Thursday, May 27, 2010

வள்ளலார் கண்ட சமயநெறி: மதமயக்கு நீக்கும் நூல்


நம் நாட்டில் சமயஞ்சார்ந்த நூல்கள் வெளிவருவது மிகவும் அரிதாகும். அப்படியே ஒரு நூல் வந்தாலும்கூட, அது பெரும்பாலும் தமிழர்களின் மண்டைக்குள் மதப் பித்தை புகுத்துவதாகவும்; மூட நம்பிக்கையை விதைப்பதாகவும்; அறிவுக்குப் பொறுந்தா சடங்குகளை வளர்ப்பதாகவும்; ஆன்மிகத்திற்கு எதிரான உணர்ச்சிகளை ஊட்டுவதாகவும்; புதுப்புது கடவுளர்களையும் பூசைகளையும் பரிகாரங்களையும் விளம்பரம் செய்வதாகவும் அமைந்திருக்கும் என்பது வருத்தத்திற்குரிய உண்மையாகும்.

இதற்கு முற்றிலும் மாறாக, உண்மை சமயநெறியை அறிமுகப்படுத்தி, ஆன்மிக வழியில் வாழ்வை அமைத்துக்கொள்ள வழிகாட்டும் வகையில் மலேசியாவில் வந்திருக்கிறது ஒரு சிறிய நூல்; ஆனால், அரிய நூல்.

“வள்ளலார் கண்ட சமயநெறி” என்பது நூலின் பெயர். இதன் ஆசிரியர் மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தோற்றுநர் பாவலர் அ.பு.திருமாலனார். இவர் மிக இளமையிலேயே மெய்யறிவு சார்ந்த இறைமை ஈடுபாடும், பகுத்தறிவுச் சிந்தனையும் ஒருங்கே அமையப் பெற்றவர். திருவள்ளுவருக்குப் பிறகு, சித்தர் பெருமக்களுக்குப் பிறகு தமிழரின் சமயக் கொள்கையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் வள்ளற் பெருமான் இராமலிங்க சுவாமிகள். அதனாலேயே இவரைப் புரட்சித் துறவி என்றும் கூறுவர். வள்ளலார் மீது நூலாசிரியருக்கு இருந்த ஆழ்ந்த பற்றுதலே இந்நூல் உருவாகுவதற்கு காரணியாகும் எனலாம்.

தாம் வாழ்ந்த காலத்திலேயே, தமிழர் கண்ட மெய்ந்நெறி சமயத் தெளிவினை இன்றைய தமிழர்க்கு ஏற்படுத்திவிட வேண்டும் என்ற பேராவலால், தமிழர்ச் சமயக் கோட்பாடுகளை அராய்ந்து வெளிபடுத்த முற்பட்டார் பாவலர் ஐயா. அதற்காகவே, ‘தமிழர் சமயம்’ எனும் அரிய நூலினை எழுதி இதுவரை எவருமே தெளிவுபடுத்தாத பல உண்மைகளை வெளிப்படுத்த முற்பட்டார்.

அதற்கு முன்பதாக, வள்ளலார் கண்ட சமயநெறி, திருமூலர் கண்ட சமயநெறி, சித்தர் கண்ட சமயநெறி எனும் தலைப்புகளில் எழுதினார். அவற்றுள் ஒன்றுதான் இப்போது நூல்வடிவில் வந்திருக்கிறது.

‘ஆரியப் பார்ப்பன’ மேலாண்மையால் தமிழினம் சீரழிந்தது எனும் பெரியாரியல் உணர்வோடு முழு உடன்பாடு உடையவர் பாவலர். இருப்பினும், பார்ப்பன கொடும் பிடியிலிருந்து தமிழினத்தை விடுவித்து, அவ்விடுதலையை நிலைப்படுத்த தக்க வழிமுறைகளை காணவேண்டும் என்று சிந்தித்தார்.

திருமூலரின் ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ எனும் கோட்பாட்டைப் பெயரளவில் அல்லாமல், ஆழமாக ஆய்ந்து தமிழர் கண்ட மெய்யறிவியலை வெளிப்படுத்த முயன்றார்.

இந்தச் சிந்தனையின் அடிப்படையில், ஆரியப் பார்ப்பனக் கோட்பாட்டை அடித்துநொறுக்கும் வள்ளலாரின் சிந்தனைகளை ஆராய்ந்து பல உண்மைகளை இந்த நூலில் வெளிப்படையாக எழுதி உள்ளார்.

நூலின் தொடக்கத்திலேயே ‘சமயமும் மதமும்’ ஒன்றல்ல என்பதை உணர்த்தும் வகையில், அறிவின் இயல்புகளைம் உணர்வின் இயல்புகளையும் நுட்பமாக விளக்கியுள்ளார். தொடர்ந்து,

*வள்ளுவர் நெறியில் வள்ளலார்
*வள்ளலார் கண்ட அருள்நெறியும் மருள் நெறியும்
*இந்து பெயர் வரலாறும் – இந்து மதமும்
*இந்து மதம் மக்களின் பொது மதமாக இருக்கத் தகுதியற்றது
*நாத்திகம் எது?
*சாதியும் குறியீடுகளும்
-அறிவு மதம் அல்லது மெய்யறிஞர் சமயம்
*சவகர்லால் நேருவும் இந்து மதமும்
*ஒளி வழிபாடே உண்மை வழிபாடு

ஆகிய தலைப்புகளில் அரிய கருத்துகளை நுடபமாக விளக்கியுள்ளார். அறிவு தேடலோடு படிப்போருக்கு பல உண்மைகள் புரியும் வகையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நூலை ஆழ்ந்து கற்பதன் வழியாக, தமிழரை மயக்கிய நெறி எது? தமிழர் பின்பற்ற வேண்டிய நெறி எது? என்பதைத் தெளிவாக உணரலாம்.

இந்த நூலினை வெளிப்படுத்துவதன் வழியாக, தமிழரிடையே ஊறிக்கிடக்கும் மதமயக்கு நீங்க வழிபிறக்கும் என நம்பலாம். மதவெறியர் சிலருக்கு இந்நூல் அதிர்ச்சியூட்டலாம். அவர்கள் அதிர்ச்சி அடைவார்கள் என்பதற்காக உண்மைகளை உரைக்காமல் இருக்க முடியாது.

தமிழரின் வீழ்ச்சிக்கு மதப்பித்து மிகப்பெரிய கரணியமாகும். இதிலிருந்து தமிழனை விடுவிக்க, தமிழும், தமிழின உணர்வும், திருக்குறள் நெறியுமே மிகச் சரியான கருவிகளாக அமையும். இந்த அடிப்படை உண்மையை உள்ளார்ந்து உணர்த்தும் வள்ளலாரின் உண்மை உள்ளத்தைத் தமிழர்க்குத் தெரிவிப்பதே இந்நூலின் நோக்கமாக இருக்கிறது.

நூலின் விலை: பத்து நிங்கிட் மட்டுமே (RM10.00)
நூல் கிடைக்குமிடம்: மலேசியத் தமிழ்நெறிக் கழகம், Lot.274, Kpg. Bendahara Baru, Jalan Sungai Tua, 68100 Batu Caves, Selangor. Tel: 016-3262479

Sunday, May 23, 2010

முனைவர் மு.இளங்கோவனுடன் மறக்கவியலா மணித்துளிகள்



புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியரும், தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று இணையப் பயிலரங்குகளை நடத்தி இணையத் தமிழைச் செழிக்கச் செய்பவரும், முன்னணி வலைப்பதிவருமாகிய முனைவர் மு.இளங்கோவன் மலேசியா வந்திருக்கிறார். கடந்த 18.5.2010 தொடங்கி அவர் இங்கே இருக்கிறார். 25.5.2010இல் மீண்டும் தமிழகம் திரும்புகிறார்.

மலேசியாவில் பல ஊர்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டிருக்கிறார். நாட்டுப்புற இலக்கியம், அயலகத் தமிழ்ச் சான்றோர்கள், இணையப் பயிலரங்கு என்று பல தலைப்புகளில் பேசி மலேசியாவில் தமிழ்மணம் பரப்பிக்கொண்டிருக்கிறார்.

கடந்த 20.05.2010ஆம் நாள் நானும் தமிழ் ஆலயம் வலைப்பதிவர் அருமை நண்பர் கோவி.மதிவரனும் முனைவரோடு சுற்றுலாவில் இணைந்துகொண்டோம். அன்று இரவே பினாங்கு சென்றடைந்தோம்.

பயணப்படகின் வழியாகப் பினாங்குத் தீவை அடைந்தோம். 25 நிமிட பயணம் தமக்குப் புதிய பட்டறிவாக இருப்பதாக முனைவர் மகிழ்ச்சி அடைந்தார். மின் விளக்குகளில் ஒளிவெள்ளத்தில் பினாங்கின் அழகை முனைவர் மிகவும் மகிழ்ந்து பார்த்தார். பினாங்கிலிருந்து வெளிவரும் ‘உங்கள் குரல்’ இதழின் ஆசிரியர் கவிஞர் சீனி.நைனா முகம்மது அவர்களைச் சந்தித்து பேசினார். அவர்கள் இருவரும் மொழி, இலக்கியம், இலக்கணம், தொல்காப்பியம், எழுத்துச் சீர்திருத்தம், மலேசியாவில் தமிழின் நிலை என்பன போன்ற செய்திகளைப் பரிமாறிக்கொண்டனர்.

நாங்கள் கவிஞர் சீனி ஐயாவின் அலுவலகத்தை அடையும்போதுதான் தமிழகத்திலிருந்து ஐயா மறைமலை இலக்குவனார் அவருடன் தொலைபேசியிருக்கிறார். அப்போது, எழுத்துச் சீர்த்திருத்தத்தை அறிவிக்கப் போவதில்லை என வந்திருக்கும் அறிவிப்பு குறித்து பேசியதாகக் கவிஞர் ஐயா கூறினார். முனைவர் தம்மைச் சந்திக்க வருவதைக் கவிஞர், ஐயா மறைமலையாரிடம் தெரிவித்திருக்கிறார். முனைவருக்குத் தம்முடைய வாழ்த்தைத் தெரிவிக்குமாறு மறைமலை ஐயா தெரிவித்ததைக் கவிஞர் கூறினார்.

நள்ளிரவு 12.30க்கு கவிஞர் ஐயாவிடமிருந்து விடைபெற்று பாரிட் புந்தார் எனும் என் ஊரை வந்தடைதோம். முனைவரை விடுதியில் தங்கவைத்துவிட்டு வீடு திரும்பினேன்.

மறுநாள் காலையில் நான் பணியாற்றும் பள்ளியைப் பார்வையிட முனைவர் வந்திருந்தார். காலை 8.00 மணியளவில் ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் “மாணவர்கள் கல்வியோடு தமிழ் மரபையும் கற்றுக்கொள்ள வேண்டும்” என வலியுறுத்திப் பேசினார். தமிழின் சிறப்பு, நாட்டுப்புறப் பாடல், சிறுவர் பாடல், தமிழர் விளையாட்டு, கணினிக் கல்வி, இணைய அறிவு ஆகியன அவருடைய உரையின் உள்ளடக்கங்களாக இருந்தன.

தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், ஆசிரியர்கள், மாணவர்களுடன் முனைவர் மு.இளங்கோவன்

ஆசிரியர்களோடும் மாணவர்களோடும் முனைவர் கலந்துரையாடி மகிழ்ந்தார். பள்ளியைச் சுற்றிப் பார்த்ததோடு வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் நடவடிகைகளைப் பார்வையிட்டார். பள்ளியில் ஒவ்வொரு அறைக்கும் தமிழ் அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டு பெயர்ப்பலகையும் வைக்கப்பட்டிருந்தது தன்னை வெகுவாகக் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார். பாவாணர் பேரணி மண்டபம், நீலாம்பிகை மழலையர் மன்றில், முத்தெழிலன் கணினியகம், பாவேந்தர் பாடநூல் அறை, கம்பர் கருவள நடுவம் என பெயரிடப்பட்டிருந்த எல்லா அறைகளையும் படமெடுத்துக் கொண்டார்.
இர.திருச்செல்வம் வீட்டு நூலக அறையில் முனைவர்

பிறகு, காலை மணி 10.00க்கு எனது பள்ளியிலிருந்து விடைபெற்று, மலேசியத் தமிழறிஞர் இர.திருச்செல்வம் இல்லம் சென்றார். அவருடன், செலாமா சர் சூலான் தமிழ்ப்பள்ளிக்குச் சென்றார். சோழன் என்பதைத்தான் மலாய்மொழியில் சூலான் என்கிறார்கள். அங்கும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் சந்தித்து அளவளாவினார்.


பிறகு, அவ்வூரில் பிறந்து வளர்ந்து தமிழ்நெறிக் கழகம் எனும் அமைப்பைக் கண்டு, மலேசியாவில் தமிழ்த்தொண்டு செய்து மறைந்த பாவலர் அ.பு.திருமாலனார் வாழ்ந்த இல்லத்திற்குச் சென்றார். அங்கு, பாவலர் ஐயாவின் துணைவியார், மகள் ஆகியோரைச் சந்தித்தார். பின்னர், பாவலர் ஐயா நிறுவிய இயக்கப் பணிமணையைப் பார்வையிட்டு, பாவலருடைய நினைவகம் சென்றார். அங்கு பாவலருக்கு அமைதி அஞ்சலி செலுத்தினார். பாவலர் அ.பு.திருமாலனார் பற்றி தம்முடைய ‘அயலகத் தமிழறிஞர்கள்’ நூலில் முனைவர் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அங்கிருந்து நேராகப் புறப்பட்டு மீண்டும் பாரிட் புந்தாருக்குத் திரும்பி மதிய உணவை முடித்துக்கொண்டு பிற்பகல் 2.00 மணிக்கு, பாரிட் புந்தார் தமிழியல் நடுவத்தில் ‘தமிழ் வளர்ச்சிப் பணியில் அயலகத் தமிழறிஞர்கள்’ எனும் தலைப்பில் பொழிவுரை ஆற்றினார். தமிழறிஞர் இர.திருச்செல்வம் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. தமிழ் வாழ்வியல் இயக்கத் தலைவர் க.முருகையனும் உடனிருந்தார். நான் வரவேற்பும் முனைவரை அறிமுகப்படுத்தியும் பேசினேன்.



தமிழ் வளர்ச்சிப் பணிகளில் தமிழர்கள் மட்டுமின்றி அயலகத்தாரும் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். அவர்களுள் கால்டுவெல், சான் இரால்சுடன், போப் அடிகளார், சுசுமு ஓனோ, சார்சு ஆர்ட்டு, கமில் சுவலபெல், பிரான்சுவா குரோ, அலெக்சந்தர் துபியான்சுகி போன்றவர்களும் அடங்குவர். வேற்று இனத்தாரும் நாட்டாரும் மதிக்கக்கூடிய, உலகத்தின் மிகச் சிறந்த மொழியாக விளங்கும் தமிழைத் தமிழர்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். தமிழைப் பற்றியும், உலகமெங்கிலும் நடைபெறும் தமிழ்ப் பணிகள் பற்றியும், தமிழுக்குத் தொண்டாற்றும் அறிஞர்கள் பற்றியும் இணையத்தில் செய்திகளைப் பதிவுசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

நேரப் பற்றாக்குறையின் காரணமாக ஒரு மணி இருபது மணித்துளிகள் மட்டுமே முனைவர் உரை நிகழ்த்தினார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு நானும் கோவி.மதிவரனும் முனைவர் ஐயாவை மகிழுந்தில் அழைத்துக்கொண்டு கிள்ளானை நோக்கிப் பறந்தோம். அங்கு திரு.மாரியப்பன் ஏற்பாட்டில் “நாட்டுப்புற இலக்கியம்” எனும் தலைப்பில் முனைவர் பேசினார். அங்கும் நானேதான் முனைவரை அறிமுகப்படுத்திப் பேசினேன். வருகைப் பேராசிரியர் முரசு.நெடுமாறன், மலாயாப் பல்கலைகழக விரிவுரைஞர் மன்னர் மன்னன், செம்பருத்தி குழுவைச் சேர்ந்த கிள்ளான் அருண் போன்றோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.


குறுகிய கால அளவீட்டில் முனைவர் மு.இளங்கோவன் இங்கே வந்திருப்பதால், அதிகமான நிகழ்ச்சியில் அவரால் கலந்துகொள்ள இயலாமல் போய்விட்டது. மேலே சொன்ன நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, 21.5.2010 காரிக்கிழமையன்று பந்திங் நகரில் இணையப் பயிலரங்கை வழிநடத்தினார். அன்று மாலையில் கோலாலம்பூர் சோமா அரங்கில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். 23.5.2010இல் ஈப்போவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ‘ஐம்பெருங்காப்பிய மாநாட்டில்” கலந்துகொள்கிறார். 24.5.2010இல் மலாயாப் பல்கலைகழக மாணவர்களுக்காக இணையப் பயிலரங்கை வழிநடத்துகிறார்.

இப்படியாக, முனைவருடைய மலேசியப் பயணம் மிகவும் பயனுள்ளதாகவும் பொருளுள்ளதாகவும் அமைந்திருக்கிறது. நான் பார்த்த அளவில் முனைவர் அவர்கள் நாட்டுப்புற இலக்கியம் குறித்து மிகவும் ஆழமாகவும் அழகாகவும் பேசுகிறார். நாட்டுப்புற இலக்கியம் குறித்து அவர் சொல்லும் பல செய்திகள் வியக்கச் செய்தன. சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் போன்றவற்றை மேற்கோள்காட்டி நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிக்காட்டும் விதம் மனத்தைக் கவருகின்றது. திரைப்பாடல்களில் நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கம் பேரளவில் இருப்பதை முனைவர் சுவைபட எடுத்துச் சொன்னார்.

எழுத்தில் மட்டுமல்லாது பாடுவதிலும் இவர் வல்லவர் என்பது தெரிந்தது. என்னமாகப் பாடுகிறார் தெரியுமா? வாய்ப்புக் கிடைத்தால் இவர் தாராளமாகத் திரைப்படங்களில் பின்னணி பாடலாம். அந்த அளவுக்குத் தேர்ந்தவராக இருக்கிறார். நாட்டுபுறப் பாடல்களையும், சங்கப் பாடல்களையும், செய்யுள்களையும், திரைப்பாடல்களையும் மாறிமாறிப் பாடியும், ஒன்றை ஒன்றோடு ஒப்பிட்டுப் பாடியும் விளக்கிக் காட்டும் இவருடைய உரையை மணிக்கணக்கில் சலிக்காமல் கேட்கலாம்.

இணையத்தில் தமிழின் பயன்பாடு பற்றியும், வலைப்பதிவு எழுதுவது குறித்தும் மிகவும் எளிமையாக இவர் விளக்கமளிக்கிறார். தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இணையப் பயிலரங்குகளை நடத்திய பட்டறிவு இவருக்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. அதனால்தானோ என்னவோ, தமிழகத்தில் ‘வெட்டுரு’ (கட் அவுட்) வைத்து வரவேற்கும் அளவுக்கு இவர் இணையப் பயிலரங்கு நடத்திப் புகழ்பெற்றிருக்கிறார் போலும்.

மொத்தத்தில், முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் மலேசிய வருகை மிகவும் மகிழ்ச்சியானதாகவும் பயன்மிக்கதாகவும் அமைந்திருக்கிறது. மிகவும் குறுகிய காலமே அவர் வந்திருக்கிறார் என்ற குறையைத் தவிர வேறொன்றுமில்லை. அவரிடமிருந்து மலேசியத் தமிழர்கள் பெற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கின்றன.

ஆகவே, அடுத்த முறை நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டு அவர் மலேசியா வரவேண்டும்; நாடு முழுவதும் எல்லா ஊர்களுக்கும் சென்று பல மேடைகளில் சொற்பொழிவுகள் ஆற்றி தமிழ் விருந்து பரப்புவதோடு, இணையப் பயிலரங்குகளும் நடத்தி மலேசியாவில் தமிழ்மணம் செழிக்க துணைசெய்ய வேண்டும் என முனைவர் மு.இளங்கோவன் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

Thursday, May 20, 2010

முனைவர் மு.இளங்கோவன் மலேசியா சுற்றுச்செலவு

புதுவையின் புகழ்பெற்ற கல்லூரியான பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியரும், தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பாவேந்தர் பாரதிதாசனார் வழிசார்ந்த தமிழ் அறிஞரும், நூலாசிரியரும், வலைப்பதிவருமாகிய முனைவர் மு.இளங்கோவன் ஐயா அவர்கள் குறுகிய கால பயணம் மேற்கொண்டு தற்போது மலேசியா வந்திருக்கிறார்.

முதற்கண், மலேசியத் திருநாட்டிற்கு வருகை மேற்கொண்டு வந்திருக்கும் முனைவர் ஐயா அவர்களை
“வருக.. வருக..!
தங்கள் வரவு நல்வரவாகுக..!
தங்கள் வரவினால் மலேசியாவில் தமிழ்நலம் ஓங்குக..!


என்று வரவேற்பதில் பேருவகை அடைகிறேன்.

18.5.2010 முதல் 25.5.2010 வரையில் முனைவர் ஐயா இங்கு இருப்பார்கள். இந்தக் காலக்கட்டத்தில், மலேசியாவில் பல ஊர்களுக்குச் சுற்றுச்செலவு மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

அவருடைய தமிழ்ப் பயணத்தில் இன்று நானும் (சுப.நற்குணன்), தமிழ் ஆலயம் வலைப்பதிவர் அருமை நண்பர் கோவி.சந்திரனும் இணைந்துகொள்ள இருக்கிறோம். எங்களின் ஏற்பாட்டில் முனைவர் ஐயா கலந்துகொள்ளவுள்ள நிகழ்ச்சிகள் விவரம் பின்வருமாறு.

1.20.5.2010 இரவு – பினாங்கு பயணம். உங்கள் குரல் இதழாசிரியர் கவிஞர் ஐயா.செ.சீனி நைனா முகம்மது, வண்ணக்கவிஞர் கரு.திருவரசு ஆகியோருடன் சந்திப்பு.

2.21.5.2010 காலை மணி 7.30 – தமிழ்ப்பள்ளிச் சூழலைச் சுற்றிப்பார்த்தல். ஆசிரியர்கள், மாணவர்களுடன் சந்திப்பு.

3.காலை மணி 10.00 இரண்டாவதாக மற்றொரு தமிழ்ப்பள்ளியைச் சுற்றிப்பார்த்தல். ஆசிரியர், மாணவர்களுடன் சந்திப்பு.

4.காலை மணி 11.00 – தமிழ்நெறிக் கழகத் தோற்றுநர் பாவலர் அ.பு.திருமாலனார் அவர்களின் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்துதல். (பாவலரைப் பற்றி தம்முடைய ‘அயலகத் தமிழறிஞர்கள்’ எனும் நூலில் முனைவர் ஐயா எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது)

5.பிற்பகல் மணி 12.30 – தமிழ் அன்பர்களுடன் மதிய விருந்தோம்பல்

6.பிற்பகல் மணி 1.30 – பாரிட் புந்தார், தமிழியல் நடுவத்தில் “தமிழ் வளர்ச்சிப் பணியில் அயலகத் தமிழர்கள்” எனும் தலைப்பில் சொற்பொழிவு. தமிழியல் ஆய்வுக் களம், தமிழ் வாழ்வியல் இயக்கம் ஆகிய அமைப்புகள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன. தமிழ்த்திரு.இர.திருச்செல்வம் அவர்கள் இந்நிகழ்ச்சிக்குத் தலைமயேற்பார்.

7.இரவு மணி 7.30 – கிள்ளானில் நாட்டுப்புற இலக்கியம் தொடர்பாக உரையாற்றுவார்.

முனைவர் ஐயா அவர்களின் சுற்றுச்செலவு விவரங்களை அறிய கீழே உள்ள சுட்டிகளைச் சொடுக்கவும்.

Wednesday, May 19, 2010

எழுத்துச் சீர்மை:- செம்மொழி மாநாட்டில் அறிவிப்பு கிடையாது


தமிழக அரசு தமிழ் எழுத்து மாற்றம் செய்யப் போவதாக 07.01.2010 நாளிட்ட மாலை மலர் செய்தித் தாளில் ஒரு செய்தி வெளியானது.

அந்தச் செய்தி: "சென்னை-7, தமிழ் மொழியை வளப்படுத்தும் வகையில் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எந்தக் குழு அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளது."


இந்த செய்தி வெளிவந்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும் தமிழக அரசு எந்தவித மறுப்பும் வெளியிடாத நிலையில் கட்டாயம் இந்த எழுத்து மாற்றம் நடக்கும் எனக் கருதி உலகம் முழுவதுள்ள தமிழர்கள் இந்த முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சென்னையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கூட்டம் நடந்தது. அதன் பின்னர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் ஒரு மாநாடு நடத்தலாம் என கருத்து முன் வைக்கப்பட்டு, அதனை அமைப்புக் குழு விரிவாக விவாதித்து முடிவு செய்தது.


அதனைத் தொடர்ந்து, கடந்த 16.05.2010 அன்று புதுச்சேரியில் தமிழ் எழுத்து மாற்ற எதிர்ப்பு ஒரு நாள் மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில், தமிழ் அறிஞர்கள், கணினி வல்லுநர்கள், தமிழ் இயக்கத்தினர் என அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில், கலந்துக் கொண்ட அனைவரின் அதாரவுடன் 'தமிழ் எழுத்து மாற்றத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டின் செய்திகளை விரிவாக செய்தித்தாள்கள் வெளியிட்டன. குறிப்பாக தினமணி, தினகரன், இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான ம.இராஜேந்திரன் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகளில் அளிக்கப்படவுள்ளன.​ இம்மாநாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று யாரும் தெரிவிக்கவில்லை.​ அறிஞர்கள் கூடி ஆய்வின் பொருள் பற்றி விவாதிக்கும் அரங்காகத் தான் செம்மொழி மாநாடு அமையும்." எனக் கூறியுள்ளார்.

இது புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் உள்ளிட்ட உலகம் முழுவதும் எழுத்து மாற்ற முயற்சிக்கு எதிராக குரல் கொடுத்தவர்களுக்கு கிடத்த வெற்றியாகும்.

இந்த அறிவிப்பை காலத்தே செய்த தமிழக அரசுக்கும், செம்மொழி மாநாட்டு குழுவினர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


தொடர்பான செய்திகள்:-

1.தமிழ் எழுத்து மாற்றம் எதிர்ப்பு மாநாடு: தினகரன் செய்தி
2.தமிழ் எழுத்து மாற்றம் எதிர்ப்பு மாநாடு: தீர்மானங்கள்
3.தமிழ் எழுத்து மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் கிடையாது
4.தமிழ் எழுத்து வடிவ மாற்றம்: நம் வீட்டுக்கு நாமே தீ வைப்பதற்குச் சமம்
5.தமிழ் எழுத்து வடிவ மாற்றம்: மீண்டும் புதிய தமிழைப் படிக்க வேண்டும்
6.Scholars Oppose Reformation In Tamil Scripts


பி.கு:- எழுத்துச் சீர்திருத்தத்தைக் கண்டித்து 5.3.2010இல் மலேசியாவில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அக்கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பான செய்திகள் மலேசிய நாளிதழிலும் இணையத்திலும் விரிவாக வெளிவந்தன.

Sunday, May 16, 2010

ஆசிரியர் நாள்:- நாட்டினத்தை உருவாக்குபவர் ஆசிரியர்

மே 16இல் மலேசியாவில் ஆசிரியர் நாள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வோராண்டும் ஒரு கருப்பொருளில் (Theme) ஆசிரியர் நாள் கொண்டாடப்படுவது வழக்கம். “நாட்டினத்தை உருவாக்குபவர் ஆசிரியர்” என்பது இவ்வாண்டிற்கான கருப்பொருள். இதனை மலேசியாவின் தேசிய மொழியாம் மலாயில் Guru Pembina Negara Bangsa என்கிறார்கள். மலாய்மொழிக்கு ஆசிரியரைக் குறிக்கும் சொல்லைக் கொடுத்ததே நம் மொழிதான் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த நன்நாளை முன்னிட்டு மலேசியத் தமிழ் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் “ஆசிரியர் நாள் நல்வாழ்த்தினை” மிகுந்த அன்போடும் மரியாதையோடும் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நன்னாளில், எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்தை சிறந்த முறையில் வளர்த்தெடுக்கும் அரும்பணியை ஆசிரியர்கள் செம்மையாக செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

ஆசிரியர் நாளை முன்னிட்டு, மே திங்கள் ‘மயில்’ இதழில் அதன் ஆசிரியர் பெரியவர் ஐயா.ஆ.சோதிநாதன் அவர்கள் எழுதியிருக்கும் தலையங்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. அதனை பகிர்ந்துகொள்ள வேண்டி இங்கு பதிவிடுகிறேன். உள்ளத்தை நெகிழவைக்கும் வகையில் அமைந்திருக்கும் இதனை மலேசிய ஆசிரியர்களின் சிந்தனைக்கும் செயலுக்கும் முன்வைக்கிறேன்.

**குரு வாழ்க! குருவே துணை!**

ஓதலும் ஓதுவித்தலும் அந்தணர் தொழில் என்பர். அந்தணன் என்போன் அறவோன்; செந்தண்மை பூண்டொழுகுவோன். அவனே ஆசிரியனும் ஆவான்.

அரசனிமும் உயர்ந்தோன் ஆசிரியன். அரசனுக்கும் அறநெறி புகட்டி நல்வழி காட்டுபவன் ஆசிரியனே. குரு – ஆசிரியர் – அருள் இன்றேல் திருவருள் இல்லை என்பது நம் முன்னோர் மொழி. எழுத்தறிவித்தோனை – ஆசிரியனை, இறைவனாகவே கருதினர்.

இருளிலிருந்து ஒளியை நோக்கி அழைத்துச் செல்பவனும், அறியாமையிலிருந்து அறிவை நோக்கி வழிநடத்துபவனும், மரணத்திலிருந்து அமரத்துவத்தை – மரணமில்லாப் பெருவாழ்வை அளிப்பவனும் ஆசிரியனே என்பது வேதவாக்கு.

பிரம்மனாய், அரியாய், அரனாய் எல்லாம் தாமாகி அருளுபதேசம் புரியும் தென்னாடுடைய சிவனாய் = தட்சிணாமூர்த்தியாய் வீற்றிருப்பவரும் குருநாதரே!

ஆசிரியர் எப்பொழுதும் எரிகின்ற விளக்கைப் போன்றவர். அவர்தாம் பல விளக்குகளை – அறிவொளியை ஏற்றத்தக்கவர். கால நேரம் கருதாது உழைப்பவர். தம் மக்கள் – மாணவர் நலனையே முதன்மையாகக் கொள்பவர். ஊதியங் கருதி உழைகாது தம் மாணவர் உயர்வை எண்ணியே உழைபவர்; அவ்வுழைப்பில் இன்பம் காண்பவர்.

எப்பொழுது தாம் கற்பதை நிறுத்தினால் அப்பொழுதே நல்லாசிரியர் எனும் தம் நிலையிலிருந்து நழுவிவிடுவோம் என்றுணர்ந்து நாளும் கற்று மேன்மை பெறும் ஆசிரியப் பெருமக்களின் பெருந்தொண்டுக்குத் தலைவணங்குவோம்.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது (குறள் 101)

இத்தகு சீர்மையும் சிறப்பும் மிக்க ஆசிரியரைப் பொற்றுவதற்குரிய நாள் – ஆசிரியர் தினம் மே 16. அன்றாவது அவருக்கு நம் அன்பின் காணிக்கையாக ஒரு போங்கொத்து வழங்கலாமே.

வாழ்க ஆசிரியர் தொண்டு;
வளர்க அவர்தம் பெருமை!

அன்புடன்;
ஆ.சோதிநாதன்

  • பி.கு:-ஐயா.ஆ.சோதிநாதன் அவர்கள் நிரம்ப தமிழ்ப்பற்றும் தமிழுக்காகப் பாடாற்றும் செயலூக்கமும் மிகுந்தவர்; அனைவராலும் மதிக்கப்படும் தமிழ்ப் பெருந்தகை; இல்லை என்னாது வாரி வழங்கி தமிழைப் புரந்துகாக்கும் வள்ளல் குணம்படைத்தவர்; ஓய்வெடுக்கும் அகவையிலும் ஓயாமல் தமிழ்ப்பணிகள் ஆற்றும் சான்றாளர். ஐயா அவர்களின் வாழ்மொழியில், ஆசிரியர் நாளை முன்னிட்டு வாழ்த்து பெறுவதை, ஆசிரியர்கள் அனனவரும் பெரும் பேறாகக் கருதவேண்டும்.

Wednesday, May 12, 2010

மே 16இல், தமிழ் எழுத்து மாற்றம் எதிர்ப்பு மாநாடு



தமிழ் எழுத்துக்களை மாற்றம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த மாற்றம் செய்யப்பட்டால் தமிழ் மொழிக்கு மிகப் பெரிய கேடு ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

எனவே, இந்த மாற்றத்தை கண்டித்து புதுச்சேரியில் எதிர்ப்பு மாநாடு நடைபெற உள்ளது.

நாள்: 16-05-2010 ஞாயிறு காலை 9.45 முதல் 6.00 மணிவரை
இடம்: வணிக அவை (பாரதி பூங்கா அருகில்) நிகழ்ச்சி அரங்கு, புதுச்சேரி-1,
காலை அமர்வு: காலை 10.00 முதல் 1.00 மணிவரை
உணவு இடைவேளை: பகல் 1.01 முதல் 2.00 வரை
பிற்பகல் அமர்வு: 2.01 மணிமுதல் முதல் மாலை 6.00 மணிவரை

நிகழ்ச்சியில் பங்கேற்போர் பட்டியல்:-

  1. புலவர். இரா.இளங்குமரனார், தமிழறிஞர்,

  2. திரு.இராம.கி, பொறியாளர், சென்னை, பொதுக்குழு உறுப்பினர்,

  3. உலகத்தகவல் தொழில் நுட்ப மையம்,

  4. பேராசிரியர்.செல்வக்குமார், மின்னனு மற்றும் கணிப்பொறி பொறியியல் துறை, வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா, (ஒலி/ஒளிப்பதிவு உரை)

  5. திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா (ஒலி/ஒளிப்பதிவு உரை)

  6. திரு.மணி.மு.மணிவண்ணன், பொறியாளர், சென்னை,

  7. முனைவர். சொ. சங்கரபாண்டி, தமிழ்மணம், வாஷிங்டன் அமெரிக்கா (ஒலி/ஒளிப்பதிவு உரை)

  8. பேராசிரியர் மா.லெ. தங்கப்பா, புதுச்சேரி

  9. பேராசிரியர் நா.இளங்கோ, தாகூர் கலைக்கல்லூரி புதுச்சேரி.

  10. திரு.சுப. நற்குணன் மலேசியா (இணைய வழி உரை)

  11. தென்மொழி திரு மா.பூங்குன்றன் சென்னை

  12. திரு,நா.மு.தமிழ்மணி செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி

  13. புலவர் க.தமிழமல்லன் புதுச்சேரி,

  14. திரு,சீனு அரிமாப்பாண்டியன் புதுச்சேரி

  15. திரு.தமிழ நம்பி, விழுப்புரம்

  16. பாவலர். அரங்க நடராசன் புதுச்சேரி

  17. திரு.விருபா. குமரேசன் சென்னை

  18. திரு.எழில் இளங்கோ விழுப்புரம்,

அனைவரையும் வருக என வரவேற்கும்:-

இரா.சுகுமாரன் ஒருங்கிணைப்பாளர், கோ.சுகுமாரன், பேராசிரியர் நா.இளங்கோ, க.அருணபாரதி, மகரந்தன், வெங்கடேஷ் - திரட்டி
ம.இளங்கோ வீரமோகன், ஓவியர் இராசராசன்
செயப்பிரகாஷ், கு.இராம்மூர்த்தி, மு.முத்துக்கண்ணு ,செந்தமிழன்
பிரேம்குமார். ச.அனந்தகுமார், இரா.முருகப்பன், ஊற்று கலாபன்
குணவதி மைந்தன்,சீனுவாசன் கடலூர், மோகனசுந்தரம் புதுவை.காம்

தொடர்புடைய இணைப்புகள்:-

1. மீண்டும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்:- தமிழக அரசு அறிவிப்பு

2. தமிழை மீட்பதும் காப்பதும்தான் முதல் வேலை; சீர்மை என்ற பெயரில் சிதைப்பதல்ல: மலேசிய நாளிதழ் செய்தி

3. எழுத்துச் சீர்மை; தேவையற்ற வேலை: புலவர் இரா.இளங்குமரனார்

4.கணினியைக் காட்டி எழுத்துச் சீர்திருத்தம் பேசுவது ஒரு மோசடி வேலை - பொற்கோ

5. எழுத்துச்சீர்திருத்தம் தேவையா? - கருத்தரங்கம் - ஓர் அறிக்கை

6. தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? (1/2)


தமிழ்மணம்:-1. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - தமிழ்மணத்தின் நிலைப்பாடு


நாக.இளங்கோவன் அவர்களின்:-

1. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 1

2. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 2

3. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-3

4. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-4

5. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-5

6. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-6

7. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-7

8. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-8

9. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-

10.எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-10/12

11. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-11/12

12. எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-12/12

திரு. செல்வா - தமிழ்வெளி:- எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு

தொடர்புக்கு:-இரா.சுகுமாரன் (ஒருங்கிணைப்பாளர்)

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

தொடர்பு எண்: +91 94431 05825

Monday, May 10, 2010

தமிழ் வலைப்பதிவர்கள் சிந்தனைக்கு..


முக்கிய அறிவிப்பு:- இது ‘தமிழ்’ வலைப்பதிவர்களுக்கு மட்டும்.

வலைப்பதிவு உலகம் இன்று சமுதாயக் கட்டமைப்பில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. உலகத் தமிழ் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் வலிமைமிக்க கருவிப்பொருளாக வலைப்பதிவுகள் செயல்பட முடியும். இந்த உண்மையை உணர்ந்து செயல்படுகின்ற வலைப்பதிவுகள் ஏராளம் உள்ளன.

வலைப்பதிவு எழுதுபவர்கள் சமுதாய நோக்கோடு செயல்படுவது நல்லது. எழுதுகின்ற பதிவு ஒவ்வொன்றும் வாழும் தலைமுறைக்கும் வருகின்ற பரம்பரைக்கும் பயனுள்ளதாக அமைதல் வேண்டும். நலிந்து கிடக்கும் தமிழ்ச் சமூகத்தைத் தூக்கி நிறுத்துவதாக இருக்கட்டும். எழுதும் பத்து பதிவுகளில் ஒன்றேனும் இன எழுச்சிக்குப் பயன்படுவதாக இருக்கட்டும். புதிய கலைகள், அறிவியல், தொழில்நுட்பங்களைப் பாங்கான முறையில் பரிமாற வேண்டும். பொழுதுபோக்கு கேளிக்கை தன்மைகளில் அளவுக்கதிகமான ஈடுபாடு காட்டுவதே கொள்கையாக இல்லாமல், அவ்வப்போது அறிவார்ந்த விடயங்களையும் விவாதிக்க வேண்டும்

அந்த வகையில், எழுத்துப் பணி செய்பவர்களுக்காகத் தமிழியக்கம் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் சொன்ன அருமை செய்தியை இங்கு பகிர்ந்துகொள்ள விழைகிறேன். ஏடெழுதுவார் என்னும் தலைப்பில் எழுதப்பட்ட இந்தக் கவிதை இன்று பதிவெழுதுவாருக்கும் பொருந்தும். ‘ஏடு’ என்று வரும் இடங்களில் எல்லாம் ‘பதிவு’ என மாற்றிப் படித்துக்கொள்ளவும்.

தமிழியக்கம் - ஏடெழுதுவார்!

பாரதிதாசன்

இலக்கணமும் இலக்கியமும்
தெரியாதான் ஏடெழுதல்
கேடு நல்கும்

தலைக்கணையில் நெருப்பிட்டுத்
தலைவைத்துத் துயில்வது போல்
பகைவனைப் போய்

நிலைப்புற்ற தமிழ் ஏட்டின்
ஆசிரிய னாக்குவது
நீங்க வேண்டும்.

கலைப்பண்பும் உயர்நினைப்பும்
உடையவரே ஏடெழுதும்
கணக்கா யர்கள்!

தன்னினத்தான் வேறினத்தான்
தன்பகைவன் தன்நண்பன்
எவனா னாலும்

அன்னவனின் அருஞ்செயலைப்

பாராட்டு வோன் செய்தி
அறிவிப் போனாம்!

சின்னபிழை ஏடெழுதும்
கணக்காயன் செய்திடினும்
திருநாட் டார்பால்

மன்னிவிடும் ஆதலினால்
ஏடெழுதும் வாழ்க்கையிலே
விழிப்பு வேண்டும்!

ஏற்றமுறச் செய்வதுவும்
மாற்றமுற வைப்பதுவும்
ஏடே யாகும்!

தோற்றுபுது நிலையுணர்ந்து
தோன்றாத வழிகூறித்
துணை புரிந்து

சேற்றிலுயர் தாமரைபோல்
திருநாட்டின் உளங்கவர்ந்து
தீந்த மிழ்த்தொண்

டாற்றுந்தாள் அங்கங்கே
அழகழகாய் அறிஞர்களால்
அமைத்தல் வேண்டும்!

தொண்டர்படை ஒன்றமைத்துத்
தமிழ் எதிர்ப்போர் தொடர்ந்தெழுதும்
ஏட்டை யெல்லாம்

கண்டறிந்த படி அவற்றை
மக்களெலாம் மறுக்கும் வணம்
கழற வேண்டும்

வண்டுதொடர் மலர்போலே
மக்கள் தொடர் ஏடுபல
தோன்றும் வண்ணம்

மண்டுதொகை திரட்டி, அதை
ஏடெழுத வல்லார்பால்
நல்க வேண்டும்!

ஆங்கிலத்துச் செய்தித்தாள்
அந்தமிழின் சிர்காக்க
எழுதல் வேண்டும்

தீங்கற்ற திரவிடநன்
மொழிகளிலே பலதாள்கள்
எழுதல் வேண்டும்.

ஓங்கிடநாம் உயர்முறையில்
நாடோறும் கிழமை தோறும்
திங்கள் தோறும்

மாங்காட்டுக் குயிலினம் போல்
பறந்திடவேண்டும் தமிழ்த்தாள்
வண்ணம் பாடி!


இதனையே நடத்திர வாரத்தின் இறுதிப் பதிவாகக் பகிர்ந்துகொள்கிறேன்.

மே திங்கள் 3-10 வரையில் நட்சத்திரப் பதிவராகத் தெரிவுசெய்து எனக்கு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்மணம் நிருவாகத்தினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்த ஒரு கிழமையில் என்னுடைய பதிவுகளைப் படித்தோருக்கும், பின்னூட்டம் பதிவு செய்தோருக்கும் நனிநன்றி.


Sunday, May 09, 2010

எழுத்துச் சீர்மை:- பதிவர்களுக்குத் திறந்த மடல்

அன்பார்ந்த தமிழ் வலைப்பதிவர்களே, நண்பர்களே, தமிழ் அன்பர்களே,

வணக்கம். தமிழ் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்வது தொடர்பான செய்திகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது குறித்து இந்தத் திறந்த மடலை எழுதுகின்றேன். எழுத்துச் சீர்மை விவகாரத்தைக் கவனமெடுத்துப் பார்க்கவும் சிந்திக்கவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குமாறு உங்களை அன்போடு வேண்டுகிறேன்.

எழுத்துச் சீர்மை யாரோ ஒரு சிலரோடு தொடர்புடைய விடயம். அவர்கள் அதைப் பார்த்துக்கொள்வார்கள். அதில் நாம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? அதில் தலையிடவோ கருத்துச் சொல்லவோ நமக்கென்ன தகுதி இருக்கிறது? என்று பதிவர்கள் யாரும் தயவு செய்து எண்ணிவிடலாகாது. என்னைப் பொறுத்தவரையில் இவ்வெண்ணம் மிகவும் தவறானது.

காரணம், தமிழ்மொழியை இணையத் தேரில் ஏற்றி கைவலிக்க; கால்வலிக்க; உடல்வலிக்க; முதுகுத்தண்டு வலிக்க; மெனக்கெட்டு உலகவலம் வரச்செய்து வளர்த்தெடுத்த பெருமை வலைப்பதிவர்களுக்கு உண்டு. வலைப்பதிவுகள் வாயிலாகத் தமிழை இணையத்தில் வாழவைத்ததில் வலைப்பதிவர்களுக்குப் பெரும் பங்குண்டு. உலகம் முழுவதும் பலகோடி பேரைத் தமிழ்ப்படிக்க வைத்து, எழுதவைத்து, சிந்திக்க வைத்து செயற்கரிய செயல் புரிந்தவர்கள் வலைப்பதிவர்கள் என்பதை யாரும் மறுக்கவே மறைக்கவோ முடியாது.

ஆகவே, எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பில் கருத்து சொல்லுவதற்கும்; அது குறித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கும்; எழுத்துச் சீர்மை தேவையில்லை எனக் கருதினால் அதனை எதிர்ப்பதற்கும்; கண்டிப்பதற்கும்; தடுத்து நிறுத்துவதற்கும் உலகமெங்கிலும் இருக்கும் வலைப்பதிவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது.

இந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டிய கட்டத்திற்கு வலைப்பதிவர்கள் இப்போது வந்தாக வேண்டும். ஏனெனில், எதிர்வரும் சூன் திங்கள் 23 – 27இல் தமிழகம், கோவையில் நடைபெறவுள்ள ‘தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்’ எழுத்துச் சீர்மை விவகாரம் தொடர்பில் ஆய்வுகள் நடைபெற உள்ளன. மாநாட்டின் இறுதியில் எதேனும் ஒரு முடிவு அறிவிக்கப்படலாம். அவ்வாறு வரும் அறிவிப்பு தமிழுக்கு எந்த வகையிலும் எதிர்ப்பானதாகவோ ஆபத்தானதாகவோ பாதகமானதாகவோ இருக்கக் கூடாது.

அதனை உறுதிப்படுத்தும் பொறுப்பு மொழி அறிஞர்களுக்கு ஆய்வாளர்களுக்கும் இருப்பது போன்றே, இணையக் களத்தில் இறங்கி தமிழை வளர்க்கும் வளப்படுத்தும் ஆயிரமாயிரம் தமிழ் வலைப்பதிவர்களுக்கும் இருக்கிறது என்பதை வலியுறுத்துகிறேன். இல்லையேல், எழுத்துச் சீர்மை எனும் சீரழிவுப் போக்கினால் இதுவரை எழுதப்பட்டுள்ள பல்லாயிரக் கணக்கான பதிவுகள் பயனற்றதாகப் போகும் பேரழிவைப் பதிவர் நண்பர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


எனவே, எழுத்துச் சீர்மை தொடர்பில் ஒவ்வொரு வலைப்பதிவரும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கிறேன். வலைப்பதிவர்கள் தங்கள் நிலைப்பாட்டை தத்தம் வலைப்பதிவில் உடனடியாகப் பதிவிடுமாறு வேண்டுகையை முன்வைக்கிறேன்.



எழுத்துச் சீர்மையைத் தடுக்க விரும்பும் வலைப்பதிவர்கள், அதற்குரிய ‘வில்லைககளை’ அல்லது ‘சின்னங்களை’ தங்கள் வலைப்பதிவில் இணைத்து, எழுத்துச் சீர்மைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

அதற்கு முன், எழுத்துச் சீர்திருத்தம் குறித்து முழு விவரத்தை பதிவர் நண்பர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இது பற்றி இதுவரை நிகழ்ந்துள்ள வளர்ச்சிகளையும், நடந்துள்ள விவாதங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். எழுத்துச் சீர்மைக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக, தொடர்ந்து படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் வரிவடிவத்தில் இ, ஈ, உ, ஊ ஆகிய நான்கு வரிசை எழுத்துகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது. இந்தச் சீர்த்திருத்தம் நடைமுறைக்கு வந்தால் 72 எழுத்துகளின் வடிவத்தை மாற்றி அமைக்க வேண்டியிருக்கும். எழுத்துச் சீர்மை தொடர்பாக மாலை மலர் இணைய இதழில் வந்த செய்தியைப் படித்துப் பார்க்கவும்.

மாலை மலர் செய்தி:- http://thirutamil.blogspot.com/2010/01/blog-post_08.html

இந்தச் சீர்திருத்தம் நடைமுறைக்கு, தமிழ்மொழியில் 59% மாற்றம் ஏற்படும். தமிழ்மொழி பெரும் சிதைவுக்கு உள்ளாகும்; சீரழிவு ஏற்படும். தமிழ்க் கருவூலங்களாக இருக்கும் ஆயிரமாயிரம் நூல்களும் ஆவணக்களும் படிக்க முடியாமல் போகும். அல்லது பெருமளவு காலத்தையும் பணத்தையும் செலவிட்டு அவற்றை மறுபதிப்பு செய்யும் நிலை வரும். இது இயலாத சூழலில் தமிழ் ஒரு கற்கால மொழிபோல, கல்வெட்டு மொழிபோல மாறிப்போகும். இன்று கணினி – இணையத்தில் தமிழ்மொழி அடைந்துள்ள உச்சங்கள் அனைத்தும் ஒருநொடியில் சரிந்து போகும். தமிழ் இணையத்தளங்களும் ஆயிரக்கணக்கில் வலைப்பதிவுகளும் முடங்குப் போகும்.

ஆனால், எழுத்துச் சீர்மையால் ஏற்படப்போகும் எதிர்மறையான விளைவுகளை பற்றி சிறிதும் ஆராயாமல், சிலர் இதனை வலியுறுத்தியும் மிகத் தீவிரமாக பரப்புரை செய்தும் வருகின்றனர். ஏன் எழுத்துச் சீர்மை தேவை என்பதற்கு அவர்கள் கூறும் சில 'சாக்குகள்' பின்வருமாறு:-

1.தமிழை எளிதாகப் படிக்கலாம்
2.தமிழை விரைந்து கற்கலாம்
3.தமிழில் உள்ள எழுத்துக் குறியீடுகளைக் குறைக்கலாம்
4.வெளிநாட்டுகளில் வாழ்வும் தமிழ்க் குழந்தைகள் தமிழை விரும்பிப் படித்துவிடுவர்.
5.உலகில் மாற்றம் ஒன்றே நிலையானது என்பதால் தமிழ் காலத்திற்கு ஏற்ப மாறவேண்டும்.

இதில் வேடிக்கை என்னவெனில் மேலே சொல்லப்பட்ட காரணங்கள் எதிலும் துளிகூட உண்மையோ அல்லது அடிப்படையோ இல்லை. மேலும், இவை அனைத்தும் ஆய்வுநோக்கு கொண்டவையாகவும் இல்லை. அதுமட்டுமல்லாமல், இன்றைய கணினி தொழில்நுட்பக் காலத்தில் இவை அறிவுக்குப் பொருந்தமுடையதாகவும் இல்லை; ஏரணமுடையதாகவும் (Logic) இல்லை.

ஆகவேதான், இ, ஈ, உ, ஊ ஆகிய எழுத்துகளைச் சீரமைக்க வேண்டும் என்ற முன்மொழி,வானது உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள், பற்றாளர்கள், தமிழ்க் கணிஞர்கள், தொழில்நுட்பர்கள் ஆகியோரின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. பலரும் இதனை எதிர்க்கின்றனர்; கண்டிக்கின்றனர். மதுரை இரா.இளங்குமரனார், தமிழண்ணல், பொற்கோ, மறைமலை இலக்குவனார், பேரா.இராமகி முதலியோர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அவற்றுள் சில கீழே தரப்பட்டுள்ளன:-


1.எழுத்துச் சீர்மை தேவையற்ற வேலை - மதுரை.இரா.இளங்குமரனார்

2.எழுத்துச் சீர்மை: மலேசியாவில் 4 தீர்மானங்கள்: கண்டனக் கூட்டம்

3.தமிழை மீட்பதும் காப்பதும்தான் முதல் வேலை; சீர்மை என்ற பெயரில் சிடைப்பதல்ல:- மலேசிய நாளிதழ் செய்தி

4.கண்டனக் கூட்டம்:-எழுத்துச் சீர்திருத்தம் தேவையா? விளக்கக் கூட்டம்

தவிர, 16-5-2010ஆம் நாள் புதுச்சேரியில் எழுத்துச் சீர்மையைக் கண்டித்து மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கண்டனக் கூட்டம்:- தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு

கீழே உள்ள சுட்டிகளைச் சொடுக்கி எழுத்துச் சீர்மைக்கு எதிரான கண்டனங்களையும் விரிவான விளக்கங்களையும் படிக்கவும்

1.சுப.நற்குணன்:- தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? பகுதி 1, பகுதி 2

2.முனைவர் மு.இளங்கோவன்:- தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா?

3.நாக.இளங்கோவன்:- எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் (இது 12 பகுதிகளைக் கொண்டது. அனைத்தும் படிக்க இங்கு சொடுக்கவும்)

4.பேராசிரியர் செல்வா:- எழுத்துச் சீர்திருத்தம் எனும் சீரழிவுப் போக்கு

5.பேராசிரியர் சந்திரசேகரன் பெரியண்ணன்:- Tamil Script Reform: Its Vacuity Next to The Chinese Script

6.மணி.மு.மணிவண்ணன்: எழுத்துச் சீர்திருத்தம் - ஒரு கோணல் பார்வை

7.ரவிசங்கர்:- எழுத்துச் சீர்திருத்தம்

8.செந்தழல் ரவி:- டைம் மிசினும் எழுத்துச் சீர்திருத்தமும்

எழுத்துச் சீர்மையால் தமிழுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி நிலையை நன்கு ஆராய்ந்து பார்த்து தமிழ்மணம் திரட்டி தன்னுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி இருந்தது. எழுத்துச் சீர்மை தேவையில்லை எனும் தன்னுடைய நிலைப்பாட்டைத் தமிழ்மணம் திரட்டி உறுதியாகவும் வெளிப்படையாகவும் அறிவித்துள்ளது. கீழ்க்கண்ட சுட்டியில் அதனைப் படிக்கலாம். தமிழ்மணத்தின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல கருத்துகள் பின்னூட்டங்களாக இடம்பெற்றுள்ளதைக் கண்டிப்பாக படிக்கவும்.

தமிழ்மணம் நிலைப்பாடு:- http://blog.thamizmanam.com/archives/202

கணினி–இணைய நிரலிகளை எழுதுவதற்கும் இன்னபிற செயற்பாடுகளுக்கும் எழுத்துச் சீர்மை தேவை என்ற வாதங்களை அரிஞர் பெருமக்கள் பலர் உறுதியான சான்றுகளோடு முறித்துப்போட்டு தெளிவுகளைச் சொல்லியிருப்பதைப் படித்து உணர்ந்துகொள்வது நல்லது.

எழுத்துச் சீர்மையால் ஏற்படவுள்ள மாற்றங்களையும் அதனுடைய மறுபக்கங்களையும் விவாதிக்கும் நோக்கத்தில் “தமிழ் எழுத்துச் சீர்மை” எனும் புதிய வலைப்பதிவு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்த பல்வேறு கருத்தாடல்கள் அதில் படிக்கக் கிடைக்கும். அவற்றையும் ஒரு ஓட்டமாக நோட்டமிடவும்.

தமிழ் எழுத்துச் சீர்மை: மாற்றமும் மறுபக்கமும் வலைப்பதிவு

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

எனும் வள்ளுவப் பெருந்தகையின் அறிவுரையைப் பின்பற்றி, வலைப்பதிவு நண்பர்கள் ஒரு நிலைப்பாட்டுக்கு வர வேண்டும். அந்த நிலைப்பாட்டை ஒவ்வொருவரும் மேலே சொன்னது போல ஏதேனும் ஒரு வழியில் – ஒரு வகையில் கண்டிப்பாகப் பதிவுசெய்ய வேண்டும். அதனை உடனடியாகச் செய்ய வேண்டும் என உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து தன்னலம் கருதாமல்; எந்த ஈட்டத்தையும் நினையாமல்; காலநேரம் பாராமல் வலைப்பதிவு எழுதி தமிழை வளர்த்துக் கொண்டிருக்கும் – வாழ்வித்துக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் பதிவர் நண்பர்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

நனிநன்றியுடன்:-






Saturday, May 08, 2010

மலேசியாவில் தமிழ்மணம் இருக்கிறது! நிலைக்குமா? (2/2)


மலேசியாவில் எங்கெல்லாம் தமிழ்மணம் இருக்கிறது என்று கடந்த பதிவில் எழுதி இருந்தேன். இனி, எதிர்வரும் காலத்தில் மலேசியத்தில் தமிழ் நிலைக்குமா? என்பதைத் அலசவிருக்கிறேன். இது தற்காலத்தின் சூழலை அடிப்படையாகக் கொண்ட அலசல்தானே தவிர; முற்றும் முடிந்த முடிவன்று. இந்தச் சூழல் ஆக்கமாக மாறினாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

நான் இதனை சொல்லுவதற்குக் அடிப்படை ஒன்று இருக்கிறது. கடந்த 52 ஆண்டுகளாக நாட்டின் அரசியல் உரிமை மீது எந்தவித விழிப்புணர்வும் ஈடுபாடும் கொண்டிராத மலேசியத் தமிழர்கள் 2007 நவம்பர் 25இல், ஒரே நாளில் பெரிய மனமாற்றத்திற்கு உள்ளாகினர். அந்த வரலாற்று நாளுக்குப் பின்னர் எமது நாட்டின் அரசியல் கட்டமைப்பே உருமாறி போயிருக்கிறது.

அப்படி ஏதாவதொரு எழுச்சியோ அல்லது மனமாற்றமோ ஏற்படுமேயானால் மலேசியத் தமிழரின் எதிர்காலத்திற்கு உறுதிப்பாடு(உத்தரவாதம்) கிடைக்கலாம்.

கடந்த பதிவில் அலசிய அதே பத்து துறைகளில், இற்றைச் சூழலில் தமிழுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைகளை ஆராய்ந்து பார்ப்போம்.

1.அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழ் தாழ்கிறது

மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாட்டின் தேசிய மொழியான மலாய்மொழிக்கு அடுத்த நிலையில் தமிழ், சீனம் ஆகிய இரு மொழிகளுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதனைப் பாதுகாத்துக் கொள்வதில் சீனர்களுக்கு இருக்கின்ற முனைப்பு தமிழர்களிடத்திலே குறைந்து காணப்படுகிறது. எங்கும் எதிலும் எப்போதும் மொழியையே முன்படுத்துகின்ற சீன சமூகத்தின் தெளிவு தமிழ்ச் சமூகத்திற்கு இருக்கவில்லை. அரசுத் துறைகளாகட்டும், தனியார் துறைகளாகட்டும் அங்கெல்லாம் சீனத்திற்குக் கொடுக்கப்படும் மதிப்பு தமிழுக்குக் கிடைப்பதில்லை.

எடுத்துக்காட்டாக, மலேசியப் பொருளகப் படிவங்கள், தானியங்கி இயந்திரங்கள், காசோலை சேவைகள் என அனைத்திலும் சீனம் இடம் பெற்றுள்ளது அல்லது சீனமொழிப் பயன்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பொருளகக் காசோலையைச் சீனத்தில் எழுதினால் எல்லாப் பொருளகமும் ஏற்றுக்கொள்ளும். ஆனால், தமிழுக்கு இப்படியொரு நிலைமை இல்லை.

கோலாலம்பூர் அனைத்துலக வானூர்தி நிலையத்தில் மலாய், ஆங்கிலம், சீனம் ஆகிய மொழிகள் இடம்பெற்றுள்ளதே அன்றி தமிழுக்கு அங்கு இடமில்லை. வானூர்தி நிலையத்தில் தமிழும் வேண்டும் என்று போராட வேண்டிய நிலையில்தான் தமிழர்கள் வைக்கப்பட்டுள்ளார்கள்.

2. அரசுத்துறையில் தமிழ் அல்லல்படுகிறது

அரசாங்கத் துறைகளில், அலுவலகங்களில், சேவை இடங்களில் தமிழ் இல்லையே என்று யாரும் வருத்தப்படுவதாகத் தெரியவில்லை. மலேசியத் தமிழருக்கு மலாயும் ஆங்கிலமும் ஏன் சீனமும் கூட சிலருக்கு நன்றாகப் புரிவதால் தமிழ் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று எண்ணுவதே இல்லை.

அரசாங்க அறிக்கைகள், கையேடுகள் ஆகியவற்றில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வுகள் நிறைய உள்ளன. அதற்கெல்லாம் தமிழர்கள் பெரிய வருத்தமோ சங்கடமோ பட்டது கிடையாது. அரசாங்கத் தொலைக்காட்சியில் எல்லா மொழிகளிலும் அறிவிப்பு வரும். ஆனால், தமிழில் வராமல் போவதைக் கண்டு இங்கு எவரும் அலட்டிக்கொள்வதில்லை.

மூன்றாவது பெரிய இனமான எமக்கு உரிமைப்பொருளாக இருக்கும் தாய்மொழியைத் தேர்வில் எடுத்துப் படிப்பதற்குப் பல்வேறு நெருக்கடிகள் ஏற்படுத்தப்படுகின்றன. எசுபிஎம் எனும் தேர்வில் கடந்த காலங்களில் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுத்துப் படிப்பதில் எந்தத் தடையும் இருந்ததில்லை. ஆனால், இவ்வாண்டில் 10 பாடங்களே எடுத்துப் படிக்க முடியும் என்ற அறிவிப்பினால் தமிழ் இலக்கியப் பாடத்திற்கு ஆபத்து நேர்ந்தது. எனினும், தமிழ் அமைப்புகளின் போராட்டத்தினால் 12 பாடங்கள் எடுக்கலாம் என ஒரு தற்காலிகத் தீர்வு பிறந்துள்ளது.

3.கல்வித்துறையில் தமிழ் கரைகிறது.

நாட்டிலுள்ள 523 தமிழ்ப்பள்ளிகளில் 110,000 மாணவர்கள் படிக்கின்ற அதே வேலையில் தமிழ் அல்லாத பள்ளிகளில் (மலாய், சீனம்) 90,000 தமிழ் மாணவர்கள் பயில்கிறார்கள். 110,000 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு 8,000 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மற்ற பள்ளிகளில் படிக்கும் 90,000 மாணவரும் தமிழ்ப்பள்ளியில் சேர்ந்தால் இன்னும் 7,000 தமிழர்களுக்கு ஆசிரியர் தொழில் கிடைக்குமே என்ற எளிமையான கணக்கைக்கூட எமது மக்கள் அறியாமல் இருக்கின்றனர்.

தொடக்கப்பள்ளித் தேர்வில் கிட்டதட்ட 16,000 மாணவர்கள் தேர்வில் தமிழை எடுக்கின்றனர். இந்த எண்ணிக்கை 3ஆம் படிவத்தில் 10,000ஆக குறைகிறது; 5ஆம் படிவத் தேர்வில் 6,000ஆக தேய்கிறது. எசுதிபிஎம் எனும் 6ஆம் படிவத் தேர்வில் தமிழை எடுப்பவர்கள் 1,000ஐ கூட தாண்டுவது கிடையாது. இதிலிருந்து தமிழ்க்கல்வி நாளுக்கு நாள் நலிந்துகொண்டிருப்பதை அறியலாம்.

தமிழ்ப் பள்ளிகளுக்கான பாடநூலில் நல்ல தமிழைப் புறக்கணித்துவிட்டு வடமொழி முதலிய பிறமொழிச் சொற்களை வலிந்து புகுத்தப் பார்க்கின்ற அதிகாரிகள் மலேசியத்தில் உள்ளனர். சுழியம் என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பதிலாக பூஜ்யம் எனும் வடமொழியைத்தான் பயன்படுத்துவோம் என்று அடம்பிடித்து தமிழை அழிக்கத் துடிக்கின்றனர். சுழியத்தை நிலைநிறுத்த தமிழ் அமைப்புகள் போராடிக்கொண்டிருக்கின்றன.

மலாயாப் பல்கலைக்கழகம் நாட்டில் தமிழ்த்துறை இருந்த ஒரே கல்வி நிறுவனம். கடந்த 50 ஆண்டுகளாக அதன் தலைவராக தமிழரே இருந்துள்ளனர். ஆனால் இன்றோ உட்பகை, பதவிப் போராட்டம் ஆகிய காரணங்களால் அத்துறை பறிபோய்விட்டது. இந்த நிலைமை தொடர்ந்தால் அங்கு உள்ள நூலகமும் மூடப்படலாம்; ஆயிரமாயிரம் தமிழ் நூல்கள் அழிந்துபோகலாம்.

4.ஊடகத்துறையில் தமிழ் வாடுகிறது

அரசாங்க வானொலி, தொலைக்கட்சியைத் தவிர்த்து தனியார் வானொலியும், தொலைக்காட்சியும் தமிழைச் சிதைப்பதிலும் சின்னபின்னப் படுத்துவதிலும் மிக மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. தமிழின் தூய்மை அவர்களுக்கு முக்கியமே அல்ல. கைநிறைய காசு வந்தால் போதும் என்ற எண்ணத்தில் போட்டிப் போட்டுக்கொண்டு தமிழை அழிக்கிறார்கள். நிகழ்ச்சி தலைப்புகள், பேசும் பேச்சுகள், அறிவிப்புகள், பாடல்கள் என எல்லாமே தமிழைக் கெடுப்பனவாகவே உள்ளன. ஒரு தனியார் வானொலி “செம்ம ஓட்டு (Hottu) செம்ம (Hittu) என்று அறிவிப்பு செய்து நிகழ்ச்சிகளை நடத்துகிறது. கேட்டால் நேயர்கள் விரும்புகிறார்கள் என்கிறது. பிறகு தமிழ் அமைப்புகளின் பலமான கண்டனத்தைத் தொடர்ந்து அந்த அறிவிப்பை நிறுத்திக்கொண்டது.

5.இதழியல் துறையில் தமிழ் இளைத்துக் கொண்டிருக்கிறது

மலேசிய நாளிதழ், வார, மாத இதழ்களின் பெயர்கள் நல்ல தமிழாக இருந்தாலும், அவை கொடுக்கின்ற செய்திகளில் மொழிக் கலப்பு அதிகமாக இருக்கின்றன. மக்களின் மீது பழிபோட்டு இதனை செய்கின்றனர். அதோடு, தமிழகத்தின் பார்ப்பனிய இதழ்களின் தாக்கம் இங்கே அதிகமாக இருக்கிறது. சில இதழ்கள் புதுக்கவிதை என்ற பெயரில் கைப்பேசிவழி குறுஞ்செய்தியாக (sms) ஆங்கில எழுத்துகளில் எழுதி அனுப்புவதை அப்படியே போடுகிறார்கள். ரோமனைசு எழுத்தில் தமிழ்க் கவிதையை வளர்க்கிறார்கள்.

6.இலக்கியத் துறையில் தமிழ் இழுத்துப்பறிக்கிறது

பத்து இருபது ஆண்டுகளுக்கு முன் ஒப்பிடுகையில் இன்று இலக்கியத்துறை நலிந்துகொண்டிருக்கிறது. மூத்த எழுத்தாளர்கள் ஓய்ந்துபோய்க் கிடக்கிறார்கள். இன்று எழுதப்படும் சிறுகதைகள், நாவல்கள் எல்லாம் உள்ளீடற்றுக் கிடக்கின்றன. இளைஞர்கள் சிலர் எந்த இலக்குமின்றி எழுதித் தள்ளுகிறார்கள். இன்றைய கதைக் களங்கள் பாலியலைச் சுற்றி செக்குமாடாய் சுற்றுகின்றன. வேறு வழியின்றி இதழ்களும் அவற்றை வெளியிடுகின்றன. இன்று யாப்பு அறிந்து எவரும் கவிதை எழுதுவதில்லை. புதுக்கவிதை, ஐக்கூ என்ற பெயரில் எதையோ கிறுக்குகிறார்கள். நடப்பியல் (யதார்த்தம்) எனும் பெயரில் வரையறையின்றி மொழிக்கலப்புகள் நடக்கின்றன.

7.இயக்கங்களில் தமிழ் இயங்காமல் கிடக்கிறது

தமிழின் பெயரால் அமைக்கப்பட்ட இயக்கங்கள் பல முடங்கி போய்விட்டன; அல்லது இலக்கு மாறி சென்றுவிட்டன. தமிழ் இயக்கங்களுக்கும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் இன்று மதிப்போ மக்களின் ஆதரவோ கிடைப்பதில்லை. தமிழோடு உயர்வோம் என்று கொள்கை முழக்கம் செய்த இயக்கங்கள் தமிழை ஓட விட்டுவிட்டு உயர்வோம் என்று மட்டும் கூச்சலிடுகின்றன. இன்று அரைகுறையாகத் தமிழ்ப் பேசும் இயக்கம் – நிகழ்ச்சிகளுக்குதான் மரியாதை.

8.தமிழ் நிகழ்ச்சிகள் / மாநாடுகள்

தமிழர் திருநாள் போன்ற நிகழ்ச்சிகளுக்கோ அல்லது தமிழ் சார்ந்த மாநாடுகளுக்கோ வருபவர்கள் பெரும்பாலும் 40, 50, 60ஐ கடந்தவர்களாகவே உள்ளனர். இளைஞர்களுக்குத் தீனி போடுவதற்குக் கூத்தும் கும்மாளமும் குத்தாட்டமும் போடும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்குப் பலர் வந்துவிட்டார்கள். குறிப்பாக, தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையத்தாரைச் சொல்லலாம். தவிர, தமிழ்த்திரைப்பட, சின்னத்திரை நடிகர் நடிகைகளைக் கூட்டிவந்து நிகழ்ச்சிகள் நடத்தினால் அரங்கமே நிரம்பி வழியும். முந்நூறு, நானூறு வெள்ளிக்குச் சீட்டு வாங்கி திரைப்பட நடிகையைக் காண ஓடுகின்ற மக்கள் இலவயமாக நடத்தப்படும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்குச் செல்வதில்லை.

9.இணையத்தில் தமிழ் எட்டாமல் இருக்கிறது

இணையத் தமிழ் மலேசியத் தமிழருக்கு எட்டாத் தொலைவில் இருக்கிறது. கணினி, இணையத்தில் தமிழைப் பயன்படுத்தும் பயனாளர்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழாசிரியர் பெருமக்கள் பலரும், தமிழால் பிழைக்கும் பலரும் கணினி, இனையத்தில் தமிழைப் பயன்படுத்த அறியாமல் இருக்கின்றனர்.

10.குடும்ப நிகழ்ச்சிகள் / சமய நிகழ்ச்சிகளில் தமிழ் ஓரங்கட்டப்படுகிறது

குடும்ப விழாக்கள், சமய விழாக்கள் அனைத்திலும் இன்று சமற்கிருதமும் வடமொழியும் ஆங்கிலமும் கண்டபடி புகுந்து விளையாடுகின்றது. மக்களிடையே பணவசதி இருப்பதால் என்ன எதுவென்று ஆராயாமல், சரியா தப்பா என்று சிந்திக்காமல் குடும்ப நிகழ்ச்சிகளையும் சமய விழாக்களையும் தங்கள் விருப்பம்போல நடத்துகின்றனர். இதற்கு பூசாரிகள், குருக்கள், சமயத் தலைவர்கள் என எல்லாரும் ஒத்து ஊதுகிறார்கள். ஆலய வழிபாடுகளில் தமிழுக்கு இடமில்லாமல் போய்விட்டது. தேவாரத் திருவாசகப் பாடல்களை ஆங்கிலத்தில் எழுதிவைத்து பாடுகிறார்கள். தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதில்லை. இன்று தியான மன்றங்களும், யோக வழிபாட்டு குழுக்களும் மலேசியாவில் காளான்களாய் வளர்ந்துவிட்டன. ஆயிரக்கனக்கில் பணத்தைக் கொடுத்து ஏமாறுவதற்கு அனியமாக உள்ளனர். தமிழைப் பற்றியெல்லாம் இவர்களுக்கு எந்தவித அக்கறையும் இருப்பதில்லை.

இப்படியாக, தமிழுக்குத் தேய்மானங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. உள்ளிருந்தே அமைதியாகக் கொல்லும் நோய்போல இது புரையோடிக் கொண்டிருக்கிறது. இவற்றைக் களைவது என்பது இன்று தொடங்கி நாளை முடித்துவிடக்கூடிய செயலல்ல. ஆனாலும், மலேசியத் தமிழர் மனம் வைத்தால் இது முடியாததும் அல்ல.

தமிழர்களைப் போலவே மலாயாவுக்கு வந்த சீனர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை வசப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இருந்தாலும், தங்களுடைய மொழியை மறந்துவிடாமல் வாழ்கின்றனர். ஆனால், தமிழர்களோ நாலு காசு சேர்த்தவுடன் முதலில் தாய்மொழியாகிய தமிழைத்தான் தூக்கிப்போடுகிறார்கள். மொழிமானமுள்ள சீனர்களுடன் வாழ்கின்ற போதிலும் தமிழர்கள் பெரும்பகுதியினர் மொழிமானங் கெட்டவர்களாக இருப்பதைக் காண்பதற்கு வியப்பிலும் வியப்பாக இருக்கிறது.

செந்தமிழே உயிரே நறுந்தேனே
செயலினை மூச்சினை உனக்களித்தேனே
நைந்தாயெனில் நைந்துபோகும் என் வாழ்வு
நன்நிலை உனக்கெனில் எனக்கும்தானே!
என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடிய வரிகளில் பொதிந்திருக்கும் உண்மையை எமது மக்கள் உணர்ந்துகொள்ளும் நன்நாள் விரைவிலேயே வரவேண்டும்.

நனிநன்றியுடன்:-



மலேசியாவில் தமிழ்மணம் இருக்கிறது! நிலைக்குமா? (1/2)


கல்வெட்டுகளிலும் பின்னர் ஓலைச்சுவடிகளிலும் அதன் பின்னர் செப்பேடுகளிலும் குடியிருந்த பழந்தமிழ் மொழியானது அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறுமா? என்றும், உரைநடையில் பீடுநடையிடுமா? என்றும், அச்சுக்கலை அறிமுகமான காலத்தில் தமிழ் கோலோச்சுமா? என்றும், தட்டச்சு கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் தமிழ் மூச்சடக்கி எழுமா? என்றும், தொழிற்புரட்சி ஏற்பட்ட கடந்த நூற்றாண்டில் தமிழ் மீளுமா? என்றும், அறிவியல் வளர்ச்சிக்கிடையில் தமிழ் மலர்ச்சியடைந்து மணம் தருமா? என்றும், தொழில்நுட்பத்தின் தொல்லைக்குள் தமிழ் தொலையாதிருக்குமா? என்றும், ஆகக் கடைசியாக முகிழ்த்திருக்கும் கணினி – இணையத் துறையில் கன்னித்தமிழ் கரைசேருமா? என்றும் தமிழுக்கு எதிராகக் காலாந்தோறும் நம்பிக்கையில்லாத போக்குகள் கட்டவிழத்து விடப்பட்டுள்ளன.

ஆனால், அத்தனைக் காலங்களையும் தடைகளையும் எதிரில் வந்த இடர்களையும் கடந்து இன்று தமிழ்மொழி வாழ்ந்து வருகிறது; உலகமெல்லாம் பரந்து – விரிந்து – மற்றைய மொழிகளைப் போல வளர்ந்து வருகின்றது. உலகின் பல நாடுகளில் தமிழும் தமிழரும் இன்று குடியேறி வளம்பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், மலேசியாவில் சூழலில் இற்றை நாளில் தமிழ்மொழியின் நிலைமை அல்லது ஆளுமை எந்த அளவுக்கு இருக்கின்றது என்பதை இந்தப் பதிவு அலசவிருக்கிறது.

1.மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழ்

மலேசிய அரசியலமைப்புச் சட்டப்படி, கல்விச் சட்டத்தின் 152-வது விதியின்கீழ் தமிழுக்கு அரசுரிமைமையும் பாதுகாப்பும் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது:-
வரைவு எண்:152:- அதிகாரப்பூர்வ மொழியாக மலாய் மொழி இருப்பினும் பிற மொழிகளுக்கான நிலைப்பாடு மற்றும் உரிமையைக் கொண்டு, அம்மொழியைப் பயன்படுத்துவதற்கும், கற்றுக்கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும், பொது மானியங்களைப் பயன்படுத்தி அவற்றைச் செயல்முறைப்படுத்துவதற்கும் தடை ஒருபோதும் இருக்கக்கூடாது.
வரைவு எண்:152(1)(a):-பிற மொழிகளைப் பயன்படுத்துவதற்கும் (அதிகாரப்பூர்வ காரணங்களைத் தவிர்த்து), அல்லது கற்பிப்பதற்கும் கற்பதற்கும் யாரையும் மறுக்கவோ தடுக்கவோ முடியாது; மற்றும்
வரைவு எண்:152(1)(b):-கூட்டரசில் அங்கம் வகிக்கும் பல்லின மக்களின் மொழிகளைப் பாதுகாப்பதற்கும், தொடர்வதற்கும், கற்பதற்கும் உரிய மத்திய, மாநில அரசாங்கங்களின் உரிமைகளை இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு வரைவின் உட்பிரிவும் பாதிக்கலாகாது.

2. அரசாங்கத் துறையில் தமிழ்

மலேசிய அரசாங்கத்தில் பல துறைகளில் தமிழ்மொழிக்கு தகுந்த வாய்ப்பு வழங்கப்படுள்ளது. கல்வித் துறை, தகவல் துறை ஆகிய இரண்டிலும் தமிழுக்குப் பரவலான இடம் வழங்கப்பட்டுள்ளது. நீதித்துறையில் வழக்குமன்ற மொழிப்பெயர்ப்பாளர் பணியில் தமிழ்மொழிக்கு நிரம்ப தேவை இருக்கின்றது. இவைகளைத் தவிர்த்து மற்றைய துறைகளில் தமிழ்மொழிக்குக் குறைவான வாய்ப்புகளே உள்ளன.

3. தமிழ்க் கல்வித்துறை

பாலர் வகுப்பு தொடங்கி (6வயது), தொடக்கப்பள்ளி (7–12வயது), இடைநிலைப் பள்ளி (13-17வயது), பிறகு உயர்க்கல்வி, ஆசிரியர் பயிற்சிக் கழகம், பல்கலைக்கழகம் வரையில் தமிழ்மொழிக் கல்விக்கு மலேசியாவில் விரிவான அளவில் வாய்ப்புகள் இருக்கின்றன.

மொத்தம் 523 தமிழ்ப்பள்ளிகள் நாட்டில் இருக்கின்றன. இப்பள்ளிகளில் ஏறக்குறைய ஒரு இலக்கத்து பத்தாயிரம் (110,000) மாணவர்கள் பயில்கின்றனர். தொடக்கப்பள்ளியில் 6ஆம் ஆண்டில் அரசுத் தேர்வு நடைபெறும். அதேபோல் இடைநிலைப் பள்ளியில் 3ஆம் படிவத்திலும்(பிஎமார்) 5ஆம் படிவத்திலும்(எசுபிஎம்) அரசுத் தேர்வுகள் நடைபெறும். பிறகு ஆறாம் படிவத்தில் எசுதிபிஎம் எனும் தேர்வு நடத்தப்படும்.

தொடக்கத் தமிழ்ப்பளிகள், இடைநிலைப்பள்ளிகளில் தமிழைப் படிப்பதற்கான பாடநூல்கள், கலைத்திட்டங்கள், பயிற்சி நூல்கள், தேர்வுகள் ஆகிய அனைத்தையும் அரசின் செலவிலேயே வழங்கப்படுகின்றன. ஆசிரியர்களுக்கு அரசாங்கமே பயிற்சியளிக்கிறது. தமிழாசிரியர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய பத்தாயிரம் இருக்கும்.

பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியில் இளங்கலை, முதுகலை, முனைவர் படிப்பு வரையில் படிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆசிரியர் பயிற்சி தனியாக ஆசிரியர் பயிற்சிக் கழகங்கள் வாயிலாக வழங்கப்படுகிறது. இதுவும் பட்டப் படிப்பாகும்.

4. தமிழ் ஊடகத் துறை

அரசாங்க ஊடகமான மலேசிய வானொலி தொலைக்காட்சி (Radio Televisyen Malaysia) ஆகிய நிறுவனம் வாயிலாக 24 மணி நேர தமிழ் வானொலி(Minnal FM) நடத்தப்படுகிறது. தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலியேறுகின்றன. அரசாங்கச் செய்தி நிறுவனமாகிய ‘பெர்னாமா’ (Bernama TV) தொலைக்காட்சியில் தமிழ்ச் செய்திகள் ஒவ்வொரு நாளும் 3 முறை ஒளியேறுகின்றது.

மேலும், தனியார் தொலைக்காட்சி (Astro) நிறுவனத்திலிருந்து 24 மணி நேரமும் தமிழ் நிகழ்சிகள் ஆறு அலைவரிசைகளில் ஒளிபரப்பாகின்றன. அதேபோல், தனியார் தமிழ் வானொலிகள் இரண்டு (THR Raga / Osai) உள்ளன.

5. தமிழ் இதழியல் துறை

தற்சமயம் மூன்று தமிழ் நாளிதழ்கள் வெளிவருகின்றன. 1924 தொடங்கி இன்றுவரை நிற்காமல் வெளிவரும் ஒரே நாளிதழ் உலகத்திலேயே தமிழ் நேசன் எனும் மலேசிய நாளிகைதான். கடந்த மே 1 தொடங்கி மலேசிய வரலாற்றில் முதன்முறையாக ஒரு மாலையிதழ் வெளிவரத் தொடங்கியுள்ளது. அரசாங்கத்தின் தகவல் ஏடாக புதிய உதயம் எனும் இதழ் இலவயமாக வழங்கப்படுகிறது. வார, மாத இதழ்கள், மாணவர் இதழ்கள் என இருபதுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவருகின்றன.

6. தமிழ் இலக்கியத் துறை

மலேசியத் தமிழ் இலக்கியம் ஒரு சீரான தன்மையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. மரபுக் கவிதைகள், உரைவீச்சுகள், சிறுகதை, நாவல், கட்டுரை இலக்கியம், குழந்தை இலக்கியம் என பல்வேறு வடிவங்களில் இலக்கியப் படைப்புகள் நிறைய வெளிவருகின்றன. இலக்கியத்தை வளர்த்தெடுப்பதில் நாளிதழ்களும், அரசாங்க வானொலியும் பெரும் பங்காற்றுகின்றன. உள்நாட்டு எழுத்தாளர்களால் எழுதப்பெற்று அதிக அளவில் நூல்களும் வெளிவருகின்றன. அவற்றுள் மொழியியல், இனவியல் சார்ந்த ஆய்வு நூல்களும் அடங்கும். கடந்த 4 ஆண்டகளாக தமிழ் நாள்காட்டி வெளிடப்பெறுகிறது. இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாக எடுத்துப் படிப்பதற்கு வாய்ப்பும் இருக்கிறது.

7. தமிழ் இயக்கங்கள்

தமிழ்மொழியை முன்னெடுத்து நடத்தும் தமிழ் இயக்கங்கள் பல இருக்கின்றன. மலேசியத் திராவிடர் கழகம், தமிழ்நெறிக் கழகம், தமிழ்க் காப்பகம், தமிழ் மணி மன்றம், தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், தமிழ் இலக்கியக் கழகம், திருக்குறள் இயக்கம், தமிழியல் ஆய்வுக் களம், தமிழ் வாழ்வியல் இயக்கம் முதலான இன்னும் பல அமைப்புகள் தமிழ்மொழி வளர்ச்சிப் பணிகளை இடையறாது நடத்தி வருகின்றன. தமிழுக்கு எதிராக அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களையும் இவ்வமைப்புகள் தீர்த்து வைக்கின்றன.

8. தமிழ் நிகழ்ச்சிகள் / மாநாடுகள்

தமிழ் நிகழ்ச்சிகளுக்கும் மாநாடுகளுக்கும் பஞ்சமே இல்லை என்ற அளவுக்குத் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்துகொண்டே இருக்கும். குறிப்பாக, கோலாலம்பூர், பேரா, பினாங்கு முதலான ஊர்களில் தமிழ் எழுச்சிமிக்க நிகழ்ச்சிகளும் மாநாடுகளும் அதிகமாக நடைபெறும். முதலாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு, திருக்குறள் மாநாடு, சிலப்பதிகார மாநாடு, வள்ளலார் ஆன்மநேய மாநாடு, கம்பன் விழா, பாரதிதாசன் விழா, கண்ணதாசன் விழா, தமிழர் திருநாள், சித்தர் மாநாடு போன்றவை குறிப்பிடத்தக்க பெரிய மாநாடுகள். வரும் மே திங்கள் 21–23இல் ஐம்பெரும் காப்பிய மாநாடு முதன்முறையாக நடைபெறவுள்ளது.

9. தமிழ் இணையம்

மலேசியாவில் தமிழ் இணையம் மெல்லென வளர்ந்து வருகின்றது. முரசு தமிழ் செயலியை உலகத்திற்கு அளித்த பெரும் மலேசியத் தமிழர் முத்து நெடுமாறனைச் சாரும். இவர் கைப்பேசியில் இயங்கும் ‘செல்லினம்’ எனும் செயலியையும் உருவாக்கியுள்ளார். அதேபோல சிவகுருநாதன் என்பவர் நளினம் செயலியையும், இரவிந்திரன் என்பார் துணைவன் செயலியையும் உருவாக்கி தமிழ்க் கணிமை உலகத்திற்கு அளித்தவர்கள்.

மலேசியாவில் இன்று தமிழில் சில இணையத்தளங்களும் பல வலைப்பதிவுகளும் உருவாகி இருக்கின்றன. இது குறித்து ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன்.
1.இணைய வெளியில் இனிய பயணம்
2.பதிவுலகப் பூமாலையில் மலேசிய நறும்பூக்கள்

மலேசியப் பிரதமருடைய இணையத் தளமும் தமிழில் செயல்படுகிறது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இரு நாளிதழ்கள் இணையப் பதிப்பாக வெளிவருகின்றன. மின்னிதழ்களும் இணையத்தில் வலம்வருகின்றன.

10. தமிழில் குடும்ப நிகழ்ச்சிகள் / சமய நிகழ்சிகள்

குடும்ப நிகழ்ச்சிகளையும் சமயம் சார்ந்த வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் முழுக்க முழுக்க தமிழிலேயே நடத்திக்கொள்ள விரும்பும் மக்கள் இங்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கின்றனர். குழந்தைக்குப் பெயர்சூட்டு விழா, திருமணம், புதுமனை புகுவிழா, இறப்பு, ஆதனாற்று, கோயில் குடமுழுக்கு, குருபூசை முதலியவற்றில் தமிழையும் தமிழ் அருட்பாடல்களையும் திருக்குறளையும் முன்படுத்துகின்ற சூழலைக் காண முடியும். பொங்கல் விழா இங்கு பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

இப்படியெல்லாம் தமிழ்மணம் செழிக்கும் நாடாக மலேசிய விளங்குகிறது. இருப்பினும், இந்த நிலைமை எதிர்காலத்திலும் தொடருமா? மலேசியாவில் தமிழ் நிலைக்குமா? என்பதை அடுத்தத் தொடரில் ஆராய்வோம். மறவாமல் வாருங்கள்.

நனிநன்றியுடன்:-
Blog Widget by LinkWithin