Wednesday, April 28, 2010

முரசு அஞ்சல் 10ஆவது பதிப்பு வந்துவிட்டது


1985ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கும் மலேசியத் தயாரிப்பான முரசு அஞ்சல் எனும் தமிழ்ச் செயலி புத்தம் புதிய செயல்பாடுகளுடன் பத்தாவது பதிப்பாக மலேசியாவில் வெளியீடு கண்டுள்ளது.

கணினியில் தமிழ் தோன்றுவதே ஒரு சாதனையாக இருந்த காலம் கடந்து இப்போது மின்-அஞ்சல், இணையம், வலைப்பதிவு (பிளாக்), டிவிட்டர் போன்ற செயல்பாடுகளுக்குத் தமிழ்ச் செயலிகள் எந்தவித தடையும் இன்றி உதவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம்மிடையே இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யவதோடு எதிர்பாராத செயல்பாடுகளையும் சேர்த்து வருகிறது முரசு அஞ்சல் 10.

முழுக்க முழுக்க யூனிகோட் தரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்தப் பதிப்பு நவீன இயங்கு தளங்களான விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ்-7ழோடு மட்டும் இல்லாமல் மெக்கிண்டாஷ் கணினிகளிலும் இயங்கக் கூடியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. பழைய தளமான விண்டோஸ் எக்ஸ்பி-யிலும் இயங்கும் இந்தச் செயலி, ஆவண மாற்றம், பி.டி.எஃப் (PDF) உருவாக்கம் முதலிய வசதிகளோடு நின்றுவிடாமல் முழுமையான லிப்கோ தமிழ்ப் பேரகராதியையும் சேர்த்துள்ளது.

"முரசு அஞ்சல் நிறுவனம் பல சாதனைப் படைப்புகளைத் தமிழ் உலகத்துக்குத் தந்துள்ளதை நாம் அறிவோம். தமிழை பிழையின்றி கணினியில் எழுதவும், நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் அவர்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சி பாராட்டுக்குறியது. கணினியில் எழுதும்போதே சொற்களின் பொருளைத் தெரிந்துகொளும் வசதியை தமிழுக்கு முதன்முதலில் கொடுத்த மென்பொருள் முரசு அஞ்சல் தான். அவர்களோடு பணியாற்றுவதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி!” என்று தமிழ் நாட்டில் உள்ள எண்பத்திரண்டு ஆண்டுகளான லிப்கோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. தி. ந. ச. வீரராகவன் கூறியுள்ளார்.

மலேசியப் பதிப்புத் துறையின் அடையாளத்தையே மாற்றியது முரசு அஞ்சல் தான் என்று கூறினால் அது மிகையாகாது. 25 ஆண்டுகளாக பல கணினிகளிலும் கருவிகளிலும் தமிழைத் தடையின்றி தவழ வைத்த பெருமை முரசு அஞ்சலுக்கு உண்டு.

அதை நினைவு கூர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான முத்து நெடுமாறன் “கணினியோடு தமிழின் புழக்கம் நின்றுவிட்டால் எனது நோக்கம் நிறைவேறிவிட்டதாகக் கொள்ள முடியாது. கணினிகள் இப்போது கைகளுக்குள் அடங்கி விட்டன, கைப்பேசிகளோ கணினியோடு போட்டிப் போடுகின்றன. இவை அனைத்தும் தமிழ் பேசவேண்டும் - அதுவும் நல்ல தமிழ் பேச வேண்டும். அதுவே எமது கனவு. அந்தக் கனவு நிறைவேறி வருகிறது. அப்படி வரும் வழியில் முரசு அஞ்சல் 10 ஒரு மைல் கல்" என்கிறார்.

முரசு அஞ்சல் 10, 2010 மார்ச்சு 14ஆம் நாள் முதல் மலேசிய சந்தைக்கு வந்தது. வசதிகள் கூடினாலும் விலையில் குறைந்துள்ளது இந்தப் பத்தாம் பதிப்பு. தனி நபர்களின் சொந்தப் பயனுக்கு இதன் விலை 100 ரிங்கிட் மட்டுமே.

இதனைப் பெற்றுக் கொள்வதற்கு இணைய வசதி தேவைப் படும். மேலும் விவரங்களை http://anjal.net/ இணைய முகவரியில் காணலாம்.
தொடர்புக்கு:- 03-23811141.


Saturday, April 24, 2010

பள்ளிப் பாடநூலில் சுழியம்! தமிழுக்கு வெற்றி!!



2012 தொடங்கி மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் கணிதம், அறிவியல் ஆகிய இரு பாடங்கள் தமிழிலேயே கற்பிக்கப்பட உள்ளன. இதற்காக பாடநூல்கள் தமிழில் உருவாகி வருகின்றன. அதில் ‘சுழியம்’, ‘பூஜியம்’ ஆகிய இரண்டில் எதனைப் பயன்படுத்துவது என்ற சர்ச்சை அண்மையில் எழுந்தது. இந்தச் சிக்கல் தொடர்பில் மலேசிய இந்தியன் காங்கிரசு (ம.இ.கா) கட்சியின் கல்விக்குழு ஏற்பாட்டில் 22-4—2010ஆம் நாளன்று கூட்டம் நடந்தது.

தமிழ்மொழிக்கான கலைத்திட்டம், பாடநூல் ஆகியவற்றில் இனிமேல் ‘சுழியம்’ எனும் தமிழ்ச்சொல் பயன்படுத்தப்பட இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பள்ளிப் பாடநூலில் தமிழே இடம்பெற வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இப்படியொரு நல்ல முடிவு காணப்பட்டது மகிழ்ச்சிக்குரியது. சுழியத்தை நிலைநிறுத்த தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட அனைவரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள். இதுகுறித்த விரிவான செய்தி கீழே தரப்பட்டுள்ளது. – சுப.ந


**********************


கோலாலம்பூர் எப்.24,
ம.இ.கா கல்விக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் பூஜ்யம் அல்லது சுழியம் தொடர்பான சிக்கலுக்குச் சுமுகமான தீர்வு காணப்பட்டது. கல்விக் குழுத் தலைவர் டத்தோ டாக்டர் மாரிமுத்துவின் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் பேராசிரியர் முனைவர் கருணாகரன், இணைப்பேராசிரியர் கிருஷ்ணன் மணியம், பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ எனும் கோட்பாட்டின் அடிப்படையில் இனி சுழியம் பயன்படுத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.

பாடநூல் மற்றும் கலைத்திட்ட ஆவணங்களில் இச்சொல் இனிவரும் காலங்களில் பயன்படுத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.
கலைத்திட்டப் பிரிவு, தேர்வு வாரியம் மற்றும் பாடநூல் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

சமூக அமைப்புகளீன் நிகராளிகள் தமிழ்க் காப்பகம், தமிழ் மணிமன்றம், இந்து தர்ம மாமன்றம், திராவிடர் கழகம், தமிழ் இலக்கியக் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழாசிரியர் மாநாட்டு மலேசியச் செயலகம் மற்றும் ம.இ.கா கல்விக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த முடிவை ம.இ.கா கல்விக்குழு ஒரு கோரிக்கையாக கல்வி அமைச்சிற்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ்மொழி தொடர்பான சிக்கல்களை ஆராய்ந்து தீர்வு காண ம.இ.கா கல்விக் குழுவின் கீழ் பல்வேறு தரப்பினர் இடம்பெறும் ஒரு துணைக்குழு நியமிக்கப்படும் எனவும், தற்போது தயார்நிலையில் உள்ள கலைச்சொல் அகராதியை ம.இ.கா கல்விக்குழு பரிசீலித்து ஏற்றுக்கொண்ட பின்னர், கல்வி அமைச்சின் அங்கீகாரத்திற்கும் பயன்பாட்டிற்கும் சமர்ப்பிக்கப்படும் எனவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

  • செய்தி: தமிழ் நேசன் (24.4.2010)

தொடர்பான செய்திகள்:-

1. "0" :- சுழியமா? பூச்சியமா?

2. கணிதம், அறிவியல் பாடநூலில் தமிழ் புறக்கணிப்பு

3. பாடநூலில் பூச்சியமே போ! போ! சுழியமே வா! வா!

Thursday, April 22, 2010

தமிழர்கள் உடனே விழிப்புற வேண்டியது எதில்?

மலேசியத் தமிழர்கள் இன்று பல துறைகளில் பின்தங்கி உள்ளனர். இந்தக் கருத்து உண்மையா?

கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் உடன் வாழுகின்ற மலாய், சீன இனத்தாரைவிட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்பதை மறுக்க முடியுமா?

அரசியல் விழிப்புணர்வு தமிழர்களிடையே எந்த அளவில் இருக்கிறது? இதிலாவது முன்னணியில் இருக்கிறார்களா?

இவைதாம் போகட்டும். சிறுபான்மை இனமாக இருக்கின்ற தமிழர்கள் தங்கள் சொந்த மொழி, இன, சமத்திலாவது முழு விழிப்புணர்வு பெற்றிருப்பது முக்கியம் அல்லவா? அப்படி இருக்கிறார்களா?

மொழி, இன, சமய, பண்பாட்டுக், கலை, இலக்கியங்களைக் பேணுவதில் நாட்டாத்தோடும் விழிப்போடும் இருக்கிறார்களா?
இந்த நிலைமை ஏன்? இதற்கு என்ன காரணம்? யார் காரணம்? இதற்குத் தீர்வு என்ன? எப்போது?

இவை பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு ஒரு களமாக, ‘சுழல் பட்டிமன்றம்’ நடைபெறவுள்ளது.

ஆறு பேச்சாளர்கள் சுழல் முறையில் பேசவுள்ள இந்தச் சுழல் பட்டிமன்றத்தின் தலைப்பு இதுதான்:-

மலேசியத் தமிழர்கள் உடனடியாக விழிப்புற வேண்டியது எதில்?
மொழி – இனம் – கல்வி – அரசியல் – பொருளாதாரம் - சமயம்


பினாங்கு மாநிலத் தமிழர் திருநாள் விழாவில் இந்தச் ‘சுழல் பட்டிமன்றம்’ பின்வரும் வகையில் நடைபெறும்.

நாள்:-24-4-2010(காரிக்கிழமை)
நேரம்:- இரவு மணி 7.30
இடம்:-எஃப் அரங்கம், 5ஆவது மாடி, கொம்தார் கட்டடம், பினாங்கு
தலைமை:-தமிழ்த்திரு மாருதி மகாலிங்கம்
முன்னிலை:-டத்தோ அருணாசலம்
நடுவர்:-தமிழ்த்திரு.க.முருகையனார்


பேச்சாளர்கள்:-
சுப.நற்குணன், கோவி.சந்திரன், சுப.நவராஜன், இராம.சரவணன், இராம.செல்வஜோதி, கி.விக்கினேசு

இலவயமாக நடைபெறும் இந்தச் சுழல் பட்டிமன்றத்தைக் கண்டுகளிக்க அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.

மேல்விளக்கம் பெற:- செந்தமிழ்ச் செம்மல் சோ.மருதமுத்து (016-4598760)

Sunday, April 18, 2010

பாடநூலில் பூச்சியமே போ! போ! சுழியமே வா! வா!


விரைவில் தமிழில் வெளிவரவுள்ள கணிதம், அறிவியல் பாடநூல்களில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்பதாக நமது நாளிகைகளில் செய்திகளும், கண்டனங்களும் கடந்த ஒரு வாரமாக அல்லோலக் கல்லோலப் படுகின்றன.

சுழியம் என்ற நல்லதமிழ் சொல் இருக்கும்போது ‘பூஜ்யம்’ என்னும் வடசொல்லை வலிந்து புகுத்துவதாக ஓர் அதிகாரி மீது கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்ப்பள்ளியில் கணிதம், அறிவியல் பாடங்களைத் தமிழில் படிக்கும் மாணவர்களுக்குச் ‘சுழியம்’ என்று தமிழில் கற்பிப்பதை விடுத்து ‘பூஜ்யம்’ என்று அன்னியச் சொல்லை வலிந்து புகுத்துவானேன் என்று பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதேவேளையில், சுழியமும் பூஜ்யமும் ஒன்றுதான் என்று ஒருவர் அடிப்படையற்ற ஓர் அறிக்கை வெளியிட்டு(மக்கள் ஓசை 16.4.2010) இந்தக் சிக்கலில் எண்ணெயை ஊற்றி மேலும் சூடேற்றி விட்டார். சுழியமும் பூஜ்யமும் ஒரே பொருளுடைய சொல்லாக இருந்தாலும் மொழியால் வேறு வேறானவை. மலாய்மொழியில் கோசம் (Kosong) என்பதும் இதே பொருளுள்ள சொல்தான். அதற்காக சுழியமும் கோசமும் ஒன்றாகிவிடுமா? தமிழ்ப் பாடநூலில் கோசம் என்று எழுத முடியுமா என்று சரமாரியான கேள்விகள் வீசப்படுகின்றன.

சுழியம் – பூஜ்யம் சிக்கலில் ஒரு குறிப்பிட்ட அதிகாரி வசமாக மாட்டிக்கொண்டுவிட்டார். ஏற்கனவே, அவருடைய பழைய செயற்பாடுகள் சில தமிழுக்கு எதிரானதாக இருப்பதால்; இப்போது இந்தச் சிக்கலும் சேர்ந்துகொண்டதால் அவருடைய பெயர் நார் நாராகிக் கொண்டிருக்கிறது நாளேடுகளில்.

பாடநூலில் சுழியத்திற்குக் கதவடைப்புச் செய்துவிட்டு பூஜ்யத்திற்கு தீப தூபம் காட்டி ஆராதனை செய்யும் கலைத்திட்ட மேம்பாட்டுப் பிரிவு, பாடநூல் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு எதிராக, நாளிதழ்களில் வெளிவந்த கண்ட அறிக்கைகளின் சாரம் கீழே தொகுத்து வழங்கப்படுகிறது.

1.இரெ.சு.முத்தையா (தேசியத் தலைவர் மலேசியத் திராவிடர் கழகம்):- இவருடைய கண்டனச் செய்தியைப் படிக்க இங்குச் சொடுக்கவும்.

2.சு.வை.லிங்கம் (தலைவர், தமிழ்க் காப்பகம்):-
மலாய் மொழியில் காலந்தோறும் புதுப்புதுச் சொற்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவர்கள் நாங்கள் பழையச் சொல்லைத்தான் பயன்படுத்துவோம்; புதிய சொல்லைப் பலுக்கமாட்டோம் என்று சொல்வதில்லை. முன்பு பங்கோங் வாயாங் கம்பார் (Panggung Wayang Gambar) என்பர். இதை பவாகாம் (Pawagam) என ஆக்கிவிட்டனர். இப்படி மலாய்மொழி வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதேபோல் உலகில் உள்ள வலிமையான மொழிகளில் முதல் வரிசையில் இருக்கின்ற ஆங்கில மொழியும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

உலகின் செம்மொழிகளில் ஒன்றான தமிழில் இருக்கின்ற சொற்களைப் பயன்படுத்துவதற்குக் கல்வித் துறையில் இருக்கும் தமிழ்ப் பிரிவில் அமர்ந்துகொண்டு “புதிய சொல்லைப் பயன்படுத்த முடியாது. பழையபடிதான் இருப்பேன்” என்று இறுமாப்பாகப் பேசும் அதிகாரி பதவியில் நீடிக்கலாமா? சமுதாயத்திற்குப் பதில் சொல்லத் தெரியாத அதிகாரியைக் கல்வி அமைச்சு உடனே மாற்ற வேண்டும். (மலேசிய நண்பன் 13.4.2010)

3.கவிஞர் காரைக்கிழார் (தலைவர், தமிழ்ச்சங்கம்):- அரசாங்க வானொலியான மின்னலில் தற்போது நல்லதமிழ்ச் சொற்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. தமிழில் அவ்வளவு அக்கறை காட்டாத தி.எச்.ஆர் இராகா வானொலியே சுழியத்தைப் பயன்படுத்துகின்ற அதிசயம் நிகழ்கின்றது. வானவில் தொலைக்காட்சியும் சுழியத்தைப் பயன்படுத்துகிறது.

தமிழ்மொழியில் கலந்துவிட்ட வேற்றுமொழிச் சொல் என்று தெரிந்த பின்னும் பூஜ்யத்தைப் பயன்படுத்துவேன் என்று சண்டித்தனம் செய்வது அரசு அதிகாரிக்கு அழகல்ல. இராமநாதன் தமிழ்மொழி கலைத்திட்ட மேம்பாட்டுக் குழுத் தலைவரா அல்லது சமஸ்கிருத மொழிக் கலைத்திட்ட மேம்பாட்டுக் குழுத் தலைவரா?

வளர்ச்சி என்பது அறிவியலுக்கும் நாகரிகத்திற்கும் மட்டுமல்ல; மொழிக்கும்தான். முன்பெல்லாம் ‘வந்தனம்’ என்று சொல்லிக்கொண்டிருந்த நாம் தற்பொழுது ‘வணக்கம்’ சொல்வதில்லையா? பூஜ்யத்திற்கு வந்தனம் தெரிவிக்கும் இவர் சுழியத்திற்கு வணக்கம் சொல்ல முன்வர வேண்டும். எனவே, இராமநாதன் கருத்தைக் கண்டிப்பதுடன் சுழியம் என்ற தமிழ்ச்சொல்லை பாடநூல்களில் அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். (மலேசிய நண்பன் 13.4.2010)

4.இரா.திருமாவளவன் (தேசியத் தலைவர், மலேசியத் தமிழ்நெறிக் கழகம்):- இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழர்களின் தாய்மொழியான தமிழ்மொழி வளர்ச்சிக்காக அரசு ஏற்படுத்தித் தந்த பதவியில் அமர்ந்துகொண்டு, தனது மேலதிகாரிகளின் அணுசரனை இருக்கிறது என்பதற்காக சுழியத்தைப் பயன்படுத்த முடியாது என்று இன்னமும் இறுமாப்பாகப் பேசிக் கொண்டிருக்கும் அதிகாரிகள், தாங்கள் எங்கே இருக்கிறோம் என்று சிந்திக்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன் தேர்வு வாரியம் வெளியிட்ட கலைச்சொல் அகரமுதலியில் சுழியமும் இருக்கின்றது; பூஜ்யமும் இருக்கின்றது என்பது உண்மைதான். வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் சுழியத்தைப் பயன்படுத்த வேண்டியதுதானே! அந்தக் காலக்கட்டத்தில் சுழியம் அவ்வளவு அறிமுகம் ஆகவில்லை. இப்பொழுது சுழியம் சமுதாயத்தில் நன்கு பயன்படுத்தப்படுகின்றது. உங்களுக்கு மட்டும் ஏன் தயக்கம்? காரணம் உங்கள் எண்ணமெல்லாம் சமஸ்கிருத வளர்ச்சியை மையமிட்டுள்ளது.

இதே கலைத்திட்ட மேம்பாட்டுப் பிரிவிற்கு தலைமைப் பொறுப்பு வகித்த அந்நாளைய அதிகாரிகள், உபாத்தியாயர் என்பதை ஆசிரியர் என்று மாற்றினர். வித்யாசாலை என்பதை பாடசாலை என்றும், அப்பியாசம் என்பதை பயிற்சி என்றும், தேக அப்பியாசம் என்பது உடற்பயிற்சி எனவும், சம்சாரம் என்பது மனைவு என்றும் மாற்றப்படவில்லையா? நீங்கள் மட்டும் பூஜ்யத்தைப் பற்றி நிற்பதேன்?

தமிழ்மொழி வளர்ச்சிக்குத் துணை நல்குவதுதான் இராமநாதனின் பணியாக அமைய வேண்டுமே தவிர, காலமெல்லாம் தமிழுக்குச் சறுக்கலை ஏற்படுத்துவது அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்காக அரசாங்க நிதியைக் கொண்டு தயாரித்த கையேட்டில் இருந்த தமிழரசன் என்ற பெயரை நிரோஷா என்று இரவோடு இரவாக ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் வேறுபாடு தெரியாமல் மாற்றியவர்களுக்கெல்லாம் துணை நின்ற இராமநாதன் இன்னமும் மாறவில்லை. (மலேசிய நண்பன் 18.4.2010)

5.மருத்துவர் ஜெயபாலன் (தலைவர், பினாங்கு தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்):- தமிழ்மொழியின் இயல்பான வளர்ச்சிக்குத் துணை புரியாத இராமநாதனை கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கலைத்திட்ட மேம்பாட்டுக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து வேறு பொறுப்பிற்கு மாற்ற வேண்டும்.

சுழியம் என்ற சொல்லுக்கு இவருக்குப் பொருள் தெரியவில்லை; அக்கறை இல்லை என்பதற்காக மற்றவர்களுக்கெல்லாம் தெரியாது என்பது பொருளல்ல. எனவே பழக்கத்தித்கு வந்துவிட்ட சுழியம் என்ற சொல்லை அறிவியல், கணிதப் பாடநூலில் சேர்ப்பதற்கு மற்ற பொறுப்பாளர்கள் முன்வர வேண்டும். அதற்கு முன் இராமநாதன் தன் பொறுப்பிலிருந்து விலக வேண்டும். அல்லது அவர்மேல் கல்வி அமைச்சரும் துணைப் பிரதமருமான தான் ‚ முகைதின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். (மலேசிய நண்பன் 15.4.2010)

6.செ.குணாளன் (செயலாளர், பினாங்கு தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்):- பூஜ்யம்தான் எல்லாருக்கும் புரியும். சுழியம் வேண்டும் என்றால் பொது மக்கள், பொது இயக்கங்கள் கருத்து சொல்லட்டும். எல்லாரும் ஏற்றுக்கொண்டால் நாம் அந்தச் சொல்லைப் பயன்படுத்தலாம். சுழியம் வேண்டுமானால் இவர்கள் கல்வி அமைச்சுக்குக் கடிதம் எழுதட்டும் என்று எண்ணற்ற சாக்குப் போக்குகளைக் கூறி வருவதாகத் தெரியவந்துள்ளது.

தமிழ் எழுத்துகளில் பெரும்பாலானவை சுழியை அடிப்படையாகக் கொண்டவை. அதன் அடிப்படையில் தான் வட்ட வடிவிலான இந்த எண்ணுக்குச் சுழி என்பதுடன் ‘அம்’ என்ற ஒற்றை இணைந்து சுழியம் என்ற சொல்லைப் புனைந்திருக்கிறார்கள். இன்றைய தமிழறிஞர்கள் அதனை எடுத்தாண்டுள்ளனர். இது எந்த வகையில் தவறாகும். ஏன் இந்த அதிகாரிகள் அதற்குத் தடையாக இருக்கின்றனர். இவர்கள் தமிழ்த்துறை அதிகாரிகளா அல்லது தமிழின் பெயரில் பிறமொழிச் சொற்களின் முகவர்களா? (மக்கள் ஓசை 15.4.2010)

இப்படி பலருடைய கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கும் இந்தச் சிக்கலுக்கு என்னதான் தீர்வு பிறக்கப் போகிறது என்பதை எல்லாரும் கவனத்தோடு உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றனர்.

எது எப்படி இருப்பினும், சுழியத்தைப் புறக்கணிப்பதற்கு எந்தவொரு வலுவான சான்றோ அல்லது அடிப்படையோ இருப்பதாகத் தெரியவில்லை..; சில அதிகரிகாரிகளின் சமற்கிருத / கிரந்த தீவிரவாதப் போக்கைத் தவிர..!!

தொடர்பான செய்தி:

1."0" இது சுழியமா? பூச்சியமா?

2.சுன்னம் - சுழியம்


Wednesday, April 14, 2010

சித்திரைப் புத்தாண்டு பலன்கள் + பாடங்கள்

முக்கிய அறிவிப்பு:-இது எந்தத் தரப்பினரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அன்று. உணர்ச்சிவயப்படாமல் அறிவான முறையிலும் தருக்க சிந்தனையோடும் இதனைப் படிக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன். கேள்வியே கேட்காமல் எல்லாவற்றையும் நம்புகின்ற காலத்தைக் கடந்து, எதையும் அறிவாராய்ச்சி முறையில் நிறுத்துப்பார்த்துச் சரியான முடிவைக் காணும் காலத்தில் வாழ்கிறோம். நமது அடுத்த தலைமுறைக்குத் தக்க வழிகாட்டுதலைச் சொல்ல வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். ஆதலால், எதையும் ஏன்? எதற்கு? என்று கேட்பது அறிவறிந்த மக்கட்பண்பு. அங்ஙனம் கேட்பது ஒன்றனுடைய சிறப்பைக் குறைக்கும் நோக்கமன்று; மாறாக, உண்மை தேடும் உயர்ந்த இலக்கைக் கொண்டது என்பதைத் தெளிவுபடுத்த விழைகிறேன்.-சுப.ந.
சித்திரைப் புத்தாண்டு. இதனைச் சிலர் தமிழ்ப் புத்தாண்டு என்கிறார்கள். சிலர் இந்துப் புத்தாண்டு என்கிறார்கள். இன்னும் சிலர் “நமக்கேன் வேண்டாத வம்பு” என்றெண்ணி சித்திரைப் புத்தாண்டு என்று மட்டும் சொல்லி சமாளித்துக் கொள்கிறார்கள்.



இந்தக் குளறுபடி இன்று நேற்றல்ல. பல ஆண்டுகளாகத் தொடர்கதையாக இழுத்துக் கொண்டிருக்கிறது. உண்மையில், எதுதான் சரி? 
இந்த விவாதத்திற்கு நான் போக விரும்பவில்லை. ஏற்கனவே, திருத்தமிழில் தமிழ்ப் புத்தாண்டு பற்றி நிறைய எழுதியாகிவிட்டது. இங்கு, சித்திரைப் புத்தாண்டை ஒட்டிய வேறொரு சிந்தனையை முன்வைக்க விழைகிறேன்.

சித்திரைப் புத்தாண்டில் மிக மிக முக்கியமான அங்கம் ‘புத்தாண்டு பலன்’ வாசிப்பதுதான் போலும். அதுவன்றி சித்திரைப் புத்தாண்டில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது வேறெதுவும் இல்லாமல் போய்விட்டது. அந்த அளவுக்குச் சித்திரைப் புத்தாண்டின் செல்வாக்கு மழுங்கி - சுருங்கி - தேய்ந்து போய்விட்டது. சோதிடச் சகதியில் அழுந்திபோய் மீட்க முடியாத ஆழத்தில் கிடக்கிறது.


அதிகமான ஆரியத் தன்மைகள் கலப்பினாலும் - சமற்கிருத ஊடுருவல்களாலும் - மதச் சார்பினாலும் - பொருளற்ற சடங்கு முறைகளாலும் - சோதிடத் தாக்கத்தினாலும் சித்திரைப் புத்தாண்டு தன்னுடைய தொன்மையான செம்மையை இழந்து சின்னபின்னப்பட்டுக் கிடக்கிறது.

இதுவெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இனி நான் சொல்ல வந்த விடயத்தைப் பார்ப்போமா?

சித்திரைப் புத்தாண்டு அன்று குட்டிக் கோயில் தொடங்கி, தெருக்கோயில், தோட்டக் கோயில், சிறுதெய்வக் கோயில், பெரியக் கோயில், மலைக்கோயில், குகைக்கோயில், நகரக் கோயில், புறம்போக்கு நிலக் கோயில் என ஒரு கோயில் விடாமல், புத்தாண்டுச் சிறப்புப் பூசை என்று பத்தர்களைக் கூட்டமாகக் கூட்டி வைத்துக்கொண்டு ‘புத்தாண்டு பலன் வாசிப்பது’ நம் நாட்டில் வழக்கமாகி விட்டது.


இன்னும் சொல்லப்போனால், இப்படி செய்வது என்னமோ மிகப் பெரிய சமயக் கடமை - மிகப் பெரிய இறை நம்பிக்கை - புனிதமான ஆன்மிகச் செயல் போல இன்று ஆகிவிட்டது.

இப்படி சித்திரைப் புத்தாண்டுக்குச் சோதிடப் பலன் வாசிப்பவர்கள் அல்லது நம்புபவர்களைப் பற்றி நாம் குறை சொல்லவில்லை. அது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை; உரிமை. 

ஆனாலும், பொதுவாகவே சோதிடப் பலன்களை வாசிப்பவர்கள் - நேசிப்பவர்கள் - நம்புபவர்கள் - நாளிதழ்களில் போடுபவர்கள் - வானொலி தொலைக்காட்சியில் பேசுபவர்களை நோக்கி சில வினாக்களைத் தொடுக்க தோன்றுகிறது.
 
1.சித்திரைப் புத்தாண்டுப் பலன்கள் எந்த அளவுக்கு உண்மையானவை. இந்தச் சித்திரை தொடங்கி இன்னும் 12 மாதங்களுக்கு இந்தப் பலன்கள் நடக்குமா? பலிக்குமா? 

2.சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் ஆங்கிலப் புத்தாண்டு 2010 பிறந்தபோது இராசி பலன் சொன்னார்களே சோதிடர்கள். அது பலிக்குமா? அல்லது சித்திரைப் புத்தாண்டு பலன் பலிக்குமா? இவை இரண்டில் எந்தச் சோதிடப் பலன் பலிக்கும்? எந்தப் பலனுக்குச் சத்தி அதிகம்?

3.இவை போக, இடையிடையே குரு பெயர்ச்சி பலன், சனிப் பெயர்ச்சி பலன் என்று நாளிதழ்களில் ஒரு நாளுக்கு ஒரு இராசிக்கான பலன் என்ற கணக்கில் பக்கம் பக்கமாக எழுதுகிறார்களே ஏன்? இதுவும் பலிக்குமா? ஏற்கனவே சொல்லப்பட்ட ஆங்கிலப் புத்தாண்டு பலன், சித்திரைப் புத்தாண்டு பலன் ஆகியவற்றை மிஞ்சியதா இது? 

4.பிறகு, நாள் பலன், வாரப் பலன், மாதப் பலன் என்று சில நாளேடுகள், வார, மாத இதழ்கள் போடுகின்றன. இது எப்படி? இதுவும் வேலை செய்யுமா?

5.இத்தனை இராசி பலன்களுக்கு நடுவில், எண் கணிதம் என்று சிலர் பிறந்த தேதிக்கும், பெயர் எழுத்துகளுக்கும் பலன் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே அது என்ன? இந்த எண்கணிதம் எந்த அளவுக்கு வேலை செய்யும்? இராசி பலனைத் தாண்டி எண்கணிதம் ஆற்றல் கொண்டதா? 

6.எண்கணிதத்தைப் பின்பற்றி பெயரில் உள்ள சில எழுத்துகளை மாற்றி அமைத்துக்கொண்டால், இராசிக் கட்டம் போட்டுச் சொல்லப்படும் சோதிடத்தில் உள்ள பலன்களை அதிகப்படுத்திக் கொள்ளவோ அல்லது அதிலுள்ள ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ளவோ இயலுமா? 

7."இருள் என்பது விதி; விளகேற்றி இருளை விரட்டுவது மதி! மழை பெய்வது விதி; குடை பிடித்து மழையில் நனையாமல் பாதுக்காப்பது மதி!" என்றெல்லாம் எண்கணிதத்திற்கு வியாக்கியானம் கூறும் எண்கணித நிபுணர்கள் இயற்கை விதியை எண்கணிதத்தால் வெல்ல முடியும் என்கிறார்களா? எப்படி? நிரந்தரமாகவா? தற்காலிகமமகவா? அல்லது ஒரு மனவியல் உத்தி மட்டும்தானா?

8.இதற்கிடையில், அவ்வப்போது பட்டணத்திற்கும் திருவிழாவிற்கும் செல்லும்போது அங்கு யாரேனும் கிளி சோதிடரையோ, குறிசொல்பவரையோ கண்டுவிட்டால், உடனே ஓடிப்போய் பலன் கேட்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. ஒரு பருக்கை அரிசிக்காகக் கிளி எடுத்துப் போடும் அட்டையில் எழுதப்பட்டிருக்கும் பலன் பலிக்குமா? அல்லது சோலிகளை உருட்டிப் போட்டு குறி சொல்கிறார்களே அது பலிக்குமா? இவை இரண்டும் இராசி பலன், சென்ம பலன், எண் கணிதம் ஆகியவற்றைவிட சிறந்ததா?

 
9.அடுத்து எதைச் சொல்லப் போகிறேன் என்று உங்கள் கற்பனையும் வேகமாக ஒடுவது தெரிகிறது. கைரேகை சோதிடம் தான் அடுத்தது. பிறக்கும் போதே ஒவ்வொருவருடைய வாழ்க்கையை உள்ளங்கையிலேயே கொடுத்து அனுப்புகிறார் இறைவன் என்று சொல்லி கைரேகை பார்த்துக் கணிப்பதே சிறந்த சோதிடம் என்கிறார்கள் சிலர். ஒருவருக்கு இருப்பது போல இன்னொருவருக்குக் கைரேகை இருப்பதில்லை. ஆகவே, கைரேகையே ஒவ்வொருவர் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது என்கிறார்கள். அப்படியா? கைரேகை வெகு சிறப்பாக ஒருவருக்கு இருக்கும் சூழலில் மற்ற எந்தச் சோதிடப் பலனும் பலிக்குமா? பலிக்காதா?

10.இப்போது நாடி சோதிடம் நாட்டில் புகழ்பெற்று வருகிறது. பெருவிரல் கைரேகை கொடுங்கள் நாடி சோதிடம் சொல்லுகிறோம் என்று ஒரு கூட்டம் நாட்டில் நடமாடிக் கொண்டிருக்கிறது. வேறு எந்த சோதிடத்தையும் விட இந்த நாடிச் சோதிடம்தாம் ஆதியானதாம்; உண்மையானதாம். ஒவ்வொருவருக்கும் ஓர் ஓலைச்சுவடி கண்டிப்பாக இருக்குமாம். இது எந்த அளவுக்கு உண்மை? நாடி சோதிடம் எல்லாவற்றையும் மிஞ்சியதா? அதில் உள்ள பலன்தான் உண்மை என்றால், மேலே சொன்ன பல சோதிடப் பலன்களின் நிலை என்ன?
11.இத்தனையும் போகட்டும். யார் யாரிடமோ போய் பரிகாரம் செய்கிறார்கள், முடிகயிறு கட்டுகிறார்கள், மந்திரித்துக் கொள்கிறார்கள், அருள் வாக்கு கேட்கிறார்கள், நவரத்தினக்கல் அணிகிறார்கள், வீட்டு யாகம் செய்கிறார்கள், மனையடி (வாஸ்த்து) சாத்திரம் பார்த்து வீட்டை மாற்றி அமைக்கிறார்கள், கோமியம் ஊற்றி வீட்டைக் கழுவுகிறார்கள், பசுமாட்டை வீட்டுக்குள் விடுகிறார்கள், சத்திமிகுந்த ஊதுவத்தி கொளுத்துகிறார்கள், மகா யோகம் நிறைந்த எண்ணெயில் விளக்கு ஏற்றுகிறார்கள், மூலிகை கலந்து செய்த திரியைப் பயன்படுத்துகிறார்கள், இன்னும் ஆயிரமாயிரம் பூசைகள், அருச்சனைகள், வேண்டுதல்கள், காணிக்கைகள், தொழுகைகள், தியானங்கள், விரதங்கள், பலிபூசைகள் என்று, சொல்லி மாளாத அளவுக்கு என்னென்னவோ; ஏதேதோ; எப்படி எப்படியோ செய்கிறார்கள் - நம்புகிறார்கள்.

இத்தனை இருக்க..
இவற்றில் எதுதான் உண்மை?
இவற்றில் எதுதான் பலிக்கும்?
இவற்றில் எதைத்தான் நம்புவது?

தெரியாதவன் - அறியாதவன் - புரியாதவன் கேட்கிறேன்... என்னைப் போல் பலரும் கேட்கலாம்.. அல்லது வாய்திறந்து கேட்பதற்கே தயங்கிக் கொண்டிருக்கலாம்..! 

தெரிந்தவர்கள் - அறிந்தவர்கள் - புரிந்தவர்கள் அருள்கூர்ந்து தெளிவு சொல்வார்களா?

Tuesday, April 13, 2010

கணிதம், அறிவியல் பாடநூலில் தமிழ் புறக்கணிப்பு


மலேசியாவில், தமிழ்மொழியில் உருவாகி வரும் கணிதம், அறிவியல் பாடநூல்களில் தமிழுக்குக் கதவடைப்பு செய்துவிட்டு சமற்கிருதம், கிரந்தத்திற்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு நல்கப்படுவதாக நாளிதழில் வெளிவந்த கண்டனச் செய்தி இது. –சுப.ந.


****************************

தமிழ்மொழியில் இயற்றப்படுகின்ற கணித, அறிவியல் பாட நூல்களில் தமிழ் புறக்கணிக்கப்படுகின்ற நடவடிக்கைக்கு மலேசியத் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவிக்கிறது என்று அதன் தேசியத் தலைவர் இரெ.சு.முத்தையா தெரிவித்துள்ளார்.

அறிவியல், கணிதப் பாடங்கள் தற்பொழுது ஆங்கில மொழியில் பயிற்றுவிக்கப்படுகின்றன. அவை, அடுத்த கல்வி ஆண்டு முதல் தாய் மொழியிலேயே பயிற்றுவிக்கப்படவிருக்கின்ற நிலையில், ஆரம்ப பாடசாலையில் முதல் வகுப்பு முதல் ஆறாம் ஆண்டு வரை உள்ள கணித, அறிவியல் பாட நூல்கள் தமிழ், மலாய், சீன மொழிகளில் தயாரிக்கப்படுகின்றன.


2012ஆம் கல்வி ஆண்டிலிருந்து தமிழ்ப்பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவர்கள் கணித, அறிவியல் பாடங்களைத் தாய்மொழியில் கற்க இருக்கின்றனர்.

இதனால் தமிழ்மொழியில் கணித, அறிவியல் பாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. கல்வி அமைச்சின் தமிழ்மொழிக்கான கலைத்திட்ட மேம்பாட்டுக் குழுவின் வழிகாட்டுதலில் பாடநூல் பிரிவு அதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருவது பாராட்டுக்குரியது.

ஆனால், இவ்விரு அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் நல்லதமிழ்ச் சொற்களை அடியோடு புறக்கணிப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, சுழியம் என்ற சொல்லுக்குப் பதிலாகப் பூஜியம் என்ற சொல்லை வலிந்து பயன்படுத்துகின்றனராம்.

அரசு தமிழ் வானொலியான மின்னல் வானொலி, தனியார் வானொலியான தி.எச்.ஆர் ராகா, அசுட்ரோ வானவில் தொலைக்காட்சி அலைவரிசை எல்லாம் சுழியம் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனரே, நாமும் நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் புதிய தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்துவோமே என்ற எண்ணமெல்லாம் இல்லாமல், பூஜியம் என்று போடலாமா? அல்லது புஜ்ஜியம் என்று அச்சிடலாமா? என்றெல்லாம் ஆலோசிக்கின்றார்களாம்.

மின்னல் வானொலிக்கு இதற்கு முன்னால் வேறொருவர் தலைவராக இருந்த காலத்தில் இதே குழுவினர் கல்வி அமைச்சின் சார்பில் கடிதம் எழுதி சுழியத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றெல்லாம் கேட்டுக்கொண்டனராம்.

இந்த நாட்டில் வாழ்கின்ற இந்தியர்களில் ஏறக்குறைய 85 விழுக்காட்டினர் தமிழராக உள்ள நிலையில் தமிழ்மொழிக்காக அரசு ஏற்படுத்தியுள்ள அமைப்புகளில் அமர்ந்துகொண்டு, தமிழ்மொழியின் ஆக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் துணைபுரியாமல், கி.மு 6, 7, 8 ஆம் நூற்றாண்டுகளில் தமிழும் தமிழரும் ஆட்சியை இழந்த நிலையில், தமிழில் இடைசெருகப்பட்ட பூஜியம் என்ற சொல்லுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழ் அதிகாரிகள் சமுதாயத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும் என்று இரெ.சு.முத்தையா தெரிவித்தார்.

2002ஆம் ஆண்டில் அறிவியல், கணிதப் பாடங்கள் தாய்மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு மாற்றப்பட்டன. அப்போதைய பிரதமர் துன் மகாதீர் மலேசிய மாணவர்கள் ஆங்கில மொழியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக இதைக் கொள்கை முடிவாகவே அறிவித்தார்.

ஆனாலும், தமிழ்மொழியில் இவ்விரு முக்கியப் பாடங்களும் பயில வேண்டும் என்று கல்வியாளர்களும் சமுக ஆர்வலர்களும் ஆரம்பம் முதலே குரல் கொடுத்தனர். 2003ஆம் ஆண்டு நடைமுறைபடுத்தப்பட்ட இத்திட்டத்தின்படி 2008ஆம் யூ.பி.எஸ்.ஆர் மாணவர்கள் கணித அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் எழுதினர்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, உலக மொழிக்கெல்லாம் சொற்களை ஈகம் செய்து பல மொழிகளை ஈன்று புறம்தந்த தமிழ்மொழியில் காலத்தால் மறுமலர்ச்சி பெறுவதற்கான கடமைகளைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்ய வேண்டும்.

ஆங்கில மொழிகளில்கூட எத்தனையோ மாற்றம் பெற்றுள்ள நிலைமையில் தமிழும் வளர்ச்சி காணவேண்டும். அப்போதுதான் அது காலத்தால் தழைக்கும்; நிலைக்கும். இதற்கு, அனைவரின் பங்களிப்பும் அவசியம் என்று இரெ.சு.முத்தையா வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • நன்றி: மலேசிய நண்பன் (11-4-2010)

Wednesday, April 07, 2010

0:- இது சுழியமா? பூச்சியமா?

“0” இந்த வடிவத்தில் ஓர் எண்ணை எழுதுகிறோமே, அதற்குத் தமிழில் என்ன பெயர்?

பூச்சியம் – சுன்னம் – சுழி – சுழியம் இப்படி பல பெயர்கள் சொல்லுகிறோம். கிரந்த ஆர்வலர்கள் வேறு விதமாகச் சொல்லுகிறார்கள்.

அதனை எப்படி எழுத்தில் கொண்டுவருவது என்று குழப்பமாக உள்ளது. பூஜ்யம் – பூஜியம் – பூஜ்ஜியம் ஆகிய மூன்றில் எது சரி என்று அவர்களேதான் சொல்ல வேண்டும்.


எது எப்படி இருப்பினும் “0”ஐ சுழியம் என்று தமிழில் சொல்லுவதே இனிதாகவும் எளிதாகவும் இருப்பதாக எனக்குப் படுகிறது.

சுழி, சுன்னம் அல்லது பூச்சியம் ஆகிய மூன்றையும்விட சுழியம் என்பது ஏற்புடையதாக இருக்கிறது.

நம் நாட்டில் இந்தச் “சுழியம” பட்ட பெரும் பாடு அறிவீர்களா?

தமிழ் அறிஞர்கள் ஒரு பக்கம் கூடிநின்று “சுழியம்”தான் சரி என்றும், கிரந்தப் பற்றுள்ள அன்பர்கள் “பூ” என்ற எழுத்தில் தொடங்கும் வடிவம்தான் (எது சரியானது என்று தெரியாததால் முதல் எழுத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்) சரி என்றும் மல்லுக்கு நின்ற காலம் உண்டு.

கல்வித் துறை சார்ந்த ஆசிரியர்கள் “பூ” என்று தொடங்கும் வடிவத்தையே பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் சிலர் எழுதப்படாத சட்டத்தைப் பல கூட்டங்களில் அறிவிப்பு செய்ததாக சிலர் சொல்லிய கதையும் உண்டு.

தமிழ் நாளிதழ்கள் மக்களுக்குப் புரியும்படி எழுதுவதாகப் பறைசாற்றிக்கொண்டு “பூ” என்று தொடங்கும் சொல்லையே பயன்படுத்தினர். இன்றும் அதுதான் நிலைமை. அவர்கள் சுழியத்திற்கு மாறுவதாக இல்லை. காரணம் மக்களுக்குப் புரியாதாம். (ஆனால், அதே நாளிதழ்கள் கடப்பிதழ், அகன்ற அலைவரிசை, இணையம், கையூட்டு போன்ற பற்பல நற்றமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். இவை வாசகர்களுக்கு எப்படி புரிகிறது என்று சத்தியமாக எனக்குத் தெரியாது)

இதுமட்டுமா? இந்தச் சுழியத்தால் நமது மின்னல் பண்பலை வானொலி நிலையத்தில் சுனாமியே ஏற்பட்ட கதையும் இருக்கிறது. சுழியம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்திய “மிகக் கடுமையான” குற்றத்திற்காக அதன் ஊழியர்களாக இருந்த அருமையான – ஆற்றல்மிக்க இளம் அறிவிப்பாளர்கள் சிலர் தண்டிக்கப்பட்டார்கள் – அங்கிருந்து தூக்கியெறியப்பட்டார்கள்.

வானொலி நிலைய ஒலிக்கூடத்தில் “சுழியம் என்று அறிவிப்புச் செய்யக்கூடாது” என்று கொட்டை எழுத்தில் சுவரொட்டி எழுதி வைக்கப்பட்டதாக அப்போது கேள்விப்பட்டதுண்டு.

(சுழியம் என்று உச்சரித்த இளம் அறிவிப்பாளர்களுக்குத் தண்டனை வழங்கிய அதிகாரி பிறகு, இருக்கிறாரா? இல்லையா? என்று அரவமே இல்லாமல் காணாமல் போய்விட்டார் என்பது வேறு செய்தி)

இப்படியெல்லாம் சுழியம் சம்பந்தமாக நடந்த கூத்துகள் ஏராளம். அஃது ஒரு காலம். ஆனால், இன்று நிலைமை முற்றிலும் மாறி இருக்கிறது.

“சுழியம்” என்ற சொல் இன்று மக்கள் வழக்கில் மிக இயல்பாக ஆகியிருக்கிறது. முன்பு முடியாது என்று தடைபோட்ட அதே மின்னல் வானொலி இன்று நாள்தோறும் சுழியம்.. சுழியம்.. சுழியம் என்று முழங்கி காற்றலையில் தமிழ்மணம் பரப்புகிறது.

தி.எச்.ஆர் ராகா தனியார் தமிழ் வானொலிகூட சமயங்களில் சுழியம் என்று முழங்குகிறது. குறிப்பாக, சில விளம்பரங்களில் சுழியத்தைக் கேட்க முடிகிறது.

அசுட்ரோ வானவில் பல நிகழ்ச்சிகளில் சுழியத்தைச் சொல்லி பெரிய அளவில் விளம்பரத்தைக் கொடுத்துள்ளது.

இப்படியாக, ஊடகங்கள் முழங்கிய சுழியம் எனும் நற்றமிழை இன்று நாட்டில் மாணவர்கள் தொடங்கி மாண்புமிகு (சிலர்) வரையில் தாராளமாகப் புழங்கி வருகின்றனர். நாளிதழ்களில் சிலர் எழுத்தும் கட்டுரைகளில், குயில், உங்கள் குரல், மயில் முதலான மாத இதழ்களில், கவிஞர்கள் சிலருடைய பாக்களில், உள்நாட்டு நூல்களில், நம் நாட்டிலேயே உருவான கலைச்சொல் அகராதியில், தமிழ் இலக்கிய மேடைகளில் என பல இடங்களில் சுழியத்தைப் பரவலாகக் காண முடிகிறது.

(1992இல் கோலாலம்பூர், ஸ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி வெளியிட்ட 'கலைச்சொல் அகர முதலியிலிருந்து எடுக்கப்பட்டது )


இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒரு வளர்ச்சி எனலாம். இதேபோல இன்னும் முயன்றால் பல நல்லதமிழ்ச் சொற்களை மக்கள் வழக்கில் கொண்டுவர முடியும் என்பதற்கு இது நல்ல சான்றாகும்.

சரி, இந்தச் சுழியம் என்பது பொருத்தமான சொல்தானா? என்று பார்ப்போமா?

சுழி என்ற அடிச்சொல்லுடன் ‘அம்’ என்ற விகுதி சேர்ந்து உருவானதுதான் “சுழியம்”. இது புதிய சொல்லாட்சியாக இருந்தாலும் “சுழி” பழங்காலமாக மக்கள் வழக்கில் உள்ள சொல்தான்.

பிறந்த குழந்தையின் தலையைப் பார்த்து, “இவன் ரெண்டு சுழிக்காரன்; ரெண்டு பெண்டாட்டி கட்டுவான்” என்று பாமர மக்கள் இன்றும் பேசிக்கொள்வதைக் காணலாம். அதேபோல் சுற்றி எழுதும் எழுத்துகளைச் “சுழி” என்று சொல்கிறோம். இரண்டு சுழி “ன”, மூன்று சுழி “ண” என்பது மக்கள் வழக்கு. சுற்றுவதை “சுழல்” என்கிறோம். சுற்றி அடிக்கும் காற்றைச் சுழல் காற்று என்கிறோம். பம்பரம் சுழலும் என்கிறோம்.

ஆக, சுழி என்பது வளைவுக் கருத்துகொண்ட ஒரு சொல் என்பது தெளிவு. ஒரு புள்ளியில் தொடங்கி அப்படியே சுற்றிவந்து அதே புள்ளியை வந்து மீண்டும் அடைவதைச் “சுழி” எனக் குறிப்பிடுகிறோம்.

அந்த வகையில் “சுழியம்” என்பது மிகவும் சரியான சொல்லாட்சியாகவே இருக்கிறது. “0” என்பது ஒரு புள்ளியில் தொடங்கி சுற்றிவந்து அதே புள்ளியில் சேரும் வடிவம்தான். ஆகவே, ‘சுழியத்தையே” அனைவரும் பயன்படுத்துவது நன்று.

ஆயினும், சிலர் இன்னும் விடாப்பிடியாக “பூ” என்று தொடங்கும் சொல்லையே பிடித்துக்கொண்டு தொங்குவதைப் பார்க்கும்போது வருத்தமாகத்தான் உள்ளது.

அதே வேளையில், அந்தப் “பூ” என்று தொடங்கும் சொல்லைப் பயப்படுத்த வேண்டியதற்கான ஏரணமான (Logical) கரணியத்தை (Rational) சொல்லுவதற்கு இயலாமல், தடுமாறும் அவர்களை – நா தளுதளுக்கும் அவர்களை – குரல் கம்மிப்போகும் அவர்களை – திருட்டு முழி முழிக்கும் அவர்களைப் பார்க்கும்போது நம்மால் சிரிப்பை அடக்க முடிவதில்லை.

இப்படிப் பட்டவர்களுக்காக நம் மலேசியப் பாவலர் ஒருவர் எழுதியுள்ள ஒரு பாடலின் சில வரிகளை உங்களுக்கு வாசிக்கத் தருகிறேன்.

பூச்சியந்தான் எல்லாருக்கும் புரியுமாம் – அதைப்
பூந்தமிழில் சுழியமென்றால் சிலருக்குள்ளே எரியுமாம்!
பூச்சியத்தைச் சுழியமென்ற *வானொலி – சில
பூச்சியங்கள் பேச்சைக் கேட்டு மாற்றியதாம் மறுபடி!

தமிழனென்றால் பிறமொழிதான் பிடிக்குமோ – பிள்ளை
தாயைவிட்டு வேறொருத்தி தாள்பணிந்து கிடக்குமோ?
அமிழ்தைவிட அடுப்புக்கரி சுவைக்குமோ – அட
அடுத்தவரின் சரக்கினில்தான் இவனுக்கென்றும் மயக்கமோ!

பிழைப்புக்காகத் தமிழுங்கொஞ்சம் படிக்கிறான் – நல்ல
பெரியவேலை கிடைக்கும்வரை திறமையாக நடிக்கிறான்!
குழப்பம்பண்ணித் தாய்மொழியைக் கெடுக்கிறான் – வெளிக்
குப்பையெல்லாம் தமிழுக்குள்ளே திணிப்பதற்கே துடிக்கிறான்!

வடமொழிதான் இவனையின்னும் ஆளுது – பின்னர்
வந்துசேர்ந்த ஆங்கிலமும் கூடியாட்டம் போடுது!
விடுதலையே இவனுக்கென்றும் இல்லையோ! – இவன்
வேற்றுமொழி அடிமைசெய்ய வேண்டிவந்த பிள்ளையோ!

-கவிஞர் செ.சீனி நைனா முகம்மது

(*) முன்பு வானொலியில் “சுழியம்” தடைசெய்யப்பட்டபோது எழுதியது.

Blog Widget by LinkWithin