Monday, April 28, 2008

தனித்தமிழ் பற்றிய ஐயங்களும் தெளிவுகளும்

  • தனித்தமிழ் என்றால் என்ன?
  • தனித்தமிழ் ஏன்? எதற்கு?
  • தனித்தமிழின் வரலாறு யாது?
  • தனித்தமிழ் வெற்றி பெற்றுள்ளதா?
  • தற்காலத்திற்குத் தனித்தமிழ் பொருந்துமா?
  • தனித்தமிழ் தமிழர்க்கு ஆக்கத்தைத் தருமா?

இப்படியாகத் தனித்தமிழ் பற்றிய பல்வேறு ஐயங்கங்கள் தமிழரிடையே நிலவி வருகின்றன. குறிப்பாக, தமிழ்க் கற்றோர், கற்பிப்போரிடையே இத்தகைய ஐயப்பாடுகள் நிலவி வருவது குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. நமது மலேசியத் திருநாட்டில் தமிழ்மொழிச் சார்ந்திருக்கும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், கல்வி அதிகாரிகள், பாடநூலாசிரியர்கள், எழுத்தாளர்கள், பாவலர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் 'தனித்தமிழ்' என்பதைப் பெரும்பாலும் தவறாகவே உணர்த்துள்ளனர்; தப்புத் தப்பாகவே அறிந்துள்ளனர்.

'தனித்தமிழ்' என்பதை உண்மையாகவே புரிந்து கொண்டிருப்பவர்கள் மிகக் குறைவானவர்களே ஆவர். அவ்வாறு புரிந்தவர்கள்; அறிந்தவர்கள்; உணர்ந்தவர்கள் 'தனித்தமிழைப்' பற்றி பேசுகின்ற, எழுதுகின்ற, முன்வைக்கின்ற கருத்துகள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே மலேசியாவில் நாம் கண்டுவந்திருகின்ற வரலாறாகும்.

தனித்தமிழை முன்னெடுப்பவர்கள் 'தமிழ் வெறியர்கள்' என முத்திரைக் குத்தப்படுகிறது. ஆட்சி அதிகார பலம் பெற்றவர்களால் தனித்தமிழ் நயவஞ்சகமாக ஓரங்கட்டப்படுகிறது. தனித்தமிழ் பண்டிதர்களுக்கே சொந்தமானது என்ற தவறான கருத்து வலிந்து பரப்பப்படுகிறது. தனித்தமிழ் மாணவர்களுக்குப் புரியாது என்றும் அவர்களின் சிந்தனையாற்றலை மட்டுப்படுத்தும் என்றும் பொய்ப் பரப்புரைகள் செய்யப்படுகின்றன. தனித்தமிழைப் பற்றிய நம்பிக்கையின்மை தமிழ்ப்பகைவர்களால் மட்டுமின்றி தமிழ்க் கற்றோர்களாலும் விதைக்கப்படுகின்றன.

தனிதமிழை மிகக் கோரமாகப் படம்பிடித்துக் கட்டுபவர்கள் தயவுகூர்ந்து தங்களின் அவதூறுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். தனித்தமிழ் மீதுள்ள தவறான கண்ணோட்டத்தைக் கற்றோர்கள் அனைவரும் மாற்றிக்கொள்ள வேண்டும். தனித்தமிழ் கடுமையானது என்ற பொய்களை தலைமுழுக வேண்டும். தனித்தமிழ் தேவையற்றது என்ற நம்பிக்கையின்மையை விட்டொழிக்க வேண்டும்.

தனித்தமிழ் பற்றிய ஐயங்களுக்கு உண்மையான தெளிவுகளைப் பெற வேண்டும்.

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"

என்ற வள்ளுவப் பேராசானின் வாய்மொழிக்கு ஏற்ப தனித்தமிழ் பற்றிய தெளிவுகளை நடுநிலையோடும் ஆய்வுநோக்கோடும் ஆராய்ந்துபார்த்து முடிவெடுக்க வேண்டும். தனித்தமிழ் என்பது தனியான ஒரு தமிழ் அல்ல; தனித்தமிழ் என்பது தமிழ்தான் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

அதற்கு, 'நயனம்' என்ற வலைப்பதிவில் தமிழன்பர் நாக.இளங்கோவன் அவர்கள் எழுதியுள்ள பின்வரும் செய்திகள் மிகுந்த பயனாக அமையும். திருத்தமிழ் அன்பர்கள் கண்டிப்பாகப் பின்வரும் கட்டுரைகளைப் படிக்க வேண்டுமென அன்புடன் விழைகிறேன்.

1. தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் (பகுதி 1)

2. தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் (பகுதி 2)

3. தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் (பகுதி 3)

4. தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் (பகுதி 4)

6 comments:

nayanan said...

அன்பின் திரு.சுப.நற்குணன் ஐயா,
வணக்கம்.

தங்கள் வலைப்பதிவினையும் தமிழ்ப்பணியினையும் கண்டு
உவகை அடைந்தேன்.

நற்றமிழ் கண்டு இன்புற்றேன்.

தொடருங்கள் இச்சீரிய பணியினை.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Anonymous said...

தனித்தமிழ் பற்றிய கட்டுரைகள் மிக பயனுள்ளவை. நயனம் வலைப்பதிவில் கேள்வி பதில் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள செய்திகள் அருமையிலும் அருமை. தமிழ்ப் பகைவர்கள் இதனைப் படித்து தெளிவடைய வேண்டும். தமிழ் அன்பர்களும் படித்து பயனடையும் வகையில் முக்கியத் தகவல்கள் அடங்கியுள்ளன.

தமிழ் படிக்கும் மாணவர்கள் இளைஞர்கள் அனைவரும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. அருமையான செய்திகளை வழங்கும் திருத்தமிழ் வலைப்பதிவை வழிநடத்திவரும் தங்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

நயனம் வலைப்பதிவில் அருமையான தகவல்களை வழங்கிவரும் ஐயா நாக.இளங்கோவன் அவர்களையும் இதன்வழி பாராட்டுகிறேன்.

அன்புடன்,
தமிழ் மானமுள்ள ஆசிரியன்
இளையவேல்,
சிரம்பான், நெகிரி செம்பிலான்.

தமிழநம்பி said...

உங்கள் கட்டுரையைப் படிக்க முடியவில்லை.'யூனிகோடு' எழுத்துருவில் தந்தீர்களானால் படிக்கமுடியும்.
அன்பன்,
தமிழநம்பி.

Anonymous said...

அன்புமிகு ஐயா தமிழநம்பி அவர்களுக்கு அடியேனின் வணக்கங்கள்.
என்னுடைய வலைப்பதிவு 'யூனிகோடு' எழுத்துருவில்தான் எழுதப்படுகிறது.

தங்களின் வலைப்பதிவைக் கண்டேன்; தூயதமிழ் படித்து இன்புற்றேன். மலேசியாவில் தனித்தமிழை வளர்த்தெடுக்கும் பணியை முயன்று செய்துவரும் அடியேனுக்குத் தனித்தமிழை சிறப்புடன் முன்னெடுத்துவரும் தங்களின் வாழ்த்துகள் கிடைத்தால் பெரிதும் மகிழ்வேன்; பேறு பெற்றவனாவேன்.

இனியத் தமிழை
இணையத்தின் வழி
இணைந்து வளர்ப்போம்!

அன்புடன்,
திருத்தமிழ்ப் பணியில்,
சுப.நற்குணன்,
மலேசியா.

Anonymous said...

தனித்தமிழ் என்றால் பண்டிதர்களுக்கு மட்டுமே புரியும் என்று படித்துள்ளேன். அந்த கருத்தில் உண்மையில்லை என்பதை உங்கள் கட்டுரையை படித்து தெரிந்துகொண்டேன்.

-->பட்டதாரி மங்கை

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

வணக்கம்.
எம்
http://kalapathy.blogspot.com
http://httpdevamaindhan.blogspot.com
- தொடுப்புகள் தந்துள்ளேன். இனிய நன்றி. வாழ்த்துகள்!

அன்புடன்
தேவமைந்தன்
(அ.பசுபதி)

Blog Widget by LinkWithin