Sunday, January 25, 2009

தமிழின் வரலாறு - பாகம் 1

தமிழினத்தின் சிறப்பை அறிய வேண்டுமெனில் தமிழ் மொழியைப்பற்றி அறிதல் வேண்டும். மொழியின் இலக்கண கட்டமைப்பில் திகழக்கூடிய திகட்டாத இலக்கியங்களை அறிதல் நலம். இவைகளுக்கெல்லாம் தொடக்கமாகத் திகழும் தமிழ் வரிவடிவங்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது சிறப்பாகும்.

ஏனெனில் பிறிதொரு உதவி ஏதுமின்றி தமிழினம் தனக்காக, தானே முயன்று உருவாக்கிய மொழியே தமிழ். இத்தனித்துவமே தமிழினத்தின் சிறப்பு. இது குறித்து அறிய இதன் வரலாற்றை நான்கெனப் பகுத்து அதன் தோற்றத்தையும், தனித்துவத்தையும் விரிவாகப் பார்ப்போம். அவையாவன..

*மொழி வரலாறு
*இலக்கிய வரலாறு
*இன வரலாறு
*தமிழ் எழுத்து வரலாறு

*மொழியின் தோற்றம்

ஒரு அமைப்போ, சமுதாயமோ தன் கருத்துக்களை பரிமாறிடவும், ஒத்த கருத்தைப் பகிர்ந்து கொள்ளவும் அவசியம் தேவை மொழி. தமிழர்கள் பேசிய மொழி எக்காலத்தைச் சேர்ந்தது, என்கிற வினாவுக்கு அறிஞருலகம் தெளிவாகவே விடை தருகிறது.


அகழ்வு ஆய்விலும் பல இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள், பாறை செதுக்கல்களில் உள்ள ஆதாரங்கள் கிடைத்த காலம் வரலாற்றுக் காலமெனவும், சான்றுகள் இல்லாத பழமையான மக்கள் வசித்த இருப்பிடங்கள், அங்கு கண்ட சீரற்ற கருவிகளால் கற்காலம் அதாவது கல்வி அறிவு, சிந்திக்கும் திறனற்ற வளர்ச்சியுறா காலத்தை பழைய கற்காலம், புதிய கற்காலம் என பிரித்து வழங்கிடுவர்.

சிந்தனை வளர்ச்சியே நாகரிக காலத்தின் தொடக்கம், அத்துடன் வேட்டை கருவிகளை சீராக செப்பனிட்டுப் பயன்படுத்தத் தொடங்கிய போது ஏற்பட்டதுதான் மொழித் தோற்றத்தின் காலமாகும்.

இவ்வாறான மொழியின் தோற்றம் ஏற்பட பல்வேறு கட்டங்களை புதிய கற்காலம் கொண்டிருந்தது. ஒலிகளைக் கூர்மையாக அறிந்து, புரிந்து கொள்வது தொடக்கமாகும். பின்னர் புள்ளினங்கள், விலங்குகளின் ஓசை போன்றே தாமும் ஒலி எழுப்ப முயன்று ஒலியை வெளிப்படுத்தியது ஒரு கட்டம். இதனைக் கேட்பொலிக் காலம் என்பர்.

செவியால் கேட்ட ஒலிக்குத்தக்கவாறு தாம் பார்த்ததை, கேட்ட ஒலிகளை நினைவில் தேக்கி, சிந்தித்து மறுபடியும் அவற்றை கண்ட போதும், கேட்ட போதும் சக மனிதருக்கு சுட்டிக் காட்டும் அல்லது அந்த உணர்வைப் பகிர்ந்து கொள்ளும், பரிமாறிக் கொள்ளும் காலமே சுட்டொலிக் காலம் எனலாம்.

கேட்பொலியின் செழுமையும் சுட்டொலியின் பயனும் இணைந்த போது அழுத்தமான சைகைகள் வாயிலாக உணர்வுகளை வெளிப்படுத்தும் காலம் தோன்றியிருக்கலாம்.

கேட்பொலி, சுட்டொலி, சைகைகளுக்கு பின் ஒரே விதமான ஓசை நயம் அச் சமூகத்தில் பகிர்ந்திடும் போது ஓசைகள் ஒரு வடிவாகி ஒரு மொழியாய் தோன்றியது. தமிழும் இவ்வாறு தான் தோன்றியதாக மொழியியல் ஆய்வில் தன்னையே ஒப்படைத்த தேவநேயப் பாவாணர் அவர்கள் கருத்துரைக்கிறார்.

இலக்கியத் தோற்றம்

மனித மனங்களில் தோன்றும் கருத்துக்களின் பரிமாற்ற சாதனமே இலக்கிய பதிவுகள். இலக்கியம் என்பது எல்லோரும் அறியத்தக்க, அறியவேண்டிய ஒரு உண்மை போன்றதொரு கருத்து. அந்த கருத்தைச் சொல்பவரின் மேதைத் தன்மை, மேதைமையுடன் இணைந்த கற்பனை, கற்பனையை உருவகமாக்கும் ஒன்றைப் பற்றிய முழுமையான சேதி அறியும் ஆர்வம். இவைகளெல்லாம் ஒருங்கே சேர்ந்தால் தான் இலக்கியம் உருவாகும்.

இது போன்ற தன்மை கொண்ட ஏராளமான இலக்கியங்கள் வேறெந்த இயற்கை மொழியிலும் இந்தளவுக்குப் படைக்கப்படவில்லை. தமிழில்தான் உண்டு.

சங்க காலத்திற்கு முன்பே இலக்கியம் என்பது இருந்துள்ளது. அக்காலப்புலவோர் புனைந்த பல பாடல்கள் வாய் மொழியாக, வழிவழியாகக் கூறி இரசிக்கும் பண்பு மிகுந்திருந்தது. பின்னர் வாய்மொழி இலக்கிய காலத்தின் சீரிய மேம்பாடாக உருவானது பதிவு செய்து பாதுகாக்கும் ஏட்டிலக்கிய காலமாகும்.

ஏட்டிலக்கிய காலம் தொடங்கி பலநூறு ஆண்டிற்குப் பின் அறிவியல் மேம்பாட்டால் ஒரு சுவடி இலக்கியம் ஆயிரக்கணக்கான நூல் பிரதியாக மாறியது. இது இலக்கியப் பதிவு காலமாகும்.

இவ்வாறான இலக்கியப் பதிவின் போதுதான் மூல ஏட்டுச் சுவடிகள் பலவும் பதிப்பிக்கப்பட்டதுடன் மூல இலக்கியங்களுக்கு விளக்கவுரை, பதிப்புரை, பதவுரை என இலக்கியத் தளம் வாசிப்பிற்கு எளிதானது. தமிழின் சங்க இலக்கியம் அனைத்தும் செய்யுள் வடிவங்கள்.

இச் செய்யுள் வடிவ இலக்கியங்களுக்கு குறுகிய அடிகளைக் கொண்ட தனிப்பாடல்கள், நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட பாடல்கள், தொடர் நிலைச் செய்யுளாக வரும் காப்பியங்கள் எனப்பல வகையுள்ளது.

இச்செய்யுள்களை படைக்கும் புலவர்கள் அதற்கென வகுக்கப்பட்டுள்ள இலக்கண நெறிகளைக் கையாண்டுள்ளனர். அந்த இலக்கண நெறிகள் இன்றும் கையாளப்பட்டு மரபு செய்யுள்களில் பாடல்கள் புனைகின்றனர்.

விருந்தே தானும்புதுவது கிளந்த யாப்பின் மேற்றே
என தொல்காப்பியர் யாப்பு எனும் செய்யுள் படைப்புக்கு நெறிவகுக்கிறார். இதனால் எத்துறையாயினும் தமிழ் மொழியை அத்துறைக்கு ஏற்றவாறு பயன்படுத்திட இயல்கிறது.

இன வரலாறு, தமிழ் எழுத்து வரலாறு ஆகியவைப் பற்றி அடுத்தப் பகுதியில் விரைவில் வரும்...
  • தமிழின் வரலாறு - பாகம் 1
  • தமிழின் வரலாறு - பாகம் 2
நன்றி:கணியத்தமிழ்

1 comment:

தமிழ் said...

அடுத்த
அத்தியாயத்தை
ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்.

வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்

Blog Widget by LinkWithin