Thursday, February 05, 2009

"ஈழப்போரை உடனே நிறுத்துக" போப்பாண்டவர் வேண்டுகை


இலங்கையின் வடபகுதியில் சிறிலங்கா அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துமாறு கத்தோலிக்க பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ற் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வத்திக்கானில் நேற்று புதன்கிழமை (4.2.2009) நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பு நிகழ்வின் பின்னர் பாப்பரசர் கூறியதாவது:

சிறிலங்கா அரச படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஆயுதப் போரை நிறுத்தி சமாதானத்தை உருவாக்க முன்வர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

மோசமடைந்து செல்லும் மனித அவலங்களும், கொல்லப்படும் பொதுமக்களின் தொகையும், எம்மை இவ்வாறு கோருவதற்கு அழுத்தம் கொடுத்துள்ளது.

இரு தரப்பும், மனிதத்தையும் மனிதாபிமான சட்ட விதிகளையும் கருத்தில் கொள்வதுடன் பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்தையும் உறுதி செய்வது அவசியம்.

பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் அவசிய உணவு மற்றும் மருத்துவ வசதிகளை அனுமதிப்பதும், இரு தரப்பினதும் கடமை.

மிக அருமையான அந்த நாட்டில், அமைதியும் புரிந்துணர்வும் உருவாகுவதற்கு, கத்தோலிக்கர் உட்பட அனைத்து மதத்தினராலும் வணங்கப்படும் தூய மடு மாதா வழியமைக்க வேண்டும் என ஆசிர்வதிக்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Blog Widget by LinkWithin