Wednesday, September 16, 2009

1மலேசியா வலைப்பதிவில் தமிழ்:- மாண்புமிகு பிரதமருக்கு நன்றிமடல்


மதிப்பிற்கும் மாண்பிற்கும் உரிய,
மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் இரசாக் அவர்களே,

‘ஒரே மலேசியா’ என்ற உயரிய கோட்பாட்டினைப் பெருமையோடு மதித்துப் போற்றும் மலேசிய மக்களில் ஒருவனாக, மிகுந்த நெகிழ்ச்சியோடும் நன்றி உணர்ச்சியோடும் இந்த மடலை எழுதுகின்றேன்.

என்னுடைய மன நெகிழ்ச்சிக்கான காரணத்தை முதலில் தங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

இன்று (16.9.2009), மலேசியா உருவாக்கம் பெற்ற 46ஆம் ஆண்டு வரலாற்று நாள். சபா, சரவா ஆகிய இரு மாநிலங்களும் இணைக்கப்பட்டு மலாயா என இருந்த நம் நாடு மலேசியாவாக உருப்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். மலேசியர்கள் அனைவரும் பெருமையுடன் நினைத்துப்பார்க்க வேண்டிய ஒற்றுமைத் திருநாள்.

இதே நாளை, மலேசியாவின் இன்னுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகத்தான் நான் இப்போது பார்க்கிறேன்.

ஆம், டத்தோஸ்ரீ அவர்களே,
இன்றுதான், தங்களின் ஒரே மலேசியா வலைப்பதிவு முதன்முறையாக எங்கள் அழகுதமிழில் உலாவர தொடங்கியிருக்கிறது. ஒரே மலேசியா வலைப்பதிவில் ஓங்குபுகழ் தமிழுக்கும் அரியணை கிடைத்திருக்கிறது; ஆங்கிலம், மலாய், சீனம் ஆகிய மொழிகளில் மட்டுமே இயங்கிய ஒரே மலேசியா வலைப்பதிவு இன்றுதொடங்கி எங்கள் அன்னைமொழியாம் அழகார்ந்த செந்தமிழ் பேசுகிறது. அதைக்கண்டு, எங்கள் உள்ளமெல்லாம் சிலிர்க்கிறது; மகிழ்ச்சி.. மகிழ்ச்சி என ஆர்ப்பரிக்கிறது.

மாண்புமிகு டத்தோஸ்ரீ அவர்களே,
தாங்கள் அறிமுகப்படுத்திய ஒரே மலேசியா கொள்கையில் இதுவோர் முகமையான விடயமாகும். தொடக்கத்தில் ஒரே மலேசியா வலைப்பதிவில் தமிழ்மொழி இல்லாததைக் கண்டு மலேசியத் தமிழர்கள் கொஞ்சம் துணுக்குற்றுப் போயினர். இன்னும் சொல்லப்போனால், அதிர்ச்சியும் அடந்திருந்தனர்.

தமிழ் மக்களின் இந்த மனக்குறை தமிழ் நாளிகைகள், தமிழ் வலைப்பதிவுகள் முதலானவற்றின் வழியாக தங்கள் மேலான பார்வைக்கு முன்வைக்கப்பட்டது. இதற்கோர் நல்ல தீர்வைச் தாங்கள் கண்டிப்பாகச் செய்வீர்கள் என மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஒரே மலேசியா வலைப்பதிவில் தமிழுக்கும் இடம்வேண்டும் என்கிற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்டு இப்போது எங்கள் இன்னுயிர்த் தமிழையும் இணைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்வும் பெருமையும் எய்துகின்றோம்.

எங்களின் உணர்வுகளுக்கும் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கும் வகையில் தாங்கள் செய்திருக்கும் இந்த மேன்மையான செயலைக் கண்டு, தங்களுக்கு இருகரம்கூப்பி நன்றி சொல்வதைக் கடமையாகவும் கட்டயமாகவும் கொள்கின்றோம்.

மலேசியப் பிரதமராகிய தங்களின் வலைப்பதிவில், நாட்டின் மற்றைய மொழிகளுக்கு இணையாக தமிழையும் இடம்பெறச் செய்திருப்பதை எங்கள் தமிழ்கூறு நல்லுலகம் ஒரு வரலாற்றுச் சாதனையாகவே பதிவுசெய்துகொள்ளும் என நம்புகிறேன்.

மாண்புமிகு டத்தோஸ்ரீ அவர்களே,
இனி, தங்களின் சீரிய சிந்தனைகளும் ஏற்றமிகு ஏடல்களும் எங்களுக்கு இனியத் தமிழ் வழியிலேயே கிடைக்கப்பெறும். அவற்றை ஆழந்து உணர்ந்துகொண்டு தங்களின் வழிகாட்டுதலில் செயல்படுவதற்கு அணியமாக இருக்கின்றோம் என்பதைத் தெரிவிக்க விழைகிறேன்.

இறுதியாக, தமிழ் மக்களின் உள்ளத்துக்கு மிக நெறுக்கத்தில் இருக்கும் தமிழுக்கு ஒரே மலேசியா வலைப்பதிவில் இடம்கொடுத்ததன் பயனாகத் தாங்கள் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கிறீர்கள் என்று சொன்னால் மிகையில்லை. இதுபோலவே, எங்கள் மக்கள் உள்ளங்களில் இன்னும் தேங்கிக்கிடக்கும் பல்வேறு குறைபாடுகளுக்கும் குழப்பங்களுக்கும் படிப்படியாகத் தீர்வுகளைக் கண்டு தமிழர்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றிவைப்பீர்கள் என மனதார நம்புகிறேன். மீண்டும் நெஞ்சார்ந்த நன்றியினைச் சொல்லி விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்.

அன்புடன்,
மலேசியத் தமிழர்கள் சார்பில்,
திருத்தமிழ் ஊழியன்,
சுப.நற்குணன்.

தொடர்பான செய்தி:-
1மலேசியா வலைப்பதிவு: மாண்புமிகு பிரதமருக்கு ஓர் அன்புமடல்.

பி.கு:- மாண்புமிகு பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டியது தமிழர் அனைவருடைய கடமையாகும். உங்கள் நன்றியறிதலைத் தெரிவிக்க இங்கே சொடுக்கவும்.

ஒரே மலேசியா வலைப்பதிவைத் தமிழில் படிக்க

இங்கே சொடுக்கவும்

12 comments:

Anonymous said...

TERIMA KASIH KEPADA YANG AMAT BERHORMAT DATO SERI NAJIB.

Anonymous said...

http://datosubra.com/ இதற்கு என்ன கட்டுரை எழுதப் போகிறீர்! தமிழனே தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வில்லையே!

சுப.நற்குணன்,மலேசியா. said...

>பெயரில்லாத் திருத்தமிழ் அன்பர்களே,

அடுத்தமுறை பெயரோடு வாருங்கள்.

//http://datosubra.com/ இதற்கு என்ன கட்டுரை எழுதப் போகிறீர்! தமிழனே தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வில்லையே!//

டத்தோ சுப்ரா அவர்களுக்கும் வலைப்பதிவு எழுதும் இன்னும் பிற நமது - நமது இன - நமது தலைவர்கள் அனைவருக்கும் மாண்புமிகு பிரதமரின் செயல் முன்மாதிரியாக அமையட்டும்.

நமது தலைவர்களும் இனி தமிழில் வலைப்பதிவு எழுத வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் உரக்க எழுப்புவதற்கு முன் மாற்றங்கள் நடக்கும் என நம்புவோம்.

Anonymous said...

வணக்கம் ஐயா. நமது பிரதமர் அவர்கள் 1மலேசியா இணையப்பக்கத்தில் நமது அன்னை மொழியாம் செந்தமிழை மற்ற மொழிகளோடு இணைத்திருப்பது நமது ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயத்திற்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. நமது மொழிக்கும் முன்னுரிமை கொடுத்தமைக்கு அவருக்கு நமது நன்றியினை சமர்ப்பிப்போம். பிற இனத்தவர்கள் நமது மொழியை மதிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், தமிழர்கள்?

நம்பிக்கையுடன்,
உதயன்,
ஈப்போ.

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் உதயன்,

மீண்டும் உங்கள் மறுமொழியைக் காண்பதில் மகிழ்ச்சி.

//பிற இனத்தவர்கள் நமது மொழியை மதிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், தமிழர்கள்? //

தன்மொழியை விட
தன் இனத்தைவிட
தன் பண்பாட்டை விட
பிறருடையது சிறந்தது
என்ற தமிழர்தம் எண்ணமே
தமிழ் - தமிழர் வீழ்ச்சிக்குக் காரணம்.

சிவகுமார் சுப்புராமன் said...

தமிழர்கள் முதலில் தன் தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது மிக முக்கியம். ஆங்கிலத்தில் பேசுவது நாகரீகம் அல்ல, அநாகரீகம் என்பதை தமிழர்கள் உணர வேண்டும். எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது, என பெருமையுடன் கூறும் தமிழர்கள் சற்று சிந்திக்க வேண்டும். தமிழ் பத்திரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். தமிழ் எழுத்தாளர்கள், தமிழாசிரியர்களை தமிழ் சங்கங்கள் ஊக்குவிக்க வேண்டும். எதுவுமே இல்லாமல் தமிழ் வளர வேண்டும் என்ற மேடைப் பேச்சால் என்ன நன்மை விளைந்துவிடப் போகிறது!

தமிழ் ஆங்கிலேயர்களே! திருந்துங்கள் இல்லையேல் திருத்தப்படுவீர்கள்.

நிலவன்@NILAVN said...

வணக்கம் ஐயா.
வாருங்கள் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தமிழ் மக்கள் தலைவர்களுக்கு அறிக்கை சமர்பிப்போம்.
அவர்களையும் தங்களின் வலைப்பக்கத்தை தமிழ் மொழியில் அமைக்க சொல்லுவோம்.

வாருங்கள் மற்ற இயக்க பொறுப்பாளர்களெ ஒன்று சேர்வோம்.
மாற்றத்தை உண்டாக்குவோம்.
புற்ப்படுங்கள்.

இதில் கலம் இறங்க நினைப்போர் இந்த மின் மடல் மூலம் செய்தியை அல்லது அறிக்கையை சமர்பிக்கவும்
e.thamilmozhi@gmail.com /
nilavan91@yahoo.com

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் சிவக்குமார் சுப்புராமன்,

உங்கள் வருகைக்கும் வளமான கருத்துக்கும் மிக்க நன்றி; மகிழ்ச்சி.

//தமிழர்கள் முதலில் தன் தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது மிக முக்கியம். //

இப்படியொரு அவலமான நிலைமை உலகில் வேறு எந்த இனத்தினனுக்கும் ஏற்பட்டிருக்காது.

சொந்த தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கச்சொல்லும் நிலைமையைச் சொல்லுகிறேன் ஐயா..

சுப.நற்குணன்,மலேசியா. said...

>திருத்தமிழ் அன்பர் நிலவன்,

உங்கள் வருகைக்கு நன்றி. கூடவே உங்கள் துடிப்பான செயலுக்கும் பாராட்டுகள்.

//வாருங்கள் மற்ற இயக்க பொறுப்பாளர்களே ஒன்று சேர்வோம்.
மாற்றத்தை உண்டாக்குவோம்.
புறப்படுங்கள்.//

தமிழர் ஒன்றுபடுவோம்
தமிழராக ஒன்றுபடுவோம்
தமிழுக்காக ஒன்றுபடுவோம்!

பழமைபேசி said...

அவருக்கான நன்றி நவில்தலில் நானும் பங்கு கொள்கிறேன்!

Tamil astrology said...

டத்தோ சுப்ரா அவர்களுக்கும் வலைப்பதிப்பின் மூலம் நன்றி சொல்கிறேன்

tax jobs said...

நமது மொழியை முன்னுரிமை கொடுத்தமைக்கு நன்றியினை சமர்ப்பிப்போம்.
வாழ்க தமிழ்

Blog Widget by LinkWithin