Tuesday, August 31, 2010

சஞ்சியிலே வந்தவங்க தாண்டவக் கோனே!


மனதைத் தொட்ட மரபுக்கவிதை - 3

ரெ.ச என்று எல்லோராலும் அன்பொழுக அழைக்கப்படும் ரெ.சண்முகம் அவர்களின் பாடலை இந்தத் தொடரில் பதிவு செய்கிறேன்.

பாடகர், இசையமைப்பாளர், பாவலர், பாடலாசிரியர், மேடை நாடகாசிரியர், வானொலி நாடக ஆசிரியர், நடிகர், இயக்குநர், கட்டுரையாசிரியர், சிறுகதை எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல்பெற்ற அரும்பெறல் கலைஞர் ரெ.சண்முகம். மலேசிய வானொலி அறிவிப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது இவருடைய மற்றொரு வரலாறு.

இவருடைய “செந்தாழம் பூவாய்” பாடல் திரைப்பாட்டுகளுக்கே வெல்விளி (சவால்) விடும் அளவுக்கு மிகச் சிறந்த பாடலாக புகழ்பெற்றது என்ற செய்தி பலர் அறிந்ததே. இவருடைய குரலுக்கு மயங்கியோர் நாட்டில் பலர் உள்ளனர்.

இவர் சில நூல்களையும் எழுதி மலேசிய எழுத்துலகைச் செழிக்கச் செய்துள்ளார். அவற்றுள் ரெ.ச.இசைப்பாடல்கள், பிரார்த்தனை (கவிதை), நல்லதே செய்வோம் (கட்டுரை), இந்த மேடையில் சில நாடகங்கள் (சுய சரிதை) ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கன.

மலேசிய தமிழ் இசைக்கலை வாழ்விலும் வளர்ச்சியிலும் ரெ.ச எனும் பெயர் இரண்டறக் கலந்திருக்கிறது. இவருடைய அரும்பணிகளைப் பாராட்டும் வகையில் ‘செவ்விசைச் சித்தர்’ எனும் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

மலேசியத் தமிழர்களிடையே சாதனை மாந்தராகத் திகழும் செவ்விசைச் சித்தர் ரெ.ச அவர்களின் பாடலொன்று இங்கே பதிவாகிறது. பொருள் விளக்கமே தேவையில்லாமல் புரிந்துகொள்ளும் அளவுக்கு மிக எளிமையான பாடல் இது. மலேசியத் தமிழர்களின் அன்றைய வரலாறு, இன்றைய நிலைமை ஆகிய இரண்டையும் படம்பிடித்துக் காட்டும் ‘சித்தர்’ பாட்டு இது.

**********************
பிரித்தானிய ஆட்சியின்போது தமிழகத்திலிருந்து ஒப்பந்தக் (சஞ்சி) கூலிகளாகத் தமிழ் மக்கள் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்ட வரலாற்றிலிருந்து பாடல் தொடங்குகிறது. இங்கு வந்த தமிழர்கள் காட்டுலும் மேட்டிலும் உழைத்து நாட்டைக் கட்டியெழுப்பிய கதைப் போகிற போக்கில் சொல்லிப் போகிறார் கவிஞர். கூடவே, மலேசியத் தமிழர்களின் இன்றைய அவலங்களையும் பாடிக் காட்டுகிறார்.


சஞ்சியிலே வந்தவங்க தாண்டவக் கோனே - இன்னைக்கும்
சரியாக அமையலயே தாண்டவக் கோனே
மிஞ்சிப்போயி நிக்குதையா தாண்டவக் கோனே - கொஞ்சம்
மிதிக்கத்தானே பாக்குறாங்க தாண்டவக் கோனே

காரினிலே பறக்குறவங்க தாண்டவக் கோனே – நல்ல
கனவிலயும் மிதக்குறாங்க தாண்டவக் கோனே
தாருபோட்டு ரோடு போட்டவன் தாண்டவக் கோனே – இன்னும்
தரையினிலே தவழுறானே தாண்டவக் கோனே


இவனுக்குள்ளயே ஏமாத்துறான் தாண்டவக் கோனே – அத
எதுத்துபுட்டா திரும்பஒத தாண்டவக் கோனே
கவனத்தோட வாழலயே தாண்டவக் கோனே – இன்னும்
கன்னிகழி யாதவந்தான் தாண்டவக் கோனே

அடுத்துவரும் அடிகள் முக்கியமானவை. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியைப் பக்குவமாகச் சொல்லிச் செல்லுவது கவரும்படியாக உள்ளது.

புள்ளைங்கள்ளாம் படிக்கிறாங்க தாண்டவக் கோனே – அங்கே
போடுறதுல கையவச்சான் தாண்டவக் கோனே
அள்ளி அள்ளி ஊட்டுறானே தாண்டவக் கோனே – எதுக்கும்
ஆகாத முண்டங்களுக்குத் தாண்டவக் கோனே

மலேசிய அரசியல் சூழல் இன்று மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த மாற்றத்தின் காரணமாக அரசியல் பிழைப்போரிடமும் மேல்மட்டத் தலைவர்கள் தொடங்கி குட்டி குட்டி தலைவர்கள் வரையில் தன்னலப் போக்கு வரம்புமீறி போய்க்கொண்டிருக்கிறது. தன்னலத்துக்காக தன் இனத்தையே அழிக்கும் அளவுக்கு இன்று தமிழர்கள் துணிந்துவிட்டார்கள். இது அரசியல் நிலை என்றால், குடும்ப அளவிலும் இன்று இதே நிலைமைதான். ஒற்றுமை, புரிந்துணர்வு, விட்டுக்கொடுத்தல் முதலிய பண்புகள் நலிந்துபோய்விட்டன. தமிழர்கள் தங்களுக்குள்ளேயே பிளவுபட்டதும் அல்லாமல் அடித்துக்கொள்வது பேரவலமாக இருக்கின்றது. அடுத்த அடிகளில் செவ்விசைச் சித்தரும் இதனையே சொல்லுவதைப் பாருங்கள்.

கோடரிக்கும் காம்புபோல தாண்டவக் கோனே – இவன்
கோளுவச்சான் குடிகெடுத்தான் தாண்டவக் கோனே
மாடுபோல பாடுபட்டான் தாண்டவக் கோனே – இன்னும்
மனுசனாக மாறலியே தாண்டவக் கோனே


ரெண்டாயிரம் வந்திடுச்சி தாண்டவக் கோனே – இன்னும்
ரெண்டு ரெண்டா பிரிஞ்சுருக்கான் தாண்டவக் கோனே
மண்டுத்தனமா வாழுறத தாண்டவக் கோனே – இவன்
மகத்துவமா நினைக்கிறானே தாண்டவக் கோனே

இன்று 53ஆவது மலேசிய தேசிய நாளை முன்னிட்டு, இந்தப் பாடலை உங்கள் சிந்தனைக்காகப் பரிமாறுகிறேன்.

“தேசிய நாள் நல்வாழ்த்து”


Tuesday, August 24, 2010

ஐ-போன் 4 வருகிறது; தமிழை ஒருபடி உயர்த்த போகிறது


எதிர்வரும் செப்தெம்பரில் ‘ஐ-போன் 4’ எனப்படும் புதுவகை கையடக்க இணைய பேசி மலேசியாவில் அறிமுகம் காண விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தமிழ்மொழியிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என அறியப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட "ஐபோன்" புதிய பதிப்பை வெற்றிகரமான அறிமுகப்படுத்தியுள்ளது. மலேசியாவில் இந்தப் புதிய ஐபோன் - 4ஆம் பதிப்பு வரும் செப்தெம்பரில் வெளியிடப்படவுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

‘ஐபோன்’ எனும் புதிய வகையிலான தொழில்நுட்பத் தொடர்பு கருவி 2007இல் சந்தைக்கு வந்தன. இதுவரையில் 5 கோடி ஐபோன்கள் விற்பனையாகி உள்ளதாக அறியப்படுகிறது. தற்போது மேலும் பல புதிய ஏந்து(வசதி)களுடன் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்-4" சந்தைக்கு வந்துள்ளது.

ஐபோன்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கையடக்க இணைய பேசி எல்லா வகையான ஏந்துகளையும் உள்ளடக்கியதாகத் திகழ்கிறது. iOS 4 எனும் இயங்குதளத்தில் மிகவேகமாக இயங்கும் ஆற்றல் கொண்ட இந்த புதிய கையடக்கப் பேசியில், வீடியோ அழைப்பு, உயர்தரமான கணித்திரை, 5 மெகா பிக்சல் படக்கருவி, லெட் ஃப்ளாச், உச்ச திறன் கொண்ட வீடியோ பதிவு, கம்பியில்லா இணையச் சேவை என ஏராளமான நவினமய சிறப்புத் தன்மைகள் உள்ளன.

(மலேசியாஇன்று தளத்திலிருந்து ஒரு செய்தி)

முந்தைய ஐபோனை விட தற்போதைய "ஐபோன்-4" வடிவத்தில் மெலிதாகவும் சிறியதாகவும் உள்ளது. இதில், தொடர்ச்சியாக 7 மணி நேரம் பேசவும், 10 மணி நேரம் இணையத்தில் உலாவவும் முடியுமாம்.

இத்தனைக்கும் மேலாக, தமிழர்கள் அனைவரும் பெருமைபடும் வகையில் ‘ஐபோன் 4’ தமிழில் உள்ள வரிகளை அப்படியே தமிழில் கொடுக்கும் வகையில் உருவாக்கம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

iOS4இல் இயல்பாகச் சேர்க்கப்பட்டுள்ள தமிழ் இயக்கத்திற்கு மேலும் மெருகூட்டும் வகையில் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் செல்லினம் எனும் தமிழ்ச் செயலியை வடிவமைத்துச் சாதனைப் புரிந்திருக்கிறார். இதன்வழி தமிழ்மொழியை அடுத்த தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தியிருப்பதோடு, தமிழை மேலும் ஒரு படி உயர்த்தியிருக்கிறார்.

ஐபோன்-3G, ஐபோன்-3GS மற்றும் ஐபோன்-4 ஆகிய நான்கு வகை ஐபோன் கருவிகளிலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை ஐ-பாட் டச் (iPod Touch) கருவிகளிலும் iOS4 இயங்குதளம் இயங்கும். இந்த இயக்கத்தைப் பெற்ற அனைவருமே தமிழ் வரிகளைத் திரைகளில் அனுபவிக்கலாம். மலேசிய உருவாக்கமான செல்லினத்தைக் கொண்டு தமிழ் வரிகளைக் கோர்த்து, மின் அஞ்சலாகவும் குறுஞ்செய்தியாகவும் தமிழ் வரிகளை அனுப்பலாம். மேலும் இந்தக் கருவிகளில் வடிவமைக்கப்பட்ட முகநூல்(Facebook) டிவிட்டர் (Twitter) போன்ற செயலிகளிலும் தமிழ் வரிகளைத் தடையின்றிக் காணலாம்.

(விக்கிபீடீயாவில் இருக்கும் தமிழ்ப் பக்கம்)

நவின தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தமிழ்மொழியும் செயல்பட முடியும் என்பதற்கு இந்தப் புதிய கண்டுபிடிப்பு நல்ல சான்றாக அமைந்திருக்கிறது. தமிழின் நிலையை அல்லது இருப்பை உறுதிபடுத்தும் வகையில் இந்த ஆக்கம் அமைந்திருக்கிறது.

(ஐபோனில் மோபைல்கினி செய்தி)

இவ்விடயம் குறித்து திரு.முத்து நெடுமாறனுடன் உரையாடினேன். அதனை அப்படியே கீழே தருகின்றேன்.

சுப.ந:- ஐபோன் 4 கருவியில் தமிழ் நிலையை மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளீர்கள்....
முத்து:-இன்னும் உயர்த்த திட்டம் இருக்கிறது .... அவற்றிற்கான வேலையை செய்து கொண்டிருக்கிறேன்
சுப.ந:-மகிழ்ச்சியும்... பெருமையும் ஒரு சேர ஏற்படுகிறது....
முத்து:-தமிழகத்தில் இதன் பயன்பாடு அவ்வளவு இல்லாவிட்டாலும், நமது நாட்டிலும் சிங்கப்பூரிலும் அதிகம் பேர் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்
சுப.ந:-தங்கள் பணிகள் அளப்பரியன...
முத்து:- அடுத்த மாதம் ஐ-போன்4 நமது நாட்டில் வெளிவர வாய்ப்பிருக்கிறது
சுப.ந:-அப்படியா?
முத்து:-கடந்த வாரம் இதை நான் சிங்கப்பூரில் வாங்கினேன்.....தமிழ் எழுத்துகள் மிகவும் அழகாகத் தோன்றுகின்றன. அஞ்சல் உள்ளீட்டு முறையையும் அதில் சேர்த்துவிட்டேன்
சுப.ந:-கேட்கவே பெருமிதமாக உள்ளது.
முத்து:-தமிழிலேயே மின்-அஞ்சல், குறுஞ்செய்தி, ஃபேஸ்புக் போன்ற செய்திகளை அதில் இருந்து அனுப்பலாம்
சுப.ந:-கணித்தமிழைப் பயன்படுத்தும் ஆர்வம் இப்போது கொஞ்சம் கூடியுள்ளது நம் நாட்டில்... அதைத் தங்கள் கண்டுபிடிப்புகள் மேலும் வளர்த்தெடுக்க கண்டிப்பாக உதவும்.....
முத்து:-நானும் அதையே விரும்புகிறேன்

(ஐ-டியூன்சில் தமிழ் பாடல்களின் பெயர்கள்)

திரு.முத்து நெடுமாறன் சொன்னது போல, இந்தப் புதிய வகை ‘ஐபோன் 4’இல் தமிழிலேயே எல்லா வேலைகளையும் செய்ய முடியும் என்பது தமிழுக்குக் கிடைத்த பெரும் பேறு என்றால் மிகையன்று. மேலும், ‘ஐ-டியுன்’ எனப்படும் இசை நிரலியில் பாடல்களின் பெயர்களையும் பாடல் விவரங்களையும் தமிழிலேயே பதிவுசெய்து கொள்ள முடியும்.

‘ஐ-போன் 4’ தமிழிலேயே வழங்கும் சேவைகளை இப்பதிவின் இடையிடையே உள்ள படங்கள் வழியாக நீங்களே பார்த்திருப்பீர்கள். உங்களையும் அறியாமல் உங்கள் புருவங்கள் இரண்டும் மேலே உயர்ந்தனவே கவனித்தீர்களா?

  • மேலதிக தகவல்களுக்குப் பின்வரும் தொடுப்புகளைச் சொடுக்கவும்:-
3. செல்லினம் முகநூல் (http://facebook.com/sellinam)

Sunday, August 08, 2010

இணைய மாநாட்டு உரை:- மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன்


நமது மலேசியா கண்டெடுத்த முத்து. தமிழ்க் கணினி உலகின் சொத்து. கணினியில் செயல்படும் 'முரசு' தமிழ்ச் செயலியை உருவாக்கி, பிறகு கைபேசியில் செயல்படும் 'செல்லினம்' தமிழ்ச் செயலியை உருவாக்கி தமிழைத் தொழில்நுட்பத்திற்குள் கொண்டுவந்து சாதனை படைத்தவர்.

கணினி, கைபேசிக்குள் தமிழ் வந்தால் போதாது. அடுத்துவரப்போகும் ஐபோன்(iPhone), ஐபேட்(iPad) தொழில்நுட்பத்திலும் தமிழை மிளிரச்செய்யும் பணிகளை அமைதியாகச் செய்துகொண்டிருப்பவர்; கணிமைத் தொழில்நுட்பத்தில் தமிழை அடுத்த தளத்திற்குக் கொண்டுசெல்வதில் முனைப்பாக இருப்பவர்.

இந்த அறிமுகத்திலேயே இந்நேரம் இவரைத் தெரிந்திருந்திருக்கும் உங்களுக்கு. ஆம், நமது மலேசியத் தமிழர்களின் நிகராளியாக இருந்து கணிமை உலகில் பன்னாட்டுத் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள அந்தப் பெருமைக்குரியவர் நமது முத்து நெடுமாறன்தான்.

அண்மையில் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணை மாநாடாக நடந்த தமிழ் இணைய மாநாட்டில் முத்து நெடுமாறன் தமிழின் வளர்ச்சியை மேலும் பல படிகள் உயர்த்தும் வகையில் தம்முடைய அரிய கண்டுபிடிப்பு பற்றி பேசினார்.

கணினி, இணையத் தொழில்நுட்பத் துறையில் தமிழ்மொழி மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இவருடைய உரை நல்ல சான்று. இவருடைய உரை தமிழ் மீதான நம்பிக்கையை பல மடங்கு கூட்டுகிறது. தமிழைப் பற்றிய தாழ்வு எண்ணங்களை உடைத்துப் போடுகிறது. அடுத்த நூற்றாண்டிலும் தமிழ் நிலைத்து வாழும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.

அனைவரும் கேட்க வேண்டிய முத்து நெடுமாறன் அவர்களின் உரை நிகழ்படமாக இதோ:-

பகுதி 1:- (முத்து நெடுமாறன் உரை 6.50 நிமயத்தில் தொடங்குகிறது)

பகுதி 2:-


பகுதி 3:-

பகுதி 4:-

பகுதி 5:-

பகுதி 6:-


Monday, August 02, 2010

செம்மொழி மாநாட்டு உரை:- பெ.இராஜேந்திரன் / பேரா.ரெ.கா

கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மலேசியாவிலிருந்து பெரிய குழுவை அழைத்துச் சென்றவர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன். அம்மாநாட்டில் மலேசியத் தமிழர்களுக்குத் தனி முத்திரையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். மலேசியக் கட்டுரையாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து 'மலேசிய அறிமுக மலரை' இவர் பொறுப்பேற்றிருக்கும் ம.த.எழுத்தாளர் சங்கம் வெளியிட்டிருந்தது.

''குடியேறிய நாட்டில் தமிழ் இலக்கியத்தைக் காப்பாற்றுதலும் வளர்த்தலும்" எனும் தலைப்பில் பெ.இராஜேந்திரன் அவர்கள் கட்டுரை படைத்தார். அதன் நிகழ்படம் கீழே தரப்படுகிறது.

பகுதி 1:-


பகுதி 2:-


பகுதி 3:-

ம.த.எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவரும், சிறுகதை எழுத்தாளருமான பேராசிரியர் ரெ.கார்த்திகேசு அவர்களும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரை படைத்தார். இவருடைய கட்டுரையின் தலைப்பு "நவினத் தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியின் பயன்பாடு மெய்ம்மையும் அறைகூவல்களும்" என்பதாகும். இவருடைய உரையைக் கீழே வரும் நிகழ்படங்களில் காணலாம்.

பகுதி 1:-

பகுதி 2:-
பகுதி 3:-

குறிப்பு: பேரா.ரெ.கா அவர்களின் உரையின் பகுதி 3 நிகழ்படத்தின் இறுதியில் சீனா நாட்டைச் சேர்ந்த கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூடிய அம்மையார் அழகு தமிழில் கட்டுரை வாசிப்பதைக் கேட்கலாம்.

பி.கு:-மலேசியத் தமிழர்களின் மாநாட்டுக் கட்டுரைகள் தொடர்ந்து திருத்தமிழில் இடம்பெறும். தவறாமல் பாருங்கள் - கேளுங்கள்.

Sunday, August 01, 2010

மலாயா பல்கலை தமிழ்த்துறை மறுமலர்ச்சி காணட்டும்


1-8-2010 முதற்கொண்டு இணைப்பேராசிரியர் முனைவர் சு.குமரன் அவர்கள் மீண்டும் தமிழ்த்துறை தலைவர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தால், நாட்டின் மிக உயரிய கல்வி நிறுவனத்தில் நமது கையைவிட்டுப் போன தாய்மொழி உரிமை மீண்டும் கையகமாகியுள்ளது.

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் முனைவர் சு.குமரன் ஐயா அவர்களுக்குத் திருத்தமிழ் தமது மனமார்ந்த நல்வாழ்த்தைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. ஓராண்டாய் சுற்றிச் சூழந்த கருமேகங்கள் களைந்து இன்று புத்தொளி பிறந்துள்ளது. இதுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கி இன்று புத்தெழுச்சி ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலம் நமது தமிழ்த்துறைக்குப் பொற்காலமாக அமைய வேண்டும். புதிய சிந்தனையோடு புதுப்புது இலக்குகளை இனி எட்ட வேண்டும்; புதுப்புது பாதைகளைத் தேடி பாதங்கள் பதிய வேண்டும். மலேசியாவில் தமிழும் தமிழரும் எழுச்சி பெற - ஏற்றம் காண மலாயா பலகலை தமிழத்துறை தக்கனவற்றைச் செய்ய வேண்டும்; தகுந்த நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

இத்தனைக்கும் மேலாக, அங்குப் பணியாற்றும் நமது மரியாதைக்குரிய கல்விமான்கள் அனைவரும் தனித்தனி விருப்பு வெறுப்புகளுக்கு இடங்கொடாமல்; மொழியின, சமுதாய நலம் என்ற ஒருமித்த சிந்தனையில் ஒருகுடையின் கீழ் ஒன்றுபட்டு; முனைவர் சு.குமரன் அவர்களின் தலைமைக் கரங்களை வலுப்படுத்தி வீறுகொண்டு எழவேண்டும் – வெற்றிகளைக் குவிக்க வேண்டும் எனத் திருத்தமிழ் வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.

மலேசியாவின் மூத்த பல்கலைக்கழகமாக விளங்குவதோடு, மலேசியத் தமிழர்களின் தாய்மொழிக்கும் தாய்மொழிக் கல்விக்கும் உரிமைச் சின்னமாக - உயரிய சின்னமாக இருக்கும் கல்வி நிறுவனம் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை என்றால் சாலப் பொருந்தும். தமிழவேள் கோ.சாரங்கபாணியின் தலைமையில் மலேசியத் தமிழர்கள் முன்னெடுத்த ‘தமிழ் எங்கள் உயிர்’ என்னும் மொழிப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியின் அடையாளச் சின்னமாக இந்தத் தமிழ்த்துறை வீற்றிருக்கிறது என்பது பெருமைக்குரிய வரலாறு.

கடந்த 2009இல் இத்துறையில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டது. இதனால் 2009 சூலைத் திங்கள் 2ஆம் நாள் இத்துறைக்கான தலைவரைப் பல்கலை நிருவாகம் பதவியிலிருந்து அகற்றியது. காலங்காலமாக நம்மவர்கள் அலங்கரித்த தலைவர் பதவிக்குத் தமிழரல்லாத வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார். அதுமட்டுமல்லாது, அத்துறையின் பெயரும் மாற்றப்படும் இக்கட்டான சூழல் உருவாகியது.

இத்தனை கசப்பான நெருக்கடிகள் நடந்து மலேசியத் தமிழர்கள் ஓராண்டு காலமாக வாட்டமுற்று இருந்த வேளையில், கைவிட்டுப் போன தமிழ்த்துறை தலைவர் பதவி இன்று மீண்டும் கிடைத்திருக்கிறது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இதற்கு, நமது சமுதாய அமைப்புகளின் போராட்டமும் மக்களின் கோரிக்கைகளுமே முகாமையான கரணியம் என்றால் மிகையாகாது. மலாயாப் பல்கலையில் தமிழுக்கு இடமில்லையா? என்று சமுதாயத்தில் ஏற்பட்ட மனவருத்தம்தான் இன்று அத்துறையையும் அதற்குரிய தலைமை பொறுப்பையும் மீட்டுக்கொடுத்திருக்கிறது. இதுதான் உண்மை.

ஆகவே, எப்போதும் – எந்தச் சூழலிலும் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்துத் தமிழை வாழவைக்க முன்னின்று போராடும் தமிழ் இயக்கங்களும் அதன் தலைவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். காணாமல் போகவிருந்த தமிழின் அரியணையைக் காப்பாற்றிக்கொடுத்த அவர்களுக்குச் சமுதாயமே நன்றிக்கடன் பட்டிருக்கிறது. இந்த உண்மை நிலையை உணர்ந்து தமிழ்த்துறை பணியாளர்கள் தங்கள் பணிகளை உளமாற ஆற்றுவார்கள் என்று சமுதாயம் மிகவும் நம்பிக்கையோடு காத்திருக்கிறது.

இந்த நம்பிக்கையைத்தான் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் பதிவு செய்திருகின்றனர். அதற்குப் பின்வரும் செய்திகளே சான்றாகும்.

1.டத்தோ சுப்ரா அவர்கள்
அரை நூற்றாண்டு காலப் பெருமை வாய்ந்த இந்திய ஆய்வியல் துறை ஒரு வரலாற்றுப்பூர்வமான அமைப்பு. தமிழ், தமிழ் இலக்கியம், மொழி, இனம், கலை, பண்பாடு ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு செயல்படும் மிகப் பெரிய நிறுவனமான இந்திய ஆய்வியல் துறைக்கென்று ஒரு வரலாற்றுப் பெருமை இருந்தது. அத்துறை சார்ந்த பொறுப்பாளர்கள் மீண்டும் ஒன்றிணைந்து மொழி வளர்ச்சிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும். (மக்கள் ஓசை 1.8.2010)

2.தான்ஸ்ரீ குமரன் அவர்கள்
நாடு முழுவதுமுள்ள தமிழர்களும் தமிழ் இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் இதனைத் தங்களது தன்மானப் பிரச்சனையாக எடுத்துக்கொண்டு நடத்திய கூட்டு முயற்சிகளின் வழியாக ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் முனைவர் சு.குமரன் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுளார். இ.ஆ.துறையில் தகுதியும் திறமையும் கொண்ட கல்வியாளர்கள் பணியாற்றுகின்றனர் என்பதற்கு இது சான்றாகும். இ.ஆ.துறை கல்வியாளர்கள் அனைவரும் சமுதாய நலனை மனத்திற்கொண்டு, சமுதாய மையமாக அதனைச் செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இ.ஆ.துறை வளர்ச்சியில் சமுதாயம் நம்பிக்கை கொண்டுள்ளது. பேராசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது. எனவே, இன்பத் தமிழுக்கு இணைந்து பாடுபடுவோம். (மலேசிய நண்பன் 1.8.2010)

3.சு.வை.லிங்கம் (தமிழ்க் காப்பகத் தலைவர்)
கடந்த ஓராண்டுக்கு மேலாக இழுபறியாக இருந்த ம.ப இந்திய ஆய்வியல் துறைத் தலைவர் பதவி மீண்டும் தமிழர் ஒருவருக்கே நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. சமூகத்தின் கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது. இ.ஆ.துறையைச் சார்ந்த விரிவுரையாளர்களின் ஒற்றுமையும் இதற்கு காரணமாகும். அனைவருடனும் இணைந்து செயலாற்றுவதில் முனைவர் சு.குமரன் வெற்றி பெறுவார் என நம்பிக்கை கொள்வோம். (மக்கள் ஓசை 1.8.2010)


4.இரெ.சு.முத்தையா (மலேசியத் திராவிடர் கழகத் தலைவர்)
புலம்பெயர் தமிழர்க்கெல்லாம் பெருமை சேர்த்த கல்விக் களமான மலாயாப் பல்கலைக்கழக தமிழாய்வியல் பிரிவின் மகுடம் ஓராட்ண்டு காலமாக ஒளியிழந்து காணப்பட்டது. இணைப் பேராசிரியர் முனைவர் சு.குமரன் மீண்டும் தமிழாய்வுப் பிரிவுக்குத் தலைமை ஏற்கிறார். இந்த நிலைக்காகப் பாடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி. (மலேசிய நண்பன் 1.8.2010)

நாட்டின் சிறந்த கல்விமானாக விளங்கும் மரியாதைக்குரிய முனைவர் சு.குமரன் ஐயா அவர்கள் சமுதாயத்தின் இந்த நம்பிக்கையை நிச்சியமாக உணர்ந்திருப்பார். வெகு அக்கறையோடும் மிக நேர்த்தியோடும் செயல்பட்டு சமுதாயத்தின் நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்பார் என நம்புவோம்; அவருக்குத் துணைநின்று தோளுரம் ஊட்டுவோம்; நமது தமிழ்த்துறையைச் மொழி – இன – சமுதாய நடுவமாக வளர்த்தெடுப்போம்.

Blog Widget by LinkWithin