Saturday, May 21, 2005

தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலப் பெயரா?

தமிழ்நாட்டில் வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில்தா‎ன் பெயர் வைக்கவண்டும் எ‎ன்ற போராட்டம் வெடித்துள்ளது. பா.ம.க தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்களும், விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தி‎ன் தலைவர் தொல்.திருமாவளவ‎ன் அவர்களும் இந்தப் போராட்டத்தை மு‎ன்னெடுத்துச் செல்கின்றனர். அவர்கள் அமைத்து வழிநடத்தும் தமிழ்ப் பாதுகாப்பு ‏இயக்கத்தின் பணிகள் வரலாறு காணாத அளவுக்கு வெற்றிபெற்று வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

இந்தச் சூழலில், நடிகர் கமலகாச‎ன் தமிழ்ப்படத்திற்கு ஆங்கிலப் பெயர் சூட்டுவது தவறல்ல எ‎ன்றுகூறி, அதற்கு எடுத்துக்காட்டாக 'போ‎ன்', 'பஸ்' போ‎ன்றவைத் தமிழ்ச்சொற்கள் போலப் பய‎ன்படுவதாகச் சொல்ல¢யிருக்கிறார். (தினமணிச் செய்தி 29.9.04)

கருவிகள் வேறு கருத்துகள் வேறு. ஒரு திரைப்படமோ, நாடகமோ, கதையோ ஒரு செய்தியைச் சொல்வதாக ‏இருக்கவேண்டும். அத‎ன் பெயரும் அத‎ன் தாய்மொழியிலேயே ‏இருக்கவேண்டும்.

காசுக்காக எல்லா மொழிப் படங்களிலும் வேசம்போடும் நடிகனுக்குத் தாய்மொழிமீது பாசம் ‏இருக்க முடியாதுதா‎ன். அதற்காக அவ‎ன் அதையே போதனை செய்ய முற்படக்கூடாது. தனது அடுத்த படத்திற்குத் தமிழ்பாதி ஆங்கிலம் பாதி கலந்து பெயரிடுவாராம்! த‎ன் குழந்தைக்குத் தான் பாதி அடுத்தவர் பாதி தந்தை என்பாரோ?

தமிழர்கள் நடிகர்களைப் போற்றத் தொடங்கியதால், ஒவ்வொரு நடிகனும் த‎ன் விளம்பரத்தை வைத்துத் தமிழை எப்படியும் கேவலப்படுத்தலாம் எ‎ன்று துணிந்துவிட்டார்கள். இவர்களை இனியும் பொறுப்பது கூடாது.

Sunday, May 15, 2005

தமிழ் அறிவும்! தமிழ் உணர்வும்!

இனிய தமிழ‎ன்பர் பெருமக்களே, வணக்கம். வாழ்க; தமிழ்நலம் சூழ்க!

தமிழ் அறிவு எ‎ன்பதற்கும் தமிழ் உணர்வு எ‎ன்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. தமிழ் ‏இலக்கண இலக்கியங்களைப் படித்தும் சிறந்த தேர்ச்சியும் பெற்ற ஒருவர் தமிழ் அறிவு பெற்றவராக ஆக முடியும். ஆனால், அவர் தமிழ் உணர்வு பெற்றவராக ஆக முடியும் எ‎ன்பது நிச்சயமல்ல. தமிழைப் பற்றி ஒருவர் அறிந்து வைத்திருக்கி‎ன்ற செய்திகளை வைத்து தமிழ் அறிவு உண்டாகும். எந்தச் சூழலிலும் சொந்த மொழியையும் இனத்தையும் பண்பாட்டையும் பேணிக்காக்கும் மனவுறுதியே தமிழ் உணர்வு எ‎ன்பதாகும்.

எ‎ன் தாய்மொழியை நான் இழக்க முடியாது; என் தாய்மொழியை அழிக்க இன்னொரு மொழ¢க்கு இடந்தர முடியாது; எத்தனை மொழிகளைக் கற்றாலும் எ‎ன் தாய்மொழியைக் கல்லாமல் இருக்க முடியாது என்பவ தமிழ் உணர்வி‎ன் சில அடையாளங்கள்.

தமிழ் அறிவு ‏இருந்து தமிழ் உணர்வு இல்லாதவர்கள் தமிழுக்காகப் பெரிதாக எதுவும் செய்யமாட்டார்கள். தமிழ் உணர்வு ‏இருந்து தமிழ் அறிவு இல்லாதவர்கள் தமிழுக்குச் செய்வதாக எண்ணி இலக்கு தெரியாமல் எதையாவது செய்துவிடுவார்கள். தமிழ் அறிவோடு தமிழ் உணர்வும் பற்றவர்கள்தாம் தமிழுக்காகச் செய்யவேண்டிய உருப்படியான செயல்களைச் செவ்வனே செய்துமுடிப்பார்கள்.

தமிழால் கிடைக்கும் எல்லாவகையான ஏந்து(வசதி)களையும் வாய்ப்புகளையும் எப்பாடுபட்டாகிலும் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ ஆளாய்ப்பறக்கும் நம்மவர்கள் சிலர், தமிழுக்காக ஒரு சிறு ந‎ன்மையும் செய்வது கிடையாது. இவர்களி‎ன் இப்போக்கு மாறவேண்டும்; இவர்கள் உள்ளத்தில் தமிழ் உணர்வை ஏற்கவேண்டும்.

தமிழ் உணர்வு பெற தாய்மொழிக் கல்வி பெறுவோம்!

மெல்லத் தமிழ் இனி வாழும்

 • மெல்லத் தமிழ் இனி வாழும்...!


  கடந்த 17.9.2004ஆம் நாள‎ன்‎று இந்திய அரசாங்கம் தமிழைச் செம்மொழியாக அறிவிப்புச்செய்த பிறகு, தமிழுக்கு ஆக்கமான பல நற்செய்திகள் தே‎ன்போல நம் காதுகளில் வந்து பாய்ந்த வண்ணமாக உள்ளன. அவற்றுள் சில....

   தமிழை ‏இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்கக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
   தமிழ்த்திரைப்படங்களுக்குத் தமிழில்தா‎ன் பெயர்வைக்க வேண்டும் எனும் போராட்டம் வெற்றிபெற்று வருகிறது.
   தமிழ்நாட்டில் சாலை நெடுகிலும் உள்ள மைல்கற்களில் ஊர்ப்பெயர்கள் தமிழில் எழுதப்படுகி‎ன்றன.
   தமிழ்நாட்டில் உள்ள கடை விளம்பரப் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் தரவேண்டும் எ‎னும் இயக்கம் நடைபெறுகிறது.
   தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளிலும் தமிழ்ப்பாடம் கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது.
   தமிழி‎ன் தலமை நூலான திருக்குறள் இந்திய நாட்டி‎ன் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டுமென தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறவேற்றப்பட்டு, மத்திய அரச¢டம் வழங்கப்பட்டுள்ளது.
   இந்தியாவி‎ன் நடுவண் அரசு சார்பில் தமிழில் கணினி மெ‎ன்பொருள் கருவி வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளிலேயே தமிழ¢ல்தா‎ன் இப்படியொரு மென்பொருள் முதலாவதாக வெளியிடப்படுகிறது.

  தமிழுக்கு நல்ல எதிர்காலம் மலர்ந்துகொண்டிருக்கிறது எ‎ன்ற நம்பிக்கை இச்செய்திகள் மூலம் நம் உள்ளத்தில் பிறக்கிறது; மனம் மகிழ்கிறது!

வலைப்பூ அறிமுகம்

திருத்தமிழ் வலைப்பூ - அறிமுகம்
இனிய தமிழன்பர் பெருமக்களே,வணக்கம். வாழ்க! தமிழ்நலம் சூழ்க!
திருத்தமிழ் வலைப்பூ உங்களை அன்புடன் வரவேற்கிறது. இதன் வழி தங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறோம். தமிழ் மக்களின் மனங்களில் தமிழைப் பற்றிய தாழ்வெண்ணங்களைக் களைந்து, தமிழ்ப்பற்றையும் தமிழ் உணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில்தான் இந்த வலைப்பூ தொடங்கப் பட்டுள்ளது.
தமிழ்மொழி - இனம் - சமயம் - பண்பாடு - வாழ்வியல் - வரலாறு தொடர்பான பயனான செய்திகள் இந்த வலைப்பூவில் இடம்பெறவுள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவிக்க விழைகிறோம்.
தமிழைப் பற்றிய உயர்வான உண்மைகள் தமிழ் மக்களால் இன்னும் முழுமையாக உணரப்படவில்லை. முழுமையாகவும் உண்மையாகவும் உணர்த்தப்படாமை அதற்கொரு முகாமையான காரணமாகும். திருத்தமிழ் வலைப்பூ இனி இந்தச் செம்மாந்தப் பணியை முன்னெடுத்துச் செல்லும். தமிழைப் பற்றி தமிழர்களுக்கு உணர்த்துவதற்குப் பாடுபடும்.
தமிழர் ஒவ்வொருவரும் தம் தாய்மொழிப் பெருமையையும் இனத்தின் பெருமையையும் உண்மையாகவே உணர்ந்துவிட்டால் உலகம் மதிக்கும் உன்னத இனமாகத் தமிழினம் மாறும்காலம் வெகு விரைவிலேயே மலரும்.
தமிழ் உணர்ச்சி ஒன்றே தமிழ்த் தேசியத்தை மீட்டெடுக்கும்!
தமிழ் வாழ்க! தமிழியம் வெல்க!
Blog Widget by LinkWithin