Tuesday, August 25, 2009

ஓலைச்சுவடிகளின் தோற்றமும் தொடர்ச்சியும்:- கோலாலம்பூரில் கருத்தரங்கு


சுவடியியல் துறை தமிழர்களின் வரலாற்றோடும் வாழ்வியலோடும் நெருங்கியத் தொடர்புடையது. நமது மலேசியாவில் சுவடியியல் பற்றிய அறிகையானது அறவே இல்லை எனும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. அது தமிழக மக்களுக்கே உரியது என்ற எண்ணமும் நம்மிடையே உள்ளது.


ஆனால், நமது மலேசியத் தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்கள் சிலரும் சுவடியியல் துறையில் ஆழ்ந்து ஈடுபட்டு தமிழ்நாடு வரையில் சென்று, ஆய்வுகள் நடத்தி வருகின்றனர் என்றால் பெரும்பாலோருக்கு வியப்பாக இருக்கலாம். ஓலைச்சுவடிகள் குறித்த ஆய்வில் கண்ட உண்மைகளையும் அரிய தகவல்களையும் மலேசியத் தமிழர்களுக்குப் பரப்பும் எண்ணத்தில் ஒரு மாபெரும் நிகழ்ச்சி கோலாலம்பூர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் ஏற்பாட்டில், மலாயாப் பல்கலைகழகத் தமிழ்ப் பேரவையின் ஆதரவுடன் “ஓலைச்சுவடிகளின் தோற்றமும் தொடர்ச்சியும்” என்ற அரியதோர் கருத்தரங்கம் விரைவில் நடைபெறவுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

நாள்:-
29-8-2009 (காரிக்கிழமை)
நேரம்:-
காலை மணி 8.30 – மாலை 4.30 வரை
இடம்:-
பெர்டானா சிஸ்வா அரங்கம், மலாயாப் பல்கலைக்கழகம்
கட்டணம்:-
RM20.00 (இருபது வெள்ளி) மட்டுமே


இக்கருத்தரங்கம் மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.

1.சுவடியியலை மலேசியத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.
2.ஓலை சோதிடம் / நாடி சோதிடம் பற்றிய குழப்பங்களுக்குத் தெளிவு காணல்
3.மலேசியத் தமிழர்கள் சுவடியியல் துறையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிதல்.

மலேசியாவில் முதன்முறையாக நடைபெறவிருக்கும் இந்த அரிய கருத்தரங்கத்தில் மூன்று ஆய்வுரைகள் இடம்பெறவிருக்கின்றன.

1.சுவடியியல் ஓர் அறிமுகம் (முனைவர் மோ.கோ.கோவைமணி, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)

2.மலேசியாவில் சுவடியியல் (திரு.கோவி.சிவபாலன், முதுநிலை விரிவுரைஞர், மலாயாப் பல்கலைக்கழகம்)

3.சுவடியியலும் சோதிடமும் (முனைவர் தி.மகாலட்சுமி, சுவடியியல் துறை ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை)

இவற்றோடு, திரு.சி.ம.இளந்தமிழ் அவர்கள் கைவண்ணத்தில் காண்பதற்கரிய படங்களும் காட்சிகளும் விளக்கமும் கணினி வெண்திரைக் காட்சியாகக் காட்டப்படும்.

மேல்விளக்கங்களுக்கும் தொடர்புக்கும்:-
இரா.சரவணன்
(019-6607578) / சு.நவராசன் (017-3693737) /
இரா.செல்வசோதி (019-2267579) / மின்னஞ்சல்:- suvadi2009@gmail.com
**********

ஓலைச்சுவடி என்றால் பெரும்பாலோருக்கு உடனே நினைவைத் தட்டும் விடயம் சோதிடம்தான். ஆனால், ஓலைச்சுவடி என்பது சோதிடத்திற்கு மட்டுமே உரியதா? என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாகும்.

உண்மையில், ஓலைச்சுவடிகள் தமிழர்களின் வரலாற்று ஆவணமாகவும் வாழ்வியல் கருவூளமாகவும் இருக்கின்றன என்பதை நம்மில் பலர் அறிந்திருக்கவில்லை. தமிழர் மரபுகளும் விழுமியங்களும் ஓலைச்சுவடிகளில் பதிவுகளாக இன்றும் இருக்கின்றன. அவற்றை அறிஞர் பெருமக்கள் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகின்றனர்.

தமிழ் முன்னோர்கள் இலக்கியம், இலக்கணம், மருத்துவம், ஆன்மிகம், கணிதம், கணியம் (சோதிடம்), வரலாறு, கண்டுபிடிப்பு என அனைத்தையும் ஓலைச்சுவடிகளில் அவணப்படுத்தி (Documentation) வைத்துள்ளனர்; அந்த ஆவணங்கள் அழிந்துபோகாமல் காத்து வைத்துள்ளனர்; அதற்காக நேர்த்தியாகத் திட்டமிட்ட நடைமுறைகளை வகுத்து வைத்துள்ளனர். இன்று, சுவடியியல் என்ற பெயரில் இந்தப் பழங்கால ஆவணங்கள் ஆய்வுக்கும் மறுபதிப்பிற்கும் உட்படுத்தப்படுகின்றன.

இந்தச் சுவடியியல் கல்வெட்டு, செப்பேடு எனவும் விரிந்து நிற்கிறது. ஆயினும், இவற்றுள் இன்றும் ஆய்வாளர்களின் கவனத்தை மிகவும் ஈர்ப்பதாக இருப்பது ஓலைச்சுவடிகளே எனலாம்.

இன்றும் தமிழ் நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஓலைசுவடிகள் ஆய்வுச் செய்யப்படுகின்றன. அதுபோலவே, இன்னும் பல ஆயிரம் ஓலைச்சுவடிகள் படிப்பார் இல்லாமலும் பதிப்பார் இல்லாமலும் கிடக்கின்றன. அவற்றுள் பல சிதிலமடைந்து அழிந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஓலைச்சுவடியின் சிதைவிலும் நமது வரலாறும் விழுமியங்களும் அழிகின்றன என்பது மிக மிக வருத்தமான செய்தியாகும்.

தமிழர்களின் மரபுவழிச் சொத்துகளான ஓலைச்சுவடிகளை அழிவிலிருந்து காக்க வேண்டிய பொறுப்பு தமிழகத் தமிழர்களுக்கு மட்டுமின்றி நம்மைப் போன்ற அயலகத் தமிழர்களுக்கும் உண்டு. அதற்கு, குறைந்தளவு சுவடியியல் பற்றிய அடிப்படை அறிவையாவது நாம் பெற்றிருக்க வேண்டும்.

மலேசியத் தமிழர்களுக்கும் ஓலைச்சுவடிகளுக்கும் ஏறக்குறைய 20ஆம் நூறாண்டுத் தொடக்கத்திலிருந்து உறவு இருந்து வருகின்றது. நம் நாட்டிலும் இன்னும் பலர் அவர்களின் முன்னோர்கள் விட்டுச்சென்ற ஓலைச்சுவடிகளை இன்றும் வைத்துள்ளனர். அவற்றை, முறையாகப் படித்தும் பதிப்பித்தும் ஆய்வுகளுக்கு உட்படுத்தினால், வியந்துபோகும் அளவுக்குப் பற்பல செய்திகளையும் தரவுகளையும் திரட்டுவதற்குரிய வாய்ப்புக் கிடைக்கக்கூடும்.

நமது நாட்டில் ஓலைச்சுவடிகளின் வழியாக சித்த மருத்துவம், நாடி சோதிடம் என சில செயற்பாடுகள் நடப்பதைக் காணமுடிகிறது. ஆனால், இவற்றையும் தாண்டி நமது மொழிக்கும் இனத்துக்கும் பயன்தரும் பல்வேறு கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர முடியும்.

இதற்கெல்லாம், மிகவும் அடிப்படையானது சுவடியியல் பற்றிய அறிவும் தெளிவும்தான். அந்த வகையில், ஓலைச்சுவடிகளின் தோற்றம் பற்றியும் அவற்றின் தொடர்ச்சியாக இருக்கக்கூடிய பயன்கள் பற்றியும் தெரிந்துகொள்வதற்கு மலேசியத் தமிழர்களாகிய நமக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அனைவரும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு ஓலைச்சுவடிகள் பற்றிய அரிய உண்மைகளை அறிந்து பயனடையலாம்.
நிகழ்ச்சிக்குத் திரண்டு வருக.. தமிழர் பெருமக்களே..!

No comments:

Blog Widget by LinkWithin