
அதற்கு முன், எழுத்துச் சீர்திருத்தம் குறித்து முழு விவரத்தை பதிவர் நண்பர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இது பற்றி இதுவரை நிகழ்ந்துள்ள வளர்ச்சிகளையும், நடந்துள்ள விவாதங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். எழுத்துச் சீர்மைக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக, தொடர்ந்து படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ் வரிவடிவத்தில் இ, ஈ, உ, ஊ ஆகிய நான்கு வரிசை எழுத்துகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது. இந்தச் சீர்த்திருத்தம் நடைமுறைக்கு வந்தால் 72 எழுத்துகளின் வடிவத்தை மாற்றி அமைக்க வேண்டியிருக்கும். எழுத்துச் சீர்மை தொடர்பாக மாலை மலர் இணைய இதழில் வந்த செய்தியைப் படித்துப் பார்க்கவும்.
மாலை மலர் செய்தி:- http://thirutamil.blogspot.com/2010/01/blog-post_08.html
இந்தச் சீர்திருத்தம் நடைமுறைக்கு, தமிழ்மொழியில் 59% மாற்றம் ஏற்படும். தமிழ்மொழி பெரும் சிதைவுக்கு உள்ளாகும்; சீரழிவு ஏற்படும். தமிழ்க் கருவூலங்களாக இருக்கும் ஆயிரமாயிரம் நூல்களும் ஆவணக்களும் படிக்க முடியாமல் போகும். அல்லது பெருமளவு காலத்தையும் பணத்தையும் செலவிட்டு அவற்றை மறுபதிப்பு செய்யும் நிலை வரும். இது இயலாத சூழலில் தமிழ் ஒரு கற்கால மொழிபோல, கல்வெட்டு மொழிபோல மாறிப்போகும். இன்று கணினி – இணையத்தில் தமிழ்மொழி அடைந்துள்ள உச்சங்கள் அனைத்தும் ஒருநொடியில் சரிந்து போகும். தமிழ் இணையத்தளங்களும் ஆயிரக்கணக்கில் வலைப்பதிவுகளும் முடங்குப் போகும்.
ஆனால், எழுத்துச் சீர்மையால் ஏற்படப்போகும் எதிர்மறையான விளைவுகளை பற்றி சிறிதும் ஆராயாமல், சிலர் இதனை வலியுறுத்தியும் மிகத் தீவிரமாக பரப்புரை செய்தும் வருகின்றனர். ஏன் எழுத்துச் சீர்மை தேவை என்பதற்கு அவர்கள் கூறும் சில 'சாக்குகள்' பின்வருமாறு:-
1.தமிழை எளிதாகப் படிக்கலாம்
2.தமிழை விரைந்து கற்கலாம்
3.தமிழில் உள்ள எழுத்துக் குறியீடுகளைக் குறைக்கலாம்
4.வெளிநாட்டுகளில் வாழ்வும் தமிழ்க் குழந்தைகள் தமிழை விரும்பிப் படித்துவிடுவர்.
5.உலகில் மாற்றம் ஒன்றே நிலையானது என்பதால் தமிழ் காலத்திற்கு ஏற்ப மாறவேண்டும்.
இதில் வேடிக்கை என்னவெனில் மேலே சொல்லப்பட்ட காரணங்கள் எதிலும் துளிகூட உண்மையோ அல்லது அடிப்படையோ இல்லை. மேலும், இவை அனைத்தும் ஆய்வுநோக்கு கொண்டவையாகவும் இல்லை. அதுமட்டுமல்லாமல், இன்றைய கணினி தொழில்நுட்பக் காலத்தில் இவை அறிவுக்குப் பொருந்தமுடையதாகவும் இல்லை; ஏரணமுடையதாகவும் (Logic) இல்லை.
ஆகவேதான், இ, ஈ, உ, ஊ ஆகிய எழுத்துகளைச் சீரமைக்க வேண்டும் என்ற முன்மொழி,வானது உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள், பற்றாளர்கள், தமிழ்க் கணிஞர்கள், தொழில்நுட்பர்கள் ஆகியோரின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. பலரும் இதனை எதிர்க்கின்றனர்; கண்டிக்கின்றனர். மதுரை இரா.இளங்குமரனார், தமிழண்ணல், பொற்கோ, மறைமலை இலக்குவனார், பேரா.இராமகி முதலியோர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அவற்றுள் சில கீழே தரப்பட்டுள்ளன:-
1.எழுத்துச் சீர்மை தேவையற்ற வேலை - மதுரை.இரா.இளங்குமரனார்
2.எழுத்துச் சீர்மை: மலேசியாவில் 4 தீர்மானங்கள்: கண்டனக் கூட்டம்
3.தமிழை மீட்பதும் காப்பதும்தான் முதல் வேலை; சீர்மை என்ற பெயரில் சிடைப்பதல்ல:- மலேசிய நாளிதழ் செய்தி
4.கண்டனக் கூட்டம்:-எழுத்துச் சீர்திருத்தம் தேவையா? விளக்கக் கூட்டம்
தவிர, 16-5-2010ஆம் நாள் புதுச்சேரியில் எழுத்துச் சீர்மையைக் கண்டித்து மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கண்டனக் கூட்டம்:- தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு
கீழே உள்ள சுட்டிகளைச் சொடுக்கி எழுத்துச் சீர்மைக்கு எதிரான கண்டனங்களையும் விரிவான விளக்கங்களையும் படிக்கவும்
1.சுப.நற்குணன்:- தமிழ் எழுத்து மாற்றம்: சீர்திருத்தமா? சீரழிப்பா? பகுதி 1, பகுதி 2
2.முனைவர் மு.இளங்கோவன்:- தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா?
3.நாக.இளங்கோவன்:- எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் (இது 12 பகுதிகளைக் கொண்டது. அனைத்தும் படிக்க இங்கு சொடுக்கவும்)
4.பேராசிரியர் செல்வா:- எழுத்துச் சீர்திருத்தம் எனும் சீரழிவுப் போக்கு
5.பேராசிரியர் சந்திரசேகரன் பெரியண்ணன்:- Tamil Script Reform: Its Vacuity Next to The Chinese Script
6.மணி.மு.மணிவண்ணன்: எழுத்துச் சீர்திருத்தம் - ஒரு கோணல் பார்வை
7.ரவிசங்கர்:- எழுத்துச் சீர்திருத்தம்
8.செந்தழல் ரவி:- டைம் மிசினும் எழுத்துச் சீர்திருத்தமும்
எழுத்துச் சீர்மையால் தமிழுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி நிலையை நன்கு ஆராய்ந்து பார்த்து தமிழ்மணம் திரட்டி தன்னுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி இருந்தது. எழுத்துச் சீர்மை தேவையில்லை எனும் தன்னுடைய நிலைப்பாட்டைத் தமிழ்மணம் திரட்டி உறுதியாகவும் வெளிப்படையாகவும் அறிவித்துள்ளது. கீழ்க்கண்ட சுட்டியில் அதனைப் படிக்கலாம். தமிழ்மணத்தின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல கருத்துகள் பின்னூட்டங்களாக இடம்பெற்றுள்ளதைக் கண்டிப்பாக படிக்கவும்.
தமிழ்மணம் நிலைப்பாடு:- http://blog.thamizmanam.com/archives/202
கணினி–இணைய நிரலிகளை எழுதுவதற்கும் இன்னபிற செயற்பாடுகளுக்கும் எழுத்துச் சீர்மை தேவை என்ற வாதங்களை அரிஞர் பெருமக்கள் பலர் உறுதியான சான்றுகளோடு முறித்துப்போட்டு தெளிவுகளைச் சொல்லியிருப்பதைப் படித்து உணர்ந்துகொள்வது நல்லது.
எழுத்துச் சீர்மையால் ஏற்படவுள்ள மாற்றங்களையும் அதனுடைய மறுபக்கங்களையும் விவாதிக்கும் நோக்கத்தில் “தமிழ் எழுத்துச் சீர்மை” எனும் புதிய வலைப்பதிவு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்த பல்வேறு கருத்தாடல்கள் அதில் படிக்கக் கிடைக்கும். அவற்றையும் ஒரு ஓட்டமாக நோட்டமிடவும்.
தமிழ் எழுத்துச் சீர்மை: மாற்றமும் மறுபக்கமும் வலைப்பதிவு
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
நனிநன்றியுடன்:-
5 comments:
அன்புடையீர்,
எழுத்துச் சீர்மை தொடர்பான உங்களின் கட்டுரை தெவையான நேரத்தில் தெளிவான கருத்துக்களைத் தெரிவிக்கிறது. நன்றி.
தமிழ் எழுத்துச் சீர்மை இப்போது இந்தக் கால கட்டத்தில் தேவையற்றது. மக்களைக் குழப்பத்தில் தள்ளும் வழி. தமிழ் எழுத்தை மாற்ற விரும்புவோர் தங்களீன் வீண் பிடிவாத்தை விடுவார் களாக.
அன்புடன் ராதாகிருஷ்ணன் மே 8, 2010
தமிழ் மொழியில் எழுத்துச் சீர் திருத்ததை தன்னிச்சையாக தமிழ்நாடு அரசு செய்ய முடியுமா?
எல்லா இந்திய மொழிகளும் தேவநாகிரி எழுத்தில் எழுதப்பட வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள் (http://www.indianexpress.com/news/All-Indian-languages-should-adopt-Devnagari-script--Da-Bhi/611785). அதன் ஒரு படியாக இது இருந்து விட வாய்ப்பு உள்ளது.
இது வரை எழுதப்பட்ட, பதிக்கப்பட்டவை எல்லாம் வாசிக்க முடியாதாக ஆக்கிவிடும் அவலத்தை எளிமையாக எடுத்துவிடலாகாது.
@திருத்தமிழ் அன்பர் ராதாகிருஷ்ணன்,
தங்கள் வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி.
@திருத்தமிழ் அன்பர் நற்கீரன்,
எழுத்துச் சீர்திருத்தத்தால் ஏற்படப் போகும் விளைவுகளை இன்னும் அணுக்கமாக ஆய்வு செய்து நடுநிலையோடு அறிவிக்க வேண்டும்.
ஒருதலை சார்பாக செயல்பட்டு - ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி புறக்கதவு வழியாக இதனைச் செய்துவிட நினைப்பது வரலாற்றுப் பிழையாகப் போய் முடியும்.
தமிழுக்கு அயலான் செய்யும் தீங்கு எள் மூக்கு அளவுதான். ஆனால், தமிழனே செய்யும் தீங்குகள் பரங்கி அளவுக்குப் பெரிதாக உள்ளது.
தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம்,
எழுத்துச் சீர்மை தொடர்பான தங்களின் கட்டுரை காலத்திற்கேற்ற ஒன்று. தமிழ் இனம்,மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் மீட்ட இயலாத அளவிற்கு வெகுதூரம் பயணித்துவிட்ட நம் தமிழ் மக்களின் அறியாமையை தட்டியெழுப்ப பல காரியங்களைச் செய்யவேண்டி உள்ளது. இதை விடுத்து, “போகப் போகும்” காலத்தில் தமிழைக்காக்கின்றேன் என்று பெயர் பதிக்கத் துடிக்கும் அந்தத் “தமிழ் செம்மொழி மாநாட்டு” ஏற்பாட்டாளர்கள் கண்டிப்பாக இதை உணர்ந்தே ஆகவேண்டும்.
இவர்களது இந்த மாற்றம் காணப்படுவதற்கு முன்னதாக இது அறிவுபூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் ஆய்வுசெய்யப்பட வேண்டும்.
இதுவரை நூல்களாகவும், பதிவுகளாகவும் அமைந்துவிட்ட தமிழின் நிலை என்ன?
இதை விடுத்து.. உலக அளவில் தமிழையும் தமிழ் இனத்தையும் மேம்படுத்த செய்யத்தக்க காரியங்களையும், தமிழ் இனத்தை மீட்டெடுக்கவும், காக்கவும் செய்யவேண்டிய காரியங்கள்தான் என்ன என்பதையும் கண்டறியவல்லவா ஆய்வு மாநாடு நடத்தவேண்டும்..
சிந்திப்பார்களா....
நன்றி.
தமிழ்க்குமரன்,
கோல கெட்டில்,
கடாரம்.
Post a Comment