Thursday, July 10, 2008

யாருக்கு.. யார்தான் தெய்வம்? (தமிழமுது 3)

"குலமகட்குத் தெய்வம் கொழுனனே மன்ற
புதல்வர்க்குத் தந்தையும் தாயும் - அறவோர்க்(கு)
அடிகளே தெய்வம் அனைவோர்க்கும் தெய்வம்
இலைமுகப் பைம்பூண் இறை"
-குமர குருபரர்
இப்பாடல் கூறும் கருத்து:-
நல்ல குடியில் பிறந்த கற்புடைய ஒரு பெண்ணுக்கு அவரள் கரம்பற்றும் கணவனே தெய்வம்; பிள்ளைகளுக்குத் தந்தையும் தாயுமே தெய்வமாவர்; அறநெறி நின்று இல்லற வாழ்வில் இனிதே ஈடுபட்டிருபோருக்குப் பற்றறுத்தத் துறவிகள் தெய்வமாவர்; இலையினுடைய நுனி போலப் பசும் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களைக் கொண்ட அரசனே(இறைவனே) அனைவருக்குமான தெய்வமாவான்.
  • நன்றி:- தமிழ் மறை தமிழர் நெறி

(அமுது ஊறும்...)

Sunday, July 06, 2008

சந்தனக்காடு:- "வீரத்தமிழன் வரலாற்று ஆவணம்"
தமிழ்த் தொலைக்காட்சி உலகின் தலையெழுத்தையே புரட்டிப்போட்டு, இதுவரையில் இல்லாத மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி, தனக்கென தனியொரு பாணியை உருவாக்கி தமிழின் விழுமியங்களையும் தமிழரின் தொல்மரபுகளையும் உயர்த்திப்பிடித்து, உலகத் தமிழரின் உள்ளமெல்லாம் நீங்கா இடத்தைப் பிடித்துள்ள ஒரே தமிழ்த் தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சிதான்.

தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ் கலை பண்பாட்டுக்கும் முன்னுரிமை கொடுப்பதோடு, மருந்துக்குக்கூட 'சினிமா' எனப்படும் திரைப்படக் குப்பைகளுக்கு அறவே இடம் கொடுக்காமல் மிக வெற்றிகரமாகச் செயல்பட்டு உலகத்தமிழ் நேயர்கள் அனைவரது ஒட்டுமொத்த பாராட்டுதலையும் வாரிக்குவித்துக் கொண்டிருக்கிறது மக்கள் தொலைக்காட்சி.


இப்படிப்பட்ட அருமைமிகு தமிழ்த் தொலைக்காட்சிக்கு மகுடம் வைத்ததுபோல அமைந்த நிகழ்ச்சிகளில் மிக முதன்மையானது 'சந்தனக்காடு' தொடர்தான் என்றால் மிகையன்று. தமிழகம், மலேசியா, எத்தியோப்பியா, துபாய், ஆத்திரேலியா, கனடா உள்ளிட்ட அயல்நாடுகளில் வாழும் தமிழரின் பெருத்த ஆதரவோடு இத்தொடர் மிக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி இப்போது நிறைவடைந்துள்ளது. 'சந்தனக்காடு' தொடர் வீரப்பனின் வாழ்க்கையைக் காட்டும் மிகச்சிறந்த காவியமாக உலகத் தமிழ்மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளாகக் காணாமல் போயிருந்த தமிழனின் வீரத்தையும் மறத்தனத்தையும் தூசுதட்டி பளிச்செனக் காட்டி தமிழின வரலாற்றில் தடம் பதித்துள்ளது.

சந்தனக் கடத்தல்காரன் என்று உலகத்திற்குச் சொல்லப்பட்ட வீரப்பனின் வாழ்க்கையை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்திய இந்தத் தொடரை, மிகச் சிறந்த ஒரு திரைப்படத்துக்குரிய நேர்த்தியோடு இயக்கியவர் இயக்குநர் வ.கெளதமன். மகிழன் கலைக்கூடம் நிறுவனம், ஒரு வனமும் இனமும் சிதைந்த இந்தக் கதையைக் காவியமாக வழங்கியது.

தமிழனின் வீரமரபை வெளிப்படுத்தியத் தொடர்

உலக நாகரிக வெள்ளத்தில் கரைந்துபோய்விட்ட ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் மிகமிக அடித்தளத்தில் கண்டுபிடிக்க முடியாத ஒரு இருண்ட மூளையில் எள்மூக்கு அளவுக்கு ஒட்டிக்கொண்டிருக்கும் 'தமிழன்' என்ற உணர்வையும் 'தமிழ்' என்ற உணர்ச்சியையும் 'சந்தனக்காடு' தட்டியெழுப்பியிருக்கிறது என்று துணிந்து சொல்லலாம். அந்த அளவுக்குச் சிறுவர்கள் முதல் பெண்களும் பெரியவர்களுமாக, தொடக்கநாள் முதல் இறுதிநாள் வரை ஒவ்வொரு நாளும் தவறாமல் இந்தத் தொடரைப் பார்த்தவர்கள் ஏராளம் ஏராளம்!

'சந்தனக்காடு' தொலைக்காட்சியில் தொடராக வருகின்ற நாள்வரையில் வீரப்பன் என்ற ஒரு வீரத்தமிழனின் வரலாற்றைத் தமிழர்கள் எல்லாருமே தப்பும் தவறுமாகத்தான் அறிந்து வைத்திருந்தனர். வீரப்பனின் உண்மை வரலாற்றை; ஒரு மறத்தமிழனின் வீரவரலாற்றை இந்தத் தொடர் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இது வெறும் சின்னத்திரைத் தொடரல்ல. ஒரு வனத்தின் நடுவில் இருந்துகொண்டு தமிழையும் தமிழரையும் காப்பதற்குப் போராடிய வீரத்தமிழர் பற்றிய வரலாற்று ஆவணம்! 'சந்தனக்காடு' மட்டும் வராமல் இருந்திருந்தால் ஒரு வீரத்தமிழனின் போராட்டம் உலகத்திற்குத் தெரியாமலே போயிருக்கும்.

சந்தனக்காடு ஏற்படுத்திய தாக்கங்கள்

இந்தத் தொடரைக் கண்டுகளித்தோம் என்று சொல்லுவதை விட, வீரப்பனோடு வாழ்ந்திருந்தோம் என்று சொல்லும் அளவுக்குக் கதைக்குள்ளே நம்மையும் இழுத்து வைத்துக்கொண்டது 'சந்தனக்காடு'. வீரப்பன் சிரிக்கும்போது சிரித்து.. அழும்போது அழுது.. கோபப்பட்டபோது கோபித்து.. வெகுண்டு எழுந்தபோது எழுந்து.. நெஞ்சுயர்த்தி நின்றபோது நின்று என வீரப்பனோடு நம்மையும் பிணைத்துவைத்த காட்சிகள்தாம் எத்தனை எத்தனை!

வீரப்பன் அடிபட்ட போதெல்லாம் நமக்கும் வலித்தது..! வீரப்பன் அடி கொடுத்த போதெல்லாம் நமக்கும் நரம்பெல்லாம் முறுக்கேரியது..! வீரப்பன் காதலில் வெட்கப்பட்ட போதெல்லாம் நமக்கும் கூச்சமாயிருந்தது..! வீரப்பன் பிடிபட்டபோது அவனைக் காப்பாற்ற நமது தோளும் துடித்தெழுந்தது..! வீரப்பனுக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்ட போது நமது இரத்தமும் சூடேரியது..! வீரப்பன் கொல்லப்பட்ட போது நம்முடைய உடன்பிறப்பொன்று பிரிவது போல நமது உயிரும் கலங்கியது..! இப்படி எண்ணற்ற பாதிப்புகளை நமக்குள்ளே இந்தச் 'சந்தனக்காடு' ஏற்படுத்தியது உண்மையிலும் உண்மை!

அதுமட்டுமா? தமிழர்கள் கொடுரமாகக் கொல்லப்படும் ஒவ்வொரு காட்சியிலும், தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் காட்சியிலும், தமிழ்க் குடும்பங்களும் குழந்தைகளும் கன்னட வெறியர்களால் தாக்கப்படும் காட்சியிலும், இனவெறிபிடித்த கன்னடர்கள் கோரத்தாண்டவம் ஆடும் காட்சியிலும் நமக்குள்ளே நான் தமிழன்.. என் மொழி தமிழ்.. என்ற உணர்ச்சி மீண்டும் மீண்டும் பொங்கிக்கொண்டே இருந்தது! நமது உரிமையை அஞசாமல் கேட்க வேண்டும்; மொழி இனத்தை முன்னின்று காக்க வேண்டும்; சொந்த மண்ணைப் போராடியாகிலும் மீட்க வேண்டும் என்ற உணர்வுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன!

அவிழ்ந்து போன மர்ம முடிச்சுகள்

மொழிப்பற்றும் இனப்பற்றும் தாய்மண் பற்றும் மாந்தநேயமும் நேர்மையும் உண்மை உணர்வும் கொண்ட வீரப்பன் ஏன்? எப்படி? யாரால்? எதனால்? எதற்காக? கொலைக் குற்றவாளியானான் என்பதை இந்தக் காவியம் மிகத் தெளிவாக நமக்குக் காட்டிவிட்டது. வீரப்பன் நிலையில் இருக்கின்ற எவரும் கண்டிப்பாகக் குற்றவாளியாக மாறியே ஆவார்கள். சட்டத்தின் பார்வைக்குத்தான் வீரப்பன் குற்றவாளியே தவிர ஓர் இனப்போராட்டத்தின் பார்வையில் அவன் ஈடு இணையற்ற ஒரு போராளி என்பதை இந்தத் தொடர் நிறுவியுள்ளது.

மேலும், ஒவ்வொரு தொடரின் இறுதியிலும் வீரப்பனோடு வாழ்ந்திருந்த பொதுமக்களைப் பேசவைத்து அவர்களின் பட்டறிவைப் படமாக்கியிருப்பதானது, 'சந்தனக்காடு' தொடரில் வரும் கதைகளும் நிகழ்வுகளும் உண்மையானவை என்பதை உறுதிபடுத்துவதாக அமைந்தது. அவ்வாறு பேசியவர்கள் சொன்ன கண்ணீர்; செந்நீர்; வீரதீரக் கதைகளிலிருந்து வீரப்பனை நாம் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அதோடு, அதிகாரக் கூட்டத்தினரும், இன வெறியர்களும், காவல் அதிகாரிகளும் பண்ணிய கொடுமைகள், பொய்ப் பித்தலாட்டங்கள், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள், கொலைவெறித்தனங்கள் என அனைத்தையும் அப்பட்டமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது.

மொத்தத்தில், இந்தத் தொடரானது நமது தமிழ் மொழிக்கும் இனத்துக்கும் நாட்டுக்கும் ஏற்பட்ட; ஏற்படுகின்ற; ஏற்படப்போகும் இன்னல்களையும் இடர்களையும் நன்றாகவே எடுத்துக் காட்டியுள்ளது. இந்தத் தொடரானது மிகப்பெரிய அளவில் மொழி, இன, நாட்டு உணர்வை ஊட்டியுள்ளது. தூங்கிக் கிடக்கும் தமிழ் மக்களைத் தட்டி எழுப்பியுள்ளது. தமிழரிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு அடுத்த தலைமுறைக்காக நாம் செய்யவேண்டிய முன்னேற்பாடுகளைப் பற்றிய சிந்தனைகளைத் தூண்டியுள்ளது.

திரைப்பட – சின்னத்திரைப் போக்கையே புரட்டிப்போட்ட புதுமைப் படைப்பு

காலங்காலமாக, நாயகர்களின் அதிரடியையும், நடிகைகளின் குலுக்கலையும், நகைச்சுவை என்ற பெயரில் கோணங்கித்தனத்தையும், இரட்டைப் பொருள்தரும் உரையாடலையும், ஆங்கிலம் கலந்த ஆர்ப்பாட்டமான பாடலையும் திரும்பத் திரும்பப் பரிமாறி, தமிழனின் மனத்தையும் மானத்தையும் தமிழ்த் திரப்படங்கள் (சினிமா) கெடுத்துவந்தன. இப்படி, திரைப்படங்கள் தின்றுத்துப்பிய எச்சில்களையே பின்னர்வந்த சின்னத்திரைத் தொடர்களும் மக்களுக்குப் பரிமாறின. இரண்டு மனைவி கதை, மூன்று பெண்டாட்டிக்காரன் கதை, அண்ணியை அடைய நினக்கும் தம்பி, கணவனையே கொல்ல சதிசெய்யும் மனைவி என ஒழுக்கங்கெட்ட வட்டத்திலேயே செக்குமாடுபோல சுற்றிவந்த சின்னத்திரையில் 'சந்தனக்காடு' இயக்குநர் வ.கௌதமன் புதிய பரிணாமத்தைக் ஏற்படுத்தி சாதனை செய்துள்ளார்.

திரைப்படம் – சின்னத்திரை இரண்டின் ஆதிக்கத்தை வீரப்பனின் தோட்டா வேட்டையாடி தூள்தூளாக்கிவிட்டது. திரைப்படம் – சின்னத்திரை இரண்டும் எழுப்பி வைத்திருந்த கனவுக் கோட்டையைச் 'சந்தனக்காடு' தகர்த்து தரைமட்டமாக்கிவிட்டது.

இரவுப் பகல் பாராமல், காடுமேடு பாராமல், பசிப்பட்டினி பாராமல், ஊண் உரக்கம் பாராமல் தான் பிறந்த தமிழினத்தின் நலன் ஒன்றையே குறியாகக் கொண்டு 36 ஆண்டுகள் சந்தனக்காட்டில் மறைந்து வாழ்ந்து, ஆனால் உலகம் முழுக்க பெரும் பரபரப்பு ஏற்படுத்திய வீரப்பன் என்ற ஒரு வீரத்தமிழன் வாழ்க்கையை அதனதன் நிகழ்விடத்திலேயே பதிவுசெய்து நமக்கெல்லாம் வழங்கிய இயக்குநர் வ.கௌதமனுக்கும், மகிழன் கலைக்கூடத்திற்கும், மக்கள் தொலைக்காட்சிக்கும் உலகத் தமிழர் அனைவரும் நன்றிசொல்ல வேண்டியது முதன்மைக் கடமையாகும். வீரப்பனின் வீர வரலாற்றை ஒளிக்காப்பியமாக உருவாக்கி இன்றைய இளைஞர்களுக்குப் பாடமாகவும் நாளைய தலைமுறைக்கு ஆவணமாகவும் ஆக்கியிருக்கும் இந்தக் கூட்டணியை உண்மைத் தமிழர் என்றென்றும் போற்றுவர்.

Blog Widget by LinkWithin