Tuesday, December 18, 2007

தனித்தமிழ் நாள்காட்டி 2008

தமிழை முன்னெடுக்கும் உலகின் முதலாவது
தனித்தமிழ் நாள்காட்டி 2008

தமிழ் நாள்காட்டி வரலாற்றில் தனிப்பெரும் சிறப்பாக இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, முழுமையாகத் தமிழிலேயே நாள்காட்டி வெளிவந்துள்ளது. தமிழ் மொழி, இன, சமய, பண்பாடு சார்ந்த தமிழியல் மீட்பு, மேம்பாட்டுப் பணிகளை அமைதியாகவும் ஆக்ககரமாகவும் ஆற்றிவருகின்ற தமிழியல் ஆய்வுக் களம் இந்தத் தமிழ் நாள்காட்டியை வெளியிட்டுள்ளது. தமிழியல் ஆய்வுக் களத்தின் நிறுவனர் ஆய்வறிஞர் இர.திருச்செல்வம் இந்த நாள்காட்டியை வடிவமைப்புச் செய்துள்ளார்.

தமிழ்க்கூறு நல்லுலகம் முதன்முறையாகக் கண்டிருக்கும் தனித்தமிழ் நாள்காட்டியென இதனைத் துணிந்து குறிப்பிடலாம். இப்படியொரு அரிய சாதனை நம் மலேசியத் திருநாட்டில் நிகழ்ந்திருக்கிறது என்பது மலேசியத் தமிழர்களுக்குப் பெருமையளிக்கும் செய்தியாகும். முற்றும் முழுவதுமாகத் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ள இந்த நாள்காட்டி தமிழர்கள் இல்லங்கள்தோறும் கண்டிப்பாக இடம்பெறவேண்டும்.



இந்தத் தனித்தமிழ் நாள்காட்டியின் தனிச்சிறப்புகள்

1.முழுமையாகத் தமிழிலேயே வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
2.திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடும் தமிழ் எண்களைப் பயன்படுத்தியும் அமைக்கப்பட்டுள்ளன.
3.ஓரை(இராசி), நாள்மீன்(நட்சத்திரம்), பிறைநாள்(திதி) முதலியன தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.
4.பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணையும் ஐந்திர(சோதிட)க் குறிப்புகளும் உள்ளன.
5.தமிழ் அருளாளர்கள், சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் சிறப்பு நாட்களும் உருவப்படங்களும் உள்ளன.
6.பொதுவிடுமுறை, பள்ளி விடுமுறை, விழா நாட்கள் முதலான விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
7.ஆங்கில நாள்காட்டியை உள்ளடக்கியதோடு, தேவையான அளவு சமற்கிருதத் துணை விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
8.தமிழியல் முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விழைவோருக்கும் இனி வாழ முயல்வோருக்கும் வழிகாட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
9.வள்ளுவர் வள்ளலார் இணைந்திருக்கும் அட்டைப் படத்தோடு முழு வண்ணத்தில் தரமாகவும் கவரும் வகையிலும் அமைந்திருக்கிறது.


உள்ளத்தில் தமிழ் உணர்வும் ஊக்கமும் கொண்டு தமிழ்நலத்திற்காக மு‎ன்னின்று செயலாற்றும் தமிழ் அன்பர்களையும் ஆர்வலர்களையும் இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த நாள்காட்டியை வாங்கி ஆதரவு நல்குவதோடு பரப்பும் முயற்சியிலும் துணைநிற்குமாறு தமிழியல் ஆய்வுக் களம் கேட்டுக்கொள்கிறது.




தொடர்புக்கு : தமிழியல் ஆய்வுக் களம் (Persatuan Pengajian Kesusasteraan Tamil)
d/a No.17, Lorong Merbah 2, Taman Merbah, 14300 Nibong Tebal, SPS, P.Pinang, Malaysia.
தொலைப்பேசி : 6013-4392016 / 6012-4643401
இணையம் : aivukalam.6te.net
மின்னஞ்சல் : aivukalam@gmail.com



Saturday, October 13, 2007

ஐயா பழ.வீரனார்க்கு வீரவணக்கம்


மலேசியத் திருமண்ணில் வந்துதித்த தமிழ்நெறி ஞாயிறு பாவலர் ஐயா அ.பு.திருமாலனார் அவர்களின் தமிழ்ப் பாசறையில் உருவாகி, தமிழே தன்னுடைய உயிராகி, தமிழரே தன்னுடைய உணர்வாகி காலமெல்லாம் தமிழ்மொழி இன சமய விடுதலைக்கும் வாழ்வுக்கும் தன்னை ஈகப்படுத்திக்கொண்ட தமிழ்ப் போராளி ஐயா பழ.வீரனார் அவர்கள்(வயது 54) கடந்த 1-9-2007ஆம் நாள் காரிக்கிழமை இரவு மணி 10.10க்குத் தமிழ்ப்பற்றாளர்களை ஆழந்த துயரத்தில் ஆழ்த்திவிட்டு இறைவன் திருவடி சேர்ந்தார்கள். அன்னாரின் தமிழ்ப்பணிகள் மலேசியத் திருமண்ணில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியன. பின்னாளின் மலேசியத் தமிழரின் வரலாற்றை எவரேனும் எழுதப் புகுந்தால் ஐயா பழ.வீரனாரின் அரும்பணிகளை விட்டுவிடுவாரானால் அது மிகப்பெரும் வரலாற்றுப் பிழையாகப் போய்முடியும். அந்த அளவுக்குத் தமிழுக்கும் தமிழருக்கும் பெரும்பணி செய்துள்ள அன்னாரின் ஆதன் அமைதிபெற எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெரும் கருணையை வேண்டிக்கொள்கிறேன். அன்னாரின் அன்புசால் குடும்பத்தினர் எல்லாருக்கும் எனது ஆழந்த இரங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை அறிய கீழ்க்காணும் இணைய இணைப்பைச் சொடுக்கவும்.
இணைய இணைப்பு:- http://www.mozhi.net/palaveerar/Palaveerar.htm

Thursday, October 04, 2007

தமிழர்க் குமுகாயக் குறைபாடுகள்

அருட்பெரும் சோதி! அருட்பெரும் சோதி!
தனிப்பெருங் கருணை! அருட்பெரும் சோதி!
5-10-2007ஆம் நாள் அருட்பேரொளி வள்ளற் பெருமான் அருள்வருகைத் திருநாள். ஆருயிர்க்கெல்லாம் அன்புசெய்ய இப்பூவுலகம் வருவிக்கவுற்ற வள்ளலாரின் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது.

வள்ளலார் வாழ்ந்த காலத்தில் தாம் சார்ந்திருந்த சமயமும், தாம் வாழ்ந்துவந்த குமுகாயமும் குறையுடையவை என்பதையும், அவற்றின் கொள்கைகளும் பணியும் அன்றையத் தேவைகளை ஈடுசெய்வதுபோல் அமையவில்லை என்பதையும் உணர்ந்தார். அடிகளார் குமுகாயத்திலும் சமயத்திலும் கண்ட மிகப்பெரும் குறைகள் மூன்றாகும். அவற்றை இனி காண்போம்.

1. அவர் காலத்தில் கண்ட முழுமுதற் குறைபாடு சமயப்பூசல் ஆகும். அன்று சமயங்கள் பலவாக இருந்தன. சமயங்களிடையே உட்பூசலும் வெளிப்பூசலுமாக பெரும்போர் நடைபெற்று வந்தது. சைவ சமயத்தார்க்கும் வைணவ சமயத்தார்க்கும் இடையே கருத்து முரண்பாடு; சைவ வேதாந்திகளுக்கும் சித்தாந்திகளுக்கும் இடையே பிணக்கு; சைவ வடகலையாளர்களுக்கும் தென்கலையாளர்களுக்கும் இடையே போராட்டம்; இந்துக்களுக்கும் கிறித்துவர்களுக்கும், இந்துக்களுக்கும் முகமதியர்களுக்கும் இடையே கடும் எதிர்ப்புணர்வு; கடவுளை நம்புவோர்க்கும் கடவுள் மறுப்பாளர்களுக்கும் இடையே தகராறு. இவற்றையெல்லாம் கண்ணுற்ற வள்ளலார் இந்தப் போர்களும் பிணக்குகளும் பொருளற்றவை என்று உணர்ந்தார்.

2. இந்தச் சமயங்களுக்கும் மதங்களுக்கும் அடிப்படை அவற்றின் தத்துவ நூல்களான சாத்திரங்கள், புராணங்கள்; இதிகாசங்கள்தாம். எனவேதான், சமயம் சார்ந்த நூல்களில் அவருக்கு நம்பிக்கை குறைந்தது. அவை நன்மை செய்வதற்குப் பதிலாகப் பெரும் தீமையே செய்கின்றன என்று வள்ளலார் கருதினார்.

3. அடிகளார் கண்ட அடுத்த குறை, குமுகாய அமைப்பில் நிலவிய குறையாகும். சாதி உயர்வு தாழ்வுகள் தலைவிரித்தாடின. சாதிச் சண்டைகளும் தீண்டாமையும் பெருகிய அளவில் இருந்தன. சாதிக்குள்ளும் கோத்திர குலப் பிரிவுகள் மக்களுக்குள் மேலும் பிளவுகளை ஏற்படுத்தின. இவற்றால் இழப்புகள்தாம் அதிகமே தவிர நலமிக்க வாழ்க்கை இல்லை; ஒற்றுமை இல்லை; மாந்தநேயம் இல்லை. இதன் காரணத்தினால் மக்களிடையே முன்னேற்றமும் இல்லை. மாறாகக் கலகமும், சண்டையும், பகைமையும், காழ்ப்பும் வளர்ந்தன.

மொத்தத்தில், அன்று வழக்கில் இருந்த சமயங்கள், அவற்றைத் தாங்கிநின்ற நூல்கள்; அவைகளை ஆதரித்து நின்ற குமுகாய அமைப்பு ஆகிய இவைஅ அனைத்தையும் அடிகளார் கண்டு மனம் வருந்தினார். வாடிய பயிரைக் கண்டதும் தம்முடைய மனம் வாடிப்போன வள்ளலார் மக்கள் வாடுவதைக் கண்டு எவ்வளவு மனவேதனைக்கு ஆளாகியிருப்பார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

அவர்க்கு இயல்பாக அமைந்திருந்த இறைநம்பிக்கை மட்டும் எந்தச் சூழலிலும் ஆட்டம் காணவில்லை. எனவே தெய்வநம்பிக்கையோடு கூடிய சீர்திருத்தப் பணிசெய்ய அவர் முன்வந்தார். ஆகையால், அவர் சமயவாதியாக மட்டும் இல்லாமல் சீர்திருத்தவாதியாகவும்; தெய்வ நம்பிக்கையற்ற வெற்றுச் சீர்திருத்தவாதியாக இல்லாமல் தெய்வ நம்பிக்கையோடு இணைந்த சீர்திருத்தக்காரராகவும் அவரால் திகழ முடிந்தது.

வள்ளலார் காலத்தில் இருந்த இந்தக் குறைபாடுகள் தற்காலத்தில் சற்றே குறைந்திருந்தாலும் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை. தமிழினத்தின் இந்தக் குறைபாடுகள் நீங்கவேண்டுமானால், தமிழ் மக்கள் வள்ளலார் காட்டியுள்ள வழிநடந்து தெய்வநம்பிக்கையுடன் இணைந்த சீர்திருத்தக் கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
மூலம்:- வள்ளலாரின் இறைமைக் கோட்பாடு
இணைய இணைப்பு:- http://www.vallalar.org/

Tuesday, September 25, 2007

தமிழ் இலக்கணம்



மக்கள் தம் கருத்தைப் பிறருக்குத் தெரிவிப்பதற்குப் பயன்படும் ஊடகமாக அல்லது கருவியாகப் பயன்படுவதுதான் மொழி. ஒரு குறிப்பிட்ட ஒலிக் கூட்டம் காலங்காலமாக மக்களிடையே பயின்று, பழகி, பக்குவமடைந்து, பண்பட்டு இறுதியில் ஒரு மொழியாக அடையாளம் பெறுகின்றது.

ஒரு மொழியைப் பேசும் ஒவ்வொருவரும் அம்மொழியைப் பயன்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றனர். எழுத்துகளைச் சேர்த்துச் சொற்களாவும், சொற்களைச் சேர்த்துச் சொற்றொடர்களாகவும் உருவாக்கும் திறனைப் பெற்றிருப்பதால் குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்றாற்போல் வாக்கியங்களை உருவாக்கிக் கருத்துகளாக வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு, வாக்கியங்களை முறைப்படுத்தி கருத்தைத் தெளிவாக வெளிப்படுத்தும் முயற்சிதான் அம்மொழிக்கான வரம்புகளையும் வரையறைகளையும் ஏற்படுத்தியது. இதுவே பின்னாளில் அந்தக் குறிப்பிட்ட மொழிக்குரிய இலக்கணமாக நிறுவப்பட்டது.

ஒரு மொழிக்கு இலக்கணம் உருவாகுவதற்கு முன் அம்மொழி பேச்சு வழக்கிலும் இலக்கியத்திலும் பன்னூற்றாண்டுகள் பயின்று பக்குவமடைந்து வளம்பெற்றிருக்க வேண்டும். ஒரு மொழியின் பெருமை முதலில் அம்மொழியிலுள்ள இலக்கியங்களாலும் பின்னர் அம்மொழிக்குரிய இலக்கணத்தாலும் விளங்கும். எந்தவொரு மொழியையும் பிழையில்லாமல் திருத்தமாகப் பேசவும் எழுதவும் கற்கவும் கற்பிக்கவும் அதன் இலக்கணம் இன்றியமையாததாகும். ஒரு மொழியைப் பழுதுபடாமல் பாதுகாக்கும் அரண் இலக்கணமே என்றால் மிகையன்று.

அவ்வகையில், தமிழ் மொழியின் இலக்கண வரம்பு மிகவும் சிறப்புடையது. தமிழ்மொழியின் பண்டைய இலக்கண நூலாகக் கருதப்படுவது அகத்தியம் எனும் நூலாகும். இந்நூல் பற்றிய தெளிவான விவரங்களும் சான்றுகளும் முழுமையாகக் கிடைக்கவில்லை.

ஆதலால், தமிழ் இலக்கணத்திற்கான முதல் நூலாகத் தொல்காப்பியம் போற்றப் பெறுகிறது. தொல்காப்பியம் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பெற்ற நூலென்பது ஆய்வறிஞர்களின் கருத்தாகும். தொல்காப்பியம் காலத்தால் மிகவும் தொன்மையானது; கருத்தால் மிகவும் செப்பமானது. உலகமொழிகளின் இலக்கண வரம்பினை விளக்கும் நூல்கள் அனைத்திற்கும் முற்பட்டதாகத் தொல்காப்பியம் கருதப்படுகிறது.

தமிழ் இலக்கணத்தை எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று நிலைகளில் பகுத்துக் கூறுவதோடு, தமிழ்ப் பண்பாட்டின் செம்மாந்த நிலையை தெளிவுற விளக்கும் ஒப்பற்ற நூலாகவும் தொல்காப்பியம் இருக்கிறது. தோன்றிய நாள்முதல் இன்றைய நாள்வரையிலும் இனிவரும் காலங்கள் தோறும் செந்தமிழின் செல்வக்கடலாக வீற்றிருக்கும் தனிப்பெரும் நூல் தொல்காப்பியமே என்றால் அதனை மறுப்பார் எவருமிலர்.

தொல்காப்பியத்திற்கு அடுத்து, வடமொழியின் செல்வாக்கு ஓங்கியிருந்த காலத்தில் அதன் ஆதிக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் எழுந்த மற்றொரு இலக்கண நூல்தான் நன்னூல். கி.பி 13ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இந்நூலின் ஆசிரியர் பவணந்தி முனிவர் என்பார். நன்னூல் எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் ஆகியன பற்றி மிகவும் நிறைவாக விளக்கும் நூலாகக் கருதப்பெருகின்றது.

தமிழ் இலக்கணத்தை விளக்க வீரசோழியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலகாரிகை, தண்டியலங்காரம், புறப்பொருள் வெண்பாமாலை, இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் முதலிய பல்வேறு நூல்களும் இருந்துள்ளன. மேலும், பிற்காலத்தில் பாட்டியல் என்னும் இலக்கண நூல்களும் எழுந்துள்ளன.

தொல்காப்பியர் காலத்தில் எழுத்து, சொல், பொருள் என முப்பிரிவுகளாக இருந்த தமிழ் இலக்கணம், பின்னாளில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்தாக விரிந்து இன்றளவும் நிலைபெற்று வருகின்றது.

உலக மொழிகளுள் முதன் முதலாக இலக்கணம் கண்ட பெருமை தமிழ் மொழியையே சாரும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். தமிழிலக்கணம் போன்றதொரு இலக்கணச் சிறப்பும் செழுமையும் வேறெந்த மொழிக்கும் இல்லை. அதனால்தான் என்னவோ தாம் தோன்றிய காலத்தில் இருந்த இலத்தீனம், கிரேக்கம், உரோமானியம், எகிப்தியம், சமஸ்கிருதம், பாலி, சீனம், இப்ரூ முதலான பழம்பெரும் மொழிகள் எல்லாம் அழிந்தும்; சிதைந்தும்; திரிந்தும்போன பின்பும்கூட இன்றளவும் உலகப் பெருமொழிகளுக்கு நிகராக வலம் வந்துகொண்டிருக்கிறது; வாழ்ந்துகொண்டிருக்கிறது நம் தாய்த் தமிழ்மொழி.

Saturday, August 04, 2007

அறிஞர் போற்றிய அருந்தமிழ்


1. டாக்டர் ஜி.யு.போப் (DR.G.U.POPE) அவர்கள் தமிழைப் படித்து, தமிழிலே உள்ள கருத்துகளை ஆய்ந்தறிந்து, இந்த மொழி உயர்ந்த மொழி; ‏இது ஒரு செம்மொழி எ‎ன்றெல்லாம் எடுத்துக்கூறினார். ‏ஜி.யு.போப் அவர்கள் 50 ஆண்டுகாலம் தமிழுக்குத் தொண்டு செய்தவர். அவர் மறையக்கூடிய இறுதி நேரத்தில் ‏தம்முடைய கல்லறையில் "இங்கு ஒரு தமிழ் மாணவ‎ன் உறங்குகிறா‎ன்" என்று எழுதச் சொ‎ன்னவர். கிறித்துவ சமயத்தைப் பரப்புவதற்காகத் தமிழ் நாட்டுக்கு வந்தவர் தமிழ்த்திருவாசகத்தைப் படித்துவிட்டு "எலும்பை உருக்கும் பாட்டு திருவாசகம்" எ‎ன்று உருக்கத்தோடு கூறியுள்ளார்.

2. பெர்சிவல் பாதிரியார் (REV.PERCIVAL) அவர்கள் தமிழைக் கற்றுணர்ந்தபி‎ன் "ஆற்றல்மிக்கதாகவும் சொல்லவ‎ந்த பல கருத்துகளைச் சில சொற்களால் புலப்படுத்தும் த‎ன்மையும் தமிழ்போல் வேறு எம்மொழியிலும் இல்லை" எ‎ன்று உறுதிபடக் கூறியுள்ளார்.

3. டாக்டர் ரோபர்டு கால்டுவெல் (DR.ROBERT CALDWELL) அவர்கள் தமிழை ஆய்ந்துபார்த்தும் பிறமொழிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தும் தமிழ் தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது; பிறமொழி துணையி‎ன்றி இயங்கவல்லது; இந்திய மொழிகளில் தமிழ் தனிச்சிறப்பு வாய்ந்தது எ‎ன்று கூறியுள்ளார்.

4. கமில் சுவெலபில் (KAMIL ZVELEBIL) எ‎ன்பவர் செக்நாட்டுத் தமிழ் அறிஞர். தமிழில் உள்ள ஏடுகளை எல்லாம் ஆய்ந்துபார்த்தும் சிலப்பதிகாரத்தை ஆய்ந்துபார்த்தும் தமிழி‎ன் உண்மையை; மேன்மையை உலகறியச் செய்தவர்.

5. ஈராசுப் பாதிரியார் (FATHER HERAS) எ‎ன்ற இசுபெயி‎ன் நாட்டு அறிஞர் ‏இந்தியாவில் நீண்டகாலமாக வரலாற்று ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டவர். கடல்கொண்ட குமரிக் கண்டத்தி‎ல் தோன்றிய தமிழர் நாகரிகம்தா‎ன் தென்னாட்டின் திரவிட நாகரிகமாக மலர்ந்து, சிந்துவெளி (அராப்பா - மொகஞ்சதாரோ) நாகரிகமாக மிளிர்ந்து, பி‎ன்னர் சுமெரியர் - எகுபதியர் - கிரேக்கர் - உரோமானியர் - ஐரோப்பியர் நாகரிகரிகங்களாக மாறின என்று தம் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தினார்.

6. ஆல்பர்ட் சுவைட்சர் (ALBERT SWITZER) எ‎ன்ற செருமானிய மெய்யியல் அறி‎ஞர் ஏசுநாதரின் மறுபிறவி எ‎ன்ற புகழுட‎ன் வாழ்ந்தவர். அவர் திருக்குறளில் மனம் தோய்ந்து பல குறட்பாக்களை மனப்பாடம் செய்திருந்தார். "சீரிய கோட்பாடுகளி‎ன் தொகுப்பான திருக்குறளில் காணப்படும் அத்துணை உயர்ந்த ஞானம் உலக இலக்கியத்தில் வேறு எந்த நூலிலும் இல்லை" எ‎ன்று சொல்லிச் செ‎ன்றுள்ளார்.

7. கவியரசர் இரவிந்திர‎நாத் தாகூர் (RABINDRANATH TAGORE) எ‎ன்பவர் புகழ்பெற்ற வடநாட்டுப் பாவலர். திருக்குறளைப் படித்தபி‎ன் அவர் கூறியதாவது, "பாரத நாடு முழுவதற்கும், ஏ‎ன் உலகம் முழுவதற்குமே மகா‎ன் வள்ளுவரி‎ன் கோட்பாடு பொருந்தும்". தமிழில் தோ‎ன்றிய திருக்குறளை அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார்.

8. மாக்சு முல்லர் (MAX MUELLER) என்ற செருமானிய நாட்டுக்காரர் தலைசிறந்த மொழிநூல் வல்லுநராக விளங்கியவர். இவர் "தமிழ் மிகப் பண்பட்ட மொழி; தனக்கே உரிதாக இயல்பாய் வளர்ந்த சிறந்த இலக்கியச் செல்வமுள்ள மொழி" என்றார்.

9. வீரமாமுனிவர் எ‎னும் பெசுகி பாதிரியார் (FATHER JOSEPH BESCHI) என்பார் இத்தாலி நாட்டிலிருந்து வந்த கிறித்துவ மதகுரு. பிரெஞ்சு, இலத்தின், கிரேக்கம், இப்ரு, இத்தாலி, பாரசீகம், ஆங்கிலம், வடமொழி ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார் இவர் 20 ஆண்டுகள் தமிழ்ப் பயின்றார். இவரே தமிழில் முதன் முதலில் அகராதியை எழுதி வெளியிட்டவர். திருக்குற¨ளைக் கற்று அதன் சிறப்பில் தோய்ந்துபோய் இத்தாலியில் மொழிபெயர்த்தார். தமிழில் உரைநடை இலக்கியம் வளர்வதற்கும்; தமிழில் நிறுத்தக்குறிகள் புகுவதற்கும் இவர்தான் முன்னோடி.

10. மகாத்மா காந்தி (MAHATMA GHANDHI) உலகிற்கு அகிம்சையைக் கற்பித்துச் சென்ற இவருக்கு அந்த அகிம்சையைக் கற்றுகொள்ள தூண்டுகோளாக இருந்தது திருக்குறள்தான். திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழைக் கற்றவர். அதனைக் அவரே இப்படி கூறியுள்ளார் "திருக்குறளை அதன் மூலத்திலிருந்து கற்பதற்காகவே நான் தமிழைக் கற்றேன்".

11. சுவாமி விவேகானந்தர் (SWAMI VIVEKANANDA) என்ற ஞானி இளமையிலேயே துறவுகோலம் பூண்டு இந்தியாவின் இமயம் தொடங்கி குமரி வரை பயணம் செய்து பின்னர் அமெரிக்கா வரையில் சென்று ஆன்மிகக் கருத்துகளைப் பரப்பியவர். "ஆரிய இனம் தோன்றுவதற்குத் தாய் இனங்களில் ஒன்றான தமிழினத்தின் இரத்தம் நம் உடலில் ஓடுகின்றது என்பது நமக்குப் பெருமை அளிப்பதாகும்" என்றும் "இந்திய நாட்டின் ஞானநெறி தென்னாட்டிலிருந்து நமக்குக் கிடக்கப்பெற்றதாகும்" என்றும் இவர் சொல்லியிருக்கிறார்.

12. பேராசிரியர் ஜோர்ஜ் எல்.ஆர்ட் (PROF. GEORGE L.HART) என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியரான இவர் அண்மையில் சொல்லியிருக்கும் கூற்றே வாழும் நற்சான்றாக இருக்கின்றது. இவர் சமஸ்கிருதம், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர். கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசினால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டபோது "தமிழ் உலகின் மிகச் சிறந்த இலக்கியங்களையும் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் கொண்ட செம்மொழியாகும். ஒரு மொழி செம்மொழி (Classical Language) ஆகவேண்டுமானால் அது சில அடிப்படையான தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அந்த அத்தனைத் தகுதிகளையும் தமிழ்மொழி பெற்றுள்ளது" என இவர் கூறியுள்ளார்.

இவர்களோடு, டாக்டர் வி‎‎ன்சுலோ (DR.WINSLOW), இரைசு டேவிட்டு (RHYS DAVIDS), டாக்டர் பிலியோசா (DR.FILIOZAT), கில்பர்ட்டு இசுலெட்டர் (GUILBERT SLATER), பேராசிரியர் பரோ (PROF.T.BURRO), பேராசிரியர் பானர்ஜி (PROF.R.D.BANERJI) கே.எம்.முன்சி (K.M.MUNSHI), போ‎ன்றோர் தமிழைக் கற்றும் - தெளிந்தும் - ஆய்ந்தும் பல உண்மைகளை வெளிப்படுத்திக்காட்டி தக்க ஆய்வுச் சா‎ன்றுகளோடு தமிழி‎ன் தொன்மை; தலைமை; தெய்வத்தன்மை; உண்மையை நிறுவியுள்ளனர். தமிழி‎ன் சிறப்புகளைத் தமிழர் அல்லாத மேற்கண்டோர் உணர்ந்துள்ளது போல நம் தமிழர்கள் எ‎த்தனைபேர் உணர்ந்துள்ளனர்? அப்படியே உணர்ந்தவர்களில் தமிழுக்காக உண்மையாய் உழைப்பவர்கள்தாம் எத்தனை பேர்?தமிழராய் பிறந்ததற்காகப் பெருமைபடுவோம்! தமிழை வளர்ப்பதற்காகப் பாடுபடுவோம்! தமிழனால் தமிழுக்கு வாழ்வு உண்டானால்... தமிழால் தமிழனுக்கும் வாழ்வு உண்டாகும் !

இறைவன் இருக்கின்றார்!


மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தம் 'தமிழர் மதம்' என்ற ஆய்வு நூலில் கடவுள் உண்டு என்பதற்கான அசைக்க முடியாத புறச்சான்றுகள் இருக்கின்றன என வலியுறுத்துகின்றார். அதனை வைதே கடவுள் எனும் பேராற்றல் இருக்கின்றது என நம்பத் தோன்றுகிறது என்ற ஒரு முடிவான கருத்தை அவர் கொடுத்துள்ளார். அவை பின்வருமாறு:-

1. கதிரவன்(சூரியக்) குடும்பத்தைச் சேர்ந்த கோள்கல் எல்லாம் இடையறாது ஓர் ஒழுங்காக இயங்கி வருகின்றன. ஓர் ஊரில் ஊர்க்காவலரோ, ஆரசியலாட்சியோ சிறிது நேரம் இல்லாவிடினும் கலகமும் கொள்ளையும் கொலைகளும் நேர்கின்றன. உயிரற்ற நாளும், கோளும் பாவையாட்டுகள் (பாவை விளையாட்டுகள்) போல ஒழுங்காக ஆடிவருவதால், அவற்றை ஆட்டும் ஆற்றல் இருத்தல் வேண்டும். அவ்வாற்றலே இறைவன்!

2. இவ்வுலகம் முழுவதற்கும் கதிரவன் பகல் விளக்காகவும் திங்கள் இரா விளக்காகவும் எண்ண இயலாத காலத்திலிருந்து விளங்கி வருகின்றன. ஒரு வீட்டில் விளக்கேற்றி வைப்பது அதில் குடியிருக்கும் மக்களுக்கே. மக்கள் இல்லாவிட்டால் வீட்டில் விளக்குத் தானாகவே தோன்றி எறியாது. பல உலகங்களுக்கும் இரு சுடரையும் விளக்காக ஏற்படுத்தியவன் இருவன் இருக்க வேண்டும். அவனே இறைவன்!

3. பிற கோள்களைப் போல் சுற்றாது ஒரே இடத்தில் இருக்கும் கதிரவன் பத்து திசையும் ஒளி சமமாகப் பரவுமாறு உருண்டையாய் இருப்பதும், அளவிடப்பட முடியாத நீண்ட நெடுங்காலமாக எரிந்து வரினும் அதனது எரியாவியாகிய சத்தி குறைந்து அணையாமல் இருப்பதும், இயற்கைக்கு மாறான இரும்பூதுச் செய்தியாதலால், அதை இயக்கி ஆளும் ஒரு பரம்பொருள் இருத்தல் வேண்டும்! அப்பரம்பொருளே இறைவன்!

4. கோள்கள் ஒன்றோடு ஒன்று முட்டாது, தத்தம் கோள்வழியில் இயங்குமாறும், இவை சுழழும்போது இவற்றின் மேல் உள்ள பொருள்கள் நீங்காதவாறும் ஒவ்வொன்றையும் சூழ ஒரு கவர்ச்சி(ஈர்ப்பு) மண்டலம் அமைந்திருப்பதும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஓர் ஆற்றலின் அமைப்பேயாகும். இவ்வமைப்பே இறைவன்!

5. காலமும் இடமும், தொடக்கமும் முடிவும் இல்லாதவையாதலால் இன்றைய மக்கள் உலகம் தோன்றுமுன், எண்ணிக்கையற்ற உயிர் உலகங்கள் தோன்றி அழிந்திருத்தல் வேண்டும்.
"படைத்து விளையாடும் பண்பி னோனும்
துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும்
தன்னில் வேறுதா னொன்றி லோனும்
அன்னோன் இறைவன் ஆகும் என்றுரத்தனன்"
(மணிமேகலை)

6. மாந்தன் தோன்றி ஐம்பதினாயிரம் ஆண்டுகள் ஆயிற்று என வைத்துக்கொண்டாலும், நூற்றுக்கணக்கான தலைமுறைகள் கழிந்திருத்தல் வேண்டும். பத்துக்கணக்காகத் தொடங்கிய மக்கள் தொகை இன்று நூறு கோடிக்கணக்காகப் பெருகியுள்ளது. ஒவ்வொரு தலைமுறையிலும் எத்தனையராயினும் அத்தனை பேரும் அடையாளம் காணுமாறு வெவ்வேறு முக வடிவில் உள்ளனர். கைவரையும்(ரேகை) வேறுபட்டுள்ளது. இது அறிவு நிரம்பிய ஒரு பேராற்றலின் செயலேயாகும். அப்பேராற்றலே இறைவன்!

7. 'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்பது இன்றும் சிலர் வாழ்க்கையில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மெய்யே இறைவன்!

8. உடல்நலம், மனநலம், மதிநலம் முதலிய நலங்கள் உள்ளவரும் இல்லாரும் படைக்கப்பட்டுள்ளனர். இந்தப் படைப்பாற்றலே இறைவன்!

9. பஞ்சம், கொள்ளை, நோய், பெருவெள்ளம், நிலநடுக்கம் முதலிய இயற்கை அழிவு நிகழ்ச்சிகள் நேர்கின்றன. இந்த இயற்கையாற்றலே இறைவன்!

Tuesday, June 19, 2007

தமிழ்ச்சங்கம் - Sanggam



மூன்று சங்கங்கள் வைத்து பாண்டிய மன்னர் முத்தமிழை வளர்த்தனர் என்ற செய்தி பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டு வருகிறது. முச்சங்கங்கள் பற்றி பழைய இலக்கிய உரையாசிரியர்கள் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளனர். அவர்களுள் முச்சங்கம் பற்றி விரிவான விளக்கம் தருபவர், இறையனார் களவியலுரை ஆசிரியர் நக்கீரர் ஆவார்.

பழந்தமிழ் மண்ணில் இருந்து விளங்கிய தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகிய மூன்றையும் பாண்டிய மன்னர்கள் போற்றிப் புரந்தனர். இந்தச் சங்கங்களில் புலவர்கள் இருந்தார்கள். அவர்கள் தமிழைச் செம்மைப்படுத்தினார்கள்; செழுமைப்படித்தினார்கள்; அரிய நூல்கள் இயற்றினார்கள்; நூல்களை அரங்கேற்றினார்கள். சங்க காலம் தமிழின் பொற்காலமாக விளங்கியது.

முதற்சங்கம் கடல்கொண்ட தென்மதுரையில் இருந்தது. அதற்குப் பிறகு கபாடபுரத்தில் இடைச்சங்கம் இருந்தது. இவை இரண்டும் கடல்கோள்களால் அழிந்து போயின. பின்னர் தோன்றிய மதுரையில் மூன்றாம் தமிழ்ச்சங்கம் இருந்ததாக வரலாறு கூறுகின்றது.

1.தலைச்சங்கம்:- முதற்சங்கத்தில் மொத்தம் 549 புலவர்கள் வீற்றிருந்தனர். அவர்களுள் அகத்தியனார், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த குமரவேல், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் ஆகியோர் சிலராவர். இவர்களை உள்ளிட்டு 4449 புலவர்கள் இச்சங்கத்தில் பாடியுள்ளனர். அகத்தியம், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை ஆகிய நூல்கள் இந்தச் சங்கத்தில் எழுந்தவையாகும். அவற்றுள், அகத்தியம் என்பது தமிழில் எழுதப்பட்ட மிகப்பழமையான இலக்கண நூலாகக் கருதப்படுகிறது. இந்தத் தலைச்சங்கம் 4440 ஆண்டுகள் நடைபெற்றன. பாண்டிய மன்னன் காய்ச்சின வழுதி தொடங்கி கடுங்கோன் வரையில் 89 மன்னர்கள் இந்த முதலாவது சங்கத்தைக் காத்து வழிநடத்தினர்.
2.இடைச்சங்கம்:- பாண்டியன் வெண்தேர்ச்செழியன் என்ற மன்னரால் இடைசங்கம் நிறுவப்பட்டது. இம்மன்னன் தொடங்கி முடத்திருமாறன் வரையில் 59 மன்னர்கள் இந்தச் சங்கத்தைப் புரந்து வளர்த்தனர். அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க் கருங்கோழி மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டுரங்கன், திரையன் மாறன், துவரைக்கோன், கீரந்தை முதலிய 59 புலவர்கள் இடைச்சங்கத்தில் அரங்கேற்றம் கண்டனர். குருகும் வெண்டாளியும் வியாழமாலை அகவலும் இச்சங்கத்தில் பாடப்பட்டன. 3700 ஆண்டுகளாக இந்த இடைச்சங்கம் நடைபெற்றுள்ளது.

3.கடைச்சங்கம்:- மூன்றாவது சங்கமான கடைச்சங்கம் முடத்திரு மாறனால் நிறுவப்பட்டது. உக்கிரப் பெருவழுதி வரையில் 49 மன்னர்கள் இதனைக் காத்து வந்தனர். சேந்தம்பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர் கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர், நல்லந்துவனார், மருதனிளநாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் முதலிய 49 புலவர்கள் இச்சங்கத்தில் பங்கேற்றனர். நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை, நற்றிணை நானூறு, புறநானூறு, பரிபாடல், ஐங்குறுநூறு, கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை ஆகிய கடைச் சங்கத்தில் எழுந்த நூல்களாகும். கடைச்சங்கம் 1850 ஆண்டுகள் நிலவியது.

மேலே சொல்லப்பெற்ற செய்திகளை இறையனார் களவியலுரை கூறுகின்றது. இந்த நூல் பத்துத் தலைமுறைகளில் வாய்மொழியாகக் கூறப்பட்டுப் பின்னர் எழுத்து வடிவம் பெற்றது என்று சொல்லப்படுகிறது. இவ்விளக்கத்தின்படி, 197 அரசர்கள் காலத்தில் ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகள் மூன்று சங்கங்களும் இயங்கின என அறிகின்றோம். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் பாண்டிய நாட்டுச் செவ்வூர்ச் சிற்றம்பலக் கவிராயர் வீட்டு ஏட்டுச் செய்தியும் முச்சங்கங்கள் பற்றி மொழிகின்றன.

இவ்வாறு மூன்று தமிழ்ச்சங்கங்கள் இருந்தமை உண்மையே என்பதை டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர், கா.சுப்பிரமணிய பிள்ளை, கா.அப்பாதுரையார், ஞா.தேவநேயப் பாவாணர் போன்றோர் அரிய சான்றுகளோடு நிறுவியும் உள்ளனர்.

Friday, April 27, 2007

சொல் அறிவியல் - Tamil Etimology

பாவாணர் வழியில் மலேசிய மண்ணிலிருந்து..
தமிழ் வேர்ச்சொல் ஆய்வு நூல்கள்
நூலாசிரியர் : தமிழியல் ஆய்வறிஞர் இர.திருச்செல்வம்


 மலேசிய வரலாற்றில் முதன் முறையாக வெளிவரும் வேர்ச்சொல் ஆய்வுநூல்.
 மொழிஞாயிறு பாவாணர் நிறுவிய சொல்லாய்வு வழியில் அமைந்த அரியநூல்.
 தமிழ் மொழியின் ஆழத்தையும் உச்சத்தையும் ஒருசேர விளக்கும் அருமைநூல்.
 தமிழின் தலைமையையும் தகுதியையும் சான்றுகளோடு நிறுவும் அறிவுநூல்.
 தமிழுக்கும் உலக மொழிகளுக்கும் உள்ள உறவுகளைக் காட்டும் உயர்நூல்

தனியொருவராக ‏இருந்து தம் வாழ்நாளில் ஐம்பது ஆண்டுகளை ஈகம்செய்து சொல்லாய்வுத் துறையில் முழுமையாகவும் முறையாகவும் ஈடுபட்டுச் செழிக்கச் செய்த மொழிஞாயிறு பாவாணரிடமிருந்து புறப்பட்ட இர.திருச்செல்வம்(நூலாசிரியர்) என்னும் கதிரவக்கீற்று ‏மலேசிய நாட்டிலும் தமிழ்கூறு நல்லுலகிலும் பெரிதான ஒரு வீச்சை எற்படுத்தக் கதிர்த்துக் காத்திருக்கிறது எ‎ன்ற உண்மைக்கு ‏இந்நூல் நல்லதொரு சான்று.

இந்நூலைப் படித்து முடிக்கி‎ன்ற உள்ளங்களில் தமிழைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்; தமிழுணர்வு ஏற்படும். தமிழ்மீது இருந்துவந்த தாழ்வுணர்ச்சி மறைந்து நம்பிக்கை ஏற்படும். தமிழ்மீது ஏற்படும் நம்பிக்கை த‎ன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.

தமிழியல் வாழ்வையும் வளர்ச்சியையும் மட்டுமே இலக்காகக் கொண்டு, எந்தவொரு வணிக நோக்கமும், ஈட்டமும் கருதாமல் தூய்மை எண்ணத்தோடு வெளியிடப்பெற்றுள்ள இந்நூலைப் படித்துப் பயன்பெறுமாறு பிறந்த இனத்தால் அமைந்த உறவால் அன்போடு வேண்டுகிறோம்.

தொடர்புக்கு : தமிழியல் ஆய்வுக் களம்,
No.4, Lorong Bunga Kantan 10,Taman Kerian, 34200 Parit Buntar, Perak, Malaysia.
Tel : 6012-5645171 / 6012-4643401 / 605-7160967

தமிழின் பொருள் - 2

உலக மொழிகளில் எதற்குமே இல்லாத அளவுக்குத் 'தமிழ்' மட்டும் பல்வேறு பொருள்களை உணர்த்தி நிற்கிறது. இக்கட்டுரையின் முதலாம் தொடரில் 'தமிழ்' என்பதற்கான நான்கு பொருள்களை இலக்கியச் சான்றுகளோடு கண்டோம். அதே அணுகுமுறையில் கட்டுரை மேலும் தொடர்கிறது.
5. தமிழ் = இறைமை : திருமந்திரம் தமிழரின் ஒப்பற்ற நூல்களுள் ஒன்று. அதில், "என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே" என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன. இங்கே தமிழ் என்பது கடவுள் தன்மை – இறைமை என்ற பொருளைத் தருகிறது.

6. தமிழ் = சைவ சமயம் : திருஞானசம்பந்தர் நாயன்மார்களில் ஒருவர். சைவ சமயத்திற்குப் புத்துயிர் தந்த மூவரில் ஒருவர். இவர் சமயத்தோடு தமிழையும் வளர்த்தார்; தமிழிசையையும் வளர்த்தார். இவரை "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்" என்று போற்றினார்கள். இங்கே தமிழ் என்பது 'சைவ சமயம்' என்ற பொருளைக் காட்டி நிற்கின்றது.

7. தமிழ் = படை வீரர் / மறவர் : தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், பாண்டிய பெருமன்னர்களுள் ஒருவன். அவன் தலையாலங்கானம் என்னும் இடத்தில் தன் பகைவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றான். அவனைக் குடபுலவியனார் என்ற புலவர் பாடினார். "தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து" என்று அப்புலவர் குறிப்பிடுகிறார். இதில், தமிழ் என்ற சொல் படை வீரர் / மறவர் என்ற பொருளைப் பெறுகின்றது.

8. தமிழ் = நாடு : கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி என்பவன் ஒரு பாண்டிய மன்னன். அவனை ஐயூர் முடவனார் என்ற புலவர் பாடியுள்ளார். "சினப்போர் வழுதி தண்டமிழ் பொதுஎனப் பொறாஅன்" (புறம்:51) என்று மன்னனைப் போற்றினார். "தமிழ் வரம்பறுத்த தண்புனல் நன்னாட்டு" என்று சிலப்பதிகாரப் பாடலொன்று இயம்புகிறது. "தண்டமிழ் வினைஞர்" (மணி:19-109) என்றொரு பாடல் உள்ளது. இங்கெல்லாம் வந்துள்ள தமிழ் என்ற சொல் நாட்டைக் குறிக்கிறது.

9. தமிழ் = வேந்தர் : சேரன் செங்குட்டுவன் காலத்தில் வடநாட்டு அரசர்களான கனக வியசர் தமிழ்நாட்டு வேந்தர்களை இகழ்ந்தனர். "தண்டமிழ் இகழந்த ஆரிய மன்னரின்" (சிலப்:28-153) என்று இதனை இளங்கோவடிகள் தம் நூலில் பதிவு செய்துள்ளார். இத்தொடரில் தமிழ் என்பது வேந்தரைக் குறிக்கின்றது.

10. தமிழ் = தமிழர் - தமிழ்நூல் : தமிழ் என்பது பொதுவாகத் தமிழரையும் தமிழ் நூல்களையும் குறிக்கும். (தமிழ் இலெக்சிகன் 3:1756).

இவ்வாறு தமிழ் என்ற சொல், மொழி, இனிமை, நீர்மை, அகப்பொருள், வீரம், இறைமை, சைவ சமயம், படைவீரர், மறவர், நாடு, வேந்தர், தமிழர், தமிழ்நூல் ஆகிய பல பொருள்களைத் தருகின்றது. உலகில் மொழியைக் குறிக்கும் எந்தச் சொல்லும் இத்துணைப் பொருள்கள் பெற்றிருக்கவில்லை. தமிழுக்கு இருக்கின்ற எண்ணற்ற சிறப்புகளுள் இதுவும் ஒன்றாகும்.
இத்துணைச் சிறப்பு வாய்ந்த மொழியைப் பெறுவதற்குத் தமிழர்கள் தவம் செய்திருக்க வேண்டும். எனவே, தாய் தமிழ்மொழியைப் போற்றி வாழ்வோம்.
மூலம்:தமிழும் தமிழரும்

தமிழின் பொருள் - 1

தற்போது உலகத்தில் 6800 மொழிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மொழிகளுள் சில தொன்மையானவை. சில புதியவை. சிலவற்றுக்கு இலக்கிய வளம் உண்டு. சிலவற்றுக்கு எழுத்துகூட கிடையாது. சில மொழிகள் நெடுங்காலம் வாழக்கூடிய நலமான நிலையைப் பெற்றுள்ளன. ஒரு சில மொழிகள் அழிவின் விளிம்பில் நிலை தடுமாறிக்கொண்டிருக்கின்றன.

உலக மொழிகள் எதற்கும் இல்லாத தனிச்சிறப்புகள் தமிழ்மொழிக்கு உண்டு. கிரேக்க நாட்டு மொழி கிரேக்கம். இங்கிலாந்து நாட்டின் மொழி இங்கிலீசு(ஆங்கிலம்). கிரேக்கம், இங்கிலீசு என்ற சொற்கள் மொழியை மட்டுமே சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் தமிழ் என்ற சொல், மொழி என்பதோடு சேர்த்துப் பதினொரு பொருளைத் தருகிறது. இப்படிப்பட்ட சிறப்பு உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லவே இல்லை.

1. தமிழ் = இனிமை : சீவகசிந்தாமணி ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இதில் "தமிழ் தழீஇய சாயலவர்" என்ற தொடர் வருகிறது. இதற்கு இனிமை தழுவிய சாயலை உடையவர் என்று பொருள். இங்கே தமிழ் என்பது இனிமை என்ற பொருள் தருகிறது. "வண்டு தமிழ்ப் பாட்டிசைக்கும் தாமரையே" என்ற கம்பராமாயணப் பாட்டின் தொடரிலும் 'தமிழ்' இனிமை என்ற பொருளில் வந்துள்ளது.

2. தமிழ் = நீர்மை : "இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்" என்று பிங்கல நிகண்டு தெளிவாகக் கூறுகிறது. எனவே தமிழுக்கு நீர்மை என்ற பொருள் உள்ளது.

3. தமிழ் = அகப்பொருள் : பிரகந்தன் என்பவன் ஓர் ஆரிய அரசன். அவன் சங்க காலத்தில் வாழ்ந்தவன். அவன் தமிழரின் வாழ்வைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பினான். அவன் கபிலர் என்ற புலவரின் உதவியை நாடினான். அவனுக்காக புலவர் 'குறிஞ்சிப் பாட்டு' என்ற நூலைப் பாடினார். அது தமிழரின் இல்வாழ்வை - அகப்பொருளைப் பற்றிச் சொல்லும் நூல். அதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் "ஆரிய அரசன் பிரகந்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு" என்று குறித்துள்ளார். இங்குத் தமிழ் என்பதற்கு, 'அகப்பொருள்' என்ற பொருள் அமைகின்றது.

4. தமிழ் = வீரம் : சேரன் செங்குட்டுவன் வடநாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். கண்ணகி சிலைக்குக் கல் எடுத்து வருவதும் தமிழ் வேந்தர்களை இகழ்ந்து பேசிய ஆரிய அரசர்களைத் தண்டிப்பதும் அவனுடைய நோக்கமாகும். "அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கெனச் சீற்றம் கொண்டு இச்சேனை செல்வது" என்று அம்மன்னன் அறிவிக்கின்றான். இங்கே தமிழ் என்பது வீரம் என்று பொருள் பெறுகின்றது.
"வடதிசை மருங்கின் மன்னவ ரெல்லாம்
தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாமென" என்ற சிலப்பதிகாரத் தொடரிலும் 'தமிழ்' என்பது வீரம் என்னும் பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. (தொடரும்..)

Saturday, January 20, 2007

தமிழ் நாள்காட்டி (Tamil Calender)



தமிழை முன்னெடுக்கும் தனித்தமிழ் நாள்காட்டி

தமிழ் நாள்காட்டி வரலாற்றில் தனிப்பெரும் சிறப்பாக இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, முழுமையாகத் தமிழிலேயே நாள்காட்டி வெளிவந்துள்ளது. தமிழ் மொழி, இன, சமய, பண்பாடு சார்ந்த தமிழியல் மீட்பு, மேம்பாட்டுப் பணிகளை அமைதியாகவும் ஆக்ககரமாகவும் ஆற்றிவருகின்ற தமிழியல் ஆய்வுக் களம் இந்தத் தமிழ் நாள்காட்டியை வெளியிட்டுள்ளது.

தமிழ்க்கூறு நல்லுலகம் முதன்முறையாகக் கண்டிருக்கும் தனித்தமிழ் நாள்காட்டியென இதனைத் துணிந்து குறிப்பிடலாம். இப்படியொரு அரிய சாதனை மலேசியத் திருநாட்டில் நிகழ்ந்திருக்கிறது என்பது மலேசியத் தமிழர்களுக்குப் பெருமையளிக்கும் செய்தியாகும். முற்றும் முழுவதுமாகத் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ள இந்த நாள்காட்டி தமிழர்கள் இல்லங்கள்தோறும் கண்டிப்பாக இடம்பெறவேண்டும்.

தமிழ் நாள்காட்டியின் தனிச்சிறப்புகள்

தமிழ் நாள்காட்டி என்ற அடையாளத்திற்கு ஏற்றவாறு முழுமையாகத் தமிழிலேயே இந்த நாள்காட்டி வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடும் தமிழ் எண்களைப் பயன் படுத்தியும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஓரை(இராசி), நாள்மீன்(நட்சத்திரம்), பிறைநாள்(திதி) முதலானவையும் தமிழில் குறிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், ஆங்கில நாள்காட்டியை உள்ளடிக்கியதோடு, தேவையான அளவு சமற்கிருதத் துணைவிளக்கங்களும் கொடுக்கப் பட்டுள்ளன.

பழந்தமிழர்களின் கண்டுபிடிப்பான ஐந்திரம்(சோதிடம்) தொடர்பான ஓரை, நாள்மீன், பிறைநாள் முதலான வானியல் கூறுகள் சமற்கிருத மயமாகிப்போய்விட்ட நிலையில், அவற்றை மீட்டெடுக்கும் பெரும்பாட்டை இந்த நாள்காட்டியில் காணமுடிகிறது. தமிழர்களின் வரலாற்றில் மறைக்கப்பட்டு; மறக்கப்பட்டுவிட்ட வானியல் கலையை இந்த நாள்காட்டி மீண்டும் வெளிப்படுத்தி காட்டியுள்ளது. இப்படியொரு அரிய முயற்சி தமிழ் நாள்காட்டி வரலாற்றிலேயே இப்போதுதான் முதன்முறையாக நிகழ்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமற்கிருதக் கோரப்பிடியுள் சிக்குண்டு தமிழர்களின் வாழ்வியல் கூறுகளில் தலைக்கீழ் மாறுதல்களை ஏற்படுத்திவிட்ட ஐந்திர(சோதிட)க் கலை தொடக்கக் காலத்தில் தமிழர்களுக்கே சொந்தமானது என்பது வரலாற்று உண்மை. வெறும் பேச்சளவிலும் எழுத்தளவிலும் இருந்த இவ்வுண்மையை இந்த நாள்காட்டி நடைமுறை வாழ்க்கைக்குக் கொண்டுவந்திருக்கிறது. மீட்டெடுக்க முடியாத அளவுக்கு முழுக்க முழுக்க சமற்கிருதத்திற்கே சொந்தமாகிப்போய்விட்ட வானியல் கலைக்கூறுகளைத் தமிழில் வெளிப்படுத்தி பெரும் புரட்சிக்கு வித்திட்டிருக்கும் இந்த நாள்காட்டியைத் தமிழ் அன்பர்கள் கண்டிப்பாகப் பார்வையிட வேண்டும்.

இன்றையக் காலக்கட்டத்தில் தமிழ்க்குழந்தைகளின் பெயர்கள் தமிழில் வைக்கப்படுவதில்லை என்ற மாபெரும் குறையைக் களைவதற்கு இந்த நாள்காட்டி பெரும் துணையாக இருக்கும் என்றால் அது மிகையாகாது. குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணையும் நாள்காட்டியின் பின்னிணைப்பாக வழங்கப்பட்டிருப்பது மற்றுமொரு குறிப்பிடத்தக்கச் சிறப்பாகும். பெயர் எழுத்து அட்டவணையில் பின்னாளில் மிகச்சூழ்ச்சியாகச் செய்யப்பட்ட சமற்கிருத எழுத்து ஊடுருவல்களை இந்த நாள்காட்டி வெளிப்படுத்திக்காட்டி உண்மை நிலையை எடுத்துகாட்டுகிறது. அதோடு, பின்னிணைப்பில் வழங்கப்பட்டிருக்கும் விரிவான விளக்கங்களும் ஐந்திரக் குறிப்புகளும் நாள்காட்டியை எளிதாகப் புரிந்துகொள்வதற்குப் பயனாக உள்ளது.

இதுவரையில் வந்துள்ள எந்தவொரு தமிழ் நாள்காட்டியிலும் இல்லாத அளவுக்கு தமிழ் அருளாளர்கள், சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் சிறப்பு நாட்கள் இதில் குறிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் அவர்களின் உருவப்படங்களும் இடம்பெற்றுள்ளன என்பது மேலுமொரு தனிச்சிறப்பு.

தவிர, நாள்காட்டிகளில் வழக்கமாக இடம்பெருகின்ற பொதுவிடுமுறை நாட்கள், விழா நாட்கள், பள்ளி விடுமுறை நாட்கள் முதலான விவரங்களும் இந்தத் தமிழ் நாள்காட்டியில் வழங்கப்பட்டுள்ளன. முழு வண்ணத்தில் தரமாகவும் வள்ளுவர் வள்ளலார் இணைந்திருக்கும் அட்டைப் படத்தோடு கவரும் வகையிலும் அமைந்திருக்கிறது.

மொத்தத்தில், தமிழியல் முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விளைவோருக்கும் இனி வாழ முயல்வோருக்கும் வழிகாட்டியாக வரலாற்றுச் சான்றுகளுடனும் விளத்தங்களுடனும் இந்நாள்காட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

உள்ளத்தில் தமிழ் உணர்வும் ஊக்கமும் கொண்டு தமிழ்நலத்திற்காக முன்னின்று செயலாற்றும் தமிழ் அன்பர்களையும் ஆர்வலர்களையும் இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த நாள்காட்டியை வாங்கி ஆதரவு நல்குவதோடு பரப்பும் முயற்சியிலும் துணைநிற்குமாறு தமிழியல் ஆய்வுக் களம் கேட்டுக்கொள்கிறது.

தொடர்புக்கு : தமிழியல் ஆய்வுக் களம்
Persatuan Pengajian Kesusasteraan Tamil Perak
No.4, Lorong Bunga Kantan 10,Taman Kerian,
34200 Parit Buntar, Perak, Malaysia.
Tel : 6012-5645171 / 6012-4643401 / 605-7160967
email : suba_nargunan@yahoo.com.my / engunan@tm.net.my
Blog Widget by LinkWithin