஆங்கில அகரமுதலிகளிலும் அவர்களின் சொற்களாகவே இடம்பெற்றுள்ளன.

8. 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழுக்கு இலக்கணம் சொல்லும் நூலான தொல்காப்பியம் தோன்றிவிட்டது. அதற்கும் முன்பே பல இலக்கண நூல்கள் இருந்த உண்மையைத் தொல்காப்பியமே கூறுகின்றது.

9. 3000ஆம், 5000ஆம், 9000ஆம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்களின் தாய்மண்ணாகிய குமரிக்கண்டத்தில் கடற்கோள்கள் (சுனாமி) ஏற்பட்டுள்ளன. இந்தக் குமரிக்கண்டத்தில் 49 நாடுகளும் 3 தமிழ்ச் சங்கங்களும் குமரி மலையும் பஃறுளி ஆறும் இருந்துள்ளன என்ற வரலாறுகள் கிடைத்துள்ளன.

இத்துணைச் சான்றுகளும் தமிழின் தொன்மையை வெள்ளிடை மலையாகக் காட்டுகின்றன. பழைமைச் சிறப்புடைய இனமாகிய தமிழினம் உலகில் வேறு எந்த இனத்திற்கும் குறைவுபட்ட இனமன்று. மாறாக, உலக மொழிகளுக்கும், பண்பாட்டுக்கும், நாகரிகத்திற்கும் முன்னோடியாக இருந்துள்ளது என்ற பெருமை கொண்டது தமிழினம்.

இந்த மொழிப் பெருமையையும் இனத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பினையும் உண்மையாகவே உணர்ந்துவிட்டால் உலகம் மதிக்கும் உன்னத இனமாகத் தமிழினம் உயர்வுபெறும்.

No comments:

Blog Widget by LinkWithin