கணினி, இணையம், வலைப்பதிவு பற்றியெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாத காலம் அது. அறிமுகமே இல்லாத நண்பர் ஒருவரை எதிர்ப்பாரா விதமாகச் சந்தித்தேன்; எதிர்ப்பாராமல் ஆர்வம் உண்டானது; எதிர்ப்பாராமல் முயன்றேன்; எதிர்ப்பாராமல் வலைப்பதிவு உருவானது. இப்படி எதிர்ப்பாராமல் வலைப்பதிவு தொடங்கி இருந்தாலும், ஒவ்வொரு பதிவையும் திட்டமிட்டும், ஓர் இலக்கை முன்வைத்தும் எழுதி வருகின்றேன்.
14-5-2005ஆம் நாள் ‘வளர்தமிழ் விழா’ என்ற தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான ஒரு போட்டி நிகழ்ச்சியில் வாசுதேவன் இலெட்சுமணன் அவர்களைச் சந்தித்தேன். மலேசியாவில் வலைப்பதிவு எழுதத் தொடங்கிய முன்னோடி அவர் – என் வலைப்பதிவு வாழ்வுக்கு வழிகாட்டி அவர். தன்னுடைய ‘விவேகம்’ வலைப்பதிவு பற்றி கூறினார். அதுபோல மற்றவர்கள் குறிப்பாக, தமிழாசிரியர்கள் வலைப்பதிவு நடத்த முன்வர வேண்டும் என ஊக்கப்படுத்தினார். வலைப்பதிவு தொடங்கும் வழிமுறைகளை விளக்கிச் சொல்லி, எழுதியும் கொடுத்தார். அவருடைய பேச்சும், மலேசியாவில் தமிழை வளர்த்தெடுக்க விரும்பும் வேட்கையும் எனக்குப் பிடித்திருந்தன.
அன்று வீட்டுக்கு வந்து மதியம் தொடங்கி நள்ளிரவு வரை கணினியோடு போராடி வலைப்பதிவு தொடங்குவதற்கு முயன்றேன். சரியாக வராமல் பல முறை தோல்வி கண்டு – துவண்டு விழுந்து - மனம் தளராமல் முயன்று முயன்று இறுதியில் 15-5-2005 நள்ளிரவு மணி 12.20க்கு முதலாவது இடுகையைப் பதிவுசெய்தேன்.
இந்த ஐந்து ஆண்டுகளில் திருத்தமிழில் நான் எழுதியுள்ள பதிவுகளின் எண்ணிக்கை இன்றோடு மொத்தம் 230 ஆகும். தமிழ் மொழி, இனம், சமயம், பண்பாடு, வரலாறு, வாழ்வியல் என இன்னும் பல்வேறு கருப்பொருளில் பதிவுகள் எழுதியுள்ளேன்; இடுகைகள் இட்டுள்ளேன்.
என்னுடைய வலைப்பதிவை விடாமல் படித்து வருகின்ற நண்பர்கள், அன்பர்கள், வாசகர்கள் பலரை நான் நேரடியாக அறிவேன். சில பதிவுகளை வகுப்பறை கற்றல் கற்பித்தலில் பயன்படுத்திய ஆசிரிய நண்பர்கள், விரிவுரையாளர் பெருமக்கள் சிலரை இவ்வேளையில் நினைவுக்கூர்ந்து நன்றி சொல்ல விழைகிறேன். பல நிகழ்ச்சிகளில், கூட்டங்களில் நான் முகமறியாத பலர் என்னை எப்படியோ கண்டுபிடித்துக் கைகொடுத்துப் பாராட்டிய மணித்துளிகளில் மனம் நெகிழ்ந்து இருக்கிறேன்.
தமிழ்க் கல்வியாளனாக இருப்பதால் துறைசார்ந்த செய்திகளை அதிகமாக எழுதியிருக்கிறேன். கல்வித்துறை சார்ந்த ஏதேனும் ஒரு சிக்கலில் திருத்தமிழ் என்ன கருத்து அல்லது நிலைப்பாடு கொண்டிருக்கிறது என்பதைக் கவனித்துப் பார்த்து தங்களின் சொந்த நிலைப்பாட்டை முடிவுசெய்யும் நண்பர்களும் இருக்கிறார்கள் என்று அறிந்த நேரங்களில் நெஞ்சம் கொஞ்சம் நிமிர்ந்திருக்கிறேன்.
மலேசிய சூழலுக்கு ஏற்ப பல செய்திகளை – தகவல்களை – தெளிவுகளை – விளத்தங்களை வழங்கும் வலைப்பதிவாக ‘திருத்தமிழ்’ ஓரளவுக்கு அறியப்பட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. மலேசிய நாளிகை, இணையத்தளம் முதலிய ஊடகங்கள் திருத்தமிழ் செய்தியை எடுத்துப் போடுவதைக் காணும்போது பெருமிதம் எற்படும். இப்படி வலையுலக வாழ்க்கையில் மனத்தை வருடிய மகிழ்ச்சிகளும், நெருடிய நிகழ்ச்சிகளும் நிறையவே இருக்கின்றன.
என் திருத்தமிழ் பணிகளைப் பாராட்டி திருநெறி வலைப்பதிவரும் தமிழறிஞருமாகிய இரா.திருமாவளவன் அவர்கள் பின்வரும் பாவொன்றை பதிவிட்டு இருந்தார். அன்னாரின் அன்பினைப் பெற்றதில் பெருமையடைகிறேன்.
நற்குணன் என்னும் நற்றமிழ் நெஞ்சன்
முற்புகழ் திருத்தமிழ் முன்மையை உணர்ந்தான்
அற்ப அகத்தினர் கசடுகள் தகர்ப்பான்
எற்படும் கதிரொளி எழுச்சியைத் தந்தான்
என்றும் தமிழுக்குத் திருச்செல்வ மேலான்
நன்று செய்நெறி வலைத்தள வேலான்
பண்டு புகழ்சொல் மரபுகள் காப்பான்
நீண்டு அவன்புகழ் வாழிய! வாழிய!
கொஞ்ச காலமாக “சுப.ந” என்றே என்னைச் சொல்லி வருகின்றேன். என்னைச் சுட்டும்போதெல்லாம் “சுப.ந” எனக் குறிப்பிட்டு, இன்று அதனை நான் நேசத்தோடு பயன்படுத்தும் அளவுக்குச் செய்துவிட்டவர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள். இப்படியாக, என் வலைப்பதிவு வாழ்வில் நான் மிகவும் உய்த்துணர்ந்த நிமிடங்களும் நிகழ்வுகளும் பற்பல உண்டு.
இதற்கு நேர்மாறாக, என்னை எரிச்சல்படுத்திய நிகழ்வுகளும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக, தமிழ்மொழியைச் சிறுமைபடுத்தி; சின்னபின்னப்படுத்தி எழுதும் பதிவுகளைக் கண்டு மனம் வாடியதுண்டு. இப்படிச் செய்பவர்கள் உண்மையிலேயே தமிழர்களா? அல்லது தமிழுருவில் இருந்துகொண்டு தமிழர்களின் தாலிகளை அறுப்பவர்களா? என்று தேடியதுண்டு. வரலாற்றுக் காலந்தொட்டு தமிழுக்கு எதிராக நாசவேலைகள் புரிந்து, தமிழின் மீது நம்பிக்கை இன்மையைப் புரையோடச் செய்யும் நச்சுப் புழுக்களாகவே இவர்களை மதிப்பதுண்டு. “தமிழே தமிழர்க்கு உயிராம்; அந்தத் தமிழரே தமிழுக்குத் தூக்குக் கயிறாம்” என மலேசியப் பாவலர் ஒருவர் பாடிய வரிகள் இவர்களை நினைக்குங்கால் நெஞ்சத்தைத் தட்டுவதுண்டு.
இந்த நிலைமையை மாற்றுவது என்பது கல்லிலே நார் உறிக்கும் கடுமையான வேலைதான் என உணர்ந்திருக்கிறேன். இருப்பினும் ஒரு கை பார்த்திடலாம்; தமிழின் இடரினில் ஒரு துளி தீர்த்திடலாம் என்கின்ற தன்னம்பிக்கையும் தமிழ்நம்பிக்கையும் உள்ளத்தில் கொண்டிருக்கிறேன். ஆகவே,
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்;
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே என்ற திருமூலர் பெருமானின் அடியொற்றி,
எனக்குத் தெரிந்தது சொல்வேன்;
ஊருக்கு நல்லது சொல்வேன்.
என் கடன் பணிசெய்து கிடப்பதொன்றே என உளமாற எண்ணி ‘திருத்தமிழ்’ எழுதுகிறேன்; நிறைவான மனத்தோடு ‘திருத்தமிழ்’ செய்கிறேன்.
நனிநன்றியுடன்;
3 comments:
வாழ்த்துக்கள்......
தொடருங்கள்
தங்களின் பல பதிவுகளை அடியேனும் வகுப்பறையில் பயன்படுத்தி வருவதால் எங்களைப் போன்றவர்கள்தாம் தங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
தொடரட்டும் தங்கள் தமிழ்ச் சேவை.
ந.தமிழ்வாணன்,
ஜோகூர்.
Post a Comment