Saturday, May 03, 2008

கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம்-2



சமய நூல்களும் கிரந்த எழுத்தும்

கிரந்த எழுத்துகள் வழக்கில் இல்லையென்றால், அவை கலந்து எழுதப்பட்டுள்ள நூல்கள் பிற்காலத்தில் படிக்க இயலாமற் போய்விடும் என்பது ஏற்புடைய கருத்தன்று. இதே நூல்களிலுள்ள கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகளாக மாற்றப்பட்டாலும் அவற்றைப் படித்து புரிந்துகொள்ள முடியும். இதற்கு எடுத்துக்காட்டாகக் கம்பராமாயணத்தைக் கொள்ளலாம். இதன் கதையும், இதில்வரும் இடப்பெயர்களும் ஆட்பெயர்களும் வடமொழி சார்ந்தவை. கம்பர் காலத்தில் கிரந்த எழுத்துகள் இருக்கவே செய்தன. இருந்தும், அறவே கிரந்த எழுத்துகள் இல்லாமல் ஏறத்தாழ பன்னீராயிரம் பாடல்களைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டே கம்பர் பாடியுள்ளார். அதில் வந்திருக்க வேண்டிய கிரந்த எழுத்துகளுக்கு மாற்றாக தமிழ் எழுத்துகளே பயன்படுத்தப் பட்டுள்ளன. இதனால், அந்த இலக்கியத்தைப் படிப்பதிலும் சுவைப்பதிலும் எந்த சிறுதடையும் ஏற்பட்டுவிடவில்லை. இதுபோலவே, பிறமொழி ஒலிகளைக் கொண்ட எந்த நூலையும் தமிழ் எழுத்துகளை மட்டுமே பயன்படுத்தி வெளியிட முடியும்; அவற்றைப் படித்துச் சுவைக்கவும் முடியும்.

சமயஞ்சார்ந்த பெயர்களும் கிரந்த எழுத்தும்

பல்வேறு சமயங்களைச் சார்ந்திருக்கும் தமிழர்கள் தங்கள் சமயஞ்சார்ந்து வைத்துக்கொண்டுள்ள பெயர்களை எழுதுவதற்குக் கிரந்த எழுத்துகள் தேவை என்ற கருத்தும் பொருந்துவதாய் இல்லை. கமபர் வடமொழிப் பெயர்களை ஆண்டிருப்பது போலவே, இப்போதும் பிறமொழிப் பெயர்களைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதலாம். (எ.கா: இராமன், இலக்குவன், சீதை, இராவணன், விபீடணன்) கம்பராமாயணத்தில் மட்டுமின்றி அரபு நாட்டில் பிறந்த நபிகள் நாயகத்தின் வரலாற்றைப் பாடிய உமறுப் புலவரின் 5027 படல்களைக் கொண்ட சீறாக்காவியம் அறவே கிரந்த எழுத்துகள் இன்றித் தமிழ் எழுத்துகளாலேயே பாடப்பட்டுள்ளது. அதில் வரும் அரபுமொழிச் சொற்களும் பெயர்களும் தமிழ் எழுத்துகளாலேயே எழுதப்பட்டுள்ளன.

சமயஞ்சார்ந்த பெயரைத் தமிழில் எழுதலாம்

வடமொழிப் பெயர்களைத் தவிர்த்து நல்ல தமிழிலேயே பெயர்வைக்கும் விருப்பமும் போக்கும் மக்களிடையே வளர்ந்து வருகிறது. தமிழில் பெயரிடுவோம் என்ற கொள்கையுடன் பல இயக்கங்கள் அந்த மாற்றத்தை மேலும் வளர்த்தும் வலுப்படுத்தியும் வருகின்றன. எனவே, வடமொழிப் பெயர்களையே வைத்தாக வேண்டும் என்ற நிலை வருங்காலத்தில் முற்றாக மாறிவிடக்கூடும். சமய அடிப்படையிலான பெயர்களைக்கூட வடமொழி தவிர்த்து நல்ல தமிழில் வைக்க முடியும். கிருஷ்ணன் என்பதைக் கண்ணன் என்றும், விஷ்ணு என்பதை மாலவன் என்றும், லஷ்மி என்பதைத் திருமகள் என்றும், சரஸ்வதி என்பதைக் கலைமகள் என்றும் தமிழிலேயே வைத்துக்கொள்ள முடியும். ஷண்முகம் என்பதை ஆறுமுகம் என்றும், தட்சிணாமூர்த்தி என்பதை அருள்வேந்தன் என்றும் அதே பொருளில் மாற்றி வைத்துக் கொண்டவர்களும் உள்ளனர். எனவே, சமயஞ்சார்ந்து பெயர்வைக்கக் கிரந்த எழுத்துகள் கட்டாயத் தேவை அல்ல.

தமிழைத் தமிழாக்குவோம்

எனவே, உண்மைகளையும், தமிழ்நலனையும் நடுநிலையோடு சீர்தூக்கிப் பார்த்து, தமிழில் உள்ள கிரந்த எழுத்து வழக்கைப் படிப்படியாக மாற்றித் தமிழைத் தமிழாகவே நிலநிறுத்தத் தமிழர் யாவரும் இன்றிணைந்து செயல்படுவதே நமது தாய்மொழிக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும். பழகிப் போனதால் மாற்றம் சிறிது கடினமாகத் தோன்றலாம்; படிப்படியாகச் செய்தால் அது இயல்பாகிவிடும்; இனிதுமாகிவிடும்.

தவிர, பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதுவதற்குக் கிரந்த எழுத்து மிகவும் தேவை எனச் சிலர் எண்ணுகிறார்களே, அதற்கு என்ன விளக்கம்? (பாகம் 3-ஐத் தொடர்க..)
கிரந்தம் தொடர்பான கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

1 comment:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பயனுள்ள தொடர். நன்றி.

Blog Widget by LinkWithin