Thursday, November 07, 2013

ஆங்கில எழுத்துருவில் தமிழ்? எதிர்வினை #1

“ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதி 
தமிழின் தொப்புள் கொடியை அறுக்காதீர்”


ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? என்னும் சிந்தனையை எழுத்தாளர் செயமோகன் ‘தி இந்து’ பத்திரிகை வழியாக முன்வைத்துள்ளார்.

செயமோகன் என்றாலே விவரம் அறிந்த தமிழர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். அதிலும், இவர் போன்றோர்க்குப் பாரிய விளம்பரம் கொடுத்து தூபம் போட்டுத் துதிபாடும் இந்து பத்திரிகையும் சேர்ந்துகொண்டால்  குமட்டலுக்குச் சொல்லவா வேண்டும்?

செயமோகன் சொன்ன கருத்து தற்காலச் சூழலுக்குப் பொருந்தாது; நடைமுறைக்குச் சாத்தியமாகாது; செயல்பாட்டுக்கு ஒவ்வாதது; செயற்படுத்துவதற்கு நாதியற்றது; தமிழுக்கு முற்றிலும் எதிரானது; வளமிக்க இலக்கண இலக்கியங்களோடு திகழும் உயர்தனிச் செம்மொழியாம் தமிழுக்குத் தேவையற்றது என்று எடுத்த எடுப்பிலேயே மறுசுழற்சிக் கூடைக்குள் வீசி எறிந்துவிட்டு நம் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அந்த அளவுக்கு தகுதரமற்ற ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார் செயமோகன்.

இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று சிற்றறிவிற்கு எட்டிவை இவைதாம்:

1)    வழக்கமான அவருடைய கவனஈர்ப்பு உத்தி.
2)    அரிப்பு ஏற்பட்டால் தமிழை எடுத்து சொறிந்து கொள்ளும் போக்கு.
3)  தமிழையும் தமிழனையும் அவ்வப்போது சீண்டிப் பார்த்து சுகம் காணும் வக்கிர மனநிலை.

எது எப்படி இருந்தாலும் கருத்துக்குக் கருத்து என்கின்ற விவாத நடைமுறையை மதித்து இந்த எதிர்வினையைப் பதிவு செய்கிறேன்.

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? இதற்கு வலுசேர்க்க அவர் முன்வைத்துள்ள வாதங்களில் சில இதோ:

1)இளைய தலைமுறை தமிழில் வாசிப்பதில்லை.
2)தாய்மொழிக் கல்வி இரண்டாம் மொழியாகக் கற்கப்படும் சூழல் உருவாகி வருவதால் தமிழ்மொழியில் கவனம் காட்டுவதில்லை.
3)இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொண்ட தமிழ் மாணவர் கைகளுக்கும் கருத்துக்கும் பழக்கமற்றதாக ஆகிவிடுகிறது.
4)இணையம், முகநூல் (ஊச்ஞிஞுஞணிணிடு) போன்றவற்றுக்காகக் கணினியில் தட்டச்சு செய்பவர்கள் அனைவருமே ஆங்கில எழுத்துகளிலேயே தட்டச்சு செய்துகொண்டிருக்கிறார்கள்.
5)ஆரம்பப் பள்ளி முதலே ஆங்கில எழுத்துகளில் தமிழைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
6)மலாய் போன்ற பல மொழிகள் இன்று ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதப்படுகின்றன. அந்த மக்கள் ஆங்கிலம் கற்பது எளிதாகிறது .
7)வருங்காலத்துக்காக நம் எழுத்துருக்களை மாற்றிக்கொண்டால் அதில் பிழையில்லை என்றே படுகிறது.

(எழுத்தாளர் செயமோகன் எழுதிய முழுக் கட்டுரையை இங்கு வாசிக்கவும்.)

இந்தக் கட்டுரை வெளிவந்து, மக்கள் அதுகுறித்து சிந்திக்கவும் எதிர்வினையாடவும் தொடங்குவதற்குள், தமிழர்கள் தம்முடைய சிந்தனையை எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்று செயமோகன் இன்னொரு கட்டுரையில் முந்திக்கொண்டு சொல்லியிருக்கிறார்.

1)இத்தகைய ஒரு கருத்து உடனடியாக ‘தமிழை அழிக்கச் சதி’ என்ற கூச்சல் மூலமே எதிர்கொள்ளப்படும்.
2)‘உலகிலேயே சிறந்த’ மொழியாகிய தமிழை ‘அன்னியசக்திகள்’ அழிக்கமுயல்கிறார்கள் என்ற ஒரு பாவனையிலேயே நம் மொழிவெறியர்கள் காலம்தள்ளுகிறார்கள்.
3)மொழியை ‘எதிரிகளிடமிருந்து’ பாதுகாக்க முடிந்தவரை எல்லா இடத்திலும் கடுமையாக வசைபாடி கொந்தளிப்பார்கள்.
4)தனக்கு ஒவ்வாத அல்லது புரியாத எந்த ஒரு தரப்பைக் கேள்விப்பட்டாலும் உடனடியாகப் பொங்கி கொந்தளித்துக் கொப்பளிக்கும் கூட்டம்.
5)பழங்குடிக் கும்பலுணர்ச்சியை மட்டுமே வெளிப்படுத்தக்கூடியவர்கள்.

(அக்கட்டுரையின் மூலத்தை இங்கு வாசிக்கவும்)

செயமோகன் முன்வைத்திருக்கும் சிந்தனை பல்வேறு எதிர்வினைகளுடன் தற்பொழுது களமாடிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து என் எதிர்வினைகளை முன்வைக்கவே இதனை எழுத வேண்டியதாயிற்று.

முதலில், தம் சிந்தனைக்கு வலுசேர்க்க செயமோகன் வைத்துள்ள வாதங்கள் மீதான எதிர்வாதங்களை முன்வைக்கின்றேன்.

1)    இளைய தலைமுறை தமிழில் வாசிப்பதில்லை என்பதை தமிழின் குறைபாடாகக் காட்டியிருப்பது பெரும் புரட்டாகும். கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் தமிழ்வழிக் கல்வியில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவாக இன்றைய இளைய தலைமுறை தமிழை வாசிக்கவும் தமிழோடு வாழவும் தயங்குகின்றனர். இது தலைமுறை குறைபாடே அன்றி தமிழின் குறைபாடு அல்ல. எந்த ஒரு மொழியும் பயிலப்படாமல் போவதற்கு அந்த மொழி மட்டுமே காரணமாகிவிடாது. அந்த மொழிக்குரிய ஆளுமை, பொருளியல் மதிப்பு, பண்பாட்டுத் தேவை, வாழ்க்கைக்குப் பயன் ஆகியவையே முதன்மைக் காரணிகளாகும். இவற்றை ஒரு மொழியால் தானே உருவாக்கிக்கொள்ள முடியாது. அம்மொழி சார்ந்த அரசோ அல்லது மக்களால் மட்டுமே இவற்றைத் திட்டமிட்டுக் கட்டமைக்க முடியும்.

2)    தாய்மொழிக் கல்விக்கு முதன்மைக் கொடுப்பதோடு, தமிழ்வழிக் கல்விக்குப் பிற மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டில் கட்டாயச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். தமிழ்வழிக் கல்வி கற்றவர்களுக்கே அரசுப் பணிகளில் முதலிடம் கொடுக்கப்பட சட்டம் இயற்ற வேண்டும். பிற மாநிலங்களில் குடியேறிய தமிழர்கள் அவ்வந்த மாநில ஆட்சி மொழிகளை மதித்துக் கட்டுப்பட்டு வாழ்வதைப் போல, தமிழ்நாட்டில் குடியேறிய பிறமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகிய தமிழை மதித்து ஏற்று, கற்று, கட்டுப்பட்டு வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.

3)    இரண்டாம் மொழியாகக் கற்கப்படும் சூழலில் மாணவர்களின் கைகளுக்கும் கருத்துக்கும் பழக்கமற்றதாகிப் போய்விடும் என்பது கல்வி உளத்தியல் அடிப்படையில் சரியான கருத்தன்று. தாய்மொழிக் கல்வியை மிக எளிதாகக் கற்றுக்கொள்ளும் ஆற்றல் குழந்தைகளிடம் இயல்பாகவே அமைந்திருக்கிறது. மேலும், குழந்தைகள் தாய்மொழி வழியாகவே சிந்திப்பதால் சொந்த மொழியில் எழுதுவதும் பேசுவதும் மிக எளிதாக அமையும்.

4)    இணையம், முகநூலில் எழுதுபவர்கள் ஆங்கில எழுத்துருக்களில் தட்டச்சு செய்கின்றனர் எனும் கருத்தை பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன் சொல்லியிருந்தால் நம்பியிருக்கலாம். இன்றோ கணினியில் தமிழ் உள்ளீடு வந்துவிட்டது. கைபேசி, திறன்பேசி, திறன்கருவிகள், தட்டைக் கணினிகள் என எல்லாக் கையடக்கக் கருவிகளிலும் தமிழ் எந்தச் சிக்கலுமின்றிச் செயல்படுகிறது. தமிழ் 99, அஞ்சல் ஆகிய இரண்டு விசை முறைகளும் யுனிகோடு எழுத்துரு முறையும் தமிழை எழுத மிகவும் உதவியாக இருக்கின்றன. ஆயினும், இணையம், முகநூலில் தமிழில் எழுதாமல் போனதற்கு மாந்தத் தவறுகளே (Human Error) காரணமாக இருக்க முடியுமே தவிர, தமிழ்மொழியைக் குறைபடுத்திக் காட்டுவது மிக நுட்பமான திருகுதாளமாகும்.

5)    ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கில எழுத்துகளைக் கற்றுக்கொடுத்தால் குழந்தைகளுக்குச் சிக்கல் வராது என்பதெல்லாம் ஆய்வு செய்யப்படாமால் தெரிவிக்கும் பொத்தாம் பொதுவான கூற்று. சான்றாக, மலேசியாவில் ‘அம்மா’ எனப் படிக்கத் தொடங்கும் குழந்தை ஆங்கில எழுத்துருவில் ‘amma’ என்றும் அதே ஆங்கில எழுத்துருவைக் கொண்டு மலாயில் ‘emak’ என்றும் ஆங்கிலத்தில் ‘mom’, 'mummy', ‘mother’ என்றும் படிக்க வேண்டியிருக்கும். இப்படி ஒரே அம்மாவை, ஒரே சொல்லை, ஒரே எழுத்துருவில் வெவ்வேறாகப் படிப்பதும் ஒலிப்பதும் எழுதுவதும் புரிந்துகொள்வதும் குழந்தைகளுக்கு மிக எளிமையானது என்று சொல்லிவிட முடியுமா?

6)    மலாய் போன்ற மொழிகள் ஆங்கில எழுத்துருவில் எழுதப்படுவதால் ஆங்கிலம் கற்க எளிதாகிறது என்ற பொய்யைச் சொல்லி மலேசியாவுக்கு வெளியே இருப்பவர்களை வேண்டுமானால் செயமோகன் நம்பவைக்கலாம். ஆனால், மலேசியத் தெருவில் வந்து  மலாயை விற்று தமிழர்களை ஏமாற்ற முடியாது அவரால். மலேசியாவில் தமிழ்வழிக் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களே இன்று வரையில் ஆங்கிலத்தில் மேன்மைபெற்று விளங்குகின்றனர் என்று அவருக்குப் புள்ளி விவரங்களோடு அறிவிக்க முடியும். அறிவியலும், கணிதமும் ஆங்கிலத்தில் படிக்கவேண்டும் என்னும் கல்விக் கொள்கை சில ஆண்டுகளுக்கு முன் மலேசியாவில் அமுலாக்கப்பட்டது. 10 ஆன்டுகளுக்குப் பிறகு 2010ஆம் ஆண்டில் அக்கொள்கை தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டுக் கைவிடப்பட்டது. காரணம், தமிழ்ச் சீன மாணவர்களைக் காட்டிலும் மலாய்வழியில் பயிலும் மலாய்க் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் பயில்வது மிகக் கடினமாக உள்ளது என்பதால்தான். ஆங்கிலத்தில் ‘bus’, ‘postman’, ‘computer’ என்று படித்துவிட்டு பிறகு அதையே மலாயில் ‘bas’ ‘posmen’ ‘komputer’ என்று குழம்பி குழம்பி, மலேசியாவில் மலாய் மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பதை அறியாமல், செயமோகன் மலாய்மொழியை எடுத்துக் காட்டி தமிழக, அயலக மக்களை மயக்க முற்பட்டிருக்கிறார்.

7)    வருங்காலத்தில் தமிழ் எழுத்துருக்கள் மாறவே மாறாது அல்லது மாறவே கூடாது என்ற வரட்டு நம்பிக்கை தேவையில்லை. காலச் சூழலுக்கு ஏற்ப மாற்றம் வரலாம். அப்படித்தான் கல்வெட்டுக் காலம் பின்னர் ஓலைச்சுவடிக் காலத்தில் எழுத்துருக்கள் மாறி வந்துள்ளன. வீரமாமுனிவரும் ஏகாரம் ஓகாரம் ஆகிய எழுத்துகளைத் திருத்தி அமைத்தார். அதன்பின்னர் பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் பெரும் எதிர்ப்புக்குப் பின்னர் ஏற்கப்பட்டது. காரணம், பெரியார் கொணர்ந்த எழுத்துச் சீர்திருத்தத்தில் பாதிப்புகளை விட பயன்கள் மிகுதியாக இருந்ததால் மக்கள் அதனை ஏற்க முன்வந்தனர். தமிழகத்திற்கு வெளியே குறிப்பாக, மலேசியாவிலும் அதற்குப் பெரும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் அச்சுத்தொழில், தட்டச்சு, கணினி ஆகியவற்றுக்கு அந்தச் சீர்திருத்தம் இசைவாக இருந்ததால் இங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, வா.செ.குழந்தைசாமி உகர, ஊகார எழுத்துச் சீர்மையை முன்வைத்து மூக்குடைபட்டதை விரித்துச் சொல்லத் தேவையில்லை. வா.செ.குழந்தைசாமியின் எழுத்துச் சீர்மை தமிழ் எழுத்துருக்களில் பெரும் அழிம்புகளைச் செய்துவிடும் என்பதால் அது கடுமையான கண்டனத்திற்குப் பிறகு முடங்கிப்போனது.

ஆனால், தற்பொழுது செயமோகன் தமிழையே அடையாளமில்லாமல் அழித்துப்போடும் சீர்திருத்தை முன்மொழிந்திருக்கிறார்; தமிழின் ஒட்டுமொத்த வரலாற்றையே மறைத்துவிடும் மிக ஆபத்தான வரிவடிவ மாற்றத்தை முன்வைத்திருக்கிறார்; தமிழ்மொழியின் தொப்புள்கொடி உறவையே துண்டிக்கப்போகும் கொலை பாதகத்திற்கு நிகரான கொடுஞ்சிந்தனையை நாசுக்காக; நயவஞ்சமாகச் சொல்லியிருக்கிறார்.

தமிழுக்கு நன்மை விளையும், தமிழை எல்லாரும் படிப்பார்கள், வருங்காலத்தில் தமிழ் வாழும் என்றெல்லாம் இனிப்புகளைப் பூசி கொடும் நஞ்சை தங்கத்தட்டில் வைத்து தமிழர்கள் முன்னால் பந்தி வைத்திருக்கிறார்.

ஆங்கிலவழி படித்தவர்கள் இன்று பெருகிவிட்டனர், தமிழையும் அதன் தூய்மையையும் உண்மையாக நேசிப்பவர்கள் குறைந்துவிட்டனர். இந்திய நாட்டில் இந்தியையும் ஆங்கிலத்தையும் கற்கும் மக்கள் பெருகிவிட்டனர். தமிழ்வழிக் கல்வியை தெரிவுசெய்பவர்களும் ஆதரிப்பவர்களும் குறைந்துவிட்டனர். தமிழ்நாட்டில் பிறமொழிக்காரர்கள் ஆதிக்கம் பெருகிவிட்டது. தமிழர்களின் பலம் காயடிக்கப்பட்டு நசுக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது. இதையெல்லாம் நன்றாக புரிந்துகொண்டு அந்தச் சிறு சந்தில் நுழைந்துகொண்டு தமிழுக்கு எதிராகச் சிந்துபாடுவதைச் செயமோகன் நிறுத்திகொள்வது நல்லது.

தமிழ் வரலாற்றில் பெயர் பொறிப்பதற்குச் செயமோகன் இத்துணை மெனக்கெட்டு, தமிழைப் பலிகொடுக்கும் தீயச்செயலில் இறங்கக்கூடாது. தமிழில் எழுதி எழுதிப் பெயரும் புகழும் கிடைத்தது போதாது என்று தனக்கு வரலாற்றில் அழியாப் புகழைத் தேடிக்கொள்ள தாம் அண்டிப்பிழைத்த தமிழுக்கே இரண்டகம் செய்ய அவருடைய மனம் துணியக்கூடாது.

தமிழை ஒரு தொடர்பு ஊடகமாகவும் கருவியாகவும் மட்டுமே பாவித்து பிழைத்துக்கொண்டிருக்கும் செயமோகன் இப்படியெல்லாம் சிந்திக்கக்கூடாது என நம்மில் எவரும் தடைபோட முடியாது. அது அவருடைய மண்டை; அவருடைய மூளை; அவருடைய உரிமை. ஆனால், அதனைக் கொண்டுவந்து தமிழன் மண்டைக்குள் கொட்டி குழப்பம் செய்வதற்கும்; தமிழன் மூளையைச் சலவை செய்வதற்கும் அவருக்கு எந்த உரிமையும் கிடையாது.

தமிழைத் தாயாகவும் மூச்சாகவும்; தமிழை இனத்தின் உயிராகவும் உரிமையாகவும்; தமிழைப் பண்பாட்டுத் தளமாகவும்; தமிழை வரலாற்றுச் சுவடாகவும்; தமிழை வாழ்வியல் நெறியாகவும்; தமிழை இலக்கியத்தின் வேராகவும்; தமிழை இலக்கணத்தின் ஆவணமாகவும்; தமிழை மரபுப் பெட்டகமாகவும்; தமிழை அறிவாகவும்; தமிழை ஆலயமாகவும்; தமிழைக் காவியமாகவும்; தமிழைக் கலையாகவும்;  தமிழை ஞால முதன்மொழியாகவும்; தமிழை ஆரியத்திற்கு மூலமாகவும்; தமிழை உலகமொழிகளின் தாயாகவும் எண்ணி எண்ணி மதித்துப் போற்றும் தமிழர்கள் இன்னும் நிறைய இருக்கிறார்கள்.

உலகத் தமிழர்களில் பெரும்பாலோர் தமிழை இன்னும் தமிழாக அறியாமலே இருக்கின்றனர். தமிழைப் பற்றி முழுமையாகத் தமிழர்கள் அறிந்துகொள்வதற்கு முன்னாலேயே, ஆங்கில எழுத்துருவுக்குத் தமிழை மாற்றி, தாயைப் பார்க்கமலேயே, தந்தையைப் பார்க்காமலே, உடன்பிறந்தாரைப் பார்க்காமலே, உறவுகளைப் பார்க்காமலே குழந்தையைக் கருவிலேயே களைத்து அழிப்பதைப் போல தமிழர்களுக்கும் தமிழுக்கும் உள்ள தொப்புள்கொடி உறவை அறுத்தெறியாதீர் என செயமோகனுக்கு வேண்டுகை விடுகின்றேன்.

இது குறித்து எதிர்வினைகள்... தொடரும்...

@சுப.நற்குணன், திருத்தமிழ்


Thursday, October 31, 2013

தமிழ் இலக்கியப் பாடத்தை எடுக்க மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்

12.10.2013ஆம் நாள் நடந்த 'எசுபிஎம் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம்' தொடர்பாக வெளிவந்த நாளிதழ் செய்தி இது. நன்றி: மக்கள் ஓசை (28.10.2013)

***************
 

தமிழ் இலக்கியப் பாடம் கடுமையான பாடமல்ல. மலேசியக் கல்வி சான்றிதழ் (எசுபிஎம்) தேர்வுப் பாடமாகத் தெரிவு செய்யும் ஒவ்வொரு மாணவரும் தமிழ் இலக்கியப் பாடத்தையும் கண்டிப்பாகத் தேர்வு செய்ய வேண்டுமென்று தமிழ் வாழ்வியல் இயக்கச் செயலாளர் சுப.நற்குணன் வேண்டுகோள் விடுத்தார். 

தமிழ் வாழ்வியல் இயக்க ஏற்பாட்டில் தமிழியல் நடுவத்தில் நடைப்பெற்ற எசுபிஎம் மாணவர்களுக்கான தமிழ் இலக்கியப் பாடக் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பேசிய அவர் மேற்கண்ட கருத்தை வலியுறுத்தினார்.

தமிழ் இலக்கியப் பாடத்தில் நமது மாணவர்கள் பெறும் புள்ளிகள் அவர்கள் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சேர உதவியாக இருப்பதுடன் தங்களின் வாழ்க்கையில் நல்ல வழிகாட்டுதலையும் தரவல்லதாக உள்ளது.

எனவே, நம் மாணவர்கள் தமிழ் மொழியுடன், தமிழ் இலக்கியப் பாடத்தையும் தேர்வு செய்ய பெற்றோர்களும், இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்களும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தமிழ் இலக்கியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லத் தமிழ் இலக்கியப் பாடங்களை நமது மாணவர்கள் கற்பது அவசியமாகும்.

மாணவர்களுக்குப் போதிப்பதற்குத் தேவையான வழிகாட்டி நூல்கள் தற்போது கடைகளில் கிடைப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இங்கு நடைப்பெற்ற கருத்தரங்கில் அனுபவமிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களையும் தேர்வு அணுகுமுறைகளையும் மாதிரி வினாக்களும் விடை அமைப்பு முறைகளையும் எளிய முறையில் விளக்கப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் செலாமா, பேரா, நிபோங் டிபால், சிம்பாங் அம்பாட், பாரிட் புந்தார் நடுவங்களைச் சேர்ந்த 80 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

@நன்றி: மக்கள் ஓசை
 

Tuesday, October 29, 2013

செல்லினம்: ஆண்டிரோய்டு தமிழ்ச் செயலி சாதனை

திறன்பேசிகளில் (smart phones) தமிழ் உள்ளீட்டு முறைமையை அறிமுகப் படுத்திய செல்லினம் எனும் செயலி, ஆண்டிராய்டு (android) வகைக் கருவிகளில் 50,000க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.
2003ஆம் ஆண்டு மலேசியாவில் கணினி மென்பொருள் வடிவமைப்பாளர் முத்து நெடுமாறனால் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி 2005ஆம் ஆண்டு பொங்கல் அன்று சிங்கப்பூர் ஒலி 96.8 தமிழ் வானொலி நிலையத்தின் ஆதரவோடு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் பொதுப் பயனீட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனை அறிமுகப்படுத்திய வைரமுத்து, “நேற்றுவரை மூன்று தமிழ், இன்றுமுதல் நான்கு தமிழ், இதோ கைத்தொலைபேசியில் கணினிதமிழ்” எனும் கவிதை வரிகளைக் கொண்டு பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்கத்தில் நோக்கியா, சோனி எரிக்சன், சாம்சங் கருவிகளில் மட்டும் இயங்கிய செல்லினம் 2009 ஆண்டு முதல் ஐபோனிலும் வெளியிடப்பட்டது. ஐபோனிலும் ஐபேடிலும் இதுவரை 25,000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

ஆண்டிராய்டு கருவிகளைப் பயன்படுத்துவோரின் நீண்ட நாள் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம், கடந்த 2012 திசம்பரில் செல்லினத்தின் ஆண்டிராய்டு பதிப்பு வெளியீடு கண்டது. வெளியிடப்பட்ட 10 மாதங்களுக்குள் விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் பயனர்களின் தன்னார்வ அடிப்படையிலும், கருத்துப் பரிமாற்றங்களின் வழியும் தற்போது 50,000க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களைக் கண்டு சாதனை படைத்துள்ளது.


முத்து நெடுமாறனின் கருத்து

இது குறித்து முத்து நெடுமாறன் கருத்துரைக்கையில், “செல்லினத்தைப் பயன்படுத்த ஆண்டிராய்டு பயனர்கள் காட்டும் ஆர்வம் உண்மையிலேயே உற்சாகத்தை அளிக்கிறது. திறன்பேசி வகைகளில் ஆண்டிராய்டு அதிகப் பயனர்களைக் கொண்டிருந்தாலும் அதில் நேரடி தமிழ் உள்ளீடு இயல்பாகவே இடம் பெறாமல் இருப்பது ஒரு பெரிய குறையே. இந்தக் குறையை செல்லினம் நீக்குவது மட்டுமின்றி முன்கூறும் (prediction) வசதிகளைச் சேர்த்து தமிழ் உள்ளீட்டை எளிமைப் படுத்தியும் இனிமைப் படுத்தியும் உள்ளது. இந்த வசதிகளை அனைவரும் வரவேற்கிறார்கள் என்பதை கூகல் பிளே (Google Play) தளத்தில் பயனர்கள் பதிவு செய்த கருத்துகளைக் கொண்டு அறிந்துகொண்டோம்” என்று கூறினார்.

செல்லினத்தின் கூறுகள் எச். டி. சி. வகை திறன்பேசிக் கருவிகளிலும் அண்மையில் வெளியீடு கண்ட ஆப்பிளின் ஐ. ஓ.எஸ். 7 மென்பொருள் பதிப்பிலும் இயல்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு விரைவில்

செல்லினத்தின், மேலும் சில  வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அடுத்த பதிகை (version) தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது.

அது குறித்துக் கருத்துரைத்த முத்து நெடுமாறன் “செல்லினத்தின் அடுத்த பதிகையை சில பயனர்கள் பயன்படுத்தி அவர்களின் விரிவான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். பொருத்தமான கருத்துகளை ஏற்று அவற்றுக்கேற்ற மாற்றங்களை இப்போது செய்து வருகிறோம். குறிப்பாக சொற்பிழை தவிர்த்தல், அதிகமான சொல்லை முன்கூறுதல் போன்ற வசதிகள் பலரின் பாராட்டைப் பெற்று வருகின்றன. இவை அனைத்தும் பிழையின்றி இயங்கும் நிலையை அடைந்தபின் புதிய பதிப்பை வெளியிடுவோம்” என்று கூறினார்.

@நன்றி: செல்லியல்
  

Thursday, October 03, 2013

தமிழ்க் கோட்டம் கட்டட நிதி விருந்தோம்பல்

மலேசியாவில் தமிழுக்காகவும் தமிழருக்காவும் அமையவுள்ள முதல் கட்டடம் ‘தமிழ்க் கோட்டம்’ ஆகும். பேரா, கிரியான் மாவட்டம் பாரிட் புந்தாரில் தமிழுக்குச் சூட்டப்படும் ஒரு மணிமகுடம் இந்தத் ‘தமிழ்க் கோட்டம்’ என மாஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் புகழாரம் சூட்டினார்.

தமிழியக் கருத்துக்கள், பணிகள், சிந்தனைகள், கொள்கைகள், ஆக்கங்கள், அனைத்திற்கும் சுமார் 8 இலக்கம் (RM800,000.00) வெள்ளியில் வாங்கப்படும் இத்தாய் கட்டடத்திற்கு முதல்கட்ட நிதியாக 30 ஆயிரம் ரிங்கிட்டை அவர் வழங்கினார்.

கடந்த 1990 தொடங்கி 23 ஆண்டுகளாக வட மலேசியாவில் குறிப்பாக, கிரியான் மாவட்டத்தில் தமிழுக்காக ஒரே இலக்கோடும் ஒரே கொள்கையோடும் செயல்பட்டு வரும் தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் செயலவையினரைப் பாராட்டுவதாக விருந்தினர்களின் பலத்த கரவொலிக்கிடையே அவர் கூறினார்.  

தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் ‘தமிழ்க் கோட்டம்’ கட்டட நிதி விருந்தோம்பல் நிகழ்வில் கலந்துக் கொண்டு சுற்று சூழல், இயற்கை வள அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் திறப்புரையாற்றினார்.

க.முருகையன்
இந்நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் தலைவர் க.முருகையன் மூன்று மாடிகள் கொண்ட கட்டடம் வாங்கத் திட்டமிட்டு முன்பணமாக 2 இலக்கம்  (RM200,000.00) வெள்ளியை செலுத்திவிட்டதாகவும் மேலும் 6 இலக்கம் (RM600,000.00) வெள்ளி தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

‘தமிழ்க் கோட்டம்’ கட்டடம் தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டாலும், மலேசியத் தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்றார். மலேசிய மண்ணில் தமிழ் தமிழாக நிலைக்கவும் தமிழர் தமிழராக வாழவும், தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே இலக்கில் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து செயல்படுவோம் என்று தெரிவித்த அவர், உங்கள் வாழ்நாளில் தமிழுக்குச் செய்யும் நிலையான பணியாக எண்ணி நன்கொடை வழங்கி உதவிடுமாறும் தமதுரையில் கேட்டுக் கொண்டார்.  
மாண்புமிகு டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் நன்கொடை
தமிழ் வாழ்வியல் இயக்க செயற்குழுவினர்
தமிழ் கோட்டம் நிதிக்காக தமிழ் வாழ்வியல் இயக்க செயற்குழுவினர் மட்டும் இலக்கம் வெள்ளியை (RM200,000.00) நிதியாக வழங்கினர். பொதுமக்கள் முன்வந்து நன்கொடை வழங்குவதற்கு இதுவொரு முன்மாதிரியாகவும் உந்துதலாகவும் அமைந்தது. மலேசியத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் நிதியாக அதன் தலைவர் மூ.வி.மதியழகன் 10 ஆயிரம் வெள்ளியை வழங்கினார். பெயர் குறிப்பிட விரும்பாத பினாங்கைச் சேர்ந்த டத்தோ ஒருவர் 10 ஆயிரம் வெள்ளி நன்கொடை வழங்கினார்.

                     திருவருள், தமிழ்ச்செல்வன், க.முருகையன், இரா.திருமாவளவன்,                       இர.திருச்செல்வம், கோவி.சந்திரன், சுப.நற்குணன்
மேலும் அரசுசாரா இயக்கங்கள், கொடை நெஞ்சர்கள், தமிழ் ஆசிரியர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் ஆகியோர் திரளாகக் கலந்துகொண்டு நிதியை வழங்கினர். மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்களும் விருந்தோம்பலில் கலந்து சிறப்பித்தார். தமிழ் வாழ்வியல் இயக்கச் செயலாளர் சுப.நற்குணனின் அறிவிப்பில் நிகழ்ச்சி வெகுச்சிறப்பாக நடந்தது.

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Monday, September 30, 2013

தமிழ்க் கோட்டம்: தமிழுக்கும் தமிழருக்கும் ஒரு மணிமண்டபம்

மலேசியாவில் தமிழுக்கும் தமிழருக்கும் சொந்தமான தனிக் கட்டடம் இல்லாத குறையைத் தீர்க்கும் வகையில் ‘தமிழ்க் கோட்டம்’ எனும் பெயரில் ஒரு கட்டடம் அமையவுள்ளது. தமிழுக்கும் தமிழருக்கும் மலேசியாவில் முதன் முதலாக  இந்த மணிமண்டபம் உருவாகிறது.


கடந்த 1990ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரையிலும் இடைவிடாமல் துடிப்புடன் செயல்படும் தமிழ் வாழ்வியல் இயக்கம் இந்தக் கட்டடத்தை வாங்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழுக்கும் தமிழருக்கும் மலேசியாவில் ஒரு மணிமண்டபமாக இந்தக் கட்டடம் அமையவுள்ளது. ஆகவேதான் இந்தக் கட்டடம் ‘தமிழ்க் கோட்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

எட்டு இலட்சம் வெள்ளி மதிப்புள்ள 3 மாடிகளைக் கொண்ட இக்கட்டடம் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்கும் சொந்தமான ஒரு கட்டடமாக உருவாகி தமிழ்ப்பணியாற்றும் என இயக்கத் தலைவர் க.முருகையன் தெரிவித்தார்.

மலேசியாவில் தமிழையும் தமிழ் இனத்தையும் முன்படுத்தி பல்வேறு இயக்கங்கள் செயல்படுகின்றன. பல இயக்கங்கள் சொந்தக் கட்டடம் இல்லாமல் பிற இனத்தவரின் கட்டடத்தையும் மண்டபத்தையும் பயன்படுத்த வேண்டிய நிலையிலே இருக்கின்றன. இந்த நிலைமையை மாற்றி தமிழுக்கும் தமிழருக்கும் தனிக் கட்டடம் ஒன்றினை அமைத்து ‘தமிழரால் முடியும்’ என்னும் உண்மையை எடுத்துக்காட்ட இந்தத் ‘தமிழ்க் கோட்டம்’ வானுயர எழுந்து நிற்கப் போகின்றது.


‘தமிழ்க் கோட்டம்’ கட்டத்தில் இயக்க அலுவலகம், தமிழிய நூலகம், மேடை அரங்கம், தமிழ்த் திருமண மண்டபம், வழிபாட்டுத் தலம் போன்றவை அமைக்கப்பட உள்ளன. 

தமிழியச் சிந்தனைகளைப் பரப்புதல், தமிழ்நெறிக் கருத்துகளை விதைத்தல், திருக்குறள் நெறியை வளர்த்தெடுத்தல், தமிழ்ச் சமய ஆன்மநெறியை பேணுதல், தமிழ்க்கல்வியை ஊக்குவித்தல், தமிழ் இளையோர்களுக்கு வழிகாட்டுதல் முதலான அரிய தமிழ்ப்பணிகளை முன்னெடுத்து நடத்துவதற்கு இந்தத் ‘தமிழ்க் கோட்டம்’ பேருதவியாக இருக்கும் என்றால் மிகையன்று. 

எனவே, மலேசியத் தமிழர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், ஆர்வலர்கள், செல்வந்தர்கள் அனைவரும் இந்தத் தூய்மையான முயற்சிக்கு நன்கொடையளித்து உதவ வேண்டும் என இவ்வியக்கத்தின் ஏடலர் தமிழ் ஆய்வியல் அறிஞர்  இர.திருச்செல்வம் கேட்டுக்கொண்டார்.

மலேசியாவில் தமிழ்மொழி நிலைத்திருக்கவும் தமிழ் மக்களின் வாழ்வியலை நெறிபடுத்தவும் ஒரு நடுவம் அமைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதனை நன்கு உணர்ந்துகொண்டு ‘தமிழ்க் கோட்டம்’ கட்டடம் அமைய எல்லாரும் துணைநின்று உதவ வேண்டும் என தமிழ் வாழ்வியல் இயக்கப் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். 

மேல்விளக்கங்களுக்கும் தொடர்புக்கும்:-
தலைவர்:- க.முருகையன் 012-4287965
செயலாளர்:- சுப.நற்குணன் 012-4643401
பொருளாளர்:- ம.தமிழ்ச்செல்வன் 013-4392016

மின்னஞ்சல் : tamilkottam@gmail.com

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Thursday, September 12, 2013

ஐ-போன் 5 திறன்பேசியில் தமிழ்.! புதிய இலக்கை நோக்கி நம் தமிழ்.!

2013 செப்தெம்பர் 11ஆம் நாள் தமிழ்மொழி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நாள்.  ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய வகை ஐ-போன் 5இல் முதன் முறையாகத் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது. தமிழ்மொழிக்கு உலக அரங்கில் இது ஒரு மறக்க முடியாத திருப்புமுனையாகும். இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியவர் நம் மலேசியத் தமிழர், கணிஞர் முத்து நெடுமாறன் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.
 
ஐ-போன் 5 திறன்பேசி
இதுவரை வெளிவந்துள்ள திறன்பேசிகளில் (smart phone) தற்பொழுது அறிமுகமாகியுள்ள iOS 7 எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் செல்பேசிகளில்தான் விசைத்தட்டுடன் (keyboard)  கூடிய தமிழ் இயங்குதளம் அதன் மென்பொருளிலேயே சேர்த்து இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தமிழ் விசைகளை நேரடியாக நாம் பயன்படுத்த முடியும் என்பதும் நவீன தொழில் நுட்பத்தில் தமிழுக்கு ஏற்பட்டுள்ள புரட்சிகரமான முன்னேற்றமாகும். தகவல் தொழில்நுட்ப உலகத்தில் நம் தமிழ்மொழி அடைந்துள்ள இந்தப் புதிய வெற்றியானது தமிழ் ஆர்வலர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

image
தமிழ் 99 விசைத்தட்டு

“முரசு அஞ்சல்” விசைத்தட்டு
 
புதிய ஐ-போன் திறன்பேசியில் “தமிழ் 99” மற்றும் “முரசு அஞ்சல்” ஆகிய இருவகை விசைத் தட்டுகளும் இணைக்கப்பட்டுள்ளன. பயனர்கள் இந்த இரு விசைத்தட்டுகளில் ஒன்றைத் தேர்வு செய்து, அதில் தமிழ் மொழி எழுத்துக்களைப் பதிவு செய்யலாம். ஐ-போன்கள், ஐ-பேட் (iPad) எனப்படும் தட்டை, ஐபோட் (iPod) கருவி என இனி எல்லாக் கருவிகளிலும் இந்த முறையில் நேரடியாகத் தமிழைப் பயன்படுத்தலாம்.

இதற்கு முன்பாக தமிழுக்கென உருவாக்கப்பட்ட சில குறிப்பிட்ட செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதன் மூலமும், அல்லது மற்ற திரைப்பக்கங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களை வெட்டி எடுத்து ஒட்டுவதன் மூலமும் அல்லது ஆங்கில எழுத்துக்களின் மூலமாகவும்தான் செல்பேசிகளிலும், தட்டைக் கருவிகளிலும்,  தமிழைப் பயன்படுத்த முடியும் என்ற நிலைமை இருந்து வந்தது.

இத்தகைய செயலிகளின் பயன்பாட்டில் செல்லினம் என்னும் செயலிதான் இதுவரையிலும் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஐ-போன்களில் தமிழ் விசைத்தட்டு அதன் உள்ளேயே மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இனி மற்ற செயலிகளைப் பதவிறக்கம் செய்துதான் தமிழைப் பயன்படுத்தவேண்டும் என்பதில்லை. வெட்டி ஒட்டும் வேலையும் இல்லை.

தொடர்பாளர் பெயர் & பிழைதவிர்த்தி கவனிக்கவும்
எனவே, இனி நேரடியாகவே ஐ-போன்களில், ஐ-பேட் போன்ற தட்டைக் கருவிகளிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்தி குறுஞ்செய்தி அனுப்பலாம். மேலும், முகநூல், ட்விட்டர், வாட்சாப் (Whatsapp), வைபர் (Viber) போன்ற இணையத் தளச் செயலிகளில் செய்திகள், தகவல்களை மிக எளிதாகத் தமிழில் அனுப்பலாம்.

அதே வேளையில், இணையத் தளங்களில் தேடலுக்கு (search) நேரடியாகவே தமிழ் மொழியில் உள்ளடக்கங்களைத் தேடலாம். முகவரிகள், பெயர் பட்டியல்களில் தமிழிலேயே பெயரைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். தங்களுக்கு விருப்பமான தமிழ்ப் பாடல்களை தமிழிலேயே தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்படி எல்லாவற்றிலும், ஐபோன்களில் இருக்கும் எல்லா திரைப்பக்கங்களின் (screen) மூலமாகவும் தமிழைப் பயன்படுத்தலாம்.

தொழில் நுட்பர் முத்து நெடுமாறனின் கருத்து

முத்து நெடுமாறன்
செல்லினம் செயலியை ஐஓஎசு (IOS) மற்றும் ஆன்டிரோய்டு (Android) மென்பொருள் தளங்களில் வடிவமைத்தவர் நமது மலேசியத் தமிழரான முத்து நெடுமாறன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய வகை iOS 7 ஐ-போன்களிலும் தமிழ் மொழியையையும் மற்ற இந்திய மொழிகளையும் வடிவமைத்தவர் நமது முத்து நெடுமாறன்தான் என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய தகவலாகும்.

ஐபோன்களின் தமிழ் மொழியும் இடம் பெற்றுள்ளது குறித்து முத்து நெடுமாறன் பின்வருமாறு கூறினார்:

“திறன்பேசிக் கருவிகளில் தமிழின் பயன்பாடு என்ற முறையில் இது நமக்கெல்லாம் உற்சாகமூட்டக்கூடிய ஒரு முன்னேற்றமாகும். தமிழ் 99 மற்றும் முரசு அஞ்சல் விசைத் தட்டுக்களுடன், மிக அழகான வடிவமைப்பில் தமிழ் எழுத்துக்கள் புதிய ஐபோன்களில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தக் கருவிகளில் தமிழைப் படிப்பதற்கும், எழுதுவதற்கும் எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது.”


“உலகமெங்கும் உள்ள நமது தமிழ் பேசும் மக்கள் இந்த அருமையான கிடைத்தற்கரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தமிழைச் செல்பேசிகளிலும் தட்டைக் கருவிகளிலும் அதிகமாகப் பயன்படுத்துவதோடு, தமிழிலேயே தகவல்களையும், செய்திகளையும், உள்ளடக்கங்களையும் உருவாக்க வேண்டும்; பரிமாற்றங்களும் செய்ய வேண்டும்  எனக் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன். அப்போதுதான், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற திறன்பேசிக் கருவிகளில் தமிழின் பயன்பாடும், தமிழை உள்ளீடு செய்வதும் மேலும் அதிக அளவில் வளர்ச்சி காணும்.

செல்லினம் மென்பொருளைப் பதிவிறக்கம் செய்து பயனீட்டாளர்கள் இதுவரை செய்து வந்த அனைத்து செயல்பாடுகளையும் இனி புதிய ஐ-போன்களில் எந்தவித செயலிகளையும் பதிவிறக்கம் செய்யாமலேயே நேரடியாகவே இனி பயன்படுத்த முடியும் என்பதுதான் தற்பொழுது நிகழ்ந்துள்ள புரட்சிகரமான மாற்றமாகும்; புதுமையான முன்னேற்றமாகும்.

அதுமட்டுமல்லாது, இந்தப் புதிய வகை ஐ-போன்களில் தமிழ் அகரமுதலியும் இணைக்கப்பட்டுள்ளது. இதன்வழி, தமிழில் பிழையின்றித் தட்டச்சு செய்வதற்கு உதவியாகச் சொற்பட்டியும் (predictive text) தானியங்கிப் பிழைதவிர்ப்பியும் (autocorrect) இதில் அடங்கியிருப்பது மற்றொரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி எனலாம்.
விசைத்தட்டு மொழிகளில் 'தமிழ்'

அகரமுதலிகள் பட்டியலில் 'தமிழ்'

இனிவரும் காலம் தமிழுக்குப் பொற்காலமாக மாறக்கூடிய வாய்ப்பினை ஆப்பிள் நிறுவனம் முதன்முதலாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு தமிழ் மக்கள் கணினி, திறன்பேசி, தட்டை, ஆன்டிரோய்டு முதலான திறன்கருவிகளில் தமிழைப் பெருமளவில் பயன்படுத்த முன்வரவேண்டும். தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கும் நிறுவனங்களின் பொருள்களுக்கும் வெளியீடுகளுக்கும் வற்றாத ஆதரவினை வழங்க வேண்டும், இதன்வழியாகப் பல நிறுவனங்கள் தங்கள் வெளியீடுகளில் தமிழை இணைத்துக்கொள்ள வேண்டிய நெருக்குதலை ஏற்படுத்த முடியும்; தமிழ்மொழியின் புழக்கத்தையும் பயன்பாட்டையும் வேகப்படுத்த முடியும்; உலக உருண்டையில் தமிழின் இருப்பையும் நிலைப்படுத்த முடியும்.

உலகப் புகழ்பெற்ற 'ஆப்பிள்' போன்ற நிறுவனங்கள் எல்லாம் தமிழை மதித்து, தங்கள் வெளியீடுகளில் தமிழுக்கு இடம் கொடுக்கும் வேளையில் உலகமெங்கிலும் உள்ள தமிழர்கள் விழிப்புற்று எழுந்து; மனமகிழ்ச்சிப் பொங்க தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து; தங்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தினால் "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகைசெய்தல் வேண்டும்" என்னும் மாபாவலன் பாரதியின் கனவு மெய்ப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. 
@சுப.நற்குணன், திருத்தமிழ்

Tuesday, August 27, 2013

என்ன சாதித்தது.. தமிழ் இணைய மாநாடு?

12ஆம் தமிழ் இணைய மாநாடு இம்முறை மலேசியத் தலைநகர் கோலாலும்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடந்தேறியது. ஆகத்து 15 - 18 வரையில் நடந்த இம்மாநாட்டிற்காகக் 'கையடக்கக் கருவிகளில் தமிழ்க் கணிமை' என்னும் கருப்பொருள் தெரிவு செய்யப்பட்டிருந்தது. மலேசியாவிலிருந்தும் பன்னாடுகளிலிருந்தும் ஏறக்குறைய 1000 பேராளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

கட்டுரைப் படைப்பு, கண்காட்சி, மக்கள் கூடம் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இம்மாநாடு, தமிழின் பெயரால் மலேசியாவில் நடைபெற்ற மற்றைய பற்பல மாநாடுகளைப் போல கூடினோம் களைந்தோம் என முடிந்து போனதா? அல்லது காலத்திற்குத் தேவையான மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளதா? இதனைச் சிறிது ஆராய்ந்து பார்ப்பதே இந்தப் பதிவின் நோக்கமாகும்.

அதற்கு முன்னர் இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளையும் முன்னெடுப்பு நடவடிக்கைகளையும் கண்ணோட்டமிடுவோம்.

#1 சி.ம.இளந்தமிழ் இந்தப் 12ஆம் உலகத் தமிழ் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராக உத்தமம் அமைப்பினால் நியமிக்கப்பட்டார்.

#2 சி.ம.இளந்தமிழ் தலைமையில் மலேசியாவில் மாநாட்டு வினைக்குழு அமைக்கப்பட்டது. மாநிலங்கள் தோறும் மாநிலத் தொடர்புக் குழு அமைக்கப்பட்டன.

#3 மலேசியாவில் உள்ள 6 ஆசிரியர் பயிற்சிக் கழகங்களில் 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டு தகவல் அறிதிறன் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

#4 பொது இயங்களின் உதவியோடு நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் மாநாடு தொடர்பான  பரப்புரையும் விளக்கக் கூட்டங்களும் நடத்தப்பெற்றன.

#5 மலேசியாவில் உள்ள 523 தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாநாடு தொடர்பான விளக்கக் கையேடுகள், அறிக்கைகள் அனுப்பப்பட்டன. சில தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர்களுக்குத் தமிழ்க் கணினி, இணையம், கட்டற்ற மென்பொருள் தொடர்பான பயில்மனைகள் நடைபெற்றன.

#6 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டை முன்னிட்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென அகப்பக்கம் உருவாக்கும் போட்டி, குறுஞ்செயலி போட்டி  இளையோர்களுக்கும் முகநூல் பயனர்களுக்கும் சிறப்புப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.

#7 வானொலி, தொலைக்காட்சி, இணையம், முகநூல், குறுஞ்செய்தி முதலான ஊடகங்கள் வழியாக 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாடு தொடர்பான அறிவிப்புகள், செய்திகள், தகவல்கள் பரப்பப்பட்டன.

#8 மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்த மாநாட்டை நடத்துவதற்குரிய அரங்கங்கள், கண்காட்சிக் கூடம், தங்குமிடம், விடுதி, உணவு, மாநாட்டுப் பை, நினைவுப் பரிசு, நிகழ்ச்சி நிரல் ஆகிய அனைத்து ஏற்பாடுகளும் மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டன.

இப்படியாக மேற்கொண்டு செய்யப்பட்ட பல்வேறு திட்டமிடல்கள் அனைத்தும் குறித்த நேரத்தில் சரியாக நடைபெற்றதால், 15.08.2013ஆம் நாள் இரவு மணி 7:30க்கு மலாயாப் பல்கலைக்கழகத்தின் பெர்டானா சிசுவா அரங்கத்தில் ஆயிரம் பேராளர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாடு வெகு கோலாகலமாகத் தொடங்கியது.


4 நாட்களாக நடைபெற்ற இம்மாநாடு என்ன செய்தது? என்ன சாதித்தது? இம்மாநாட்டின் விளைபயன்கள் என்ன? என்பவை மிக முக்கியமான கேள்விகளாகும். பெருமாண்டமாக மாநாடுகளை நடத்திவிட்டுப் போவதென்பது எல்லாராலும் செய்யக்கூடியதே. ஆனால், விளைபயன்மிக்க மாநாட்டை நடத்துவதே இன்றைய காலத்திற்குத் தேவையானதும் செய்யத் தகுந்ததும் ஆகும்.

அப்படிப் பார்க்கையில் 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டின் பயனாக அல்லது விளைவாகக் கீழ்க்காணும் சிலவற்றைப் பட்டியலிடலாம்:-

#1 மலேசியாவிலிருந்து 680 பேரும் அயலகத்திலிருந்து 150 பேரும் உட்பட ஏறக்குறைய 1000 பேராளர்களும் சிறப்பு அழைப்பாளர்களும், கட்டுரையாளர்களும் கலந்துகொண்ட மிகப்பெரும் மாநாடாக இது அமைந்திருந்தது.

#2 மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகள், உயர்க்கல்விக் கழகங்கள் ஆகியவற்றிலிருந்து ஏறக்குறைய பத்தாயிரம் மாணவர்கள் பார்வையாளர்களாக வந்து கலந்துகொண்டு, தமிழ்க் கணிமை குறித்தும் தமிழில் தகவல் தொழில்நுட்பம் பற்றியும் விழிப்புணர்வு பெற்றனர்.

#3 ஏறக்குறைய ஐந்து இலக்கம் (500,000) மலேசியத் தமிழர்களுக்குத் தமிழ்க் கணிமை - தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் பற்றிய சிந்தனைத் தூண்டலுக்கு இம்மாநாடு வித்திட்டுள்ளது.

#4 கணினி, இணைய, தகவல் தொழில்நுட்ப உலகில் தமிழ்மொழி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டிப்பிடித்துள்ளது என்னும் உண்மையைப் பொதுமக்களுக்குக் குறிப்பாக, இளையோர்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளது. இதன்வழியாகத் தகவல் தொழில்நுட்பத்தில் புதிய பார்வையையும் தேடலையும் உண்டாக்கியிருக்கிறது.

#5 கணினி, திறன்பேசி, தட்டை, திறன்கருவிகளின் இடைமுகத்தைத் தமிழுக்கு மாற்றிக்கொள்ளவும் தமிழில் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் விடுக்கவும், முகநூல், டுவீட்டரில் தமிழில் எழுதவும் கூடிய ஆர்வம் மேலோங்கி இருக்கின்றது.

#6 பொதுவாகவே தமிழ் சார்ந்த மாநாடுகளில் பெரியவர்களும் மூத்தவர்களுமே வருகைதரும் சூழலில், இந்தத் தமிழ் இணைய மாநாட்டில் 60%-க்கும் மேல் இளையோர்களை ஈர்த்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.


#7 அதிக அளவில் தமிழாசிரியர்களும் பயிற்சி ஆசிரியர்களும் கலந்துகொண்டிருப்பதால் அவர்களிடம் பயிலும் ஆயிரக்கணக்கிலான தமிழ் மாணவர்களுக்கு தமிழ்க் கணிமை தொடர்பான தகவலும் அறிவும் சென்று பரவுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

#8 அயலகத்தில் மட்டுமின்றி, மலேசியாவிலும் தகவல், தொழில்நுட்பம், கணினி, இணையம், கணிமை சார்ந்த துறைகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிப் படைக்கும் ஆற்றல் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த மாநாடு அடையாளம் காட்டி ஆர்வமூட்டியுள்ளது. இதன்வழி இத்துறைகள் தொடர்பான ஆய்வுப்பணிகளும் ஆக்கப்பணிகளும் நடைபெறுவதற்கு வலிகோலியுள்ளது.


#9 தமிழ்த் தகவல் தொழில் நுட்பவியல், தமிழ்க் கணிமை, கையடக்கக் கருவி, இயற்கை மொழி ஆய்வு, தமிழ் மென்பொருள்கள், குறுஞ்செயலி, கணினி மொழியியல், கல்வி தொடர்பிலான ஏறக்குறைய 100 அரிய கட்டுரைகள் அடங்கிய மாநாட்டு ஆய்வடங்கள் ஒன்று ஆவணமாக்கப்பட்டுள்ளது.

#10  இயற்கை மொழி ஆய்வியல் (Natural Language Processing [NLP] ) துறையில் தமிழ்க் கணிமைக்கு ஓர் இருக்கையை ஏற்படுத்தித் தர மலாயாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கொள்கையளவில் ஒப்புதல் வழங்கியுள்ளதோடு, இதன் தொடர்பில் மலேசியப் பிரதமரிடம் பேசி இசைவுபெறுவதற்கு ஆவனசெய்யப்படுமென தெரிவித்துள்ளார். இதுவே இம்மாநாட்டின் மிக உச்சமான வெற்றியாகக் கருதலாம்.


#11 இந்த உலகத் தமிழ் இணைய மாநாடு முக முக்கியமான மூன்று தீர்மானங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. அவையாவன:-
  • தமிழ் தகவல் தொழில்நுட்பத்துக்கும் மொழியியலுக்குமான பன்னாட்டு ஆராய்ச்சி இதழ் ஒன்றை உத்தமம் தொடங்கும்.
  • ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான மின் கல்வி இணையத் தளத்தை உத்தமம் தொடங்கும்.
  • தமிழ்க் கணிமை ஆராய்ச்சியாளர்களுக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் உதவும் வகையில் ஊடாடல் அறிவுத்தளம் ஒன்றை உத்தமம் ஆரம்பிக்கும்.

முதலாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டைத் தொடக்கிவைத்த மலேசியா, ஒரு மாமாங்கம் முடிந்து 12-ஆவது மாநாட்டை நடத்தும் வேளையில் தமிழ்க் கணிமையும் தமிழ்த் தகவல் தொழில் நுட்பமும்  மிகப்பெரிய வளர்ச்சியையும் உச்சத்தையும் எட்டியுள்ளது என்பது மறுக்கவியலா உண்மையாகும். ஒவ்வொரு நொடியும் முன்னேறிக்கொண்டிருக்கும் மின்னுட்பவியல் உலகத்தில் நிலைபெறவும் வெற்றிபெறவும் கூடிய ஆற்றலும் நுட்பமும் தமிழுக்கு உண்டு என்பது மறைக்க முடியாத மெய்யாகும். தனித்தியங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்பது தகவல் தொழில்நுட்ப உலகத்திலும் நிறுவப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.

எனினும், அடுத்துவரும் ஊழியில் தமிழ் நிலைத்து நிற்கவும் மற்றைய உலக மொழிகளுக்கு நிகராக தலையெடுத்து நிற்கவும் வேண்டுமானால், தமிழில் உருவாக்கம்பெறும் தகவல் தொழில்நுட்பங்களை உள்வாங்கிக்கொண்டு உடனே அதனை பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் அறிவாண்மை பெற்ற இனமாகத் தமிழினம் உருமாற்றம் பெறவேண்டும்.


தகவல்தொழில்நுட்பம் வழி தமிழை முன்னெடுப்போம்!
 நுண்மான் நுட்பப்புலத் தமிழராய் எழுவோம்! வெல்வோம்!

பி.கு: 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டுப் படங்கள், ஆய்வுக் கட்டுரைகள்

@சுப.நற்குணன், திருத்தமிழ்

Saturday, August 24, 2013

தமிழ் இணைய மாநாட்டில் சுப.நற்குணன் படைத்த கட்டுரை

கடந்த ஆகத்து 15 - 18 வரை, கோலாலும்பூர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் நான் படைத்தளித்த கட்டுரை இது.

தலைப்பு: தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலின் இணையத்தின் பயன்பாடும் பங்களிப்பும்.

பாகம் 1:-பாகம் 2:-பாகம் 3:- பி.கு:- இந்த நிகழ்ப்படத்தைப் பதிவுசெய்து யூடியுப்பில் பதிவேற்றி என்னை அசத்திய என் மகன் சுப.ந.சரணமுதனுக்கு நன்றி.

@சுப.நற்குணன், திருத்தமிழ்

முத்து நெடுமாறன்: திறன் கருவிகளில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்

உலகத் தமிழ் தகவல், தொழில் நுட்ப மன்றம் (‘உத்தமம்’) என்ற பெயரில் இயங்கும் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய 12ஆம் மாநாடு ஆகத்து 15 - 18 வரையில் நடந்தது. கோலாலும்பூர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்மைப் பொழிவாற்றும் முத்து நெடுமாறன்

மாநாட்டின் தொடக்க விழாவில், சிறப்பு அங்கமாக உத்தமம் அமைப்பின் நிறுவநர்களில் ஒருவரும், அந்த அமைப்பின் முன்னாள் தலைவரும், முரசு மென்பொருள், மற்றும் செல்லினம், செல்லியல் ஆகிய செயலிகளின் வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் முதன்மைப் பொழிவு வழங்கினார்.
.
இந்த ஆண்டு மாநாட்டின்  கருப்பொருளான ‘கையடக்கக் கணினிகளில் தமிழ்க் கணிமை’ குறித்து முத்து நெடுமாறன் அவர்கள் ஆற்றிய உரை பேராளர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்ததோடு தமிழ்க் கணிமையின் வளர்ச்சியைக் கண்டு அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கு இருந்தது. 

முத்து நெடுமாறன் உரை பின்வருமாறு:-

“இந்த மாநாட்டின் முக்கிய கருப்பொருளே கையடக்கக் கருவிகளில் தமிழ்க் கணிமை. அதாவது தமிழ் கணிமை கையடக்கக் கருவிகளில் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதைப் பற்றியும், அதன் அடுத்தகட்ட நிலை என்ன என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வது தான் இதன் முக்கிய நோக்கம்.”

“தொழில்நுட்ப கருவிகளில் தமிழை எப்படி உள்ளிடுவது என்பது தான் எங்களின் முதல் முயற்சியாக இருந்தது. அதில் தற்போது வெற்றியும் அடைந்துள்ளோம் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது மிகவும் புகழ்பெற்று  இருக்கும் பெரும்பாலான கருவிகளில் இயல்பாகவே தமிழை உள்ளிட முடியும் அது இன்னொரு வெற்றி.” என்று சொல்லி முடித்த பொழுது அரங்கம் அதிரும் வகையில் பேராளர்கள் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 “எனினும், இது போன்ற பெரிய நிறுவனங்கள் தமிழை கட்டாயம் பயன்பாட்டில் வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தமிழைப் பயன்பாட்டில் வைக்கவில்லை என்றாலும் அவர்களது விற்பனை எண்ணிக்கை அதிகமாகத் தான் இருக்கும். தமிழ் பயன்பாடு அதிகம் இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரிய வந்தால் மட்டுமே அந்த நிறுவனங்கள் தமிழின் பயன்பாட்டை அதிகரிப்பார்கள். எனவே கையடக்கக் கருவிகளில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் பயன்பாட்டில் வைக்கும் தமிழ் எழுத்துக்களின் தரமும் அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.

செல்லினம் புதிய பதிப்பைப் பற்றி விளக்குகிறார் முத்து நெடுமாறன்.
அவருடன் செம்மல் மணவை முஸ்தப்பா, சுப.நற்குணன், இராணி, செண்பகவள்ளி

 தமிழ் அறிந்தவர்களும் தமிழைக் கற்றவர்களும் கையடக்கக் கருவிகள், திறன்பேசிகள், திறன்கருவிகள், ஆண்டிரோய்டு கருவிகள் ஆகியவற்றில் தமிழை அதிகமாகப் பயன்படுத்தும் காலம் விரைவில் வரவேண்டும். இன்றையச் சூழலில் திறன்பேசிகளில் தமிழில் குறுஞ்செய்தி அனுப்புவது மிக இயல்பாகிவிட்டது. மேலும் தமிழ் இணையத்தளங்களை வாசிக்க முடியும். அதுமட்டுமல்லாது புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களைத் தரவிறக்கம் செய்து வாசிக்க இயலும். இதில் இன்னொரு சிறப்பு என்னவெனில் ஒரு செய்தியில் அல்லது நூலில் குறிப்பிட்ட ஒரு சொல்லையோ அல்லது ஒரு தகவலையோ நொடிப்பொழுதில் தேடிவிடலாம்; அதனை நண்பர்களுடன் உடனடியாகப் பகிர்ந்துகொள்ளலாம். தொடர்பாளர் பெயர்களைத் தமிழிலேயே பதிவு செய்யலாம். அழைப்புகள் வரும் பொழுது அழைப்பாளர் பெயர் தமிழிலேயே வெளித்தோன்றும். பாடல் பட்டியல்களைத் தமிழிலேயே பதிவு செய்துகொள்ள முடியும் என்றெல்லாம் முத்துநெடுமாறன் ஒவ்வொன்றையும் செய்முறையோடு விளக்கிக் காட்டியபொழுது, தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்மொழியின் வளர்ச்சி குறித்து பெருமிதம் அடையாமல் இருக்க முடியவில்லை. பேராளர்களின் கரவொலியும் ஆரவாரமும் இதனை உறுதிபடுத்துவதாய் அமைந்தன.

மேலும், தற்போது உலக அளவில் பயன்பாட்டில் இருக்கும் தமிழ் உள்ளீட்டு செயலியான செல்லினம் மென்பொருளின் அடுத்த கட்ட நிலை குறித்தும் முத்து நெடுமாறன் அவர்கள் விளக்கமளித்தார். இனி வரவிருக்கும் முரசு மற்றும் செல்லினம் புதிய பதிப்புகள் மேலும் பல புதுமைகளோடு வரவிருப்பதாகத் தெரிவித்தார்.

முத்து நெடுமாறன்

அடுத்து, மாநாட்டின் இறுதி நாளில் முத்து நெடுமாறனின் சிறப்புரை ஒன்றும் இடம்பெற்றது. இதில், தென்கிழக்காசிய மற்றும் இந்திய எழுத்துருக்களிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகள் பற்றி விரிவாகப் பேசினார். கணினிக்கு ஒரு மொழியைக் கற்றுக்கொடுப்பதில் உள்ள நெளிவுசுழிவுகளைப் பற்றி எடுத்துரைத்தார். கணினியில் தமிழ் மொழி எந்த அளவுக்குச் சிறப்பாக இயங்க முடியும் அதனை வளர்ச்சிகள் எவ்வாறு இருக்கின்றன முதலான செய்திகளைக் கூறுனார். அவையோர் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் கூர்ந்து கவனிக்கும் அளவுக்கு அவருடைய விளக்கங்கள் அமைந்திருந்தன.
முத்து நெடுமாறானுடன் இல.வாசுதேவன்

சுப.நற்குணன், முத்து நெடுமாறன், செல்வன் சுப.ந.சரணமுதன்

கணினி, இணையம், தகவல் தொழில்நுட்பம், திறன்கருவி (Smart Device) , தட்டை (Tablet) ஆகியவற்றில் தமிழ்மொழி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டிருக்கிறது; வியக்கத்தகு உயர்ச்சியை அடைந்திருக்கிறது என்பதை இந்த இணைய மாநாடு வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. தமிழின் இந்த வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் பங்காற்றிய பற்பலரில் நம் மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறனின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது - முகாமையானது என்றால் மிகையன்று. 

முத்து மலேசியத் தமிழர்களின் சொத்து! முத்து தமிழன்னையின் தவமுத்து!


@சுப.நற்குணன், திருத்தமிழ்Wednesday, August 21, 2013

12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாடு * கோலாலம்பூர், மலேசியா

உத்தமம் எனப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப அமைப்பு, 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டைக் கோலாலும்பூரில் கோலாகலமாக நடத்தியுள்ளது. இம்மாநாடு கடந்த ஆகத்து 15 - 18 வரையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடந்தது. 'கையடக்கக் கருவிகளில் தமிழ்க் கணிமை' எனும் கருப்பொருளுடன் நடந்த இம்மாநாட்டில் மலேசியாவிலிருந்து 680 பேராளர்களும் அயலக நாடுகளைச் சேர்ந்த 150 பேராளர்களும் கலந்து சிறப்பித்தனர். இதுவரையில் நடந்த தமிழ் இணைய மாநாடுகளில் மிகவும் வெற்றிகரமாக நடந்த மாநாடாக இது கருதப்படுகிறது. 

மாநாட்டின் தொடக்கவிழா 15.08.2013 வியாழன் இரவு 8:00 மணிக்குத் தொடங்கியது. மலேசியத் தகவல், பல்லூடக அமைச்சர் மாண்புமிகு சபரி சிக் மாநாட்டினை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார். 

மாநாட்டில் பேசிய மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சி.ம.இளந்தமிழ்,"இனிவரும் எதிர்காலம் எந்திரமயமாக இருக்கும். முழுக்க முழுக்க தகவல் தொழில்நுட்பமே எங்கும் எதிலும் அட்சி செய்யப் போகின்றது. வீட்டுக் வீடு எந்திர மனிதன் இருக்கப் போகின்றான். அந்த இயந்திய மனிதன் தமிழ் பேசவேண்டும் என்றால், இப்பொழுதே அதற்கான பணிகளை முடுக்கிவிட வேண்டும். மேலும், தமிழ்க் கணினி பயன்பாட்டைத் தமிழ் மக்கள் அதிகப்படுத்த வேண்டும்.  தமிழ் தகவல் தொழில் நுட்பத்தைத் உலகத்தரப்படுத்த வேன்டும். பன்னாட்டு நிறுவனங்களோடு இணைந்து தமிழுக்கான முன்னெடுப்புகளை முனைந்து செய்தல் வேண்டும். இந்த மாநாட்டின்வழி உத்தமம் அமைப்பு எதிர்காலத் தமிழுக்கு ஆக்கமான பணிகளையும் திட்டங்களையும் பற்றி சிந்திக்கும் மாநாடாக நடைபெறுகிறது" எனத் தெரிவித்தார்.

மலாயாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டான்ஶ்ரீ கவுத் பின் சேசுமான், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் மு.ஆனந்தகிருஷ்ணன் ஆகிய இருவரும் சிறப்புரை ஆற்றினர்.

இவர்களை அடுத்து, முரசு அஞ்சல் நிறுவநர் முத்து நெடுமாறன் முதன்மைப் பொழிவு நிகழ்த்தினார். இந்த முதன்மைப் பொழிவு அவையோர் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்ததோடு, கணினி இணைய உலகில் தமிழ்மொழியின் வளர்ச்சி அனைவருக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.

"கணினி, மடிக்கணினி, இணையம் ஆகியவற்றில் தமிழ்மொழி இன்று மிக எளிதாகவும் இயல்பாகவும் இயங்கும் நிலைமை உருவாகிவிட்டது. இன்று மிகப்பரவலாகிவரும் தட்டைகள் (Tablets), திறன்பேசிகள் (Smart Phones), கைக் கருவிகள் (Mobile Devices), குறுஞ்செயலிகள் (Apps) ஆகியவற்றிலும் தமிழ் வளர்ச்சிகண்டுள்ளது. ஆங்கிலம் போலவே தமிழையும் மிக எளிதாகப் பயன்படுத்தும் நிலைமை உருவாகிவிட்டது. ஆண்டிரோய்டு, விண்டோசு தளங்களிலும் தமிழைப் படித்தலும் எழுதுதலும் பெருகிவருகின்றன. தமிழின் வளர்ச்சி மேலும் விரவாக நடைபெற தமிழ் மக்கள் தமிழ்க் கணிமையைப் பயன்படுத்துபவர்களாக மாற வேண்டும். தமிழ்க் கற்றவர்கள் தமிழ்க் கணிமை பயனர்களாக மாற வேண்டும். அதோடு, தரமான பயனர்களாகவும் தரமிக்க கைக்கருவிகளைப் பயன்படுத்த முன்வரவேண்டும்." என்றார் முத்து நெடுமாறன்.

கைக்கருவிகளில் தமிழ்க் கணிமை, தமிழ்க் குறுஞ்செயலிகள், திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல், தமிழ்க் கணினிச் சொல்லாக்கம், கணினிக்குத் தமிழ் இலக்கண அறிவூட்டல், தமிழ் இணைய வளர்ச்சி, தமிழ்ச் சொல்திருத்தி, இயந்திர மொழி மாற்றம், இயன்மொழிப் பகுப்பாய்வுப் பிழைதிருத்தி, கணினி இணையம் வழி தமிழ்க் கற்றல் கற்பித்தல் முதலான துறைகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன. மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகள்  பத்ரி சேசாத்திரி பொறுப்பில் ஆய்வடங்கலாக வெளியிடப்பட்டது.

மாநாட்டையொட்டி கண்காட்சியும் மக்கள் கூடம் எனும் தமிழ்க் கணிமை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஏறக்குறைய 10,000க்கும் அதிகமான தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மாணவர்களும் இளையோர்களும் பொதுமக்களும் வந்திருந்து கலந்து பயன்பெற்றனர்.

மொத்தத்தில், இந்த உலகத் தமிழ் இணைய மாநாடு மலேசியத் தமிழ் மக்களிடையே குறிப்பாக மாணவர்களிடையேயும் இளையோர்கள் மத்தியிலும் தமிழ்க் கணிமை மீது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவதில் பெரும் வெற்றி பெற்றுள்ளது என்றால் மிகையாகாது.
மேலும் செய்திகள் விரைவில்...

Sunday, July 14, 2013

கூகிள் கண்ணாடி - கண்ணுக்குள்ளேயே கணினி

தகவல் தொழில்நுட்பமும், தகவல்தொடர்பு கருவிகளின் வளர்ச்சியும் கற்பனைக் கதைகளாக இருந்தவற்றையும் கூட நடைமுறையில் நிகழ்த்திக்காட்டி வருகின்றன. எண்பதுகளில் (1980) இணையம் உருவாகி வளர்ந்து உலகத்தின் தகவல்கள் அனைத்தும் மேசை விளிம்பிற்கு– கணினி திரைக்கு வந்தன. பின்னர் கைபேசிகள் அறிமுகமாகி, அவை மீள்திறக் கைபேசி (Smart Phone) என வளர்ந்த போது உலகமே விரல்நுனியில் வந்து சேர்ந்ததாக கருதப்பட்டது.
இன்றைய நவின தொழில்நுட்பமோ தகவல்களை கண் அசைவில் கொண்டுவந்து சேர்த்து விடுமளவு வளர்ந்திருக்கிறது. ஆனால் அவை என்ன தகவல்களை தேர்வு செய்து கொண்டு வருகிறது என்பது சிந்தனைக்குரியது. 
மனிதர்கள் அணிந்து கொள்ளும் மூக்குக் கண்ணாடி வடிவிலான சிறு கணினியை கூகிள் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த கூகிள் ’கண்ணாடி’ (Google Glass) நாம் விரும்பும் தகவல்களை நம் கண்களுக்கு அருகில் ஒளி ஊடுருவும் மெய்நிகர் திரையில் (Virtual Transparent Screen) காட்டும்.
கூகிள் கண்ணாடி உள்ளடக்கம்
கூகிள் கிளாசானது தன்னுள்ளே ஒரு செயலி (Processor), புவியிடங்காட்டி (GPS), கம்பியில்லா வலை இணைப்பு (Wi-Fi), ஒலி வாங்கி,  ஒலிபெருக்கி (Mic, Speaker), ஒளிப்படக்கருவி (Camera) இவற்றுடன் ஒரு ஒளியுருக்காட்டி (Projector) ஆகியவற்றுடன், இவையனைத்தும் செயல்பட மின்கலத்தையும் கொண்டுள்ளது.
நாம் பார்க்கும் காட்சிகள் கண்களில் கருவிழியின் வழியே ஒளியாக சென்று விழித்திரையில் (Retina) செய்தியாக மாற்றப்பட்டு மூளையை சென்றடைகிறது. கூகிள் கிளாசில் இருக்கும் ஒளியுருக்காட்டி நேரடியாக ஒருவரது விழித்திரைக்குள் மெய்நிகர் ஒளிஊடுருவும் திரை போன்ற ஒன்றில், தகவல்களை காட்டும். இந்த மெய்நிகர் திரையானது நாம் நேரில் காணும் உண்மைக் காட்சிகளை பாதிக்காதவாறு அதன் மீது மெல்லிய அடுக்காக தோன்றும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது உங்கள் கணினி திரையையோ, கைபேசி திரையையோ பார்க்கவேண்டியதற்கு பதிலாக நேரடியாக உங்கள் கண்களின் விழித்திரைக்குள்ளேயே தகவல்களை பார்த்துக்கொள்ளலாம்.
கூகிள் கிளாசை குரல் கட்டளைகள் மூலம் நேரடியாக கட்டுப்படுத்தலாம். இந்த கண் கணினியை மீள்திறக் கைபேசியுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், தேவையான எந்த தகவலையும் உடனடியாக கண் விழிகளுக்குள்ளேயே பெறலாம். மேலும் இதிலுள்ள படக்கருவியின் உதவியால் தன் நோக்கு நிலையில் (first person view point) படங்களை எடுக்கவும், அவற்றை உடனுக்குடன் இணையத்தில் பகிரவும் முடியும்.
கூகிள் கண்ணாடி பாதுகாப்பானதா?
கண் விழித்திரைக்குள்ளேயே ஒளியை பாய்ச்சுவது கண்களுக்கு தீங்கை விளைவிப்பதுடன், கண்களின் புலனுணர்வு திறனை பாதிக்கும் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளதையடுத்து, கூகிள் தனது கண்ணாடிக் கணினியை குழந்தைகள் மற்றும் கண்களில் சிக்கல் உள்ளவர்கள் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதை ஆய்வு செய்த வல்லுநர்கள் “கூகிள் கண்ணாடி அற்புதங்களை நிகழ்த்தும். ஆனால் அது தனிக்கவனம் செலுத்தும் மனிதத் திறனை ஒழிக்கும்” என்று கூறியுள்ளனர். நாம் பெறும் ஒவ்வொரு தகவலும் நமது மூளையில் அறிவாக சேமிக்கப்படுவதில்லை. மாறாக பெறப்படும் தகவல்கள் நடைமுறையில் ஆய்வுசெய்து உறுதி செய்யப்பட்ட பின்னரே மூளையில் சேமிக்கப்படுகிறது. இந்த வகை கணினிகள் வழியாக அனைத்து தகவல்களையும் பெற  கணினிகளையும், இணையத்தையும் பயன்படுத்துவதால் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் குறைந்து விடக்கூடும் என்று அறிவியலாளர்கள் சிலர் எச்சரித்துள்ளனர்.
மறுசாரார் கூகிள் கண்ணாடி போன்ற அணிந்து கொள்ளக்கூடிய கணினிகளால் தேவையான தகவல்களை உடனுக்குடன் இணையத்தில் பெற முடியும் போது, அதை நமது மூளைக்குள் சேமித்து வைக்கவேண்டிய அவசியம் குறைகிறது. அதனால் மூளையில் குறிப்பிடத்தகுந்த அளவு 'நியூரான்கள்' விடுவிக்கப்படுகின்றன. அவற்றை மற்ற திறன் மிக்க செயலகளுக்கு சிந்திப்பதற்குப் பயன்படுத்துவதன் மூலம் மனிதனின் செயல்பாடுகள் புதிய பரிணாமத்தை எட்டும் என்று வாதிடுகின்றனர்.
கூகிள் கண்ணாடியில் செயல்பாட்டைக் காண இங்குச் சொடுக்கவும் 
கூகிள் கண்ணாடியில் செயல்பாட்டைக் உய்த்துணர  இங்குச் சொடுக்கவும்
கணினியைக் கடந்து, கைபேசியைக் கடந்து, கையடக்கக் கருவிகளைக் கடந்து தொழில்நுட்பம் கண்ணுக்குள்ளேயே சென்று மூளையை இயக்கும் அளவுக்கு முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்த முன்னேற்றம் மாந்தவினத்தை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டுசெல்லப் போகின்றதா? அல்லது மனிதப் பண்பாட்டை புரட்டிப்போடப் போகின்றதா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி:- வினவு
Blog Widget by LinkWithin