மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்விக் கொண்டாட்டம் தொடர்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் வரிசையாக நடைபெறுகின்றன. இதன்வழி தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் கொண்டாட்டம் கலைகட்டத் தொடங்கிவிட்டது.
இதன் தொடர்பில் அக்தோபர் 4 முதல் 7 வரையில் நடுமண்டலத் தமிழாசிரியர் கருத்தரங்கம் நடைபெறுகிறது. கோலாலம்பூரில் உள்ள கிரெண்ட் கொன்தினெந்தல் விடுதியில் நடைபெறும் இக்கருத்தரங்கத்தில் சிலாங்கூர். கூட்டரசு வளாகம், புத்ரா ஜெயா, கிளந்தான், பகாங்கு ஆகிய ஊர்களைச் சேர்ந்த 150 தமிழாசிரியர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழ்ப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்ப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களாவர். அதேவேளையில் தேசியப் பள்ளியில் பணியாற்றும் தமிழ்மொழி ஆசிரியர்கள் சிலரும் இதில் அடங்குவர்.
கடந்த அக்தோபர் 4ஆம் நாள் செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்தக் கருத்தரங்கத்தில் முதன்மை அங்கமாக மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முகமை அமைப்பாளர் திரு.சு.பாஸ்கரன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது.
![]() |
திரு.சு.பாஸ்கரன் அவர்கள் |
அவர்தம் உரையில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகள் கொண்டாட்டம் பற்றியும் அதன் தேவைகள் பற்றியும் விரிவாகப் பேசினார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களையும் விளக்கிக் காட்டினார். இந்த நாட்டில் தமிழ்மொழியும் தமிழ்க்கல்வியும் இன்றுவரையில் நின்று நிலைத்து வருவதற்கு நமது முன்னோர்கள் ஆற்றிய பங்களிப்புகளை உள்ளத்து உணர்வோடு முன்வைத்தார். மேலும், இன்றைய சூழலுக்கு ஏற்ப தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் அடைத்திருக்கும் வளர்ச்சியையும் முன்னேற்றங்களையும் தொட்டு அவர் பேசியது எல்லாருடைய கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்தது.
இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மலேசியாவில் தமிழ்க்கல்வி மிக உயரமான இடத்தை அடைந்துள்ளது. தமிழ்ப்பள்ளிகள் சிறந்த கல்வி நிலையங்களாக மட்டுமின்றி நமது இனத்தின் பண்பாட்டு நடுவங்களாகவும் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன என்றார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தேசிய நிலையிலும் உலக நிலையிலும் பல்வேறு சாதனைகள் படைத்து வருவதை செய்திச் சான்றுகளோடும் பட ஆதாரங்களோடும் படைத்தார். எனவே, தமிழ் மக்களின் முதல் தேர்வாகத் தமிழ்ப்பள்ளிகள் திகழ வேண்டும். அதற்கு தமிழாசிரியர் குமுகாயம் மிகவும் பங்காற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தமிழாசிரியர்கள் இந்த நாட்டில் தமிழ் மொழியையும், இலக்கியத்தையும், கலை, பண்பாட்டையும் வளர்த்தெடுக்கக் கூடிய மாபெரும் ஆற்றல் படைத்தவர்கள். பெரும்பாலான ஆசிரியர்கள் மொழி, இன, பண்பாட்டு உணர்வோடும் பற்றோடும் பணியாற்றுகிறார்கள். இருப்பினும் ஒரு சிலரின் மெத்தனமான போக்கினால் ஒட்டுமொத்த தமிழாசிரியர்களுக்கு இழுக்கு வந்து சேர்கிறது. அதனைத் துடைத்தொழிக்க உணர்வுள்ள ஆசிரியர்கள் மேலும் துடிப்போடும் குமுகாய உணர்வோடும் செயல்பட வேண்டும். குறிப்பாக இளம் ஆசிரியர்கள் தமிழ்கல்வியை உலகத் தரத்திற்கு உயர்த்த பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
![]() |
திரு.ந.பச்சைபாலன் |
![]() |
திரு.முகிலன் முருகன் |
அடுத்துவரும் 2 நாட்களில் கற்றல் கற்பித்தல், 21ஆம் நூற்றாண்டுக் கல்வி, தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், இணையக் கல்வி, உயர்நிலைச் சிந்தனைத் திறன் முதலான தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெறும்.
இதற்கிடையில், துணைக் கல்வி அமைச்சர் டத்தோ கமலநாதன் அவர்கள் இந்தக் கருத்தரங்கத்திற்கு வருகை மேற்கொண்டு அதிகாரப்படியாகத் தொடக்கி வைப்பார்.

மலேசியாவில் தமிழ்க்கல்வியை மேலும் செழிக்கச் செய்வதற்கு இப்பொழுது முன்னெடுத்து நடத்தப்படும் தமிழ்க்கல்வி 200 ஆண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பெரிதும் உதவும் என்பதே மலேசியத் தமிழர்களின் நம்பிகையாக இருக்கின்றது.
#தமிழ்க்கல்வி200ஆண்டு:- மேலும் செய்திகள்..
#தமிழ்க்கல்வி200ஆண்டு:- மேலும் செய்திகள்..
@சுப.நற்குணன்
No comments:
Post a Comment