கடந்த ஆண்டுகளில், முதலாம் ஆண்டுக்கான பதிவுக் கணக்கைப் பார்க்கும்போது, நமக்கு சில புள்ளி விவரங்கள் கிடைக்கின்றன. 90% மலாய்க் குழந்தைகள் தேசியப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். 95% சீனக் குழந்தைகள் சீனப் பள்ளிகளில் பதிவு செய்கின்றனர். ஆனால், தமிழர்(இந்தியர்)களில் வெறும் 55% குழந்தைகள் மட்டுமே தமிழ்ப்பள்ளிகளில் பயில்வதற்காகச் செல்லுகின்றனர்.
மீதமுள்ள 45% தமிழ்க் குழந்தைகள் ஒவ்வோர் ஆண்டும் மற்ற பள்ளிகளுக்குச் செல்லுகின்றனர். வேற்றுமொழிப் பள்ளிகளில் சேருகின்ற தமிழ்க் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகமாகவே இருக்கின்றது.
*இதற்கான காரணங்கள் என்ன?
*பெற்றோர்கள் பலர் தமிழ்ப்பள்ளிகளைப் புறக்கணிப்பதற்கு காரணம் யாது?
*படித்த பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளிகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லையே ஏன்?
*பணக்காரத் தமிழர்கள் தமிழ்ப்பள்ளிகளை வெறுக்கிறார்களே எதனால்?
இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன; தமிழ்ப்பள்ளிகள் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன; தமிழ்ப்பள்ளிகளின் நிருவாகம் – ஆசிரியர்கள் – கட்டட வசதி – கற்றல் கற்பித்தல் தரம் – பாடத் துணைப் பொருள்கள் திறம் எனப் பல கோணங்களில் குற்றங்களும் குறைபாடுகளும் அடுக்கிச் சொல்லப்படுகின்றன.
இத்தனையையும் கடந்து மேலேபோய், இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தேவையா? என கேள்வி கேட்கும் பேரறிவு கொண்ட தமிழர்(இந்தியர்)களும் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.
இதையெல்லாம் ஆராய்வதை விடுத்து, இதனைவிட முக்கியமான விடயங்களைச் சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.
அதாவது, இப்போது தமிழ்ப்பள்ளியில் ஏறக்குறைய ஒரு இலக்கத்து நாற்பத்து இரண்டாயிரம் (142,000) மாணவர்கள் படிக்கிறார்கள். ஏற்கனவே சொன்னது போல இது வெறும் 55% மட்டுமே. மீதமுள்ள 45% மாணவர்கள் அதாவது ஏறத்தாழ 108,000 மாணவர்கள் தேசியப் பள்ளி அல்லது சீனப்பள்ளிகளில் பயில்கின்றனர்.
இப்போதைய நிலையில் 142,000 மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் பயிலும் சூழலில்,
1) நாட்டில் 523 தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்றன.
2)523 துறைத் தலைவர்கள் (தலைமையாசிரியர்) பொறுப்பு நம்மவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
3) ஏறக்குறைய 8,600 ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இப்படியாக பல நன்மைகளை நாம் அடைந்திருக்கிறோம். நாம் நினைத்தால்.. மனது வைத்தால்.. ஒரே நாளில் இப்படிப்பட்ட நன்மைகளைப் பல மடங்காக ஆக்கிக்காட்ட முடியும்.
எப்படி என்கிறீர்களா?
மற்ற பள்ளிகளில் படிக்கும் 108,000 தமிழ் அல்லது இந்திய மாணவர்களும் உடனடியாக தமிழ்ப்பள்ளிகளுக்கு மாறினால் நிலைமை என்னவாகும். சற்றே கற்பனை செய்து பார்க்கையில் மூக்கின்மீது விரலை வைக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு மிகப்பெரிய மாற்றங்களையும் ஏற்றங்களையும் நம்மால் ஏற்படுத்த முடியும்.
மொழிப் பாதுகாப்பு, கலை, பண்பாட்டு, இலக்கிய, சமய நீடுநிலவல் (Survival), இனமீட்சி முதலான அடிப்படைகளைக் கடந்து பொருளியல் நிலையில் ஏற்படப் போகும் மாற்றங்கள் சில இதோ:-
1)தமிழ்ப்பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை 250,000 க்கு உயரும்.
3)புதிய தமிழ்ப்பள்ளிகள் நாடெங்கிலும் உருவாகும். இதனால், துறைத் தலைவர்கள் பொறுப்பும் அதிகரிக்கும். நம்மவர்கள் இன்னும் அதிகமானோர் தலைமையாசிரியர் பதவிகளுக்கு வரலாம்.
4) தமிழ்ப்பள்ளிகளுக்கு உரிய தமிழ் அதிகாரிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும்.
5) தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களை உருவாக்கும் ஆசிரியர் பயிற்சிக் கழக தமிழ் விரிவுரையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும்.
6) பல்கலைக்கழகங்களில் தமிழ்க் கற்பிக்கும் பேராசிரியர்களுக்கான வேலை வாய்ப்புகள் நிறைய உருவாகும்.
7)தமிழ்ப்பள்ளிகளுக்குப் பாடநூல்கள் உருவாக்கித் தரும் நிறுவனங்கள் பெருகும். அந்நிறுவங்கள் வழியாகப் பலருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.
8)பயிற்சி நூல்கள் அணியப்படுத்தும் நிறுவனங்கள் / வேலை வாய்ப்புகள் அதிகமாகும்.
9)தமிழ்ப்பள்ளிகளுக்குப் பாடத் துணைப்பொருள்கள் உருவாக்கும் நிறுவனங்கள் உருவாகும்; நிபுணர்கள் உருவாகுவார்கள்.
10)தமிழ்ப்பள்ளிகளில் போட்டிச் சூழல் இயல்பாகவே உருவாகி, கல்வித்தரம் பன்மடங்கு அதிகரிக்கும்.
11)தமிழ்ப்பள்ளி மாணவர்களை முன்படுத்தி சிறப்புக் கல்வி நிலையங்கள் / கல்விச் சேவை நடுவங்கள் உருவாக்கம் பெறும்.
12)தமிழ்ப்பள்ளிகளை முன்படுத்திய பல தொழில் வாய்ப்புகளும் வணிக வாய்ப்புகளும் பொருளியல் வளர்ச்சிகளும் உண்டாகும்.
இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். இங்கு சொல்லப்படாத பல முன்னேற்றங்கள் உங்களுக்கும் தோன்றியிருக்கலாம்.
அந்த அளவுக்கு, நமது சமுதாயம் மாற்றம் காண்பதற்கும் ஏற்றம் பெருவதற்கும் நாமே முனைந்து சிலவற்றைச் செய்துகாட்ட முடியும்; சாதித்துக் காட்ட முடியும்.
மலேசிய நாட்டில் நாம் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இன்னும் விரிந்தே இருக்கிறது. நம்மவர்கள் மிகவும் கூர்மையாகச் சிந்தித்துச் செயல்படத் தொடங்கினால், நமது சமுதாயத்தின் வேகத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
இதற்கெல்லாம் அடிப்படையில் தேவையானது நம்முடைய சிந்தனை மாற்றம்தான்.
அதற்காக, நம்மவர்கள் உடனடியாக ஒரு முடிவுக்கு வரவேண்டும். அது வேறொன்றுமல்ல...
7 comments:
இதில் கொடுமை என்வென்றால் தமிழ் பள்ளி ஆசிரியர்கள்
தங்கள் பிழைகளை இன்னும் மட்ரமொழி பள்ளிகளுக்கு
அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறர்கள் .
திருத்தமிழ் அன்பர் சுப்ரா,
கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனால், அங்கு இரண்டு கொடுமை தலைவிரித்து ஆடிய கதைதான் இதுவும்.
சமுதாயம் மனது வைத்தால் இந்த நிலையை மாற்ற முடியும்.
காலத்திற்கேற்ற நல்ல பதிவு.
//சமுதாயம் மனது வைத்தால் இந்த நிலையை மாற்ற முடியும்.//
சமுதாயம் மனது வைக்காது, மனது வைக்க கட்டாயப் படுத்த வேண்டும்.
முதலில் தமிழ்ப் பள்ளியில் படித்த மாணவர்களையே மக்களை பிரதிநிதிக்கும் தலைவராக ஏற்க வேண்டும் என்ற நிலையை உண்டாக்க வேண்டும். அரசியல் (கட்சி வேட்பாளர் முதல் பொதுத் தேர்தல் வேட்பாளர் வரை) இயக்க, சங்கங்கள் தலைமைத்துவத்திற்கும் தமிழ் படித்தவர்களை மற்றும் தமிழ்ப் பள்ளிக்கு தன் குழந்தைகளை அனுப்பவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலை உருவாக்க வேண்டும்.தமிழனை பிரதிநிதிக்க வேண்டும் என்றால் உண்மை தமிழனாக இரு.
திருத்தமிழ் அன்பர் தமிழ்வாணன்,
//முதலில் தமிழ்ப் பள்ளியில் படித்த மாணவர்களையே மக்களை பிரதிநிதிக்கும் தலைவராக ஏற்க வேண்டும் என்ற நிலையை உண்டாக்க வேண்டும்.//
//தமிழனை பிரதிநிதிக்க வேண்டும் என்றால் உண்மை தமிழனாக இரு.//
உங்கள் கூற்றை வழிமொழியும் முதல் ஆளாக இருக்க விரும்புகிறேன்.
வணக்கம். தமிழ்ப்பள்ளி என்பது உயர் மொழியை கற்பிக்கும் கூடம் மட்டும்மன்று மொழி இன சமய பண்பாட்டினை அதிகாரபூர்வமாக காக்கும் இடமும் கூட.
நம் குடும்பங்களில் உள்ள குழந்தைகள் தமிழ்ப்பள்ளி செல்வதை உறுதி செய்வோம்.
நண்பர் சுப்ரா சொன்னது போல அவர்கள் 'பிழைகள்தான்' காரணம் தன் தாய் மொழியையே கற்காதவன் எப்படி மாணவன் ஆக முடியும்?
நம் பலம் என்னவென்று தெரியாமல் இதுவரைக்கும் இருந்து விட்டோம்.தாங்கள் பட்டியல் இட்ட அனைத்தும் நமது பலம் கனவுகளாய் இல்லாமல் நிஜமாய் நிறைவேறவேண்டும்..புள்ளி விவரங்களுடன் நீங்கள் சொல்லும் உண்மைகளை இங்கு உள்ள தமிழர் உணர்ந்தால் நன்று ஐயா. 45 % என்பது ஒரு பெரிய புள்ளிவிகிதம் தான்.மாற்றுப் பள்ளியில் படிக்கும் நமது பிள்ளைகள் நமது பள்ளியில் படித்தால் இந்த நாட்டில் தமிழ் கற்றோர் நிலை உயறும் .ஆசிரியர் தொகையும் உயரும்.அதைச் சார்ந்த தமிழர் தொழிக்கூட வளம் தரும்..ஒன்றுப்ப்ட்டால்தான் நமக்கு வாழ்வு. நல்ல பதிவு மட்டும் அல்ல,ஒவ்வொரு தமிழருக்கும் இச்செய்தி சென்று சேரவேண்டும் ஐயா.
தமிழ்ப்பள்ளிகள் தான் தமிழர்கு காவல் அரணாக விளங்குகின்றன. இற்றைய நிலையில் வேற்று இனத்தவருக்கு இருக்கின்ற மொழிக் காப்புணர்வு நமக்கு இருந்தால் நம் வளர்ச்சி ஆக்கமூட்டுவதாக அமைகின்றது. நம் மொழியை விட, நம் இனத்தைவிட, நமது பண்பாட்டை விட, நமது சமுதாயத்தைவிட அடுத்தவரே சிறந்தவர் என நமக்குள் இருக்கின்ற தாழ்வு மனப்பான்மையே இத்தனைக்கும் கரணியம்.
நமக்குள் ஏற்படும் மனமாற்றமே நம்மை வாழ்விக்கும்.
தமிழ் எங்கள் உயிர் தமிழ்ப்பள்ளி எங்கள் உடல்.
Post a Comment