
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
எங்கோ ஒரு மூலையிலோ
ஏழை வயிற்றினிலோ
அங்கு நீயும் பிறக்காமல்
இங்கு வந்து பிறந்தாயே
என் ஈழ மகனே ..
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
நீ தூங்க நான் பாடும்
தாலாட்டல்ல இது
என் செல்ல மகனே
தாலாட்டுக்குக் கேட்டுத் தூங்கும்
தலையெழுத்தும் நமக்கில்லை
என் செல்ல மகனே ..
பாட்டின் வழி
நான் ஊட்டும் பாசமடா
தாய்மண் பாசமடா
என் செல்ல மகனே
நாளை இங்கு தமிழ் வாழ
தூக்கம் கொள்ளாது போராடும்
துணிச்சல் வேணுமடா
என் செல்ல மகனே ..
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
நேற்றுனக்கு தொட்டில் கட்டிய
வேப்பமரம் இப்போதில்லையே
என் செல்ல மகனே
சமாதிக்குப் பறித்துப்போட்ட
பூக்கள் வாடும்முன்னே
நாம் கூட சமாதியாகலாம்
என் செல்ல மகனே ..
சிந்திய நம் குருதியால்
இந்தியப் பெருங்கடல்
சிவந்தது என் செல்ல மகனே
மார்பினில் குண்டு தாங்கி
மண்ணில் உரமான
மாவீரனின் வாரிசு நீ
என் செல்ல மகனே ..
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
மண்ணைக் கரைத்துதான்
சேனை வைத்தான் உன்
மாமன்காரன்
என் செல்ல மகனே
ஈழக்குருதி சிந்திய
யாழ்மண்ணில் செய்த
பொம்மைதான் உன் கையிலிருக்கு
என் செல்ல மகனே ..
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
நாளைய சூரியன்
நமக்காகத்தான் என் செல்ல மகனே
நம்பிக்கையோடு போராடுவோம்
என் செல்ல மகனே ..
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
-உழவன்
3 comments:
இனி நான் இங்கு உறங்க மாட்டேன் என் தாயே!
உன் தாலாட்டு நான் கேட்டு
இங்கு நான் உறங்குவேனா என் தாயே!
உன் கனவை நான் நினைவாக்குவேன் என் தாயே!
இதுதான் என் லட்சியம்..
அதுவரை எனக்கு உறக்கம் இல்லை என் தாயே!
தாய்பால் குடிக்கும் போதே உன் சோகத்தை உணர்ந்தேன் என் தாயே!
இப்பொழுது உன் தாலாட்டின் வழி அதை புரிந்துக்கொண்டேன் என் தாயே!
உன்னை காக்க மறந்தாலும்...
என் தாய்நாடான ஈழத்தைக் காப்பேன் என் தாயே!
உன் தாலாட்டு கேட்டு என் உணர்ச்சியை காட்டினேன் ...
ஆனால், பசியில் அழுகிறேன் என்று நினைத்தாயே என் தாயே!
நாளை நாம் இறந்தாலும்..
என் ஈழத் தமிழர்களுக்காக இறந்தேன்
என்ற பெருமை எனக்குதான் என் தாயே..
விடிவு கிடைக்கும் வரை போராடுவோம்..
இது உன் மேல் ஆணை என் தாயே!
-தமிழன்-
இப்படி ஒரு தாலாட்டை நான் இதுவரை படித்ததில்லை!
உண்மை இலக்கியம் ஆனது.
அன்புடன்,
தேவமைந்தன்
நல்ல தமிழ் உணர்வுள்ள தாலாட்டு.இனி பாடுவோம் நம் பிள்ளைகளுக்கு தமிழ் தாழாட்டு.
அன்புடன்,
ஆதிரையன்.
Post a Comment