Friday, April 27, 2007

தமிழின் பொருள் - 1

தற்போது உலகத்தில் 6800 மொழிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மொழிகளுள் சில தொன்மையானவை. சில புதியவை. சிலவற்றுக்கு இலக்கிய வளம் உண்டு. சிலவற்றுக்கு எழுத்துகூட கிடையாது. சில மொழிகள் நெடுங்காலம் வாழக்கூடிய நலமான நிலையைப் பெற்றுள்ளன. ஒரு சில மொழிகள் அழிவின் விளிம்பில் நிலை தடுமாறிக்கொண்டிருக்கின்றன.

உலக மொழிகள் எதற்கும் இல்லாத தனிச்சிறப்புகள் தமிழ்மொழிக்கு உண்டு. கிரேக்க நாட்டு மொழி கிரேக்கம். இங்கிலாந்து நாட்டின் மொழி இங்கிலீசு(ஆங்கிலம்). கிரேக்கம், இங்கிலீசு என்ற சொற்கள் மொழியை மட்டுமே சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் தமிழ் என்ற சொல், மொழி என்பதோடு சேர்த்துப் பதினொரு பொருளைத் தருகிறது. இப்படிப்பட்ட சிறப்பு உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லவே இல்லை.

1. தமிழ் = இனிமை : சீவகசிந்தாமணி ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இதில் "தமிழ் தழீஇய சாயலவர்" என்ற தொடர் வருகிறது. இதற்கு இனிமை தழுவிய சாயலை உடையவர் என்று பொருள். இங்கே தமிழ் என்பது இனிமை என்ற பொருள் தருகிறது. "வண்டு தமிழ்ப் பாட்டிசைக்கும் தாமரையே" என்ற கம்பராமாயணப் பாட்டின் தொடரிலும் 'தமிழ்' இனிமை என்ற பொருளில் வந்துள்ளது.

2. தமிழ் = நீர்மை : "இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்" என்று பிங்கல நிகண்டு தெளிவாகக் கூறுகிறது. எனவே தமிழுக்கு நீர்மை என்ற பொருள் உள்ளது.

3. தமிழ் = அகப்பொருள் : பிரகந்தன் என்பவன் ஓர் ஆரிய அரசன். அவன் சங்க காலத்தில் வாழ்ந்தவன். அவன் தமிழரின் வாழ்வைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பினான். அவன் கபிலர் என்ற புலவரின் உதவியை நாடினான். அவனுக்காக புலவர் 'குறிஞ்சிப் பாட்டு' என்ற நூலைப் பாடினார். அது தமிழரின் இல்வாழ்வை - அகப்பொருளைப் பற்றிச் சொல்லும் நூல். அதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் "ஆரிய அரசன் பிரகந்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு" என்று குறித்துள்ளார். இங்குத் தமிழ் என்பதற்கு, 'அகப்பொருள்' என்ற பொருள் அமைகின்றது.

4. தமிழ் = வீரம் : சேரன் செங்குட்டுவன் வடநாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். கண்ணகி சிலைக்குக் கல் எடுத்து வருவதும் தமிழ் வேந்தர்களை இகழ்ந்து பேசிய ஆரிய அரசர்களைத் தண்டிப்பதும் அவனுடைய நோக்கமாகும். "அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கெனச் சீற்றம் கொண்டு இச்சேனை செல்வது" என்று அம்மன்னன் அறிவிக்கின்றான். இங்கே தமிழ் என்பது வீரம் என்று பொருள் பெறுகின்றது.
"வடதிசை மருங்கின் மன்னவ ரெல்லாம்
தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாமென" என்ற சிலப்பதிகாரத் தொடரிலும் 'தமிழ்' என்பது வீரம் என்னும் பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. (தொடரும்..)

No comments:

Blog Widget by LinkWithin