Friday, April 27, 2012

தமிழ்ப் புத்தாண்டு காப்புக்குழு நிறுவப்பட்டதுகேளிக்கை, கொண்டாட்டங்களில் ஈடுபட்டு, காதல், வீரம், பெருமை பேசிக் கலைவதை வாடிக்கையாக்கிய தமிழன், தான் செய்த சாதனையை ஆவணப்படுத்துவதை கைக்கொள்ளாததால்தான் வந்தேறிகளுக்கு நல்ல வாய்ப்பாகப் போய் வசைபாட வசதியாகப் போய்விட்டது. மண்ணின் மைந்தர்களான நம் மரபார்ந்த பல விடயங்களுக்கு நாமே பின் ஆவணங்களைத் தேடியலைய வேண்டிய சோக நிலை ஏற்பட்டிருக்கிறது.

சுமார் 300 ஆண்டுகளுக்குமுன் பார்ப்பனன் உள்ளே நுழைந்தவுடனே தமிழில் உள்ள நூல்கள் அனைத்தையும் அப்படியே படியெடுத்து அவன் மரபார்ந்த நூலாக ஆக்கித் தமிழ்நூல்களை மறைத்தான்.

ஒப்பிலக்கணம் கண்ட கால்டுவெல் தமிழகத்துக்கு வந்து ஆய்வை மேற்கொண்ட போது தற்போது உலகப் புகழ்வாய்ந்த வான்புகழ் கொண்ட திருவள்ளுவரின் நூலைப் பரிந்துரைக்க ஆள் இல்லை. அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து தந்தை பெரியார் வந்து பார்ப்பனன் வேடம் கலைத்தார். திருக்குறள் மாநாடு நடத்தினார்.  

அதேபோல் ‘சங்க’த் தமிழ் என்றதற்கு ‘சங்கம்’ என்பதே தமிழ் இல்லை என்று எதிரிகள் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். பின் அதற்கு நாம் பல சான்றுகளைக் காட்டவேண்டியதாகிவிட்டது.

இசையை, பரதக் கலையை, நாடகக் கலையை, ஔடத முறையை தமதென்று கூறி வாதிட்டார்கள். அதையும் போராடிக் காக்கவேண்டியதாகிவிட்டது.

தற்போது அவர்களே இன்னொரு குண்டைத் தூக்கிப்போட்டிருக்கிறார்கள். அதாவது பச்சையப்பன் கல்லூரியில் தமிழறிஞர் மறைமலையடிகள் தலைமையில் நடைபெற்ற கூட்டம் பொய்யானது என்றும், அந்தக் கூட்டம் நடைபெற்றபோது மறைமலையடிகள் தமிழ்நாட்டிலேயே இல்லை என்றும் ஊடகம் வாயிலாக தெரிவித்து தமிழர் மரபை திசை திருப்பப் பார்க்கிறார்கள்.

(பச்சையப்பன் கல்லூரியில் மறைமலையடிகள் தலைமையில் நடந்த கூட்டத்தின் கையெழுத்து ஆவணத்தை கி.வ.ஜகந்தான் ஒரு ஊடகத்தில் கொடுத்து அது பிரசுரிக்கப் படாமல் காணடிக்கப்பட்டுவிட்ட சோகம் நிகழ்ந்திருக்கிறது. அதுதான் இவர்களுக்கு வாய்ப்பாகப் போய்விட்டது. ஆனால் அவரே பல கூட்டங்களில் பேசிய குறிப்புகள், வாய்வழியாகச் சொல்லிய நபர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.)

அதன் வலிமை வாய்ந்த குரலாகத் தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா முந்தைய அரசு சட்டசபையில் சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய, தமிழக மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட தை மாதத்தில் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவது, கடைப்பிடிப்பது என்ற கொள்கையை அதே சட்டசபையில் எந்த போராட்டமோ, தமிழக எந்த அமைப்போ, மக்களோ போராடாத, கூக்குரலிடாதபோது தானே வலியவந்து தை முந்தைய அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்திருப்பது செய்த தவறையே திரும்பச் செய்யவைப்பது போலாகும் என்பதைக் கண்டித்து சென்னை பிரஸ் கிளப்பில் 26-04-2012ஆம் நாள் காலை 11 மணியளவில் தமிழறிஞர்கள் ஒன்றுகூடி தமிழ்ப் புத்தாண்டு காப்பு மாநாடு கூடிய விரைவில் நடத்துவது பற்றியும், அதன் ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பது பற்றியும், தமிழ் ஆண்டுத் தொடக்கத்தை தற்போதைய தமிழக அரசு சித்திரையை முதலாக வைத்துத் தொடங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.  

இந்தச் சந்திப்பில் இறைக்குருவனார் தலைமையில் கி.த.பச்சையப்பன், முனைவர் அரணமுறுவல், இலக்குவனார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். குறிப்பிட்ட அளவில் கலந்துகொண்ட தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்பு நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை எடுத்துவைத்தார்கள். இக்கூட்டத்தில் இன்னும் பத்து நாளில் தமிழ் ஆண்டுக் காப்புக் குழுவுக்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதென்றும், இன்னும் மூன்று மாதத்தில் தமிழ் ஆண்டுக் காப்பு மாநாடு நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த அமைப்பில் தமிழகத்திலுள்ள உணர்வுள்ள தமிழ் அமைப்புகள் அனைவரும் தாங்களாகவே வந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேசிய தமிழாய்வறிஞர் இறைக்குருவனார், தற்போதைய அதிமுக அரசு சித்திரை மாதத்தைத் தமிழ் ஆண்டு தொடக்கமாக பலர் முன்பு வாழ்த்துச் சொன்னார்கள். அதனால் சித்திரை முதல் நாள் தமிழ் ஆண்டுத் தொடக்கம் என்கிறார். இதே அதிமுக அரசில் முன்பு எம்.ஜி.ஆர். தலைமையில் ஒரு மாநாட்டில் இனி தமிழ் ஆண்டு தை நாளில்தான் கொண்டாடப்படவேண்டும் என்று தீர்மானம் போட்டு நடத்தப்பட்டது. ஆனால் அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா அவர் கருத்தை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்று வினா எழுப்பியதோடு, ஏன் தை மாதத்தில் தமிழ்ஆண்டுப் பிறப்பு கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கு தமிழர் மரபார்ந்த பல செய்திகளைத் தக்கச் சான்றோடு விளக்கிக் கூறி அரங்கை அதிரச்செய்தார்.

பின்பு பேசிய முனைவர் அரணமுறுவல், தை தமிழ் ஆண்டு தொடக்கமாக மாற்றியதற்கு தமிழக மக்களோ, தமிழ் அமைப்புகளோ போராடபோது அவர்களாகவே இந்த மாற்றத்தை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது, இந்த அறிவிப்பை மாற்றவில்லை யானால் தமிழறிஞர்கள் ஒன்றுகூடி தொடர் அறப்போராட்டங்களை நடத்துவோம் எனத் தெரிவித்தார்.

அடுத்து பேசிய கி.த. பச்சையப்பன், தமிழகத்தை தமிழர் ஆளாததுதான் இந்த நிலைக்குக் காரணம். தமிழரென்றால் தமிழ் உணர்வு இருக்கும் என்றார்.

இறுதியாகப் பேசிய இலக்குவனார் தமிழ் ஆண்டு காப்புக்குழு நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிட்டார்.

கொஞ்சம் தாமதம் (நேரம் அல்ல காலம்) ஆனாலும் நல்ல தொடக்கம் சரியான நேரத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணத்தோடு தமிழ் ஆண்டு காப்பு மாநாட்டுத் தொடக்கம் இங்கிருந்து ஆரம்பமாகிவிட்டது.

தமிழ் நாட்டில் தமிழ் அமைப்புகளுக்குப் பஞ்சமில்லை. தமிழனின் பண்பாட்டுக்கே பங்கம் நிகழும்போது நிச்சயமாக உருண்டோடும் நெல்லியாக இல்லாமல் அதிமானுக்கு அவ்வைப்பிராட்டி ஊட்டிய நெல்லிக்கனியாக ஒட்டுமொத்த இந்த மாநாட்டில் தமிழக அமைப்புகளும், தமிழக மக்களும் இணைவார்கள் என்ற நம்பிக்கை அங்கு குழுமியிருந்த அனைவர் கண்களிலும் தெரிந்தது.Blog Widget by LinkWithin