Thursday, October 03, 2013

தமிழ்க் கோட்டம் கட்டட நிதி விருந்தோம்பல்

மலேசியாவில் தமிழுக்காகவும் தமிழருக்காவும் அமையவுள்ள முதல் கட்டடம் ‘தமிழ்க் கோட்டம்’ ஆகும். பேரா, கிரியான் மாவட்டம் பாரிட் புந்தாரில் தமிழுக்குச் சூட்டப்படும் ஒரு மணிமகுடம் இந்தத் ‘தமிழ்க் கோட்டம்’ என மாஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் புகழாரம் சூட்டினார்.

தமிழியக் கருத்துக்கள், பணிகள், சிந்தனைகள், கொள்கைகள், ஆக்கங்கள், அனைத்திற்கும் சுமார் 8 இலக்கம் (RM800,000.00) வெள்ளியில் வாங்கப்படும் இத்தாய் கட்டடத்திற்கு முதல்கட்ட நிதியாக 30 ஆயிரம் ரிங்கிட்டை அவர் வழங்கினார்.

கடந்த 1990 தொடங்கி 23 ஆண்டுகளாக வட மலேசியாவில் குறிப்பாக, கிரியான் மாவட்டத்தில் தமிழுக்காக ஒரே இலக்கோடும் ஒரே கொள்கையோடும் செயல்பட்டு வரும் தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் செயலவையினரைப் பாராட்டுவதாக விருந்தினர்களின் பலத்த கரவொலிக்கிடையே அவர் கூறினார்.  

தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் ‘தமிழ்க் கோட்டம்’ கட்டட நிதி விருந்தோம்பல் நிகழ்வில் கலந்துக் கொண்டு சுற்று சூழல், இயற்கை வள அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் திறப்புரையாற்றினார்.

க.முருகையன்
இந்நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் தலைவர் க.முருகையன் மூன்று மாடிகள் கொண்ட கட்டடம் வாங்கத் திட்டமிட்டு முன்பணமாக 2 இலக்கம்  (RM200,000.00) வெள்ளியை செலுத்திவிட்டதாகவும் மேலும் 6 இலக்கம் (RM600,000.00) வெள்ளி தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

‘தமிழ்க் கோட்டம்’ கட்டடம் தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டாலும், மலேசியத் தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்றார். மலேசிய மண்ணில் தமிழ் தமிழாக நிலைக்கவும் தமிழர் தமிழராக வாழவும், தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே இலக்கில் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து செயல்படுவோம் என்று தெரிவித்த அவர், உங்கள் வாழ்நாளில் தமிழுக்குச் செய்யும் நிலையான பணியாக எண்ணி நன்கொடை வழங்கி உதவிடுமாறும் தமதுரையில் கேட்டுக் கொண்டார்.  
மாண்புமிகு டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் நன்கொடை
தமிழ் வாழ்வியல் இயக்க செயற்குழுவினர்
தமிழ் கோட்டம் நிதிக்காக தமிழ் வாழ்வியல் இயக்க செயற்குழுவினர் மட்டும் இலக்கம் வெள்ளியை (RM200,000.00) நிதியாக வழங்கினர். பொதுமக்கள் முன்வந்து நன்கொடை வழங்குவதற்கு இதுவொரு முன்மாதிரியாகவும் உந்துதலாகவும் அமைந்தது. மலேசியத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் நிதியாக அதன் தலைவர் மூ.வி.மதியழகன் 10 ஆயிரம் வெள்ளியை வழங்கினார். பெயர் குறிப்பிட விரும்பாத பினாங்கைச் சேர்ந்த டத்தோ ஒருவர் 10 ஆயிரம் வெள்ளி நன்கொடை வழங்கினார்.

                     திருவருள், தமிழ்ச்செல்வன், க.முருகையன், இரா.திருமாவளவன்,                       இர.திருச்செல்வம், கோவி.சந்திரன், சுப.நற்குணன்
மேலும் அரசுசாரா இயக்கங்கள், கொடை நெஞ்சர்கள், தமிழ் ஆசிரியர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் ஆகியோர் திரளாகக் கலந்துகொண்டு நிதியை வழங்கினர். மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் அவர்களும் விருந்தோம்பலில் கலந்து சிறப்பித்தார். தமிழ் வாழ்வியல் இயக்கச் செயலாளர் சுப.நற்குணனின் அறிவிப்பில் நிகழ்ச்சி வெகுச்சிறப்பாக நடந்தது.

@சுப.நற்குணன், திருத்தமிழ்

No comments:

Blog Widget by LinkWithin