Friday, September 30, 2016

தமிழ்க்கல்விப் பளிங்குவெட்டில் மலேசியப் பிரதமர் தமிழில் கையொப்பம்


மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. அதனைக் கொண்டாடும் வகையில் நாட்டில் உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும் பளிங்குவெட்டு (Plaque) பொறுத்தப்படவுள்ளது. அந்தச் சிறப்புப் பளிங்குவெட்டில் மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்கள் தமிழில் கையொப்பம் இட்டுச் சிறப்பித்துள்ளார். பிரதமர் தமிழ்மொழியில் தம் பெயரைக் கையொப்பம் இட்டுள்ள செயலானது 200 ஆண்டு மலேசியத் தமிழ்க்கல்விக்கும் தமிழ்மொழிக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
மாண்புமிகு பிரதமருடன் கல்வித் துணையமைச்சர்



மேலும், பிரதமரைப் போலவே மலேசியக் கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ மாட்சீர் பின் காலிட்டும் இந்தப் பளிங்குவெட்டில் தமிழ்மொழியில் கையொப்பம் இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரும், கல்வி அமைச்சரும் தமிழில் கையொப்பம் இட்டுள்ளது மலேசியத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மலேசியக் கல்வி அமைச்சரும் கல்வித் துணையமைச்சரும்


மலேசியாவில் 1816ஆம் ஆண்டில் பினாங்கில் ஆங்கிலேயர்கள் தொடங்கிய பினாங்குப் பொதுப் பள்ளியில் (Penang Free School) ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. அன்று அந்தப் பள்ளியின் தலைவராக இருந்த ரெவரண்ட் அட்சிங்சு என்பவர் இந்தத் தமிழ் வகுப்பைத் தொடங்கினார்.

அப்பொழுது தொடங்கிய தமிழ்க்கல்வி 200 ஆண்டுகளாக மலேசியாவில் நிலைத்து வாழ்கின்றது என்பது வரலாற்றுச் சிறப்புகுரியது. தமிழ்நாட்டுக்கு வெளியே கடல்கடந்த ஒரு நாட்டில் தமிழ்மொழி மிக நீண்ட காலமாக வாழ்ந்து வருவதும் கல்விமொழியாக வளர்ந்து வருவதும் பெருமைக்குரிய செய்தி.

மலேசியாவில் ஒரு தனி வகுப்பறையில் தமது வாழ்வைத் தொடங்கிய தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் கடந்த பிறகு இன்று 524 தொடக்கப்பள்ளிகளில் பயிலப்படுகிறது. அதுவும் தமிழ்வழிக் கல்வியை வழங்கி வருகின்றது. மலாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து ஏனைய பாடங்களாகிய கணிதம், அறிவியல், நன்னெறி, வரலாறு, உடற்கல்வி, நலக்கல்வி, இசை, கலைக்கல்வி, தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் ஆகிய பாடங்கள் அனைத்தும் தமிழிலேயே கற்பிக்கப்படுகின்றன. இதன்வழி தொடக்கத் தமிழ்ப்பள்ளிகளில் தமிழுக்குக் கல்வி மொழிக்குரிய உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இடைநிலைப்பள்ளியில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய இரு பாடங்கள் படிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் கல்விக் கழகம், பல்கலை வரையில் தமிழில் படிப்பதற்கான வாய்ப்பை மலேசிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

மழலையர் கல்வி தொடங்கி முனைவர் பட்டம் வரையில் தமிழ்மொழியைக் கற்கும் உரிமையும் வாய்ப்பும் மலேசியாவில் இருக்கின்றது என்பது தமிழ்மொழி அடைந்திருக்கும் வெற்றியாகும்.

இவ்வாறு மலேசியாவில் வாழ்ந்துவரும் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் நிறைவை இந்த 2016ஆம் ஆண்டில் அடைகின்றது. இந்த வரலாற்றைப் பெருமைபடுத்தும் வகையில் மலேசியாவில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் கொண்டாட்டத்தை ஒராண்டுக் காலத்திற்குப் பெருவிழாவாகக் கொண்டாட மலேசியக் கல்வி அமைச்சு முன்வந்துள்ளது.
மலேசியாவில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் கொண்டாட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினர்


இந்தக் கொண்டாட்டப் பெருவிழாவுக்கு மலேசியக் கல்வித் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ ப.கமலநாதன் அவர்கள் தலைமையில் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் ஓராண்டுக் காலத்திற்குத் தமிழ்க்கல்விக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பல திட்டங்களையும் நிகழ்சிகளையும் நடத்தவுள்ளனர்.

மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்ந்து நிலைக்கவும் அதோடு தமிழ்மொழி நிலைபெற்று வாழவும் இந்த 200 ஆண்டுகள் கொண்டாட்டம் வழிவகுக்கும். இதன்வழி மலேசியத் தமிழர்களின் இலக்கியம், கலை, பண்பாடு, வரலாறு, வாழ்வியல், விழுமியங்கள் ஆகிய அனைத்தும் காக்கப்படும். அனைத்திற்கும் மேலாக மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் அடுத்துவரும் நூற்றாண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்லப்படும் என்பது எல்லாருடைய நம்பிக்கையாக இருக்கின்றது.

#தமிழ்க்கல்வி200ஆண்டு
@சுப.நற்குணன்

Sunday, September 25, 2016

#தமிழ்க்கல்வி200ஆண்டு:- தென்மண்டலத் தமிழாசிரியர் கருத்தரங்கம்


மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு மலேசியாவில் 200ஆம் ஆண்டுத் தமிழ்க்கல்விக் கொண்டாட்டத்தை மலேசியக் கல்வி அமைச்சு முன்னின்று நடத்துகின்றது. இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்குக் கல்வித் துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ கமலநாதன் தலைமை ஏற்றுள்ளார்.

மலேசியாவில் 200ஆம் ஆண்டுத் தமிழ்க்கல்விக் கொண்டாட்டம் தொடர்பில் தென்மண்டலத் தமிழாசிரியர் கருத்தரங்கு கடந்த 19.09.2016 தொடங்கி 22.09.2916 வரை சிறப்பாக நடைபெற்றது.

சொகூர் மாநிலம் சுகூடாயில் உள்ள கூட் ஓப் விடுதியில் நடந்த இந்தக் கருத்தரங்கில் 148 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். பாலர் பள்ளி, தொடக்கத் தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இந்த 4 நாள் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

மலேசிய ஆசிரியர் கல்விக் கழக விரிவுரையாளர்கள் இந்தக் கருத்தரங்கில் கட்டுரைகள் படைத்தனர். கட்டுரைகள் மீதான விவாதங்களும் நடைபெற்றன. மேலும், தமிழ்க்கல்வி தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் கேள்வி பதில் அங்கமும் கருத்தாடல்களும் நடைபெற்றன.

மலேசியக் கல்வி அமைச்சின் ஆதரவுடன் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கு மலேசியத் தமிழ்க்கல்வி வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் வித்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்ப்பாடம், தமிழ் இலக்கியப் பாடம் ஆகிய இரண்டும் புதிய இலக்கை நோக்கிப் பயணம் செய்ய இதன்வழி மாற்றங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்தரங்கின் நிறைவு விழாவில் கலந்துகொண்ட மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முகமை அமைப்பாளர் திரு.சு.பாஸ்கரன் அவர்கள் மலேசியாவில் 200 ஆண்டுகாலத் தமிழ்க்கல்வி வரலாற்றை விளக்கிப் பேசினார். மேலும் தமிழ்க்கல்வியின் வழியாக நாட்டில் நிகழ்ந்துள்ள வெற்றிகள், சாதனைகள் குறித்து பேசினார். தமிழ் ஆசிரியர்களின் பணிகள் பற்றி மிக விரிவாகப் பேசினார். மேலும் இடைநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தமிழாசிரியர்களின் அளப்பரிய சேவைகளைப் பாராட்டினார். தமிழ்க்கல்வியின் தேவையைப் பற்றி பேசுகையில் மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்ந்து நிலைபெற தமிழாசிரியர்கள் பெரும் பங்காற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது என வலியுறுத்தினார். இன்றைய காலத்தில் தமிழ்க்கல்வியை நாம் வளர்த்தால்தான் எதிர்காலத்தில் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்மொழி தாய்மொழியாக நிலைக்கும். அதற்காக இன்றைய ஆசிரியர்கள் மொழி உணர்வையும் இன உணர்வையும் சமய உணர்வையும் மாணவர்களுக்கு ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கருத்தரங்கில் கட்டுரைகள் படைத்த பேச்சாளர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் திரு.சு.பாஸ்கரன் நன்றியும் பாராட்டையும் தெரிவித்ததோடு நற்சான்றிதழை வழங்கிச் சிறப்பித்தார்.

கருத்தரங்கின் காட்சிகள் சில:-











#தமிழ்க்கல்வி200ஆண்டு

@சுப.நற்குணன்

Tuesday, September 13, 2016

ஒரே மேடையில் 425 தமிழ் நூல்கள் வெளியீடு - உலக சாதனை



செப்தெம்பர் 13, 2016ஆம் நாள் உலக வரலாற்றில் ஒரு சாதனை நாள். நம் தமிழ்மொழி உலக அளவில் மாபெரும் வரலாற்றை எழுதிய சிறப்புமிக்க ஒரு நாள்.

தமிழ்நாடு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர் நூல்கள் உள்பட 425 தமிழ் நூல்கள் ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது. இளைஞர், விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ சரவணன், டத்தோ டி. மோகன் மற்றும் மலாயா பல்கலைகழகத் தமிழ்த் துறை பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்பட ஏராளமான மலேசியத் தமிழ் ஆர்வலர்கள் இந்த உலகச் சாதனை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். 


மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை தனது 60 ஆண்டு (1956-2016) கல்விப் பணியினை முன்னிட்டு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை மற்றும் சென்னை கலைஞன் பதிப்பகத்துடன் இணைந்து “மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர்” நூலாக்கம் திட்டத்தினைத் தொடங்கியது.

இத்திட்டத்தின்வழி கடந்தாண்டு 350 நூல்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்  ஒரே நேரத்தில் வெளியீடு செய்து சாதனை படைத்தது. அவற்றுள் 10 மலேசிய நூல்களும் அடங்கும். இவ்வாண்டு புதிய சாதனையை ஏற்படுத்தும் வகையில், 425 நூல்கள் வெளியீடு கண்டன. இதில் 80 நூல்கள் மலேசியப் பெருந்தகையோர் பற்றிய ஆவண நூல்களாகும்.

இந்த நூல் வெளியீட்டினை ஒட்டி இன்று கருத்தரங்கமும் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கில் மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர் குறித்த கட்டுரைகளும் படைக்கப் படுகின்றன.

தமிழ்மொழி, இலக்கியம், தமிழ்க் கல்வி, தமிழர் கலை, பண்பாடு, விளையாட்டு, தமிழர் இனமான உணர்வு, தமிழர் மேன்மை, சமூக பொருளாதார அரசியல் வழி தமிழர் மேம்பாட்டிற்கு உழைத்து மறைந்த தமிழ்ப் பெருந்தகையோரும், தமிழ்ச் சமுதாயம் உய்ய தொடர்ந்து பணியாற்றி வரும் பெருந்தையோரும் “மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர்” நூலாக்கத் திட்டத்தின் கீழ் அடங்குவர்.


மலேசிய மண்ணில் தமிழர்கள் மேன்மையுற உழைத்த, வழிகாட்டிய பெருந்தகையோரை அடையாளங் காணப்பட்டு ஆவணப்படுத்தப் படுத்துவதே நூல் எழுதும் திட்டத்தின் நோக்கமாகும். தற்போதைய தலைமுறையும் அடுத்த தலைமுறையும் இவர்களை எண்ணிப் பார்க்க வேண்டும்; வாழ்வில் முன்மாதிரியாகவும் கொள்ளவேண்டும். இவர்கள் இல்லாவிடில் மலேசியாவில் தமிழும் தமிழர்களும் வெற்றி பெற்றிருக்க இயலாது என்பதை உலகத்தாருக்கு மலேசியத் தமிழர்களை அடையாளம் காட்டும் கடப்பாடாக இந்தத் திட்டம் கருதப்படுகிறது. 

மலேசியப் பெருந்தகையோர் பற்றி ஒரே நேரத்தில் 80 நூல்கள் உருவாக்குவது மிகப்பெரிய சாதனையாகும். ஒவ்வொருவரைப் பற்றியும் 100 பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டுள்ளன. எழுத்தப் படுவோர் குறித்த குறிப்புகளையும் படங்களையும் சேகரித்து சிறுசிறு தலைப்புகளிட்டு எழுதும் பணியில் 80 பேர் ஈடுபட்டனர். 

எழுதப் படுவோரின் பிறப்பு வளர்ப்பு, கல்வி, இலக்கியப் பணி, சமூகப் பணி, தமிழ் மற்றும் தமிழர் சிந்தனை, அவர்கள் முன்னெடுத்த திட்டங்கள், இன்னும் பிற அரிய பணிகளையும் தொகுத்து நூலாக எழுதினர். மலேசியச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவேண்டிய மிகப்பெரிய பணியினை இவர்கள் செய்துமுடித்துள்ளனர்.

இத்தகு வரலாற்றுச் சிறப்புமிக்க  சாதனைக்குப் பின்னணியில் நமது மலேசியாவைச் சேர்ந்த மலாயாப் பல்கலையின் முனைவர் சு.குமரன் அவர்கள் பெரும்பணி ஆற்றியிருப்பது குறிப்பிடத்தக்க செய்தி. மலேசியாவில் தமிழ்ச் சார்ந்த பணிகள் ஆற்றிய 80 பெருந்தகையோர் பற்றி ஆவணப்படுத்துவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சியும் அதற்காக எடுத்துக்கொண்ட சிரத்தையும் போற்றுதலுக்கு உரியது. அவருடைய இப்பணி மலேசியத் தமிழ்ப் பெரியோர்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது; மலேசியாவில் நடைபெற்றுள்ள அருந்தமிழ்ப் பணிகளை உலகத்திற்கு அறியச் செய்துள்ளது எனில் மிகையன்று. அந்தவகையில் காலத்தால் செய்யத்தக்க அரியதோர் பணியை முன்னின்று செய்திருக்கும் முனைவர் சு.குமரன் அவர்களுக்குத் திருத்தமிழ் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், மலேசியாவைச் சேர்ந்த 80 நூலாசிரியர் பெருமக்களையும் மனாதாரப் பாராட்டுவதில் திருத்தமிழ் மகிழ்கிறது. 

மலேசியத் தமிழ்ப் பெருந்தகையோர் நூல் வரிசையில் சில:-






நூல் வெளியீட்டு விழா காட்சிகள் சில:-




@சுப.நற்குணன்
Blog Widget by LinkWithin