Tuesday, April 28, 2009

ஈப்போவில் முதன்முதலாகத் தொல்காப்பிய வகுப்பு3000 ஆண்டுகளுக்கு முந்திய நமது முன்னோரின் பேரறிவுக் கருவூளமாய்த் தமிழில் கிடைத்திருக்கும் முதல் நூல் தொல்காப்பியம். அதனை முறையாகவும் எளிதாகவும் பயின்று பயனடைய மிகச் சிறந்த வாய்ப்பாக ஈப்போவில் தொல்காப்பிய வகுப்பு ஏற்பாடு செய்யப்படுள்ளது.

மலேசியத் திருநாட்டில் பல்வேறு நகரங்களில் தமிழ் ஆர்வலர்களுக்கு தொல்காப்பியத்தைச் சுவையாகவும் இனிதாகவும் கறிபித்து வரும், உங்கள் குரல் இதழாசிரியர் கவிஞர் செ.சீனி.நைனா முகம்மது அவர்கள் இந்த வகுப்பை நடத்தவிருக்கிறார்.

தமிழ் எழுத்து அமைப்பு - சொற்புணர்ச்சி - சொல்லாக்கம் - தொடரிலக்கணம் – தமிழரின் வாழ்வியல் கூறுகள் – களவியல் – கற்பியல் – மெய்ப்பாடு – உவமைகூறும் முறை – செய்யுள் இலக்கணம் – மொழிமரபுகள் – வாழ்வியல் மரபுகள் – இலக்கியக் கூறுகள் என பல்வேறு நிலைகளில் தமிழர்கள் அறிந்து தெளிய வேண்டிய அறிவொளி மணிகளைத் தன்னுள் குவித்து வைத்துள்ள பழம்பெரும் தமிழ்க் களஞ்சியம் தொல்காப்பியம் ஆகும்.

இவற்றை முறையாகவும் முழுமையாகவும் அறிந்துகொள்வது தமிழருக்குப் பெருமை மட்டுமல்ல; கடமையும் கூட.

மாதம் இருமுறை பொருத்தமான வாரநாள்களில் நடைபெறவிருக்கும் இவ்வகுப்பில் தமிழ் அன்பர்கள் – ஆர்வலர்கள் – இலக்கியவாணர்கள் – கவிஞர்கள் – எழுத்தாளர்கள் – விரிவுரைஞர்கள் – ஆசிரியர்கள் – உயர்நிலை மாணவர்கள் என அனைவரும் கலந்து பயன்பெறலாம்.

ஈப்போ, வி.கே சரவணபவா எண்டர்பிரைசு ஏற்பாட்டில் இவ்வகுப்பு எண்.126, லகாட் சாலை, ஈப்போவிலுள்ள நாட்டுக்கோட்டைச் செட்டியார் கோவில் மண்டபத்தில் நடைபெறும்.

வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் தமிழன்பர்கள் 30-4-2009க்குள் ஏற்பாட்டாளரிடம் பதிவு செய்துகொள்ளவும்.

மேல் விளக்கத்திற்கும் தொடர்புக்கும்:- தமிழ்த்திரு.பிரபு (016-5478113)

தமிழ்மொழியையும் தமிழர் வாழ்க்கை மரபையும் அறிந்து தெளிய வாய்த்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை ஈப்போ வாழ் தமிழ் மக்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

Friday, April 24, 2009

தமிழ் ஆண்டு – ஓர் அறிவியல் விளக்கம்: கருத்தரங்கம்

தமிழருக்குத் தனி மொழிமரபு – இனமரபு – சமயமரபு – பண்பாட்டு மரபு – வாழ்வியல் மரபு – வரலாற்று மரபு – கலை இலக்கிய மரபு இருக்கிறது. இவற்றுடன் தமிழருக்குத் தனி ஆண்டு மரபும் இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

தமிழர்கள் தனியாக ஓர் ஆண்டு மரபைக் கண்டிருக்கிறார்கள் என்ற உண்மை உலகத்திற்குச் சொல்லப்படாமலே இருக்கிறது. ஏனைய தமிழியல் விழுமியங்கள் மூடிமறைக்கப்பட்டது போல் – திருகித் திரிக்கப்பட்டது போல் - தமிழர் ஆண்டு மரபும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிட்டது. தமிழர் கண்ட வானியல் கலை(சோதிடம்) குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது.

அதனால்தான், இன்றும் தமிழர்கள் ஊரான்வீட்டு ஐந்திரத்தைக் (பஞ்சாங்கம்) கட்டி அழுகிறார்கள்; அன்னியரின் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள்; ஆரியனின் அடிமைகளாக வாழுகிறார்கள்; அறிவிருந்தும் அறியாமையில் கிடக்கிறார்கள்.

தமிழனுக்கு ஏற்பட்டுவிட்ட இந்த இழிநிலையை துடைத்தொழிக்க, 1921ஆம் ஆண்டிலேயே 500 தமிழறிஞர்கள் ஒன்றுகூடி திருவள்ளுவப் பேராசான் பெயரில் தமிழருக்கென்று தனியாக ஒரு தொடராண்டை அறிவித்தனர். அந்த அறிவிப்பு என்பது ஆண்டுகளாக ஏட்டளவில் மட்டுமே இருந்தது. கடந்த 2008இல் தான் தமிழக அரசாங்கம் நாட்டளவில் அமுல்படுத்தியது. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.

ஆனாலும், தமிழர்கள் கேட்பதாகத் தெரியவில்லை. காரணம், இந்த அறிவிப்புக்கான அடிப்படைகள் – ஆதாரங்கள் – சான்றுகள் – விளக்கங்கள் என எதுவுமே தமிழர்களுக்குச் சொல்லப்படவில்லை; பரப்பப்படவில்லை.

இந்த நிலையில், 'தமிழ் ஆண்டு' பற்றி தமிழருக்கு விளக்கமாகச் சொல்வதற்கு மலேசியத் திருநாட்டில் ஓர் அரிய கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

*தமிழரின் ஆண்டு முறை எது?
*தமிழ்ப் புத்தாண்டு தையா? சித்திரையா?
*60 ஆண்டு கணக்கு தமிழருக்குச் சொந்தமானதா?
*கிழமைப் பெயர்கள் – மாதப் பெயர்கள் எல்லாம் தமிழா?
*ஓரை(இராசி) எப்படி கணிக்கப்படுகிறது?
* 27 நாள்மீன்கள்(நட்சத்திரம்) என்ன? எப்படி?
*பக்கல்(திதி) என்றால் என்ன? அதனால் தீங்கு உண்டா?
*தமிழில் நாள்காட்டி உண்டா? எங்கே கிடைக்கும்?

இப்படி பற்பல செய்திகள் – விளக்கங்கள் – விவரங்கள் தெளிவாகவும் காட்சிப் படங்களின் துணையுடனும் வழங்கப்படும் இக்கருத்தரங்கு பின்வரும் வகையில் நடைபெறும்.

நாள்: 26-04-2009 (13 மேழம் 2040 ) ஞாயிறு
நேரம்: காலை மணி 8.00 முதல் பிற்பகல் 1.00 வரை
இடம்: ஆறுமுகம் பிள்ளை தொழிற்பயிற்சி கல்லூரி, நிபோங் திபால், பினாங்கு.
(ILP Arumugam Pillai, Nibong Tebal, Penang)

*காலை மணி 8.00 – 9.00 பதிவும் பசியாறலும்

கட்டணம்: ம.ரி. இருபது (RM20) மட்டும்

இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்பவர்களுக்குத் தமிழியல் அறிஞர் இர.திருச்செல்வம் எழுதியுள்ள 228 பக்கங்களைக் கொண்ட தமிழாண்டு நூலும், 2009ஆம் ஆண்டின் தமிழ் நாள்காட்டியும், நாள் வழிபாடு என்னும் நூலும் இலவயமாக வழங்கப்படும்.

தமிழ்ப் பற்றாளர்களும் – தமிழியல் முறையில் வாழ முனைபவர்களும் – தமிழராகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விழையும் உண்மைத் தமிழர்களும் – வானியல்(சோதிடம்) கலையில் ஈடுபாடு உள்ளவர்களும் – தமிழர் விழுமியங்களை அறியத் துடிப்பவர்களும் இந்தக் கருத்தரங்கில் தவறாமல் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

மேல் விளக்கத்திற்கும் தொடர்புக்கும்: ம.தமிழ்ச்செல்வன் (6013-4392016)

இந்தக் கருத்தரங்கம், தமிழ் ஆண்டு பற்றி என்றுமே இல்லாத அளவுக்குப் பாரிய விழிப்புணர்வைக் கண்டிப்பாக ஏற்படுத்தும் என்பது உண்மை.

கூடவே, தமிழர் என்ற பாரம்பரியச் சிறப்புமிக்க இனத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் திடமான தன்னம்பிக்கையை நிச்சியமாக ஏற்படுத்தும் என்பதும் உண்மை.

Wednesday, April 15, 2009

பினாங்கு பட்டிமன்றத்தில் நமது வலைப்பதிவர்கள்

பினாங்கு மாநிலத் தமிழர் திருநாள் 2009 ஏற்பாட்டில் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. "மலேசியத் தமிழர் மேம்பாட்டில் நிறைவடைகிறோம்! நிறைவடையவில்லை!" இதுதான் பட்டிமன்றத் தலைப்பு.


இந்தப் பட்டிமன்றம் பின்வரும் வகையில் நடைபெறும்:-

நாள்:- 19-04-2009 (ஞாயிறு)
நேரம்:- இரவு மணி 7.30
இடம்:- பினாங்கு, கொம்தார் மாநாட்டு அறை, 5ஆவது மாடி, அரங்கம் 'எப்'
(Auditorium 'F', Level 5, KOMTAR) Penang

வடமலேசியாவில் பட்டிமன்றம் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருகின்றவர் நற்றமிழ் நெஞ்சர் தமிழ்த்திரு க.முருகையனார். அன்னார் நடுவராகப் பணியாற்றும் இந்தப் பட்டிமன்றத்தில் நமது வலைப்பதிவர்கள் சுப.நற்குணன், கோவி.மதிவரன், கி.விக்கினேசு ஆகிய மூவர் பேசவிருக்கின்றனர்.

"நிறைவடைகிறோம்" என்ற அணியில் பேசவிருப்போர்:-
சுப.நற்குணன் (திருத்தமிழ்), திருமதி பிரேமா அமிர்தலிங்கம், கி.விக்கினேசு (தமிழோடு நேசம்)

"நிறைவடையவில்லை" என்று பேசவுள்ள அணியின் உறுப்பினர்கள்:-
கோவி.மதிவரன் (தமிழ் ஆலயம்), திருமதி சோதி மணியம், பா.சோ.இராசேந்திரன்

பினாங்கு வணிகர் டத்தோ ஆர்.அருணாசலம் JP முன்னிலை வகிக்க, தமிழ் நெஞ்சர் மாருதி மகாலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் பட்டிமன்றத்தைக் கண்டு பயன்பெறவும் மனம் மகிழவும் தமிழ் மக்கள் அனைவரையும் வருக வருகவென ஏற்பாட்டாளர்கள் அழைகின்றனர். நுழைவு இலவயம்.

Friday, April 03, 2009

தமிழ் வலைப்பதிவர் பயிற்சி பட்டறை

கோலாலும்பூர், மலாயாப் பல்கலைக்கழகத்தில்
தமிழ் வலைப்பதிவர் பயிற்சி பட்டறை

மலேசிய வலைப்பதிவு உலகம் நாளுக்கு நாள் விரிந்துகொண்டே போகிறது. மலேசியத் தமிழரிடையே குறிப்பாக இளையோரிடத்தில் வலைப்பதிவு மீதான விழிப்புணர்வு பெருகி வருகின்றது. இந்த வளர்ச்சியைக் கருத்திகொண்டு, ஆங்காங்கே வலைப்பதிவர் சந்திப்புகள் ஏற்பாடாகி நடந்து வருகின்றன.

அந்தவகையில், இதுவரை இரண்டு சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. இதன் தொடர்பில், தற்போது மூன்றாவது நிகழ்ச்சியாக 'தமிழ் வலைப்பதிவர் பயிற்சி பட்டறை' நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் இளைஞர் மணிமன்றம் - பெட்டாலிங் செயா கிளை, உத்தமம் மலேசியா நிறுவனம், தமிழா மென்பொருள் நிறுவனம் ஆகிய அமைப்புகளின் கூட்டு ஏற்பாட்டிலும் நாட்டின் முன்னணி இணையத் தமிழ்ச்செய்தி ஊடகம் 'மலேசியா இன்று' ஆதரவுடனும் இந்த அருமை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அதன் விவரங்கள் பின்வருமாறு:-

நாள்:-18 - 04 - 2009 (சனிக்கிழமை)
நேரம்:-1.30 பிற்பகல் 5.30 மாலை
இடம்:-கணினி அறிவியல் & தகவல் தொழிநுட்ப புலம் மலாயாப் பல்கலைக்கழகம் (Faculty of Computer Science & Information Technology, University Malaya)

கட்டணம்:- ம.ரி 35 மட்டும் (சிற்றுண்டி, கோப்பு, தமிழா மென்பொருள் ஆகியன வழங்கப்படும்)

மேல்விளக்கம் பெறுவதற்கும் பதிவு செய்வதற்கும் தொடர்புகொள்ள வேண்டிய அன்பர்கள்:-

குமரன்:- 0133615575, விக்கினேசு:- 0125578257, பவனேசு:- 0149314067

மலேசியத் தமிழ் வலைப்பதிவுகளைத் தமிழர்களின் முதல்தேர்வு ஊடகமாக உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு இதுபோன்ற வலைப்பதிவு சந்திப்புகள் மிகவும் பயன்படும் - பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆகவே, மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள், வலைப்பதிவு வாசகர்கள், தமிழ் இணைய ஆர்வலர்கள், தமிழ்க் கணினி பயனாளர்கள், வலைப்பதிவு தொடங்க விரும்புபவர்கள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து பயன்பெற அன்போடு அழைக்கிறோம்.

இப்படிக்கு,
ஏற்பாட்டுக் குழுவினர்.

பி.கு:- சந்திப்பு 1, சந்திப்பு 2 செய்திகள்

Blog Widget by LinkWithin