Thursday, December 18, 2008

அறிவியல் கணிதம்:- ஏழு தெரிவுகளில் எது முடிவு?


அறிவியல், கணிதம் ஆகிய இரண்டு பாடங்களின் கற்றல் கற்பித்தலை நடத்துவதற்கு ஏழு அணுகுமுறைகள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

[பட விளக்கம்:‍- அறிவியல் கணிதப் பாட வட்டமேசை மாநாட்டில் துணை கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ வீ கா சியோங், தலைமை கல்வி இயக்குநர் டத்தோ அலிமுடின்.]


மலேசியத் தொடக்கப் பள்ளிகளில் அறிவியல் - கணிதப் பாடமொழிச் சிக்கல் நாட்டு மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டுத் தொடங்கி அறிவியல் – கணிதப் பாடக் கற்றல் கற்பித்தல் ஆங்கிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதனை மீண்டும் தாய்மொழிக்கே மாற்றவேண்டும் என்ற குரல்களும் கோரிக்கைகளும் தற்போது உரக்க ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சிக்கலுக்குச் சரியான தீர்வினைக் காணும் பொருட்டு, மலேசியக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த 16.12.2008ஆம் நாள் வட்டமேசை மாநாடு நடைபெற்றது. இவ்வகை கலந்தாய்வுக் கூட்டம் ஏற்கனவே நான்கு முறைகள் நடைபெற்று, இப்போது இறுதிக்கட்டக் கூட்டமாக இது அமைந்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் துணை கல்வி அமைச்சர், தலைமைக் கல்வி இயக்குநர், கல்வித்துறை உயர் அதிகாரிகள், உள்நாட்டு வெளிநாட்டு கல்வியியல் ஆய்வாளர்கள், தேசியப் பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்று நாடே மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தது. ஆனால், இந்த வட்டமேசை மாநாட்டில் இறுதிமுடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இருந்தாலும், அறிவியல் – கணிதப் பாடக் கற்றல் கற்பித்தல் தொடர்பில் 7 அணுகுமுறைகள் அல்லது தெரிவுகள் இந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளன.

அந்த 7 தெரிவுகள் பின்வருமாறு:-

தெரிவு 1:- தற்போது இருக்கும் *PPSMI எனப்படும் அணுகுமுறையை நிலைநிறுத்துதல். (*PPSMI: Pengajaran dan Pembelajaran Sains dan Matematik dalam Bahasa Inggeris – ஆங்கிலமொழியில் அறிவியல் கணிதப் பாடக் கற்றல் கற்பித்தல்)

தெரிவு 2:- அறிவியல் கணிதப் பாடங்களைத் தொடக்கப் பள்ளிகளில் மலாய் அல்லது தாய்மொழியில் கற்பித்தல்; இடைநிலைப்பள்ளிகளில் ஆங்கிலத்தில் கற்பிக்கும் (PPSMI) திட்டத்தைத் தொடருதல்.

தெரிவு 3:- நான்காம் ஆண்டு (4ஆம் வகுப்பு) முதற்கொண்டு இடைநிலைப் பள்ளி வரையில் அறிவியல் கணிதப் பாடங்களை முழுமையாக ஆங்கிலத்தில் கற்பித்தல்.

தெரிவு 4:- தொடக்கப் பள்ளிகளிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் முழுமையாக மலாய் அல்லது தாய்மொழியில் பயிற்றுவித்தல்.

தெரிவு 5:- அறிவியல் கணிதப் பாடங்களை எந்த மொழியில் பயிற்றுவிப்பது என்பதை அந்தந்தப் பள்ளிகளே முடிவு செய்தல்.

தெரிவு 6:- முதலாம் ஆண்டுமுதல் மூன்றாம் ஆண்டு வரை மலாய் அல்லது தாய்மொழியில் கற்பித்தல்; நான்காம் ஆண்டுமுதல் ஆறாம் ஆண்டு வரை இருமொழிகளில் (ஆங்கிலம் - தாய்மொழி) கற்பித்தல்; இடைநிலைப் பள்ளிகளில் முழுமையாக ஆங்கிலத்தில் கற்பித்தல்.

தெரிவு 7:- முதலாம் ஆண்டுமுதல் மூன்றாம் ஆண்டு வரை அறிவியல் பாடத்தை தவிர்த்துவிட்டு, மற்றுள்ள பாடங்களின் வாயிலாக அறிவியலை இணைத்துக் கற்பித்தல்.

ஏழு தெரிவுகளில் எது முடிவு?

இந்த 7 தெரிவுகள் அல்லது அணுகுமுறைகள் மலேசியக் கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ இசாமுடின் துன் உசேன் வழியாக அமைச்சரவைக்குக் கொண்டுசெல்லப்பட உள்ளன. அதன்பிறகு, அறிவியல் கணிதப் பற்றிய இறுதி முடிவு செய்யப்படும். அதுவரையில், தற்போது நடப்பில் இருக்கும் திட்டம் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப்பள்ளிகளின் நிலைப்பாடு என்ன?

இதற்கிடையில், தமிழ்ப்பள்ளிகளைப் பொறுத்தவரையில் மேற்கண்ட 7 தெரிவுகளில் எது சிறப்பாக இருக்கும் என்பதை ஆழமாக ஆராய்ந்து பார்க்கவேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

தற்போது, நாளிதழ்களிலும் மற்ற ஊடகங்களிலும் வருகின்ற செய்திகளின் அடிப்படையில், 'தெரிவு 2' அல்லது 'தெரிவு 6' பெரும்பான்மைத் தமிழர்களின் முதன்மைத் தேர்வாக அமையக்கூடும் என்பதைக் கணிக்க முடிகிறது.

காரணம், இவ்விரு தெரிவுகள் மட்டுமே தமிழ்ப்பள்ளி – தமிழ்க்கல்வி ஆகியவற்றுக்கு முழுமையான பாதுகாப்பையும் உறுதிபாட்டையும் வழங்குவதாக அமைந்திருக்கின்றன எனலாம்.

எது எப்படி இருப்பினும், மாணவர்களின் கல்வி முன்னேற்றம் என்ற ஒன்றை மட்டும் முன்படுத்திச் சிந்திக்காமல், தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம், தமிழ்க்கல்வியின் வளர்ச்சி, தமிழ்மொழியின் வாழ்வு, சமுதாய நலன், பொருளியல் மேம்பாடு, வேலை வாய்ப்பு, முதலான பல்வேறு கோணங்களிலும் ஆழ்ந்து சிந்தித்து, நீண்டகால நன்மையை அளிக்கக்கூடிய வகையில் முடிவெடுப்பதே சாலச் சிறந்தது.

பி.கு:‍‍ இந்தச் செய்தியை மலேசியா இன்று வலைமனையில் காண்க.

2 comments:

கோவி.மதிவரன் said...

தெரிவு 2 மிகப் பொருத்தமான முடிவாக இருக்கும். தொடக்கப்பள்ளிகளில் தாய்மொழியில் கற்பித்தல் சிறப்பு. இடைநிலைப்பள்ளிகளில் வேண்டுமானால் ஆங்கிலத்தில் கற்பிக்கலாம்.

Anonymous said...

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பர். காலங் கடந்த சிந்தனை மீட்சி..!
ஆறாண்டுகள் கடந்து போனதுதான் மிச்சம்.

கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களைத் தாய்மொழியில் கற்பித்தலே சிறப்பு.

வட்டமேசை மாநாடு திட்டமில்லா மாநாடாக அமைந்துவிடல் கூடாது.

தெரிவு "இரண்டே" சிறப்பான விவேகமான முடிவாக இருக்கும்.

நம்பிக்கையுடன்,
சந்திரன் இரத்தினம்,
Rawang, Selangor Darul Ehsan.

Blog Widget by LinkWithin