Tuesday, November 18, 2008

கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார்



இன்று 18-11-2008, இலக்கியச் செம்மல் கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள். தமிழ்கூறு நல்லுலகை விட்டு அவர் பிரிந்துச் சென்று 72 ஆண்டுகள் ஆகின்றன. அவருடைய நினைவாக இக்கட்டுரை பதிவாகிறது.


**************
செக்கிழுத்தச் செம்மல் என்று புகழப்படும் வ.உ.சி எனும் சுருக்கப் பெயருக்குச் சொந்தக்காரர் வ.உ.சிதம்பரனார் உண்மையில் தமிழ் இலக்கியத்திலும் பெருஞ்செம்மல்.

தடைகளைக் கண்டு முடங்கி விடாமல் வீறுகொண்ட மனத்தினராய் கடைசி வரை வாழ்ந்த வ.உ.சியின் வாழ்க்கை இன்றையத் தமிழர்களுக்கு நல்ல பாடமாகும்.

திருநெல்வேலி ஒட்டப் பிடாரத்தில் உலகநாதர் பரமாயி அம்மையார் வாழ்விணையருக்கு 5-9-1872இல் மூத்த மகனாகப் பிறந்தார் சிதம்பரானார். 1894-இலேயே வழக்கறிஞராகத் தம்முடைய வாழ்க்கையைத் தொடங்கினார்.

இந்தியாவுக்குத் தொழில்புரிய வந்த ஆங்கிலேயன் நாட்டையே ஆள்வதற்கு முனைந்துவிட்ட காலம் அது. அப்போது ஆங்கிலேயனை எதிர்த்து நெஞ்சுரத்தோடு போராடிய முன்னோடிகளில் சிதம்பரனார் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலேயனின் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி மக்களிடையே முழங்கினார். அதற்காகவே சொந்தமாகச் சரக்குக் கப்பலை ஓடவிட்டார்.

தமிழர் வரலாற்றில், இராசேந்திரச் சோழனுக்குப் பின் கடலில் கப்பலை விட்டவர் வ.உ.சிதான். அதனாலேயே அவர் கப்பலோடியத் தமிழன் என்ற அழியாப் புகழுக்குச் சொந்தக்காரர் ஆனார். தமிழனால் முடியாதது எதுவும் இல்லை; தமிழன் நினைத்தால் சாதித்துக் காட்டுவான் என்பதற்குக் கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சி மிகச் சிறந்த முன்மாதிரி என்றால் மிகையன்று.

ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் வ.உ.சியின் கப்பல் நிறுவனம் முடக்கப்பட்டது. அவர்மீது வழக்குகள் போடப்பட்டு சிறைதண்டனையும் வழங்கப்பட்டது. சிறையில் இருந்தபோது, மாடுகள் இழுக்கின்ற செக்கை இழுக்கச் சொல்லி ஆங்கிலேயர்கள் கொடுமைபடுத்தினர். தோளிலும் உடலிலும் குருதிச் சொட்டச் சொட்ட அவரை அடித்து துன்புறுத்தித் செக்கிழுக்க வைத்தனர்.

சிறையிலிருந்து விடுதலையான பின்பு ஆங்கிலேயர்கள் அவரை விட்டபாடில்லை. அவருடைய சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்துகொண்டனர். அவர் தொடர்ந்து வழக்கறிஞர் பணிசெய்வதற்கும் தடை போட்டனர்.

ஆங்கிலேயனில் வல்லாண்மையில் தனக்கு ஏற்பட்ட அத்தனை இடர்களையும் துயர்களையும் வ.உ.சி வரலாற்று நூலாக எழுதினார். இலக்கியத்தரம் மிகுந்த வரலாற்று நூலாக இது அமைந்தது.

தமிழ்மொழியின் மீது மிகுந்த பற்றும் புலமையும் கொண்டிருந்தார் வ.உ.சி. அவர் திருக்குறளுக்கு அகல விரிவுரை எழுதியுள்ளார். தொல்காப்பியத்திற்கும் விளக்கநூல் எழுதியுள்ளார். அவருடைய எழுத்துகள் அனைத்தும் புரட்சி சிந்தனைகளை ஏற்படுத்துவதாக இருந்தன. தமிழில் பல நூல்களையும் புதினங்களையும் எழுதியுள்ளார். சேம்சு ஆலன் என்னும் ஆங்கில நாவலாசிரியர் எழுதிய நூல்களை இவர் மொழிப்பெயர்த்து எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மெய்யாரம், மெய்யறிவு போன்ற இவருடைய படைப்புகள் காலத்தால் அழியாதன.

எழுத்தில் மட்டுமல்லாது, மேடைகள் தோறும் தம்முடைய உணர்ச்சிமிகு உரைகளால் தமிழர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியவர்.

பெரும் செல்வந்தராக இருந்தபோதும் மக்களின் துயரங்களைத் துடைத்தெறிய மக்களோடு நின்று போராடிய மாபெரும் போராட்ட உணர்வாளராக அவர் திகழ்ந்தார். அதனாலேயே, வாழ்நாள் முழுவதும் தாங்கமுடியாத துயரவாழ்க்கை வாழ்ந்தார்.

அடிமைப்பட்டிருந்த இந்தியாவையும் தாழ்ந்திருந்த தமிழர் குமுகாயத்தையும் மீட்டெடுக்க தன்னுடைய உடல், பொருள், ஆவி அத்தனையும் ஈகப்படுத்தி இறுதிவரையில் திண்ணிய மனத்தோடு போராடிய வ.உ.சிதமபரனார் 18-11-1936ஆம் நாள் தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.

தமிழுக்காகவும் தமிழருக்காகவும் போராடி உயிர்விட்ட வ.உ.சியின் புகழ் தமிழ் உள்ள அளவும் போற்றப்படும் என்பது திண்ணம். இன்றைய இளம் தலைமுறையினர் வ.உ.சி போன்ற தமிழ்ப் பெரியோர்களின் வரலாற்றைப் படித்து விழிப்புணர்வு பெற்று எழுச்சிகொள்ள வேண்டும். தமிழ் இனம் வாழ; தமிழ்மொழி வாழ நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டு போராடி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

வாழ்க ஐயா வ.உ.சி அவர்தம் புகழ்!

5 comments:

Anonymous said...

வாழ்க ஐயா வ.உ.சி அவர்தம் புகழ்! என்று குறிப்பிட வேண்டும். இறந்தவர்களை வாழ்க என்று நேரடியாக குறிப்பிடுவதில்லை.

சுப.நற்குணன்,மலேசியா. said...

பெயரில்லா திருத்தமிழ் அன்பரே,

தவறுக்கு மன்னிக்கவும். குறிப்பிட்டுச் சொன்ன தங்களுக்கு நன்றி. திருத்தம் செய்துவிட்டேன்.

அடுத்தமுறை பெயரோடு வாருங்கள் அன்பரே.

Thamizhan said...

மன்னராக வாழ்ந்தவர்,கொள்கைக்காக மனித்ராக வாழ்ந்து பொருளை இழ்ந்தார்.
எந்த வெள்ளையனை எதிர்த்தாரோ அதிலே ஒரு நல்ல வெள்ளையனால் உதவி பெற்றார்.இந்தியக் காங்கிரசின் ம்ன்னிக்கப் பட முடியாதக் குற்றங்களில் ஒன்று இவருக்கு இழைத்த துரோகம் ஆகும்.இனவெறியனுக்கெல்லாம் "பவன்"வைத்தக் காங்கிரசு இந்த மாமனிதரை முழுதுமாக ஓரங்கட்டி
வறுமையில் வாட விட்டது.

vijeyan said...

He is a great man, but unknown to the present generation.

சுப.நற்குணன்,மலேசியா. said...

திருத்தமிழ் அன்பர்கள் தமிழன், விஜயன்,

தங்களின் முதல் வருகையை மகிழ்வோடு வரவேற்கிறேன்.

தொடர்ந்து வருக..!

Blog Widget by LinkWithin