Tuesday, September 25, 2007

தமிழ் இலக்கணம்



மக்கள் தம் கருத்தைப் பிறருக்குத் தெரிவிப்பதற்குப் பயன்படும் ஊடகமாக அல்லது கருவியாகப் பயன்படுவதுதான் மொழி. ஒரு குறிப்பிட்ட ஒலிக் கூட்டம் காலங்காலமாக மக்களிடையே பயின்று, பழகி, பக்குவமடைந்து, பண்பட்டு இறுதியில் ஒரு மொழியாக அடையாளம் பெறுகின்றது.

ஒரு மொழியைப் பேசும் ஒவ்வொருவரும் அம்மொழியைப் பயன்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றனர். எழுத்துகளைச் சேர்த்துச் சொற்களாவும், சொற்களைச் சேர்த்துச் சொற்றொடர்களாகவும் உருவாக்கும் திறனைப் பெற்றிருப்பதால் குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்றாற்போல் வாக்கியங்களை உருவாக்கிக் கருத்துகளாக வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு, வாக்கியங்களை முறைப்படுத்தி கருத்தைத் தெளிவாக வெளிப்படுத்தும் முயற்சிதான் அம்மொழிக்கான வரம்புகளையும் வரையறைகளையும் ஏற்படுத்தியது. இதுவே பின்னாளில் அந்தக் குறிப்பிட்ட மொழிக்குரிய இலக்கணமாக நிறுவப்பட்டது.

ஒரு மொழிக்கு இலக்கணம் உருவாகுவதற்கு முன் அம்மொழி பேச்சு வழக்கிலும் இலக்கியத்திலும் பன்னூற்றாண்டுகள் பயின்று பக்குவமடைந்து வளம்பெற்றிருக்க வேண்டும். ஒரு மொழியின் பெருமை முதலில் அம்மொழியிலுள்ள இலக்கியங்களாலும் பின்னர் அம்மொழிக்குரிய இலக்கணத்தாலும் விளங்கும். எந்தவொரு மொழியையும் பிழையில்லாமல் திருத்தமாகப் பேசவும் எழுதவும் கற்கவும் கற்பிக்கவும் அதன் இலக்கணம் இன்றியமையாததாகும். ஒரு மொழியைப் பழுதுபடாமல் பாதுகாக்கும் அரண் இலக்கணமே என்றால் மிகையன்று.

அவ்வகையில், தமிழ் மொழியின் இலக்கண வரம்பு மிகவும் சிறப்புடையது. தமிழ்மொழியின் பண்டைய இலக்கண நூலாகக் கருதப்படுவது அகத்தியம் எனும் நூலாகும். இந்நூல் பற்றிய தெளிவான விவரங்களும் சான்றுகளும் முழுமையாகக் கிடைக்கவில்லை.

ஆதலால், தமிழ் இலக்கணத்திற்கான முதல் நூலாகத் தொல்காப்பியம் போற்றப் பெறுகிறது. தொல்காப்பியம் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பெற்ற நூலென்பது ஆய்வறிஞர்களின் கருத்தாகும். தொல்காப்பியம் காலத்தால் மிகவும் தொன்மையானது; கருத்தால் மிகவும் செப்பமானது. உலகமொழிகளின் இலக்கண வரம்பினை விளக்கும் நூல்கள் அனைத்திற்கும் முற்பட்டதாகத் தொல்காப்பியம் கருதப்படுகிறது.

தமிழ் இலக்கணத்தை எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று நிலைகளில் பகுத்துக் கூறுவதோடு, தமிழ்ப் பண்பாட்டின் செம்மாந்த நிலையை தெளிவுற விளக்கும் ஒப்பற்ற நூலாகவும் தொல்காப்பியம் இருக்கிறது. தோன்றிய நாள்முதல் இன்றைய நாள்வரையிலும் இனிவரும் காலங்கள் தோறும் செந்தமிழின் செல்வக்கடலாக வீற்றிருக்கும் தனிப்பெரும் நூல் தொல்காப்பியமே என்றால் அதனை மறுப்பார் எவருமிலர்.

தொல்காப்பியத்திற்கு அடுத்து, வடமொழியின் செல்வாக்கு ஓங்கியிருந்த காலத்தில் அதன் ஆதிக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் எழுந்த மற்றொரு இலக்கண நூல்தான் நன்னூல். கி.பி 13ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இந்நூலின் ஆசிரியர் பவணந்தி முனிவர் என்பார். நன்னூல் எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் ஆகியன பற்றி மிகவும் நிறைவாக விளக்கும் நூலாகக் கருதப்பெருகின்றது.

தமிழ் இலக்கணத்தை விளக்க வீரசோழியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலகாரிகை, தண்டியலங்காரம், புறப்பொருள் வெண்பாமாலை, இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் முதலிய பல்வேறு நூல்களும் இருந்துள்ளன. மேலும், பிற்காலத்தில் பாட்டியல் என்னும் இலக்கண நூல்களும் எழுந்துள்ளன.

தொல்காப்பியர் காலத்தில் எழுத்து, சொல், பொருள் என முப்பிரிவுகளாக இருந்த தமிழ் இலக்கணம், பின்னாளில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்தாக விரிந்து இன்றளவும் நிலைபெற்று வருகின்றது.

உலக மொழிகளுள் முதன் முதலாக இலக்கணம் கண்ட பெருமை தமிழ் மொழியையே சாரும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். தமிழிலக்கணம் போன்றதொரு இலக்கணச் சிறப்பும் செழுமையும் வேறெந்த மொழிக்கும் இல்லை. அதனால்தான் என்னவோ தாம் தோன்றிய காலத்தில் இருந்த இலத்தீனம், கிரேக்கம், உரோமானியம், எகிப்தியம், சமஸ்கிருதம், பாலி, சீனம், இப்ரூ முதலான பழம்பெரும் மொழிகள் எல்லாம் அழிந்தும்; சிதைந்தும்; திரிந்தும்போன பின்பும்கூட இன்றளவும் உலகப் பெருமொழிகளுக்கு நிகராக வலம் வந்துகொண்டிருக்கிறது; வாழ்ந்துகொண்டிருக்கிறது நம் தாய்த் தமிழ்மொழி.
Blog Widget by LinkWithin