Wednesday, September 30, 2009

இந்திய நாட்டின் முதல் - மூத்தக் குடிமக்கள் தமிழர்களே

டந்த 26-9-2009இல் மலேசிய நாளிகைகளில் வெளிவந்த செய்தி இது. 'நேச்சர்' என்ற ஆங்கில ஏட்டில் வெளிவந்த இந்தச் செய்தியைத் தமிழ் நாளிகைகளும் வெளியிட்டுள்ளன.
இந்தியா என்று இன்று சொல்லப்படுகின்ற நாட்டின் ஆதி(பூர்வீக) குடிமக்கள் தென்னிந்தியர்களே அதாவது தமிழர்களே என்றும், இன்றைக்கு இந்தியாவை ஆதிக்கம் செய்யும் வட இந்திய இனம் பிற்காலத்தில் இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும் இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.


இப்படியொரு உண்மையை ஒரு தமிழன் கண்டறிந்து சொல்லியிருந்தால் இப்படி நாளிதழ் செய்தியாக வந்திருக்காது. காலங்காலமாக தமிழரை வல்லாதிக்கம் செய்துவருபவர்கள் இந்தச் செய்தியைகூட இந்நேரம் இருட்டடிப்புச் செய்திருப்பார்கள்.

எவனோ இருட்டடிப்புச் செய்வது இருக்கட்டும். வரலாற்று அறிவும் அறிவாராச்சிப் பார்வையும் கெட்டுப்போய்விட்ட தமிழர்களே இந்த ஆராய்ச்சி உண்மையை நம்ப மறுத்திருப்பார்கள்; மறுதளித்திருப்பார்கள். காலந்தோறும் காலத்தோறும் தமிழன் செய்து வந்திருக்கும் வரலாற்றுப் பிழையை இப்போதும் செய்திருப்பார்கள்.

ஆனால், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்த உண்மையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பவர்கள் தமிழர்கள் அல்லர். ஐதராபாத்தில் உள்ள மூலக்கூறு, மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையம், அமெரிக்காவின் ஆர்வர்டு பொது சுகாதார கல்லூரி, ஆர்வர்டு பிராட் கழகம், மாசசூசட்டு தொழில்நுட்பக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இப்படியொரு ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவுகளை ஐதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியருமான லால்ஜி சிங் என்பவரும் அதே மையத்தின் மூத்த அறிவியலாளர் குமாரசாமி தங்கராஜன் என்பவரும் மேற்கண்ட வகையில் ஆராய்ச்சி உண்மையை அறிவித்துள்ளனர்.

இவர்களின் ஆய்வின்படி, இந்தியாவின் தொன்மை இனங்களாக வட இந்தியரும் தென் இந்தியரும் (தமிழரும்) தான் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்த இரு தொன்மையான இந்தியர்களில், வடவர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மக்களிடனும் ஐரோப்பிய மக்களுடனும் மரபியல் அடிப்படையில் 40 முதல் 80 விழுக்காடு வரை ஒத்து இருக்கிறார்கள். அதாவது, அன்னியர்களின் மரபியல் கூறுகளோடு அதிகம் ஒத்துப் போகிறார்கள்.

அனால், தென்னவர்கள் உலகின் எந்த இன மக்களோடும் மரபியல் அடிப்படையில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது, அன்னியரின் கலப்படம் அறவே இல்லாமல் (தூய்மையாக) இருக்கிறார்கள். இதன்மூலம், தென்னக மக்கள்தான், இந்திய நாட்டின் ஆதிமக்கள் அல்லது முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

இந்திய நாட்டின் தொன்மையான இனம் எது? என்பது மீதான ஆய்விக் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்தப் புதிய முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. காரணம், இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த ஆய்வு முக்கியமான ஒன்றாகவும் அறிஞர்களின் விவாதத்திற்குரிய ஆய்வுப் பொருளாகவும் ஆகியிருக்கிறது.

பாவாணர் என்னும் தமிழன் கண்டுசொன்ன உண்மை

இப்போது வெளிவந்துள்ள இந்தச் செய்தி இப்படி இருக்க, தமிழினத்தில் தோன்றிய மாபெரும் அறிஞர் – ஆய்வாளர் – பன்மொழிப் பயின்ற மேதை மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் இந்த உண்மையயயும்; இதற்கு மேலே இன்னும் பல உண்மைகளையும் தம்முடையை 50ஆண்டுகால ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவியிருக்கிறார் என்பது நம்மில் பலர் அரியாமல் இருக்கலாம்.

1.மாந்தனின் முதல்மொழி தமிழே.
2.அந்தத் தமிழே ஆரியத்திற்கு மூலம்.
3.தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாந்தன் பிறந்தகம் குமரிக்கண்டம்.

என்னும் முப்பெரும் உண்மைகளைக் கண்டுகாட்டினார் – மொழியியல் சான்றுகளுடன் நிறுவிக்காட்டினார்.

பாவாணருடைய கண்டிபிடிப்பை ஆதிக்க இனத்தவரும் கற்றறிந்த இந்திய மேதைகளும் தமிழினப் பகைவர்களும் ஏளனமும் ஏகடியமும் செய்தார்களே அன்றி, இதுவரை எவரும் சான்றுபட மறுக்கவில்லை.

பாவாணர் கண்டறிந்து சொன்ன தமிழியற் கண்டுபிடிப்புகளை இருட்டடிப்புச் செய்து மறைப்பதற்கே இந்தியாவின் தலைவர்களாகவும் அறிஞர்களாகவும் ஆய்வாளர்களாவும் சொல்லப்பட்டவர்கள் முனைந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பாவாணர் என்ற ஒரு பேரறிஞரின் கண்டுபிடிப்புகள் எங்கேயும் எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலும் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழினப் பகைவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர்; இப்போதும் இருந்துவருகின்றனர் என்பது மறைக்க முடியாத வரலாறு.

ஆனால், பாவாணர் அன்று கண்டு சொன்ன உண்மைகள் இன்று மற்றவர்கள் வாயிலாக – மாற்றார்கள் மூலமாக வெளிவரத் தொடங்கிவிட்டன என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இப்போது வந்துள்ள இந்தச் செய்தியும் அதையேதான் பறைசாற்றுகிறது.

காலம் ஒருநாள் கண்டிப்பாக மாறும். உண்மைகள் தற்காலிகமாக மறைக்கப்படலாம். ஆனால், முற்றிலுமாக ஒழித்துக்கட்டி இல்லாமல் செய்துவிட முடியாது.

(மறைந்துபோன பழந்தமிழர் நாடு - குமரிக்கண்டம்)


உலகம் ஒருநாள் நமது தமிழையும் தமிழ் இனத்தையும் தமிழரின் பழந்தமிழ்நாடாகிய குமரிக்கண்டத்தையும் கண்டிப்பாகத் திரும்பிப் பார்க்கும் – திறந்து பார்க்கும் – ஆழந்து அகன்று ஆராய்ந்து பார்க்கும்.

அப்போது, உலகத்தின் பல வரலாறுகள் திருத்தப்படலாம் – உலக இனங்களின் வரலாறுகள் மாற்றி எழுதப்படலாம் – உலக மொழிகளின் வரலாற்று ஆவணங்கள் புதுப்பிக்கப்படலாம்.

அனைத்திற்கும் காலம் கண்டிப்பாக பதில் சொல்லியே தீரும். அப்படி, காலம் பதில் சொல்லும் காலத்தில் அதனை எண்ணிப் பெருமைபடுவதற்கு.. ஒருவேளை பூமிப்பந்தில் எந்த மூலையிலும் ஓர் ஒற்றைத் தமிழன்கூட இல்லாமல் போகலாம்.

தொடர்பான செய்திகள்:-

தமிழின வரலாறு 1, தமிழின வரலாறு 2

Friday, September 25, 2009

இனிய தமிழ் ஏடு; இலவய இதழ் - புதிய உதயம்

‘உதயம்’ என்ற பெயரில் மலேசியாவில் ஒரு தமிழ் இதழ் வெளிவந்தது, உங்களுக்குத் தெரியுமா? 1970, 80களில் தமிழ் மக்களிடையே அதிகம் வாசிக்கப்பட்ட இதழ் இந்த உதயம்.

நாட்டின் மூத்த ஊடகவியலாளரும் இப்போது மக்கள் ஓசை நாளிதழின் மூத்த செய்தியாளராகவும் இருக்கும் ஐயா எம்.துரைராஜ், வழக்கறிஞர் ஐயா பொன்முகம், திரு.தேவராஜ் முதலானோர் அன்றைய உதயம் இதழின் ஆசிரியர்களாக இருந்து பணியாற்றியவர்கள்.

அரசாங்கத்தின் கருத்துப் பரப்புரை ஏடாக இருந்ததோடு அல்லாமல், தமிழுக்கும் வளம் சேர்க்கும் வகையில் நல்லதோர் இலக்கிய ஏடாகவும் உதயம் வார்த்தெடுத்தப்பட்டது – வளர்த்தெடுக்கப்பட்டது.

ஏனோ தெரியவில்லை? என்ன காரணமோ புரியவில்லை? மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்த அந்த அருமை இதழ் நின்றுபோனது; அது பரப்பிய செந்தமிழ் மணம் மறைந்துபோனது. உதயத்தின் மறைவு அன்று பல்லாயிரம் மனங்களில் ஆறாத்துயரை மாறாநினைவாக விட்டுச்சென்றது – விதைத்துச் சென்றது என்பது வரலாறு.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் உதயமாகி இருக்கிறது அந்த அரசாங்க ஏடு. மலேசியத் தகவல் திணைக்களம் (Jabatan Penerangan Malaysia) இப்போது மீண்டும் இந்த இதழை வெளியிடத் தொடங்கியிருக்கிறது. இப்போது இதன் பெயர் “புதிய உதயம்”.

முழுக்க முழுக்க தமிழில் இவ்விதழ் வெளிவருகிறது; இலவயமாக வழங்கப்படுகிறது. நான்கு வண்ணத்தில் – தரமான வழவழப்புத் தாளில் – புதியவகை அச்சமைப்பில் - மிகவும் நேர்த்தியாக – பொழிவான தோற்றத்தில் – பார்ப்போர், படிப்போர் கவனத்தையும் கருத்தையும் பட்டென கவரும் வகையில் ‘புதிய உதயம்’ வெளியிடப்படுகிறது.

முற்றிலும் புதிய தோற்றத்தில் புதுமை அமைப்பில் புதுப்புது செய்திகளைத் தாங்கி ‘புதிய உதயம்’ மீண்டும் தமிழ்மணம் பரப்ப வந்திருக்கிறது; வாராது வந்த மாமணியாய் தமிழ் மக்களின் அறிவுப்பசிக்கு நல்விருந்தாக அமைந்திருக்கிறது.

இந்த 2009இல் இதுவரை மூன்று இதழ்கள் வெளிவந்துவிட்டன. தற்போது, திருமதி பத்மா செல்வராஜு அவர்களின் பொறுப்பில் இவ்வேடு நல்லதோர் தமிழ் ஏடாக – ஏடுகளுகெல்லாம் முன்மாதிரி ஏடாக வெளிவருகின்றது.

ஆனால், இதில் வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால், இப்படியொரு இதழ் வெளிவருகிறது என்பதே இன்னும் பலரும் அறியாமல் இருக்கின்றனர்; இலவயமாக கிடைக்கும் இனியதோர் இதழைப் படிக்காமல் இருக்கின்றனர்.

‘புதிய உதயம்’ அரசுசார்ந்த செய்திகளை வழங்கும் அதே வேளையில், கல்வி, சமூகம், பொருளாதாரம், பெற்றோரியல், அறிவியல், சமயம், விளையாட்டு, சுகாதாரம், தமிழ்மொழி, தொழில்நுட்பம், சிறுகதை, கவிதை என பல்வேறு வகையான படைப்புகளைப் பாங்குடன் பரிமாறுகிறது.


தமிழ்ப்பள்ளிகள், இடைநிலை; உயர்நிலைப்பள்ளிகள், ஆசிரியர் பயிற்சிக் கழகங்கள், தமிழ்மொழிக் கழகங்கள், பொது இயக்கங்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்த இதழ் பயனாக அமையும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

குறிப்பாக, தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் தமிழைப் பயிலும் மாணவர்களுக்கு இவ்விதழ் பெரும் நன்மையை அளிக்கும்; அவர்களின் தமிழ் வாசிப்பிற்குத் துணை நிற்கும்; தமிழ்மொழி ஆற்றலை வளர்த்தெடுக்கும். இன்னும் சொல்லப்போனால் அவர்களின் கல்விக்கும் தேர்வுக்கும்கூட துணைநூலாகப் பயன்படும்.

‘புதிய உதயம்’ இதழ் நாடு முழுவதுமுள்ள தகவல் திணைக்களம் (Jabatan Penerangan), மாவட்டத் தகவல் அலுவலகம் (Pejabat Penerangan Daerah) ஆகிய இடங்களில் இலவயமாகக் கிடைக்கும்.

பள்ளி நிருவாகங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பொது இயக்கங்கள், இளைஞர் அமைப்புகள் ஆகிய தரப்பினர் இந்த இதழைப் பரப்பும் நல்ல பணியை விரைந்து செய்யலாம்.

இந்தச் செய்தியைப் படிக்கும் அன்பர்கள், உங்களுக்கு அருகிலுள்ள தமிழ்ப் பள்ளிகள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பொது இயக்கங்கள், இளைஞர் இயக்கங்கள் ஆகியோருக்கு அன்புகூர்ந்து தெரியப்படுத்துங்கள்.


தமிழ்மக்களின் பேராதரவு இருந்தால் அரசாங்கம் வெளியிடும் இந்த இலவய இதழ்.. இனியத் தமிழ்பரப்பும் இந்த ஏடு.. எல்லாரும் படிக்கும் வகையில் பேரளவில் வெளிவரும்; மீண்டும் பாதியிலே நின்றுவிடாமல் பலகாலம் தொடர்ந்து வரும்.

‘புதிய உதயம்’ இதழ் தொடர்பாக மேல் விவரம் பெறுவதற்கு:-
திருமதி பத்மா செல்வராஜு (ஆசிரியர்)
மின்னஞ்சல்:- pathma@inform.gov.my கைப்பேசி:- 019-2808526

‘புதிய உதயம்’ முகவரி:-
Ketua Pengarang, Bahagian Penerbitan Dasar Negara,
Jabatan Penerangan Malaysia, Tingkat 12 Barat, Wisma Sime Darby,
Jalan Raja Laut, 50350 Kuala Lumpur. Tel:03-2173 4400 samb.4655

Wednesday, September 23, 2009

கோலாலம்பூரில், 6ஆவது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு 2009

ன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் ஏற்பாட்டில் '6ஆவது உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு 2009' மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது.

"உலகோடு நாம் - நம்மோடு உலகு" என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறும்.

மாநாட்டின் உட்பொருள்கள்:-

1.செம்மொழிகளில் தமிழின் தொன்மையும் சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகளும்.

2.காலந்தோறும், காலம் வெல்லும் தமிழ் இலக்கிய மேம்பாடு.

3.அன்றும் இன்றும் உலகளாவியத் தமிழர்களின் வாழ்வும் தாழ்வும்.

4.ஈழம் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள நெருக்கடிகளும் தீர்வுகளும்.

5.வையகத் தமிழர்களின் தொழில் வணிகம் - கணினி வளர்ச்சிப் போக்குகள்.


(படத்தைச் சொடுக்கி முழு விவரம் அறியவும்)


நாள்:- 26, 26, 27 செப்தெம்பர் 2009
இடம்:- கோலாலம்பூர் பல்கலைக்கழக வளாகம்


பி.கு:-25.9.2009 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மாநாட்டுத் தொடக்க விழாவில் தமிழ் மக்கள் அனைவரும் இலவயமாகக் கலந்துகொள்ளலாம்.
தொடர்புக்கு:- டாக்டர் எஸ்.தருமலிங்கம் 012-3082609

உறவு நிலையிலும் - அறிவு நிலையிலும் - ஆய்வு நிலையிலும் தமிழுக்கும் தமிழருக்கும் அடித்தளமாக விளங்கப்போகும் இம்மாநாட்டிற்குத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வரவேற்கப்படுகிறார்கள்.

Tuesday, September 22, 2009

நாட்டுப்புறப் பாடல்(3) : கும்மிப்பாட்டு


நாட்டுப்புறப் பாட்டுகளில் கும்மிப் பாட்டு எல்லாராலும் அறியப்பட்ட ஒன்றுதான். தொடக்கக் காலத்தில் நமது மலாயாவில் குடியேறிய நமது முன்னோர்கள், தோட்டப்புறங்களிலும் கோயில் திருவிழாக்களிலும் கும்மிப்பாட்டு பாடியிருக்கின்றனர். ஆனால், இன்றோ அதனைப் போலச்செய்து காட்டுவதற்குக்கூட ஆளில்லாத நிலைமை நமக்கு ஏற்பட்டுவிட்டது.


ஆயினும், தமிழகச் சிற்றூர்களில் கும்மிப்பாட்டுக் கலை இன்னமும் வாழ்ந்து வருகிறது. சில தமிழ்த் திரைப்படங்களில் இதனை நாம் பார்க்கலாம். தைப்பொங்கல் முதலான விழாக்காலங்களில் மக்கள் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியாக இதனை நாம் காண்பதற்கு வாய்ப்புள்ளது. மற்றபடி, மலேசியாவில் இதனைப் படைப்பதற்கு ஒருசில நடனக் குழுக்கள் இருப்பதாக அறியப்படுகிறது.

தமிழர்களின் பழங்காலக் கலைகளில் ஒன்றான கும்மிப்பாட்டு பற்றிய செய்திகள் பதினென் சித்தர் பாடல்களில் காணப்படுகிறது. பின்னர் வந்த மாபாவலன் பாரதியார்,

“வட்டமிட்டுப் பெண்கள்
வளைகரங்கள் தாமொடு ஒலிக்கக் கொட்டி
இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்
நெஞ்சத்தைப் பறிகொடுத்தேன்”
என்று தம்முடைய கும்மிப்பாட்டில் சொல்லுகிறார்.

மேலும், 'பெண்கள் விடுதலைக் கும்மியில்' இப்படி ஒரு கும்மிப்பாட்டையும் எழுதியுள்ளார்.

கும்மியடி! தமிழ்நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!

கும்மிப்பாட்டு பெண்களால் ஒரு குழுவாக வட்டத்தில் நின்று பாடப்பெறும். வட்டத்திற்கு நடுவில் பூக்கூடை, குத்துவிளக்கு என ஒரு பொருளை வைத்து அதைச் சுற்றிவந்து பாடுவர். கூடவே, குனிந்து நிமிர்தவாறும் கைகளைக் கொட்டிய(தட்டிய)வாறும் நளினமாக ஆடியும் வருவார்கள். கீழே உள்ள காணொளியில் இந்தக் காட்சியைக் காணலாம்.


கும்மிப்பாட்டு பெரும்பாலும் நிலாக்காலங்களிலும், திருவிழாக் காலங்களிலும் இன்னும் பிற ஊர் விழாக்கள், வீட்டு விழாக்களிலும் பாடப்படும். கும்மிப்பாட்டில் எள்ளலும் எகத்தாளமும் இழையோடி கேட்போரையும் இன்புறச் செய்யும். நாட்டுப்புற மக்களிடையே இயல்பாகிவிட்ட வழக்குச் சொற்களாலேயே இப்பாட்டுக் கட்டப்பட்டிருக்கும்.

கும்மியடி பெண்ணே! கும்மியடி!
கொங்க குலுங்கவே கும்மியடி
நம்மப் பொங்களும் சேர்ந்து – அவர
நாடிக் கும்மி யடியுங்கடி – அவரத்
தேடி கும்மி யடியுங்கடி!
நம்பிடக் காத்திட வந்தவண்டி – அவரை
நாடிக் கும்மி யடியுங்கடி - அவரத்
தேடி கும்மி யடியுங்கடி!

அந்தத்த ஊரின் மண்வாசனையைக் கும்மிப்பாட்டில் குழைத்துக் கொடுத்திருப்பது இதனுடைய சிறப்புகளில் ஒன்றாகும். இன்று நாம் அறியத்தக்க பல செய்திகளையும் வரலாற்றுத் தகவல்களையும் கூட சில கும்மிப்பாட்டுக்கள் தம்முள் ஒளித்து வைத்திருக்கின்றன. சான்றுக்கு ஒன்று பார்ப்போமா?

கொட்டடி கொட்டடி தாழம்பூ
குனிஞ்சு கொட்டடி தாழம்பூ
பந்தலிலே பாவக்கா
தொங்குது பார் ஏலக்கா
பையன் வருவான் பாத்துக்கோ
பணங் கொடுப்பான் வாங்கிக்கோ
சுருக்கு பையிலே போட்டுக்கோ
*வீராம் பட்டணம் போகலாம்
வெள்ள இட்டிலி வாங்கலாம்
சவுக்குத் தோப்பு போகலாம்
சமைத்து வச்சுத் தின்னலாம்
புளிய மரத்துப் போகலாம்
புளியங்கொட்டை பொறுக்கலாம்
பனை மரத்துக்குப் போகலாம்
பல்லாங்குழி ஆடலாம்

கிராமத்துச் சிறுபெண்கள் ஒன்றுகூடி தங்களுக்குப் பணம் கிடைத்தால் என்ன செய்யலாம் என்று பாடுவதாக இந்தக் கும்மி அமைந்துள்ளது. இதில் *‘வீராம் பட்டணம்’ என்ற ஓர் ஊரி பெயர் வருகிறது. இது வெளியன் என்பருடைய ஊராகும். இவ்வூர் விழாவுக்குச் சிறப்புப் பெற்றிருந்தது. அங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் செங்கேணியம்மன் திருவிழா நடக்கும். அதற்குப் பல ஊர்களிலிருந்து மக்கள் செல்வார்கள் என்ற செய்தியை இப்பாட்டு சொல்கிறது.

மேலும், அக்காலத்தில் இட்டிலி சுட்டு விற்கும் பழக்கம் கிராமங்களில் இருந்ததில்லை. அது செல்வர்களுக்கு மட்டுமே சொந்தமான உணவாக இருந்தது. ஆகவே, வீராம் பட்டணம் திருவிழா சென்றால் அங்கு வெண்ணிரத்தில் பூப்போன்ற இட்டிலி கிடைக்கும். அதை சுவைத்து உண்டு வரலாம் என்ற அக்கால நிலைமையை நமக்குக் காட்டுகிறது.

இப்படியாக, எழுதா இலக்கியமான நாட்டுப்புறக் கும்மிப்பாட்டு இன்று படித்தாலும் நமக்கு மனதில் மகிழ்வைக் கொடுத்து இதழோரம் சிறு புன்னகையை ஏற்படுத்திச் செல்கிறது.

Thursday, September 17, 2009

17.9.2009ஆம் நாள்.. தமிழ்ச் செம்மொழி நாள்

இன்று 17.09.2009. ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (17.09.2004) இந்திய நடுவண் அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்தது.


வரலாற்றுச் சிறப்புக்குரிய இந்த நாளை முன்னிட்டு

தமிழின் சிறப்புணர்த்தும் அடைமொழிகள்

பற்றி வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்.

தொடர்பான செய்தி:- தமிழ்ச் செம்மொழி நாள் , தமிழின் பொருள் 1, 2

Wednesday, September 16, 2009

1மலேசியா வலைப்பதிவில் தமிழ்:- மாண்புமிகு பிரதமருக்கு நன்றிமடல்


மதிப்பிற்கும் மாண்பிற்கும் உரிய,
மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்களே,

‘ஒரே மலேசியா’ என்ற உயரிய கோட்பாட்டினைப் பெருமையோடு மதித்துப் போற்றும் மலேசிய மக்களில் ஒருவனாக, மிகுந்த நெகிழ்ச்சியோடும் நன்றி உணர்ச்சியோடும் இந்த மடலை எழுதுகின்றேன்.

என்னுடைய மன நெகிழ்ச்சிக்கான காரணத்தை முதலில் தங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

இன்று (16.9.2009), மலேசியா உருவாக்கம் பெற்ற 46ஆம் ஆண்டு வரலாற்று நாள். சபா, சரவா ஆகிய இரு மாநிலங்களும் இணைக்கப்பட்டு மலாயா என இருந்த நம் நாடு மலேசியாவாக உருப்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். மலேசியர்கள் அனைவரும் பெருமையுடன் நினைத்துப்பார்க்க வேண்டிய ஒற்றுமைத் திருநாள்.

இதே நாளை, மலேசியாவின் இன்னுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகத்தான் நான் இப்போது பார்க்கிறேன்.

ஆம், டத்தோஸ்ரீ அவர்களே,
இன்றுதான், தங்களின் ஒரே மலேசியா வலைப்பதிவு முதன்முறையாக எங்கள் அழகுதமிழில் உலாவர தொடங்கியிருக்கிறது. ஒரே மலேசியா வலைப்பதிவில் ஓங்குபுகழ் தமிழுக்கும் அரியணை கிடைத்திருக்கிறது; ஆங்கிலம், மலாய், சீனம் ஆகிய மொழிகளில் மட்டுமே இயங்கிய ஒரே மலேசியா வலைப்பதிவு இன்றுதொடங்கி எங்கள் அன்னைமொழியாம் அழகார்ந்த செந்தமிழ் பேசுகிறது. அதைக்கண்டு, எங்கள் உள்ளமெல்லாம் சிலிர்க்கிறது; மகிழ்ச்சி.. மகிழ்ச்சி என ஆர்ப்பரிக்கிறது.

மாண்புமிகு டத்தோஸ்ரீ அவர்களே,
தாங்கள் அறிமுகப்படுத்திய ஒரே மலேசியா கொள்கையில் இதுவோர் முகமையான விடயமாகும். தொடக்கத்தில் ஒரே மலேசியா வலைப்பதிவில் தமிழ்மொழி இல்லாததைக் கண்டு மலேசியத் தமிழர்கள் கொஞ்சம் துணுக்குற்றுப் போயினர். இன்னும் சொல்லப்போனால், அதிர்ச்சியும் அடந்திருந்தனர்.

தமிழ் மக்களின் இந்த மனக்குறை தமிழ் நாளிகைகள், தமிழ் வலைப்பதிவுகள் முதலானவற்றின் வழியாக தங்கள் மேலான பார்வைக்கு முன்வைக்கப்பட்டது. இதற்கோர் நல்ல தீர்வைச் தாங்கள் கண்டிப்பாகச் செய்வீர்கள் என மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஒரே மலேசியா வலைப்பதிவில் தமிழுக்கும் இடம்வேண்டும் என்கிற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்டு இப்போது எங்கள் இன்னுயிர்த் தமிழையும் இணைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்வும் பெருமையும் எய்துகின்றோம்.

எங்களின் உணர்வுகளுக்கும் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கும் வகையில் தாங்கள் செய்திருக்கும் இந்த மேன்மையான செயலைக் கண்டு, தங்களுக்கு இருகரம்கூப்பி நன்றி சொல்வதைக் கடமையாகவும் கட்டயமாகவும் கொள்கின்றோம்.

மலேசியப் பிரதமராகிய தங்களின் வலைப்பதிவில், நாட்டின் மற்றைய மொழிகளுக்கு இணையாக தமிழையும் இடம்பெறச் செய்திருப்பதை எங்கள் தமிழ்கூறு நல்லுலகம் ஒரு வரலாற்றுச் சாதனையாகவே பதிவுசெய்துகொள்ளும் என நம்புகிறேன்.

மாண்புமிகு டத்தோஸ்ரீ அவர்களே,
இனி, தங்களின் சீரிய சிந்தனைகளும் ஏற்றமிகு ஏடல்களும் எங்களுக்கு இனியத் தமிழ் வழியிலேயே கிடைக்கப்பெறும். அவற்றை ஆழந்து உணர்ந்துகொண்டு தங்களின் வழிகாட்டுதலில் செயல்படுவதற்கு அணியமாக இருக்கின்றோம் என்பதைத் தெரிவிக்க விழைகிறேன்.

இறுதியாக, தமிழ் மக்களின் உள்ளத்துக்கு மிக நெறுக்கத்தில் இருக்கும் தமிழுக்கு ஒரே மலேசியா வலைப்பதிவில் இடம்கொடுத்ததன் பயனாகத் தாங்கள் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கிறீர்கள் என்று சொன்னால் மிகையில்லை. இதுபோலவே, எங்கள் மக்கள் உள்ளங்களில் இன்னும் தேங்கிக்கிடக்கும் பல்வேறு குறைபாடுகளுக்கும் குழப்பங்களுக்கும் படிப்படியாகத் தீர்வுகளைக் கண்டு தமிழர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றிவைப்பீர்கள் என மனதார நம்புகிறேன். மீண்டும் நெஞ்சார்ந்த நன்றியினைச் சொல்லி விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்.

அன்புடன்,
மலேசியத் தமிழர்கள் சார்பில்,
திருத்தமிழ் ஊழியன்,
சுப.நற்குணன்.

தொடர்பான செய்தி:-
1மலேசியா வலைப்பதிவு: மாண்புமிகு பிரதமருக்கு ஓர் அன்புமடல்.

பி.கு:- மாண்புமிகு பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டியது தமிழர் அனைவருடைய கடமையாகும். உங்கள் நன்றியறிதலைத் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்.

ஒரே மலேசியா வலைப்பதிவைத் தமிழில் படிக்க

இங்கே சொடுக்கவும்

Monday, September 14, 2009

இவனா தமிழன்? இருக்காது! யானைக்குப் பூனை பிறக்காது!

  • மனதைத் தொட்ட மரபுக்கவிதை - 2
மலேசியாவில் தமிழ் தமிழாக நிலவுவதற்கும் நிலைபெறுவதற்கும் அரும் பாடாற்றி வரும் விரல்விட்டுச் சொல்லத் தகுந்தவர்களில் குரல்விட்டுச் சொல்லத்தக்கவர் கவிஞர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள். தமிழே தம் மூச்சாக வாழ்ந்து வருபவர் இவர். இதழியல் துறையில் மிக ஆழ்ந்த ஈடுபாடும் நீண்ட பட்டறிவும் கொண்டவர்.

தமிழ் இலக்கணத்தின் மரபியலையும் மரபுக் கவிதையின் மாண்பியலையும் தனியராகவே முயன்று காப்பதோடு, இவ்விரண்டையும் இளையோருக்குப் பயிற்றுவிக்கும் அரிய பணியையும் அயராது மேற்கொண்டு வருபவர். அதற்காகவே, நாடெங்கிலும் பம்பரமாகச் சுற்றிச்சுழன்று வகுப்புகள், பட்டறைகள், பயிலரங்குகள் என செயற்கரிய செய்பவர். இலக்கணமும் மரபுக் கவிதையும் கடுமையானது என்ற பொய்யான பரப்புரைகளை அடித்து நொறுக்கி அவை இரண்டையும் எளிதாகவும் இனிதாகவும் ஆக்கிக்காட்டிய பெருமை இவரையே சாரும்.

இவருடைய தொல்காப்பியத் திருப்பணியைப் போற்றி, தமிழகத்தின் தமிழ்ச்சுரங்கம் அமைப்பு கடந்த 2007ஆம் ஆண்டில் இவருக்கு ‘தொல்காப்பிய விருது’ வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இறையருட்கவிஞர் நல்லார்க்கினியர் என்று எல்லாராலும் அன்பொழுக அழைக்கப்பெறும் இவர் ‘உங்கள் குரல்’ மாதிகையின் ஆசிரியராகவும் இருந்து நல்லதமிழ் வாழ்வுக்கும் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கும் வருந்தி உழைக்கின்றவர். கடந்த 2008இல் தனியொருவராக இருந்து உலக அளவில் முதன்முதலாக ‘தமிழ்ச் செம்மொழி சிறப்புமலரை’ வெளியிட்டு சாதனையை நிகழ்த்திக் காட்டியவர்; மலேசியத் தமிழ் வரலாற்றில் கண்டிப்பாக இடம்பெற வேண்டியவர்.

கவிஞர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள் தம்முடைய உங்கள் குரல் இதழில் (ஆகத்து 2007) எழுதிய இவனா தமிழன்? என்ற கவிதை பற்றிய எனது பார்வையை இங்கு பதிவு செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
***************

டுத்த எடுப்பிலேயே இவனா தமிழன்? என்று நச்சென்று தொடங்கும் சீர்களில் கொப்பளிக்கும் அறச்சீற்றம் கவிதையை ஆறவமர இறுதிவரை படிக்கச் செய்துவிடுகிறது. சொல்லுக்குச் சொல் தமிழுக்கு எதிரான கேடுகளையும் மொழிமானங்கெட்டக் கேடர்களையும் பல்லுக்குப் பல் தட்டுகிறார்.

இவனா தமிழன்? இருக்காது
யானைக்குப் பூனை பிறக்காது!
இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால்
எதிரிக்கும் கூடப் பொறுக்காது – இவன்
இனத்துக்கு நேர்ந்த குறைபேறு!

தமிழ்மரபுவழி வந்த தமிழர்களே இன்று கோடரிக் காம்புகளாக மாறி, தமிழையே வெட்டிச் சாய்க்கவும் வெறித்தனமாக சிதைக்கவும் செய்கின்றனர். சொந்த மொழிக்கு எதிராக இப்படியொரு ஈவிரக்கமற்றச் செயலை எப்படித்தான் செய்கிறார்களோ? என்று நாம் நினைப்பதற்குள் இப்படித்தான் செய்கிறார்கள் என்று கவிஞரே சொல்லிவிடுகிறார்.

தமிழால் வேலையில் சேருகிறான்
தமிழால் பதவியில் ஏறுகிறான்
தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி
தமிழ்மர பெல்லாம் மீறுகிறான் – அதை
தடுத்தால் பாம்பாய்ச் சீறுகிறான்!

மலேசியாவைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கான அரசுப்பணிகள் பெரும்பாலும் தமிழ்ப் படித்ததன் பயனாகவே கிடைக்கிறது. தமிழ் போட்ட பிச்சையால் பிழைப்பு நடத்திக்கொண்டே நன்றிகெட்டத்தனமாகத் தமிழுக்கு இரண்டகம் செய்கிறார்கள். அண்மையில் மலாயாப் பல்கலைகழகத் தமிழ்த்துறையில் அரங்கேறிய அவலங்களை இதற்குச் சான்றாகச் சொன்னால் மிகப் பொருந்தும். இப்படியான இரண்டகச் செயல்களைக் கண்டு நற்றமிழர் பலரும் நொந்துகொண்டிருக்கின்றனர்; கவிஞரும் வருந்திக்கொண்டிருக்கிறார். இந்த நோவும் வருத்தமும் இத்தோடு நின்றதா? என்றால் இல்லை. இன்னும் தொடர்கிறது இப்படி,

வடமொழி சொல்லைப் போற்றுகிறான்
வம்புக்கு தமிழில் ஏற்றுகிறான்
கடுமொழி என்றே கனித்தமிழ்ச் சொல்லைக்
கண்டவர் மொழியில் மாற்றுகிறான் – அதைக்
கடிந்தால் உடனே தூற்றுகிறான்!

வேண்டுமென்றே, வேண்டாத சொற்களைத் தமிழில் கலப்பது இன்று நவினமாகிவிட்டது. மக்கள் பேசுகிறார்கள், தோட்டத்தில் பேசுகிறார்கள், நகர மக்களுக்கு இதுதான் புரிகிறது, இதுதான் நடப்பியல் என்றெல்லாம் நியாயங்கள் கூறிக்கொண்டு ஆங்கிலம், மலாய், சமற்கிருதம் என இன்னும் பிற அன்னிய மொழிகளை அளவுக்கதிகமாகக் கலந்து தமிழைச் சீரழிக்கின்றனர்.

இதைவிட கொடுமை ஒன்றும் உண்டு. நவின படைப்பாளிகள் என கூறிக்கொண்டு ஒருதரப்பினர் இப்போது கொச்சை மொழிகளையும் பச்சைப் பச்சையாகவும் எழுதத் தொடங்கிவிட்டனர். இவற்றால், எதிர்காலத்தில் ஏற்படப்போகும் எதிர்விளைவுகளை இவர்கள் அறிந்தார்களில்லை. யாராவது அதனை எடுத்துச்சொன்னாலும் கொஞ்சமும் காதுகொடுப்பதே இல்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் நம் கண்முன்னாலேயே தாய்மொழி அழியும் என்றால் பொய்யில்லை. ஆனால், இவர்கள் இதனை நம்புவதே இல்லை. சரி, இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் தெரியுமா?

தானும் முறையாகப் படிப்பதில்லை
தகுந்தவர் சொன்னால் எடுப்பதில்லை
தானெனும் வீம்பில் தாங்கிய பணியில்
தன்கடன் பேணி நடப்பதில்லை – நல்ல
தமிழே இவனுக்குப் பிடிப்பதில்லை!

இப்படியெல்லாம் தமிழை அழிக்கிறார்களே என வருந்தி அழுதுகொண்டிருக்கும் உணர்வாளர்கள் பற்பலர். அவர்களுக்கெல்லாம் கவிஞர் ஓர் ஆறுதலையும் சொல்லிவைக்கிறார் அடுத்து.

இவனுக்கு முன்னே பலபேர்கள்
இவனுக்கும் பின்னே வருவார்கள்
தவணைகள் தீரும் தவறுகள் மாறும்
தமிழுக்கு நன்மை புரிவார்கள் – இவன்
தந்ததைத் தெருவில் எறிவார்கள்!

தமிழுக்கு எதிராகக் கேடுகளும் கீழறுப்புகளும் நடப்பது வரலாற்றில் புதிதல்ல. ஒரு காலத்தில் முக்கால் பங்கு வடமொழி கலந்து எழுதப்பட்ட ‘மணிப்பிரவாளம்’ இன்று சுவடு இல்லாமல் அழிந்துபோயிருப்பது இதற்கொரு நற்சான்று. காலந்தோறும், கெடுபுத்திகொண்டு தமிழுக்கு கேடிழைத்த கேடர்கள் செத்தொழிந்தார்களே அன்றி தமிழ் இன்றும் வளமோடு வாழுகின்றது. இன்று அப்படியே ஆங்கிலம் போன்ற அன்னிய மொழிகளைக் கலந்தெழுதும் கயவர்களும் காலத்தால் காணாமல் போய்விடுவர்; அவர்களின் படைப்புகளும் கரைந்துபோய்விடும் என்று கவிஞர் உணர்த்துவதாகவே தோன்றுகிறது. அடுத்து வரும் கண்ணியும் இதைத்தான் வலியுறுத்துகிறது.

தமிழ்நலம் கொன்றே பிழைப்பவனும்
தமிழுக்குத் தீங்கே இழைப்பவனும்
அமுதென நஞ்சை அருந்துவர் போலே
அழிவினைக் கூவி அழைப்பவனே – தான்
அடந்ததை எல்லாம் இழப்பவனே!

இவனா தமிழன்? என்ற கவிஞரின் வினாவுக்கு இந்நேரம் விடை கிடைத்திருக்க வேண்டுமே!
  • பி.கு: கடந்த 11-9-2009இல் தம்முடைய 62ஆம் அகவையை எட்டியிருக்கும் கவிஞர் ஐயா அவர்களுக்குத் திருத்தமிழ் வழியாகப் பணிவான வணக்கத்தைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன். ஐயா அவர்கள் நிலையான உடல்நலமும் நீடித்த ஆயுளும் பெற்று தமிழுக்குப் பணிசெய்ய இறைமைத் திருவுளம் வாய்க்கப்பெற வேண்டுமென மனதார இறைஞ்சுகிறேன். -சுப.நற்குணன்

Thursday, September 10, 2009

இந்திய ஆய்வியல் துறை, தமிழ் ஆய்வியல் துறையாக மாற வேண்டும்

மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை – தெளிவான அறிக்கை தேவை என்று தலைப்பிட்டு 9.9.2009ஆம் நாள் ‘மலேசிய நண்பன்’ நாளேடு வெளியிட்டுள்ள செய்தி இது. இந்திய ஆய்வியல் துறை சிக்கல் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத நிலையில் சிந்தனைக்குரிய சில விடயங்களை இச்செய்தி முன்வைக்கிறது.

மலாயாப் பல்கலைகழக இந்திய ஆய்வியல் துறை பெயர் மாற்றம் காணப்படும் என்றும் அத்துறையின் தலைவராக தமிழ் புலமைபெற்ற தமிழராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் சில மாதங்களுக்கு முன் அறிக்கை விடுத்திருந்தார் அதன் துணைவேந்தர்.

இந்திய ஆய்வியல் துறை என்று பெயரிடப்பட்டிருந்தாலும், அந்த துறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் அனைத்தும் தொடக்கக் காலம் முதல் தமிழ்மொழியில் மட்டுமே இருந்து வந்திருக்கின்றன.

இதற்குக் காரணம், தமிழர்களால் (தெலுங்கர், மலையாளிகள் உள்ளிட்ட) தமிழ்மொழி மாண்பு நிலைபெற உருவாக்கப்பட்ட ஆய்வுப் பிரிவு இது. ஒவ்வொரு தமிழனுக்கும் இதில் பங்குண்டு.

‘தமிழ் எங்கள் உயிர்’ என்று நிதி ஆரம்பிக்கப்பட்டு, அதன்மூலம் திரட்டப்பட்ட பணத்தைக்கொண்டுதான் இந்த ஆய்வியல் துறை உருவாக்கப்பட்டது.

மலாயாப் பல்கலைகழகப் பொறுப்பில் உள்ளவர்களும், உயர்க்கல்வி அமைச்சும் இந்த அவரலாற்றைத் தெரிந்துகொள்வது நல்லது. இந்தத் துறை மாற்றப்பட வேண்டுமா வேண்டாமா என்பதைத் தமிழர்கள் மட்டுமே முடிவு செய்ய முடியும்.

இந்திய ஆய்வியல் துறை என்றிருப்பதை தென்னாசிய ஆய்வியல் துறை என்று மாற்றி, தமிழுக்குரிய அங்கீகாரத்தைக் குறைத்துவிடும் நோக்கத்தில் முன்மொழியப்பட்ட கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், இதுவரை இழுத்தடித்தது தவறு.

இச்செயலைக் கண்டிக்கும் முகத்தான், தமிழ்மொழியின்பால் அக்கறை கொண்ட சுமார் 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றுகூடி, துணைவேந்தரின் தகாத கருத்துக்கு மறுப்பு தெரிவித்து துணைவேந்தரிடமும் அரசாங்கத்திடமும் அறிக்கை கொடுத்தனர். இருப்பினும், இரண்டு தரப்பினரும் இதுவரை எழுத்துப்பூர்வமான பதில் தரவில்லை. என்றாலும், துணைவேந்தர் தன்னுடைய மாற்றுத் திட்டத்தில் பிடிவாதமாய் இருந்தார்.

கடைசியாக அமைச்சரவையில் பேசப்பட்டு, இந்திய ஆய்வியல் துறை மாற்றம் பெறாது என்றும், இந்தியர் ஒருவரே தலைவராய் நியமிக்கப்படுவார் என்றும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக, மனிதவள அமைச்சர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் அறிக்கை விடுத்திருந்தார். அதனால், நமக்கு மன ஆறுதல் ஏற்பட்டது.

இருப்பினும், அமைச்சரின் அறிக்கை தெளிவாக இல்லை. அமைச்சரவையில் பேசப்பட்ட முழு விவரமும் வெளியிடப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட உயர்க்கல்வி அமைச்சரும் இதுவரை மௌனமாக இருக்கிறார்.

தமிழ்மொழியை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வுத்துறை சம்பந்தமான எந்த மாற்றமும் தமிழர்களின் ஒப்புதல் இல்லாமல் நடைபெறாது என்ற உறுதிமொழி வேண்டும்.

மற்றொன்று, இந்திய ஆய்வியல் துறை என்று பெயர் வைத்திருப்பதால், இந்தியர் என்ற பெயரில் எவரும் எவரையேனும் கொண்டு அந்தத் துறையின் தலைவர் பொறுப்பு கொடுக்கப்படலாம் என்று துணைவேந்தர் போன்றவர்கள் எண்ணிவிடுகின்றனர்.

அந்த தப்பான எண்ணத்திலிருந்து விடுபட வேண்டுமானால், இப்போது ஏற்பட்டிருக்கும் குழப்பத்தையும் தெளிவுபடுத்த வேண்டும். அதற்குரிய ஒரே வழி, ‘இந்திய ஆய்வியல் துறை’ என்பதை அகற்றிவிட்டு ‘தமிழ் ஆய்வியல் துறை’ என்று பெயரிடப்பட வேண்டும்.

மேலும், தமிழ்மொழியில் மேற்கொள்ளப்படும் ஆய்வுத் துறைக்கு தமிழ்மொழியில் புலமைபெற்ற தலைவரைத்தான் நியமிக்க வேண்டும்.

மலாயாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உருவாக்கிய வேண்டப்படாத சிக்கலுக்குச் சரியான விடையைத் தெளிந்து சொல்லவும், இங்கு சொல்லப்பட்ட கருத்துகள் மீது விவாதம் செய்யவும் ‘கருத்துப் பரிமாற்றக் கூட்டத்திற்கு’ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

நாள்:- 11-9-2009 (வெள்ளி)

நேரம்:- மாலை மணி 6.00

இடம்:- கே.ஆர்.சோமா அரங்கம், விசுமா துன் சம்பந்தன், கோலாலம்பூர்

இக்கூட்டம், வழக்கறிஞர் பொன்முகம் தலைமையில் நடைபெறும். கல்விமான்களும், தமிழ்மொழியின்பால் அக்கறையுள்ள அமைப்புகளும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

  • நன்றி: மலேசிய நண்பன் (9.9.09)

Friday, September 04, 2009

மலையகம் கண்ட ‘உலகத் தமிழர்’ ஐயா இர.ந.வீரப்பனார்

நமது மலேசியா கண்டெடுத்த தமிழ்ச் சான்றோர்களில் அமரர் ஐயா.இர.ந.வீரப்பனார் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர். உலகமெங்கும் தமிழர் இருக்கலாம். ஆனால், ‘உலகத் தமிழர்’ என்று தமிழ்க்கூறு நல்லுலகம் பெருமைப்படுத்திய பெருமகனார் இவர் மட்டும்தான்.

அன்னாரின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியும், 'இர.ந.வீரப்பனார் வாழ்வும் வரலாறும்' நூல் வெளியீடும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா.பழ.நெடுமாறனார் தலைமையில் கோலாலம்பூரில் மாபெரும் எழுச்சியோடு நடைபெற உள்ளது.

தமிழையும் – தமிழரையும் – தமிழர் வாழ்வையும் ஆராய்வதையே தம்முடைய வாழ்நாள் பணியாக மேற்கொண்டவர் ஐயா இர.ந.வீரப்பனார். ஏறக்குறைய 43 நாடுகளுக்குப் சுற்றுச்செலவு(பயணம்) மேற்கொண்டு அங்குள்ள தமிழர்களிடம் உறவு பாராட்டியவர் - கள ஆய்வுப்பணி செய்தவர். 40 நாடுகளில் வாழும் தமிழருக்காக – தமிழ் வாழ்வுக்காகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தைத் தோற்றுவித்தவர்.

தம் வாழ்நாளில் 33 அரிய நூல்களை எழுதி வெளியிட்டு, மலேசியத் தமிழர்களுக்கே பெருமை தேடிக் கொடுத்தவர் – உலகத் தமிழரிடையே மலேசியத் தமிழையும் தமிழரையும் அறிமுகம் செய்துவைத்தவர். உலகத் தமிழர்களையும் அவர்களின் அயலக வாழ்வையும் மலேசியத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டியவர்.

ஐயா.இர.ந.வீரப்பன் அவர்கள் 8.6.1930இல் கண்டி நுவரேலியா தோட்டம், இலங்கையில் பிறந்தவர். இருந்தாலும், அவர் வாழிடமாக நமது மலேசியாவைத் தேர்ந்து கொண்டார். இவருடைய பெற்றோர்கள் நடேசன் – இரத்தினம் வாழ்விணையர். இவர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து பின்னர் மலேசியாவில் குடியேறினார்.

மலேசியாவையே தாய்நாடக ஏற்றுக்கொண்டு மலேசியத் தமிழருக்காகவே தம் வாழ்நாள் முழுவதையும் ஒப்புக்கொடுத்தார். தொடக்கத்தில், பல தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றி ஆசிரியப் பணியை இறைப்பணியாகவே மேற்கொண்டிருந்தார்.

1953இல் ஈச்ச மரத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கி தொடர்ந்து தென்னை மரத் தோட்டத் தமிழ்ப்பள்ளி, இரசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான் மிட்லேண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பந்திங் சுங்கை சோ தமிழ்ப்பள்ளி, காப்பார் நகரத் தமிழ்ப்பள்ளி என பணியாற்றி 1985இல் ஓய்வு பெற்றார். அதன் பின்னர், 1990 வரையில் கிள்ளான் அப்துல் சமாட் இடைநிலைப்பள்ளியில் தமிழ்மொழி கற்பித்துள்ளார்.

மற்றவர்களைப் போல அவரவர் பொறுப்பை அவரவர் செய்வர் என்று அமைதி கொள்பவரல்லர் இவர். எந்தச் செயலானும், அதில் தாமும் ஈடுபட்டு பிறருக்கும் செயலூக்கம் ஊட்டுவதில் வல்லவராக இருந்தார். செயல்படாதவர்களைத் துணிந்து அகற்றுவதிலும் இவர் தயக்கம் காட்டியதும் இல்லை.

மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், தமிழ் இலக்கியக் கழகம் முதலான அமைப்புகளை மலேசியாவில் தோற்றுவித்தவர் ஐயா வீரப்பனார்தான். இன்றும் இவ்விரு இயக்கங்களும் தமிழுக்கு ஆக்கமான பணிகளை அமைதியாகச் செய்து வருகின்றன.

சிறுகதை, ஆராய்ச்சிக் கட்டுரை, ஆய்வுப் பணிகள், இலக்கிய நாடகம் நடத்துதல், மொழிப் போராட்டம், உலகளாவிய தமிழ்ப் பண்பாட்டுத் தொடர்புகள் என பல துறைகளில் ஈடுபட்டு காலத்தால் எண்ணத்தக்க அரிய தொண்டாற்றிய ஐயா இர.ந.வீரப்பனார் 3.9.1999இல் இறைவனடி சேர்ந்தார்.

தமிழனின் மண் – இனம் – மொழி – பண்பாடு காக்கப்பட வேண்டும் என்று காலமெல்லாம் முழங்கியவர் மட்டுமன்று, அதற்குரிய ஆக்கமான பணிகளை நிலைபடச் செய்தவரும் கூட. இதற்குச் சில சான்றுகளையும் அடுக்கிக் கூறலாம்.

ஆரிய மேலாண்மையும் ஆணாதிக்கச் சிந்தனையும் சூழ்ந்திருந்த தமிழ் மக்களிடம் பெண்மையைப் போற்றுதலே தமிழர் மரபு என்பதை வலியுறுத்தும் வண்ணம் தம் பெயருக்குரிய தலையெழுத்தாக முதலில் தாயின் பெயரையும் அடுத்ததாக தந்தையின் பெயரையும் இணைத்துக் கொண்டார்.

தாம் கைக்கொண்ட தமிழியச் சிந்தனைகளை தம்முடைய குழந்தைகளுக்கும் ஊட்டி வளர்த்தெடுத்தார். அவர்களுக்கு திருமேனி, பொன்னி, அருணன், முல்லை என்று அழகுதமிழ்ப் பெயர்ச்சூட்டி தமிழ் உணர்வூட்டி ஆளாக்கியிருக்கிறார். அன்னாரின் மகளார் வீ.முல்லை இன்று நாடறிந்த எழுத்தாளராகவும் தமிழியச் சிந்தனையாளராகவும் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயா அவர்களின் அரும்பணிகளை ஒவ்வொரு மலேசியத் தமிழரும் போற்றிக்கொள்ள வேண்டியன. அன்னாரின் செயற்பாடுகள் மிகவும் அளப்பரியன என்பதற்கு, இன்றையத் தலைமுறையைச் சேர்ந்த எம்போன்றோர் மனங்களில் அவர் இடம்பிடித்திருப்பதே தக்க சான்றாகும். அதுமட்டுமல்லாது, தமிழகப் பாவலர் ஐயா கதிர் முத்தையனார், இலண்டனைச் சேர்ந்த ஐயா சுரதா முருகையனார் முதலானோர் இர.ந.வீரப்பனாரைப் பற்றி பல நூல்களை எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியான பெருமைக்குரிய அந்தத் தமிழறிஞருக்குக் கோலாலம்பூரில் பத்தாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அத்துடன், அன்னாரின் அருமை மகளார் திருமதி வீ.முல்லை நாகராசு எழுதிய ‘இர.ந.வீரப்பனார் வாழ்வும் வரலாறும்’ எனும் நூல் வெளியீடும் நடக்கவுள்ளது.


நாள்:- 6-9-2009 (ஞாயிறு)
நேரம்:- பிற்பகல் 2.30
இடம்:- டத்தோ கே.ஆர் சோமா அரங்கம், விசுமா துன் சம்பந்தன், கோலாலம்பூர்
சிறப்பு வருகை:- ஐயா பழ நெடுமாறனார், தலைவர்-உலகத் தமிழர் பேரமைப்பு

நம்மிடையே இன்று தமிழும் – தமிழ்ப் பண்பாடும் – தமிழ் விழுமியங்களும் செழித்து இருப்பதற்கு ஊற்றாகவும் உரமாகவும் இருந்து மறைந்த தமிழின முன்னோர்களை நன்றியோடு நினைவுகூருவோம்! அவர்களின் அடியொற்றி மொழி – இன – சமய – பண்பாட்டு மரபுகளைக் காத்துநிற்போம்!

Thursday, September 03, 2009

மீட்கப்பட்டது.. இந்திய ஆய்வியல் துறை மட்டுமல்ல; நமது இனத்தின் மானமும்தான்!

மலாயாப் பல்கலைக்கழகத்தில் கடந்த 53 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் இந்திய ஆய்வியல் துறை,

- தனித்துறை என்கின்ற அதன் தரம் குறைக்கப்படுகிறது
- அதன் தலைமைப் பொறுப்பு அன்னியர்களிடம் கைமாறுகிறது
- தெற்காசிய ஆய்வியல் துறை என பெயர்மாற்றம் செய்யப்படுகிறது
- அங்கு ‘தமிழ்’ என்று இருந்த நிலை மாறி ‘தமிழும்’ என்ற நிலை உருவாகிறது
- நாட்டில் தமிழ்மொழிக் கல்விக்காக இருக்கும் உச்சமான இடம் பறிபோகிறது


முதலான கசப்பான செய்திகள் கொஞ்ச காலமாக மலேசியத் தமிழர்கள் காதுகளில் இடியாக இறங்கிக்கொண்டிருந்தன - அதனால் தமிழ் உணர்வுள்ள இதயங்கள் வெந்துகொண்டிருந்தன.
இதற்கொரு நல்ல தீர்வு பிறக்காதா என தமிழ் உள்ளங்கள் ஏங்கிக்கொண்டிருந்தன; தமிழ்த்துறை பறிபோனதே என அழுது கொண்டிருந்தன; செய்வதறியாமல் புலம்பிக்கொண்டிருந்தன.

இப்படியொரு இக்கட்டான நிலையிலிருந்து இந்திய ஆய்வியல் துறை காப்பாற்றப்பட்டிருக்கும் - மீட்கப்பட்டிருக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பை நமது மாண்புமிகு அமைச்சர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ளார்.


இந்த அறிவிப்பின்படி, இந்திய ஆய்வியல் துறை என்னும் பெயர் நிலைநிறுத்தப்படும் எனவும், அதற்குத் தலைவராக ஓர் இந்தியரே நியமிக்கப்படுவார் என்றும் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

*(தலைவர் என்பவர் தமிழ்மொழியில் நிரம்ப தேர்ச்சியும் தெளிவும் நிருவாகத் திறமும் உள்ளவராக இருக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் வேண்டுகையும் உள்ளக்கிடக்கையும் ஆகும்)

இதற்கு முன்னதாக, நமது 127 பொது இயக்கங்கள் ஒன்றுகூடி வழக்குரைஞர் திரு.கா.ஆறுமுகம் தலைமையில் மலாயாப் பல்கலைக்கழக நிருவாகத்திடம் கோரிக்கை மனுவைக் கையளித்தனர். ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்கள் இந்திய ஆய்வியல் துறை நிலைநிறுத்தப்படும் என உறுதியளித்தார். மேலும், டத்தோ சி.சுப்பிரமணியம் அவர்களும் இந்திய ஆய்வியல் துறை நிலைநிறுத்தபட வேண்டும்; அதன் தரம் குறைக்கப்படக் கூடாது என கோரிக்கை விடுத்திருந்தார். இதுபோலவே, இன்னும் பல தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும், பற்றாளர்களும் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.*(இந்த விடயம் பற்றி அடியேனும் திருத்தமிழ் வலைப்பதிவில் இடுகையிட்டிருந்தேன். அதனைப் படிக்க இங்கு சொடுக்கவும்)

இத்தனைக்கும் பிறகுதான் நல்ல பலன் நமக்குக் கிடைத்துள்ளது; சமுதாயத்தின் ஒன்றுபட்ட குரலுக்கு மதிப்பு கிடைத்துள்ளது; நம்முடைய ஒற்றுமைக்கு வெற்றி கிடைத்துள்ளது. 1956இல் அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி தலைமையில் தமிழ்த்துறை அமைந்தபோது தமிழ் சமூகம் அடைந்தது போலவே மகிழ்ச்சியும் களிப்பும் இப்போதும் தமிழர் உள்ளங்களில் கரைபுரண்டு ஓடுகிறது.

கடந்த ஒரிரு மாத அளவீட்டில், இப்படியொரு பரிதாப நிலை இந்திய ஆய்வியல் துறைக்கு ஏற்பட்டதற்குக் காரணமாக இருந்த அதன் அதிகாரிகள் – உட்பகை எனும் புகையினுள் பூசலாட்டம் ஆடியவர்கள் மீது ஒட்டுமொத்த தமிழர்கள் சீற்றம் கொண்டிருந்தனர் – இன்னமும் அந்தச் சீற்றம் ஓயவில்லை! ஓய்ந்தும் போகாது!! அதுமட்டுமா? அதற்கான, கழுவாயை அவர்கள் கண்டிப்பாகச் செய்தாலன்றி அவர்களின் மீது விழுந்த கறை காலத்திற்கும் போகாது!!

நமது மொழி – இன – சமய – பண்பாட்டு – வரலாற்று விழுமியங்களைக் கட்டிக்காப்பதற்கு இம்மாதிரியான சீற்றங்களும் அறக்கோபங்களும் கண்டிப்பாகத் தேவை. அத்தோடு சேர்ந்து அறிவார்ந்த நடவடிக்கையும் தேவை. வெறும் ஆவேசமும் உணர்ச்சிப் பொங்கும் ஆர்ப்பாட்டமும் எப்போதும் முழுப் பயனைத் தந்துவிடாது. மாறாக, ஒன்றுபட்ட கோரிக்கையும் அறவழிப்பட்ட போராட்டமும் நிச்சியமாகப் நல்லப் பலனளிக்கும் என்பதற்கு இப்போது நடந்திருக்கும் நிகழ்வு நல்ல சான்று.

இருப்பினும் ஒன்றை மறக்கலாகாது. எப்போது, நல்லதை நோக்கிய நியாயமான சீற்றம் சமுதாயத்தில் நின்று போகிறதோ, அப்போது நமது சலுகைகள் மட்டுமல்ல சட்டபடியான உரிமைகள்கூட காணாமல் போகலாம்.

அவ்வகையில், தமிழ்க் குமுகாயத்தின் சீற்றமும் பொது இயக்கங்களின் ஊக்கமும் பொறுப்புள்ள தலைவர்களின் தலையீடும்தாம் நம்முடைய பாரம்பரிய உரிமைப் பொருளான தமிழ்த் துறையைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

1956இல் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள் தமிழ்த் துறைக்காக முன்னெடுத்து நடத்திய ‘தமிழ் எங்கள் உயிர்’ எனும் எழுச்சிமிகு போராட்டத்தின் எச்சங்கள் இன்றையத் தமிழர்கள் – தலைவர்கள் சிலரின் உள்ளங்களில் இன்னமும் எஞ்சியிருக்கிறது என்பதை இந்த வெற்றியின் பின்னணியில் கண்கூடாகக் காணமுடிகிறது.

மலேசியத் தமிழுக்கும் தமிழருக்கும் உச்சமான அடையாளமாக விளங்கும் இந்திய ஆய்வியல் துறையை மீட்டெடுக்கும் ‘தார்மிக’ பணியினைத் தாளராமல் முன்னெடுத்த தமிழர் (இந்தியர்) சார்ந்த பொது இயக்கங்கள், மலாயாப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் தமிழ்ச் சமுதாயம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது.

மலாயாப் பல்கலைக்கழக வரலாற்றில் தமிழ்மொழியின் நீடுநிலவலுக்கு உரம் சேர்த்திருக்கும் நல்லோர்கள் அனைவருக்கும் வரலாற்றில் நிச்சியமாக இடமிருக்கும்; மலேசியத் தமிழ் வரலாற்றில் அவர்களின் இந்த நற்பணி அழியாப் பதிவாக நிலைத்திருக்கும்.

நம்புங்கள் அன்பர்களே.. இன்று, மீட்கப்பட்டது...

நமது முன்னோர்களின் வியர்வையிலும் செந்நீரிலும் உருவாக்கப்பட்ட.. உண்டியல் காசிலும் உழைத்தப் பணத்திலும் எழுப்பப்பட்ட.. ஒன்றுபட்ட உணர்வின் எழுச்சியிலும் மொழி – இன மான உணர்ச்சியிலும் நிறுவப்பட்ட.. நமது இதயங்களோடும் உணர்வுகளோடும் கலந்துவிட்ட.. ‘தமிழ் எங்கள் உயிர்’ என்ற வீர முழக்கத்தில் கட்டியெழுப்பட்ட...


இந்திய ஆய்வியல் துறை.. மட்டுமல்ல..,
ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களின் மானமும்தான்!

Blog Widget by LinkWithin