Friday, April 27, 2007

தமிழின் பொருள் - 2

உலக மொழிகளில் எதற்குமே இல்லாத அளவுக்குத் 'தமிழ்' மட்டும் பல்வேறு பொருள்களை உணர்த்தி நிற்கிறது. இக்கட்டுரையின் முதலாம் தொடரில் 'தமிழ்' என்பதற்கான நான்கு பொருள்களை இலக்கியச் சான்றுகளோடு கண்டோம். அதே அணுகுமுறையில் கட்டுரை மேலும் தொடர்கிறது.
5. தமிழ் = இறைமை : திருமந்திரம் தமிழரின் ஒப்பற்ற நூல்களுள் ஒன்று. அதில், "என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே" என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன. இங்கே தமிழ் என்பது கடவுள் தன்மை – இறைமை என்ற பொருளைத் தருகிறது.

6. தமிழ் = சைவ சமயம் : திருஞானசம்பந்தர் நாயன்மார்களில் ஒருவர். சைவ சமயத்திற்குப் புத்துயிர் தந்த மூவரில் ஒருவர். இவர் சமயத்தோடு தமிழையும் வளர்த்தார்; தமிழிசையையும் வளர்த்தார். இவரை "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்" என்று போற்றினார்கள். இங்கே தமிழ் என்பது 'சைவ சமயம்' என்ற பொருளைக் காட்டி நிற்கின்றது.

7. தமிழ் = படை வீரர் / மறவர் : தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், பாண்டிய பெருமன்னர்களுள் ஒருவன். அவன் தலையாலங்கானம் என்னும் இடத்தில் தன் பகைவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றான். அவனைக் குடபுலவியனார் என்ற புலவர் பாடினார். "தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து" என்று அப்புலவர் குறிப்பிடுகிறார். இதில், தமிழ் என்ற சொல் படை வீரர் / மறவர் என்ற பொருளைப் பெறுகின்றது.

8. தமிழ் = நாடு : கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி என்பவன் ஒரு பாண்டிய மன்னன். அவனை ஐயூர் முடவனார் என்ற புலவர் பாடியுள்ளார். "சினப்போர் வழுதி தண்டமிழ் பொதுஎனப் பொறாஅன்" (புறம்:51) என்று மன்னனைப் போற்றினார். "தமிழ் வரம்பறுத்த தண்புனல் நன்னாட்டு" என்று சிலப்பதிகாரப் பாடலொன்று இயம்புகிறது. "தண்டமிழ் வினைஞர்" (மணி:19-109) என்றொரு பாடல் உள்ளது. இங்கெல்லாம் வந்துள்ள தமிழ் என்ற சொல் நாட்டைக் குறிக்கிறது.

9. தமிழ் = வேந்தர் : சேரன் செங்குட்டுவன் காலத்தில் வடநாட்டு அரசர்களான கனக வியசர் தமிழ்நாட்டு வேந்தர்களை இகழ்ந்தனர். "தண்டமிழ் இகழந்த ஆரிய மன்னரின்" (சிலப்:28-153) என்று இதனை இளங்கோவடிகள் தம் நூலில் பதிவு செய்துள்ளார். இத்தொடரில் தமிழ் என்பது வேந்தரைக் குறிக்கின்றது.

10. தமிழ் = தமிழர் - தமிழ்நூல் : தமிழ் என்பது பொதுவாகத் தமிழரையும் தமிழ் நூல்களையும் குறிக்கும். (தமிழ் இலெக்சிகன் 3:1756).

இவ்வாறு தமிழ் என்ற சொல், மொழி, இனிமை, நீர்மை, அகப்பொருள், வீரம், இறைமை, சைவ சமயம், படைவீரர், மறவர், நாடு, வேந்தர், தமிழர், தமிழ்நூல் ஆகிய பல பொருள்களைத் தருகின்றது. உலகில் மொழியைக் குறிக்கும் எந்தச் சொல்லும் இத்துணைப் பொருள்கள் பெற்றிருக்கவில்லை. தமிழுக்கு இருக்கின்ற எண்ணற்ற சிறப்புகளுள் இதுவும் ஒன்றாகும்.
இத்துணைச் சிறப்பு வாய்ந்த மொழியைப் பெறுவதற்குத் தமிழர்கள் தவம் செய்திருக்க வேண்டும். எனவே, தாய் தமிழ்மொழியைப் போற்றி வாழ்வோம்.
மூலம்:தமிழும் தமிழரும்

No comments:

Blog Widget by LinkWithin